காளிமார்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளிமார்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஆகஸ்ட், 2012

காளிமார்க்-ஒரு சிறு முயற்சி

நீண்ட நாட்களுக்கு முன்னர் காளிமார்க் குளிர்பானத்தைப் பற்றி ஒரு பதிவினை எழுதி இருந்தேன். அதனில் எவ்வாறு இந்திய குளிர்பானங்களை அந்நிய நிறுவனங்கள் அழித்தன என்பதனை சுருக்கமாக கண்டு இருந்தோம்.


ஆனால் வெறும் பதிவுகள் எழுதுவதினால் மட்டும் எந்த மாற்றமும் வந்து விடாது தானே. மாற்றங்கள் வர வேண்டும் என்றால் செயல்கள் வேண்டும். எந்த மாற்றங்களை நாம் எதிர்பார்கின்றோமோ அந்த மாற்றங்களுக்கு ஏதாக முதலில் நாம் மாற வேண்டும். அப்படி மாறினோம் என்றால் தான் உண்மையான மாற்றங்கள் வரும். அம்முறையில் இந்த மாற்றத்தினை நடைமுறைப் படுத்த ஒரு மிகவும் எளிய முறை அந்நிய பானங்களை நாம் குடிக்காது இருப்பது. ஆனால் இது ஒவ்வொருடைய தனிப்பட்ட முடிவாகத் தான் இருக்க வேண்டும்...அவ்வாறு இருந்தால் தான் உண்மையான மாற்றம் வரும். மாறாக அனைவரும் இந்திய பானங்களை மட்டுமே தான் குடிக்க வேண்டும், அந்நிய பானங்களை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று நாம் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டளையிடவோ முடியாது. அவை சரியான செயலும் அல்ல...அவற்றால் பயனும் இல்லை. மக்களிடம் நம் கருத்துக்களைச் சொல்லத் தான் நமக்கு உரிமை இருக்கின்றது மாறாக அதனைத் திணிக்க உரிமை கிடையாது. அவ்வாறு திணித்தோம் என்றால் அவை எதிர்மறையான விளைவுகளையே நிச்சயம் விளைவிக்கும்.

நிலைமை இவ்வாறு இருக்க மற்றவர்களின் உரிமைகளும் பாதிக்க கூடாது ஆனால் அதே நேரம் மாற்றங்களும் நிகழ வேண்டும், இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்த பொழுது தான் ஒரு சிந்தனை உதித்தது. பொதுவாக அனைத்து அணிகளிலும் எதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு வேளையில் கொண்டாட்டங்கள் இருக்கத் தான் செய்கின்றன. பிறந்த நாள் கொண்டாட்டங்களாக இருக்கட்டும், சாதனைகளைப் பாராட்டும் கொண்டாட்டங்களாக இருக்கட்டும்...இன்னும் வேறு வகை கொண்டாட்டங்களாகவும் இருக்கட்டும் இவை அனைத்து அணிகளுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

உணவுகள் இல்லாத கொண்டாட்டங்கள் மென்பொருள் துறையினைப் பொறுத்த வரை கொண்டாட்டங்களே இல்லை தானே, எனவே அனைத்துக் கொண்டாட்டங்களுக்கும் உணவுகளும் சரி குளிர் பானங்களும் சரி பொதுவான ஒன்றாகத் தான் இருக்கின்றன. இங்கே நாம் பார்த்தோம் என்றால் அனைத்து கொண்டாட்டங்களிலும் உணவு பொருட்கள் மாறுகின்றன ஆனால் குளிர் பானங்களைப் பொறுத்த வரை ஒன்று பெப்சி அல்லது கோகோ கோலா நிறுவனங்களின் பானங்களே பொதுவான ஒன்றாக இருக்கின்றன. அவை மாறுவதில்லை. இந்நிலையில் தான் ஒரு எண்ணம் தோன்றிற்று, நம்முடைய குளிர் பானங்களையும் நமது கொண்டாட்டங்களில் சேர்த்தால் என்னவென்று.

நிச்சயம் நம்மில் அநேகர் தமது சிறு வயதில் அந்த பானங்களைக் குடித்து தான் வளர்ந்து இருப்பர். அந்தக் குளிர் பானங்களின் பெயர்கள் நிச்சயம் அவர்களின் நினைவுகளின் ஒரு ஓரத்தில் பதிந்து இருக்கும். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் பல விடயங்களை கேள்விகளே கேட்காது மறந்ததுப் போல் இந்த குளிர் பானங்களையும் மறந்து இருக்கலாம்.

"அவ்வாறு அவர்கள் தெரியாது மறந்ததை அவர்கள் முன் கொண்டு வந்தோம் என்றால் ஒரு வேளை அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா...ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே இந்திய குளிர் பானங்களை புறக்கணிக்க ஒருக் காரணம் இல்லை...அவர்கள் வளர்ந்த காலத்தில் அந்த பானங்கள் கிட்டி இருக்காது எனவே கிடைத்த பானங்களை அவர்கள் அருந்த ஆரம்பித்து இருக்கலாம். எனவே இப்பொழுது, நண்பர்களே நாம் சிறு வயதில் பருகிய பானங்கள் அழிந்து விட வில்லை, என்றுக் கூறி அவர்களின் முன் அந்த பானங்களை வைத்தால் அதனை அவர்கள் குடித்துப் பார்க்காமலா போய் விடுவர்" என்ற எண்ணத்தின் விளைவாக ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டேன்.


எனது அணியில் நண்பர்கள் சிலரது பிறந்தநாள் விழாவிற்காக குளிர் பானங்களை வாங்கும் பொழுது பெப்சி மற்றும் கோகோ கோலா பானங்களுடன் காளிமார்கின் தயாரிப்பான போவொண்டோ என்ற பானத்தையும் வாங்கிக் கொண்டு வைத்தோம். அவ்வளவு தான் எதிர்ப்பார்த்தபடியே பல கருத்துக்கள் கொட்ட ஆரம்பித்தன. அவற்றுள் பல, காளிமார்கின் தயாரிப்புகள் இன்னும் வந்துக் கொண்டு இருக்கின்றனவா என்று ஆச்சர்யத்தையே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.

"என்னையா...காளிமார்க் ஐ வாங்கிட்டு வந்து இருக்கீங்க... இது எல்லாம் இன்னும் வருதா என்ன...."

"காளிமார்க் ஆ... அந்த காலத்துல டொரினோ, கோல்ட் சபாட் அப்படி எல்லாம் இருந்துச்சி...இன்னும் இதுங்க எல்லாம் இருக்க என்ன..."

"அட விலை கம்மியா இருக்கணும்னு பார்த்து இந்திய பானங்களை வாங்கிட்டீங்களா" என்றார் ஒருவர்...பின்னர் விலையைப் பார்த்த உடன் "என்னையா 1 1/2 லிட்டர் போவொண்டோ 2 1/4 லிட்டர் பெப்சிய விட விலை அதிகமா இருக்கு...நம்ம ஆளுங்க கொள்ளை அடிக்குறதுல பெரிய ஆளுங்க" என்றவாறு முடித்தார்.

"ஹே.. காளிமார்க் ஆ... சின்ன வயசுல குடிச்சது... எனக்கு ரொம்ப பிடிக்கும்... இது எல்லாம் இன்னும் வருதா என்ன?"

தமிழ் மக்கள் பலருக்கும் காளிமார்க் பரிச்சியமாகி இருந்தது. கேரள நண்பர்கள் தான் புதிதாய் ஒன்றை பார்ப்பதுப் போல் பார்த்துக் கொண்டு இருந்தனர். மொத்தம் ஆறு குளிர் பானங்கள் வாங்கி இருந்தோம். நான்கு கோகோ கோலா தயாரிப்புகள், இரண்டு காளிமார்க் தயாரிப்புகள். குடிப்பவர்கள் குடிக்கட்டும். அவர்களுக்கு புதிதாய் ஒரு வாய்ப்பினை இம்முறை நாம் உருவாக்கி விட்டாயிற்று என்றே நின்றுக் கொண்டு இருந்தேன்.

ஆச்சர்யமாக முதலில் காளியானவை காளிமார்க் தயாரிப்புகளே. ஒருவேளை புது நிறுவனம், சுவைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தினாலும் அது நிகழ்ந்து இருக்கலாம். எவ்வாறாக இருப்பீனும் அன்று வாங்கிய இரு பானங்களுமே முதலில் காலியாகி விட்டன. அந்த நிகழ்வில் சுவையைப் பற்றியும் பல கருத்துகள் வெளி வந்தன...அவற்றுள் முக்கியமான ஒன்றாக "கசாயம் போல இருக்கு" என்றக் கருத்து திகழ்ந்துக் கொண்டு இருந்தது. பிழையில்லை சில சுவைகள் சிலருக்கு பிடிப்பதில்லை. முதலில் புதிதாய் இந்தியாவினுள் நுழைந்த பொழுது பெப்சியும் கோகோ கோலாவும் இன்று இருக்கும் நிலையிலா இருந்தன? சச்சினும் ஐஸ்வர்யா ராயும் குடித்ததினால் தானே குடித்தார்கள். பின்னர் நாக்கு அந்த சுவைக்கு பழகிக் கொண்டு விட்டது. அது போலத் தான் காளிமார்க்குக்கும் நிகழலாம். மறந்த போன அந்த சுவைகள் மீண்டும் வெளி வரலாம். அது முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால் அவை வெளி வருவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றோமா என்பது தான். அந்நிலையில் ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தந்த நிம்மதி என்னுள் அன்று இருந்தது. நண்பர்கள் பலர் பழைய நினைவுகளோடு காளிமார்கினை பருகியதும், "அண்ணே...இனிமே எல்லா கொண்டாட்டங்களிலும் ஒரு காளிமார்க் வாங்கிடலாம்...குடிக்குறதுக்கு ஆள் இருக்கு...இத குடிக்குறவங்க குடிக்கட்டும்...பெப்சி கோகோ கோலா தான் வேணும்னு சொல்றவங்க அத குடிக்கட்டும்" என்று அணியில் ஒருவர் கூறியதும் அந்த சிறிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம் என்றே எண்ணுகின்றேன்.

இன்று இந்திய தயாரிப்புகள் என்று பெரிதாக எதுவும் இல்லாத நிலையிலும், இந்தியாவினை வெளி நாடுகளுக்கு விற்கும் மனப்பான்மை உடைய அரசுகள் இருக்கும் நிலையிலும் நமது வரலாற்றையும் பொருட்களையும் காப்பாற்ற இத்தகைய சிறு முயற்சிகள் காலத்தின் தேவைகள் என்றே நான் கருதுகின்றேன்.

ஒரு டாலர் இன்றளவு கிட்டத்தட்ட ஐம்பத்தியாறு உருபாய் மதிப்பு பொருந்தியதாக இருக்கின்றது.

இதே டாலர் நமது சுதந்திரத்தின் பொழுது வெறும் ஒரு உருபாய் மதிப்பு பொருந்தியதாகவே இருந்து இருக்கின்றது.


அதாவது சுதந்திரம் அடைந்து அறுபத்தியாறு ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய உருபாயின் மதிப்பு ஐம்பத்தியாறு மடங்கு சரிந்து இருக்கின்றது. அதுவும் இந்த சரிவு குறிப்பாக இந்தியா 'தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்..." என்ற புதுக் கொள்கையை 1991இல் கொண்டு வந்ததில் இருந்து மிக வேகமாக அதிகரித்து இருக்கின்றது.


இருந்தும் இந்தியா வல்லரசாகும் என்ற கனவு மட்டும் பரப்பப்பட்டு கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவினை உண்மையாக நேசித்து அது உண்மையாக வளர வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருந்தால், நம்முடைய கனவுகள் பலிக்க இத்தகைய சிறுமுயற்சிகள் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கும்.


பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள் திறமைசாலிகளாகவே இருக்கட்டும். நமக்கு அது கவலையில்லை. நமக்கு முக்கியம் நம்முடைய குழந்தைகள் தானே. நம் குழந்தைகளை நன்றாகவும் நல்லவர்களாகவும் வளர்க்க வேண்டியக் கடமை யார் கடமை?


சிந்திப்போம்...முயல்வோம்...வெல்வோம்...சிறு துளி பெரு வெள்ளம்!!!

முந்தையப் பதிவு: ஒரு குளிர்பானத்தின் கதை

சனி, 12 நவம்பர், 2011

ஒரு குளிர்பானத்தின் கதை:

நண்பர்களே வணக்கம்!!!

நீங்கள் கதைப் பல படிப்பீர் என்று அறிய நேர்ந்தது. அக்கணம் முதல் உங்களை சந்தித்து என்னுடைய கதையினைக் கூற வேண்டும் என்ற ஆவல் என்னுள் மிகுந்து இருந்தாலும் நேரம் கிட்டவில்லை. எனவே உரியத் தருணத்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். இன்று உங்களை சந்திக்கும் அந்தத் தருணம் கிட்டியதினை எண்ணி நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் அத்துடன் என்னுடைய கதையினை கேட்க நீங்கள் சம்மதிப்பீர்கள் என்ற எண்ணத்திலேயே இத்தனை நாட்களாக என் மனதினுள் வைத்து இருந்த என்னுடைய கதையினையும் கூற ஆரம்பிக்கின்றேன். பொறுமையாய் கேளுங்கள்…!!!

அது ஆங்கிலேயர்கள் இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்தக் காலம்.

1916 ஆம் வருடம்.

தென் தமிழகத்திலுள்ள விருதுப்பட்டி (இன்றைய விருதுநகர்) என்னும் ஊரினில் தான் நான் பிறந்தேன். கந்தக பூமியாய் அறியப்பட்டு இருந்த பிரதேசத்தில் தாகம் தணிக்க வந்த என்னை எண்ணி பூரிக்காத மக்களே இல்லை எனலாம்.

மண்ணின் மைந்தனான என்னை சீராட்டி, ‘காளிமார்க்’ என்று பெயரூட்டி என்னை அவர்களது இல்லத்தில் ஒருவனாகவே வளர்க்க ஆரம்பித்தனர் மக்கள்.
நானும் மக்களின் அன்பினில் தவழ ஆரம்பித்தேன்.

இவ்வாறே காலங்கள் நகர்ந்தன.

சிறிது சிறிதாக நடக்க கற்றுக் கொண்டு இருந்த என்னை ‘என்னடா பையா மெதுவாக நடந்துக் கொண்டு இருக்கின்றாய்… ஒரு இந்தியச் சிறுவன் இவ்வாறா இருப்பான்… சுறுசுறுப்பாய் ஓடடா… நாம் இந்தியர்கள்’ என்றுக் கூறி என் கையினைப் பிடித்துக் கொண்டு ஓடச் சொல்லித் தந்தார் சுதேசி இயக்க அண்ணா.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை சிறுவனான என்னைத் தாக்காதவாறு என்னை பல காலம் காத்தார் அந்த அண்ணா. அவரின் கவனிப்பில் நானும் நன்றாக வளர்ந்தேன்.

இவ்வாறே காலங்கள் கழிய நாங்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்தது. எங்களின் ஊரினை விட்டு அன்னியர்கள் ஒரு வழியாக வெளி ஏறினார்கள்.

சிரித்தேன்.

“ஏன் சிரிக்கின்றாய்….!!!” என்றார் சுதேசி இயக்க அண்ணா.

“விடுதலை அண்ணா… சுதந்திரம்… இனி நாம் நன்றாக வளரலாம் தானே… நாமும் நம் சகோதரர்களும் நம்முடைய மண் முழுவதும் சுற்றலாம்.. தடை ஒன்றும் இல்லையே அண்ணா… அதான்” என்றேன்.

அவரும் சிரித்தார்.”ஆமடா பொடியா… நாம் வளரலாம்…!!! இது வரை நாம் ஓடிக் கொண்டு இருந்தோம். இனி ஓடியது போதும். இது பறக்கும் தருணம்.. வா பறப்போம்… வானம் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது” என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தார்.

ஒரு பொற்காலம் உதயமாயிற்று.

நான் நன்றாக வளர்ந்தேன். கூடவே என்னுடைய உடன்பிறப்புகளான ‘டொரினோ’ ‘கோல்ட்ச்போட்”லெமன் ஒ’ ‘போவொண்டோ’ போன்றவர்களும் நன்றாக வளர ஆரம்பித்தனர். எங்களின் விளையாட்டுகள் ஊர் மக்களை பெரிதும் கவர்ந்தன. பொறாமை எதுவும் இல்லாத எங்களது போட்டியினைக் கண்டு பக்கத்து வீட்டுப் பசங்களான ‘மாணிக்க விநாயகர் சோடா’ போன்றவர்களும் எங்களுடன் ஆட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

எங்களை தங்களது சொந்த வீட்டுப் பிள்ளைகளைப் போலவே அனைவரும் கருதி அவர்களது இல்ல விழாக்களுக்கு அழைப்பர். நாங்கள் இன்றி எந்த நிகழ்ச்சியும் நடை பெறாது. வாழ்கை இனிமையாக சென்றது.

அவர்கள் வரும் வரை.

அவர்கள் வெளிநாட்டு பணக்கார ஆட்கள்.

“என்னய்யா… நாம் துரத்தி விட்ட ஆட்கள் மறுபடியும் வந்து இருக்கின்றார்கள்” என்றவாறே அரசாங்கத்தினை பார்க்க, இளித்தார் குல்லா வைத்த சிங்.

“இவங்க நல்ல பையனுங்கபா… நேர்மையா விளையாடுவானுங்க… விளையாட்டுதான சும்மா விளையாடுங்க” என்றார்.

‘சரி… போட்டினா நம்ம பயலுவ கம்பா இருப்போம்ல’ என்று எண்ணிக் கொண்டும் வேறு வழி இல்லாமலும் அவர்களுடன் போட்டியிட தயாரானோம்.

ஆனால் போட்டி தொடங்கும் முன்னரே வெற்றிக் கோப்பையை அந்த வெளிநாட்டு ஆட்களிடம் கொடுத்து விட்டார் சிங்.

“என்னங்க இது… போட்டியே தொடங்கல ஆனா கோப்பையை அவிங்களுக்கு தறீங்க” என்று அதிர்ச்சியுடன் நாங்கள் கேட்க

“அட என்னப்பா… கோப்பை 250 ரூ… அவங்க 500 ரூ கொடுத்துட்டாங்க… அப்புறம் எதுக்கு போட்டி” என்றார் பணத்தினை எண்ணிக் கொண்டே.

ஆரம்பத்திலேயே ஏமாற்றம்…!!!

எங்கு சென்று முறையிட வேண்டும் என்றும் தெரியவில்லை. மெது மெதுவாக அந்த வெளிநாட்டவர்கள் தங்களின் சுய உருவத்தினைக் காட்ட ஆரம்பித்தனர்.
ஒருக் காலத்தில் பரந்து விரிந்துக் கிடந்த என்னுடைய நட்பு வட்டாரம் சுருங்கத் தொடங்கியது. “மாணிக்க விநாயகர் சோடா” இறந்தே போனான்.

இந்த நிலையில் தான் சுதேசி இயக்க அண்னாவினை காணச் சென்றேன். என்னை வளர்த்த அவரை விட்டால் எனக்கு வேறு யார் கதி?.

ஆனால் அவரின் நிலைமை எங்களின் நிலைமையைக் காட்டிலும் படு மோசமாக இருந்தது. அவரை வளர்த்தக் காலம் இன்று அவரை தளர்த்தி இருந்தது. நடமாட தடுமாறிக் கொண்டு இருந்த அவரை தாங்கினேன்.

“ஏன் அண்ணா இந்த நிலைமை… என்ன தவறு செய்தோம் நாம்” என்றேன்.

இருமினார்.

“நாம் என்றும் அந்நியர்களிடம் தோற்றதில்லை…சகுனிகளிடமும் கூட இருந்தே குழிப்பறிப்பவர்களாலேயே தான் தோற்று இருக்கின்றோம்… சுதந்திரம் பெற்ற உடன் அந்த சகுனிகளை களை எடுக்க மறந்து விட்டோம். இன்று அவன் தலை எடுத்து விட்டான்” என்றார்.

“அண்ணா, நாம் இப்பொழுது என்ன அண்ணா செய்வது… நம் நிலைக்கு எண்ணத் தீர்வு” என்றேன்.

“புரட்சி…!!! புரட்சி பொடியனே… அதுவே தான் தீர்வு…!!! வேறு வழி இல்லை… மக்கள் உண்மையினை அறிய வேண்டும்… இந்தியன் என்ற நமது முழக்கத்தையே இன்று அந்நியன் தன கையினில் எடுத்து உள்ளான்… அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்… புரட்சியே தீர்வு!!!” என்று முழங்கினார்.

“ஆனால் அண்ணா உங்களுக்கு உடல் நலம் சரியில்லையே… நீங்கள் இருந்தால் தானே புரட்சி… நீங்கள்…” என்றேன்.

“என்னை பற்றி கவலைப் படாதே பொடியா…. இன்று நான் இவ்வாறு இருக்கின்றேன்… ஆனால் இது என் முடிவல்ல… இதை அனைவரும் அறிவர். வெளிநாட்டு கொள்ளைகாரர்கள் முதல்…!!! என் துணைக்கு நீ இருக்கின்றாய்…. உன்னை போல் மேலும் சில நண்பர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் என்னை தாங்கிக் கொள்வீர்கள். அப்புறம் இருக்கவே இருக்கின்றார்கள் எண்ணிலடங்கா என் மண்ணின் வாலிபச் சிங்கங்கள். அவர்கள் மட்டும் உண்மை அறிந்து தெளிவுக் கொள்ளட்டும்… அப்புறம் பாரடா என்னை… உண்மையான நாட்டுப் பற்றும் உணர்வும் கொண்ட ஒருவன் உள்ளவரை நான் இருப்பேன்… இம்மண்ணோடு… கவலைக் கொள்ளாதே… இப்பொழுது நீ புறப்பட்டு சென்று அச் சிங்கங்களை தேடு. தேடி உன் கதையினைக் கூறு…மாற்றம் அதுவாய் வரும்… இன்னும் இம் மண்ணின் இரத்தம் குளிர்ந்து விடவில்லை!!!” என்று கூறி சிரித்தார்.

நானும் அன்று முதல் மக்களிடம் என்னுடைய கதையினை கூற அலைந்துக் கொண்டு இருக்கின்றேன். இப்பொழுது உங்களிடமும் கூறி விட்டேன்.

“நண்பர்களே இதுவே என் கதை… உலகமே ஒரு கிராமமாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுகின்றார்கள். ஆனால் அவர்களின் இந்த கூற்றினால் எத்தனை கிராமங்கள் அழிந்துப் போய் விட்டன என்று அவர்கள் கூறுவார்களா?… உலகம் ஒரு நாகரீகம் என்று சொல்லுகின்றார்கள். ஆனால் எத்தனை நாகரீகங்களை அவர்கள் அழித்து இருக்கின்றார்கள் என்று கூறுவார்களா?… நிச்சயம் மாட்டார்கள். அவர்கள் கூறும் கிராமம் பணக்காரர்களின் கிராமம். பணக்காரர்களின் நாகரீகம். பணமே அங்கே கடவுள், சட்டம், நீதி அனைத்தும். வாழ்க்கைக்கும் நிம்மதிக்கும் அங்கே இடமில்லை…உணர்ந்துக் கொள்ளுங்கள்… உங்களை நம்பியே இங்கே சிலர் இருக்கின்றோம்… உங்களுக்காகவே!!! காப்பாற்றுங்கள்!!!”.

இப்படிக்கு 95 வயதானாலும் உங்கள் அன்பையும் பாதுகாப்பையும் எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சுதேசி மைந்தன்.

கவனிப்பீர்களா…???

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...