வேதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 செப்டம்பர், 2012

சமசுகிருதம் என்று ஒரு மொழி

சமசுகிருதம்....ஒரு அருமையான மொழி!!!

"அட என்னங்க 'தமிழ் தமிழ்' என்றுக் கூறிக் கொண்டு தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் போராடுபவர்கள் எல்லாம் சமசுகிருதத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்க சமசுகிருதம் அருமையான மொழி அப்படின்னு சொல்றீங்களே...கட்சி மாறிடீங்களா!!!" என்று நண்பர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். சமசுகிருதம் உண்மையிலையே அருமையான மொழி தான். அதில் ஆய்வாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்களே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு காலத்தில் சமசுகிருதம் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் திடீர் என்றோ அல்லது காரணம் ஏதும் இன்றியோ தோன்றிவிடவில்லை மாறாக இந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒரு மாபெரும் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலினைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஆனால் இப்பொழுது ஏன் சமசுகிருதத்தினை தமிழர்கள் அன்று வளர்த்தனர்...ஏன் பின்னர் எதிர்கின்றனர்...என்ற இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் சமசுகிருததினைக் காண வேண்டி இருக்கின்றது. காண்போம்...

நாம் ஏற்கனவே சமசுகிருதத்தின் காலம் என்ற பதிவில் சமசுகிருதத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்றுக் கண்டு இருந்தோம். நண்பர்கள் பலர் இக்கருத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் காலம்காலமாக சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்றே நாம் நம்பிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...அவ்வாறு தான் நம்மிடையே கருத்துக்களும் பரப்பப்பட்டு இருக்கின்றன. சரி பிரச்சனை இல்லை...இப்பொழுது நாம் சமசுகிருதத்தினைப் பற்றி சற்று உன்னிப்பாகக் காணலாம். அதற்கு முதலில் நாம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

கி.பி காலத்தில் இந்தியாவில் எந்த எந்த மக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதனை நாம் முன்னர் கண்ட பதிவுகளில் கண்டு இருக்கின்றோம்.
இதற்கு முன்னர் அந்தப் பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை முதலில் படித்து விட்டால் நலமாக இருக்கும். (ஆரியர் யார், ஆரியர் யார் - 2)

சரி படிச்சிட்டீங்களா...அருமை.

கி.பி முதல் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கின்றனர் என்று அந்தப் பதிவுகள் வாயிலாக நாம் அறிந்து இருக்கின்றோம். பெர்சியர்கள் இருக்கின்றனர், கிரேக்கர் இருக்கின்றனர்...ரோமர் இருக்கின்றனர்...பார்தியர்கள் இருக்கின்றனர்...குசானர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மக்கள் இனத்தவர் இங்கே இருக்கின்றனர். பல்வேறு மக்கள் இனத்தவர் இருக்கின்றனர் என்றால் பல்வேறு மொழிகளும் இருக்க வேண்டும் தான் அல்லவா...


அவ்வாறே தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன...தமிழ்,பாலி,அரமேயம்,பாரசீகம்(பெர்சியர்களின் மொழி),கிரேக்கம், இலத்தின், அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.இப்பொழுது ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் மேலே நாம் கண்ட அந்த அனைத்து மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தினில் நம்மால் காண முடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருவாளர் சார் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் சமசுகிருதமே உலகின் முதல் மொழியாக இருந்து இருக்கலாம் என்ற கருத்தை கூறுகின்றார். அன்று ஆரம்பித்தது தான் சமசுகிருதம் உலகின் முதல் மொழி என்றக் கோட்பாடு.

ஆனால் இந்தக் கருத்தினை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் எளிதானதொரு காரணம் தான். சமசுகிருத எழுத்துக்கள் கிடைக்கப் பெரும் முன்னரே மேலே கூறிய அந்த மற்ற மொழிகளுக்கான எழுத்துக்களும் சரி அவை பயன்பாட்டில் இந்த இன மக்களிடம் இருந்தன என்ற சான்றுகளும் சரி மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் சமசுகிருதத்தின் சான்றுகளோ பிற்காலத்திலேயே தான் கிட்டப் பெறுகின்றன. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட ஒரு மொழி என்றே பொருள் தருகின்றது. எனவே மேலே உள்ள அந்த மொழிகளை எல்லாம் இணைத்து ஏன் சமசுகிருதத்தினை மக்கள் உருவாக்கினர் என்று நாம் கருதக் கூடாது...? அந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து செம்மையாக தோன்றிய ஒரு புதிய மொழியாக ஏன் சமசுகிருதம் இருக்க கூடாது? இருக்கலாம் தானே.

அதாவது பல மொழிகள் இருக்கின்றன. அவை முன்னரே இருந்து இருப்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. திடீர் என்று ஒரு புதிய மொழி தென்படுகின்றது...அந்த மொழியில் முன்பு இருந்த மொழியின் எழுத்துக்கள் எல்லாம் தென்படுகின்றன. எனவே முன்பிருந்த மொழிகளை எல்லாம் தொகுத்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் கருத முடிகின்றது தானே. அதுவும் அந்த புதிய மொழியின் அர்த்தமே செம்மையாக செய்யப்பட்டு இருக்கின்றது என்று இருக்கும் பொழுது நம்முடைய கருத்து வலுபெறத்தானே செய்கின்றது. ஆனால் சான்றுகள் இன்றி நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மேலே உள்ள ஆய்வாளர்களின் கூற்றுக்கு அவர்கள் தரும் சான்றுகள் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வேதங்களையும் வேதாந்தங்களையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. மேலும் சென்றப் பதிவுகளில் அவைகளுக்கும் விவிலியத்தில் இருக்கும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் மேலும் எந்த புதிய விடயத்தினையும் காணும் முன்னர் சில பழைய விடயங்களை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது...

௧) ஒரு கிருத்துவக் கொள்கை -

அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.
 

௨) விவிலியத்தைத் தொகுத்ததில் உள்ள ஒரு கொள்கை -
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது – எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது – எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக – கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது – கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.

௩) வேதங்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௪) வேதாந்தங்களுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௫) வேதத்தில் இறைவன் பலியாவது போன்று வரும் செய்திகள். நிற்க.
என்ன அனைத்து விடயங்களையும் ஒரு முறை நியாபகப்படுத்திக் கொண்டு விட்டீர்களா? நன்று. இனி நாம் சுத்தி வளைக்காது நேரே நம்முடைய கருத்துக்கு செல்லலாம்.

மேலே நாம் கண்ட கிருத்துவக் கொள்கையின் மூலம், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் அவைகளின் மூலமாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றே நாம் அறிகின்றோம்(இன்று அரசியல் காரணமாக அனைத்து சமயங்களின் கொள்கைகளுமே மாறி விட்டன) அதன் அடிப்படையிலேயே யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தினைப் பற்றிய தொகுதியான பழைய ஏற்பாட்டினை எபிரேய மொழியில் தொகுக்கின்றனர். பின்னர் அந்த நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கிருத்துவின் கருத்துக்களைக் கூற அங்கே பரவலாகக் காணப்பட்ட கிரேக்க மொழியிலே தொகுக்கின்றனர்.

ஆனால் யூதர்களும் கிரேக்கர்களும் மட்டுமே அன்று உலகில் வாழ்ந்த மக்கள் அல்லவே...மற்ற இனத்தவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே. அவர்களுக்கென்று தனி மொழி இருக்குமே. எபிரேயத்தில் யூதர்களுக்கு சொல்லியாயிற்று...யூதர்களுக்கும் சரி கிரேக்கர்களுக்கும் கிரேக்கத்தின் வாயிலாகவே சொல்லியாயிற்று...அந்த நூல்களில் யூதர்களின் பழக்க வழக்கங்களும் சரி கிரேக்கர்களின் வரலாறும் சரி இருக்கின்றன... எனவே அந்த மக்கள் அந்த நூல்களின் உள்ள கருத்துக்களை அவர்களின் வாழ்வோடு இணைத்துக் கொள்வர். ஆனால் மற்ற மக்களுக்கு? அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துக் கொண்டு அவற்றின் வாயிலாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் தானே...அது தானே முறையாக இருக்கும். நிற்க.

இந்நிலையில் தான் நாம் இந்தியாவினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்வேறு மொழிகள் இருக்கின்றது. பல்வேறு மக்கள் பல்வேறு வரலாற்றோடு இருக்கின்றனர். பலி இடும் பழக்கம் அனைவரின் மத்தியிலும் ஒன்றினைப் போலவே இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களைச் எவ்வாறுச் சொல்வது? எந்த மொழியினில் சொல்வது?

நியாயமான கேள்வி தானே. இக்கேள்விக்கு இரண்டு விதமாக தீர்வினைக் காண முடியும்.

ஒன்று - அனைத்து மொழிகளிலும் கருத்துக்களைப் படைத்து அனைவரிடமும் பரப்பலாம்.

இரண்டு - அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினைப் படைத்து அதன் மூலமாக கருத்துக்களைப் பரப்பலாம்.

இந்த இரண்டு தீர்வுகளில் அக்காலத்தில் இருந்த அறிஞர்கள் இரண்டாவது தீர்வினைத் தேர்ந்து எடுத்ததே இன்று சமசுகிருதம் என்ற மொழி நம்மிடையே இருப்பதற்கு காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆம்...அவர்களின் கூற்றின் படி அக்காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தினைப் பரப்ப அன்று நிலைவிய மொழிகளான தமிழ்,பாலி,அர்த்தமாகதி,அரமேயம்,கிரேக்கம்,இலத்தின் போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி தான் சமசுகிருதம். அவ்வாறு அது உருவாக்கப்பட்டமையால் தான் அது 'செம்மையாகச் செய்யப்பட்டது' என்று பொருள் தருவதோடு அம்மொழி யாராலும் பேசப்பட்டதாக வரலாறும் கிட்டப்பெறாமல் இருக்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு மொழியினைக் கொண்டு இந்தியாவில் அன்று இருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனது கருத்துக்களைப் பரப்ப அன்று இருந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் தான் வேதங்களும் வேதாந்தங்களும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அன்று இந்தியாவில் இருந்த மக்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரிடமும் பல கடவுளர் வழிபாடும் பலி வழிபாடும் ஒன்றினைப் போலவே இருந்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்களாகட்டும் அல்லது பெர்சியர்களாகட்டும் பலி இருந்து தான் இருக்கின்றது. அப்படி இருக்கையில், "இறைவனுக்கு பலியிட்டு நாம் வணங்கிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...ஆனால் இறைவன் நமக்காக பலியாகி விட்டார்... எனவே நாம் பலியிடத் தேவை இல்லை...மாறாக நமக்காக பலியான இறைவனை வேண்டி அன்பினையே போதிப்போம்" என்ற கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் பரப்பத் தான் வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி தொகுக்கப்படுகின்றன.

அதனால் தான் வேதங்களில் பல கடவுளர் இருக்கின்றனர்...பலி இருக்கின்றது...முடிவில் இறைவன் பலியாவதைப் போல் வருகின்றது. வேதாந்தத்தில் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையும் பலி தேவை இல்லை என்ற கொள்கையும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் அன்று இருந்த அனைத்து மக்களுக்கும் பொதுவாக வேதங்களைத் தொகுத்தக் காரணத்தினால் தான் வேதங்களில் பெர்சியர்களின் கொள்கைகள், வரலாறு மற்றும் கிரேக்கர்களின் கொள்கைகள் மற்றும் இன்னும் பல கொள்கைகளும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,

"வேதங்களுள் வழிப்படப்பட்ட இயற்கைப் பொருள்களுள் பழமையானது வானம். இதனுடைய பழம் பெயர் 'தியுஸ்' என்பது. இது கிரேக்க சுஸ் என்பதையும் இலத்தீனில் உள்ள ஜுபிட்டர்ஐயும் ஒத்ததாய் இருக்கின்றது. 'தியுஸ்' என்பது பிதர், தந்தை என்றும், படைப்பவர், ஆற்றல் மிக்கவர் என்றும் கூறப்படுகின்றன. 'தியுஸ் பிதர்' என்னும் வான் தந்தை அல்லது ஒளியின் தந்தை என்பது விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்பதையும் ஒளியின் தந்தையே என்பதையும் நினைவுறுத்துகின்றன" என்றே கூறுகின்றார் மாரிஸ் பிலிப்ஸ் என்னும் ஆய்வாளர் தனது 'The Teaching of the vedas' என்னும் நூலில்.

“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).

மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது ‘ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley – The Myth of the Aryan Invasion of India)’ என்ற தனது புத்தகத்திலே ‘ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய – ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனவே இந்தியாவில் அன்று இருந்த பல்வேறு இனங்களுக்குரிய வரலாறு, பாடல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினைத் அவர்களுக்காகத் தொகுத்து அவர்களின் இறைவன் அவர்களுக்காக பலியானான் என்ற செய்தியை தெரிவித்து பின்னர் இறைவன் ஒருவன் தான் அவன் மக்களுக்காகவே இருப்பவன் என்ற கருத்தினைத் தெரிவிக்கவே வேதங்களும் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்றக் கொள்கைக்கு ஏதாக அம்மக்கள் அவர்களுள் கொண்டு இருந்த இறைப் பெயர்களைக் கொண்டே அம்மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். அதனால் தான் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படவில்லை.

காரணம் இறைவனின் பெயர் முக்கியமில்லை கருத்துக்களே முக்கியம் என்ற நிலையில் தான் அன்றைய அறிஞர்கள் கருத்துக்களைத் தொகுக்கின்றனர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும் முதலில் இருக்கு வேதமே தொகுக்கப்பட்டது என்றும் பின்னரே மற்ற வேதங்கள் தொகுக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சரி இருக்கட்டும்…!!!
 
இறைவன் உலகிற்கு வந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தியினைப் பரப்பவே வேதங்களும் பின்னர் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன, அந்தப் பணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழி தான் சமசுகிருதம் என்ற இந்த கருத்தை நிச்சயம் ஏற்பது கடினமாகத் தான் இருக்கும். இந்நிலையில் இக்கருத்துக்களை வலுப்படுத்துமாறு வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
 
மேலும் பலி இல்லாத வழிபாட்டு முறைக்கு புத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் தாக்கங்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா என்றக் கேள்வியும் இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றது அல்லவா…எனவே நாம் அவற்றையும் காணத் தான் வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் இப்பொழுது அந்த சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது…
 
காண்போம்…!!!
 
பின்குறிப்பு:
 
இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவை தமிழர்களால் இறைவன் பலியானதை தெரிவிக்க தொகுக்கப்பட்ட நூல்கள் என்று கூறுகின்றீர்களே அப்படி என்றால் அதில் வரும் நான்கு பிரிவுகள் எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருந்தது என்றால், வேதங்களில் இறைவன் மனிதன் நான்கு வர்ணமாக படைத்தான் என்று வரும் பகுதி இடைச் செருகல் என்றே அம்பேத்கர், மாக்ஸ் முல்லேர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்து இருக்கின்றன என்று. அக்காலம் தொடங்கி இந்திய நூல்களில் பல மாற்றங்களும் பல இடைச் செருகல்களும் நிகழ்ந்து இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

வேதத்தில் பலியான கடவுள்

கடந்த இரு பதிவுகளில் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றியும் விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றினுள் உள்ள வேறுபாடுகளைப் பற்றியும் சிறிதளவு பார்த்தாயிற்று. நாம் சென்ற பதிவினில் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் வேதத்திற்கும் எபிரேயச் சமயத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருப்பதாக கூறி இருக்கின்றார் என்றுக் கண்டோம். மேலும் பழைய ஏற்பாடு என்பது எபிரேய மதத்தினைச் சார்ந்தது என்றும் கண்டோம். அத்தகைய பழைய ஏற்பாட்டுக்கும் வேதங்களுக்கும் தான் தொடர்புகள் பல இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இங்கே ஆச்சர்யப்படத்தக்க ஒரு விடயம் என்னவென்றால் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளுக்கும் சரி பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றுள் காணப்படும் வேறுபாடுகளும் சரி கிட்டத்தட்ட ஒன்றைப் போலவே இருக்கின்றன. அதாவது,

வேதத்திலும் சரி பழைய ஏற்பாட்டிலும் சரி பலி இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. இறைவனிடம் நாம் ஏதாவது வேண்டினோம் என்றால் அதற்கு பலி நிச்சயம் தேவை என்ற நிலையே அவ்விரண்டு நூல்களிலும் காணப்படுகின்றது.

வேதங்களில் யசுர் வேதம் பலி செய்யப்பட வேண்டிய முறைகளைக் குறிப்பதாக உள்ளது. பழைய எற்பாட்டினிலும் லேவியாகமம் என்னும் பகுதி முழுக்கவே பலி எவ்வாறு செய்ய வேண்டும் என்றுக் குறிப்பதனைப் போலவே விளங்குகின்றது. இவ்விரண்டு முறைகளிலுமே நெருப்பு இன்றியமையாத ஒன்றாக அமைந்து இருக்கின்றது.

ஆனால் வேதாந்தங்களோ அல்லது புதிய ஏற்பாடோ பலியினை மறுப்பது போன்றே அமைந்து உள்ளன.

மேலும் வேதங்களிலும் சரி பழைய எற்பாட்டினிலும் சரி பல கடவுளர் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் வேதாந்தங்களோ அல்லது புதிய ஏற்பாடோ தலைக் கடவுள் அதாவது முழுமுதற் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையினை உடையவையாக இருக்கின்றன.

மேலும் உலகப்படைப்பினைப் பற்றிய கருத்துக்கள் வேதங்களிலும் சரி பழைய ஏற்பாட்டில் உள்ள ஆதியாகமத்திலும் சரி கிட்டத்தட்ட ஒன்றைப் போலவே இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"வேதங்களிலும் ஆதியாகமத்திலும் உலகப் படைப்புப் பற்றிய கருத்துக்கள் ஒத்துக் காணப்படுவதற்கு அவை இக்கருத்தை மூலச் சமயத்தினை அடியொட்டிப் பெற்று இருத்தல் காரணமாயிருக்கலாம்" என்று கே.சு.மாக்டொனால்ஸ் அவர்கள் குறிப்பிடுவதும் இங்கே சிந்தித்துப் பார்பதற்கு உரிய ஒன்றாக இருக்கின்றது.

மேலும் வேதங்களிலும் சரி பழைய ஏற்பாட்டிலிலும் சரி கடவுளர் தங்களின் மக்களுக்காக மற்றவரோடு போர் புரிவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

"யாவே, இந்திரனைப் போல் ஒரு நாட்டுக்குரிய போர் கடவுளாக, சேனைகளின் தலைவராகக் காட்டப்படுகின்றார். பகைவருக்கு எதிராக போர் புரிபவராகக் காட்டப்படுகின்றார். தம்முடைய மக்களுக்காகக் கடலையும் நதியையும் வெள்ளத்தையும் அடக்கி, தம்முடைய மக்களைப் பகைவரினின்று காப்பவராகக் காட்டப்படுவதும் ஒப்பிடற்குரியன" என்றே
எச்.தி. கிரிசுவோல்த் கூறுகின்றார்.

ம்ம்ம்....இந்த ஒற்றுமைகள் தற்செயலாய் அமைந்தவைகளாக இருக்கலாம் அல்லது இந்த ஒற்றுமைகளுள் அர்த்தங்களும் ஏதாவது மறைந்து இருக்கலாம். அதனைக் காண வேண்டும் என்றால் நாம் வேதங்களைச் சற்று உன்னிப்பாக காண வேண்டி இருக்கின்றது. காண்போம்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் வேதங்கள் தொகுக்கப்பட்ட பாடல்கள் தாம் என்று. அதில் பல கடவுளர் சிறப்பினைப் பல்வேறு காலங்களில் சிறப்பினைப் பெற்று விளங்குவதுப் போல் இருக்கின்றது. உதாரணத்துக்கு,

"இருக்கு வேதத்தின் இரண்டாம் மண்டலம் - முதல் பாடல் அக்கினியை அண்டத்தையே ஆள்பவன், மனிதர் அனைவருக்கும் தலைவன் என்றெல்லாம் கூறுகின்றது. அதே வேதத்தின் பத்தாவது மண்டலம் இந்திரனே, அனைத்திற்கும் மேலான தலைவன் என்றுக் கூறுகின்றது." என்றே சுசுமிதா பாண்டே அவர்கள் அவர்களது 'Birth Of Bhakthi in Indian Religions and art' என்னும் நூலினில் குறிப்பிடுகின்றார். நிற்க.

இப்பொழுது நாம் மேலே கண்ட சில செய்திகள் வாயிலாக வேதங்களுக்கும் சரி பழைய ஏற்பாட்டுக்கும் சரி சில ஒற்றுமைகள் இருக்கின்றன என்று நாம் காண்கின்றோம். ஆனால் இப்பொழுது சில கேள்விகள் எழலாம்... நிச்சயம் எழும்.

௧) பழைய ஏற்பாட்டுக்கும் சரி வேதங்களுக்கும் சரி சில ஒற்றுமைகள் இருக்கின்றன சரி... ஆனால் வேறுபாடுகளும் இருக்கின்றனவே...அதற்கு என்ன பொருள்?
௨) ஒற்றுமைகள் இருக்கின்றன சரி... ஒருவேளை வேதங்களில் இருந்து பழைய ஏற்பாட்டின் கருத்துக்கள் தோன்றி இருக்குமல்லவா?
௩) பழைய ஏற்பாட்டில் உள்ள கடவுளரின் பெயர்களும் சரி வேதத்தில் உள்ள கடவுளரின் பெயர்களும் சரி முற்றிலும் வேறாக இருக்கின்றனவே...அவ்வாறு இருக்க அவை எப்படி ஒற்றுமைகளாக கருதப்படக் கூடும்?

நியாயமானக் கேள்விகள். நிச்சயம் இவற்றிற்கு நாம் விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் சில பாடல்களையும் சமசுகிருத மொழியினையும் காண வேண்டி இருக்கின்றது. முதலில் இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தினைக் கண்டு விடலாம். காரணம் அங்கே ஒரு இறைவன் பலியாகி இருக்கின்றார்...நமக்காக. அவரை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

வேதங்களில் விலங்குகளை பலி இடும் நிலை மிகவும் தெளிவாக காணப்படுகின்றது. ஆனால் வேதங்களின் பிற்பகுதியிலோ தெய்வமே பலியாகும் நிலைக் காணப்படுகின்றது. வேதத்தின் முற்பகுதியில் காணப்படாத இக்கருத்து பிற்பகுதியில் காணப்படுவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

வேதங்களில் உலகைப் படைத்த இறைவன் விசுவகர்மா, பிரசாபதி, புருசா எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றார். இப்பொழுது இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் சில பாடல்களின் கருத்துக்களைக் கண்டு விடலாம்...

"பூமியையும் வானத்தையும் பிறவற்றையும் படைத்த 'விசுவகர்மன்' பூமியில் மனிதர் நடுவில் வந்தார்" - இருக்கு வேதம் X - 81

"இறைவன் மற்றவர்களுக்காக தாமே இறப்பைத் தெரிந்துக் கொண்டார். ஆனால் 'யாமா (Yama)' அவரது உடலினை விடுவித்து விடுகின்றான்" (அதாவது பலியான கடவுள் உயிர்த்து எழுகின்றார்) - இருக்கு வேதம் X - 13:4,5

"புருசா உருவெடுத்து வந்து பலியாவதற்காகத் தன்னையே கொடுத்தார்." - இருக்கு வேதம் X - 90:6

"அடியவர்களால் பலியிடப்படும் பலியாக, பிரசாபதி இருக்கின்றார். தன்னையே பலியாக்க விருப்பம் கொண்டார்." - பிருகத் ஆரணியகா உபநிடம் 1:4:1

"புருசா பலியாகி இருக்கின்றார்." - சாந்தோக்கிய உபநிடம் - 3:16:1

"பிரசாபதி பலியாகி இருக்கின்றார்." - சதபத பிரம்மணம் 1:13, 4:15

மேலே உள்ள பாடல்கள் இருக்கு வேதத்தின் இறுதியிலேயே காணப்படுகின்றன. பலியில் ஆரம்பிக்கும் வேதம் இறைவன் பலியாகும் நிலையில் முடிவடைகின்றது. அதுவும் இறைவன் மனித உருவமெடுத்து உலகினில் வந்து பலியாவதற்காக தன்னையே கொடுத்தார் என்றும் இருக்கின்றது. இப்பொழுது நமது கேள்வி ஏன் இறைவன் பலியாவது போன்ற பகுதி வேதத்தில் காணப்படுகின்றது?... அது கிருத்துவக் கொள்கையல்லவா?

இதற்கு பதிலாய் ஆய்வாளர் கூறுவது  என்னவென்றால், "இறைவன் உலகினில் வந்து பலியானார் என்ற கருத்தினைத் மக்களுக்கு தெரிவிக்கவே தமிழர்களால் வேதங்கள் தொகுக்கப்பட்டன...அன்று கடவுள் நம்பிக்கை உடைய மக்கள் அனைவரும் பலி வழிபாட்டினை உடையவர்களாகவே இருந்தனர்...அவர்களுக்கு பலி நிறைவேறி விட்டது என்ற கருத்தினைத் தெரிவிக்கவே, அன்று மக்கள் மத்தியில் நடைமுறையில் இருந்த பலியில் இருந்து ஆரம்பித்த வேதங்கள்..இறைவன் மக்களுக்காக பலியான செய்தியோடு முடிகின்றன. வேதங்கள் அவ்வளவே...!!! பின்னர் இறைவனின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு ஓர் இறைக் கோட்பாடோடும் பலி இல்லா வழிபாட்டு முறைகளோடும் உபநிடங்கள் தொகுக்கப்பட்டன. அவை வேதங்களை முற்று பெறச் செய்வதனால் வேதாந்தங்கள் என்றுப் பொருள் கொள்கின்றன". இதுவே ஆய்வாளர்களின் கருத்துக்களாகும்.

இதனால் தான் வேதங்களில் பலி இருக்கின்றது, பல கடவுளர் இருக்கின்றனர்... ஆனால் வேதாந்தங்களிலோ பலி கிடையாது...இறைவன் ஒருவனே என்றக் கருத்துக்களும் இருக்கின்றது. இம்மாற்றங்களுக்கு காரணமாய் இறைவன் பலியாவது என்கின்ற விடயம் இருக்கின்றது.

இப்பொழுது மேலும் சில கேள்விகள் எழலாம்...

௧) வேதங்களில் பல கடவுளர் பலியாவது போல் வருகின்றதே... மேலும் இயேசு என்ற பெயரே வரவில்லையே பின்னர் எவ்வாறு இயேசுவைத் தான் வேதங்கள் குறிப்பிடுகின்றன என்று நீங்கள் கூறலாம்?

௨) வேதங்களை தொகுத்தவர் தமிழர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூறுகின்றீர்கள்?

௩) தோமா இந்தியா வந்தார் என்பதனை நாங்கள் நம்பவில்லை பின்னர் எவ்வாறு கிருத்துவின் கருத்துக்கள் இந்தியா வந்தது என்று நீங்கள் கூறுகின்றீர்கள்?

௪) பலி மறுப்பு புத்த சமண சமயங்களின் தாக்கத்தில் இருந்தும் தோன்றி இருக்கலாம் அல்லவா?

இக்கேள்விகளுக்கும் சரி மேலே ஏற்கனவே நாம் கண்ட மற்ற கேள்விகள் சிலவற்றுக்கும் விடையினைக் காண நாம் சமசுகிருதத்தினைக் காண வேண்டி இருக்கின்றது. காணலாம், ஆனால் தோமாவைப் பற்றியும் இந்தியாவில் கிருத்துவர்கள் வந்தது பற்றியும் இருவர் நம்மிடமும் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைகின்றனர். அவர்களுள் ஒருவர் மிகப் பெரியவர் அவரை காக்க வைப்பது அவ்வளவு சரியானதொன்றாக இருக்காது...இந்தியாவின் முதல் பிரதமருக்கு நாம் நிச்சயம் முக்கியத்துவம் தரத் தான் வேண்டி இருக்கின்றது. இதோ இந்தியாவில் கிருத்துவர்களைப் பற்றி அவர் கூறுகின்றார்...

"கிருத்துவ மதம் இங்கிலாந்துக்கும் மேற்கு ஐரோப்பியாவுக்கும் செல்வதற்கு நெடுங்காலம் முன்னரே இந்தியாவுக்கு வந்து விட்டதென்பதை அறிய நீ ஆச்சரியப்படுவாய். அது இந்தியாவுக்கு வந்த காலத்தில் ரோமாபுரியில் கூடக் கிருத்துவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இயேசு கிருத்து இறந்த நூறு ஆண்டுகளுக்குள் கிருத்துவ பாதரிமார்கள் கடல் வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்." என்றே ஜவகர்லால் நேரு அவர்கள் அவரது 'உலக வரலாறு' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

மேலும் தோமாவைப் பற்றி "பார்டனோன் என்ற ஊரைச் சேர்ந்த துறவியான ஒடோரிக் என்பவர் 1321இல் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவின் மேற்குக் கடற்கரை நாடுகளில் பயணம் செய்து இலங்கைக்குப் போய்விட்டு, அதன் பின்னர் மயிலாப்பூர் வந்து, செயின்ட் தாமஸ் மாதக் கோவிலைப் பார்த்தார். இந்தியப் பழக்க வழக்கங்களைப் அவர் நேரில் பார்த்து எழுதி இருக்கின்றார் என்பதை அவருடைய குறிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.” எனவும் “பிரான்சை சேர்ந்த மரிகொன்லி ஜான் என்பவர், நமது கவனத்தைச் சிறிது கவரும் இன்னொரு துறவி. அவர் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக குப்லாக்கான் அரசவைக்குப் போனார். அவரும் மார்கோ போலோவைப் போல் தரைவழியாகவே சீனாவுக்குச் சென்றவர்.1346 இல் அவர் புகழ் பெற்ற சீனத் துறைமுகமான ஜெயிடன் துறைமுகத்தில் கப்பலேறி கொல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குச் சிறிது காலம் தங்கியப் பின் செயின்ட் தாமஸ் மாதாக் கோவிலைத் தரிசிப்பதற்காக சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்தார்” என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவரது தென்னிந்திய வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

எனவே கிருத்துவர்களும் சரி தோமாவும் சரி இந்தியாவுக்கு கி.பி முதல் நூற்றாண்டிலேயே வந்து இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன என்றே நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் மற்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது...

சமசுகிருதம் காத்து இருக்கின்றது நமக்காக...கி.பி காலத்தினில்....!!!

பயணிப்போம்...!!!

பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1

வேதங்கள் என்றால் என்ன?

இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும்.

ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்."

என்ற விடையே விரைவாக நமக்கு கிட்டும். காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். வேதங்கள் நான்கு. அவை இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. நிற்க.

ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். அதுவும் குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். அவர்களுள் சிலர் தேவநேயப் பாவாணர், மறைமலைஅடிகள், திரு. கா.சு.பிள்ளை போன்றவர்களாவர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. பார்க்கலாம்.

முதலில் வேதங்கள் என்றால் என்னவென்றே காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்க வேண்டும் என்றால்,

"நான்கு வேதங்களுள் முதன்மையானதும் பழமையானதுமாக இருப்பது இருக்கு வேதமே. யசுர், சாமம், அதர்வணம் எனும் மற்றைய மூன்று வேதங்களும் இருக்கு வேதத்தின் மறுவமைப்புகளே" என்றே திரு சே.டால்போயிஸ் வீலர்(J.Talboys wheeler) என்னும் ஆராய்ச்சியாளர் தனது 'India of the Vedic age with reference to Mahabharata-Vol.1 of the history of India' நூலில் கூறுகின்றார்.

இவரதுக் கூற்றுகளை உறுதிப் படுத்துவது போல " மற்றைய மூன்றையும் இருக்கு வேதத்தின் பிற சேர்க்கை என்றும், இருக்கு வேதத்தின் விளக்கம் என்றும் சாரம் அல்லது சுருக்கம் என்றும் கூறலாம். இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் இருக்கு வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் இருக்கு வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது" என்றே மற்றொரு ஆய்வாளரான கே.சு.மாக்டொனால்ட்ஸ் (K.S.Macdonalde) அவர்கள் அவரது 'The Vedic Religion' நூலில் குறிப்பிடுகின்றார்.

அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களும் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட இருக்கு வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன.

அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் இருக்கு வேதத்தை சார்ந்தே இருக்கின்றன. நிற்க.

இப்பொழுது நாம் வேதங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் பற்றி சற்று கண்டு விடலாம்.

இருக்கு வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிப்படப்பட்டு உள்ளன. மேலும் "சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிப்படப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர்" என்று மற்றொரு ஆராய்ச்சியாளரான எ.எ.மாக்டொனால்ஸ் (A.A.Macdonell) அவர்கள் அவரது 'India's Past' புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும் சரி மர வழிபாடும் சரி வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலே நாம் கண்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நம்மிடையே இருக்கும் முழு முதற் கடவுளை வணங்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இயற்கை வழிபாடுகளை உடைய வேதங்களுக்கும் சரி தொடர்பு இருப்பது போன்றா தெரிகின்றது?

"அட...நில்லுங்கள். வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை. வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா...அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா" என்று எண்ணினீர்கள் என்றால் முதலில் ஒரு விடயம், வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப் பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் சரி வேதாதங்களுக்கும் சரி தொடர்பு இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு இதோ தேவநேயப் பாவாணரின் கூற்று,

"ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டேயாதலால் ஓரே, முழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்துஎன்று கூறுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு   - தமிழ் மண் பதிப்பகம்).

இவரின் கூற்றினை மெய்ப்பிப்பதை போன்றே பல விடயங்கள் வேதங்களுக்கும் சரி உபநிடங்களுக்கும் சரி வேறுபட்டுத்தான் இருக்கின்றன.

வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது'
உபநிடங்களோ 'இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான்...அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை' என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது.
வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைப் பற்றி மேலும் காண வேண்டும் எனில் வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். காரணமில்லாமல் இல்லை, ஏனெனில் அப்படிப்பட்ட கருத்துக்கள் தாம் நம்மிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் என்பது காலகாலமாக வாய் வழியாகச் சொல்லப்பட்டு வந்த ஒன்று. அவற்றின் காலம் இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத வண்ணம் பழையக் காலம் என்றே போதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் நீண்ட காலமாக வேதங்களைப் பொது மக்கள் படிக்க முடியாத வண்ணமே சூழ்நிலைகளும் இருந்தமையினால் அந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய முடியாத நிலையே இருந்தது. ஆனால் இன்றோ அக்கருத்துக்களை மறுத்து அறிஞர்கள் சிலர் புதுக் கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் வேதங்களின் தொன்மையை மறுக்க ஒரு முக்கியமானக் காரணம் வேதங்களைப் பற்றிய சான்றுகள் எவையும் பழமையான காலத்தில் கிட்டப்பெறாமையே.

"வேதங்கள் மிகப் பழமையானவை என்றுக் கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன" என்ற Bloomfield பதிப்பகத்தாரின் 'The religion of the Vedas' புத்தகத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சரி அவர்களின் கருத்து இருக்கட்டும். இப்பொழுது நாம் வேறு சில விடயங்களைக் காண்போம்.

வேதங்களும் சரி...உபநிடங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் சமசுகிருதம் என்ற மொழியின் சான்றுகள் நமக்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிட்டப்பெற ஆரம்பிக்கின்றன என்று. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமசுகிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்று முன்னர் பதிவினில் கண்டு இருந்தோம். (பார்க்க: சமசுகிருதத்தின் காலம்)

பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான். அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப் பெறுகின்றது, "அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெரும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும், ஏனெனில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் நடைப் பெற்ற சில சரித்திர நிகழ்ச்சிகளில் வேதக் கடவுளர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றனவே...அவ்வாறு இருக்கையில் அவற்றின் காலத்தை எவ்வாறு அவை எழுத்துரு பெற்றக் காலத்தினை வைத்துக் கூறுகின்றீர்கள்...அது சரியான ஒன்றாக அமையாதே" என்றக் கேள்வி எழுவது இயல்பே.

உண்மை தான். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை யாது வந்தது? நிற்க.

இப்பொழுது வேதத்தின் காலத்தினைப் பற்றிக் காணலாம். அதற்கு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. "அட என்னங்க வேதம் அப்படின்னு சொல்லிட்டு விவிலியத்தினைப் பார்போம் என்கின்றீர்களே" என்கின்றீர்களா, சற்று பொறுங்கள் பொருள் இருக்கத் தான் செய்கின்றது.
பழைய ஏற்பாட்டின் காலம் என்ன? என்ற கேள்விக்கு
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்ற விடைகளே கிட்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் உலகம் தொடங்கிய செய்திகள் முதற்கொண்டு ஏனைய பல வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அதனை எல்லாம் கணக்கில் கொண்டா பழைய ஏற்பாட்டின் காலத்தினைக் கணிக்க முடியும்? அவ்வாறு கணித்தால் உலகம் தோன்றிய பொழுதே பழைய ஏற்பாடும் தோன்றி இருக்க வேண்டும். மாறாக பல செய்திகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வந்ததே பழைய ஏற்பாடு. இது புது ஏற்பாட்டுக்கும் பொருந்தும். மற்ற தொகுக்கப்பட்ட நூல்களுக்கும் பொருந்தும். எனவே அந்த நூல்கள் என்று தொகுக்கப்பட்டனவோ அக்காலம் தான் அந்த நூல்களின் காலமாக கருதப்பட வேண்டும். அது தான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.

இந்த விதியே வேதங்களுக்கும் பொருந்தும். காரணம் வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும் என்கின்றார் ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள். அவரின் கூற்றின் படி, கி.பி காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒருக் கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமசுகிருதம் என்றும் அவர் கூறுகின்றார். (வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர் என்ற கருத்து நமக்கு ஏற்கனவே தெரியும்)

நம்புவதற்கு கடினமான விடயங்கள் தான். ஆனால் அவர் கூறும் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் சில சான்றுகளையும் அவர் தரும் பொழுது, அவற்றை முற்றிலும் நம்மால் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவ்வாறு அவர் தரும் சான்றுகள் என்ன...

காண்போம்...!!!


பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...