'மூவொருக் கோட்பாடு' என்பது ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்பதைக் குறிக்கும் ஒரு சொற்தொடர் ஆகும். இன்றைக்கு இச்சொல் பயன்பாடு என்பது கிருத்துவ சமயத்துடன் மட்டுமே தொடர்புடையதாக அறியப்பட்டு இருக்கின்றது.

தந்தை - பரிசுத்த ஆவி - மகன் என்ற மூன்று நிலைகளில் இறைவன் இருக்கின்றார் என்றே கிருத்துவ சமயம் விளக்கமும் அளிக்கின்றது. இக்கூற்றினை இறைவன் ஒருவனே என்றுக் கூறும் இசுலாமியர்கள் மறுப்பர். அவர்களின் கூற்றின் படி இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பது கட்டுக் கதை. எல்லாம் வல்ல இறைவன் எதற்காக மூன்று நிலைகளில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். இந்நிலையில் தான் மூவொருமைக் கோட்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

பனிக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது உறைந்த நிலையில் இருக்கின்றது. கொஞ்சம் சூடேற்றுங்கள்.
நீராக மாறுகின்றது. அதனை நன்றாக கொதிக்க வையுங்கள்.
ஆவியாக மாறுகின்றது. அதனை குளிரடையச் செய்யுங்கள்.
மீண்டும் பனியாக மாறுகின்றது.


இங்கே நம்மிடம் மூன்று பொருட்கள் இருக்கின்றன. பனிக்கட்டி, தண்ணீர், நீராவி.

இவை மூன்றுமே மூன்று வெவ்வேறுப் பொருட்களா அல்லது ஒரே பொருளின் மூன்று தனிப்பட்ட தன்மைகளா. ஒரே பொருளின் மூன்று தன்மைகள் தானே. குளிர்ந்து இருக்கும் பொழுது பனிக்கட்டியாக இருப்பது சிறிது வெப்பத்தினால் தண்ணீராக மாறுகின்றது. அதுவே வெப்ப அளவுக் கூடினால் நீராவியாக மாறுகின்றது. மாற்றங்கள் காணினும் அது அடிப்படையில் ஒரே பொருள் தான். அதாவது ஒரே பொருள் தான் மூன்று காலநிலைகளில் மூன்று வேறுப் பொருள்களாக இருக்கின்றது.

இந்த அடிப்படையில் தான் நாம் இப்பொழுது ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது. இக்கூற்று இன்று கிருத்துவ சமயத்தில் தான் மிகுதியாக அறியப்பட்டு இருப்பதனால் அச்சமயத்தையே எடுத்துக் கொள்வோம்.

கிருத்துவ சமயத்தின் கூற்றின் படி ஒரு இறைவன் தந்தை-பரிசுத்த ஆவி-மகன் என்ற மூன்று நிலைகளில் இருக்கின்றார். அது ஏன் அவ்வாறு இருக்கின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது என்றே நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியக் கூற்றின் படி இறைவன் உலகைப் படைக்கின்றார். இது முதல் நிலை - தந்தை நிலை

பின்னர் மனிதன் தவறு செய்து பாவத்தில் விழுகின்றான். அவ்வாறு பாவத்தில் விழுந்த மனிதனை மீட்க இறைவனே மனிதனாக வந்து அவனுக்கு குருவாக இருந்து எவ்வாறு வாழ வேண்டும் என்றுக் காட்டிவிட்டு மீட்பினை வழங்கிய நிலை இரண்டாம் நிலை - மகன் நிலை.

எவ்வாறு வாழ வேண்டும் என்றும் காட்டியாயிற்று, மீட்பையும் வழங்கியாயிற்று அந்நிலையில் மனிதனை நல்வழியில் நடத்தி அந்த மீட்பினை அவன் பெற்றுக் கொண்டு மற்றவர்களையும் வழிநடத்தும் வண்ணம் ஒழுக்கமாக அவன் இருக்கும் வண்ணம் அவனை வழிநடத்துவது மூன்றாவது நிலையாகும் - இது தான் பரிசுத்த ஆவி நிலை.

இறைவன் உலகைப் படைத்த காலகட்டம் வேறு...மனிதனாக வந்து மீட்டுக் கொண்ட காலக் கட்டம் வேறு...மனிதனை மீட்பினைப் பெற்றுக் கொள்ள வழிநடத்தும் காலகட்டம் வேறு. ஒரே இறைவன் மூன்று காலகட்டங்களில் இவ்வாறு மூன்று வேறு செயல்களைச் செய்ததால் தான் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கருத்து இங்கே நிலைப் பெற்று இருக்கின்றது. ஒரு வேளை இறைவன் மனிதனாக உலகிற்கு வராமல் இருந்திருந்தாலோ, மனிதனை வழிநடத்த பரிசுத்த ஆவியாக இயங்காமல் இருந்தாலோ மூவொருமைக் கோட்பாடு என்பது தோன்றி இருக்காது.

எனவே ஒரே இறைவன் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று நிலைகளில் செயல்பட்டதால் மூஒருமைக் கோட்பாடு என்ற கருத்து தோன்றி இருக்கின்றது. அதாவது

தந்தை நிலை - உலகைப் படைத்த நிலை
மகன் நிலை - பாவத்தில் இருந்த மனிதனுக்கு மீட்பினை அளித்த நிலை
பரிசுத்த ஆவி நிலை - மீட்பினை பெரும் வண்ணம் மனிதனை வழிநடத்தும் நிலை


ஒரே இறைவன் மூன்று நிலைகளில் மூன்று வெவ்வேறு தருணங்களில் செயல் பட்டதால் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான், ஆனால் மூன்று நிலைகளில் இருந்தாலும் அவன் ஒருவனே என்ற கருத்து மூவொருமைக் கோட்பாடாக விளங்குகின்றது.

சரி இருக்கட்டும்...கிருத்துவ சமயம் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்றுக் கூறுகின்றது. இசுலாமோ இறைவன் ஒருவனே என்கின்றது. இதில் எது உண்மை? ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொரு சமயத்தினைச் சார்ந்தவர்களாலும் தர இயலும். அவ்வாறு இருக்க எதனை மெய் என்று அறிவது. உண்மையிலேயே இறைவன் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவனைப் பற்றிக் கூறும் சமயங்கள் ஒரே கருத்தினை அல்லவா கூற வேண்டும்.

மூவொருமைக் கோட்பாடு என்பது உண்மை என்றால் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களை மீட்டுக் கொண்டது, மனிதர்களை வழிநடத்துவது போன்ற விடயங்கள் மற்ற சமயங்களிலும் இருக்க வேண்டுமே. அதனை விடுத்து ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றைக் கூறினால், கூட்டிக் கழித்துப் பார்த்து இறைவன் இல்லை என்ற நிலைக்கு தானே வர இயலும். இந்நிலையில் தான் நாம் மற்ற சமயங்கள் கூறும் கருத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

சைவ வைணவ சமயங்களும் மகாயான பௌத்தமும் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இது ஆய்வாளர் தெய்வநாயகம் ஐயா அவர்களது ஆராய்ச்சியில் இருந்து நான் அறிந்தவனவற்றை நான் அறிந்த வண்ணமே மக்களுக்கு தர முயற்சிக்கும் ஓர் முயற்சியே ஆகும். சிந்திப்போம்..கேள்விகள் கேட்போம்..விழிப்படைவோம்.

ஆயிரம் முறை கண்ட திரைக்கதையொன்று
மீண்டும் வெற்றிநடைப் போட்டுக் கொண்டு தான் இருந்தது…!!!

முடிவினை அறிந்திருந்தும்
அறியாததைப் போல் நடிப்பதொன்றும் கடினமல்ல தான்…!!!

ஆச்சர்யக்குறிகளும் வரிஅமைப்புகளும்
கவிதைகளுக்கு போதுமானதாய் இருப்பதைப் போல்
போலிப் புன்னகைகளும் மௌனகண்ணீர்த்துளிகளும்
நடிப்பிற்கான முகமூடிக்கு போதுமானதாய் அமைந்து விடுகின்றன…!!!

மேலும்
முடிந்து விடும் என்று அறிந்ததொன்றை
கடந்து விடுவது என்பது எளிதானதொரு செயல் தான்…!!!

மரணிக்கும் ஓர் கனவாக இருக்கட்டும்
அறிந்த திரைக்கதையாக இருக்கட்டும்
இந்த கவிதையாக (???) இருக்கட்டும்
ஏன் வாழ்க்கையாகவும் இருக்கட்டும்….

முடிந்து விடும் என்றறிந்த ஒன்றை
கடந்து விடுவது என்பது
எளிதானதொரு செயல் தான்…!!!

ஆம்...!!!
அதனை சிரித்துக் கொண்டும்
முகமூடியினை மாட்டிக் கொண்டும் கடந்து விடலாம்…
நாட்களைக் கடத்துவது போலவே…!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு