சமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இராஜ இராஜ சோழன் என்றொரு இல்லுமினாட்டி...!!!

சிறிது விசித்திரமானதொரு தலைப்புதான். வில்லங்கமானதாகவும் இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை, இன்று இல்லுமினாட்டிகள் என்ற ஒரு சொல்லாடல் நம் மத்தியிலே பரவலாக பரவி வருகின்ற பொழுது, இராஜ இராஜ சோழனையும் நாம் இழுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், முதலில் இல்லுமினாட்டி என்று இன்றைக்கு கூறப்படும் அந்த கூற்றினைப் பற்றி நாம் சிறிது கண்டு விடலாம்.

இல்லுமினாட்டி - இன்றைக்கு உலக முழுவதையும் தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கும் வண்ணம் அதிகாரம் படைத்த 13 குடும்பங்களைக் கொண்ட ஒரு குழு இது. மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்து அனைத்து வணிகங்களையும் சரி உலகில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் சரி கட்டுப்படுத்துகின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. பல்வேறு நாட்டின் தலைவர்களை கொலை செய்வது, வங்கிகளை வைத்துக் கொண்டு மக்களையும் நாடுகளையும் அடிமைகளாக ஆக்குவது என்று அதன் நடவடிக்கைகள் அநேகம். கிட்டத்தட்ட நமது நகரத்தின் உள்ளாட்சி செயலாளராக யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முதற்கொண்டு தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாக அது இருக்கின்றது. சுதந்திரமாக இருப்பதாக மனிதர்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரிய குடும்பங்கள் தான் அவர்கள்.

இவ்வாறு தான் இன்றைக்கு இல்லுமினாட்டிகளைப் பற்றிய செய்திகள் நம்மிடையே பரவலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் முற்றிலுமாக மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த கூற்றில் பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. ஒரு சில நபர்கள் இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையுமே கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், இல்லுமினாட்டிகளைப் பற்றிக் கூறுவோர், அவர்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறார்களேத் தவிர, அவர்கள் அந்த ஆற்றலை எப்படி அடைகின்றார்கள் என்பதனைப் பற்றி கூறுவதில்லை. இதனால், இல்லுமினாட்டிகளை வீழ்த்த முடியாது, ஒரு சாதாரண மனிதனால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்றொரு பிம்பமும், வரலாற்றில் அவர்களைப் போல் எவருமே இருந்ததில்லை, இது இதுவரை மனிதகுலம் சந்தித்திராத மாபெரும் தீயசக்தி என்பன போன்ற பிம்பமுமே தான் தோற்றுவிக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையோ முற்றிலும் வேறாக இருக்கின்றது. மனிதர்கள் இல்லுமினாட்டிகளை காலந்தோறும் சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பல சமயங்களில் தோற்று இருக்கின்றனர், சில நேரங்களில் வென்றும் இருக்கின்றனர். இது நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தம். இது புதியதொரு பிரச்சனை அல்ல. இதை மக்களை உணரச் செய்வதற்கு இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவோர் தவறி விடுகின்றனர்.

பிரச்சனையில்லை...நாம் முயல்வோம்!!! முதலில் இல்லுமினாட்டிகளைப் பற்றிய முக்கிய விடயங்களாக கூறப்படுவதை நாம் காணலாம்.

  1. உலக முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்.
  2. அவர்களுக்கு உடன்படும் மனிதர்களை பல்வேறு தேசங்களை ஆள செய்கின்றார்கள்.
  3. எதிர்க்கும் தலைவர்களை கொலை செய்கின்றார்கள்.
  4. மக்களை பொழுதுபோக்கு என்ற மாயையில் சிக்க வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்கின்றார்கள்.
  5. எதற்கும் பயன்படாத கல்வியை பரப்பி மக்களை விலங்குகளைப் போல் மாற்றுகின்றார்கள்.
  6. வங்கிகளை கையில் வைத்து கொண்டு உலகின் நிதியினை கட்டுப்படுத்துகின்றார்கள்.
இவைதான் இல்லுமினாட்டிகளைப் பற்றி கூறப்படும் முக்கியமான விடயங்கள். இப்பொழுது இந்த விடயங்களை நாம் வரலாற்றின் அடிப்படையில் காண வேண்டியிருக்கின்றது. அப்படி கண்டோமே என்றால்,

தங்களது ஆளுமைக்குள் வராத மற்ற தேசங்களின் மீது போர் தொடுத்துச் சென்று அவற்றை வென்ற அரசர்கள் யாவரும் இல்லுமினாட்டிகள் தான். அது அசோகனாகட்டும், சீசராகட்டும், இராஜ இராஜ சோழனாகட்டும், பாபராகட்டும், ஆங்கிலேய பேரரசாகட்டும் - இவர்கள் அனைவரும் இல்லுமினாட்டிகள் தான். ஏன், வேறொரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஒவ்வொரு மனிதனுமே இல்லுமினாட்டி தான்.

அதிகாரம் என்பது அந்தளவு போதையூட்டக்கூட ஒன்றுதான். மனித வரலாறு முழுவதும் அதிகாரத்திற்கான மோதல்களைத்தான் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.

கிழக்கு கடல் முழுவதும் பயணம் செய்து போர் பல புரிந்து வெற்றி பெற்ற இராஜ இராஜ சோழன், தான் வெற்றி புரிந்த நாடுகளை ஆட்சிப் புரிய அந்த தேசத்து நபர்களைத் தேர்வு செய்தானா அல்லது அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான சோழ மனிதர்களை தேர்வு செய்தானா?

ஐரோப்பிய கண்டம் மற்றும் ஆப்பிரிக்க கண்டம் ஆகிய கண்டங்களில் பல இடங்களைப் போர் புரிந்து வெற்றி கண்ட சீசர், ரோம பேரரசினைச் சார்ந்தவர்களையோ அல்லது தனது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்ற அந்தந்த தேசத்து மனிதர்களையோ தானே அந்த தேசங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தான்.

மற்ற தேசத்து அரசர்களை போரில் வெற்றி கண்டு, அவர்களது குடும்பங்களை கொன்ற பின்பு, தனக்கு வேண்டியவர்களை அந்த பதவிகளில் வீற்றிருக்க செய்வது என்பது அன்றிலிருந்தே வழக்கத்தில் இருக்கிறதே.

மேலும், சூழ்ச்சியால் அதிகாரங்களை கைப்பற்றுவதும் வரலாறு முழுவதிலும் நிகழத்தானே செய்திருக்கிறது. அசோகனின் பேரனான பிரகரதத்தனை, பெர்சிய வம்சாவளியைச் சார்ந்த புஷ்யமித்தர சுங்கன் என்ற படைத்தளபதி சூழ்ச்சியால் கொன்று, அரசைப் பிடித்ததை வரலாறு நமக்கு கூறத் தானே செய்கின்றது. ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணமும் சூழ்ச்சியினால் நிறைவேறியது என்ற கூற்றும் நிலவத்தானே செய்கின்றது. எனவே சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடிப்பது என்பதும் புதுமையானதொன்று அல்ல.

அவ்வாறு சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடித்தவர்கள் இல்லுமினாட்டிகள் என்றால், புஷ்யமித்திர சுங்கனும் அவனைப் போன்றவர்களும் இல்லுமினாட்டிகள் தான்.

மேலும், பொழுது போக்கினால் மக்களை அறியாமையில் வைத்திருப்பது என்பதும் புதுமையானதொன்று அல்லதான், ரோமர்கள் காலத்து அடிமை சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும், ரோமர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துமஸ் கொண்டாட்டங்களும், மன்னர் காலங்களில் போற்றி வளர்க்கப்பட்ட கோவில் திருவிழாக்களும் மக்களை மயக்குவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் தானே. மக்கள் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதிகாரத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும். அறியாமையும் சிந்திக்காத தன்மையும் அதிகாரத்திற்கு அந்தளவு முக்கியமானவை. எனவே காலத்தில் நாம் எந்தளவு பின் நோக்கி சென்றாலும், அப்பொழுதெல்லாம் மக்களை பொழுது போக்கினால் அரசுகள் மயக்கி வைத்திருப்பதை நம்மால் காண முடியும். எனவே இதிலும் புதுமை இல்லை.

சிந்திக்க வைக்காத கல்வி முறையை இல்லுமினாட்டிகள் பரப்புகின்றார்கள் என்று கூறினால், சூத்திரன் எவனும் படிக்கவே கூடாது, கோவிலுக்குள் வேறு யாரும் நுழைய கூடாது என்று கூறி அதிகாரத்தினால் மக்களை அறியாமையில் கல்லாமல் இருக்க வைத்த பிராமணர்களும் அவர்களுக்குத் துணை போன அரசர்களும் இல்லுமினாட்டிகளின் முன்னோர்கள் ஆவார்கள். அவ்வாறே விவிலியத்தை வேறு எவரும் படிக்கக் கூடாது, இலத்தினைத் தவிர வேறு மொழியில் மொழிபெயர்க்க கூடாது என்று கூறி அவ்வாறு செய்தவர்களை தீயிட்டுக் கொளுத்திய ரோம கத்தோலிக்கத் திருச்சபையும் இல்லுமினாட்டியின் முன்னோர் தான்.

மேலும் வங்கிகளைக் கொண்டு இல்லுமினாட்டிகள் மக்களின் நிதி நிலைமைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்றும் நிலவுகின்றது. இந்த கூற்று உண்மையானது தான்...ஆனால் புதிதானது அல்ல. ஏனென்றால் 'பணம்' அல்லது 'நாணயம்' என்ற ஒன்றினை இவர்கள் கூறுகின்ற இல்லுமினாட்டிகள் கண்டுபிடிக்கவில்லை. அவை என்றோ புழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக, ரோம பேரரசின் கீழ் இருந்த யூதர்கள், ரோம சாம்ராஜ்யத்திற்கு ரோம நாணயங்களின் மூலமாகவேதான் வரியினைக் கட்ட வேண்டியிருந்தது. ரோம நாணயங்களை அச்சிடும் உரிமை ரோம மன்னனுக்கே இருந்தது. எனவே அந்த நாணயத்தின் மூலமும் ரோமர்கள் மற்ற இனத்தவரை அடிமைப்படுத்தி இருந்தனர். சோழர்களும் தங்களுக்கென்று தனி நாணயங்களை வைத்துத் தான் இருந்தனர். ஒவ்வொரு பேரரசும் சிற்றரசை கப்பம் கட்ட சொல்லுவது என்பது இன்றிருக்கும் கடன்களுக்கு வட்டியினை கட்டுவது போன்றதொரு செயலாகத் தான் இருக்கின்றது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எவனொருவன் நாணயத்தினைக் கண்டு பிடித்தானோ அவன் தான் வரலாற்றிலேயே மிகப் பெரிய இல்லுமினாட்டியாக இருந்திருப்பான்.

மேலும், இல்லுமினாட்டிகள் அனைத்து வணிகங்களையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர் என்ற ஒரு வாதமும் இங்கே இருக்கின்றது. அதனடிப்படையில் பார்த்தோமே என்றால், இங்கிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், போத்திஸ், கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கோவை பழமுதிர் நிலையம், ரிலையன்ஸ் என்பன போன்ற அனைத்து நிறுவனங்களையும் இல்லுமினாட்டிகளாக கருதலாம் தான்.

எனவே இல்லுமினாட்டிகள் என்பது, ஏதோ இதுவரை இருந்திராத புதியதொரு தீய இயக்கம் அல்ல. முற்காலங்களில் இருந்த அதே தீய வழிமுறைகள் தான் இன்றைய காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் மாறி வந்திருக்கின்றன. அவ்வளவு தான். எவ்வாறு அழியவே அழியாது என்று கருதப்பட்ட ரோம பேரரசும், ஆங்கிலேய சாம்ராஜ்ஜியமும் வீழ்ந்தனவோ, அவ்வாறே ஒரு காலத்தில் இந்த இல்லுமினாட்டிகள் என்ற ஒன்றும் நிச்சயம் வீழ்ச்சி அடையும். ஆனால் அன்று, அவர்களுக்கு பதிலாக அந்த இடத்திற்கு வேறொருவர் வந்திருப்பார்.

ஏனென்றால் இல்லுமினாட்டிகள் போன்ற நபர்கள், அவர்களது பலத்தினால் அதிகாரங்களை பெற்று இருப்பதில்லை. மாறாக மக்களின் பலவீனங்களின் மூலமாகவே தான் அவர்கள் அவர்களது அதிகாரங்களை அடைந்து இருக்கின்றார்கள்.

டால்ஸ்டாய் அவர்கள் இந்தியாவின் விடுதலையைப் பற்றி கூறும் பொழுது ஒன்றைக் கூறுவார் :

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுது, தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.'

அதே நிலை தானே இன்றும் தொடர்கின்றது. வெறும் 13 குடும்பங்கள் உலக மக்கள் அனைவரையும் ஆட்சி புரிகின்றனர் என்றால், தவறு யார் மீது இருக்கின்றது? அதுவும் மன்னராட்சி காலம் முடிந்து மக்களால் தேர்வு செய்யப்படும் மனிதர்கள் ஆட்சி புரியக்கூடிய மக்களாட்சிக் காலத்தில் இத்தகைய நிலை இருந்தால், மக்களைக் குறை கூறாமல் வேறு எவரையோ குறை கூறி என்ன பயன்?

மனிதர்கள் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் அன்புடன் பொதுநலத்துடன் வாழ்ந்து வரக்கூடிய ஒரு தேசத்தில், அந்த மக்களை மீறி யாரால் என்ன செய்து விட முடியும்? அதே சமயம், சுய நலத்துடன் இருக்கின்ற இரு சகோதரர்களுக்குள் ஒரு சின்ன வதந்தி கூட பெரிய விரிசலை ஏற்படுத்தி மாபெரும் சேதத்தை அந்த வீட்டிற்கே உண்டாக்கி விட முடியும்.

இதில்தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றது. மக்களை ஏமாற்றுபவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். மக்களோ பிரிந்து இருக்கின்றார்கள், அல்லது ஆசைகள், பயம், சுயநலம் போன்றவற்றின் காரணமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் பிரிந்து இருப்பதினால், அவர்களை மற்றைய ஒரு சில நபர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப அடக்கி ஆண்டு கொள்கின்றனர். இதனை  வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது. இனிமேலும் காண முடியும்.

எனவே, நம்முடைய இன்றைய மோசமான சூழல்களுக்கு இல்லுமினாட்டிகள் தான் காரணம் என்று மூன்றாம் நபரை காரணம் காட்டுவதை விட, 'நாம் ஒழுக்கமானவர்களாக, சுயநலமற்றவர்களாக அன்புடையவர்களாக இல்லை...அதனால் தான் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்...நம்முடைய சமூகமும் சீரழிந்துக் கொண்டிருக்கின்றது' என்று நம்மை நாமே திருத்திக் கொள்ள செய்வதே உண்மையான மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

எல்லோரும் சமமாக வாழ வேண்டும்...அதற்கான உரிமை எல்லாருக்கும் இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்வதற்காகத் தான் நாம் இங்கே வந்திருக்கின்றோம் என்ற எண்ணம் பரவ வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதுவே தான் ஒரே வழி.

ஒற்றுமையே என்றும் பலமாம்...!!!

வாழ்வும் கடனும் - ஆவணப்படம்!!!

'கடனின்றி அமையாது உலகு' என்று இன்றைய காலக்கட்டத்தில் கூறுவது நிச்சயம் தவறானதொரு கூற்றாக அமையாது என்பதனைப் போன்றே தான் இன்றைய உலகம் முற்றிலும் கடனினால் சூழப்பட்டு இருக்கிறது. படிப்பதற்கு கடன், பொருட்கள் வாங்குவதற்கு கடன், வீடு கட்டுவதற்கு கடன், மருத்துவத்திற்காக கடன் என்று இன்றைக்கு ஒரு தனி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வுமே கடனினால் நிறைந்திருக்கிறது. கடனில்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது என்ற நிலைக்கே இன்றைய சமூக சூழல்கள் இருக்கின்றன. கடன், ஒரு மனிதனின் சுதந்திரத்தை பறிக்கின்றது என்பதனைத் தெரிந்தும், வேறு வழியில்லாமல் கடன் வாங்குகின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடனை விரைவாக அடைக்க வேண்டுமே இல்லாவிடில் வட்டி கூடிக் கொண்டே போகுமே என்ற ஒரே சிந்தனை அவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள, 'அடிமகள் என்று பெயரிடப்படாத அடிமைகளாக அவர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் படம் அவர்களைப் பற்றிய ஒரு படமல்ல. ஆம், தனி நபர் கடனினைப் பற்றி இந்தப் படம் பேசுவதில்லை. மாறாக, ஒரு கடனினால் தனி நபர் ஒருவனின் வாழ்வே பெரிதளவு மாறிப் போகின்ற பொழுது, மாபெரும் கடன்களை வாங்குகின்ற தேசங்களின் நிலை என்னவாகின்றது என்பதனைக் குறித்தேதான் இந்த படம் பேசுகின்றது. அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைப் பற்றியும், உலக வங்கியிடமிருந்தும் சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்தும் அவை பெற்ற கடன்களைப் பற்றியும் அவற்றால் அவை அடைந்த இன்னல்களைப் பற்றியும் இந்த படம் பேசுகின்றது. 'ஜமைக்கா' என்றொரு மூன்றாம் உலக நாட்டினை நம் கண் முன்னே கொண்டு வந்து, அதன் வரலாற்றை விரிவாக விரித்து, எப்படி அந்த நாடு கடன் என்ற பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டது...அதனால் அதன் நிலை என்னவானது என்று தெளிவாக நமக்கு விளக்க முற்படுகின்றது. அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது சிறிது காண வேண்டி இருக்கின்றது.

ஜமைக்கா - அழகான ஒரு தீவு. மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போன்றே அந்நிய ஆதிக்க சக்தியிடமிருந்து (இங்கேயும் ஆட்சி புரிந்தது ஆங்கிலேயர்கள் தான்) இரண்டாம் உலக போருக்குப் பின்னர் விடுதலை அடைந்து, சுதந்திர காற்றினை சுவாசித்ததொரு நாடு அது. ஆனால் சுதந்திரம் என்ற சொல், கேட்பதற்கு இனிமையாக இருப்பதனைப் போன்றே செயல்முறையில் இருப்பதில்லை என்பதனை அது விரைவில் கண்டு கொண்டது.

சுதந்திரம் இருக்கின்றது...ஆனால் பணம் இல்லை...வேண்டிய மருந்துகளை வாங்க முடியவில்லை, தொழிற் கருவிகளை வாங்க முடியவில்லை, சம்பளம் தர முடியவில்லை...புதிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை...இந்நிலையில் வெறும் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே அந்த நாட்டின் பிரதமர் மைக்கேல் மான்லி திணறிக் கொண்டிருக்கும் பொழுதுதான், வேறு வழியில்லாமல் அவர் உலக வங்கியிடமும் IMFயிடமும் உதவிக் கோரி செல்லுகின்றார்.

"ஓ...நிதி நெருக்கடியில் இருக்கின்றீர்களா...நல்லது. கவலைப் படாதீர்கள், உங்களுக்கு உதவுவதற்குத் தானே நாங்கள் இருக்கின்றோம். நிச்சயமாக உதவி செய்கின்றோம். என்ன கொஞ்சம் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது தானே. அப்புறம் கூற மறந்து விட்டோம், உங்களுக்கு நாங்கள் தருகின்ற பணத்தினை நீங்கள் எங்களுக்கு திருப்பித் தருவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது? நீங்கள் அந்த பணத்தினை மோசமான வழிகளில் செலவழித்து விட்டீர்கள் என்றால் எப்படி அதனைத் திரும்பத் தருவீர்கள்? உங்களை நாங்கள் எப்படி நம்புவது? எனவே உங்களுக்கு நாங்கள் பணத்தினைத் தருகின்றோம்...ஆனால் அதனை நாங்கள் கூறுகின்றபடிதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும். உங்களுக்கென்று நாங்கள் முன் வைத்திருக்கும் திட்டம் இதோ..." என்றே அந்த நிறுவனங்கள் அவரை எதிர் கொள்ளுகின்றன (கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளையும் அவை இவ்வாறே தான் எதிர் கொள்ளுகின்றன).

அந்த நிறுவனங்கள் போட்ட கட்டுப்பாடுகளில் முக்கியமான சில விடயங்கள் என்னவென்றால்,

  • சுதந்திர வணிகத்தை அனுமதிக்க வேண்டும். அதாவது மற்ற உலக நாடுகளுக்கு (அமெரிக்கா, இங்கிலாந்து...) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தனது சந்தையை திறந்து வைக்க வேண்டும்.
  • மக்களுக்கு வழங்குகின்ற மானியங்களை நிறுத்த வேண்டும்.
  • கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மிகவும் குறைவாகவே செலவழிக்க வேண்டும்.
  • அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளின் விளைவாக ஜமைக்காவின் பல்வேறு தொழில்கள் என்னவாயின என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் இந்த ஆவணப்படமானது விளக்குகின்றது. அதனைச் சுருக்கமாக நாம் கண்டு விடலாம்.

விவசாயம்:

சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜமைக்கா தனது சந்தையை உலக நாடுகளுக்குத் திறந்து வைத்தது. அதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலிருந்தும்...குறிப்பாக அமெரிக்காவிலிருந்து காய்கறிகள் ஜமைக்கன் சந்தைகளில் வந்து குவிய ஆரம்பித்தன. வெளிநாடுகளிலிருந்து வந்த காய்கறிகள் விலை மலிவாக இருந்த காரணத்தினால் உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்குவோர் குறைந்தனர். விவசாயம் அழிந்தது.

கடன்:

உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்களின் மோசமான திட்டங்கள் காரணமாக, ஜமைக்காவின் கடன் மேலும் வளர்ந்து கொண்டேதான் சென்றது. 1970களில் 800 மில்லியன் டாலராக இருந்த கடன், 1980களின் முடிவில் நான்கு பில்லியன் டாலர்களாக இருந்தது. அதுவே 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 7 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது அந்த நாட்டின் கடன் கூடிக் கொண்டேதான் சென்று இருக்கின்றது.

பால் வணிகம்:

விவசாயத்தைப் போன்றே பால் வணிகத்திலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்ததால், ஜமைக்கன் பால் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை விட்டு விட நேருகின்றது. இதனைப் பற்றி இந்த படம் என்ன கூறுகின்றது என்பதனை சற்று விரிவாக காணலாம்.

பால் பண்ணையாளர் ஒருவர் - வருடத்திற்கு 18 மில்லியன் லிட்டர் முதல் 30 மில்லியன் லிட்டர் வரை பாலினை உற்பத்தி செய்யும் அளவு நாங்கள் முன்னேறி இருந்தோம். 1991ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 34 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்தோம். ஆனால் 1992 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டு வளர்ச்சி வங்கியிடமிருந்து, விவசாயம் மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்கென்று 50 மில்லியன் டாலர்கள் கடன் வாங்குவதற்கென்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தமிட்டுக் கொண்டது. அதன்படி, அரசாங்கமானது எவ்விதமான மானியத்தையும் உள்நாட்டுப் பொருட்களுக்கு வழங்கக் கூடாது, மேலும் பால் பவுடர் மற்றும் மாமிசம் போன்ற பொருட்களின் இறக்குமதியின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கமானது நீக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக பாலிற்கான போட்டி கடினமானதொன்றாக மாற ஆரம்பித்தது. பெருமளவு பால் பவுடர் இங்கே வந்து குவியத் துவங்கியதால் பால் தொழில் அழிந்து போயிற்று. அனைவரும் பால் பவுடரை பயன்படுத்தத் துவங்கியதால், பால் துறை தவிக்கலாயிற்று. இதில் கொடுமை என்னவென்றால், உள்நாட்டு பாலுக்கு அரசாங்கம் எவ்விதமான மானியமும் அளிக்கக் கூடாது, ஆனால் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் பவுடருக்கு அமெரிக்க அரசானது கிட்டத்தட்ட 137 சதவீத மானியத்தை வழங்குகின்றனர். யாரால் அதனை எதிர்த்து வணிகம் செய்ய முடியும்? தேசிய உணவு பாதுகாப்பு இல்லாமல் போவதே இதன் முடிவாக இருக்கும். எப்பொழுது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பால் பவுடருக்கான மானியம் நிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்த பொருட்களின் விலைகள் நமது உள்நாட்டு பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். ஆனால் அப்பொழுது நாம் இந்த வணிகத் துறையை விட்டே விலகிச் சென்றிருப்போம்.

நிற்க.

இவ்வாறு இன்னும் பல புள்ளி விவரங்களுடன் வரலாற்றுத் தரவுகளுடன் இந்த படமானது, உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்கள் கடன்களின் மூலமாக எவ்வாறு பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை சீர்குலைக்கின்றன என்பதனைத் தெளிவாக விளக்குகின்றது. அதுவும் அந்த நிறுவனங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதனையும் எதனால் அவை உருவாக்கப்பட்டன என்பதனைப் பற்றியும் சுருக்கமாக இது விளக்குகின்றது. எனவே இந்த படத்திற்கு நாம் சிறிது கவனத்தைத் தந்தாகத்தான் வேண்டியிருக்கின்றது.

ஏனென்றால், நாமும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நம்முடைய அரசும் இன்று,

  • மானியங்களை குறைத்து வந்து கொண்டிருக்கின்றது.
  • அனைத்தையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கின்றது.
  • 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருக்கிறது.
  • சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டினை ஏற்று இருக்கின்றது.
  • விவசாயத்தினை முன்னுரிமை படுத்த மறுக்கின்றது.
  • வங்கிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
  • அனைத்திற்கும் மேலாக நம்முடைய நாடும் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கான வட்டியினைக் கட்டிக் கொண்டிருக்கின்றது.
ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் பொழுது கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்கட்சியானது எதிர்க்கின்றது. எதிர்கட்சியானது ஆட்சியில் இருக்கின்ற பொழுது தான் எதிர்த்த அதே திட்டங்களை செயல்படுத்துகின்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, வரிவிலக்கு வரம்பை 1.5 லட்சத்திலிருந்து  4.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கூறிய அருண் ஜெட்லீ, ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்ற போதிலும் 1.5 லட்ச வரம்பிலிருந்து ஒரு பைசா கூட கூட்டியிருக்கவில்லை. இதையேதான் காங்கிரசும் செய்தது...செய்திருக்கும்...இனியும் செய்யும். இந்த நடவடிக்கைகள் கேலிகரமாக தெரிந்தாலும், அதனுள் ஒளிந்திருக்கும் அந்த முக்கியமான விடயத்தை நாம் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டியிருக்கின்றது.

கடன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் பொழுது, ஒரு நாட்டினை என்ன செய்யும் என்ற கேள்வியை நாம் இங்கே எழுப்ப வேண்டியிருக்கின்றது.

கடன்...ஒவ்வொரு மனிதனும் இதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்தப் படம் சிறிது உதவும் என்றே நம்புகின்றேன்.

கடனின்றியே அமைய வேண்டும் உலகு. அதற்கே நாம் முயல வேண்டும்.

முற்றும்.

பி:கு:

IMFஐ பற்றி அறிந்து கொள்ள 'ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை சைபர்' என்ற நூலும் உதவும்.

தொடர்புடைய இடுகைகள்:

செவ்வாய், 21 மார்ச், 2017

தஸ்தோவஸ்கி கதைகள் - எனது மூன்றாவது மொழிபெயர்ப்பு நூல்!!!

என்னுடைய மூன்றாவது மொழிபெயர்ப்பு நூல். தஸ்தோவஸ்கி, மனித உணர்வுகளையும் மனித இயல்புகளையும் மிகவும் துல்லியமாக தன்னுடைய எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலினைப் பெற்ற ஒரு மாபெரும் எழுத்தாளர். ஒரு மனிதனின் ஆன்மாவினுள் நிகழப்பெறும் போராட்டங்களே அவரது கதைகளின் அடிப்படை அம்சமாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த கலைஞருடைய இரண்டு சிறுகதைகளைத் தான் இந்த நூலினில் மொழிபெயர்த்து இருக்கின்றேன்.

'தலைமை விசாரணையாளன்' என்கின்ற அந்த முதல் சிறுகதையானது 'கரமசெவ் சகோதரர்கள்' என்ற தஸ்தோவஸ்கியின் உலகப்புகழ் பெற்ற நூலில் வருகின்ற ஒரு சிறு பகுதியாகும். இயேசு இந்த உலகிற்கு மற்றொருமுறை வந்தால் என்னவாகும் என்ற ஒரு சிறு மையப்புள்ளியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, மனித வரலாறு, மனித இயல்புகள், மனிதர்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் என்று மிகவும் முக்கியமான விடயங்களைக் குறித்து தஸ்தோவஸ்கி அவர்கள் இந்த பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளார். அதுவும் குறிப்பாக எவ்வாறு திருச்சபைகள் இயேசுவின் பேரைக் கூறிக் கொண்டே அவருக்கு எதிராக இருக்கின்றன என்பதனையும் மனிதர்களை அவை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன என்பதனையும் அவர் திறம்பட இந்த கதையின் வாயிலாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இறைவனை மூன்று கேள்விகள் மூலமாக சாத்தான் சோதித்ததாக விவிலியத்தில் வருகின்ற பகுதியினை ஒரு கதையினைப் போன்றே தான் கிருத்துவர்களும் கூட இன்று கேட்டு விட்டு நகன்று சென்று கொண்டிருக்கின்றனர். இறைவனை சாத்தானால் சோதிக்க முடியுமா? அவ்வாறு இருக்கையில் இறைவனை சாத்தான் சோதித்தது என்றால் அதன் மெய்யான அர்த்தம் என்ன? என்பன போன்ற கேள்விகள் இங்கே பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலே இருந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் மிகவும் முக்கியம் வாய்ந்த அந்த மூன்று கேள்விகளை அடிப்படையாக வைத்தே மனித இயல்புகளையும், மனிதனிடம் இருந்து இறைவன் எதனை எதிர்பார்கின்றான் என்பதனையும் தஸ்தோவஸ்கி அவர்கள் இந்நூலில் விளக்க முற்பட்டு இருக்கின்றார். அர்த்தம் நிறைந்த அவரது அந்த முயற்சிக்கு, கிருத்துவர்களும் சரி வாழ்வென்றால் என்னவென்ற தேடலினைக் கொண்டவர்களும் சரி, நாத்திகர்கள்/பொதுவுடைமைவாதிகளும் சரி தங்களது கவனத்தினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முதல் கதையினைப் போன்றே இரண்டாவது கதையும் வாழ்வின் அர்த்தத்தினைப் பற்றியே தான் அமைந்திருக்கின்றது. வாழ்வென்பது அர்த்தமற்ற ஒன்று என்கின்ற சிந்தனையின் விளைவாக தற்கொலை செய்து கொள்ள ஒரு மனிதன் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். அத்தகைய ஒருவன் வாழ்வின் அர்த்தத்தினை அறிந்துக் கொள்வதே 'கேலிக்குரிய மனிதனின் கனவு' என்கின்ற சிறுகதையின் சாராம்சமாக இருக்கின்றது. வாழ்வென்றால் என்ன? மரணத்திற்கு பின்னர் ஏதேனும் இருக்கின்றதா? பிறப்பு இறப்பு என்கின்ற இரு கால இடைவெளிகளுக்கு நடுவே இருந்து கொண்டிருக்கின்ற வாழ்வென்ற ஒன்றிற்கு அர்த்தமேதும் இருக்கின்றதா? ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? என்கின்ற கேள்விகளையும் அதற்கான தன்னுடைய பதில்களையும் தற்கொலை செய்து கொள்ள சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாயிலாக தஸ்தோவஸ்கி அவர்கள் தன்னுடைய இந்த சிறுகதையில் வெளிப்படுத்தி இருக்கின்றார். தற்கொலைகளும் அர்த்தமேதுமின்றி கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைகளும் பெருகி இருக்கும் இன்றைய சூழலில், தஸ்தோவஸ்கி அவர்கள் தன்னுடைய இந்த நூலில் வெளிப்படுத்தி இருக்கின்ற சிந்தனைகள், வெறும் ஒரு கதையில் வருகின்ற விடயங்கள் என்கின்ற நிலையினைத் தாண்டி மனிதர்களின் வாழ்விற்கும் சரி சிந்தனைக்கும் சரி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்பு : 044 24332424 24332924

புதன், 8 பிப்ரவரி, 2017

இன்றைய சமூகமும் இயேசுவின் உவமைகளும் : உக்கிராணி கதை -2

சென்ற பதிவினில் கிருத்துவ சமயத்தில் இயேசு கூறியதாய் வருகின்ற ஒரு கதையினையும் அதற்கான விளக்கத்தினையும் கண்டோம். 'தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த உலகப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை ஒவ்வொரு மனிதனும் அறிந்து இருக்கின்றான். ஆனால் இறைவனின் விருப்பத்திற்கேற்ப அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது எவ்வாறு என்பதனைப் பற்றி மட்டும் அவன் அறிந்துக் கொள்ள விரும்புவதில்லை. செல்வத்தினை எவ்வாறு தன்னுடைய நன்மைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்று அவன் எண்ணுகின்றானே ஒழிய அந்த செல்வத்தை வைத்து எவ்வாறு மக்கள் அனைவருக்கும் நன்மையினை செய்யலாம் என்று அவன் எண்ணுவதில்லை. அதன் விளைவாக அவன் இறைவனுக்கு சேவை செய்வதற்கு பதிலாக செல்வத்தை தன்னுடைய எசமானனாக ஏற்றுக் கொண்டு செல்வத்திற்காகவே அவன் வேலை செய்து கொண்டிருக்கின்றான்' என்பதே அந்த பகுதியின் அர்த்தமாகும். இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் அந்த கதையினை நாம் எவ்வாறு நம்முடைய சமூகத்தில் பொருத்திப் பார்க்கலாம் என்பதையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் சுய சார்பு பொருளாதாரம் என்பது திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. கல்வி, மருத்துவம், நல்ல உணவு என்பன போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாகி இருக்கின்றது. கடன் வாங்கித் தான் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை ஒரு மனிதனால் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலை நம்முடைய சமூகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பொருளாசை என்கின்ற ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு நுகர்வுக் கலாச்சாரமானது பேராசை மிகுந்த ஒரு சமூகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. எளிமையான வாழ்வினை வாழ விரும்பும் மனிதர்களுக்கு அத்தகைய வாழ்வானது வெறும் ஒரு கனவாகவே காட்சி அளிக்கக்கூடிய ஒரு நிலை தான் இன்று பெரும்பாலும் இருக்கின்றது. விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கின்றனர். சிறு தொழில் செய்வோரையும் இயற்கை வளங்களையும் கொள்ளை அடித்து நிர்மூலமாக்க பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கின்றது எது நடக்கின்றது என்பதனை ஒருவன் அறிந்து கொள்ளும் முன்னரே அவனை அந்த அடிமைக் கல்வி முறையானது கடனாளியாக்கி அவனை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சேர்த்து விடுகின்றது. சரி, படிக்கும் பொழுது தான் சிந்திக்க நேரமில்லை, இப்பொழுதாவது அவன் சிந்திப்பான் என்று பார்த்தோமே என்றால், அப்பொழுதும் அவனை சிந்திக்க விடாதவாறு நுகர்வுக் கலாச்சாரமானது பொருளாசையால் அவனை தொடர்ந்து கடனாளியாகவே வைத்து இருக்கின்றது. அத்தகைய பொருளாசையையும் மீறி அவன் சிந்திக்க முற்பட்டான் என்றால், விண்ணளவு உயர்ந்திருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அவனை அச்சம் கொள்ள செய்து விடுகின்றன. அந்த அச்சத்தினாலேயே அவன் தான் விரும்பிய வாழ்வினை வாழாது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றான். இது தான் இன்றைக்கு நமது சமூகத்தில் நாம் பரவலாக காணக்கூடிய நிலையாக இருக்கின்றது. இதனை நாம் சுருக்கமாக கண்டோம் என்றால்...ஒரு மனிதன் சுயமாக நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இருக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பானது திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிற்க. இப்பொழுது இந்த சூழலைத் தான் நாம் இயேசு கூறிய அந்த கதையோடு பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அந்த கதையில் மக்கள் அனைவரும் அந்த பணக்கார எசமானனுக்கு கடன்பட்டு இருக்கின்றனர். அந்த எசமானனாக நமது அரசியல்வாதிகளையும்/பன்னாட்டு நிறுவனங்களையும் வைத்துக் கொள்ளலாம். கடன்பட்டு இருக்கும் மக்களாக நம்முடைய ஏழை எளிய மக்கள்/விவசாயிகள்/மீனவர்கள் போன்ற பொது ஜனங்களை வைத்துக் கொள்ளலாம்.

அந்த பணக்கார எசமானனிடம் பணி புரிகின்ற உக்கிராணியாக நம்மை (பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிபவர்கள்/அரசாங்க ஊழியர்கள்) வைத்துக் கொள்ளலாம். நாம் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்...எப்படி வால்மார்ட் நிறுவனம் வந்தால் உள்நாட்டு வியாபாரிகள் நசிந்து போவார்கள் என்று, எவ்வாறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள் கடன்காரர்களாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று, எவ்வாறு நம்முடைய நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்று நாம் அனைத்தையும் கவனித்துத் தான் கொண்டிருக்கின்றோம். மேலும் நம்முடைய எசமானன் நம்மை எப்பொழுது வேண்டும் என்றாலும் துரத்தி விட்டு விடுவான் என்பதனையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம் (2008 அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியின் பொழுது வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் அறிக்கை, என்று நாம் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்).

மேலும் அவர்கள் இப்பொழுது நம்மைத் துரத்தி விட்டார்களே என்றால், நம்மால் வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்பதனையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம். விவசாயம் கிடையாது...நீர் நிலைகள் கிடையாது...பொருள்களின் விலை மிகவும் அதிகம், ஆரோக்கியம் கிடையாது...என்று ஒரு மிகவும் வருத்தகரமான நிலைக்கே நாம் செல்ல வேண்டி இருக்கும் என்பதனையும் நாம் அறிந்தே தான் இருக்கின்றோம். மேலும் நம்மில் பலரும் கடனாளியாகவும் இருக்கின்றோம். எனவே அப்படி ஒரு இக்கட்டான நிலையில் நாம் சிக்கிக் கொண்டால் அந்நிலையிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம் (சேமிப்புகள், தங்கம், வீடு, உப தொழில்கள்). நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை நாம் அறிந்தே தான் இருக்கின்றோம். ஆனால் அந்த வழிமுறையானது வெறும் சிறிதளவே பயன் தருகின்றது. உதாரணமாக, குடிக்க நீர் இல்லாமல் போயிற்று என்றால் நாம் எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் வர போவதில்லை. மேலும் ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பினை மட்டும் முதன்மையாக உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகத்தினையே அந்த செயலானது கட்டமைக்கின்றது. எனவே இங்கே தான் நாம் மாற்றி சிந்திக்க ஆரம்பிக்க வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக நம்முடைய ஜல்லிக்கட்டு பிரச்சனையையே எடுத்துக் கொள்வோம். பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய காளை மாடுகளை வியாபார நோக்கினில் அழிக்கப் பார்க்கின்றன. அத்துடன், ஆரோக்கியமான உணவினையும் சுய சார்பு வாழ்வு முறையினையும் அவர்கள் அழிக்க முயல்கின்றனர். அவர்களை நேரடியாக நம்மால் எதிர்க்க முடியாது. இந்நிலையில், நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த ஊரினில் ஒன்றிணைந்து மாதம் சிறு தொகையினை ஒதுக்கி நாட்டு மாடுகளை வளர்க்கலாம்/வளர்ப்பதை ஊக்குவிக்கலாம். சிறு விவசாயிகளை அவ்வாறு நாம் ஆதரிப்பதன் வாயிலாக இந்த சமூகத்தில் நாமும் ஒரு அங்கத்தினர் தான் என்று நாம் பொறுப்புடன் ஒன்றிணைகின்றோம். அந்த விவசாயிகளும், அவர்கள் தனியாளாக இந்த உலகத்தில் இல்லை என்பதனை உணர்ந்து, சமூகத்திற்காக அவர்கள் செய்கின்ற பணியினை நாம் அனைவரும் அறிந்து அவர்களுடன் ஒன்றாக இருக்கின்றோம் என்ற தெளிவுடன் தொடர்ந்து தைரியமாக அவர்கள் பணியினை செய்கின்றனர். நமது அந்த செயலால் சமூகமானது ஒரு நல்ல சமூகமாக மாறுகின்றது. ஒருவேளை நம்மையும் அந்த எசமானர்கள் துரத்தி விட்டார்கள் என்றால் நம்மை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிந்தனையும் ஆற்றலும் அந்த சமூகத்திற்கு மிகுதியாகவே இருக்கத் தான் செய்யும்.

ஆனால் கூறுவது போல் அவ்வளவு எளிதான ஒரு காரியம் இது அல்ல என்பதையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம். காரணம், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு இயல்புடன் இன்று இருக்கின்றான். எனவே யாரை நம்புவது/அனைத்தும் ஒழுங்காகத் தான் நடைபெறுகின்றதா என்ற கேள்விகள் இயல்பாகவே எழத் தான் செய்யும். இங்கே தான் ஆன்மீகமானது வர வேண்டி இருக்கின்றது. மனிதர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்றும் ஒற்றுமையாக அவர்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் நிம்மதியாக வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறி மனிதர்களை ஒற்றுமையாக்க இங்கே தான் ஆன்மீகம் பேசும் நல்லோர்கள் வர வேண்டி இருக்கின்றது. மனிதர்களை அன்பினால் ஒன்றிணைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றுமே கிடையாது (ஆனால் அந்த வேலையை அவர்கள் செய்வதே இல்லை என்பது வேறு கதை). நிற்க.

இதுவே தான் இயேசு கூறியஅந்த உவமைக் கதையின் அர்த்தமாகும். 'உலகியல் பொருட்களைக் கொடுத்து நண்பர்களைச் சம்பாதியுங்கள்' என்று அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் இது தான். மனித சமூகத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களுடைய பொருட்களை செலவிடுவதனை கண்டு உண்மையான அன்புடைய மக்கள் உங்களுடன் அன்பினால் ஒன்றிணைவார்கள். அவ்வாறே தான் நீங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது என்பதே இயேசு கூறிய கூற்றாகும்.

அதாவது மனிதர்கள் தாங்கள் கொண்டிருக்கும் உலகியல் செல்வங்களின் மூலமாக இந்த உலகினை நல்லதொரு உலகமாக மாற்ற முயல வேண்டி இருக்கின்றது. அவ்வாறு அவர்கள் முயற்சிக்கும் பொழுது 'பொறாமை,பொருளாசை,பேராசை,பயம்' போன்ற தீய எண்ணங்களால் நல்ல காரியங்கள் நிகழாமல் போய் விடுவதனை தடுத்து அன்பினால் மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது ஆன்மீகவாதிகளின் கடமையாக இருக்கின்றது (அவர்களை அவ்வாறு முயற்சிக்க வைப்பதும் ஆன்மீகவாதிகளின் கடமையாகத் தான் இருக்கின்றது). ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பது தான் வருந்தத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது. சரி இருக்கட்டும்....அதனைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் காணலாம்...!!!

உலக பொருட்களைக் கொண்டு மனிதர்களை தீமையானது பிரித்து வைத்து இருக்கின்றது. எனவே மனிதர்கள் உலக பொருட்களின் மீது உள்ள தங்களது பேராசையினை விட்டுவிட்டு, அந்த பொருட்களை மற்ற மக்கள் அனைவருக்கும் உதவும்படி பயன்படுத்தி ஒற்றுமையான ஒரு சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக இருக்கின்றது என்பது தான் இயேசு கூறிய உவமையின் பொருளாகும்.

பி.கு:

இந்த பதிவுக்கு எதுக்காக டால்ஸ்டாய் தோட்டம் 'TOLSTOY FARM' என்ற ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கின்றேன் என்று சிலர் யோசிக்கலாம். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் வண்ணம் காந்தி அவர்கள் உருவாக்கிய அந்த தோட்டத்திற்கும் நாம் இந்த பதிவில் கண்ட கருத்துக்கும் தொடர்பு இருப்பதால் தான் அந்த படத்தினை பயன்படுத்தி இருக்கின்றேன். டால்ஸ்டாய் தோட்டத்தினைப் பற்றி காந்தி அவர்கள் தன்னுடைய சுய சரிதையில் விலாவரியாக எழுதி இருக்கின்றார். விருப்பமுள்ளோர் அதனைப் படிக்கலாம். இன்றைய சூழலில், தோழர் செந்தமிழன் மணியரசன் அவர்கள் நடத்தும் செம்மை வனமும் கொள்கையில் இந்த முறையினை ஒத்துஇருப்பதனைப் போன்றே இருக்கின்றது.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

இன்றைய சமூகமும் இயேசுவின் உவமைகளும் : உக்கிராணி கதை -1



இயேசு தன்னுடைய சீடர்களிடத்தும் சரி மற்ற மக்களிடத்தும் சரி சில உவமைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவுமே தான் அவர் கூற வந்த கருத்தினைக் கூறிச் சென்று இருக்கின்றார். 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கூறப்பட்டு இருக்கின்ற அந்த உவமைகளையும் கதைகளையும் இன்றைய சமூக சூழலில் பொருத்திப் பார்ப்பதே இந்த பதிவுகளின் நோக்கமாகும். முதலில் இயேசு கூறிய உக்கிராணி கதையினைக் காண்போம்.

உக்கிராணியின் கதை:

ஒருமுறை செல்வந்தன் ஒருவனுக்கு உக்கிராணியாக ஒருவன் பணி செய்து வந்துக் கொண்டிருந்தான். வெகு விரைவில் அந்த எசமானனானவன் தன்னை பணியில் இருந்து துரத்தி விடுவான் என்பதனை அந்த உக்கிராணியானவன் அறிந்துக் கொண்டான். அவ்வாறு தான் துரத்தி விடப்பட்டால் உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாத நிலைக்கு தான் செல்ல வேண்டி இருக்கும் என்பதையும் அவன் அறிந்துக் கொண்டான். எனவே அவன் இருந்த நிலையினைக் குறித்து 'இதைத்தான் நான் செய்ய வேண்டும் : எசமானனின் கடையில் இருந்து பொருட்களை சிறிது சிறிதாக உள்ளூர் மக்களிடம் விநியோகம் செய்வேன். மேலும் அவர்கள் இந்த எசமானனுக்கு பட்டிருக்கும் கடன்களையும் நான் குறைப்பேன். பின்னர் என்னுடைய எசமானன் என்னைத் துரத்தி விட்டாலும் அந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு நான் காட்டிய என்னுடைய அன்பினை நினைவிற்கொண்டு என்னைக் கைவிடாது இருப்பர்' என்றே தனக்குள் எண்ணிக் கொண்டான்.

அவ்வாறே அவன் செய்யவும் செய்தான். அவனுடைய எசமானனுக்கு கடன்பட்டு இருந்த உள்ளூர் மக்களை அழைத்து அவர்களுக்குத் தள்ளுபடி இரசீதினை எழுதித் தந்தான். எவன் ஒருவன் நூறு பொன் கடன்பட்டு இருந்தானோ அவனுக்கு ஐம்பது பொன்னுக்கு இரசீதினை எழுதித் தந்தான். எவன் ஒருவன் அறுபது பொன் கடன்பட்டு இருந்தானோ அவனுக்கு இருபது பொன்னுக்கு இரசீதினை எழுதித் தந்தான். அவ்வாறே அவன் மற்றவர்களுக்கும் செய்தான். அவனது அந்த செயலைக் கண்ட எசமானன் 'என்ன இது. புத்திசாலித்தனமான காரியத்தை இவன் செய்து இருக்கின்றானே. இல்லாவிடில் இவன் இந்த உலகினை தனியே சந்தித்து இருக்க வேண்டி இருந்து இருக்கும். இப்பொழுதோ அவன் எனக்கு நஷ்டத்தை உருவாக்கி இருந்தாலும் அவனைக் கவனித்துக் கொள்ளும் வண்ணம் புத்திசாலித்தனமாக செயலாற்றி உள்ளான்' என்றே எண்ணிக் கொண்டான்.

கதையின் மூலம் இயேசு கூறிய செய்தி:

சராசரியானதாக இருக்கக்கூடிய இந்த நிரந்தரமற்ற மானுட வாழ்வினில் ஒரு கணக்கினை நமக்குச் சாதகமாக மாற்ற அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதனை நாம் அனைவரும் அறிந்து இருக்கின்றோம். அந்த உக்கிராணியானவன் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலகியல் செல்வங்களைப் பயன்படுத்திக் கொண்டானோ அதனைப் போன்றே தான் உலகியல் சிந்தனைகள் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் இருக்கின்றனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். அதற்கான வேலைகளையும் அவர்கள் திட்டமிட்டு செய்து கொள்கின்றனர். ஆனால் இறைவன் கூறியபடி வாழ்வினை வாழ்வது என்று வரும் பொழுது மட்டும், அந்த மக்கள் இறைவன் கூறிய கருத்தினையோ அல்லது அவர் கூறியபடி எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையோ அறிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஆகவே மனிதர்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் சுயநலத்துடன் பிரிந்து இருக்கின்றனர். அதனால் தான் இந்த உலகமானது பல்வேறு இன்னல்களைக் கண்டு கொண்டு இருக்கின்றது. தூய்மையற்றதும் போலியுமான செல்வத்தினைக் குறித்து நாமும் அந்த உக்கிராணியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இறைவன் கூறியபடி வாழ்வதற்கும், பரலோக இராஜ்யமானது இந்த உலகினில் நிலைபெற்று இருக்கும் வண்ணம் செய்வதற்கும் நாம் அந்தச் செல்வத்தினைக் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் மட்டும் பாதுகாத்துக் கொள்வதற்கு என்று வைத்திருக்கும் செல்வத்தினைக் கொண்டு, மக்கள் அனைவரும் நலமாக ஒற்றுமையுடன் வாழ வழி செய்வதற்கே நாம் முயல வேண்டி இருக்கின்றது. அவ்வாறே அனைவரும் செய்தீர்கள் என்றால், இந்த உலகத்தில் 'நான்' 'நீ' என்கின்ற பிரிவினைகளும் பேராசைகளும் ஒழிந்து, அன்புடன் 'நாம்' என்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு காலம் வரும். அப்பொழுது மக்கள் அனைவரும் தாங்கள் இறைவனின் குழந்தைகள் என்பதனையும் இறைவன் அனைத்தையும் அனைவருக்காகவும் பொதுவாகவே படைத்து இருக்கின்றான் என்பதனையும் உணருவர். அக்காலத்தில், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய அந்த காலத்தில் இங்கே பரலோக இராஜ்யமானது வீற்று இருக்கும். 

மேலும் நாம் இறைவன் கூறியதனைப் போல் வாழ்வதற்காக அர்த்தமில்லாத இந்த உலக செல்வத்தினைத் துறக்க யோசிப்போமேயானால் நாம் இறைவனுடன் என்றுமே ஒன்று சேரப்போவதில்லை. நாம் நம்முடைய போலியான வாழ்வினைத் துறக்கவில்லை என்றால் நம்முடைய மெய்யான வாழ்வினை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோம்.

இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே நல்வாழ்வினைத் தரும் என்பதனை அனைவரும் அறிவர், இருந்தும் அவர்கள் செல்வத்தின் மாயத்தோற்றத்தில் மயங்கி இறைவனின் விருப்பத்தின்படி நடக்காமல் இருக்கின்றனர். செல்வமானது போலியானதும் நிரந்தரமற்றதாகவும் இருக்கின்றது. எவரெல்லாம் அத்தகைய செல்வத்தினை தந்தையின் சித்தத்திற்கு உட்பட்ட மெய்யான வாழ்விற்காக விட்டுக் கொடுக்கின்றார்களோ அவர்கள் புத்திசாலியான அந்த உக்கிராணியானவன் செய்ததைப் போலவே செய்கின்றனர். இறைவனுடன் அவர்கள் ஒன்றிணைகின்றனர்.

இதுவே தான் இயேசு அந்த கதையினை அடிப்படையாக வைத்துக் கூறிய விடயமாகும். இப்பொழுது அந்த கதையானது நம்முடைய இன்றைய சமூகத்தில் எவ்வாறு பொருந்தும் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2017

தடுப்பூசிகள் - ஒரு சாமானியனின் பார்வையும் கேள்விகளும்!!!

இன்று இணையத்தளத்தில் பரவலாக ஒரு விவாதத்தைக் காண முடிகின்றது. தடுப்பூசிகளைக் கண்டிப்பாக போட வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அவற்றால் தான் உயிர்கொல்லியான பல தொற்றுநோய்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன என்று அவர்கள் தங்களது தரப்பு வாதத்தையும் வைக்கின்றனர். தடுப்பூசிகள் வேண்டாம் என்பதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு புறமோ தடுப்பூசிகள் தேவையே இல்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஏராளமாக இருக்கின்றன என்றும் சில நேரங்களில் மரணங்களுக்கே அவை வழி வகுக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் தடுப்பூசிகள் என்பது குழந்தைகள் மீது நாம் செலுத்துகின்ற வன்முறையாகும் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

இந்த இரண்டு தரப்பு வாதங்களுக்கு நடுவில் தான் ஒரு சாமானியனாக அவர்கள் இருவரையும் பார்த்தவாறே நான் நின்று கொண்டிருக்கின்றேன். நான் மட்டும் அல்ல, மருத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்ற பல்வேறு மக்களும் என்னைப் போன்றே தான் நின்று கொண்டிருப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன். காரணம், இது குழந்தைகள் சம்பந்தப்பட்டது. யாரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதற்கு தயாராக இருப்பதில்லை தான். ஆனால் இங்கே நம் முன்னே இருக்கும் கேள்வி தான் நம்மை மிகவும் குழப்புகின்றது.

'தடுப்பூசிகள் போடாததால் நாம் குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா அல்லது போடுவதால் அவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா?' நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதே நமக்குள் இருக்கும் மாபெரும் கேள்வியாக இருக்கின்றது. அதுவும் மருத்துவத்தைப் பற்றிய அறிவு மிகவும் சிறிதே இருக்கக்கூடிய நிலையில் அந்த கேள்விக்கு தெளிவான விடையினைக் காண்பது என்பது கடினமான ஒரு செயலாகத் தான் இருக்கின்றது. அந்நிலையில் 'அரசாங்கம் சொல்லுகின்றது...மக்கள் பலரும் போடுகின்றனர்...எனவே நல்லதே நடக்கும் என்றும் நாமும் நம்புவோம்' என்று எண்ணிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக பெருவாரியான மக்களின் முடிவோடு ஒன்றிணைந்து விடத் தான் ஒரு சராசரி மனிதனின் மனமானது விரும்பும்.

நானும் அத்தகைய ஒரு சராசரி மனிதன் தான். இருந்தும், மனம் ஏனோ சற்று நிம்மதியற்றே இருக்கின்றது. நம்மைச் சுற்றி நடக்கின்ற விடயங்களைக் காணும் பொழுது என்னுள் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • மருத்துவம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றுக் கூறுகின்றோம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதன் விளைவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடிய ஒரு சமூகமாக அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இங்கே நாம் பார்த்தோம் என்றால், நிலைமை முற்றிலுமாக மாறியல்லவா இருக்கின்றது. மருத்துவமனைகளும் நோயாளிகளும் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிய வண்ணம் அல்லவா நமது சமூகத்தில் இருக்கின்றனர். தரமான உணவினை அதிகமாக உற்பத்தி செய்து அனைவருக்கும் வழங்குகின்றோம் ஆனால் பசியுடன் வாடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமாக கூடிக் கொண்டே இருக்கின்றனர் என்பது எப்படிப்பட்ட ஒரு முரணான வாக்கியமோ, அதனைப் போன்றே தானே மருத்துவம் முன்னேறி இருக்கின்றது ஆனால் அதன் கூடவே நோய்களும் நோயாளிகளும் கூடி இருக்கின்றனர் என்பதும் முரணாக இருக்கின்றது. இந்த முரண் எதனால் வந்திருக்கின்றது.
  • மருத்துவம் அந்தளவு முன்னேறி இருக்காத காலகட்டம் என்று உங்களால் கூறப்படுகின்ற காலத்தில் பிறந்து வளர்ந்த மனிதர்கள், வயதான போதிலும் கூட இன்றளவும் ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நவீன மருத்துவமானது கோலோச்சிக் கொண்டிருக்கும் காலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் அந்த மனிதர்களை விட ஆரோக்கியம் குன்றியவர்களாகவே இருக்கின்றார்கள். இதனை நாம் நடைமுறை வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டிருக்கின்றோம். 'முன்னாடி எல்லாம் வயசானவங்க கூட்டம் தான் மருத்துவமனைல அதிகமாக இருக்கும்..ஆனா இப்போ எல்லாம் அவங்கள விட அதிகமா சின்ன கொழந்தைங்க தான் வருதுங்க' என்ற கூற்று அரசு மருத்துவமனையின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய காதில் விழுந்தது. அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை ஒவ்வொருவருமே அறிவோம். எதனால் இந்த நிலை?
  • நான் சிறுவனாக இருந்த பொழுது எப்பொழுதாவது காய்ச்சல் வரும். மருத்துவரிடம் போனால், மூன்று நாட்களுக்கு மருந்து தருவார். அதுவும் பெரும்பாலும் அரை மாத்திரை அளவே தான் இருக்கும். 'மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு' என்ற ஒரு கூற்று என்னுடைய நினைவிற்கு இப்பொழுது வருகின்றது. ஆனால் இப்பொழுதோ, குறைந்தது பத்து நாட்களுக்காவது மாத்திரைகள் தரப்படுகின்றன. இதுவும் புரியவில்லை...மருத்துவம் முன்னேறி இருக்கின்றது என்றால் மருந்துகளின் வீரியம் கூடி இருக்க வேண்டுமல்லவா...அல்லது அதே அளவு வீரியமாகவாவது இருக்க வேண்டுமல்லவா? அதனை விடுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டு செல்வது ஏன்?
இன்னும் கேள்விகள் அநேகம் கேட்கலாம் தான்...ஆனால் அவை எதுவும் புதியதாய் இருக்காது. ஏனென்றால் நமது சமூகத்தில் நாம் அன்றாடம் காணுகின்ற நிகழ்வுகளாகவே தான் அவை நமக்கு பரிச்சியமாக இருக்கும். நம்மில் ஒவ்வொருக்குள்ளேயும் அந்த கேள்வியானது இருக்கும்.

எனக்குத் தடுப்பூசிகளைப் பற்றி அதிகம் தெரியாது. அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதன் பக்கவிளைவுகள்/பயன் என்ன என்பதைப் பற்றி ஒரு சாமானிய மனிதன் எந்தளவு அறிந்து இருப்பானோ, அந்தளவே தான் நானும் அறிந்திருக்கின்றேன். அனுபவ அறிவே தான் இங்கே பேசுகின்றது தவிர அறிவியல் அறிவல்ல.

எனக்குத் தடுப்பூசி போட்டார்கள்...எனக்கு சின்னம்மை வரவில்லை. எனது தம்பிக்கும் அதே தடுப்பூசி போட்டார்கள். அவனுக்கு சின்னம்மை வந்தது. சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட என்னுடைய சித்தி மகளுக்கும் சின்னம்மை வந்திருக்கின்றது.

போலியோ சொட்டு மருந்தினால் போலியோ நோயை ஒழித்தோம் என்கின்றீர்கள். நம்புகின்றேன். ஆனால் அதே நேரம், போலியோ சொட்டு மருந்தினை பெற்றிராத என்னுடைய நண்பனின் குழந்தைகளும் போலியோவின் தாக்குதலின்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் நலமாகவே தான் அதே சமூகத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை நாம் எப்படி புரிந்து கொள்வது...தடுப்பூசி போட்டும் சிலர் நோய்களுக்கு ஆளாகின்றனர்...தடுப்பூசி போடாமலும் சிலர் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசியின் உண்மையான பயனை ஒரு சாதாரணமான மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது?

உணவும் மருத்துவமும் செல்வம் கொழிக்கும் வியாபாரமாக மாறிவிட்டிருக்கும் இந்த காலத்தில் சிறிது சந்தேகங்கள் எழுவதனைத் தவிர்க்க முடியவில்லையே. உதாரணமாக உணவினையே எடுத்துக் கொள்ளுங்கள்,

உணவு உற்பத்தியை அதிகரிக்கின்றோம் என்றுக் கூறி இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைக் கணக்கில்லாமல் கொட்டி நஞ்சு கலந்த உணவினை இன்றைக்கு நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.உணவு இருக்கின்றது...ஆனால் உணவில் சத்து இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. மாறாக நம்முடைய ஆற்றலைக் குறைக்கின்ற நஞ்சே தான் இருக்கின்றது. பசி நோய் வருவதில்லை தான். ஆனால் ஆற்றல் இல்லாத உடலில் பல்வேறு விதமான வேறு நோய்கள் வரத் தான் செய்கின்றன. இந்த முறையைத் தான் நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் அவர்களின் கூற்றினை 'இவர்கள் கூறுவது போல விவசாயம் செய்தால் உணவினை போதுமான அளவு தயாரிக்க முடியாது' என்ற ஒன்றினைக் கூறியே மழுங்கடித்து விட்டார்கள். 'இல்லை இயற்கை முறையில் அதிகளவு உணவினை உற்பத்தி செய்ய முடியும்' என்று அவர்கள் நிரூபித்தாலும் கூட அதனை ஏற்பதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை. காரணம் அதில் பெரிய நிறுவனங்களுக்கு பணம் ஏதும் கிட்டப்போவதில்லை.

தமிழக விவசாய கல்லூரிகளில் நான் அறிந்தவரை நம்மாழ்வாரின் சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பாடத் திட்டத்தில் கிடையாது. அங்கிருக்கும் ஆசிரியர்களும் இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியைப் பற்றி மட்டுமே தான் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். அந்த மாணவர்களும் தாங்கள் எதனைக் கற்று கொண்டிருக்கின்றார்களோ அந்த அறிவுடனேயே தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் நம்மாழ்வாரின் கருத்தினை நாம் அவர்களின் முன்னே வைத்தால், அவர்களின் போக்கானது 'அவர்களா அல்லது நம்மாழ்வாரா' 'நம்முடைய அறிவு பெரியதா அல்லது அவர்களுடைய அறிவு பெரியதா' என்ற ஒரு போட்டி மனப்பான்மையினுள்ளேயே போய் சிக்கிக் கொண்டு விடுகின்றது. அவனுக்கு ஆதரவாக பணம் கொழிக்கும் இரசாயன உர நிறுவனங்களும் சரி பூச்சிக் கொல்லி நிறுவனங்களும் சரி அடுக்கடுக்காக ஆராய்ச்சி கட்டுரைகள் என்பனவற்றை தந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோமே என்றால், அவர்கள் எந்தளவு ஆராய்ச்சி கட்டுரைகள் தந்தாலும் கூட, கடனில் வாடும் விவசாயி, பெரும் பணத்தினை கொட்டிக் குவிக்கின்ற பெரு நிறுவனங்கள்  மற்றும் இறுதியாக ஆரோக்கியமில்லாத சிறிது சிறிதாக நஞ்சு கலக்கப்பட்ட உணவு...இவை மட்டுமே தான் நம்முடைய சமூகத்தில் எஞ்சி இருக்கின்றன.

எனவே தான் நவீன மருத்துவம் வழங்குகின்ற தடுப்பூசிகளைப் பற்றியும் நான் சிறிது அஞ்ச வேண்டி இருக்கின்றது. அந்த பூச்சிக்கொல்லிகளைப் போன்றே தான் தடுப்பூசியும் இருக்குமோ என்ற சிந்தனையை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஆம்...பூச்சிக்கொல்லி நிச்சயமாக ஒரு வெற்றிகரமான அறிவியல் கண்டுபிடிப்பு தான். ஆனால் அது அந்த பூச்சி எதனால் வருகின்றது என்பதனை கண்டறிந்துக் கூறுவதில்லை. அதன் பணி அந்த பூச்சியினைக் கொல்வது மட்டும் தான். அதனை அது செம்மையாகச் செய்கின்றது. ஆனால், அது அந்த மரத்திற்கும் சிறிது கேடு விளைவிக்கின்றதே...அந்த செடியானது தன்னுடைய முழுமையான ஆற்றலுடன் உணவினை தயார் செய்வதில்லையே. உணவின் ஆற்றல் குறைகின்றதே.

ஒருவேளை தடுப்பூசியும் அதனைப் போன்றே தான் இருக்குமா? சில நோய்களை அழித்து விட்டு வேறேதாவது பாதிப்பினை உண்டாக்குமா? என்பன போன்ற கேள்விகளை 'மருத்துவமனைகளும், நோய்களும், நோயாளிகளும், பெரு நிறுவனங்களின் ஆதிக்கமும் கூடிக் கொண்டே இருக்கின்ற நம்முடைய சமூகத்தினைக் காணும் பொழுது' கேட்காமல் இருக்க முடியவில்லை. இருந்தும் சாமானியர்களான நாங்கள் தடுப்பூசியினைப் பயத்தினால் போடத் தான் செய்வோம்.

ஆம்...அறிவினாலோ அல்லது தெளிவான நம்பிக்கையினாலோ அல்ல (அதனை நீங்கள் எங்களுக்குத் தந்திருக்கவில்லை), மாறாக எங்களது குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்கின்ற பயத்தினால் தான் நாங்கள் அவ்வாறு செய்வோம்.

ஆம்...உங்களுடைய மருத்துவமானது பெரும்பாலும் சாமானியர்களின் மனதினில் பயத்தினைத் தான் விதைத்து இருக்கின்றது.

பி.கு:

எனது மனதில் இருப்பதை இங்கே கூறி இருக்கின்றேன். மாற்றுக் கருத்துகள் இருப்பின், தயைக் கூர்ந்து தெரிவிக்கவும்.


தொடர்புடைய இடுகைகள்: 

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!
வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!
சிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
உணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
 

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...