அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூன், 2014

சமூகமும் தன்னார்வ சேவையும் - இறுதிப்பகுதி!!!

இது வரை நாம் கண்ட விடயங்களின் படி இன்றைக்கு சமூகத்தில், பிரச்சனைகளின் காரணிகளைத் தீர்ப்பதனை விட தற்காலிக தீர்வினை தருவதனையே உதவியாக பல மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மக்கள் அவ்வாறு நிரந்திரத் தீர்வினை நாடாது தற்காலிகமான தீர்வினை நாடுவதன் காரணம், அவர்கள் உதவுவதற்கு தயாராக இருந்த போதிலும்...அந்த உதவியினால் அவர்களுக்கோ அல்லது அவர்களது இயல்பான வாழ்க்கைக்கோ அல்லது குடும்பத்திற்கோ எவ்வித பிரச்சனைகளும் வரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்குள் பலமாக இருக்கின்றது.

உண்மையில், பிரச்சனைகள் ஏதுமின்றி நிரந்தரமானத் தீர்வுகள் கிட்டப்பெறும் என்றால் மேலே நாம் கண்ட மக்கள் நிச்சயம் மனமார அதனையே தீர்வாக விரும்புவர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. இவர்கள் நிரந்திரத் தீர்வினை நாடாது இருப்பதன் காரணம் இன்றைய உலகநடப்பில் நிரந்தரத் தீர்வுகள் என்பது மிகுந்த பிரச்சனைகளுடன் இருப்பதனால்தான்.

உதவ வேண்டும் என்று அவர்கள் அன்பின் உந்துதலால் முன்வந்தாலும்...பிரச்சனைகள் எழக் கூடும் என்ற பயத்தின் காரணத்தினால் அவர்களது உதவியினை பிரச்சனைகள் எழா வண்ணம் சுருக்கிக் கொள்கின்றனர்.

அன்பு என்னும் உணர்ச்சியினை பயம் என்ற உணர்ச்சி கட்டுப்படுத்தி விடுகின்றது. இது தான் பிரச்சனை.

ஒரு சராசரி மனிதனின் சிந்தனை இன்றைக்கு "நான் உதவி செய்யணும்னு தாங்க நெனைக்கிறேன்...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி பண்ண போயி பிரச்சனை அது இதுன்னு எல்லாம் உட்கார நமக்கு நேரம் இல்லைங்க...ஏற்கனவே வேலை, குடும்பம் அப்படின்னு நம்மள பாக்குறதுக்கே நேரம் இல்லை...இதுல பெரிய மாற்றம் போராட்டம் அப்படின்னு எல்லாம் போனா நம்ம பாடே திண்டாட்டம் ஆகிடும்...ஏதோ நம்மளால மனசுக்கு சரி அப்படின்னு தோணுற உதவியப் பண்ணோமா சரி அப்படின்னு இருக்குறது தாங்க சரி.." என்றவாறு தான் இருக்கின்றது.

அதாவது அவனது சிந்தனை அவனையும் அவனைச் சார்ந்தவர்களையுமே முன்னிலையில் வைத்து இருப்பதாக இருக்கின்றது. இது ஒரு சராசரி மனிதனின் இயல்பு தான்...இதனை நாம் குறை கூற முடியாது.

ஆனால் மனிதன் சராசரி அல்லவே...!!!

இவ்வுலகத்தை மாற்றும் வல்லமையையும் அழிக்கும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான்...அவனது செயல்களே இன்று சமூகங்களையும் பெரிய மாற்றங்களையும் உருவாக்கி இருக்கின்றன. உண்மையைக் கூற வேண்டும் என்றால் இந்த உலகமே அவனது கட்டுக்குள் இருக்கின்றது.

இந்நிலையில் அத்தகைய வல்லமையைப் பெற்ற ஒருவன் "நான் என்னை மட்டுமே கண்டு கொண்டு இருப்பேன்...மற்ற வேலைகளுக்கு நேரம் இல்லை" என்ற எண்ணத்துடன் இருப்பானாயின் அது அவனுக்குரிய கடமைகளை அவன் செய்யாது பயத்தாலும் சுயநலத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றான் என்றே புலனாகின்றது.  இது அவனுக்கும் சரி சமூகத்திற்கும் சரி தீங்கு விளைவிக்கும் ஒரு நிலை ஆகும்.

"உன்னுடைய உரிமை செய்யும் காரியம் மட்டுமே...காரியத்தின் முடிவும் பயனும் உன் உரிமையல்ல...பயனில் ஆசை செலுத்தி எதையும் செய்யாதே. இதைச் நான் சொன்னேன் என்று செய்ய வேண்டியன செய்யாமல் சும்மா இருந்து விடுவதில் மனம் செலுத்தாதே. பற்று வைத்துக் கொள்ளாமல், பகையை அகற்றிச் செய்வதைச் செய்...நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் இரண்டையும் ஒன்றாகக் கருதிச் செய்" - பகவத் கீதை

நம்மில் பலர் உதவிகள் செய்வதற்கு நேரம் இல்லை என்றே கூறுகின்றனர்...ஆனால் உண்மையில் இந்த உலகத்தில் நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றது. பிறந்து விட்டோம் என்பது நமக்குத் தெரியும்...இறந்து விடுவோம் என்பதும் நமக்குத் தெரியும்...இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே உள்ள காலம் தான் நம்மிடம் இந்த உலகில் இருக்கின்றது. அந்த காலம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றது...அல்லது அக்காலத்தின் வசம் நாம் இருக்கின்றோம் என்றும் கூறலாம்.

இந்நிலையில் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அக்காலத்தில் சில பல செயல்களைச் செய்வதற்கு மட்டுமே நமக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

காலம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது...உலகமும் இருக்கின்றது...அக்காலத்தில் அவ்வுலகத்தில் நாம் என்ன காரியங்களைச் செய்கின்றோம் என்பதில் தான் நாம் அடங்கி இருக்கின்றோம்...மாறாக அழியப் போகும் ஒன்று அதனை மட்டுமே கண்டு கொண்டு செல்வது என்பது அர்த்தமற்ற ஒரு செயலாகும்...மனிதன் அர்த்தமற்றவன் அல்ல. அவனின் வசம் இவ்வுலகம் கொடுக்கப்பட்டு உள்ளது...கூடவே அவ்வுலகை நல்ல உலகாக வைத்திருக்கும் கடமையும் தான்.
 
ஒரு அலுவலகத்தில் இத்தனை வருடங்கள்/ நாளுக்கு எட்டு மணி நேரம் என்ற கணக்கின் படி எவ்வாறு நம்மிடம் பொறுப்பினைத் தந்து வேலை/கடமை எதிர்பார்க்கப் படுகின்றதோ, அதனைப் போன்றே நம்முடைய வாழ்க்கையும்/நாளுக்கு 24 மணி நேரங்கள் என்ற கணக்கும் தரப்பட்டு நம்மிடம் கடமைகள் தரப்பட்டு உள்ளன...நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு உள்ளது.

எவ்வாறு அலுவலகத்தில் கடமையை விட நான் என்பது பெரிதான ஒன்று இல்லையோ, அதனைப் போன்று தான் வாழ்க்கையிலும் கடமையைத் தவிர நான் என்ற ஒன்று பெரிது கிடையாது.

இந்நிலையில் நாமிருக்கும் சமூகத்தை மேன்மைப்படுத்துவதும், அதனை அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக நல்லதொரு சமூகமாக அமைத்து, பயமின்றி மக்கள் அனைவரும் அன்புடன் வாழ வழி செய்து அதனை அடுத்த தலைமுறையினரிடம் தந்து செல்வதே நம்முடைய கடமையாகும்...அதற்கே நமக்கு நேரம் தரப்பட்டு உள்ளது...கொடுக்கப்பட்ட நேரத்தில் எப்படி பணி செய்து நம்முடைய கடமையை செய்வது என்று சிந்திப்பதற்கே நமக்கு அறிவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பயத்தின் காரணமாகவோ அல்லது சுயநலத்தின் காரணமாகவோ "நான்" என்ற எண்ணம் மேல் எழுந்து, நிரந்தரத் தீர்வினை அடைய முயலாது தற்காலிக தீர்வினை மட்டுமே நாடினால் அது நாம் நம்முடைய கடமையை தவறியதற்கே சமமானமான ஒன்றாகும்.

அதனை விடுத்து, பயத்தினை ஒழித்து, நாமும் சரி நம்முடைய சமூகமும் நிரந்தரமான தீர்வினைப் பெற்று நலமாக வாழ வழி செய்ய முயல்வதே நம்முடைய கடமையாகும்...அதுனை இலக்காகக் கொண்டே நம்முடைய உதவிகளும் சேவைகளும் இருக்க வேண்டும். இல்லையேல் எதிலும் அர்த்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

"சுயநலக் கருத்தும் சுயநலப் பற்றும் அறவே துறந்து கடமைகளைச் செய்துக் கொண்டு போவது அவசியம். அறிஞன் சமுதாய நன்மைக்காகப் பற்றை ஒழித்து எல்லாக் காரியங்களையும் செய்துக் கொண்டு போவான்..." - பகவத் கீதை. நிற்க

நம்முடைய உலகம் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம். எனவே அந்த நிலையினை மாற்றும் மாற்றத்திற்கும் நாமே தான் காரணமாக இருக்க வேண்டும்...வேறு வழியில்லை...அதற்காகத் தான் நமக்கு ஆற்றலும் சிந்திக்கும் திறனும் அதனுடன் காலமும் தரப்பட்டு உள்ளது. நமது ஆற்றல்களை வைத்து நாம் நமக்கு தரப்பட்டு உள்ள இக்கால அவகாசத்தில் சமூகத்தில் என்ன செய்யப் போகின்றோம் என்பதில் தான் நாம் அடங்கி இருக்கின்றோம்.

எளிதான காரியம் அல்ல தான்...!!! இதனை அனைவரும் அறிவர்...!!! காரணம் மனிதனின் மனம் நன்மையை விட தீமையையே எளிதாக நாடுகின்றது...அன்பினை விட பயத்தினையே பெரிதாக உருவகித்துக் கொள்கின்றது.

"நன்மை செய்ய வேண்டும் என்கின்ற விருப்பம் என்னிடத்தில் இருக்கின்றது...நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை...எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கின்றேன். அந்தப்படி நான் விரும்பாததைச் செய்வது நான் அல்ல...எனக்குள்ளே வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியினால் நான் நன்மை செய்ய விரும்புகிற வேளையில், என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு விதி செயல்படுவதைக் காண்கின்றேன். உள்ளான மனிதனுக்கேற்றபடி தேவனுடைய நியாயவிதிகளின் மேல் விருப்பமாயிருக்கிறேன். என்றாலும் என் மனதின் விதிகளுக்கு எதிராக போராடுகிற வேறொரு விதி எனது அவயங்களில் செயல்படுவதைக் காணுகின்றேன்; அது என் அவயங்களில் உண்டாயிருக்கிற பாவ விதிக்குள் என்னைச் சிறைப் படுத்திக் கொள்கின்றது. எவ்வளவு மோசமான மனிதன் நான்! இந்த மரண சரீரத்தில் இருந்து என்னை விடுவிப்பது யார்?" - பவுல் (ரோமர் 7: 18 - 24)

"நான்" என்ற ஒன்றைத் துறந்து செயலாற்றுவது என்பது கடினமான ஒன்று என்பதனை அனைவரும் அறிவர்...காரணம் நமக்குள்ளேயே அப்போராட்டம் மிகப் பெரிய போராட்டமாக ஓடிக் கொண்டே இருக்கின்றது. நம்மை எதிர்த்தே நாம் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அந்த போராட்டத்தின் காரணமாகத் தான்,

தனி ஒருவனை மட்டுமே கண்டு கொண்டிருந்த காட்டுமிராண்டி நிலையில் இருந்து குடும்பமாக இருந்த நிலைக்கும்,
தன்னையும் தன்னுடைய குடும்பத்தையுமே மட்டுமே கண்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்து குழுக்களாக மாறிய நிலைக்கும்,
இனக்குழுக்களாக இருந்த நிலையில் இருந்து தேசங்களாக மாறிய நிலைக்கும்,
மன்னராட்சி மாறி மக்களாட்சி வந்த நிலைக்கும் நாம் முன்னேறி இருக்கின்றோம்.
 
இத்தகைய மாற்றங்கள் எளிதாக வந்தவைகள் அல்ல...!!!

இனியும் பல தேசங்கள் என்ற நிலையில் இருந்து மாறி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற 'உலகம் முழுவதும் ஒரே தேசம் ஒரே மக்கள்' என்ற நிலைக்கும் நாம் முன்னேறத் தான் போகின்றோம்...அன்பினை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு அருமையான சமூகத்தினை நாம் உருவாக்கத் தான் போகின்றோம்.

அந்த மாற்றமும் எளிதாக மலரப் போவதில்லை...!!! இருந்தும் அதற்காகத் தான் நாம் உதவியும் சேவையும் செய்ய வேண்டி இருக்கின்றது.

நம்மிடையேஅன்பும் இருக்கின்றது திறமையும் இருக்கின்றது...அன்பின் அடிப்படையில் நமது திறமைகளை பயன்படுத்தி நாம் இருக்கும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது தான் நமது கடமை.

ஆடை இல்லாது கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவிக்கு ஆடை வாங்கி தருவது என்பது அன்பின் அடிப்படையில் ஒரு செயல். அதே போல் நண்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து பல மாணவர்களை படிக்க வைப்பதும் அன்பின் அடிப்படையில் ஒரு செயல்.

இச்செயல்களை குறைகளே கூறவில்லை...!!!

ஆனால் இச்செயல்களோடு கடமையை முடித்து விட்டோம் என்ற மனதிருப்தியினைக் கொண்டு நின்று விடாமல், சமூகத்தை நல்ல சமூகமாக உருவாக்கும் கடமையையும் மேற்கொள்ள முயலுங்கள் என்றே கூறுகின்றோம். நாமும் முயன்று, நம்மால் உதவி பெற்றவரையும் அவரது கடமையை உணரச் செய்து, மாற்றத்திற்காக முயல வைப்பதே கடமை என்கின்றோம்.

நேரம் இல்லை என்று கூறுவதனை விடுத்து, 'நேரம் மட்டுமே நம்மிடம் உள்ளது' என்பதனை உணர்ந்து நமக்கு தரப்பட்டுள்ள திறமைகள் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் துணைக் கொண்டு மகிழ்ச்சியுடன் எவ்வாறு நாம் வாழும் சமூகத்தை பயமற்ற நல்லதொரு அன்புச் சமூதாயமாக மாற்ற முடியும் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

நண்பர்கள் பலர் ஒன்று கூடி பிறருக்கு உதவுவது என்பது ஒரு உன்னதமான செயல்...அச்செயலையே நண்பர்கள் அனைவரின் சிந்திக்கும் திறனை பயன்படுத்தி மேலும் சமூகத்திற்கு மாற்றத்தை வர வைக்கும் ஒரு செயலாக மாற்ற முடியாதா?...அத்தகைய ஒரு மாற்றமே இங்கு தேவையாக இருக்கின்றது.

பிறருக்கு உதவ வேண்டும் என்று அன்பு உந்துகின்றது...ஆனால் பயம் அன்பினை கட்டுப்படுத்துகின்றது....இவ்விரண்டு உணர்சிகளின் விகிதங்களில் தான் இன்றைக்கு நம்முடைய உதவிகள் அடங்கி இருக்கின்றன.

பயத்தினை அன்பு வென்ற நிலையில் நிரந்திரத் தீர்வினைக் காணு முயலும் நபர்கள் இருக்கின்றனர்.
அன்பினை பயம் வென்ற நிலையில் இயன்ற உதவியினை மட்டும் செய்துக் கொண்டு இருக்கும் நபர்கள் இருக்கின்றனர்.

நம்முடைய சமூகத்தை மாற்ற நாம் முதலில் வெல்ல வேண்டியது இந்த பயத்தைத் தான்.

எண்ணிப்பாருங்கள், எந்த மாதிரியான சமூகத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகின்றோம்?

அநாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அதிகமாக விடுமுறை தினங்களில் சென்று அங்கே இருப்போருக்கு அன்பினைத் தரும் நபர்கள் அதிகம் இருக்கும் சமூகத்தையா?
 
அல்லது

அநாதை இல்லங்கள்/முதியோர் இல்லங்களே இல்லாது அன்பே குடும்பங்களில் நிலைத்து இருக்கும் சமூகத்தையா?

எதனை நாம் விட்டுச் செல்ல போகின்றோம்...?

ஆம்..கடினம் தான்..அநாதை இல்லங்களுக்கு சென்று உடனடியாக அன்பினை நாடுபவர்களுக்கு அன்பினை தருவது என்பதனை போல் அநாதை இல்லங்களே தேவைப்படாது அனைவரும் அவரவர் குடும்பங்களை அன்பின் வழியே நடத்துவதற்கு வழி வகுப்பது என்பது எளிதான ஒன்று அல்ல தான். நிச்சயம் கடினம் தான்.
 
காரணம் அது மேலோட்டமாக நமது கட்டுப்பாட்டில் இல்லை...பிறரது வாழ்க்கையும் அதில் அடங்கி இருக்கின்றது...இருந்தும் அது தான் நமது இலக்கு. நமது கடமை. (மீண்டும் ஒருமுறை மேலே குறிப்பிட்டுள்ள பகவத் கீதையின் வரிகளை வாசிப்பது நலமாக இருக்கும்)

அக்கடமையைச் செய்யத் தான் அன்பு மிக்கவர்களும் சிந்திக்கும் திறனைப் பெற்றவர்களும் ஒன்று சேர வேண்டி இருக்கின்றது...அவ்வாறு ஒன்று சேர்ந்து நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதே உண்மையான உதவியாகும்...அதுவே கடமையுமாகும்...!!!

"அவர் (இயேசு) திரளான மக்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தோய்ந்து போனவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீடர்களை நோக்கி : அறுப்பு மிகுதி, தொழிலாளிகளோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எசமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை நோக்கி மன்றாடுங்கள் என்றார்." - மத்தேயு ( 9 : 36 - 38)

உண்மையிலேயே செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கின்றது...ஆனால் வேலைகளை செய்யத் தான் ஆட்கள் இல்லாத நிலை நிலவுகின்றது.

அந்த வேலைகள் தான் நம்முடைய கடமைகள்...என்ன செய்ய போகின்றோம் நாம்?

வெறும் உதவிகளா? அல்லது கடமைகளா?

நம்புங்கள்...நாம் சராசரிகள் அல்ல...நமது கடமையும் சராசரியல்ல...!!! நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதில் அடங்கி இருக்கின்றது இவ்வுலகம்.

முற்றும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், 9 ஜூன், 2014

சமூகமும் தன்னார்வ சேவையும்-3!!!

சென்ற பதிவினில் உதவியினைப் பற்றியும் 'அனைத்து நேரங்களிலும் உதவ முடியாது' என்ற நிலையினைப் பற்றியும் கண்டோம். இப்பொழுது நாம் 'அனைத்து நேரங்களிலும் எங்களால் உதவி செய்ய இயலும்' என்ற நிலையைப் பற்றியும் அத்தகைய மக்களைப் பற்றியும் தான் சிறிது காண வேண்டி இருக்கின்றது.

உதவி செய்ய முடியும்:

இவர்கள் சற்று சிறப்பானவர்கள். நாம் முதல் பதிவில் கண்ட கதையில் வரும் அலுவலக நண்பர்களை இந்த வகையில் சேர்க்கலாம். சமூகத்திற்கு உதவி தேவைப்படுகின்றது, ஆனால் அதனை தனி மனிதனால் செய்ய இயலாத நிலையும் இருக்கின்றது அந்நிலையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தினை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஒன்று சேர்ந்து சமூகத்திற்கு உதவி செய்ய முன் வருகின்றனர். இவர்கள் சிறு குழுக்களாகவோ அல்லது ஒரு இயக்கமாகவோ உருப்பெற்று சமூகத்திற்கான உதவியினை செய்ய துவங்குகின்றனர்.

இன்றைய காலத்தில் நிச்சயம் இவர்களைப் போன்றவர்களை நாம் கடந்து வராது இருந்திருக்க முடியாது. ஏன் நாமும் அத்தகைய ஒரு நண்பர்கள் குழுவிலோ அல்லது இயக்கத்திலோ இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தான் இருக்கின்றன. இப்பொழுது அவர்களைப் பற்றித் தான் நாம் சற்று காண வேண்டி இருக்கின்றது.

இன்றைய காலத்தில் கல்விக் கட்டணங்கள் விண்ணளவு எகிறி விட்ட காரணத்தினால் நன்றாக படிக்கக் கூடிய திறமை இருந்தும் படிக்க இயலாத நிலையில் பல மாணவர்கள் இருக்கின்றனர். வங்கிகளின் உதவிகளும் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. நிச்சயம் கவலைப்பட வேண்டிய ஒரு சூழல் தான். "ஆனால் கவலைப்பட்டால் மட்டும் வழி கிடைத்து விடுமா? அந்த மாணாக்கர்கள் படித்து விடுவார்களா? மாட்டார்கள் தானே..அப்படி இருக்கையில் நாம் நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும்" என்ற எண்ணத்துடன் படிக்க வழியில்லாத மாணவர்களுக்கு உதவியினைப் புரிய பல குழுக்களும் இயக்கங்களும் இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம்.

இவர்கள் பொதுவாகச் செய்வது,

1) உதவியினை புரிய வேண்டும் என்ற சிந்தனையை உடைய நண்பர்களை ஒன்றிணைப்பது

2) அந்த நண்பர்களால் தர இயலும் ஒரு தொகையை மாதந்தோருமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்திலோ பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக நிதியினை வளர்த்துக் கொள்வது

3) பின்னர் வருடந்தோறும் அவர்களிடம் இருக்கும் நிதிக்கேற்ப தங்களால் இயன்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணங்களையோ அல்லது சீருடை போன்ற மற்ற அத்தியாவசியப் பொருட்களையோ தந்து அவர்களுக்கு உதவியினைப் புரிவது.

இதன் மூலம் சில மாணவர்கள் தங்களது கல்வியினைத் தொடர இவர்கள் உதவியினைத் தொடர்ந்து புரிகின்றனர். நிச்சயம் பாராட்டக்கூடிய ஒரு செயல் தான். அதில் சந்தேகமேயில்லை.

அதுவும் குறிப்பாக இத்தகைய உதவியினைப் புரிபவர்கள் தங்களது இச்செயல்களால் தங்களுக்கு ஏதும் கைம்மாறு அல்லது வேறு பலன்கள் கிட்டுமே என்ற வியாபார நோக்கினில் செய்வது கிடையாது.

"மாசம் பத்தாயிரம் சம்பளம் வாங்குறேங்க...ஒரு 200 ரூவா பசங்க படிக்கிறதுக்காக மாசம் மாசம் தரது ஒண்ணும் பெரிய வேலை கெடையாதுங்க...ஏதோ நம்மளால முடிஞ்சது...பசங்க படிச்சி நல்லா இருந்தா நல்லது தானே" என்பன போன்ற நல்ல எண்ணத்தினில் தான் அவர்களுள் பலர் உதவியினைப் புரிகின்றனர்.

சுய பயனைக் கருதாது உதவி என்ற நல்ல விதையை அவர்கள் விதைக்கின்றனர். அதன் பயனாக

"படிக்க இயலாத சூழலில் யாரோ ஒருத்தங்க நமக்கு படிக்க உதவி இருக்காங்க...அதனால நாமளும் படிச்சி நல்லா சம்பாதிச்சி...இதே மாதிரிமற்றவங்களுக்கு உதவனும்" என்ற எண்ணத்தினைக் கொண்ட மாணவர்களும் பலர் உருவாகின்றனர்.

அவர்களும் பிற்காலத்தில் இன்று இவர்கள் உதவியினைப் புரிந்ததைப் போலவே தங்களால் இயன்ற அளவு உதவியினை மற்ற மாணவர்களுக்குச் செய்யக் கூடும். நிச்சயம் அதுவும் ஒரு நல்ல செயல் தான். இதில் நாம் குறை காண்பதற்கு எதுவுமே இருக்கப்போவதில்லை தான்...மேலோட்டமாகப் பார்த்தால்.

இருந்தும் மேலோட்டமாகப் பார்ப்பது யாருக்கும் நல்ல முடிவையோ அல்லது தெளிவான சிந்தனையையோ தராது என்பதனால் நாம் மேலே கண்ட விடயங்களை சற்று வேறு வகையாகவும் காண வேண்டித் தான் இருக்கின்றது.

மேலே நாம் கண்ட விடயத்தில் ஒரு மாணவனுக்கு சிலர் சுயநலம் கருதாது உதவுகின்றனர்.

ஏன் அவர்கள் உதவுகின்றனர்?
அவனால் கல்வியினைக் கற்க முடியவில்லை அதனால் உதவுகின்றனர்.

ஏன் அவனால் கல்வியினைக் கற்க முடியவில்லை?
ஏனென்றால் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன.

ஏன் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன?
...........!!!!

இந்த கேள்விக்கு சரியான விடையினை தர இயலாத காரணத்தினால் பெரும்பாலும் இக்கேள்விக்கு மௌனமோ அல்லது "எல்லா பொருளோட விலையும் ஏறுது...உன்னோட சம்பளமும் வருஷம் வருஷம் ஏறுது...அப்புறம் ஏன் கல்வி கட்டணம் மட்டும் கூடுச்சினா கேள்வி கேட்குறீங்க...அதெல்லாம் அப்படித்தான் இருக்கும்" என்பன போன்ற ஒவ்வாத பதில்கள் தான் கிட்டப்பெருகின்றன பெரும்பாலும்.

ஆனால் இது தான் முக்கியமான கேள்வி.

நான் தனியார் கல்லூரியில் பொறியியல் படிக்கும் பொழுது,

கல்விக் கட்டணம் :36,000 ரூபாய்
ஆசிரியரின் சம்பளம்: 6,௦௦௦ ரூபாய்/மாதம்

எனக்கு ஒரு வருடம் முந்தைய மாணவர்களது கல்விக்கட்டணமோ

கல்விக் கட்டணம் : 18,000 ரூபாய்
ஆசிரியரின் சம்பளம் : 6,௦௦௦ ரூபாய்/மாதம்

அதாவது வேறு எந்த மாற்றமும் நிகழப்பெறவில்லை இருந்தும் கல்விக்கட்டணம் இரண்டு மடங்காக ஆகி உள்ளது. இன்றைக்கு கல்விக்கட்டணங்கள் எழுபத்தி ஐந்தாயிரங்களில் உலா வந்துக் கொண்டு இருக்கும் என்றே எண்ணுகின்றேன். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் மேலே கண்ட கேள்விக்குத் தான் செல்ல வேண்டி இருக்கின்றது.

ஏன் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன?

வருந்தத்தக்க விடயமாக இந்த கேள்விக்கு விடையினை பெரும்பாலானோர்அறிய முற்படுவதே இல்லை. ஏன்...அக்கேள்வியினைப் பற்றி சிந்திக்கக் கூட அவர்களால் முடிவதில்லை..."சிந்திச்சி என்ன ஆக போகுதுங்க...நம்மளால அதை எல்லாம் மாத்த முடியுமா...ஏதோ நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணிட்டு போறோம்...எத பண்ண முடியுமோ அத பண்ணுவோங்க...முடியாதத நெனச்சி ஏன் தேவ இல்லாம நேரத்தை வீணடிக்கனும்..." என்றே அவர்கள் அக்கேள்வியினைப் பற்றிய சிந்தனையை தவிர்த்து விடுகின்றனர்.

காரணம் எளிது தான்...

பிறருக்கு இயன்ற அளவு உதவியினைப் புரிவது என்பது வில்லங்கமில்லாத ஒரு செயல்...யாரையும் நாம் கேள்வி கேட்க வேண்டியதில்லை...நம்மையும் அச்செயல் பெரிதாக பாதிக்கப் போவதில்லை.

ஆனால் ஏன் அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்?...கடமையை அரசாங்கம் ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை? என்ற கேள்விகளை எழுப்புவது...சொல்ல வேண்டியதில்லை...பலரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு வில்லங்கமான விடயம் தான். பிறரையும் நாம் இங்கே கேள்வி கேட்க வேண்டி இருக்கின்றது...சில நேரம் நம்மையும் அச்செயல் பாதிக்கலாம்.

உண்மையில் பிரச்சனை இல்லாத வாழ்வினைத் தான் மனிதன் இயல்பாக விரும்புகின்றான்...அந்நிலையில் பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று அறிந்தே அவன் செயல்களைச் செய்ய முயல்வானா...? நிச்சயம் மாட்டான்.

அதன் விளைவாகத் தான்,

ஏன் இந்த நிலை இருக்கின்றது என்று பிரச்சனைக்குரிய காரணியை கண்டுப்பிடித்து அதனைக் களைய முயலாமல்/ சிந்திக்காமல், தன்னைப் பாதிக்காது இருக்கும் தன்னால் இயன்ற உதவியினை செய்ய மட்டுமே முயலுகின்றான்.

இதன் விளைவாக சமூகத்தில்,

1. சுய நலம் கருதாது இவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி - "நமக்கு பிறர் உதவியினைப் புரிந்து இருக்கின்றனர்...எனவே நானும் வளர்ந்து பிறருக்கு உதவி செய்வேன்" என்ற எண்ணத்தோடு வளர்கின்ற தலைமுறையை உருவாக்குகிறது. இது ஒரு அருமையான செயல்.

ஆனால்,

2) அடுத்த தலைமுறையும் பிரச்சனைக்குரிய காரணியை ஆராயாமல் தங்களால் தங்களை பாதிக்காது பிறருக்கு உதவும் உதவிகளை மட்டும் செய்து விட்டு செல்லும் நிலையும்

3) அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாமலேயே சமூகத்தினில் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையும்

பக்க விளைவுகளாக சமூகத்தில் நிலைபெற்று விடுகின்றன.

காரணம் நம்முடைய உதவிகள் வெறும் உதவிகளாகவே அவனைச் சென்றடைகின்றன...மாறாக எதற்காக அவன் உதவி பெறும் சூழலில் இருக்கின்றான் என்றோ...அத்தகையதொரு சூழல் சரியானதொன்றா என்றோ அவனைச் சிந்திக்க வைக்கும் உதவிகளாக அவனைச் சென்றடையவில்லை.

அதாவது அவனுக்கு அவனுடைய பிரச்சனை தெரிய வருகின்றது...
படிப்பதற்கு பணம் இல்லை...!!!

அதனை சரி செய்யும் வழிமுறைகள் அவனுக்கு தெரிய வருகின்றது...
நம்முடைய உதவிகள்..வங்கிக் கடன்கள்...!!!

ஆனால் இறுதி வரை அந்த பிரச்சனைக்குரிய காரணியைப் பற்றியோ அல்லது அது சரியான ஒரு காரணி தானா என்பதனைப் பற்றிய ஒரு சிந்தனையோ...அப்பிரச்சனையைத் தீர்க்க அவன் ஏதாவது செய்ய வேண்டுமா என்ற சிந்தனையோ அவனுள் எழாமலே போய் விடுகின்றது.

சுற்றி இருக்கும் சமூகத்தைப் பார்த்து "இப்படித் தான் இருக்கும் போல இருக்கு...நம்மளும் சம்பாதிச்சி...ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு உதவுவோம்..." என்றவாறே அடுத்த தலைமுறையும் அவர்களைச் சுற்றி இருக்கும் சமூகம் சென்றுக் கொண்டிருக்கும் தவறான வழியினை அறியாமலேயே பயணிக்க ஆரம்பிக்கின்றனர்.

காரணம் வழிகாட்டிகளாக வழித்துணைகளாக இருக்க வேண்டிய கல்விக் கற்று சிந்திக்கும் திறனை உடையவர்களின் உதவிகள், அவ்வாறு இருப்பதற்கு மாறாக வெறும் ஆறுதல்களாகவும் உதவிகளாகவுமே நின்று விடுகின்றன.

இதனால்,

"நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற தத்துவத்திற்கு மாறாக நோயின் காரணத்தையே ஆராயாமல் "ஏதோ நம்மளால் ஆனதைச் செய்வோம்...நோயினை வேறு எவராவது தீர்க்க வழி காணுவர்" என்ற எண்ணத்துடன் செயல்படும் நபர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமாகத் துவங்குகின்றது.

இவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருந்தாலும், சமூகம் நல்லதொரு சமூகமாக இல்லாது மேன்மேலும் சீரழிந்துக் கொண்டு இருக்கும் ஒரு சமூகமாகவே இந்நிலையில் மாறத் துவங்குகின்றது.

அங்கே பிரச்சனைகளும் கூடிக் கொண்டே இருக்கும்...உதவிகளின் தேவைகளும் கூடிக் கொண்டே இருக்கும்...!!!

இந்த நிலையில் தான் மேலும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சனி, 7 ஜூன், 2014

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!

"தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்" - தந்தை பெரியார்(1938)

தமிழ் மொழியும், தமிழ் இனமும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களுக்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களுக்கும் 2016 தேர்தலை நோக்கிய ஒரு பொது அறிவிப்பு

"தமிழர்" என்னும் தமிழ் பெயரே "திராவிடர்" என்று சமசுகிருதத்தில் குறிக்கப்படுகின்றது என்பது எவராலும் மறுக்க இயலாத வரலாற்று உண்மை.

திராவிடர் கழகத்தின் நோக்கம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், 1944 இல் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் அடங்கியிருந்த சென்னை மாகாணத்தில் ஆரியப் பிராமணர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை எதிர்த்து, ஆரியரல்லாத மக்களை ஒன்றிணைக்க திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தமை காலத்தின் கட்டாயமாக இருந்தது.

திராவிட அரசியல் கட்சியின் துரோகம்

பெரியாரின் திராவிடர் கழகத்தின் பிராமண எதிர்ப்புக்கு எதிராக, பிராமணர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு பிராமணர்களின் ஆதரவுடன், திராவிடர் என்னும் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சி 1949 இல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஐந்து வகை நாத்திகப் பிரிவுகளில், "நானே கடவுள்" எனக் கூறும் பிராமணர்கள் நயவஞ்சக நாத்திகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுடன் இணைந்த திராவிட அரசியல் கட்சி, பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டு, பெரியாரை நாத்திகராகக் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியது.

இதன் பயன் பெரியார் என்றால் நாத்திகர் என்று மட்டுமே பொது மக்கள் நம்புகின்றனர். இது பெரியாருக்கு எதிரான துரோகச் செயல் ஆகும்.

எந்த பிராமணர்களுக்கு எதிராகப் பெரியார் இயக்கத்தை உருவாக்கினாரோ அந்த பிராமணர்களே, பெரியார் இயக்கத்தின் பெயரால் தமிழ் நாட்டை ஆளும் கொடிய நிலை திராவிட அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது கொடிய துரோக நிலையாகும்.

ஆதிக்க வெறி

இந்தியா 1947 இல் விடுதலையடைந்து, 1956 க்குப் பின்னர் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கு தனித்தனி நாடுகள் தோன்றின. தெலுங்கர் தெலுங்கு நாட்டையும், மலையாளி மலையாள நாட்டையும், கன்னடர் கன்னட நாட்டையும் ஆண்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை மட்டும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் மாறி மாறி ஆள வேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மையுடன், தமிழ்நாட்டில் "தமிழர்" என்னும் தமிழ் பெயருக்குப் பதில், "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி ஆண்டு வருவது ஆதிக்க வெறியைக் காட்டுவதாகும்.

தமிழரல்லாதார் ஏன் இணைவதில்லை?

தமிழரல்லாத, தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும், சமசுகிருத மொழியின் செல்வாக்கில் இருக்கின்ற காரணத்தால், "திராவிடர்" என்று குறிப்பிடும் பொழுது "தமிழர்" என்றே நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றார்கள். இதனால் அவர்கள் தமிழ் நாட்டுத் திராவிட கட்சிகளுடன் இணைவது இல்லை.

இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி தெலுங்கு நாட்டிலோ, மலையாள நாட்டிலோ, கன்னட நாட்டிலோ, திராவிட இயக்கக் கிளைகளோ, திராவிட அரசியல் கட்சிகளின் கிளைகளோ இல்லை. தப்பித்தவறி அவ்விடங்களில் இருந்தாலும் தமிழர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளிலும் இதுவே நிலை.

நயவஞ்சகம்

இதனால், தமிழர்களைத் தமிழ்நாட்டில் அடிமைப்படுத்துவதற்காக மட்டுமே தெலுங்கர், மலையாளி, கன்னடர்களால் நயவஞ்சகமாகப் பயன்படுத்தப்படும் "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் விடுதலை அடைய வேண்டும். தாங்களே தமிழ் இனத் தலைவர் என்று ஏமாற்றி தமிழ் மொழியை அழிப்பதைக் கைவிட வேண்டும்.

நம்பிக்கைத் துரோகம்

ஆரியப் பிராமணர்களின் இயக்கமான RSS இன் இந்துத்துவா இயக்கங்களுடனும், அதன் அரசியல் கட்சியுடனும் கூட்டு வைத்து, தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் கூட்டுச் சதியும் நம்பிக்கைத் துரோகமும், இவர்களால் செய்யப்பட்டு வந்ததையும், செயல்படுவதையும் இவர்களால் மறுக்க முடியாது. ஏனெனில் இவர்கள் தங்கள் தாய் மொழிப் பற்றினால் தமிழ் மொழியை அழிக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்களின் இகழ்ச்சி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டு, தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் திராவிடக் கட்சிகளின் சதிச் செயலால் தமிழ் தேசியச் சிந்தனையாளர்கள் தந்தைப் பெரியாரை இகழும் நிலையை உருவாக்கி இருப்பதை மறுக்க இயலாது.

வெட்கப்படத்தக்க சாதிப் பெருமையும், நிலவுடைமையும்

தமிழ் இனத்தை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தமையால், அந்நியர்களிடம் பெற்ற சாதிப்பட்டமாகிய சற்சூத்திரர் (சிறந்த அடிமை), சூத்திரர் (அடிமை) என்னும் இரு பிரிவினரின் ஆரிய அடிமைத்தனத்தையே தந்தை பெரியார் வன்மையாகக் கண்டித்து, சாதி ஒழிப்பில் ஈடுபட்டார் என்பது வரலாறு. இந்த நோக்கில் இலங்கையில் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த கருணாவும், டக்லஸ் தேவானந்தாவும் இன்று அமைச்சர் பதவியில் இருப்பதும், அந்நியர்களை எதிர்த்தவர்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டும் வேட்டையாடப்படுவதும் எண்ணிப் பார்கத்தக்கவை.

இந்த நோக்கில் தமிழ் ஞானப் பரம்பரையில் பிறந்து தமிழர் சமயக் கோவில்களில் பூசாரிகளாயிருந்து அந்நியர்களை எதிர்த்தமையால் கொலை செய்யப்பட்ட நந்தனார் பரம்பரையும், திருப்பாணாழ்வார் பரம்பரையும் கோவில்களில் இருந்து விரட்டப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு தீண்டத்தகாத கீழ் சாதி என இழிவு படுத்தப்படுவதும், அந்நியர்களுக்கு தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த சற்சூத்திரர்களே தமிழர்களில் மேல் சாதி என சைவ மடாதிபதிகளாக இருப்பதும், இவர்கள் அனைவரும் நில உடைமையாளர்களாக இருப்பதும், ஏன் என்பது நமக்கு விளங்கும். இந்த நோக்கில் தம் சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்து மனித நேயத்திற்கு எதிராக அந்நியர்களிடம் பெற்ற சாதிப் பெருமையும், நிலவுடைமையும் மிகவும் வெட்கப்படத்தக்கது ஆகும். நியாயமான சிந்தனையுடைய அனைவரும் வெட்கப்படுவார்கள், திருந்துவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

புதைகுழியில் சாதி ஒழிப்புக் கொள்கை

இன்று சற்சூத்திரரிலும், சூத்திரரிலும் ஒரு பகுதியினர் திராவிடர் என்னும் பெயரிலுள்ள இயக்கங்கள் மற்றும் கட்சிகளிலும், மறுபகுதியினர் தமிழ் தேசியச் சிந்தனையாளர் என்னும் பெயரிலும் நுழைந்துக் கொண்டு, தந்தைப் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இவர்களைப் பின் இருந்து ஆரியப் பிராமணர்கள் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. இதனால் தந்தை பெரியாரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் இயக்கங்கள், கட்சிகளின் வழியாகவும், தமிழ் தேசியச் சிந்தனையாளர் வழியாகவும் தந்தை பெரியாருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பிராமணர்களின் சூழ்ச்சியால் புதை குழியில் இருக்கின்றது. கடவுள் பெயரால் சாதிப் பெருமையை நம்புகின்றவர்களை எதிர்த்த பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே காட்டப்படுகின்றார். அவருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கிறது.

வெட்கப்பட வேண்டிய சாதிப் பெருமையிலிருந்து விடுதலையடைந்த தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களும், திராவிட இயக்கம் மற்றும் கட்சியினரும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

சாதி ஒழிப்பும், பொருளாதார சமத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். மன்னர் ஆட்சிக்கால வன்முறை இல்லாமல், மக்கள் ஆட்சிக்கால மனம் திருந்துதலால் வரும் ஆன்மீகப் பொது உடைமை இதற்கு ஏற்ற தீர்வு ஆகும். இதற்கு இப்பொழுது இருக்கும் ஐ.நா சபை பயன்படாது. இதில் பொதுமக்களுக்கு இடமில்லை, நாடுகளுக்கு மட்டுமே இடம் உண்டு. இதனால், உலக மக்களாட்சியும், உலக மக்கள் நீதிமன்றமும் அமைக்கப்பட வேண்டும். இது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் தமிழர் சிந்தனையால் உருவாக்கக்கூடியது ஆகும். இதற்கு அடிப்படையாக வேண்டுவது கடவுள் அனுபவம்.

இந்துத்துவாவும் இந்து மதமும்

தந்தை பெரியார் காலத்தில் நயவஞ்சக நாத்திகப் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கும், தமிழ் ஞானிகளால் வளர்க்கப்பட்ட இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படவில்லை. அப்படியிருந்தும், பெரியாருடன் நெருக்கமாக இருந்த குன்றக்குடி அடிகளார், பெரியாரின் நெற்றியில் திருநீற்றைப் பூசிய பொழுது, அதைப் பெரியார் அழிக்கவில்லை என்னும் வரலாற்றில் ஆழமான கருத்து பொதிந்து கிடக்கிறது. பெரியார் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கு எதிரானவரே தவிர, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனக் கூறும் தமிழ் ஞானிகளின் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்லர் என்பதுவே அது ஆகும்.

மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கும் இந்து மத வரலாறு

கடவுள் இப்பேரண்டத்தை ஆளுகின்றார் என்பதை தமிழ் ஞானிகள் மட்டுமே உலகின் மற்ற எந்த மொழியிலும் இல்லாமல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியலின் வழி நிலை நாட்டி இருக்கின்றார்கள். ஆன்மவியலில், அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மற்ற மூன்றும் அடங்கி இருக்கின்றன. இதற்குரிய ஒப்பற்ற தமிழ் நூல் சிவஞான போதம் ஆகும். இதிலே ஆன்மீகப் பொதுஉடைமை அடங்கி இருக்கின்றது(சூத்திரம் 12).

தமிழ் ஞானிகளில் சிறந்தவராக திருவள்ளுவர் விளங்குகின்றார். அவர் வாழ்ந்த மயிலாப்பூரில் வேதாந்தக் கொள்கையின் விளக்கமாக முதன் முதலில் அமைந்த ஆதிக் கபாலீசுவரர் கோவிலே இந்து மதத்தின் முதல் கோவில்.

1. இந்தவரலாற்று உண்மை மறைக்கப்பட்டுமறைந்து கிடக்கின்ற காரணத்தால், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இந்துத்துவாவிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய 7 நீதிபதிகளை அரசியல் சட்ட பெஞ்சிக்கு நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

2. ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கை தமிழர்களின் இந்து மதத்தை அடிமைப்படுத்தி உள்ளது. இதனால் உண்மை இந்திய மக்கள் ஆரியர்களின் சாதி ஏற்றத் தாழ்விற்கு அடிமைப்பட்டு பயங்கரத் துன்பங்களில் இன்றளவும் இருக்கின்றனர். இந்திய மக்களின் இந்தத் துன்பங்களை நீக்கப் போவதாக உலகளாவிய கிருத்துவ, இசுலாமியத் தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்தியாவின் உள்விவகாரத்தில் அந்நிய நாட்டிலிருக்கும் மதத் தலைவர்கள் தலையிட உரிமை இல்லை. இந்த உரிமை தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்களுக்கும் சாதிப் பெருமையிலிருந்து விடுதலை அடைந்த தமிழ் தேசியச் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இதற்குப் புதை குழியிலிருந்து தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை தூக்கி எடுக்கப்படல் வேண்டும். இந்தியா முழுவதும் சாதி ஒழிப்பு செயல்படுத்தப் பட வேண்டும்.

தந்தை பெரியாரின்உண்மைத் தொண்டர்களுக்கு

இந்தியாவின் உச்ச நீதி மன்றமும், உலகளாவிய கிருத்துவ, இசுலாமிய அமைப்புகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை நோக்குவனவாக இருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் மறைந்து கிடக்கும் இந்து மதத்தை அறிய முற்படுகின்றது. உலகளாவிய கிருத்துவ இசுலாமிய அமைப்புகள் இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வை நிலை நாட்டும் மனுநூல் கொள்கையான இந்துத்துவாவினால் துன்புறுத்தப்படும் இந்திய மக்களைப் பற்றிக் கவலை கொள்ளுகிறது. இது நியாயமான தன்னலமற்ற கவலையா? என்பது போகப் போக தெரியும்.

இந்துத்துவா சமசுகிருதத்தினில் இருக்கின்றது. இந்து மதம் தமிழ் மொழியில் இருக்கின்றது. இந்துத்துவாவின் பிடியில் இருந்து இந்து மதத்தை விடுவிக்க தமிழ் மொழியாலும், தமிழ் இனத்தாலும் மட்டுமே முடியும்.

தமிழ் மொழியும், தமிழ் மொழியும் அழிக்கப்பட்டு முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது. காரணம் அந்நியர்களின் நயவஞ்சகத்தாலும் நம்பிக்கைத் துரோகத்தாலும் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டினை ஆள முடியவில்லை. 2016 இல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தந்தை பெரியாரின் 1938 கூற்றுப்படி "தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்". அதற்குத் தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் சாதிக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்பும் இந்து மத விடுதலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதனால் இந்து மத விடுதலைக்கு பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை புதைக் குழியில் இருந்து தூக்கி எடுக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். பெரியாரின் உண்மைத் தொண்டர்களும் விடுதலை அடைந்த தமிழ் சிந்தனையாளர்களும் இந்து மத விடுதலையில் ஒன்றிணைந்து சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வர வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. போலிகள் அகற்றப்பட வேண்டும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் பக்குவப்படுத்தும் ஆர்வமுள்ள தன்மானத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அந்நியர்களின் அழிவில் இருந்து காக்க நியாயமான எந்தத் தியாகத்திற்கும் ஆயுத்தமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தியாகச் சிந்தனையுடைவர்களை வரவேற்கின்றோம் - மு.தெய்வநாயகம்

தொடர்பு:

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்
நிறுவனர் : இந்துமத விடுதலை முன்னணி
ஒருங்கிணைப்பாளர்: அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு
எண் 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம் சென்னை - 600 023
044-26743842

புதன், 28 மே, 2014

சமூகமும் தன்னார்வ சேவையும்-2!!!

இன்றைய காலத்தில் பிறருக்கு நாம் உதவ வேண்டுமே என்று  நல்லெண்ணத்தில் செய்கின்ற உதவி, உண்மையிலேயே அவர்களுக்கு உதவியாக இருப்பதை விட அவர்களுக்கு மறைமுகமாக கெடுதலையே செய்கின்றது என்றே சென்ற பதிவில் கண்டு இருந்தோம்.

சற்றுப் புதிராக இருக்கும் இந்த விடயத்தினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதனை எளிதாகக் காண ஒரு சிறு எடுத்துக்காட்டினை எடுத்துக் கொள்வோம்,

அரசாங்கப் பள்ளியில் ஒரு ஏழை மாணவி படித்துக் கொண்டு வருகின்றாள். அவளது குடும்ப வருமானமோ மிகவும் குறைவு, இருந்தும் கல்வியின் மீது இருக்கும் ஆவலால் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகின்றாள். ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு வழங்கும் இலவச சீருடைத் திட்டம் அவளுக்கு உதவுகின்றது. இந்நிலையில் தரமற்ற சீருடைகளை அரசாங்கம் மாணவர்களுக்குத் தர வெகு விரைவிலேயே அந்த ஆடைகள் கிழியத் துவங்குகின்றன. வேறு ஆடை வாங்கிக் கொள்ள குடும்ப சூழல் உதவாத நிலையிலும் கிழிந்த ஆடையை அணிந்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல இயலாத நிலையிலும் அந்தப் பெண் தனது படிப்பினை நிறுத்த நேருகிறது. இந்த நிலையில் நல்ல மனம் படைத்த படித்த ஒருவர் அப்பெண்ணின் நிலையைக் கண்டு வருந்தி அந்த பெண்ணின் படிப்பிற்கு உதவும் வண்ணம் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்து உதவுகின்றார். அவருடைய உதவியைப் பெற்ற அந்த பெண்ணும் தொடர்ந்து படிக்க பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கின்றாள். நிற்க

இங்கே அந்த மனிதர் அந்த பெண்ணின் படிப்பிற்கு அவரால் இயன்ற உதவியினை செய்து இருக்கின்றார்.

இதில் நாம் குறையினைக் கூறுவதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லை. மனிதம் மிக்க எவரும் இச்செயலையே செய்து இருப்பர். நம்மிடத்து பொருள் அதிகமாக இருக்கின்றது...அதே நேரத்தில் இன்றியமையாத தேவையுடன் சிலர் அல்லல் படுகின்றனர் அந்நிலையில் தம்மிடம் இருக்கும் மிகுதியான பொருளினைக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவுவது என்பது மிகவும் சரியானதொரு செயலே. இதில் நாம் குறை கூறுவதற்கு ஒரு காரணியும் கிட்டப் போவதில்லை.

ஆனால் இங்கே தான் நாம் வேறு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது...

1) சீருடை கிழிந்து விட்டது எனவே புதிய சீருடை வாங்கித் தந்தாயிற்று...நல்லது, ஆனால் புதிய சீருடை மற்றுமொரு தருணத்தில் கிழிந்துப் போய் விட்டாலோ அல்லது அடுத்த வருடமும் இதே நிலை உருப்பெற்றாலோ மீண்டும் மீண்டும் நாம் புதிய சீருடையினை வாங்கித் தந்துக் கொண்டே இருக்க முடியுமா?

2) ஒரு பெண்ணுக்கு நடந்தது போல் பல்வேறு பேருக்கு நடந்தது என்றால் அனைவருக்கும் புதிய ஆடைகளை வாங்கித் தர முடியுமா?

மேலே உள்ள கேள்விகளுக்கு முடியும் அல்லது முடியாது என்ற இரண்டில் ஒன்றே விடையாக வர முடியும். அவ்விரண்டு விடைகளைப் பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது. முதலில் 'தொடர்ந்து புதிய ஆடைகள் வாங்கித் தந்துக் கொண்டே இருக்க முடியாது' என்ற விடையினையே காண்போம்..ஏனென்றால் இயல்பான விடை அதுவாகத் தான் நடைமுறையில் இருக்க கூடும்.

உதவி செய்ய முடியாது:

"தொடர்ந்து எல்லாம் உதவி செய்ய முடியாதுங்க...மனசுக்கு உதவனும்னு பட்டுச்சி...காசும் இருந்துச்சி...உதவுனேன்...ஆனா அதையே தொடர்ந்து செய்றது அப்படிங்கிறது இயலாத ஒரு காரியம்..." என்பது மேலே கண்ட கேள்விகளுக்கு ஒரு சாராரின் விடையாக இருக்கக் கூடும். இயல்பான பதில் தான். காரணம் ஒரு தனி சராசரி மனிதனால் இன்றைய நிலையில் அவனுடைய வலிமைக்கு உட்பட்ட உதவிகளையே செய்ய இயலும்...அதற்கு மாறாக செய்ய இயலாது. இந்த நிலையில் தான் ஒரு கேள்வி எழுகின்றது?

"தொடர்ந்து உதவி செய்ய இயலாத நிலையில், நாம் யாருடைய படிப்பு நின்றுப் போக கூடாது என்று எண்ணி உதவினோமோ, அப்பெண்ணுடைய படிப்பு நின்று தான் போகப் போகின்றது. இந்நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும்?"

ஒன்றும் செய்ய இயலாது. விதியையும் நம்முடைய இயலாமையையும் எண்ணி நாட்டினையும் நாட்டு நடப்பையும் திட்டிக் கொண்டே செல்ல வேண்டியது தான்.

இந்த நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

1) அரசாங்கம் எதற்காக இலவச சீருடைத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்?

2) தனது மகளுக்கான சீருடையைக் கூட வாங்க முடியாத பொருளாதார நிலையில் பலர் உள்ள பொழுது, பிறரின் படிப்பிற்காக உதவி செய்யும் வண்ணம் பொருளாதார வசதியினை உடைய சிலரும் இருக்கின்றனர் என்று அரசுக்குத் தெரியுமா தெரியாதா?

இந்த கேள்விகளைப் பற்றித் தான் இங்கே நாம் கண்டாக வேண்டி இருக்கின்றது.

ஒரு அரசு என்பது மக்களிடம் இருந்து என்றுமே தனியான ஒன்றாக இருத்தல் இயலாது. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் அரசு. மனிதன் இனக் குழுக்களாக இருந்த போதும் சரி இன்று தேசங்களாக வளர்ந்து இருக்கும் போதிலும் சரி அரசு என்பது அந்த அரசின் குடிமக்களின் நலனுக்காக இருக்கும் ஒன்றே அன்றி வேறல்ல.

இந்நிலையில் நமது அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகத் தெரியும், தனது குடிமக்களாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களும் இருக்கின்றனர்...மிகுதியாக வருமானம் வாய்க்கப் பட்டவர்களும் இருக்கின்றனர் என்று. அதனால் தான் தனது அடிப்படையான கடமையான தனது குடிமக்கள் அனைவருக்கும் உரிய உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக தனது குடிமக்களின் வருமான வரம்பினை வைத்துக் கொண்டு வரியினை இட்டு அனைத்து மக்களுக்கும் உரிய கடமையினை அது ஆற்றுகின்றது.

கல்வி என்பதும் ஒரு அரசின் அத்தகைய கடமையே ஆகும். தனது குடிமக்கள் அனைவருக்கும் தரமான கல்வியினை தர வேண்டியது ஒரு அரசின் கடமை. அதற்காகத் தான் அது காலங்களில் பல திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவாறே இருக்கின்றது.

உதா. உண்பதற்கு உணவில்லாத காரணத்தினால் தான் குழந்தைகள் பள்ளிகளுக்கு வரவில்லை என்று அறிந்த காமராசர் இலவச மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்து அனைவரும் கல்வியினைப் பெற வழி புரிந்தார்.

அவர் மாணவர்களுக்கு உதவியினை செய்யவில்லை. அது அவரது கடமை. அவரது கடமையைத் தான் அவர் செய்தார்...அதற்காகத் தான் அவருக்கு பதவியையும் உரிமையையும் தந்து வரியையும் செலுத்தி நாட்டினை ஆளும் பொறுப்பில் வைத்து இருந்தோம்.

இதனைப் போன்றே தான் அரசின் இலவச சீருடைத் திட்டத்தையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

தனது மக்களுக்கு சீருடையை வாங்கித்தர வழி இல்லாத பல்வேறு குடும்பங்கள் இங்கே உள்ளன என்பதை அரசு அறியாமல் இல்லை...அதனை அது அறிந்த நிலையினில் தான் இலவச சீருடைத் திட்டத்தையே அரசு கொண்டு வந்து இருக்கின்றது. அவ்வாறு திட்டத்தினைக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.

இந்நிலையில் சீருடையை தரமானதாக தரவில்லை என்றால் அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று தான் பொருள்படும். ஒழுங்காகச் செயல்படாத அரசினை கேள்விக் கேட்கும் உரிமை அனைத்து மக்களுக்கும் இருக்கின்றது. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கேள்வி கேட்டால் அரசுக்கு பதில் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. காரணம் மக்களால் தான் அரசு இருக்கின்றதே ஒழிய அரசினால் மக்கள் இல்லை.

சீருடை இல்லாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி கற்கும் நிலை பாதிக்கப்படுகின்றது என்றால் அந்த முழுப் பொறுப்பும் அரசினையே சாரும்...காரணம்,

1) சீருடையை வாங்கக் கூட முடியாத பொருளாதார நிலையில் தனது குடிமக்களில் பலரை அந்த அரசாங்கம் வைத்து இருக்கின்றது

2) கல்வியின் இன்றியமையாமையை அறிந்தும் அனைவரும் அக்கல்வியினைப் பெரும் வண்ணம் திட்டங்களை ஒழுங்காகச் செயல்படுத்தாது இருக்கின்றது.

அதாவது அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யாது இருக்கின்றது.

இது நிச்சயமாக நல்லதொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ அடையாளம் அல்ல...இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் மிகப் பெரிய கேடுகள் தான் வரக் கூடும்.

இந்நிலையில் அரசாங்கத்தினை அதனது கடமையை ஒழுங்காகச் செய்யச் சொல்லி வலியுறுத்துவதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனைச் செய்வதே மெய்யான நிலை நிற்கக்கூடிய முடிவுகளுக்கு வழிவகுக்கக் கூடும். இதற்கு மாறாக வேறு தீர்வுகள் என்பன கிடையாது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

அரசாங்கம் தனது மக்களுக்காக திட்டங்கள் போடுவதோ அல்லது அரசாங்க திட்டங்கள் ஒழுங்காக நடைபெறாது போனால் மக்கள் அரசாங்கத்தைக் கேள்விக் கேட்பதோ 'உதவிகள் அல்ல' ஆனால் 'கடமைகள்'. உதவிகளை செய்யலாம் அல்லது செய்யாது போகலாம் அவை தனி மனிதரைப் பொறுத்தவை...ஆனால் கடமைகள் என்பன நிச்சயம் செய்தாக வேண்டியவைகள். அவைகள் தனி மனிதனைப் பொருத்தவைகள் அல்ல. சமூகமே அக்கடமைகள் மூலமாகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. நிற்க

சுருக்கமாக காண வேண்டும் என்றால்,

ஒரு சிறுவனைப் படிக்க வைக்க வேண்டியது அவனது பெற்றோருக்கு கடமை. அவனைப் படிக்க வைக்க அவர்களால் இயலாத நிலையில் அவனது படிப்பிற்கு அவனது மாமா செய்வது உதவி.

மாமா நிச்சயமாக உதவி செய்யலாம் அதில் தவறில்லை...ஆனால் அச் சிறுவனை படிக்க வைக்க வசதிகள் இருந்தும் தங்களது கடமைகளை அவனது பெற்றோர் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவனது பெற்றோரின் கடமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை அவனது படிப்பிற்கு பொறுப்பினை ஏற்றுக் கொள்ள செய்வதே அவர் புரியும் உண்மையான உதவியாகும். இல்லையேல் அப்பையனின் பெற்றோர் பொறுப்பு இல்லாமலேயே வாழ்ந்து விடுவர். அந்த பையனின் வாழ்கையும் கேள்விக் குறியாகி விடும்.

அதனைப் போன்று தான் அரசாங்கமும், சேவை புரிவோரும் இருக்கின்றனர். அன்பினால் சேவை புரிவது என்றுமே தவறில்லை...ஆனால் பிறரின் கடமையாக இருக்கும் ஒன்றை நாம் உதவியாகச் செய்வது, அவர்கள் அவர்களது கடமையை செய்யாமல் இருக்க உதவுமானால் அவ்வுதவியினை நாம் தொடர்ந்து புரிவது நிச்சயம் சரியானதொன்றாக அமையாது. அது மாபெரும் தீங்குகளுக்கே வழி வகுக்கும். இந்நிலையில் அவர்களை அவர்களது கடமையை செய்யுமாறு ஒன்றிணைந்து வலியுறுத்துவதே மெய்யான உதவியாகும்...அதுவே மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

சரி இருக்கட்டும்...இதுவரை "ஒரு அளவிற்கு மேல் உதவி புரிய இயலாது" என்ற கூற்றினைக் கண்டோம்...இப்பொழுது "எந்த அளவிற்கும் உதவியினைப் புரிய முடியும்" என்ற கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்....!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

திங்கள், 19 மே, 2014

சமூகமும் தன்னார்வ சேவையும்-1!!!

ஒரு சிறு கதையில் இருந்தே ஆரம்பிப்போம்.
 
ஒருவன் ஒரு சிறிய நிறுவனத்தில் பணி புரிந்துக் கொண்டு இருந்தான். அவனது வீட்டில் இருந்து அவனது நிறுவனத்திற்கு செல்லும் வழியில் ஒரு 5000 பேர் கொண்ட சிறிய கிராமம் இருந்தது. அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி அரசாங்கத்தால் செய்துத் தரப்பட்டு இருக்கவில்லை. அவனோ தினமும் அவனது சொந்த வாகனத்திலேயே வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று வந்துக் கொண்டு இருந்தான்.
 
அவ்வாறிருக்க ஒரு நாள் அவன் அவனது அலுவலகத்திற்கு அவன் சென்றுக் கொண்டிருக்கும்  ஒரு முதியவர் உதவிக் கோரி நிற்க அவரின் அருகே வண்டியை நிறுத்தி "என்னங்கையா என்னாச்சி?" என்றே வினவுகிறான்.
 
அதற்கு அந்த பெரியவர் "இல்ல தம்பி...சந்தையில இருந்து இப்ப தான் திரும்பி வரேன்...அந்த கிராமம் தான் எங்க சொந்த ஊரு...அதுக்கு தான் போயிக்கிட்டு இருக்கேன்...ஆனா அங்க போக பேருந்து வசதி இந்த நேரத்துக்கு கிடையாது...ரொம்ப தூரம் வேற போகணும்...நீங்க அந்த வழியாத் தானே போறீங்க...என்ன கொஞ்சம் அங்க இறக்கி விட்டுறீங்களா.." என்றே கேட்க
 
சரி நம்மால் இயன்ற உதவி தானே என்று எண்ணியவாறே "சரிங்கையா...ஏறிக்கோங்க" என்று கூறியவாறே அவரை ஏற்றிக் கொண்டு அவரது கிராமத்தில் அவரை கொண்டு சேர்த்து விடுகின்றான். பெரியவரும் நன்றிக் கூறி விடைப் பெற்றுக் கொள்கின்றார்.
 
அடுத்த நாளும் அதே வழியில் வரும் பொழுது அதே இடத்தில் அதே பெரியவரைக் காணுகின்றான். இம்முறை சற்று சுற்றியும் பார்க்கும் பொழுது அப்பெரியவரைப் போன்றே பலரும் கிராமத்திற்குச் செல்ல காத்திருப்பதைக் காணுகின்றான். "ஐயோ..பாவம்...அவ்வளவு தூரம் இவர்கள் எங்கனம் நடந்துச் செல்வார்கள்...நாம் தனியாகத் தானே போகின்றோம்...உதவினால் என்ன தவறு..." என்று எண்ணியவாறே மீண்டும் உதவிக் கேட்ட அந்தப் பெரியவரை அழைத்துக் கொண்டு அவரை அவரது கிராமத்தில் இறக்கி விட்டுவிட்டு அவனது அலுவலகத்திற்கு செல்கின்றான்.
 
அங்கே அவன் நண்பர்களிடம் அந்த கிராமத்து மக்கள் படும் இன்னலைப் பற்றிக் கூற இயல்பிலேயே உதவும் குணம் படைத்த அவனது நண்பர்களும் உதவ முன்வருகின்றனர்.
 
அடுத்த நாள் அவனும் அவனது நண்பர்களும் பேருந்து வசதி இல்லாது கிராமத்திற்கு செல்ல கடினப்படும் மக்களுக்கு உதவியாக தாங்கள் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அவர்களைத் தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்களது கிராமத்தில் அவர்களை இறக்கி விட்டுச் செல்லத் துவங்கினர்.

இவ்வாறே நாட்கள் நகர்கின்றன. அந்த கிராமத்து மக்களுக்கு உதவியவாறே அவனும் அவனது நண்பர்களும் தங்களது 'பிறர்க்கு உதவும் குணநலனை' மேம்படுத்திக் கொள்ள அனைத்தும் நன்றாகவே செல்கின்றது. ஆனால் காலங்கள் நகர நகர அவர்கள் செய்யும் காரியத்தில் ஏதோ பிழை இருப்பதாகவே அவனுக்குத் தோன்றுகின்றது. ஆனால் இன்ன பிழை என்று உறுதியாக கணிக்க இயலாத காரணத்தினால் அவன் தொடர்ந்து உதவிக் கொண்டே இருக்கின்றான். அந்த நிலையில் தான் தொடர்ந்து சில தினங்கள் அவனால் உடல் நலக் குறைவுக் காரணமாக அலுவலகத்திற்கு செல்ல இயலாது போகின்றது. பின்னர் உடல் மீண்டும் நலமாக ஆன பின்பு மீண்டும் அலுவலகம் செல்லும் பொழுது வழியில் அதே முதியவரைப் பார்க்க அவரின் அருகே வண்டியை நிறுத்துகின்றான்.

"என்ன தம்பி...இத்தனை நாளா காணோமே தம்பி உங்கள...என்னாச்சி...ரொம்ப சிரமப்பட்டு போயிட்டோம் நாங்க" என்றவாறே அவனது வண்டியில் அவர் ஏறி அமர, அவனது மனதில் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டு இருந்த பிழை என்னவென்பது அந்நொடியில் அவனுக்கு புலனானது. அதனை எண்ணிக் கொண்டே பெரியவரை அவருடைய ஊரில் இறக்கி விட்டு விட்டு அவனது அலுவலகத்திற்கு சென்று நண்பர்களைக் காணுகின்றான். அவர்களும் அவனைப் போன்றே ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பது அவனுக்குத் தெரிய வருகின்றது. உதவுவது நல்லது தான் இருந்தும் அவர்கள் செய்யும் உதவியில் அடிப்படையான ஒரு பிழை இருப்பதாய் அவர்களும் உணர்ந்து இருக்கின்றனர். ஆனால் அவன் தெளிவடைந்தது போல் அவர்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றனர்.

அதனைக் கண்ட அவன் சிரித்தவாறே பேச ஆரம்பிக்கின்றான்...

"நம்ம உதவி பண்ணல டே...உதவியா ஆரம்பிச்ச ஒரு விசயத்த வேலையாவே பார்த்துகிட்டு இருக்கோம்...அது தான் பிரச்சனை...பள்ளிகூடத்துல ஒருத்தன் பேனா கொண்டு வரலைனா நம்மகிட்ட இருக்குற இன்னொரு பேனாவ கொடுத்து உதவுறது உதவி...ஆனா யார் யார்ட எல்லாம் பேனா இல்ல...என்கிட்டே உங்களுக்கு உதவ பேனா இருக்கு...தேவபட்டவங்க வந்து வாங்கிக்கோங்க அப்படின்னு உதவிய முழுநேரமா பண்றது உதவி இல்லடே...அது வியாபாரம்...நமக்கும் சரி அவனுக்கும் சரி இலாபம் வராத வியாபாரம்...நீ இருக்குற வரைக்கும் அவன் பேனாவே வாங்க மாட்டான்...இல்ல அவன்ட ஏன் பேனா இல்லைனே யோசிக்க மாட்டான்...அது போல தாம்டே இப்ப நம்ம பண்றதும்...உதவியா ஆரம்பிச்ச ஒரு விசயம் இப்ப நம்ம வேலையாவே மாறிடுச்சி.

நெனச்சி பாருங்கடே...இன்னிக்கு நம்ம எல்லாவனும் வரல இல்ல வேற இடத்துக்கு போயிட்டோம் அப்படினா அந்த மக்கள் என்னடே பண்ணுவாங்க...மறுபடியும் பழைய மாதிரியே தான இருப்பாங்க...அப்படினா நம்ம பண்றது உதவியாடே...உண்மைய சொல்லனும்னா நம்ம அவங்களுக்கு உதவி பண்ணல துரோகம் தான் பண்றோம்...!!!

நெனச்சி பாரு...இப்ப நம்ம வேலைய நம்ம சரியா செய்யலைனா நம்ம அலுவலகத்தில நம்மள வேலைக்கு வச்சி இருப்பானுங்களா இல்லையா...நிச்சயம் தொரத்தி விட்டுருவானுங்க...சரி தான...இப்ப யோசிச்சி பாரு....5000 பேரு இருக்குற ஊருக்கு அதுவும் அடிக்கடி சன நடமாட்டம் இருக்குற ஒரு இடத்துக்கு பேருந்து வசதிய ஏற்படுத்தி தாரது யாரோட வேலடே...நம்ம வேலையா இல்ல நம்ம தேர்ந்து எடுத்து இருக்குற அரசாங்கத்தோட வேலையா...அரசாங்கத்தோட வேலைதான...அதுக்குத் தான நீயும் வரி கட்டுற நானும் வரி கட்டுறேன்...அந்த ஊர் மக்களும் வரி கட்டுறாங்க...காசையும் கொடுத்துபுட்டு அந்த காச வச்சி எல்லாருக்கும் நல்லது பண்ண ஒருத்தனை தேர்ந்தும் எடுத்துபுட்டு, அதுக்கப்புறமும் வேல நடக்கலைன்னு நம்மளே அந்த வேலைய பாக்குறது அப்படிங்கிறது சரியா?

அப்புறம் எதுக்கு ஒருத்தன தேர்ந்து எடுத்து அவன்ட காசையும் கொடுக்கணும் அப்படிங்கிறேன்...கூட்டி கழிச்சி பார்த்தா அவன் செய்ய வேண்டிய வேலையத்தான் நம்ம உதவியா பண்ணிக்கிட்டு இருக்கோம்...அவன் கடமைய அவன் செய்யாம நம்ம எல்லாரோட காசையும் சுருட்டிகிட்டு போறதுக்குத்தான் நம்மோட இந்த சேவை பயன்படுது...கடைசி வரைக்கும் அவன் அவனோட கடமைய செய்யவே மாட்டான்...ஆனா அவன கேள்வி கேட்டு அவர்களோட உரிமைய பெற வேண்டிய மக்களோ...அவர்களுக்கு வேண்டியது நம்ம மூலமா கிடைக்குது அப்படின்னு அமைதியாவே இருந்துருவாங்க...நம்ம இல்லைனா நம்மள போலவே வேற யாராவது வருவானுங்க அப்படினே காத்துக் கிடந்து காலத்த கடத்திருவாங்க...கடைசி வரைக்கும் அரசாங்கம் அதனோட வேலைய செய்யல அபப்டின்னு அத மட்டும் கேள்வி கேக்க மாட்டானுங்க...!!!

தப்புடே...கடலுக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்து மக்கள் பசியால செத்துகிட்டு இருக்கும் போது மீன கொடுத்து அவங்கள காப்பாத்தலாம்...ஆனா தொடர்ந்து மீன நம்மளே கொடுத்துகிட்டு இருந்தோம்னா அது அந்த மக்கள நம்மள சார்ந்து இருக்க செய்யுற ஒரு செயல்டே...அவன் சுதந்திரமாவே இருக்க மாட்டான்...மாறா...அவனுக்கு கடலப் பத்தியும் மீன் பிடிக்கவும் சொல்லிக் கொடுத்தோம்னா...அவன் கடைசி வரைக்கும் மறுபடியும் பசியால சாவுற நிலைமைக்கு போக மாட்டான்...சொந்த கால்ல நிப்பான்...எவன் தயவும் அவனுக்கு தேவை இல்ல...அவன் இன்னும் பல பேருக்கு உதவி பண்ணுவான்...மீன் பிடிக்க கத்து தந்தவனையும் மறக்க மாட்டான்...அது தாம்டே உதவி...பதிலா அவனுக்கு மீனையே தந்துகிட்டு இருந்தோம்னா கடைசி வரைக்கும் அவன அடிமையாவே வச்சிக்கிட்டு இருக்குறதுக்கு சமம்டே...!!!

அத தாம்டே நாம பண்ணிக்கிட்டு இருக்கோம்...ஏன் பேருந்து வசதி இல்ல... ஏன் அரசாங்கம் ஒண்ணுமே பண்ண மாட்டேங்குது அப்படிங்கிற கேள்வி அவனுக்கு வரவே வராத படி நம்ம மறைமுகமா செய்றோம்டே...உண்மையான உதவி அவன சிந்திக்க வைக்கணும்டே...அங்க தான் நாம தப்பு பண்றோம்...ஆனா இனியும் இந்த தப்ப பண்ண வேண்டாம்...நாளைக்கே அந்த மக்கள் கிட்ட போயி அவங்க ஊருக்கு ஒழுங்கான பேருந்து வசதி வர என்ன பண்ணனும்...எப்படி பண்ணனும்...யார கேக்கணும் அப்படிங்கிற விசயத்த எல்லாம் சொல்லலாம்...கூடவே இருந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம்...அப்படி பண்ணா தான நாம இல்லைனாலும் அந்த மக்கள் கஷ்ட படாம இருப்பாங்க...என்னடே நான் சொல்றது...சரி தான"

என்றவாறே அவன் அவனது பேச்சினை முடிக்க அவனது கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த அவனது நண்பர்களும் அவன் கூறியதைப் போல் தங்களால் எவ்வாறு அந்த கிராமத்து மக்களுக்கு நிரந்தர தீர்வினை முறையாக கொண்டு செல்ல முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒரு மாற்றம் அந்தச் சமூகத்தில் மலர ஆரம்பிக்கின்றது.

நிற்க...!!!

சிறு கதை அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சது பெரிய கதையாயிடுச்சி. என்ன செய்வது கூற வேண்டிய கருத்துக்கள் அவ்வளவு இருக்கின்றன.

உதவி செய்வது என்பது ஒரு அருமையான குணம்...மனிதத்தின் வெளிப்பாடு...ஆனால் இன்றைய சூழ்நிலையில் நம்முடைய உதவும் குணத்தையே தங்களின் இலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் பெருகி உள்ள நிலையில் உதவி என்றால் என்ன என்பதையும் அதனைச் சுற்றி இருக்கும் அரசியலையும் நாம் நிச்சயம் கண்டாகத்தான் இருக்கின்றது.

மேலே நாம் கதையில் கண்ட நண்பர்கள் அன்னியர்கள் அல்ல...நிச்சயம் நாம் அவர்களுள் ஒருவராக இருக்கக் கூடும்...இயன்றவரை நம்மால் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தம்முள் வாய்க்கப் பெற்றவர்கள் அனைவரும் அந்த நண்பர்களைப் போன்றே இருப்பர். உதவி செய்ய வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் உதவி செய்வர்...!!!

இருந்தும்...மேலே நாம் கண்ட கதையில் எவ்வாறு உண்மையாகவே உதவிப் புரிய வேண்டும் என்று எண்ணியே அந்த நண்பர்கள் புரிந்த உதவி, உண்மையான உதவியாக அமையவில்லையோ...அதனைப் போன்றே இன்று நம் சமூகத்தில் தூய எண்ணத்தின் படி பலர் செய்யும் பல சேவைகள் உண்மையான உதவியாக அமையாமல் மாறாக எவருக்கு உதவ வேண்டும் என்றே எண்ணுகின்றார்களோ அவர்களுக்கே பெரும் தீங்காக அமைந்து விடுகின்றது.

இதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:
இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 11 மே, 2014

குடிகாரர்களும் கடன்காரர்களும்...!!!

 
"நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
 அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
 எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!" - அவ்வையார்
 
 
"ஏ நிலமே...!!! சில இடங்களில் நீ காடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் நாடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் பள்ளமாகவோ அல்லது மேடாகவோ இருக்கின்றாய்...அப்பேற்பட்ட நீ நல்ல மக்கள் எங்கே இருக்கின்றனரோ அவ்விடத்தில் நல்ல நிலமாகவும் திகழ்கின்றாய்...வாழ்க நீ" என்றே அவ்வையார் பாடிச் சென்று இருக்கின்றார். எளிமையான பொருள் தானே...இப்பொழுது இதன் அடிப்படையில் தான் நமது சமூகத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
ஒரு இடத்தில் இருக்கும் மக்களின் தன்மையைப் பொறுத்தே நிலத்தின் தன்மை அமையப் பெறுகின்றது. நல்ல மக்கள் இருக்கும் இடம் நல்ல இடமாகவும்...தீய மக்கள் இருக்கும் இடம் தீய இடமாகவும் இருக்கின்றது. இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்,
 
அன்பு, பரிவு, நல்லொழுக்கம், விருந்தோம்பல், முதலிய நற்பண்புகளை உடைய மக்கள் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி நல்லவைகளாகவே திகழும்.
 
அதே நேரம் கோபம், பேராசை, பயம், பகை, பொறாமை முதலிய தீய குணங்களை உடைய மக்கள் அதிகம் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி தீயவனவாகவே திகழும்.
 
இதனை மறுத்தல் இயலாது. இதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறே கண்டோம் என்றால் நிச்சயம் நமது நாட்டினை நாம் நல்லதொரு நாடாக காண முடியாது. காரணம் பெருன்பான்மையான மக்கள் நல்ல குணம் மிக்கவர்களாக இன்று இல்லை. அதற்கான காரணத்தைத் தான் நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.
 
இன்று நாம் மன்னராட்சிக் காலத்தைக் கடந்து மக்களாட்சிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம். மன்னராட்சிக் காலம் என்பது வேறு...மக்களாட்சிக் காலம் என்பது வேறு.
 
மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் சொல் தான் அனைத்தும்..."மன்னன் எவ்வழி ..மக்கள் அவ்வழி..." என்றே அனைத்தும் மன்னனின் செயல்பாடுகளை நம்பியே இருந்தன. மக்களுக்கு பெரிதாக உரிமைகளோ அல்லது பொறுப்புகளோ இருக்காது. மன்னனுக்கு பின்னர் மன்னனின் மகன் அரசாள வருவான். இந்த நிலையில் மக்கள் அவர்களுக்கு பிடிக்காத ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் புரட்சி தான் ஒரே வழியாக இருக்கும். ஆனால் அரசனை எதிர்த்து புரட்சி என்பது நிச்சயம் வன்முறையால் ஒடுக்கப்படும் என்பதால் பெரும்பாலும் புரட்சிகள் வெறும் எண்ணத்துடனே நின்றுப் போய் விடும். காரணம் பெருவாரியான மக்கள் அமைதியான வாழ்வையே விரும்புகின்றார்கள்...அச்சத்தின் காரணமாக "நமக்கேன் வம்பு" என்றே பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி நின்று விடுகின்றார்கள். மன்னராட்சிக் காலத்தின் நிலை இது.

ஆனால் மக்களாட்சிக் காலத்தில் நிலை வேறு...இங்கு மக்கள் எவ்வழியோ...அரசாள்பவன் அவ்வழியாக இருக்க வேண்டி இருக்கின்றது. காரணம் தங்களை ஆளும் தகுதியை மக்களே ஒருவனுக்கு அவனைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் தருகின்றனர். அதனால் மக்களை நம்பியே ஆள்பவர்கள் இருக்கின்றார்கள். இங்கே ஆள்பவர்கள் சரி இல்லை என்றால் மக்கள் பெரிய புரட்சிகளெல்லாம் செய்ய வேண்டியதில்லை...மாறாக அவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு நல்ல நபரை தேர்ந்து எடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை அவர்களே கொண்டு வந்துவிடலாம். ஆட்சி மாற்றத்திற்கு தேவை எல்லாம் மக்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதும் அவர்கள் சிந்திக்கும் திறமையைப் பெற்று இருப்பதுமே ஆகும். நிற்க.

இந்த நிலையில், அதாவது மக்களாட்சிக் காலம் உலகெங்கும் பரவி உள்ள நிலையில், எந்த ஒரு நாட்டின் மக்கள் ஒற்றுமையாகவும் நற்பண்புகள் மிக்கவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்கள் நல்லவர்களை அவர்களின் மத்தியில் இருந்து தேர்ந்து எடுத்து அவர்களை வழிநடத்த ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் கொடுப்பர். அந்த நல்லாட்சியில் அந்த நாடும் நல்ல நாடாக இருக்கும். நல்ல நாட்டிற்கு நல்ல குடிமக்களே இன்றியமையாதத் தேவை என்பதை உணர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மக்களை சிந்திப்பவர்களாகவும் நற்பண்புகள் உடையவர்களாகவும் வைத்து இருப்பர். அது தான் நல்ல தலைவர்களின் அடையாளம்.

ஆனால் இங்கே தான் மற்றொரு விடயம் ஒளிந்து இருக்கின்றது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் நல்லவனாக இல்லை...ஆனால் அவனுக்கு ஆட்சியினை விட்டுச் செல்லவும் மனசில்லை என்று வைத்துக் கொள்வோம்...இந்நிலையில் அவனுக்கு அவனது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன...

1) வன்முறையின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது (ஆனால் மக்களாட்சிக் காலத்தில் இது உதவாது)

2) மக்களே அவனது ஆட்சியை தொடர அவனையே மீண்டும் தேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் மக்களாட்சிக் காலத்தில் தீயவன் ஒருவன் ஆள்வதை மக்கள் அனுமதிக்க வேண்டும் என்றால் ஒன்று மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்களாக இருக்க வேண்டும்..அல்லது தம்மைப் பற்றி மட்டுமே கவலைக் கொண்டு அச்சத்தால் ஒற்றுமை இன்றி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மீண்டும் அவனால் ஆட்சிக்கு வர இயலும்.

இந்த விடயங்களைக் கொண்டே நாம் நமது நாட்டினை இன்றுக் காண வேண்டி இருக்கின்றது.

இன்று நமது ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இல்லை இருந்தும் அவர்கள் தான் தொடர்ந்து ஆட்சிப் புரிந்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலை சிந்திக்கவும் ஒற்றுமையாகவும் இருக்கத் தெரிந்த மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் நிலை பெற்று இருக்க யாதொரு வாய்ப்பும் இல்லை. ஆனால் நமது சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் நமது மக்கள் சிந்திப்பவர்களாகவும் இல்லை அச்சமின்றி ஒற்றுமையாக இருப்பவர்களாகவும் இல்லை. மாறாக அவர்கள்,

1) சிந்திக்கத் தெரியாதவர்களாகவும்
2) கடன்காரர்களாகவும்
3) குடிகாரர்களாகவும்

இருக்கின்றனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் அந்த அரசியல்வாதிகள் வகுத்து இருக்கும் திட்டங்களே ஆகும்.

 
ஒருவன் சிந்திக்க வேண்டும் என்றால் அவன் கல்வியினைப் பெற்று இருக்க வேண்டும். ஒருவனது கல்வியறிவு தான் அவனை சிந்திக்க வைக்கின்றது. மக்களாட்சிக் காலத்தில் ஆள்பவர்களால் மக்களின் கல்வியை தடுக்க முடியாது. காரணம் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. இந்நிலையில் எவன் ஒருவன் கல்வியை தடுக்க முயல்கின்றானோ அவன் சமூகத்தின் ஆதரவினை இழந்து விடுகின்றான். இந்நிலையில் ஆள்பவர்களால் கல்வியினைத் தடுக்க முடியாது. ஆனால் அவர்களால் கல்வி முறையினை கட்டுப்படுத்த முடியும். அதனை வைத்தே அவர்கள் சிந்திக்க வைக்காத எதற்கும் பயனற்ற கல்விமுறையைக் கொண்டு சிந்திக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்...காரணம் மக்கள் சிந்திக்காத வரை தான் அவர்களுக்கு நல்லது. ஆகையால் சிந்திக்க வைக்காத கல்விமுறையையே அவர்கள் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் கல்வி முறையை வைத்து மட்டும் ஒரு மனிதனின் சிந்தனையை கெடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்து தான் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு கை கொடுப்பது மது வகைகள் ஆகும். கற்றவனையும் சிந்திக்க வழியில்லாதவனாக செய்யும் மதுவினை சமூகத்தினுள் பரப்பி மக்களைக் குடிகாரர்களாக மாற்றுவதின் வாயிலாக சிந்திக்க இயலாத ஒரு சமூகத்தினைக் கட்டமைத்துக் கொண்டு அதில் அசைக்க முடியாத சக்தியாக அவர்கள் உலா வந்துக் கொண்டு இருக்கின்றனர்.

"கள்ளுண்ணாமை" யை வலியுறுத்தாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்றே கூறலாம்...அப்பேற்பட்ட ஒரு தேசத்திலே "தமிழ் வாழ்க" என்றுக் கூறிக் கொண்டு மதுவினைப் பரப்புவது என்பது எத்தகைய சதிச் செயல் என்பதனை சிந்திப்பவர்கள் அறிவார்கள்.

ஆனால் இன்னும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது... அனைவரும் சிந்திக்காதவர்களாகவும் இருப்பதில்லை அனைவரும் மதுவையும் குடிப்பதில்லை...இந்நிலையில் அத்தகைய மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கேள்விகளை எழுப்பினால் சிந்திக்காத மனிதனும் சிந்திக்க ஆரம்பித்து விடுவான்...பின்னர் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். இதையும் ஆட்சியாளர்கள் நன்றாக அறியத்தான் செய்வார்கள். இதற்கு தீர்வாக அவர்கள் கண்டு பிடித்த ஒரு விடயம் தான் "கடன்",

ஒருவன் சிந்திக்கின்றானா...நல்லது.
மது போன்றவைகளுக்கு அடிமையாகவில்லையா...நல்லது.
அவனை கடன்காரனாக்கி விடு...அவன் நமக்குத் தொல்லை தர மாட்டான்.

இது தான் ஆள்பவர்களின் தாரக மந்திரமாக இருக்கின்றது. "கடன்" வாங்குவது என்பது மிகவும் எளிதான ஒரு செயல்...தேவை இல்லாத பொருள்களை கடனில் வாங்க மக்களும் சிறிதளவு பேராசையையும் பொறாமையையும் கெளப்பி விட்டால் போதும்...

"அட இப்ப விலை கம்மியா கிடைக்குதே...கடன வாங்கி அத வாங்கிட்டோம்னா அப்புறம் மெதுவா அடைச்சிக்கலாம்...அதான் கடன் தர வங்கிங்க இருக்கே..." என்றவாறே கடன் வாங்க மக்கள் தயாராக இருக்கின்றனர். காரணம் மது குடிப்பது போன்று கடன் வாங்குவது என்பது தவறான ஒன்றாக இன்று நமது சமூகத்தில் பார்க்கப்படவில்லை.

கூடவே மக்களின் இன்றியமையாத தேவைகளையும் கடன் வாங்கித் தான் பெற முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அந்த கடனை அரசாங்க வங்கிகளே தந்தன என்றால் நிச்சயம் மக்கள் கடன் வாங்கத் தான் தலைப்படுவர்.

 
கல்வி, தொழில், உறைவிடம் போன்ற முக்கியமான, மக்களின் இன்றியமையாத தேவைகளை கடன் பெற்றால் தான் பெற முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டால் கடன் வாங்காது இருக்க மக்களால் முடியாது. இந்நிலையில் பெரும்பான்மையான மக்கள் கடன்காரர்களாகி விடுவர். இது தான் அரசாங்கத்திற்கு தேவை...காரணம் குடிக்காரர்களும் சரி கடன்காரர்களும் சரி...அரசாங்கத்திற்கு எதிராக..ஏன் எதற்கு எதிராகவும் குரலினை எழுப்ப மாட்டார்கள்.

குடிகாரர்கள் முழுக்க முழுக்க குடிக்கு அடிமையாகி விட்டு இருப்பர்...அவர்களுக்கு அவர்களது உலகம் குடியினைச் சுற்றியே இருக்கும்...பொழுதுபோக்கிலேயே காலத்தைக் கழிக்க விரும்புவர்...அரசாங்கத்தை எதிர்த்து அவர்களின் குரலினை அவர்கள் எக்காலமும் எழுப்ப மாட்டார்கள்.

கடன்காரர்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம்...அவர்களுக்கு நடப்பது தவறென்று தெரியும்...ஏதாவது செய்து மாற்றிட மாட்டோமா என்ற எண்ணமும் மனதினுள் இருக்கும்...ஆனால் அதனை எல்லாம் பயம் ஓரம்கட்டி விடும்..."ஏதாவது பிரச்சனையில் சிக்கி விட்டு பின்னர் கடனுக்குரிய வட்டியைக் கட்ட வழியின்றி சென்று விட்டால் கடன் ஏறிக் கொண்டே போகுமே...அதனை நாம் தானே கட்ட வேண்டி இருக்குமே...எதற்கு நமக்கு தேவை இல்லாத வம்பு...நமக்கு ஏற்கனவே நமது கடன் பிரச்சனை இருக்கின்றது...அதனைக் கவனிப்போம்...வேறு எவன் எக்கேடுக் கெட்டால் நமக்கு என்ன?" என்றே அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயம் அவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தனியாக்குவதுடன் அவர்களின் உணர்ச்சிகளையும் கட்டிப்போட்டு விடுகின்றது.

இது தான் அரசாங்கத்திற்கு வேண்டும்...மக்கள் ஒற்றுமையாகவும் இருக்கக் கூடாது...சிந்திக்கவும் கூடாது...அச்சமின்றியும் இருக்க கூடாது. அதற்காகத் தான் அது மதுவையும் கடனையும் வாரி வாரி வழங்குகின்றது. இதில் இருக்கும் அரசியலை உணராது இருக்க சிந்திக்க வைக்காத கல்வி முறையையும் ஊட்டி வளர்த்து பாதுகாக்கிறது.

அதாவது,

சிந்திக்க வைக்காத ஒரு கல்வி முறை..அந்த கல்வி முறையை கற்க கடன் வாங்கியாக வேண்டும்...கூடவே மதுவினைக் குடிக்க தூண்டும் ஒரு சமூக அமைப்பு..இதனைத் தான் இன்றைக்கு நமது நாடு வளரும் இளம் தலைமுறையினருக்கு தந்துக் கொண்டு இருக்கின்றது. தன்னைச் சுற்றி நடக்கும் அரசியலை அறிந்துக் கொள்ளும் முன்னரே ஒருவனை இந்த அரசு கையறு நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது. அங்கே தான் அந்த அரசின் வெற்றி அடங்கி இருக்கின்றது.

காமராஜரின் காலத்தில் இலவசமாகவும் அரசாங்கத்தின் கையிலும் இருந்தக் கல்வி இன்று தனியார் வசமாகவும் காசிருந்தால் மட்டுமே கிடைக்கக் கூட ஒரு பொருளாகவும் இருக்கின்றது.

கிராமத்திற்கு கிராமம் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ...தெருவிற்கு தெரு மதுபானக் கடைகள் இருக்கின்றன...!!!

கல்வியினை முடித்து தனது கனவுகள் என்ன? தான் என்ன ஆக வேண்டும்...எனது திறமைகள் என்ன? என்பதை ஒருவன் அறியும் முன்னரே அவனைக் கடன்காரன் ஆக்கி..கடனை அடைத்து விட்டு என்னவேண்டும் என்றாலும் செய் என்று ஒரு முடிவில்லாத சக்கரத்தினுள் இந்த சமூகம் அவனை தள்ளி விட்டு விடுகின்றது.அவனும் அவனைப் பற்றி அறிந்துக் கொள்ளாமலே சுழல ஆரம்பித்து விடுகின்றான். பாவம் அவனது கல்வி முறை அவனுக்கு சிந்திக்கச் சொல்லித்தரவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் எவ்வாறு நாட்டில் புரட்சியையோ மாற்றத்தையோ கொண்டு வர முடியும்...அவனது இயலாமையை நொந்துக் கொண்டே காலத்தைக் கடத்த வேண்டும் என்றால் முடியும்...அவனுக்கு ஆறுதலாக மதுவையும் அரசே தருகின்றது. நிற்க

இது தான் நிலைமை...பெரிய சதி வலையினை மேலோட்டமாகத் தான் நாம் இங்கே கண்டுள்ளோம்...இருந்தும் இப்போதைக்கு இது போதும். உங்கள் அரசாங்கம் உங்களை ஒற்றுமை உள்ளவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் இருப்பதை விரும்பவில்லை.

"மக்கள் கடன் வாங்கினால் தான் வங்கிகள் செயல்பட முடியும்...நாடும் இயங்க முடியும்" என்று அரசியல்வாதிகள் கூறுவது உண்மை தான். காரணம் நாம் கடனினை வாங்கினால் தான் அரசாங்கத்தை எதிர்க்க மாட்டோம்...அப்படி இருந்தால் தானே அவர்கள் அரசாள முடியும்...அதனால் தான் அவர்கள் கடன் வாங்க மக்களை தூண்டுகின்றனர்...மூளைச் சலவை செய்கின்றனர்...கூடவே கடனினை வாங்கியே ஆக வேண்டிய நிலைக்கு மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு வருகின்றனர்.

இன்றைய அரசுக்கு தேவை,

கடன்காரர்களும் குடிகாரர்களும் தான்...இருவராலும் எந்த ஒரு மாற்றமும் நிகழப் பெறாது.

வருந்தத்தக்க விடயமாக நமது நாட்டினில் மக்களுள் பெரும்பாலானோர் அந்த இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது வந்து விடுவர்...நீங்களே சிந்தியுங்கள்,

1) குடி பழக்கம் உள்ளவர்
2) கடனில் இருப்பவர்
3) மேலே உள்ள இரண்டுமே இருக்கின்றவர்
4) மேலே உள்ள இரண்டுமே இல்லாதவர்

இந்த நான்கு பிரிவுகளில் நமது மக்கள் அல்லது நாம் எந்த பிரிவில் வருவோம் என்றே எண்ணிக் பாருங்கள். நிச்சயமாய் 20 வருடங்களுக்கு முன்னர் நாலாவது பிரிவில் எண்ணிக்கை அதிகமாக இருந்து இருக்கும்...ஆனால் இன்றோ மூன்றாவது பிரிவின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். இதில் தான் நமது வீழ்ச்சியும் அரசியல்வாதிகளின் வெற்றியும் அடங்கி இருக்கின்றது. (இவை மட்டுமே காரணம் கிடையாது...இன்னும் பல இருக்கின்றன...ஆனால் இந்த பதிவில் நாம் அவற்றைப் பற்றிப் பார்க்க நேராததால் அவற்றைக் குறிக்கவில்லை)

 
சரி இருக்கட்டும்...பிரச்சனைகளின் தன்மையையும் காரணத்தையும் மேலோட்டமாக கண்டாயிற்று...இதற்கான தீர்வினைக் காணாது விட்டோமென்றால் நாம் இது வரை கண்டவை வெறும் எழுத்துக்களாய்ப் போய் விடும்...எனவே நம்மால் என்ன செய்ய இயலும்...என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் காண்பது தான் நலமாக இருக்கும்...

1) "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழைய தத்துவத்தின் வழி பேராசையை குறைத்து நமக்கு இன்றியமையாத தேவைகளில் மட்டுமே கவனத்தினை செலுத்த முயல்வது.

2) "இன்றியமையாத தேவை" என்ன என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும் என்பதனால் தேவைகள் என்று கருதுபவைகளை கடனின்றி வாங்க முயல்வது. இன்றைய நிலையில் கல்வி போன்ற விடயங்களின் விலையினை மாற்ற அரசியல் மாற்றங்கள் தேவையாக இருக்கின்றன, எனவே அரசியல் மாற்றங்கள் நிகழும் வரை மாணவனை கடன் வாங்காதே என்றுக் கூறுவது அவனுடைய படிப்பினை மறைமுகமாக நிறுத்துவதாகவே அமையும்...எனவே இன்றைய நிலைக்கு ஆடம்பரம்/பேராசை காரணமாக வாங்கும் பொருட்களையாவது கடனின்றி வாங்க முயல்வது.

3) இயன்றவரை கடன் அட்டை முதலியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது.

4) நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாது பொருள் மோகத்தை விடுத்து சேமிக்க துவங்குவது.

5) குடிப்பது எனது தனி உரிமை அதில் குறை கூற யாருக்கும் உரிமை இல்லை என்று எண்ணாமல், நாம் குடிப்பது மற்றவரையும் (பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டு) குடிக்க தூண்டுகிறது என்பதையும் அது ஒரு நிலையில்லாத சமூகத்தை உருவாக்குகின்றது என்பதையும் உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் குடியை நிறுத்த முயல்வது.

6) நண்பர்கள் குடித்தார்கள் என்றால் பொழுதுபோக்கிற்காக அவர்களுடன் சேர்ந்து குடிக்க பழகாமல், அவர்களின் மேலும் நமது சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறையுடன் அவர்களை குடியை நிறுத்துமாறு நட்புடனும் உரிமையுடனும் கூற முயல்வது

7) சிந்திக்கும் நண்பர்கள் சேர்ந்து சிந்தனைகளை ஒன்றிணைத்து மற்ற மக்களையும் எவ்வாறு சிந்திக்க வைப்பது என்று எண்ணத் துவங்குவது

8) அன்பால் ஒற்றுமையுடன் இருக்க முயல்வது

9) நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் சமூகத்தில் பரப்புவது

இவை மட்டுமே தீர்வுகள் கிடையாது...மேலும் சிந்திக்கச் சிந்திக்க தீர்வுகள் நிச்சயம் புலப்படத் தான் செய்யும்...அதற்கு நாம் சிந்திக்க வேண்டும்...!!!

செய்வோமா...நாம் செய்வோமா...!!!

வியாழன், 8 மே, 2014

அறிவுத் திருடர்கள் - செம்புப் பானை

நெறைய பேச வேண்டி இருக்குங்க...ஊருக்குள்ள அம்புட்டு நடக்குது...ஆனா எல்லாத்தையும் கவனிக்கவும் மாத்தவும் யாருக்குங்க நேரம் இருக்கு நமக்கு இருக்குற வேலைய பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு...இருந்தாலும் சில விசயமெல்லாம் சொல்லித் தான் ஆக வேண்டி இருக்குங்க...என்ன பண்றது நாட்டு நெலம அப்படி இருக்கு...
 
எல்லாம் ஆரம்பிச்சது இந்த டாடா கம்பெனிகாரன் வெளம்பரத்துல தானுங்க. ஏதோ 'டாடா வாட்டர் பிளஸ்' ஆம்...இது தண்ணிக்கும் மேலேயாம்...அப்படின்னு அவனுங்களே சொல்லிக்கிட்டானுங்க...அட என்னடா இது தண்ணின்னு சொல்றானுங்க ஆனா தண்ணிக்கும் மேல அபப்டின்னு சொல்றானுங்களே...அப்படி என்னத்தான் இருக்குன்னு பார்த்தோம்னா...அந்த தண்ணில செம்பு இருக்காம். அது உடம்போட நோய் எதிர்ப்பு சக்திய கூட்டிடுதாம்...அதனால அந்த தண்ணிய குடிச்சா ஆரோக்கியமா இருப்போமாம். இப்படி சொல்லி தண்ணிய பாட்டிலே அடைச்சி வியாபாரம் பண்ண வந்துட்டானுங்க.
 
ஆகா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தண்ணீரா...மாபெரும் கண்டுபிடிப்பு அப்படின்னு கொண்டாடி இருக்கலாம் தான்...ஆனா பிரச்சனை என்னன்னா இது ஒண்ணும் புதிய விசயமே இல்லை அப்படிங்கிறது தான்.
 
சின்ன வயசுல எங்க வீட்ல எல்லாம் தண்ணிய செம்புப் பானைல தான் வச்சி இருப்பாங்க...அந்த தண்ணிய குடிச்சிபுட்டு ஆடாத ஆட்டமும் இல்லை...சுத்தாத இடமும் இல்லை...தண்ணி மாறிடுச்சி அதுனால உடம்புக்கு சேரல அப்படின்னு படுத்ததும் கிடையாது. ஆடுற இடத்துல எல்லாம் தண்ணி எங்க கிடைக்குமோ அங்க எல்லாம் கிடைக்குற தண்ணிய குடிச்சிபுட்டு ஆடிகிட்டே இருப்போம்.
 
ஆனா பாருங்க மக்களே...ஒழுங்கா இருந்தவனுங்ககிட்ட 'உங்க தண்ணில கிருமி இருக்கு...குடிச்சா நோய் வரும்' அப்படின்னு பீதிய கிளப்பியே 'மினெரல் வாட்டர்' ஐ வியாபாரம் பண்ண ஆரம்பிச்சானுங்க...கூடவே தண்ணீர் ஐ சுத்தப்படுத்தும் கருவிகள் அப்படின்னு இன்னொரு பக்கமும் வியாபாரத்த பெருக்குனானுங்க. கிருமி, நோய் அப்படின்னு பயத்த உண்டு பண்ணியே நம்மகிட்ட இருந்தத அழிச்சிபுட்டு அவனுக்கு எது காச தருமோ அத தலைல கட்டுனானுங்க.
 
என்ன ஆச்சி மக்கழே...இப்ப எல்லா வீட்லயும் அவனுங்க குடுக்குற மினெரல் வாட்டர் தான். ஆனா குழந்தைங்க ஆரோக்கியமா இருக்குதுங்களா...ஒரு வீட்டு தண்ணிய குடிச்சுட்டு அடுத்த வீட்டு தண்ணிய குடிச்சாலே தண்ணி சேரல அப்படின்னு நோயில் படுத்துடுதுங்க...நோய் எதிர்ப்பு சக்தி அப்படின்னு ஒண்ணு ஊசியோ இல்லை மாத்திர போட்டாலோ தான் வருது...இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய குழந்தைகள் கிட்ட ரொம்ப கம்மியாயிடுச்சி. அதாவது காசையும் குடுத்துபுட்டு நம்மள நம்மளே நோயாளியாவும் ஆக்கிக்கிறோம்.
 
இப்ப பாருங்க மக்கழே...
 
நம்ம முன்னாடி எத வழக்கமா வச்சி இருந்தோமோ...அதையையே ஏதோ புதுசு மாதிரி நம்மகிட்டயே வந்து விக்குறானுங்க...செம்பு கலந்த தண்ணிய குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா ஆகுமாம் (டேய்...அதைத் தான்டா நாங்க மொதல குடிச்சிக்கிட்டு இருந்தோம்). ஆனா இந்த ரெண்டுக்கும் நடுவுல என்ன நடந்து இருக்குனு நீங்களே பார்த்துகோங்க மக்கழே...
 
1) நம்மகிட்ட இயல்பாகவே இருந்த ஒரு அறிவை பயத்தால் இழந்து இருக்கோம்.
2) இலவசமாக குடிச்சிக்கிட்டு இருந்த தண்ணிய காசு கொடுத்து வாங்க ஆரம்பிச்சி இருக்கோம்.
3) ஆரோக்கியமான ஒரு சமூகம் நோய்வாய்பட்ட ஒரு சமூகமா மாறி இருக்கோம்.
 
இப்ப நம்ம எத தொலச்சோமோ அதையே புது வியாபாரமா கொண்டு வந்து இருக்கானுங்க...இலவசமா எத குடிச்சிக்கிட்டு இருந்தோமோ அத இப்ப காச கொடுத்து குடிக்க சொல்றானுங்க...அம்புட்டு தான் மக்கழே...இது நியாயமா மக்கழே...விட்டா எங்கள் காற்று காற்றுக்கும் மேலே...இதில் ஆக்சிஜென் இருக்குது அப்படின்னு சொல்லி காத்தையும் விப்பானுங்க...இது நியாயமா மக்கழே!!!
 
ஆகையால் மக்கழே...சொந்தமா வீட்டுக்கு வீடு ஒரு செம்புப் பானையை வாங்கி வச்சிகோங்க மக்கழே...ஆரோக்கியமான தண்ணிய இலவசமாகவே குடித்து வளம் பெருக மக்கழே...
 
1) செம்புக் கலந்த தண்ணி இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
2) அதனால் வலுவான புதிய இளைய தலைமுறை வளரும்...அதற்கு காசிருந்தால் தான் தண்ணீர் என்ற நிலை தெரியாது.
3) செம்பு பானைகள் பொதுவாக கனமாக இருப்பதனால் அதனை தூக்கி வைத்து சுமப்பது என்பது உடலுக்கான உடற்பயிற்சியாகவும் அமையும் (குடும்பத் தலைவர்களுக்கு உதவும்)
 
சரி மக்கழே...இப்போ கெளம்புறேன்...அடுத்த பிரசாரத்துல சந்திப்போம்...!!!
 
வரேன் மக்கழே...!!!

திங்கள், 17 மார்ச், 2014

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - இறுதிப்பகுதி!!!

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை என்றும் அதனுள் பல்வேறு இனத்தவர் வசித்து வந்தனர் என்றும் அவர்களின் இடையே பல்வேறு அரசியல்களும் நிலவி வந்தன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம் ராஜீவ் அவர்களே...!!! அதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

அப்பேர்பட்ட ஒரு நாட்டினை ஆள்வது என்பது எளிதான காரியம் கிடையாது என்பதனை நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஒரே இன மக்கள் வசிக்கும் நாட்டினை ஆள்வதற்கே பலர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் ஒருங்கே விளங்கிக் கொண்டு இருக்கும் ஒரு நாட்டினை முழுமையாக ஆள்வது என்பது அரசியலில் மிகுந்த அனுபவம் மிகுந்தவர்களுக்கு கூட ஒரு சவாலான காரியம் தான்.

நிலைமை அவ்வாறு இருக்கும் பொழுது தற்செயலாக தங்களின் தாயாரின் மரணத்திற்குப் பின்னர் அரசியலினுள் நுழைந்த உங்களின் கைகளில் இந்தியா போன்றதொரு மாபெரும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு வந்து சேர்ந்த பொழுது அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள தகுதியானவராக இருந்து இருப்பீர்களா என்றால் இல்லை என்பதே உண்மையான விடையாக இருக்கும்.

நிச்சயமாய் இந்தியா போன்ற ஒரு தேசத்தினை ஆளும் பக்குவம் உங்களுக்கு அன்று இருந்து இருக்காது. இந்திய அரசியல் எவ்வாறு இருக்கின்றது...உங்களது தாயார் விட்டுச் சென்ற பணிகள் யாவை? நமது அயல் உறவுக் கொள்கைகள் என்ன? நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்பதனை எல்லாம் அறிந்துக் கொண்டு சுய முடிவினை எடுக்கும் தன்மை ஒரு மனிதனுக்கு காலத்தினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே வருமே அன்றி பதவியினை ஏற்ற நொடியிலே வந்து சேராது.

ஆனால்இந்திய நாட்டினை ஆள்வது என்ற மிகப்பெரிய பொறுப்பு உங்களின் கைகளில் வந்துச் சேர்ந்த பொழுது உங்களுக்கு அத்தகைய அனுபவம் வாய்க்கப் பட்டு இருக்கவில்லை என்பதனை நீங்கள் உணர்ந்தே தான் இருப்பீர்கள். அந்நிலையில் நிச்சயமாய் நீங்கள் உங்களைச் சுற்றி இருந்தவர்களின் உதவினை நாடி இருக்கத்தான் செய்வீர்கள். அதுவும் குறிப்பாக உங்களின் தாயின் உடனேயே இருந்தவர்களைத் தான் நீங்கள் நம்பி இருப்பீர்கள். உங்களின் கட்சி ஆட்களை நீங்கள் நம்பி இருப்பீர். அவர்கள் உங்களுக்கு நன்மையைத் தான் செய்வர்...நன்மையானவற்றைத் தான் சொல்வர் என்றே தான் நீங்கள் நம்பி இருப்பீர். அது தானே இயற்கை.

இந்த அடிப்படையிலேயே தான் என்னால் உங்களது ஈழத்தைக் குறித்த நடவடிக்கைகளைக் காண முடிகின்றது.

எந்த ஒரு பெரிய தேசத்திற்கும் ஒரு  நோய் இருக்கின்றது. அவைகள் பெரும்பாலும் மற்ற தேசங்களை அடக்கி ஒடுக்கி வைத்து தான் வல்லரசாக வேண்டும் என்ற கனவுகளையே கொண்டு விளங்குகின்றன...மாறாக நல்லரசாக வேண்டும் என்ற எண்ணம் அவைகளிடையே பெரும்பாலும் எழுவதே இல்லை.

அந்த நோய் இந்தியாவிற்கும் இருந்து இருப்பதில் நமக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். நூறு கோடி மக்கள் தொகை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளம்..போதாதா வல்லரசுக் கனவுக் காண்பதற்கு. எனவே நீங்களும் வல்லரசுக் கனவினைக் கண்டத்தில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.

பலம் வாய்ந்த தேசம் இருக்கின்றது. வல்லரசுக் கனவும் இருக்கின்றது. அண்டை நாடுகளுக்கு இடையே பிரச்சனையும் இருக்கின்றது. வல்லரசுக் கனவினை நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கண் முன்னே விரிந்து இருக்கின்றது. இவை போதாதா உங்களைக் கனவுக் காண வைக்க....மனிதனுள் இருக்கும் இயல்பான வல்லரசு நாட்டின் தலைவன் என்ற ஆசையை வளர்க்க...!!!

ஆனால் அந்த ஆசையினைக் கொண்டு தங்களை தவறான வழியில் வழி நடத்தியதினால் தான் ஈழத்தில் உங்களது அமைதி காக்கும் படை புரிந்த படுகொலைகள் நிகழ்ந்தன என்றே நான் கருதுகின்றேன். இதனை மெய்ப்பிக்கும் படியாகவே

"எனக்கு அந்த (ஈழ மக்கள்) போராட்டம் பற்றி சரியாக ஏதும் தெரியவில்லை. திடீர் என்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் பக்கத்தில் இருந்தவர்களின் ஆலோசனையின் படி அப்படி முடிவு எடுக்க வேண்டியதாக போயிற்று. உங்களின் பிரச்சனை எனக்குத் தெரியவில்லை. அதனால் அங்கு தமிழர்களுக்கு பாதகமான சில முடிவுகளை எடுத்து விட்டேன். இப்பொழுது தான் எனக்கு எல்லாம் புரிகிறது. மீண்டும் நான் பிரதமராக வருவேன்.அப்பொழுது உங்களின் போராட்டத்திற்கு துணையாக உறுதியாக நிற்பேன்" என்று நீங்கள் உங்களை வந்து சந்தித்த ஈழப் பிரதிநிதிகளான கவிஞர் காசி ஆனந்தனிடமும் சச்சிதானத்தினிடமும் நீங்கள் இறப்பதற்கு ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் கூறியது இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 205)

மேலும் இந்து நாளேட்டிலும்

"கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம்...நமது உறவில் புதிய அத்தியாயத்தை துவக்குவோம். எங்கள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று புலிகள் இராஜிவிடம் கூறினர். அவரும் இதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார். பிரபாகரனுக்குத் தனது வாழ்த்துக்களை கூறுமாறு தெரிவித்த ராஜீவ், போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறும் தனது சார்பில் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ராஜீவ் கூறிய கருத்துக்கள் உடனே பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டன. பிரபாகரனும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இராஜீவை விடுதலைப் புலிகள் கொலை செய்து இருப்பார்கள் என்று கூறப்படுவதில் அடிப்படை இல்லை"

என்று 28.05.91 ஆம் தேதி வந்த கட்டுரை புலிகளைக் குறித்த உங்களின் பார்வை காலங்களில் மாற்றம் அடைந்து இருப்பதையும் புலிகள் உங்களுடன் சமாதானம் செய்வதற்கு தயாராக இருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 217)

நிலைமைகள் அவ்வாறு இருக்க உங்களை கொல்வதற்கு புலிகளுக்கு யாதொரு தேவையுமே இருந்து இருக்க வாய்ப்பு இல்லையே. அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் தங்களது இலட்சியத்தினை பின்னடைவிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு செயலையும் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் அளவிற்கு புலிகள் முட்டாள்கள் அல்ல என்பதனை நீங்கள் அறிந்தே தான் இருப்பீர்கள்.

இருந்தும் உங்களின் மரணத்திற்கு புலிகள் காரணமாக காட்டப்பட்டு உள்ளனர். பழி வாங்கும் நோக்கில் உங்களை புலிகள் கொலை செய்து விட்டனர் என்றே கருத்துக்களும் பரப்பப்பட்டு உள்ளன.

இது நிச்சயம் உங்களைக் குழப்பிக் கொண்டு இருக்கும் பல கேள்விகளுள் சிலவான,

1) ஏன் என்னுடன் வேறு ஒரு காங்கிரஸ் தலைவர் கூட மரணமடைய வில்லை?

2) எப்பொழுதும் என்னுடம் இருக்கும் பாதுகாப்பாளர் ஏன் அன்றைக்கு எனது அருகில் இல்லை?

3) என்னுடைய உயிருக்கு ஆபத்து அந்நிய நாடுகளின் வாயிலாக இருக்கின்றது என்று பாலஸ்தீன போராளி இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்த போதும் ஏன் அதற்கு உகுந்த கவனம் செலுத்தப்படவில்லை...ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை?

4) ஏன் என்னுடைய கொலை வழக்கை முடக்க எனது கட்சியே முயன்றது. ஏன் என்னுடைய மனைவியே எனது கட்சியின் தலைமையில் இருந்தும் உண்மையான குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முழுமையாக முயற்சி செய்யாதது ஏன்?

5) அந்நிய நாட்டு உளவு அமைப்புகளுக்கும் சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தெரிந்தும் ஏன் விசாரிக்கவில்லை அவர்களை?

என்பனவற்றுடன் நிச்சயமாய் ஏன் விடுதலைப்புலிகளை உங்களின் மரணத்தோடு அனைவரும் தொடர்புபடுத்தினர் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கும்.

அதுவும் ஏன் புலிகளின் இயக்கத் தலைவரான பிரபாகரன் அவர்கள் உங்களது மரணத்தை குறித்து 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்று மட்டுமே குறிப்பிட்டார் எனபதும் நிச்சயம் ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது. அதாவது உங்களை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்று அனைவருமே கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அவ்வியக்கத்தின் தலைவர் முதலில் 'உங்களின் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உங்கள் கொலைக்கான விசாரணையில் அனைத்து வித உதவியும் செய்ய தயார்' என்று கூறி விட்டு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்றுக் கூறி இருப்பது ஏன் என்று நாம் கண்டாகத் தான் இருக்கின்றது.

அதற்கு நாம் ஒரு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. உங்களின் கொலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் ஈடுபட்டு ஆதாயம் அடைந்து இருக்கின்றனர் என்றே நாம் கண்டு வருகின்றோம். இந்நிலையில் உங்களை காங்கிரஸ் கட்சி கொலை செய்து விட்டது என்று ஒட்டு மொத்த பழியையும் காங்கிரசின் மீதும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மீதும் சுமத்துவது சரியானதொரு செயலாக அமையுமா?

அமையாது தானே. காங்கிரஸ் கட்சியினைப் பிடிக்க அக்கட்சியினுள் உள்ள சிலர் செய்த சதிக்கு அவ்வியக்கத்தினை முழுமையாக குறைக் கூற முடியாது தானே.

இந்த அடிப்படையிலேயே தான் நாம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தையும் காண வேண்டி இருக்கின்றது. இராஜீவ் அவர்களே. எந்த ஒரு இயக்கத்திலும் பிளவுகளும் துரோகங்களும் இருக்கத் தான் செய்யும்...காரணம் அவை மனிதனுள்ளே இருக்கும் மிருகத்தினாலே தூண்டப்படுபவை. அந்த மிருகம் பெருன்பான்மை மக்களுக்கும் அடங்காது உலாவிக் கொண்டு தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர். அந்த மிருகத்திற்கு இயக்கங்கள் தெரியாது...எங்கே பேராசை, பொறாமை, ஆசை, வெறி போன்றவைகளுக்கு இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அது சுதந்திரமாக உலாவும். இதனை நாம் வரலாற்றில் தொடர்ந்து கண்டுக் கொண்டு வந்து இருக்கின்றோம். காங்கிரசிலும் கண்டு இருக்கின்றோம். விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் கண்டு தான் இருக்கின்றோம். அதைத் தான் நாம் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

மாத்தையா...இந்த பெயர் உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்குமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை...ஆனால் நிச்சயம் இந்திய உளவுத்துறைக்கு அப்பெயர் பரிச்சயமாகத் தான் இருக்கக் கூடும்...காரணம் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது புலிகளின் சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தது புலிகளின் தலைமையில் இரண்டாம் இடத்தில் இருந்த மாத்தையா தான்.

பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா, இந்திய உளவுத்துறையோடு இணைந்துக் கொண்டு பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கொலை செய்து விட்டு புலிகளின் தலைமையை பிடிக்க சதி செய்ததற்காகவும் கிட்டுவின் மரணத்திற்கும் காரணமாக குற்றம் சாட்டப்பட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தூக்கிலிடப்பட்ட விடயம் உங்களுக்கு தெரியாமல் தான் இருக்கும். காரணம் இவை அனைத்தும் உங்களின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகும்.

புலிகளின் இயக்கத்தில் பிளவுகள் இருந்து இருக்கின்றது...புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் இந்திய உளவுத்துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்...உங்களின் மரணத்தில் இந்திய உளவுத்துறை ஒழுங்காக செயல்படாமலும் உண்மையை மூடி மறைக்கும் விதமாகவும் செயலாற்றி இருக்கின்றது...உங்களின் மரணத்தில் காரணமாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பொழுது பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாது இருந்து இருக்கின்றது...மேலும் முன்னரே பிரபாகரன் அவர்கள் மாத்தையாவால் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று இந்திய உளவுத்துறை கிளப்பி விட்ட கதைகள் வேறு வரலாறாய் நின்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்...இந்திய உளவுத்துறையையும் மாத்தையாவையும் பயன்படுத்தி உங்களை கொலை செய்து விட்டு பழியை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் சுமத்துவது என்பது சாத்தியமானதொன்றாகவே தெரிகின்றது.

அதுவே தான் நடந்தும் இருக்கின்றது என்பதே எனது மனதில் புலப்படும் எண்ணமும் ஆகும் அய்யா...!!! மேலும் வெளிநாடுகளில் ஈழம் குறித்த தமிழ் போராளிகள் என்றாலே புலிகள் என்ற பெயர் தான் அறியப்பட்டு இருக்கின்றது. மாறாக அங்கே பல்வேறு போராளி இயக்கங்கள் இருந்து இருக்கின்றன என்பதனை அவர்கள் அறிய மாட்டார்கள். காரணம் ஒரு சிறு தீவினுள் நிகழும் பிரச்சனைகளும் பெரும்பாலும் பலருக்கு மெய்யான ஆர்வம் இருப்பதில்லை தான். ஆனால் இந்திய உளவுத்துறைக்கு அவ்வாறு இல்லை...தமிழ் போராளி இயக்கங்கள் பல இருக்கின்றன என்பது அதற்குத் தெரியும்...அந்த இயக்கங்களுள் பலவற்றை அது தனக்காக பயன் படுத்தியும் இருக்கின்றது என்பது வரலாறு.

இந்நிலையில் உங்கள் மரணத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களை சூழ்ச்சியினால் பயன்படுத்தி விட்டு பழியினை புலிகளின் மீது சுமத்தி இருக்கின்றனர் என்றே எமக்குத் தோணுகின்றது. உங்களுக்கும் அவ்வாறே தோணும் என்றே நினைக்கின்றேன் அய்யா...காரணம் உங்களின் மரணத்தினால் புலிகள் அடைந்த இலாபம் என்பது ஒன்றும் இல்லை என்றே நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம்.

உண்மையில் உங்களது மரணத்தினால் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் உள்ள சிலரும்...உங்களின் கட்சியில் உள்ள சிலரும்....வெளிநாடுகளுமே அன்றி விடுதலைப்புலிகள் அல்லர்.

உங்களின் மரணத்தை சிறிது உன்னிப்பாக அறிவினைக் கொண்டு காண்பவர்களுக்கே இவ்விடயம் புலனாகும் பொழுது இது வரை இந்த விடயத்தினை உங்களின் கட்சியினரே...ஏன் நீங்கள் காதலித்து கைப்பிடித்து இன்று உங்களால் உங்களின் கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களின் மனைவியுமே காணாமலும் அதனைக் குறித்து மேலும் ஆராயாமலும் இருப்பது நிச்சயம் உங்களுக்கு புதிராகத் தான் இருக்க கூடும் ராஜீவ் அவர்களே...!!!

மகாபாரதத்தில் ஒரு பகுதி உண்டு...ஊரினைச் சுற்றிப் பார்க்க தர்மனும் துரியோதனனும் செல்வார்களாம்...தர்மன் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஊரில் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான்...துரியோதனனோ ஊரில் அனைவரும் கள்வர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான். அக்கதையின் முடிவு மனிதர்கள் நாம் கொண்டு இருக்கும் பார்வையின் படியே இருக்கின்றனர் என்பது ஆகும்.

இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் காதலையும் மணவாழ்வையும் தூய்மையானதொன்றாக கருதுபவன் இராஜீவ் அவர்களே...அதனைக் குறித்து சந்தேகங்கள் எழுவதை கேவலமாக கருதுபவன். எனவே தான் நான் உங்களின் காதலையும் மெய்யானதொன்றாகவே காணுகின்றேன். இருந்தும் "அந்நிய நாட்டின் தலைவரின் வாரிசுகள் எங்களின் நாடுகளுக்கு படிக்க வந்தால்...அவர்களை எங்களின் வலையில் சிக்க வைக்க அனைத்து முறைகளையும் கையாளுவோம்...அதில் பெண்களை விட்டு காதலிக்கச் செய்வதும் உண்டு..." என்று அமெரிக்கா மற்றும் மேற்கு உலகத்தின் முகத்திரையை கிழிக்கும் வேலையைச் செய்து கொண்டு வருபவர்களும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறும் பொழுதுசிறிய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை இராஜீவ் அவர்களே...!!! உங்களின் துணைவியார் இங்கே வந்ததிற்கு பின்னர் தான் உங்களின் தம்பியும் சரி அன்னையும் சரி...நீங்களும் சரி கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர்...உங்களின் கொலைக்கான உண்மையான குற்றவாளிகளை உங்களின் கட்சியின் தலைமையில் இருந்தும் உங்களின் மனைவி கண்டுப்பிடிக்க முயலாது இருக்கின்றார்...அவரிடம் உண்மைகளைப் பற்றி பலர் கூறியும் அதனைக் காணாது இருக்கின்றார்...இந்நிலையில் அவர் மேல் சிறிது சந்தேகம் வரத்தான் செய்கின்றது இராஜீவ் அவர்களே...!!! அதற்கு மன்னியுங்கள்...ஒருவேளை இந்த கணிப்பு தவறானதொன்றாக இருந்தால் நிச்சயம் என்னை நீங்களும் உங்களின் துணைவியாரும் என்னை மன்னித்தே ஆக வேண்டும்...!!!

எனது இந்த கணிப்பு தவறானதொன்றாக இருக்கும் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன். ஏன் தெரியுமா இராஜீவ்...

உங்களின் மேல் நான் பாவப்படுகின்றேன்...ஆயிரமாயிரம் ஈழத் தமிழர்களின் மரணத்திற்காக தமிழகமே உங்களை வெறுக்கும் பொழுது நான் உங்களுக்காக வருந்துகின்றேன்.

தம்பியை இழந்தீர்...!!!
தாயை இழந்தீர்...!!!
உண்மையான நண்பர்கள் யார் என்று அறியாது சதிகாரர்களுடன் சகவாசம் கொண்டீர்...!!!
தவறான வழிகாட்டலால் பாவம் பல பெற்றீர்...!!!
இறுதியில் மரணமும் கொடூரமாக எய்தினீர்...!!!

உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற காதல் ஒன்றாவது மெய்யாக இருக்கும் என்றே நம்பி இருப்பீர்...அதற்காகவாவது உங்களின் காதலைக் குறித்த எனது சந்தேகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன் அய்யா!!!

நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலி ஆடு இராஜீவ் அவர்களே...!!!


இதனை...

இந்தியாவில் இருந்து பிரிந்துக் போன ஆரியக் கூட்டத்தில் ஒருவர்களான சிங்களர்கள் இந்திய ஆரியர்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும்...

""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்."

இங்கே இருக்கும் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுவதில் இருந்தும்...

""இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.
"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்."


என்பனவற்றின் வாயிலாக நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் இராஜீவ்...!!!

இந்தியாவின் பூர்வீக குடியினரான தமிழருக்கும்...வந்தேறிகளான ஆரியர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு யுத்தத்தில் நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலிகடா இராஜீவ்...அவ்வளவே!!!

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் எங்கள் உள்ளம்...உண்மையாக உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றது.

இருந்தும் உங்களின் பெயரால் அழிக்கப்பட்ட தமிழ் இனம்...மீண்டும் வளரும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை அய்யா...உலகின் முதல் இனம் எளிதில் அழியாது...!!!

முற்றும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) ஈழத்தின் வரலாற்றினை அறிந்துக் கொள்ள
ஈழம் : முகப்புப் பக்கம்

3)  தொடர்புடைய இடுகைகள்
http://tamilthesiyam.blogspot.in/2011/08/raw-3.html
http://thiruvadiyan.blogspot.in/2006/10/blog-post_05.html
//http://www.outlookindia.com/article.aspx?204614// 
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

முந்தையப்பதிவுகள்:

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம...!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...