அந்த நாள் ஞாபகம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்த நாள் ஞாபகம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 அக்டோபர், 2010

கற்பனை உலகில் ... நான்! -2

மாயாவி...!!!

1980களில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் இருந்த இளம் வயதினர் நிச்சயம் இந்த பெயரைக் கேள்விப்படாது இருந்திருக்க முடியாது. அதுவும் குறிப்பாக தமிழ் காமிக்ஸ் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த அனைவராலும் தவிர்க்க முடியாத பெயராய் மாயாவி விளங்கிற்று என்று சொன்னாலும் அது மிகையாகாது.

அப்படி என்னயா மாயம் அந்த பெயரில் இருக்கு என்கின்றீர்களா?.
அதான் மாயாவி!!!.

காமிக்ஸ் உலகத்தில் வாத்துக்களோடும் முயல்களோடும் தவழ்ந்து கொண்டு இருந்த இளைய சமுகத்தை, எங்கள் கை பிடித்து அதிரடி சாகசங்கள் என்னும் அடுத்தக் கட்ட கற்பனை உலகத்திற்கு கூட்டிச் சென்றவர் அவர்.

சுருக்கமாகச் சொன்னால் எங்கள் தலைமுறையின் முதல் அதிரடி நாயகன் அவர் - மாயாவி.
"அது எப்படி உங்க தலைமுறையை மட்டும் சொல்லலாம்... எங்க காலத்துலையும் அவர் தான்பா நாயகன்" என்று எங்களின் முந்தைய தலைமுறையும் கூட சண்டைக்கு வரலாம். தவறில்லை. மாயாவியின் தாக்கம் அப்படி.

1980களையும் 90களையும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் என்பார்கள். அந்த காலம் எப்பொழுது தொடங்கிற்று என்று எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் மாயாவி இன்றி அது தொடங்கி இருக்காது என்பது மட்டும் எனக்கு தெரியும். அது வரை வெள்ளித்திரையில் மட்டுமே கதாநாயகர்களை கண்டு கொண்டு இருந்த எங்களின் கைகளில் வெள்ளித்திரை காணாத நாயகர்களை காமிக்ஸ்கள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்த காலம்.

அது ஒரு கனாக்காலம்...

எப்படி வெள்ளித்திரையில் ரஜினியின் படம் என்றால் போட்ட காச எடுத்து விடலாம் என்ற உத்திரவாதம் ஒன்று இருந்ததோ அதே போல் தான் மாயாவியின் கதைகளுக்கும்.

"மாயாவி கதையா... நிச்சயம் எல்லா பிரதியும் வித்துரும்னே" என்பது தான் விற்பனையாளர்களின் கூற்றாக இருந்தது.

புத்தகம் வெளியான அன்றே 'இப்பொழுது விற்பனையில்' என்று ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் செய்யும் அளவுக்கு காமிக்ஸ்களின் தாக்கம் இருந்தது. அதுவும் மாயாவியின் தாக்கம் குறிப்பாக அதிகம் இருந்தது.

அறிந்தோ அறியாமலோ மாயாவி ஒரு புரட்சி செய்து கொண்டு இருந்தார். இல்லையா சமூகத்திடம் உள்ள படிக்கும் குணத்தை அவர் பெருக்கிக் கொண்டு இருந்தார்.

பள்ளி முடிந்து வந்த உடனே "அம்மா அம்மா ... ஒன்னா ரூபா தாங்கமா... புத்தகம் வாங்கிட்டு வந்துடறேன்" என்று ரூபாயை கேட்டு வாங்கிக் கொண்டு விரைவாக மிதிவண்டியில் போய் புத்தகம் வாங்கிப் படித்தது இன்றும் அப்படியே ஞாபகம் இருக்கின்றது. அந்த புத்தகமும் தான். ஆனால் மாயாவி முன்பு இருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்றைய இளைய சமுதாயம் மாயாவியை புறக்கணித்துக் கொண்டு இருகின்றனர். மாயாவியை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ்களையே, ஏன் கிட்டத்தட்ட தமிழ் நூல்களையே தங்களை அறியாது புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மாயாவி இன்றும் பெருநகரங்களில் ஆங்கில புத்தக கடைகளில் ஆங்கிலம் பேசிக் கொண்டு சண்டையிட்டு கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர் தமிழ் பேசிய நூல்கள் தான் எங்கோ பின் தங்கி விட்டன.

"பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்" என்றார் பாரதி.
ஆனால் இன்று இந்த இளைய சமுதாயம் நம் மொழியின் மகிமையை அறியாது நின்றுக் கொண்டு இருக்கும் காரணத்தால், நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு இருந்த நிறுவனங்கள் இன்று அந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு பெயர்ந்து கொண்டு இருக்கின்றன.

எனவே தான் ஆங்கிலம் பேசும் மாயாவியை 400 ரூ கொடுத்து வாங்க ஆட்கள் இருகின்றார்கள். ஆனால் 4 ரூ கொடுத்து தமிழில் வாங்க ஆட்கள் யாருமில்லை.

இந்த பதிவு என்னுடைய கற்பனை உலகில் நான் கடந்த கதாநாயகர்களை பற்றியே... என்னை அதிரடி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த மாயாவியை விட்டு விட்டு வேறு யாரைப் பற்றியும் எழுதத் தொடங்க மனம் ஒத்துழைக்கவில்லை. எனவே இதோ மாயாவியை பற்றிய ஒரு சிறு பதிவு. தங்களின் சிறு வயதை மாயாவியோடு கடந்தவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு சின்னத் திரும்பிப் பார்க்கும் படலமாக இருக்கும். மாயாவியை அறியாதவர்களுக்கோ அவரை நான் அறிமுகம் செய்து வைக்கும் படலமாக இருக்கும்.

ஆரம்பிக்கும் முன் என்னை மாயாவிக்கு அறிமுகம் செய்து வைத்து என்னை காமிக்ஸ் உலகத்திற்குள் குறைந்த செலவினுள் உலாவ வைக்க ஆரம்பித்த ராணி காமிக்ஸிக்கு எனது நன்றிகள்.

இதோ பெங்காலியாவின் கானகத்தின் வெளியே நாம் நின்று கொண்டு இருக்கின்றோம். உள்ளே எங்கேயோ ஒரு மண்டை ஓட்டுக் குகையுள் சுற்றியும் விஷ அம்புடன் குள்ளர்கள் காவல் காக்க நம்மளை எதிர்ப் பார்த்து மாயாவி காத்துக் கொண்டு இருகின்றார்.

பயணிப்போம்.....

ஒரு வேண்டுகோள் :

அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பை உடைய இன்றைய பெற்றோர்களுக்கும் உழைக்கும் தலைமுறைக்கும்... உங்களின் பிள்ளைகளுக்கு ஒரு நல்லத் தோழனை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நல்ல புத்தகத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அவன் எங்கே இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி அந்த புத்தகங்கள் அவனுக்கு ஒரு உற்ற நண்பனாக இருக்கும். நல்ல புத்தகங்கள் எந்த மொழியில் இருந்தாலும் தவறில்லை ... ஆனால் அவனது தாய் மொழியில் இருந்தால் இன்னும் சிறப்பாக அவன் மனதில் பதியும்.

ஞாயிறு, 16 மே, 2010

கற்பனை உலகில் ... நான்! -1

காமிக்ஸ்... இது கற்பனைகளின் சாம்ராஜ்யம்.
சித்திரங்களையும் கற்பனைகளையும் ஒருங்கிணைத்து கட்டப்பட்ட ஒரு மாய உலகம். நல்லவர்களுக்கு முடிவில் நல்லதே நடக்கும் ஒரு அதிசய உலகம். எனவே இதன் பால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இதோ நான் காமிக்ஸ் படிக்க தொடங்கி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்றும் நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்கும் போது வந்த அதே வியப்பும் பரவசமும், புதிதாய் ஒரு காமிக்ஸ் வாங்கி படிக்கும் போதும் தொடர்கின்றது. நான் மாறவில்லையா இல்லை அந்த காமிக்ஸ்கள் மாறவில்லையா...தெரியவில்லை! ஆனால் மாறாமல் இருப்பது நன்று தான் என்று தோணுகின்றது. இதோ இது வரை நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது என் வாழ்வில் ஒரு பாதியாய் அந்த புத்தகங்கள் வீற்று இருப்பதை காண்கின்றேன். அந்த புத்தகங்கள் இல்லை என்றால் என் வாழ்வில் ஒரு பாதி இல்லை என்ணுமாறு அவை இன்றியமையாது இருக்கின்றன. இந்த பதிவு அந்த புத்தகங்களை பற்றியே...

பொதுவாக காமிக்ஸ் என்றாலே அது சிறுவர்களுக்கு தான் என்ற ஒரு தவறான கருத்து நம் நாட்டில் இருந்து கொண்டு வருகின்றது. இது வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமாகும்.  இந்த புத்தகங்கள் சிறுவர்களுக்கு உரியவை தான்... அதில் சந்தேகமில்லை. ஆனால் வெறும் சிறுவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல அவை.... பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கும் அவை உரியவை. உண்மையை சொல்லுங்கள்! உங்களுக்குள் ஒரு சிறுவன் இல்லையா?... மழை பெய்யும் தருணங்களில் நனையும் பொழுதோ, நண்பர்களுடன் மனம் விட்டு சிரிக்கும் பொழுதோ இல்லை பழைய நினைவுகளை நினைக்கும் பொழுதோ உங்களுள் உள்ள அந்த சிறுவனை நீங்கள் உணரவில்லை என்று சொல்லுங்கள்.... என்ன உணர்ந்து இருக்கின்றீர்கள் தானே... இந்த புத்தகங்கள் அவனுக்காக... அவன் சிறுவனாய் இருப்பதற்காக!!! 

படிக்கிறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கிறப்போ இது எதுக்கு நேரத்தை வீணடிக்க என்று நீங்கள் சொல்லாம். வாழ்வில் வெல்ல இவை தேவை இல்லை எனலாம். ஆம்! இவற்றை கொண்டு நாம் வாழ்வை வெல்லப் போவது இல்லை. ஆனால் வாழ்வை வாழ முடியும். மனம் நிறைய சோகம் நிறைந்து இருக்கும் போது நாளை நல்லதாய் விடியும் என்ற நம்பிக்கையும் ஒரு புன்னகையும் தான் வாழ்க்கை என்றால், அந்த புன்னகைகளை கொடுக்கும் வல்லமை இந்த புத்தகங்களுக்கு உண்டு.

நிச்சயமாய் இந்த புத்தகங்கள் இல்லாமல் வாழ்வை வாழ முடியும். ஆனால் இந்த புத்தகங்கள் இருந்தால் வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ முடியும். அவ்வளவே!!!

தமிழகத்தில் தென் பகுதியில் விருதுநகர் என்னும் ஊரில் இருந்த எனக்கு தென் அமெரிக்காவின் வனங்களையும், மாயன் இனத்தினரை பற்றியும்... வட அமெரிக்காவின் வரலாற்றையும் செவ்விந்தியர்களை பற்றியும்... அறிவியல், மதங்கள், உலக யுத்தங்கள், உலக கலாச்சாரம்  மற்றும் வரலாற்றை பற்றியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்த இந்த புத்தகங்களுக்கு நான் இறுதி வரை நன்றிக்கடன் பட்டவனாகவே இருப்பேன். இன்று இருக்கும் என்னை செதுக்கிய உளிகளுள் அவையும் முக்கியமானவை.

நான் கண்ட உலகை நீங்களும் காண வேண்டும் என்ற எனது ஆசையின் விளைவாகவே இந்த பதிவு...

கனவு காண்போம்... 

சனி, 13 பிப்ரவரி, 2010

காணவில்லை : மண்பானைகள்!!! -2

"ஏலேய்! இன்னும் பந்த எடுக்காம என்னல பண்ணிகிட்டு இருக்க?"
" டேய் இருடா ! நல்லா முள்ளுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்குடா. இங்க பாரு கைய வேற கிழிச்சி விட்டுறிச்சி"
"முள்ளுனா கிழிக்கதான் செய்யும். பார்த்து சீக்கிரம் எடுடா. விளையாட வேண்ணாமா"

இவ்வாறு, சுடுமணலும், முட்கள் குத்தி வரும் குருதியும் கூட எங்களின் ஆட்டத்தை நிறுத்தும் வலிமைப் பெற்றுத் திகழவில்லை. அல்லது அவையும் எங்களின் ஆட்டத்தை நிறுத்த விரும்பவில்லை. தொடர்ந்து கொண்டிருந்தது எங்களின் ஆட்டம். தாகம் வரும் வரை. அனைத்தையும் தந்த எங்கள் ஊர் தாகத்தை அடக்கும் வழியை தரவில்லை. இயற்கையால் முடியவில்லையா! சரி, அங்க ஒரு கடைய போடு என்று அங்கும் ஒரு அண்ணாச்சி கடையைப் போட்டு இருப்பார்.
தண்ணீர் விற்பனைக்கு வராத காலம் அது. வேண்டிய அளவிற்கு இலவசமாகவே கிடைக்கும். எங்கள் தாகம் தணிக்க தண்ணீர் போதும் தான், ஆனால் எங்களை நம்பி கடை வைத்திருக்கும் அந்த அண்ணாச்சியின் பாடு?...
"டேய்!! எம்புட்டு ரூபா வச்சிருக்கீங்க?"
"என்கிட்ட 2.00பா"
"நம்மகிட்ட வழக்கம் போல சுத்தம்"
"இங்க 5.00"
"சரி! என்கிட்ட 3.00 ரூபா இருக்கு! அண்ணாச்சி 5 ஜூஸ் பாக்கெட் எடுத்துக்கிறோம்."
பத்து பேர் விளையாட போனா, அஞ்சு பேர்க்கிட்ட காசு இருக்காது. 5 ஜூஸ் பாககெட்ட 10 பேர் சேர்ந்து காலிபண்ணுனத்துக்அப்புறமும் தாகம் தீர்ந்து இருக்காது.
"அண்ணாச்சி. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"
"எடுத்துக்கோங்கபா! இத போயி என்ன கேட்டுக்கிட்டு, அதோ அந்த பானைல இருக்குல." என்று கடையின் ஓரமாய் இருக்கும் பானையை காட்டியத்தோடு முடிந்துவிடும் அண்ணாச்சியின் வேலை. தாகம் தணியும் வரை தண்ணீய குடித்துவிட்டு மீண்டும் மைதானத்தை நோக்கி எங்கள் பயணம் தொடரும்.
சில சமயம் அண்ணாச்சி கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு  போயிருக்கும் நேரங்களில் தான் எங்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும். மிதிவண்டிய எடுத்துகொண்டு தண்ணீர் தேடி அலைய ஆரம்பிப்போம். வழிப்போக்கர்களை உபசரிக்க திண்ணைகளை உருவாக்கிய தமிழ் கலாசாரம் மண்ணின் மைந்தர்களையா தாகத்தோடு பரித்தவிக்க விடும்?... எங்கள் தாகம் தணிக்க பல வீட்டிற்கு வெளியே மண்பானைகள் காத்துக்கொண்டு இருந்தன, பாசமான ஆச்சிகளால்.
"கொளுத்துர வெயில்ல அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு. பேசாம வெயில் தனிஞ்சதுக்அப்புறமா விளையாடலாம்ல" என்று அக்கறையோடு விசாரிக்கும் ஆச்சிகளும், எங்களுக்காக குளிர்ந்த தண்ணீரை சுமக்கும் மண்பானைகளும் அர்த்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் எங்களின் விளையாட்டுக்கும்...வாழ்க்கைக்கும்!!!

"அது ஒரு காலம்!!! கையில் காசின்றி இருந்தாலும் உண்மையான தாகத்தோடு இருந்த காலம். இன்றோ கையில் காசு இருக்கின்றது... ஆனால் உண்மையான தாகத்தை தான் எங்கேயோ தொலைத்து விட்டோம். அன்று விளையாடிய சில இடங்கள் இன்று பாதி முட்காடுகளாய், மீதி வீடுகளாய். அண்ணாச்சி இன்றும் கடை வைத்து இருக்கிறார், இன்றும் இலவசமாக தண்ணீர் கொடுக்கிறார், ஆனாலும் தண்ணீர் என்றவுடன் முதலில் Aquafina வா என்ற கேள்வி புதிதாக வருகின்றது.அன்று வியர்வையை மட்டும் கண்ட எங்கள் மைதானங்கள் இன்று புதிதாய் எங்கள் கண்ணீரை காண்கின்றது. காலத்தை துரத்தியததில் எதையோ எங்கேயோ தொலைத்து விட்டோமோ என்ற உள் உணர்வை மட்டும் அலட்சிய படுத்த முடியவில்லை. முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். சந்தேகமில்லை. ஆனால் மனதையும் வாழ்க்கையையும் பின்னாடி விட்டுவிட்டு எதற்காக முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்று தான் தெரியவில்லை. அன்று நண்பர்களின் வருகைக்காக மைதானத்தில் காத்திருக்கும் போது என்னுடன் காத்திருந்த காலம், இன்று எங்கோ விரைந்து கொண்டு இருக்கிறது என்னையும் அழைத்து கொண்டு. இது வாழ்வின் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா? தெரியவில்லை. இருந்தும் அலைகிறேன்.
இதோ அன்று வீட்டிற்கு வெளியே இருந்த மண்பானைகளை இப்பொழுது காணவில்லை. அந்த ஆச்சிகளையும் தான்!!! "அந்த காலத்துல" என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகள் சற்று நினைவிற்கு வந்து போயின. அவற்றை அப்பொழுது கேலி செய்த நாங்கள் இன்று எங்களை அறியாமல் சொல்லுகின்றோம் "அந்த காலத்துல..."!!!
ஆம்! அந்த காலத்தில் நாங்கள் நாங்களாய் இருந்தோம். சற்று யாராவது தேடி தருகிறீர்களா! அந்த பானைகளையும் அதனுடன் தொலைந்த எங்களையும்!!!
                                     முற்றும்.     

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

காணவில்லை : மண்பானைகள்!!! -1

வெயில்! எங்கள் ஊருக்கு மிகவும் நெருங்கிய ஒன்று . 'விருதுநகரா? சரியான  பொட்டக்காடாச்சேப்பா' என்று தான்  பலரும் கூறுவர். உண்மையும் அதுதான். கருவேலங்காட்டையும் வெயிலையும் தவிர இயற்கை எங்கள் ஊருக்கு வேறு எதையும் அருளவில்லை. தவறில்லை! எங்கள் ஊருக்கு அவை போதும். அப்படி என்றால் மற்றவை? "அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோமே. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று மார்தட்டிக் கிளம்பிய பறவைக்கூட்டத்தில் நானும் ஒருவன்.
பள்ளி தினங்களில் காலை 8:00 மணி ஆகியும் கலையாத உறக்கம், விடுமுறை தினங்களில் 6:00 மணிக்கே கலைந்துவிடும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்த பருவம் அது. உணவு உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு என்பது எழுதாத விதியாக இருந்த காலம். "டேய்! சாப்பிட்டு போடா" என்ற அன்னையாரின் குரல்களும் "அப்புறம் வந்து சாப்பிடுறேன்மா இப்பவே நேரமாயிடுச்சி"  என்ற எங்களின் பதில்களும் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் கலந்திருந்த காலம். இன்றை மட்டும் இன்று காண்போம், நாளையை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வாழ்க்கையைப் புரியாமலையே புரிந்து கொண்டிருந்த பருவம்.
பரந்து விரிந்த செம்மண் தளங்களை மைதானங்களாய் எங்களுக்கு தந்த எங்கள் ஊர், வெயில் சற்று கோபமாக இருக்கும் சமயம் நிழலில் இளைப்பாற சில மரங்களையும், மைதானத்தின் எல்லைகளாய் முட்ச்செடிகளையும் சேர்த்தே தந்திருந்தது. "வெயிலோடு விளையாடி" என்றொரு பாடலை ஒரு பாடலாசிரியர் எங்கள் ஊரில் எடுத்த ஒரு படத்திற்காக எழுதி இருந்தார். உண்மைதான். வெயில் இன்றி எங்களின் அநேக விளையாட்டுகள் இல்லை.  வெயில் எங்களுக்கு இன்னொரு நண்பன். வெயில் இருக்கும் வரை நாங்கள் ஆடுவோம், நாங்கள் ஆடும் வரை அவனும் இருப்பான்,எங்களை பார்த்துக்கொண்டே!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...