சென்ற பதிவில் 'மனிதன் பாவம் செய்வான் என்று அறிந்தே தான் இறைவன் மனிதனைப் படைத்தார்..மேலும் மனிதனை நல்வழிப்படுத்தி அவனை பாவத்திலிருந்து மீட்பதற்கு ஒரே வழி, தானே மனிதனாக உலகிற்கு வருவது தான் என்றும் அவர் அறிந்திருந்தார்' என்றே நாம் கண்டிருந்தோம். இந்த விடயமானது சில கேள்விகளை எழுப்பத்தான் செய்கின்றது.

மனிதனானவன் பாவம் செய்வான் என்பதையும் அந்த பாவத்திலிருந்து அவனை மீட்பதற்கு தானே மனிதனாக செல்ல வேண்டும் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருந்த பட்சத்தில் இறைவன் எதற்காக உலகினை வெள்ளத்தால் அழிக்க வேண்டும்? எதற்காக ஆபிரகாம் என்ற ஒற்றை மனிதனின் சந்ததியை தன்னுடைய மக்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்?

இந்த கேள்விகளுக்கு விடையினை நாம் கண்டோம் என்றால், 'இறைவன் உலகத்தை என்றுமே அழித்திருக்கவில்லை' என்பதும் 'ஒரு இன மக்களை மட்டும் தன்னுடையவர்கள் என்றும் அவர் என்றுமே உரிமைப் பாராட்டி இருக்கவில்லை' என்பதுவுமே தான் பதிலாக இருக்கின்றது.

"நல்ல கதையாக இருக்கின்றதே...இறைவன் உலகை அழிக்கவில்லை என்றுநீங்கள் சொல்லிவிட்டால் இறைவன் உலகை அழிக்கவில்லை என்று ஆகிவிடுமா? ஆபிரகாமை இறைவன் தேர்ந்தெடுக்கவில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டால் ஆபிரகாமை இறைவன் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஆகிவிடுமா? யூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இயேசு எதற்காக யூதர்களின் மத்தியில் பிறந்திருக்க வேண்டும்? விவிலியத்தில் தெளிவாக அனைத்தும் கூறப்பட்டு இருக்கின்றது சகோதரரே...ஆகையால் நீங்கள் நடக்கவில்லை என்று கூறுவதால் மட்டும் நடந்த நிகழ்வானது நிகழாத ஒன்றாக மாறி விடாது" என்று ஒரு சில நண்பர்கள் இங்கே கூற கூடும் தான். 

ஏனென்றால் நாம் கூறி இருக்கின்ற விடயம் அத்தகைய ஒன்று தான். அவர்கள் மிகவும் நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரு நம்பிக்கையினை நாம் இங்கே முற்றிலுமாக மறுக்கின்றோம். எனவே நம்முடைய மறுப்பிற்கு தகுந்த காரணங்களையும் வாதங்களையும் நாம் முன்வைத்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. அவ்வாறு வைக்கவில்லை என்றால் பிழை நம் மீது வந்து விடும். யார் வேண்டும் என்றாலும் என்ன வேண்டும் என்றாலும் கூறிக் கொள்ளலாம்...அவர்களின் கூற்றினை நிரூபிக்கத் தேவையில்லை என்ற நிலைக்கே அந்த செயலானது வழிவகுத்து விடும்.

ஆயினும், நம்முடைய அந்த கூற்றுக்கான விரிவான விளக்கத்தினை நாம் இங்கே காண போவதில்லை தான். காரணம் 'இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும்?' என்று காண்பதே இந்த பதிவுத் தொடரின் நோக்கமாக இருக்கின்றது. நாம் மேலே கூறி இருக்கின்ற கூற்றுகளை காண வேண்டும் என்றால் அதற்கே அநேக பதிவுகள் இட வேண்டி இருக்கும். எனவே, அவற்றை நாம் வேறு பதிவுகளில் விரிவாக காணலாம். இருந்தும், இப்பொழுது சுருக்கமாக சில விடயங்களை, நம்முடைய கூற்றிற்கு சான்றாக நாம் கண்டு விடலாம்.

1) குமரிக்கண்டம் கடற்கோள்களால் அழிந்த பொழுது, அங்கிருந்து தப்பிப் பிழைத்து மேற்கே நோக்கி நகன்று சென்று நாகரீகங்களைத் தோற்றுவித்த மனிதர்கள் 'வெள்ளத்தால் உலகம் அழிந்த' கதையை உருவாக்கிக் கொண்டனர். இந்த கதையானது கிட்டத்தட்ட அனைத்து பண்டைய நாகரீகங்களிலும் இருக்கின்றது. குறிப்பாக சுமேரிய/மேசொபொட்டோமிய/பாபிலோனிய இலக்கியங்களில் இருக்கின்றது. அந்த கதையினைத் தான் யூதர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

2) மனிதன் பாவம் செய்வான் என்று அறிந்தே அவனைப் படைத்த இறைவன், தான் மனிதனாக வந்து தான் அவனது பாவத்தைப் போக்க வேண்டும் என்று தெளிவாக அறிந்த நிலையில், ஒரே ஒரு மனிதனை மட்டும் தேர்ந்து எடுத்துக் கொண்டு, ஏனைய உலகமுழுவதையும் வெள்ளத்தால் அழித்தார் என்பது இறைவனின் தன்மைக்குப் பொருந்தவில்லை. அதுவும் 'நல்லோர் மீதும் தீயோர் மீதும் வேறுபாடுகள் காணாமல் அனைவரின் மீதும் மழையைப் பொழிகின்றார்' என்று இயேசு கூறி இருக்கின்ற இறைவனின் தன்மைக்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றது அந்த கூற்று.

3) மேலும் நல்லவர்களையும் தீயவர்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரின் மீதும் மழையும் சூரிய ஒளியையும் பொழிகின்ற இறைவன், மனிதர்களுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்து எடுத்து அவர்களுக்காக மற்றவர்களை அழித்தார் சபித்தார் என்பது நம்பத்தகுந்த வண்ணம் இல்லை. அதுவும் மனிதர்கள் இறைவனின் குழந்தைகள் என்று இயேசு கூறி இருக்கின்ற நிலையில் தன்னுடைய குழந்தைகளுள் இறைவன் வேறுபாடுகள் பார்த்து ஒரு சிலரை ஆசீர்வதித்து மற்றவர்களை சபித்தார் என்பது இறைவனின் தன்மைக்கு பொருந்துகின்றதா என்பதை வாசகர்களே சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

4) மேலும் இயேசு யூத இன மக்களின் மீட்பராக வரவில்லை...அவர் உலக மக்கள் அனைவருக்காகவும் வந்தார். மேலும் மக்கள் தங்களுள் இன வேறுபாடுகளையும் தேச வேறுபாடுகளையும் காண கூடாது என்று தெளிவாக அவர் கூறி இருக்கின்றார். அவ்வாறு இருக்கையில் இறைவன் ஒரு காலத்தில் இனங்களுக்கு மத்தியில் வேறுபாட்டினை கண்டார் என்பது நம்பும் வண்ணம் இருக்கின்றதா என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

சரி இருக்கட்டும்...இவற்றைப் பற்றி நாம் விரிவாக வேறு பதிவுகளில் காணலாம்...இப்பொழுது, இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் என்ற நம்முடைய கேள்விக்கே நாம் செல்லலாம்.

இறைவன் உலகினை வெள்ளத்தால் அழிக்கவில்லை என்றும் அவர் ஒரு குறிப்பிட்ட இன மக்களை மட்டும்தேர்ந்து எடுத்திருக்கவில்லை என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நம் முன்னே நிற்கின்ற அடுத்த கேள்வி என்னவென்றால் 'மனிதன் பாவம் செய்வான் என்று தெரிந்தும் இறைவன் எதற்காக அவனைப் படைத்தார்? பாவம் செய்யாத வண்ணம் மனிதனை இறைவன் படைத்து இருக்க முடியாதா?' என்பதே ஆகும்.

அந்த கேள்வியிற்கு விடையினைக் காண்பதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி...

ஒரு இயந்திரம் இருக்கின்றது...சரியாக வேலை செய்யாமல் இருக்கும்படிக்கே நீங்கள் அதனைப் படைத்து இருக்கின்றீர்கள். அந்நிலையில், அந்த இயந்திரமானது சரியாக வேலை செய்யும்படி அதனை சரி செய்வதற்கு நீங்களே முயற்சி செய்வீர்களா என்ன?

'அந்த இயந்திரத்தை சரி செய்ய முடியும்...அது நன்றாக இயங்கக்கூடிய ஒன்று தான்...அதனை சரியாகத்தான் நான் படைத்து இருக்கின்றேன்' என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் தானே அந்த இயந்திரத்தை சரி செய்வதற்கு நீங்கள் முயல்வீர்கள். மாறாக படைக்கும் பொழுதே அது சரியாக இயங்காது என்று நீங்கள் அறிந்து இருந்தீர்கள் என்றால் அதனை தூக்கி வீசிவிட்டு வேறு வேலை பார்க்க சென்று விடுவீர்கள் தானே..மாறாக அதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள மாட்டீர்கள் தானே...!!!

அதனைப் போன்றே தான் நாம் 'பாவம் செய்வான் என்று அறிந்தும் இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்' என்ற கேள்வியினையும் காண வேண்டி இருக்கின்றது. மனிதனால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்றால் இறைவன் உலகிற்கு மனிதனாக வந்து பயன் துளியளவு கூட இருக்கப்போவதில்லை. ஆனால், மனிதன் பாவம் செய்வான் என்று அறிந்தும் அவனை மீட்பதற்கு மனிதனாக இறைவன் வர திட்டமிட்டார் என்றால், அதன் அர்த்தம் இதுவாக மட்டுமே தான் இருக்க முடியும் - மனிதனால் பாவம் செய்யாமல் இருக்க முடியும்.

மனிதனால் பாவம் செய்யாமல் இருக்க முடியும் என்பதனை இறைவன் அறிந்து இருக்கின்றார். எனவே தான் அவன் பாவம் செய்வான் என்று அறிந்தும், 'அவன் என் மகன்...அவன் நிச்சயம் திருந்துவான்...அதற்குரிய ஆற்றல் அவனுக்குள் இருக்கின்றது' என்று எண்ணியே அவனைப் படைக்கின்றார். இயேசுவின் கூற்றின்படி மனிதன் இறைவனின் மகனாகவே இருக்கின்றான். அவனுக்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலினை (Free Will) இறைவன் வழங்கி இருக்கின்றார். அந்த ஆற்றலின் காரணமாகத் தான் மனிதனால் பாவம் செய்யவும் முடிகின்றது பாவம் செய்யாமல் இருக்கவும் முடிகின்றது. தன்னுடைய செயல்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

'சில காலம் பொறுப்பற்று பாவத்தில் அவன் வீழ்ந்தாலும், அவன் மீண்டு வருவான். ஏனென்றால் மனிதன் இயல்பில் அடிப்படையாக நல்லவன்...அவன் என்னுடைய மைந்தன்...அவனால் தொடர்ந்து பாவத்தில் இருக்க முடியாது...அவனால் பாவத்தை வெல்ல முடியும்...அதற்கு நான் வழிகாட்ட வேண்டும்' என்ற சிந்தனையின் விளைவாக இறைவன் மனிதனைப் படைக்கின்றார்.

அதாவது, 'மனிதன் பாவம் செய்வான்' என்று அறிந்தும்இறைவன் மனிதனைப் படைத்ததற்கான காரணம் 'மனிதனால் பாவம் செய்யாமல் இருக்க முடியும்' என்று இறைவன் அறிந்திருந்தது தான். ஆகவே தான் மனிதனை அவர் படைத்தார்...அவனுடைய செயல்களுக்கு அவனே பொறுப்பாளியாக ஆகும் படி சிந்தித்து முடிவெடுக்கும் பொறுப்புடன் அவனை அவர் படைத்தார்.

சரி இருக்கட்டும்....!!!மனிதனைப் பற்றி நாம் சிறிது கண்டாயிற்று...இப்பொழுது சாத்தானைப் பற்றியும்...வேறு சில விடயங்களைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

வெள்ளத்தால் உலகம் அழிந்தகூற்றினைப் பற்றிய முந்தைய பதிவுகள்...

 

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு