சுவிசேஷங்களின் உண்மையான அர்த்தத்தினைப் பற்றி டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய சுவிசேஷங்களின் சுருக்கம் 'Gospel in Brief' என்ற நூலினைப் பற்றி நாம் இந்த பதிவில் (சுவிசேஷங்களின் சுருக்கம்) கண்டு இருக்கின்றோம். இப்பொழுது அந்த நூலிற்கு டால்ஸ்டாய் அவர்கள் எழுதியிருக்கின்ற முன்னுரையினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

டால்ஸ்டாயின் முன்னுரை:

சுவிசேஷங்களைப் பற்றிய எனது பெரிய படைப்புகள் இன்னும் அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன. அவற்றை வெளியிட முடியாதொரு சூழல் ரஷ்யாவினில் நிலவுகின்றது. சுவிசேஷத்தினைப் பற்றிய இந்தச் சிறு குறிப்பானது அப்பெரிய படைப்புகளின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. என்னுடைய அந்த பெரிய படைப்பானது நான்குப் பகுதிகளைக் கொண்டுள்ளது.


  • என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையினைக் குறித்தும், கிருத்துவின் போதனைகள் உண்மையினைக் கொண்டு இருக்கின்றன என்ற முடிவுக்கு நான் வருவதற்கு காரணமாக இருந்த எனது சிந்தனைகளைக் குறித்தும் எழுதப்பட்ட ஒரு பகுதி (My Confession)
  • கிருத்துவ போதனைகளைக் குறித்த ஆய்வினைக் கொண்ட ஒரு பகுதி; அதனில் முதலில் கிருத்துவ போதனைகளுக்கு ருசிய-கிரேக்கத் திருச்சபை அளிக்கும் விளக்கத்தினைக் குறித்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. பின்னர் அதே போதனைகளுக்கு பொதுவாக மற்றத் திருச்சபைகள் அளிக்கும் விளக்கத்தினைக் குறித்த ஆய்வும் (அவை அபோஸ்தளர்கள் தந்த விளக்கங்களாக இருக்கட்டும், திருச்சபைக் குழுக்கள் தந்த விளக்கங்களாக இருக்கட்டும், திருச்சபையின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுவோர் தந்த விளக்கங்களாக இருக்கட்டும்) அதே பகுதியில் கையாளப்பட்டு இருக்கின்றது. மேலும் அத்திருச்சபைகள் தரும் விளக்கங்களில் தவறானவை எவை என்று வெளிப்படுத்தும் ஆய்வும் இந்தப் பகுதியில் இருக்கின்றது. (What i Believe)
  • மேற்கண்ட அந்தத் திருச்சபைகளின் விளக்கங்களின் வாயிலாக அல்லாது சுவிசேஷங்களில் இருந்து நேரடியாக 'இயேசுவால் சொல்லப்பட்டது' என்று நமக்கு வந்து சேர்ந்திருக்கும் பகுதிகளை மட்டுமே கொண்டு கிருத்துவ போதனைகளை ஆராய்வது. இது மூன்றாவது பகுதி. (Gospel in Brief)
  • கிருத்துவின் போதனைகளின் உண்மையான அர்த்தத்தினைக் குறித்த விளக்கமும், ஏன் அந்த உண்மையான கருத்துக்கள் திரிக்கப்பட்டு இருக்கின்றன என்பதனைப் பற்றிய விளக்கமும், கிருத்துவின் போதனைகள் உண்மையில் எந்த விளைவினை உருவாக்கும்  என்பதனைப் பற்றிய விளக்கமும் இறுதிப் பகுதியில் கையாளப்பட்டு இருக்கின்றது. (Kingdom of god is within you)

மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் மூன்றாவதான பகுதியையே நாம் இந்த சிறு குறிப்பின் மூலம் காணப் போகின்றோம்.

நான்கு சுவிசேஷங்களில் கூறப்பட்டுள்ள போதனைகளை, அவற்றின் அர்த்தங்களின்படி வரையரை செய்து அவற்றை ஒன்றிணைக்க நான் மேற்கொண்ட ஒரு முயற்சியின் பலனே இந்த சுவிசேஷ சிறு வரைவாகும். இத்தகைய ஒரு பணியினில், சுவிசேஷங்களானவை  ஏற்கனவே அமைந்திருந்த வரிசைமுறையில் இருந்து விலகிச் செல்வது என்பது பெரும்பாலும் எனக்குத் தேவைப்படாமலே போயிற்று. நான் அறிந்து இருக்கும் பல நூல்களில் சுவிசேஷ வசனங்கள் தேவைக்கேற்றார்ப் போல் வரிசைகள் மாற்றப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த நூலினில் நீங்கள் அத்தகைய வரிசை மாற்றங்களை பெரிதும் எதிர்பார்க்க முடியாது.

சுவிசேஷ நூல்களின் கருத்துக்களை ஒன்றிணைக்க நான் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியினில் யோவானது சுவிசேஷத்தில் வரும் கருத்துக்களையும் சேர்த்து உள்ளேன். அக்கருத்துக்களானவை யோவானது மெய்யான சுவிசேஷத்தில் எந்த வரிசையில் வருகின்றனவோ அதே வரிசையினில் தான் என்னுடைய இந்த நூலிலும் அமைந்து இருக்கின்றன.
என்னுடைய இந்த முயற்சியினில் சுவிசேஷங்களை பன்னிரெண்டு அத்தியாயங்களாக (அல்லது ஆறு அத்தியாயங்களாக*) பிரித்து இருக்கின்றேன். அப்பிரிவுகளானவை அச்சுவிசேஷங்கள் கூறும் போதனைகளின் அர்த்தங்களின் அடிப்படையிலேயே இயல்பாக அமைந்து இருக்கின்றன.

அந்த அத்தியாயங்கள் பின்வரும் அர்த்தங்களின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டு இருக்கின்றன:
  • மனிதன் என்பவன் ஆதியும் அந்தமுமற்ற ஒரு மூலத்தின் மைந்தன் ஆவான். மாமிசத்தின்படி அல்லாது ஆவியின்படியே அவன் அத்தந்தைக்கு மைந்தனாவான்.
  • ஆதலால் மனிதன் ஆவியின்படியே அத்தந்தைக்கு சேவையினைச் செய்ய வேண்டும்.
  • அனைத்து மக்களின் வாழ்வும் ஒரு தெய்வீக மூலத்தினைப் பெற்று இருக்கின்றது. அந்த தெய்வீகமான ஒன்று மட்டுமே புனிதமானது.
  • ஆதலால் மனிதன் அனைத்து மக்களின் வாழ்விலும் இருக்கும் அந்த தெய்வீக மூலத்திற்குச் சேவை செய்ய வேண்டும். அதுவே தந்தையின் விருப்பமாகும்.
  • தந்தையின் விருப்பத்திற்காக சேவை செய்வது தான் அர்த்தமுள்ள வாழ்வினை வெளிப்படுத்தும். அர்த்தமுள்ள வாழ்வே உண்மையானதாக இருக்கின்றது.
  • ஆதலால் ஒருவன் தனது சொந்த விருப்பத்தினில் நிம்மதி கொண்டிருப்பது என்பது மெய்யான வாழ்விற்கு ஒரு தேவையல்ல.
  • நிரந்தரமற்ற மானுட வாழ்வே மெய்யான வாழ்விற்கான உணவு ஆகும், அர்த்தமுள்ள வாழ்விற்கான ஒரு கருவி அது.
  • ஆகையால் மெய்யான வாழ்வு என்பது காலத்திற்கு அப்பாற்பட்டது, நிகழ்காலத்தில் மட்டுமே அது எப்பொழுதும் இருக்கின்றது.
  • கடந்த காலத்தின் வாழ்க்கையோ அல்லது எதிர்காலமோ மக்களிடம் இருந்து அவர்களது மெய்யான வாழ்க்கையினை நிகழ்காலத்தில் மறைத்து விடுகின்றது.
  • ஆகையால் மனிதன் தன்னுடைய மெய்யான வாழ்வினை மறைக்கும், தனது கடந்த கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றிடம் இருந்து விலக இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும்.
  • மெய்யான வாழ்வு என்பது காலத்திற்கு மட்டும் அப்பாற்பட்டது அல்ல, ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்விற்கும் அப்பாற்பட்டது தான். மெய்யான வாழ்வு என்பது அனைத்து மக்களுக்கும் உரிய ஒன்று. அது தன்னை அன்பின் வாயிலாகவே வெளிப்படுத்துகின்றது. 

  • ஆகையால், எவன் ஒருவன் நிகழ்காலத்தில் அனைத்து மக்களுக்கும் பொதுவான வாழ்வினை வாழ்கின்றானோ அவன், வாழ்வின் மூலமாகவும் அடிப்படையாகவும் இருக்கின்ற தந்தையுடன் இணைகின்றான்.

ஒவ்வொரு இரண்டு அத்தியாயமும் காரணம்-விளைவு என்ற உறவுமுறையின்படி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப் பன்னிரு அத்தியாயங்களுடன் யோவானின் சுவிசேஷத்தில் இருந்து முதல் அத்தியாயத்தை முன்னுரையாக சேர்த்து உள்ளேன். அந்த அத்தியாயத்தினில் இயேசுவினுடைய போதனைகளின் முழுமையான அர்த்தத்தினைப் பற்றியே யோவான் பேசி இருக்கின்றார். மேலும் யோவான் எழுதிய நிருபத்தில் (யோவான் அவரது சுவிசேஷத்தை எழுதுவதற்கு முன்னர் இதனை எழுதி இருக்க வேண்டும்) இருந்தே முடிவுரையையும் எடுத்து உள்ளேன். அந்த நிருபத்தில் நாம் அதுவரை கண்ட அனைத்து விடயங்களைப் பற்றியும் பொதுவாகக் கூறப்பட்டு இருப்பதனால் அதனை இந்த சிறுகுறிப்புடன் இணைத்து இருக்கின்றேன்.

யோவானின் சுவிசேஷத்தில் இருந்தும் நிருபத்தில் இருந்தும் நான் இந்த நூலினில் இணைத்திருக்கும் அறிமுகப்பகுதியும் முடிவுரைப்பகுதியும் இயேசுவின் போதனைகளில் முக்கியமான பகுதிகளைக் குறிப்பவை அல்ல. அவை இயேசுவின் போதனைகளைக் குறித்து பொதுவான கருத்துகளைத் தருவன ஆகும். இயேசுவின் போதனைகளை அவற்றின் அர்த்தத்தின்படியே தர முயலும் இம்முயற்சியில் யோவான் எழுதிய இப்பகுதிகளைத் தவிர்த்து இருக்க முடிந்திருந்தாலும் (அவை இயேசுவிடம் இருந்து வாராமல் யோவானால் எழுதப்பட்ட காரணத்தினால்) அவற்றின் எளிமையின் காரணமாகவும், இயேசுவின் போதனைகளை முழுப்புரிதலோடு கூறுவதாலும் அவற்றை நீக்காது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டேன். மேலும் இந்தப் பகுதிகள் திருச்சபையின் முரண்பாடான புரிதல்களைப் போல் அல்லாது, ஒவ்வொன்றும் மற்றொன்றை நிருபித்துக் கொண்டும் இயேசுவின் போதனைகளை மெய்பித்துக் கொண்டும் இருப்பதாலும் இவற்றை தவிர்க்காது தக்க வைத்து இருக்கின்றேன்.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு