வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 பிப்ரவரி, 2013

ம(றை)றக்கப்பட்ட தமிழர்கள் : செம்பகராமன் பிள்ளை-2!!!

முதலாம் உலக யுத்தம்...!!!

நீண்ட காலமாக பல்வேறு நாடுகள் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருத்த வெறுப்பு உணர்ச்சிகள் வெடித்து எரிமலையாய் சிதறியதொரு தருணம்...!!! நாடு பிடிக்கும் ஆசையில் உலகத்தில் இருந்த பலம் பொருந்திய நாடுகள் அனைத்தும் தங்களது இராணுவத்தினை களம் இறக்கிக் கொண்டிருந்தன.

அனைத்தையும் செம்பகராமன் கண்டுக் கொண்டு இருந்தான்.

'நீண்ட நெடியப் போராக இது இருக்கப் போகின்றது...அதில் சந்தேகமே இல்லை...அதுவும் குறிப்பாக இங்கிலாந்து இந்தப் போரினில் மிகத் தீவிரமாகவே ஈடுபடும்...ஈடுப்பட்டே ஆக வேண்டும்...அதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது...இது தான் சரியான தருணம்...இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தினை முழு மூச்சாய் தொடங்க காலம் கனிந்து இருக்கின்றது. ஆரம்பிப்போம்...!!!" என்று எண்ணிக் கொண்டே செம்பகராமன் தனது செயல் திட்டத்தினை ஆரம்பிக்கின்றான்.


இந்திய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இந்திய இராணுவத்தினை அமைப்பதே அவனது முதல் இலக்காய் இருந்தது. அவனது இலக்கிற்கு செர்மனி உதவிப் புரிந்தது...செம்பகராமனின் செயலும் பேச்சும் ஆட்களை கவர்ந்தன...வெகு விரைவில் ஒரு தோற்றம் பெற்றது இந்தியாவின் முதல் இராணுவம்...'இந்தியத் தேசியத் தொண்டர் படை (Indian National volunteers Corps)' என்றப் பெயரினைக் கொண்டே.

யுத்தம் காத்து இருக்கின்றது...படையும் தயாராக இருக்கின்றது...போதாது. களத்தில் குதித்தான் செம்பகராமன்...நேரடியாகவே. முதலாம் உலக யுத்தத்தில் செர்மனியின் புகழ் பெற்ற நீர் மூழ்கிக் கப்பலான எம்டன் (Emden) என்றக் கப்பலின் பொறியாளராகவும் இரண்டாம் பொறுப்பதிகாரியாகவும் செயல் புரிந்தது செம்பகராமனே ஆகும்.

அன்றைய காலத்தில் இந்தியப் பெருங்கடல் முழுமையும் ஆங்கிலேயக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயப் படைகளின் செல்வாக்கு அப்படி. அப்படி இருந்தும், ஆங்கிலேய கப்பல் படையிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்டனில் இந்தியாவினை வலம் வந்து, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நீதி மன்றம் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் போன்றவற்றின் மீது ஆங்கிலேய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தாக்குதல் நிகழ்த்தி விட்டு சென்றான் செம்பகராமன்.

ஆங்கிலேயர்களின் செல்வாக்கு மிகுந்த கடற்பரப்பில் தைரியமாக கப்பலினை எடுத்து வந்து அவர்கள் கொண்டாடிய சென்னையின் மீதே தாக்குதல் நிகழ்த்தி வெற்றிக்கரமாக செம்பகராமன் திரும்பிச் சென்று ஆண்டுகள் பல ஆகலாம்...ஆனால் அந்தச் செயல்...அந்தத் தைரியம் வரலாற்றில் பதிந்து விட்டது,ஒரு வட்டாரச் சொல்லாய்...'எம்டன்' என்றச் சொல்லாய்...இன்றும் அந்தச் சொல் திறமைசாலிகளைக் குறிக்கும் ஒருச் சொல்லாக தமிழகம் அதுவும் குறிப்பாக சென்னைப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது.

இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்றைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக உள்ள காபூலில் இந்தியாவின் சுதந்திர அரசினை நிறுவவும் அவன் செயலாற்றினான். அதாவது இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேய அரசிற்கு எதிராக இந்தியாவிலேயே சுதந்திரமாக இந்திய அரசினை அமைத்தான். அவ்வாறு அமைந்த அந்த அரசினில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தான் அவன்.

அனைத்தும் நன்றாகத் தான் தொடக்கத்தினில் சென்றுக் கொண்டு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல செர்மனியின் வலுக் குறைய ஆரம்பித்தது...வெற்றிகள் இங்கிலாந்தின் வசம் செல்ல ஆரம்பித்தன...முடிவில் இங்கிலாந்தே போரில் வெல்ல செம்பகராமனின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தும் செர்மனியில் இருந்துக் கொண்டே தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினான் செம்பகராமன்.

பின்னர் செர்மனி மீண்டும் ஹிட்லரின் கீழ் எழுச்சிப் பெற்ற பொழுதும் செர்மனியில் ஒரு முக்கிய நிலையில் தான் செயலாற்றிக் கொண்டு இருந்தார் அவர்.

1933 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் செர்மனியில் இருக்கும் வியன்னா என்னும் நகரில் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது செம்பகராமனைக் கண்டு வெகு நேரம் பேசி இருவரும் தங்களது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். செம்பகராமனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கேட்ட பின்பு தான் 'இந்தியாவிற்கென்று தனி இராணுவம்' என்ற தனது சிந்தனையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ் என்ற கருத்துக்களும் இருக்கின்றன.

மிராவதி என்பவர் அவரது 'Lest We forget' என்னும் நூலிலே 'இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும் இந்த நாளினை காண சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்து இருப்பார் எனில் நிச்சயமாக அவருடைய குருவான செம்பகராமன் பிள்ளைக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அவர் வழங்கி இருப்பார்" என்றே குறிப்பிடுகின்றார். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் செர்மனிக்கே செல்ல வேண்டி இருக்கின்றது.

செர்மனி அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது...அதனுடையே நாஜிக்களும் தான். இரண்டையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார் ஹிட்லர் ஒரு கனவோடு...ஒரே கனவோடு. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களால் சுயமாக அவர்களை அவர்களே ஆழ முடியாது என்பதனைப் போன்றும் தவறாக ஹிட்லர் பேசி விட...அங்கேயே ஹிட்லரை எதிர்கின்றான் செம்பகராமன்.

"ஹிட்லர் பேசியது தவறு...இந்தியர்களின் வரலாற்றினை அறியாது கருத்தினைக் கூறி இருக்கின்றார்...அதற்கு ஹிட்லர் நிச்சயமாக மன்னிப்பு கேட்டாக வேண்டும்..."

செம்பகராமன் அவனது நிலையில் உறுதியாக நின்றான். இறுதியாக ஹிட்லர் அவன் தெரிவித்தக் கருத்துக்களுக்காக செம்பகராமனிடன் மன்னிப்புக் கோரினான்.

ஆனால் காலம் போக போக செர்மனியில் ஹிட்லரின் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு உயர ஆரம்பித்தது....எங்கும் அவன் குரல்...எங்கும் நாஜிக்கள்...எங்கெங்கும் ஹிட்லர். அந்த நிலையிலே மற்ற தலைவர்களின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

செர்மானியத் தலைவர்களின் செல்வாக்கே குறைந்தப் பொழுது இந்தியனான செம்பகராமனின் செல்வாக்கு மட்டும் சரியாமல் இருக்குமா? செம்பகராமனின் செல்வாக்கும் செர்மனியில் சரிய ஆரம்பித்தது.
 ஏற்கனவே ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக செம்பகராமனின் மீது பகை உணர்வுடன் இருந்த நாஜிக்கள் சிலர் அந்தத் தருணத்தினை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

செம்பகராமனின் உணவில் விஷம் இடப்படுகின்றது.

ஆங்கிலேயர்களுக்கு தனது சிறு வயதில் இருந்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த அந்த வீரன் இறுதியாக சூழ்ச்சிக்கு பலியாகின்றான்...தனது 43 ஆம் அகவையில். அது 1934 ஆம் ஆண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு மாவீரனை இழந்த ஒரு ஆண்டு. சூழ்ச்சிக்கு பலியான தமிழர்களில் அவன் முதலானவனும் அல்ல...இறுதியானவனும் அல்ல...தமிழர்களின் வரலாற்றில் அவனும் ஒரு பகுதி ஆகின்றான்.

சாகும் தருவாயில் அவனது மனைவியிடம் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்

"பதினேழு வயதிலே பிறந்த நாட்டினை விட்டு, பிற நாடு ஓடி வந்தேன்; 26 ஆண்டுகள் கழிந்தன. எனது பிறந்த நாட்டினில் அடி எடுத்து வைக்கும் பாக்கியமில்லாது இறக்கப் போகின்றேன்...எனது தாய் நாட்டு மக்களை எனது வாழ்நாளில் காணாது சாகப் போகின்றேன்... சாகத்தான் போகின்றேன்...நான் செத்த பிறகாவது... எனது அஸ்தியை செந்தமிழ்நாட்டு வயல்களிலே தூவுங்கள்... எனது எண்ணத்தை நீராக...எனது அஸ்தியை உரமாகக் கொண்டு அந்தப் பச்சைப் பசும் பயிர்கள் வளரட்டும். அந்தப் பயிர்கள் விடுக்கும் கதிர்கள்... அந்தக் கதிர்கள் கொடுக்கும் கொடுக்கும் மணிகள்... அந்த மணிகளை உண்ணும் மக்கள்... அந்த மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக...சித்தத்தோடு சித்தமாகக் கலந்து விடுகின்றேன்...அங்கே, என்னைப் போல் ஆயிரமாயிரம் செம்பகராமன்கள் தோன்றட்டும்...!!!"

அவர் இறந்து 34 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது அஸ்தி இந்தியாவில் கரைக்கப்பட்டது. 17 வயதில் தனது நாட்டினை விட்டு போராட சென்ற வீரன் ஒருவனின் வரலாறும் அத்துடன் முடிவிற்கு வருகின்றது.

மேலும் சில குறிப்புகள்:

1) 'ஜெய் ஹிந்த்' என்றொரு முழக்கத்தினை நாம் இன்று அறிந்து இருப்போம்...அந்த முழக்கத்தினை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்றச் செய்தி நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். அந்தத் தமிழன் வேறு யாரும் இல்லை... செம்பகராமன் தான் அது. அவனது 16 ஆம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேடையில் முழங்கியப் பொழுது அவன் பயன்படுத்திய அந்த முழக்கம் தான் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி இருக்கின்றது.

2) செம்பகராமன் ஆரம்பித்த இராணுவமான 'இந்தியத் தேசியத் தொண்டர் படை'யினைத் பின்பற்றித் தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பின்னாளில் தமது இந்தியத் தேசிய இராணுவத்தினை அமைக்கின்றார்.

3) செர்மனியின் உயர்ந்தப் பட்டமான 'வான் (Von)' என்றப் பட்டத்தினை செம்பகராமனுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றது செர்மானிய அரசு. சுதந்திர இந்தியா அமையுமானால் அதன் முதல் சனாதிபதியாக செம்பகராமன் வர வேண்டும் என்றே செர்மானிய சக்கரவர்த்தியான கெய்செர் அவர்கள் கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவனுக்கு 2008 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் ஒரு முழு உருவச் சிலைத் திறக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர வேறு ஏதாவது செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு வீரனின் வரலாற்றினை மக்களை அறியச் செய்து இருக்க வேண்டியது யார் கடமை? ஏன் இந்த வீரனின் வரலாறு மக்களிடம் சென்றடையவில்லை... இதனைப் போன்று இன்னும் எத்தனைப் பேர்கள் வரலாற்றின் இருண்டப் பக்கங்களில் உலாவுகின்றனரோ?

தெரியவில்லை...இருந்தும் அவர்களை அறிய முயல்வோம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:
1) வீரன் செண்பகராமன் - தமிழோசை பதிப்பகம்
2) http://www.frontlineonnet.com/fl2621/stories/20091023262112500.htm
3) http://en.wikipedia.org/wiki/SMS_Emden_%281908%29#Madras_to_Penang
4) http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
5) http://en.wikipedia.org/wiki/Bombardment_of_Madras

சனி, 23 பிப்ரவரி, 2013

ம(றை)றக்கப்பட்ட தமிழர்கள் : செம்பகராமன் பிள்ளை-1!!!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் பொழுது ஒரு வருத்தமான விடயம் கண்ணுக்கு புலனாகின்றது. அப்பக்கங்களில் சில இருட்டடிக்கப்பட்டு இருக்கின்றன. இருண்ட அப்பக்கங்களில் சிலர் மறக்கப்பட்டு கிடக்கின்றனர். சிலர் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். ஏன் சற்று உற்றுப் பார்த்தால் இந்தியாவின் வரலாறே இவ்வாறு பல இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்டு தான் விளங்குகின்றது.

சரி இருக்கட்டும், இருட்டடிப்பு செய்யப்பட்ட அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் அவற்றின் காரணிகளைப் பற்றியும் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நமக்கு இப்பொழுது அவற்றிற்கு நேரமில்லை. காரணம் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களில் இருந்த ஒருவர் இப்பொழுது நம்மை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கின்றார்.

அவர் பெயர் செம்பகராமன் பிள்ளை.

1891 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பிறந்து 1934 இல் செர்மனியில் மரணம் அடைந்த இவரின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது சற்று பிரமிக்க தான் வைக்கின்றது. அப்படி என்ன செய்து விட்டார் இவர்... காண்போம்!!!.

இன்றைக்கு போராட்டம், சுதந்திர வேட்கை போன்றச் சொற்கள் நம்மிடையே வெறும் வார்த்தைகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துக் கொண்டு வருகின்றன...ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சொற்கள் தான் சிலருக்கு வாழ்க்கையாகவே இருந்து வந்தன...அதுவும் குறிப்பாக இளைஞர்களிடம்...மாணவர்களிடம்!!!

செம்பகராமனும் அப்படி ஒரு மாணவன் தான்...!!!

"வேண்டும் புரட்சி... திறமையான மக்கள் இங்கே நம் நாட்டிலேயே இருக்க அன்னியர்கள் எதற்காக நம்மை ஆள வேண்டும்...அடிமையாய் இருப்பதும் ஒரு வாழ்க்கையா?...இந்த நிலை மாற வேண்டும்...நிச்சயமாய்!!! மாற்றங்கள் தானாக என்றுமே வந்ததில்லை...எனவே நாம் தான் மாற்ற வேண்டும்...சுதந்திரத்தினை வென்றெடுக்க வேண்டும்...வருவாய் தோழனே...கடமைகள் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன" என்று சுதந்திர வேட்கையுடன் இந்தியத் தெருக்களில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மாணவர்களின் தலைவனாய் இருந்தான் செம்பகராமன்...!!!

"பதினைந்தே வயது சிறுவன் நம்மை எதிர்த்துப் பேசுகின்றான்...செயல் புரிகின்றான்...வெறும் பேச்சாக இருந்தால் கூட விட்டு விடலாம்...ஆனால் இவன் பேச்சு மக்களை கவருகின்றதே...மக்கள் ஒன்று சேருகின்றார்களே...இவனை இப்படியே விட்டால் நமக்கு பின்னால் பிரச்சனைகள் எழலாம்...எனவே இவன் மக்களிடம் பேசுவதற்கு தடை விதிப்பது சரியானதொன்றாக இருக்கும்" என்று எண்ணி ஆங்கிலேய அரசும் செம்பகராமன் பொது இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு தடையினை அறிவித்தது. செம்பகராமனும் ஆங்கிலேய காவல்துறையின் கண்காணிப்பிற்கு கீழ் வந்தான்.

ஆனால் எத்தனை நாள் தான் சுதந்திர வேட்கை அடுக்குமுறைக்கு கட்டுப்பட்டுக் கிடக்கும்...சுதந்திரமாக செயலாற்ற எத்தனித்த செம்பகராமனுக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வருகின்றது... ஒரு ஐரோப்பிய தாவரவியல் அறிஞர் வாயிலாக.

அவர் பெயர் சர். வால்டர் வில்லியம் ஸ்ட்ரிக்லேன்ட்!!! ஆங்கிலேய பரம்பரையினைச் சார்ந்தவராக அவர் இருந்தாலும் அவரது தாயார் செர்மனி நாட்டினைச் சார்ந்தவர். எனவே அவர் அக்காலத்தில் மறைமுகமாக செர்மானிய அரசுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்துக் கொண்டு வந்தார் ஆராய்ச்சி என்றப் பெயரில். அவர் கண்ணில் தான் துடிப்பான இளைஞனான செம்பகராமன் சிக்குகின்றார்.

"ஆங்கிலேயர்கள் ஆளும் நாட்டில் இருந்துக் கொண்டே அவர்களை எதிர்ப்பது கடினமான ஒரு செயல் என்று உனக்குத் தெரியாதா?"

"தெரியும்...ஆனால் அதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை...!!!" என்றான் செம்பகராமன்.

சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"உன்னிடம் வேகமும் விவேகமும் இருக்கின்றது இளைஞனே...ஆனால் ஆங்கிலேயர்களை மீறி நீ போராட வேண்டும் என்றால் அவை மட்டுமே உனக்குப் போதாது... நீ இன்னும் அநேக விடயங்களைக் கற்க வேண்டும்...அதற்கு உனக்குச் சுதந்திரம் வேண்டும்" என்றார்.

அவரை உற்றுப் பார்த்தான் செம்பகராமன்.

"இதனை தாங்கள் என்னிடம் சொல்வதற்கு காரணம்...?"

மீண்டும் சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"பழைய கோட்பாடு தான் இளைஞனே...எதிரிக்கு எதிரி நண்பன்...அது தான் காரணம்" என்றார்.

"புரியவில்லையே...!!!" என்றான் செம்பகராமன்.

"உலகில் ஆங்கிலேயர்களுக்கு பகை நாடுகளும் இருக்கின்றன...அவைகளுக்கு இங்கிலாந்து வீழ வேண்டும்...அவ்வளவே...அதற்காக அவைகள் பல காரியங்களை செய்வதற்கு தயாராக இருக்கின்றன. அந்த நாடுகள் உனக்கு...உன்னுடைய குறிக்கோளுக்கு உதவி நிச்சயமாய் செய்யும்...! உனக்கு உன்னுடைய நாடு விடுதலை அடைய வேண்டும்...எங்களுக்கு இங்கிலாந்தின் செல்வாக்கு குறைய வேண்டும்...அவ்வளவே...!!! இலக்கு ஒன்றாக இருக்கும் பொழுது ஒன்றாக செயலாற்றலாம் தானே... என்ன சொல்கின்றாய்..." என்றுக் கூறி செம்பகராமனின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்.

யோசித்தான் செம்பகராமன்.

"என்னை இப்பொழுது என்ன செய்ய சொல்லுகின்றீர்...?"

"கிளம்பு...ஐரோப்பா உனக்காக காத்திருக்கின்றது... அறிவை வளர்த்துக் கொள்...அங்கே உனக்கு உதவிகள் செய்ய நண்பர்கள் பலர் இருக்கின்றனர்..."
இதற்கு மேல் சிந்திப்பதற்கு ஒன்றும் இருப்பதுப் போன்று செம்பகராமனுக்குத் தோன்றவில்லை.

அவன் முடிவெடுத்து விட்டான்.

"சரி...கிளம்பலாம்...!!!"

ஸ்ட்ரிக்லேன்ட் அவர்களுடன் கப்பலேறி ஐரோப்பாவினை நோக்கி1908 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி பயணிக்க ஆரம்பித்தப் பொழுது அவனது வயது 17!!!

முதலில் இத்தாலி...அங்கே ஒரு பட்டப்படிப்பு...பின்னர் சுவிச்சர்லாந்து...அங்கும் படிப்பு...பின்னர் செர்மனி...அங்கும் கல்வி...பட்டம்...சாதாரண செம்பகராமன் ... டாக்டர். செம்பகராமன் ஆகின்றான். ஆனால் படிப்பினை மட்டுமே அங்கே அவன் கவனிக்கவில்லை... சென்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் மத்தியில் கூட்டம் போடுவது...ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினை தோலுரிப்பது... இந்தியர்களின் நியாயமானமான கோரிக்கைகளை உலக மக்களின் முன்னர் கொண்டு சேர்ப்பது போன்ற வேலைகளையும் கல்வியுடன் சேர்த்து அவர் செய்துக் கொண்டு தான் இருந்தார். இவரது இந்தச் செயல்கள் இந்தியாவின் குரலினை உலக மக்களிடையே கொண்டு போய் சேர்த்தன.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பெர்லினில் 'இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி' என்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயலாற்றினார். அந்த இயக்கத்தின் வழி 'ப்ரோ இந்தியா' என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் நடத்தி உலக மக்களின் பார்வைக்கு இந்திய மக்களின் கோரிக்கைகளையும் நியாயங்களையும் கொண்டு சேர்த்தார்.

செயல் வேகம் இருக்கின்றது... அறிவாற்றலும் இருக்கின்றது...அதனுடன் திறமையும் இருக்கின்றது...போதாதா...செர்மனியின் அரசியல் தலைவர்கள் செம்பகராமனின் நண்பர்களாக விருப்பம் கொள்ள, செர்மனியில் செம்பகராமனின் செல்வாக்கு உயர்கின்றது.... செர்மனியின் சக்கரவர்த்தியான கெய்சர் அவர்கள் அவரது நெருங்கிய நண்பனாக கருதும் அளவுக்கு அவனின் செல்வாக்கு உயர்கின்றது. செர்மனியின் சக்கரவர்த்தி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் செம்பகராமனின் ஆலோசனையைக் கேட்கும் அளவு இருந்தது செம்பகராமனின் திறமை.

அத்தோடு அவன் நிற்கவில்லை...உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவன் குரல் எழுப்ப விரும்பினான்... அதற்காக அவன் ஆரம்பித்த இயக்கங்கள் தான் 'ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்' மற்றும் 'கீழ் நாட்டவர் சங்கம்'. இந்த இயக்கங்கள் மூலம் உலகின் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் அவன் குரல் எழுப்ப ஆரம்பித்தான்.

இங்கிலாந்தோ அவன் தலைக்கு ஒரு விலை (ஒரு இலட்சம் பொன்) வைத்து உலகம் முழுவதும் காத்துக் கொண்டு இருந்தது...ஆனால் அதனை துளிக் கூட பொருட்படுத்தாது உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தான் செம்பகராமன்... தென் ஆப்பிரிக்கா, பர்மா, அமெரிக்கா, சீனா, எகிப்து...இப்படி பல நாடுகளுக்குச் சென்று அங்கே மக்களுக்காக குரல் எழுப்பினான்.

அமெரிக்காவில் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக குரல் எழுப்பினான். அன்று இருந்த அமெரிக்க சனாதிபதியான உட்ரோ வில்சனை நேரில் கண்டு ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக பேசினான். சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய உரிமை என்று எண்ணியே அவன் மனிதத்திற்காக குரல் கொடுத்தான்.

கூடவே இந்தியாவில் இருந்த தலைவர்கள் மற்றும் போராளிகளுடனும் அவன் தொடர்பில் இருந்துக் கொண்டே தான் இருந்தான். போராளிகளுக்கு செர்மனியில் இருந்து ஆயுதங்களை பெற்றுத் தருவது, தலைவர்களின் குரல்களை உலகிற்க்குக் கொண்டுச் செல்வது என்று அவனால் இயன்ற அனைத்தையும் அவன் செய்துக் கொண்டே தான் இருந்தான். இந்தியத் தலைவர்களின் அகிம்சை வழிப் போராட்டத்தினை அவன் ஏற்றுக் கொண்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் ஆங்கிலப் படையினர் அவர்களை நொடியில் அடக்கி விடுவர் என்றும் அவன் அறிந்து வைத்து இருந்தான்...அந்த எண்ணத்திலேயே இந்தியாவிற்காக போரிடும் ஒரு படையினையும் அவன் உருவாக்கத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.

அவன் எதிர்பார்த்தக் காலமும் வந்தது.

1914 ஆம் ஆண்டு...முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பெருகின்றது.

23 வயதான வீரன் செம்பகராமன் தன்னுடைய திட்டத்தினை செயல்படுத்த ஆரம்பிக்கின்றான்.

தொடரும்...!!!

செவ்வாய், 22 மார்ச், 2011

ஜாக்சன் என்றொரு சகாப்தம்- 3

ஜாக்சன் 5!!!

மைக்கேலின் சகோதரர்கள் ஆரம்பித்த இந்த இசைக் குழுவில் மைக்கேல் பாட ஆரம்பித்த பொழுது அவனுக்கு 8 வயது. எட்டே வயது. அந்த வயதிலையே அவனது மூத்த அண்ணன் செர்மாயினுடன் சேர்ந்து பாடும் திறமையைப் பெற்று இருந்தான் மைக்கேல்.

இசை உலகில் கனவுகளோடு பறந்துகொண்டு இருந்த அவர்களுக்கு, அமெரிக்காவின் பரந்த வழிகள் திறந்தே கிடந்தன. அந்தக் கனவுகளுடன் தங்கள் இசைத் திறமையையும் சேர்த்து சுமந்து கொண்டு ஒவ்வொரு விடுதியாய் அலைந்தனர் அவர்கள்.

அவர்களுக்காக அவர்கள் செல்லும் எல்லா ஊர்களிலும் கருப்பு இன மக்கள் நடத்தும் விடுதிகள் திறந்தே இருந்தன.
"ஆகா... நம்ம பசங்க என்னமா பாடுறாங்க... பெரிய ஆளாய் வருவீர்கள் தம்பிகளா... அதுவும் அந்த பொடியன் மைக்கேல் நிச்சயம் ஏதோ சாதிப்பான் பாரேன்... இந்த வயசுலையே இப்படி பாடுறான்" என்று அந்த விடுதிகளுக்கு வருவோரும் அவர்களது திறமையை ஊக்குவிக்க, நம்பிக்கையோடும் புன்னகையோடும் அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

அவர்களது அந்தப் பயணங்களில் அவர்கள் வெற்றிகளை எவ்வளவு சந்தித்தார்களோ அதே அளவு அவர்களின் கனவுகள் வார்த்தைகளால் தகர்க்கப்பட்ட சம்பவங்களையும் சந்தித்தார்கள். பெயரளவில் சுதந்திர இளைஞர்களாக இருந்த அவர்களுக்கு சில இடங்களுக்குள் செல்ல சுதந்திரம் அன்று இல்லாது இருந்தது.
ஆம், அவர்களின் கனவுகளுக்கு வெள்ளையர்களின் உலகத்திலும் விடுதிகளிலும் அன்று இடம் இருக்கவில்லை. அவற்றுக்கு மாறாக இனவெறிக்கும் ஆதிக்க மனோபாவத்திற்கும் இடம் இருந்தன.

"ஐயா ... வணக்கம்"
"ம்ம்ம்..."
"நாங்கள் இசைக் கலைஞர்கள்...!!!"
"ம்ம்ம்ம் ...."
"நன்றாக பாடுவோம்..."
"ம்ம்ம்..."
"உங்கள் விடுதியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா?"
"கருப்பு நாய்களா... நீங்கள் பாடும் அளவிற்கு எங்கள் விடுதியின் தரம் குறைந்து விட்டதாக எண்ணமோ... மரியாதையாக சென்று விடுங்கள் இல்லையேல் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... ஓடி விடுங்கள்...!!!".

இவ்வாறு அவர்கள் எவ்வளவு முயன்றும் வெள்ளையர்களின் உலகம் அவர்களின் பயணத்திற்கு மூடியே இருந்தது ... வெள்ளையர்களின் காதுகளும் அவர்களின் இசைக்கு மூடியே கிடந்தன.
மூடியிருந்த அந்த காதுகளுடன் மைக்கேலின் சகோதரர்களின் பெரிய இசைக் குழுவாக வேண்டும் என்ற கனவுகளும் அடைப்பட்டுக் கிடந்தன.

"அண்ணா..." என்றான் மைக்கேல்.
நிமிர்ந்து பார்த்தான் செர்மாயின்.
"என்ன மைக்கேல்" என்றான்.
"தட்டுங்கள் திறக்கப்படும்... இந்த வாசகத்தை நம்புகின்றீர்களா?" தொடர்ந்தான் மைக்கேல்.
"ஆம்... ஏன் திடீர் என்று இதைக் கேட்கின்றாய் மைக்கேல்" என்றான் செர்மாயின்.
"பின் ஏன் அண்ணா கவலைப் பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்... சிலக் கதவுகள் நாம் சொன்னாலே திறந்து கொள்ளும், ஆனால் சிலக் கதவுகளோ நாம் கைகள் கொண்டு அவற்றை தட்டினால் தான் திறக்கும். இப்பொழுது மூடி இருக்கும் இந்த கதவுகளை நாம் இசையினால் தட்டுவோம் அண்ணா... நம்முடைய இசை...எழுத்து... குரல்... இவற்றால் தட்டுவோம் அண்ணா... அவற்றிக்கு எதிரே எந்த கதவுகள் தாழிட்டுக் கொண்டு தாக்குப் பிடிக்கின்றன என்பதினை நாம் பார்ப்போம்... கவலையை விடுங்கள் அண்ணா...!!!" என்று முடித்தான் மைக்கேல்.
புன்னகைத்தான் செர்மாயின்.
"நிச்சயம் நீ சராசரி மனிதன் இல்லை மைக்கேல்... எங்கள் அனைவரையும் விட நீ பெரிய ஆளாய் வருவாய்" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் முழு மூச்சாய் பாடுவதில் ஈடு பட ஆரம்பித்தார் செர்மாயின்.

ஒரு வெற்றி... முதல் வெற்றி...!!!
1966 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிய இசைத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் முதல் பரிசு...!!!
சிரித்தார்கள் சகோதரர்கள்.. சிறிய வெற்றி தான்...!!! இப்போதைக்கு இது போதும்... வானத்தை நோக்கி செல்லும் எங்களுக்கு இந்த சிறகும் ஒரு பலம் தான்!!!

அதைத் தொடர்ந்தே 1967 இல் 'சிடீல்டவுன்' (steel town) என்ற ஒரு இசை நிறுவனத்துடன் முதல் ஒப்பந்தம். சிறிய நிறுவனம் தான். ஆனால் அப்பொழுது அது அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அந்த நிறுவனத்துக்காக அவர்கள் பாடல்கள் இயற்றிக் கொண்டு இருந்த பொழுது தான் அவர்களுக்கு அந்த பெரிய வாய்ப்பு வந்தது. 'மோடவுன்" (Motown) என்ற நிறுவனம் அவர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை தர 1968 இல் முன் வந்தது.

ஜாக்சன் சகோதரர்கள் புன்னகைத்தார்கள்!!! அவர்களின் இசை, பூட்டி இருந்த கதவுகளை திறக்க ஆரம்பித்து இருக்கின்றது!!!...

தொடரும்.... 


ஞாயிறு, 20 மார்ச், 2011

ஜாக்சன் என்றொரு சகாப்தம்- 2

அமைதி...!!!

இது வரை அந்த அரங்கம் காணாத அமைதி!!!

பொதுவாக 100 பேர் ஒன்று கூடி இருந்தாலே அதிரும் அந்த அரங்கம் அன்று 50,000 பேர் நிறைந்து இருந்தும் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காத்துக் கொண்டு இருக்கின்றது.... ஒருவனுக்காக!!!

அவனுக்காக...!

அமைதி நல்லது தான்.

அவனைக் கண்ட உடன் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு எழும் சத்தத்தின் மதிப்பை உணர்த்த அந்த அமைதி நிச்சயம் வேண்டும்! 

அவன் புன்னகைக்கின்றான். அந்த நாள் நிச்சயம் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படும். அதில் துளியும் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவர்கள் முன் அவன் தோன்றும் நேரம் நெருங்குகின்றது. மக்கள் அனைவரும் மேடையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையின் அடியில் இருந்து மேடையை பிளந்துக் கொண்டு வந்து மேடையின் மேல் நிற்கின்றான்.

என்ன நடந்தது என்பதை ஒரு கணம் உணர முடியாது அந்த கூட்டம் அதிர்ந்து நிற்கின்றது. மறு கணம், அவர்களின் சத்தத்தால் அந்த அரங்கம் அதிர்கின்றது.

இது வரை அந்த அரங்கம் கண்டிராத உற்சாகம், கேட்டிராத சத்தம் ... இப்பொழுது அங்கே கரை புரண்டோடிக் கொண்டு இருக்கின்றது... அவனுக்காக... அவன் குரலுக்காக.
அவன் பேசவில்லை.

ஏன், அவன் தலை முடி கூட இன்னும் அசையவில்லை.

இருந்தும் அவனைக் காணக் காண கூட்டத்தின் சத்தம் கூடுகின்றது.

புன்னகைக்கின்றான். இந்த கூட்டம் அவனுக்காகவே வந்த கூட்டம். அவன் குரலுக்காக வந்த கூட்டம்.

அவர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைப் பிளக்கின்றது.

அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

இப்படி ஒரு கனவு அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு சிறிய வீட்டில் தனது தந்தையிடம் தினம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டு இருந்த அந்த சிறுவனின் மனதில் இருந்தது என்று சொன்னால் எவரும் எளிதில் நம்பி இருக்க மாட்டார்கள்.
அனால் மைக்கேல் அந்த கனவினைத் தான் கண்டுக் கொண்டு இருந்தான். அவன் வயதிற்கு மீறிய கனவு தான். இருந்தும் அவன் அந்தக் கனவை அலட்சியப்படுத்தவில்லை.

"இசை!!!... ஆகா எவ்வளவு அருமையாக இருக்கின்றது நிச்சயம் இதை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது போதும். மற்றதை அதுப் பார்த்துக் கொள்ளும்" என்று எண்ணியவாறே அவன் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அவன் தந்தை ஒரு சிறிய இசை கலைஞர் ஆக இருந்ததோ இல்லை அவனின் சகோதரர்கள் அனைவரும் இசைப் பிரியர்களாக இருந்ததோ என்னவோ இசை மைக்கேலின் வாழ்வோடு எப்பொழுதும் கலந்திருந்தது.

அவன் இசையை அவனது உணர்ச்சிகளின் வடிகாலாகப் பார்த்தான். இசை அவனது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அவனது மனதிற்கேற்ப வெளிப்படுத்துவதை உணர்ந்தான். செம்புலம் சேர்ந்த நீர்ப் போல விரைவில் அவனும் இசையோடு கலக்க ஆரம்பித்தான்.

அவனது அந்த இசை ஆர்வமும் திறமையும் தான் அந்த சிறு வயதிலையே அவன் அவனது சகோதரர்களுடன் மேடையேறி பாடப் போவதை அவனது வீட்டில் யாரும் தடுக்க விடாது செய்தது. அவனது சகோதரர்களும் அவனை ஆவலுடன் அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

அந்த காலத்தில், அமெரிக்காவில் உள்ள சிறு நகரங்களில் உள்ள உணவு விடுதிகளில் உணவு உண்ண வருவோரைக் கவரச் சிறு சிறு இசைக் குழுவினரை அழைத்துப் பாட வைப்பது என்பது வழக்கத்தில் இருந்தது. இசை ஆர்வம் உள்ளோர் அந்த மேடைகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு விடுதியில், 1965 ஆம் ஆண்டு தனது சகோதரர்களின் குழுவின் சார்பாக மைக்கேல் பாடுவதற்கு தயார் ஆனான்.

இசை உலகம் அது வரை தான் கண்டிராத புரட்சிக்கு தயார் ஆனது...!!!

தொடரும்....



வெள்ளி, 19 நவம்பர், 2010

ஜாக்சன் என்றொரு சகாப்தம்-1

சூன் 25 2009
என்றும் போல் தான் அன்றும் விடிந்து இருந்தது. வழக்கம் போல் எழுந்து அலுவலகத்திற்கு செல்லத் தயாராகிக் கொண்டு இருந்தேன்.
"யோவ்.. மைக்கேல் ஜாக்சன் இறந்துட்டாராமே"
வேறொரு அறையில் இருந்து வந்த நண்பரின் குரல் என்னை திடுக்கிட வைத்தது.
"சும்மா விளையாடாதடா... உனக்கு இதே வேலையா போச்சி" என்றவாறே அவர் இருந்த அறையினுள் நுழைந்தேன்.
"நான் ஒண்ணும் விளையாடலையப்பா.. இந்தா செய்தியில காட்டிக்கிட்டு இருக்கானுங்க பாரு" என்றவாறே தொலைக்காட்சியை காட்டினார்.
ஒரு கணம் என் உலகம் நின்று போனது.
தொலைக்காட்சியில் மைக்கேல் மரணம் என்ற செய்தி தலைப்புச் செய்திகளாக ஓடிக் கொண்டு இருந்தது.
இல்லை... எங்கோ தவறு நடந்து இருக்க வேண்டும்.. மைக்கேலாவது இறப்பதாவது... வாய்ப்பே இல்லை.
ஆனால் நான் பயந்தது தான் நடந்து இருந்தது.
இறந்து தான் போயிருந்தார் மைக்கேல்.
அந்த நாள், உலக இணையமே செயல் புரிய முடியாமல் சில நிமிடங்கள் திணறி நின்றது என்றார்கள். உலகமே அதிர்ச்சியுடன் நின்றது என்றார்கள்.
ஏன்?.
ஏன் என்னுடைய உலகமும் ஒரு கணம் நின்று போனது?.
அவர் என்னுடைய ஊர் கிடையாது.
என் மொழி அவருக்கு தெரியாது. ஏன்.. என்னையும் தான்!!!
இருந்தும் ஏன் எனக்குள் ஒரு வருத்தம். உலகத்தில் ஏன் பலருக்கும் அதே வருத்தம்.
ஒரு மனிதனுக்கு இது சாத்தியப்படுமா? அதுவும் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியவன், மனித முகத் தோற்றத்தையே அறுவைச் சிகிச்சைகளின் மூலம் இழந்தவன் என்று உலகத்தால் இகழப்பட்டு தனது சொத்துகளைக் கிட்டத்தட்ட முழுவதுமாய் இழந்து நின்ற ஒருவனால் இது சாத்தியப்படுமா?
சாத்தியப்பட்டு இருக்கின்றதே!!!
அப்படி எங்களை இணைத்தது எது?
இசையா...!!!
இசை மட்டுமா.........???
இல்லை....!!! நிச்சயம் இல்லை.
இசையை தாண்டியும் ஏதோ ஒன்று எங்களை இணைத்துக் கொண்டு இருந்தது... இருக்கின்றது.
அந்த ஏதோ ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் மைக்கேலைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
யார் அந்த ஜாக்சன்?....
அறிவோம்... உலகம் இது வரை கண்டிராத, மொழிகளைக் கடந்து நின்ற ஒரு கலைஞனைப் பற்றி!!!!

பி.கு:
இந்த பதிவு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையைப் பற்றிய சரிதையோ அல்லது, அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற விவாதமோ கிடையாது. மைக்கேல் என்ற ஒரு கலைஞன் .. ஒரு மனிதன்... என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை ...அவரைப் பற்றி நான் உணர்ந்தவைகளைப் பற்றியப் பதிவே ஆகும்.

************************************************************************************
"இசை... எனது உணர்ச்சிகளின் வடிகால். உலகம் முழுவதும் உள்ள இசைக் காதலர்களுக்கு எனது பரிசு. அதன் வழியே... எனது இசையின் வழியே... எனக்குத் தெரியும்... நான் என்றென்றும் வாழ்ந்திருப்பேன் " - மைக்கேல்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...