இயேசு தன்னுடைய சீடர்களிடத்தும் சரி மற்ற மக்களிடத்தும் சரி சில உவமைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவுமே தான் அவர் கூற வந்த கருத்தினைக் கூறிச் சென்று இருக்கின்றார். 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கூறப்பட்டு இருக்கின்ற அந்த உவமைகளையும் கதைகளையும் இன்றைய சமூக சூழலில் பொருத்திப் பார்ப்பதே இந்த பதிவுகளின் நோக்கமாகும். முதலில் இயேசு கூறிய உக்கிராணி கதையினைக் காண்போம்.

உக்கிராணியின் கதை:

ஒருமுறை செல்வந்தன் ஒருவனுக்கு உக்கிராணியாக ஒருவன் பணி செய்து வந்துக் கொண்டிருந்தான். வெகு விரைவில் அந்த எசமானனானவன் தன்னை பணியில் இருந்து துரத்தி விடுவான் என்பதனை அந்த உக்கிராணியானவன் அறிந்துக் கொண்டான். அவ்வாறு தான் துரத்தி விடப்பட்டால் உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாத நிலைக்கு தான் செல்ல வேண்டி இருக்கும் என்பதையும் அவன் அறிந்துக் கொண்டான். எனவே அவன் இருந்த நிலையினைக் குறித்து 'இதைத்தான் நான் செய்ய வேண்டும் : எசமானனின் கடையில் இருந்து பொருட்களை சிறிது சிறிதாக உள்ளூர் மக்களிடம் விநியோகம் செய்வேன். மேலும் அவர்கள் இந்த எசமானனுக்கு பட்டிருக்கும் கடன்களையும் நான் குறைப்பேன். பின்னர் என்னுடைய எசமானன் என்னைத் துரத்தி விட்டாலும் அந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு நான் காட்டிய என்னுடைய அன்பினை நினைவிற்கொண்டு என்னைக் கைவிடாது இருப்பர்' என்றே தனக்குள் எண்ணிக் கொண்டான்.

அவ்வாறே அவன் செய்யவும் செய்தான். அவனுடைய எசமானனுக்கு கடன்பட்டு இருந்த உள்ளூர் மக்களை அழைத்து அவர்களுக்குத் தள்ளுபடி இரசீதினை எழுதித் தந்தான். எவன் ஒருவன் நூறு பொன் கடன்பட்டு இருந்தானோ அவனுக்கு ஐம்பது பொன்னுக்கு இரசீதினை எழுதித் தந்தான். எவன் ஒருவன் அறுபது பொன் கடன்பட்டு இருந்தானோ அவனுக்கு இருபது பொன்னுக்கு இரசீதினை எழுதித் தந்தான். அவ்வாறே அவன் மற்றவர்களுக்கும் செய்தான். அவனது அந்த செயலைக் கண்ட எசமானன் 'என்ன இது. புத்திசாலித்தனமான காரியத்தை இவன் செய்து இருக்கின்றானே. இல்லாவிடில் இவன் இந்த உலகினை தனியே சந்தித்து இருக்க வேண்டி இருந்து இருக்கும். இப்பொழுதோ அவன் எனக்கு நஷ்டத்தை உருவாக்கி இருந்தாலும் அவனைக் கவனித்துக் கொள்ளும் வண்ணம் புத்திசாலித்தனமாக செயலாற்றி உள்ளான்' என்றே எண்ணிக் கொண்டான்.

கதையின் மூலம் இயேசு கூறிய செய்தி:

சராசரியானதாக இருக்கக்கூடிய இந்த நிரந்தரமற்ற மானுட வாழ்வினில் ஒரு கணக்கினை நமக்குச் சாதகமாக மாற்ற அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதனை நாம் அனைவரும் அறிந்து இருக்கின்றோம். அந்த உக்கிராணியானவன் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலகியல் செல்வங்களைப் பயன்படுத்திக் கொண்டானோ அதனைப் போன்றே தான் உலகியல் சிந்தனைகள் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் இருக்கின்றனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். அதற்கான வேலைகளையும் அவர்கள் திட்டமிட்டு செய்து கொள்கின்றனர். ஆனால் இறைவன் கூறியபடி வாழ்வினை வாழ்வது என்று வரும் பொழுது மட்டும், அந்த மக்கள் இறைவன் கூறிய கருத்தினையோ அல்லது அவர் கூறியபடி எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையோ அறிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஆகவே மனிதர்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் சுயநலத்துடன் பிரிந்து இருக்கின்றனர். அதனால் தான் இந்த உலகமானது பல்வேறு இன்னல்களைக் கண்டு கொண்டு இருக்கின்றது. தூய்மையற்றதும் போலியுமான செல்வத்தினைக் குறித்து நாமும் அந்த உக்கிராணியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இறைவன் கூறியபடி வாழ்வதற்கும், பரலோக இராஜ்யமானது இந்த உலகினில் நிலைபெற்று இருக்கும் வண்ணம் செய்வதற்கும் நாம் அந்தச் செல்வத்தினைக் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் மட்டும் பாதுகாத்துக் கொள்வதற்கு என்று வைத்திருக்கும் செல்வத்தினைக் கொண்டு, மக்கள் அனைவரும் நலமாக ஒற்றுமையுடன் வாழ வழி செய்வதற்கே நாம் முயல வேண்டி இருக்கின்றது. அவ்வாறே அனைவரும் செய்தீர்கள் என்றால், இந்த உலகத்தில் 'நான்' 'நீ' என்கின்ற பிரிவினைகளும் பேராசைகளும் ஒழிந்து, அன்புடன் 'நாம்' என்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு காலம் வரும். அப்பொழுது மக்கள் அனைவரும் தாங்கள் இறைவனின் குழந்தைகள் என்பதனையும் இறைவன் அனைத்தையும் அனைவருக்காகவும் பொதுவாகவே படைத்து இருக்கின்றான் என்பதனையும் உணருவர். அக்காலத்தில், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய அந்த காலத்தில் இங்கே பரலோக இராஜ்யமானது வீற்று இருக்கும். 

மேலும் நாம் இறைவன் கூறியதனைப் போல் வாழ்வதற்காக அர்த்தமில்லாத இந்த உலக செல்வத்தினைத் துறக்க யோசிப்போமேயானால் நாம் இறைவனுடன் என்றுமே ஒன்று சேரப்போவதில்லை. நாம் நம்முடைய போலியான வாழ்வினைத் துறக்கவில்லை என்றால் நம்முடைய மெய்யான வாழ்வினை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோம்.

இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே நல்வாழ்வினைத் தரும் என்பதனை அனைவரும் அறிவர், இருந்தும் அவர்கள் செல்வத்தின் மாயத்தோற்றத்தில் மயங்கி இறைவனின் விருப்பத்தின்படி நடக்காமல் இருக்கின்றனர். செல்வமானது போலியானதும் நிரந்தரமற்றதாகவும் இருக்கின்றது. எவரெல்லாம் அத்தகைய செல்வத்தினை தந்தையின் சித்தத்திற்கு உட்பட்ட மெய்யான வாழ்விற்காக விட்டுக் கொடுக்கின்றார்களோ அவர்கள் புத்திசாலியான அந்த உக்கிராணியானவன் செய்ததைப் போலவே செய்கின்றனர். இறைவனுடன் அவர்கள் ஒன்றிணைகின்றனர்.

இதுவே தான் இயேசு அந்த கதையினை அடிப்படையாக வைத்துக் கூறிய விடயமாகும். இப்பொழுது அந்த கதையானது நம்முடைய இன்றைய சமூகத்தில் எவ்வாறு பொருந்தும் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

1 கருத்துகள்:

எல்லோரும் இப்படி இருந்தால் ஏன் பிரிவினைகளும் போராட்டங்களும்? தொடர்ந்து எழுதுங்கள்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி