மேற்படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேற்படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மே, 2011

மேலை நாட்டில் மேற்படிப்பு - 4

மதிப்பெண்கள் இருக்கின்றது. தேவையானத் தேர்வுகளையும் எழுதியாயிற்று. இனி அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களிடம் இருந்து ஒரு சில கோப்புகளை (documents) எதிர்ப்பார்கின்றன. மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த கோப்புகளையும் சேர்த்தே அனுப்ப வேண்டும். அந்தக் கோப்புகள் என்ன என்னவென்று இனி நாம் விரிவாகப் பார்ப்போம்.

படிப்பிற்கான லட்சியக் கோப்பு : (Statement Of Purpose)

இந்தக் கோப்பினை சுருக்கமாக SOP என்றுக் கூறுவர். இந்தக் கோப்பினைப் பற்றி நாம் பார்க்கும் முன் ஒரு கேள்வி.

நீங்கள் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போகின்றீர்கள். அப்பொழுது அங்கே உங்களிடம் 'நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?' ' உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்' என்று கேள்விகள் கேட்டார்கள் என்றால் நீங்கள் நீண்ட விளக்கத்தினைக் கொடுப்பீர்கள் அல்லவா.

அந்த விளக்கத்தினை எழுத்து வடிவினில் எழுதுவதே இந்த படிப்பிற்கான லட்சியக் கோப்பு ஆகும். 

பொதுவாக பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவரைத் தேர்ந்து எடுக்கும் முன், அந்த மாணவரின் இலட்சியங்களைப் பற்றியும் கனவுகளைப் பற்றியும் அறிந்துக் கொள்ள ஓரளவு முயற்சி செய்யும். அதற்காகத் தான் இந்த கோப்பினை அவர்கள் மாணவர்களிடம் இருந்து எதிர்ப்பார்கின்றார்கள்.

இந்தக் கோப்பினில் மாணவர்கள் அவர்களின் முந்தையப் படிப்பினைப் பற்றியும் (இளநிலை பட்டத்திற்கு விண்ணப்பிக்கின்றார்கள் என்றால் பள்ளிப் படிப்பினைப் பற்றியும், முதுநிலைக்கு என்றால் கல்லூரி படிப்பினைப் பற்றியும்), ஏன் குறிப்பாக அந்த நாட்டினில், அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருப் படிப்பினை படிக்க விரும்புகின்றார் என்பதனைப் பற்றியும், எதற்காக விண்ணப்பிக்கும் அந்தப் படிப்பினை படிக்க விரும்புகின்றார் என்பதனைப் பற்றியும் விளக்கமாக கூற வேண்டும். கூடவே அந்த மாணவர் பெற்று இருக்கும் இதர தகுதிகள் அதுவும் குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த பாடத்திற்கு ஏற்றார்ப் போல் இருக்கும் தகுதிகளைக் குறிப்பிட வேண்டும். அவரது கனவினை அடைய எப்படி அந்தக் கல்லூரியின் பாடத் திட்டம் அவருக்கு உதவும் என்று அவர் கருதுகின்றார் என்பதனைப் பற்றியும் அவர் இந்தக் கோப்பினில் குறிப்பிட வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் சில வருடங்கள் வேலைப் பார்த்து விட்டு முது நிலைப் பட்டத்திற்கு விண்ணபித்தீர்கள் என்றால் உங்களுடைய பணி அனுபவங்களைப் பற்றியும் குறிப்பிடுவது நல்லது. 

மேலும் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் உங்களுக்கு பண உதவி வேண்டி இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதையும் நீங்கள் இந்த கோப்பிலேயே குறிப்பிடலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மாணவர்களின் இலட்சியத்தினையும் செயல் திட்டத்தையும் அவர்களின் தகுதியோடு விவரிப்பதே படிப்பிற்கான லட்சியக் கோப்பு (SOP) ஆகும். 

இந்தக் கோப்பினை அனைத்து பல்கலைக்கழகங்களும் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கும். ஒரு வேளை இந்த கோப்பு அந்த பல்கலைக்கழகங்களை ஈர்த்து விட்டது என்றால், படிக்க வாய்ப்புடன் சேர்த்து மாணவருக்கு படிக்க உதவித் தொகையும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

சிபாரிசுக் கடிதங்கள்: (Reference Letters)

அந்தப் பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பார்க்கும் மற்றொரு முக்கியமான கோப்பு என்னவென்றால் சிபாரிசுக் கடிதங்கள்.

உங்களின் திறமைகளையும், நீங்கள் ஏன் அந்தப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு தகுதியானவர் என்று தாங்கள் கருதும் கருத்துகளையும் உங்கள் ஆசிரியர்களோ அல்லது பணியிடத்தில் உள்ள உயரதிகாரிகளோ அந்தப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கும் வண்ணம் எழுதும் கடிதமே சிபாரிசுக் கடிதங்கள் ஆகும்.
எல்லாப் பல்கலைக்கழகங்களும் இதைப் போன்ற இரண்டு சிபாரிசுக் கடிதங்களை எதிர்ப்பார்கின்றன. 

அந்த கடிதங்களை நீங்கள் உங்களுக்கு பாடம் எடுத்த எந்த ஆசிரியரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்... ஆனால் நீங்கள் எந்தப் பாடத்தில் சேர்வதாக இருக்கின்றீர்களோ அந்தப் பாடம் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் நீங்கள் இந்தக் கடிதத்தினைப் பெற்றுக் கொள்வது என்பது சற்று சிறப்பாக அமையும். அதேப போல் நீங்கள் பணி புரிந்து இருந்தீர்கள் என்றால், உங்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்தும் நீங்கள் உங்களின் திறமையினைப் பற்றிய கடிதத்தினைப் பெற்று கொள்ளலாம்.

அந்த கடிதம், எழுதும் ஆசிரியரின் கையொப்பத்துடன், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் (பள்ளியோ கல்லூரியோ அல்லது அலுவலகமோ) முத்திரையினையும் பெற்று இருக்க வேண்டும்.

சில சமயங்களில், இந்தக் கடிதங்களை வாங்குவதற்குப் பதிலாக, உங்களைப் பற்றி அந்த ஆசிரியர்களும் மேலாளர்களும் கொண்டுள்ள கருத்தினை அறிவதற்கு  சில இணையதள பக்கங்களை குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துவது உண்டு. அந்த நிலையில், உங்கள் ஆசிரியர்கள் அந்த இணையப் பக்கத்திற்குச் சென்று அந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். 

ஆனால், அநேக ஆசிரியர்கள் இந்தக் கடிதம் எழுதும் பொறுப்பினை ஏற்றுக் கொள்வது இல்லை. எனவே நாமே தான் கடிதத்தினை அவர்கள் எழுதியவாறு எழுதி அவர்களிடம் கையொப்பம் மட்டும் வாங்க வேண்டி இருக்கும். அப்படியே அந்த நிறுவனத்தின் முத்திரையையும் பெற்று விட்டால் சிபாரிசுக் கடிதம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஆயுத்தமாகி விடும்.

சான்றிதழ்கள் :(Transcripts)

சரி... சிபாரிசுக் கடிதங்களும் வாங்கியாயிற்று படிப்பிற்கான லட்சியக் கோப்பினையும் தயார் செய்தாயிற்று. அடுத்து நாம் செய்ய வேண்டியக் காரியம் நமது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) மற்றும் நமது இளநிலையர் சான்றிதழ் (Degree Certificate) ஆகிய இரண்டின் நகலையும் நாம் படித்த பல்கலைக்கழகத்தில் இருந்துப் பெற வேண்டும். பெற்ற பின் இந்த சான்றிதழ்களையும் மேலே குறிப்பிட்டு உள்ள அந்த இரண்டுக் கோப்புகளையும் உங்களது விண்ணப்பத்தோடு சேர்த்து அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் இறுதி ஆண்டு மாணவராக இருந்தால் உங்களது மதிப்பெண்கள் பட்டியல் மட்டும் போதும். அதேப் போல் நீங்கள் பணி அனுபவம் உள்ளவராக இருந்தால் உங்கள் அனுபவத்திற்கான சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டும்.

உங்களது மதிப்பெண் பட்டியலின் நகலையும், நீங்கள் பெற்றப் பட்டத்தின் நகலையும் நீங்கள் படித்த பல்கலைக்கழகத்தில் இருந்து வாங்க சில வழிமுறைகள் உள்ளன. அதைப் பற்றி உங்கள் பல்கலைகழகத்தின் இணையதளத்திலேயே செய்தியினை வெளி இட்டு இருப்பார்கள். உதாரணத்திற்கு, இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்கள் உங்கள் சான்றிதழ்களின் நகலினை வாங்க வேண்டும் என்றால் நகல் ஒன்றிற்கு 500 உருபாய் கட்டணம் செலுத்தி ஒருப் படிவத்தினை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தீர்கள் என்றால் இரண்டு வாரங்களில் உங்களது நகல் தயாராகி விடும். அந்த நகலை நீங்கள் மற்ற கோப்புகளோடு இணைத்து வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் : (Application)

பொதுவாக ஒருப் பல்கலைக்கழகத்திற்கு உரிய விண்ணப்பங்கள் அதன் இணையத்தளங்களிலேயே கிடைக்கப் பெரும். நாம் அந்த விண்ணப்பங்களை நிரப்பி அனுப்புவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

௧) அந்த விண்ணப்பத்தை தரவிறக்கிக் கொண்டு அதனை நிரப்பிய பின்பு மற்ற கோப்புகளோடு இணைத்து அந்த விண்ணப்பத்தையும் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது.
௨) இணையதளத்திலேயே அந்த விண்ணப்பத்தினை நிரப்பி விட்டு, அந்த விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணை மற்றும் ஏனைய கோப்புகளில் குறித்து விட்டு அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது. 

இந்த இரண்டு முறைகளினில் நாம் எதனை வேண்டும் என்றாலும் பின்பற்றலாம். ஆனால் சிலப் பல்கலைக்கழகங்களில் இரண்டு விண்ணப்பிக்கும் முறைகள் இருப்பதில்லை என்பதினையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே விண்ணப்பிக்கும் முன்னர் அந்தப்  பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையினை உறுதி செய்து விட்டே நாம் விண்ணப்பிக்கத்தினை நிரப்ப ஆரம்பிக்க வேண்டும்.
அனைத்து கோப்புகளையும், உரிய சான்றிதழ்களையும் அந்த விண்ணப்பத்தோடு இணைத்தோ அல்லது அந்த விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணினோடு சேர்த்தோ அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பிய நமது விண்ணப்பத்தின் நிலையினை நாம் நமது குறியீட்டு எண்ணின் மூலம் அந்தப் பல்கலைக்கழக இணையதளத்திலேயே அறிந்துக் கொள்ளலாம். அந்தப் பல்கலைக்கழகம் நமது விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்டது என்றாலும் சரி அதனை ஏற்றுக் கொண்டது என்றாலும் சரி அல்லது அதனை நிராகரித்து விட்டது என்றாலும் சரி அந்த நிலவரத்தை நாம் நமது விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணின் மூலமே இணையதளத்தினில் அறிந்துக் கொள்ளலாம். மேலும் அந்த நிலவரத்தைப் பற்றி நமக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து மின் அஞ்சலும் அனுப்புவார்கள் என்பதினால் நம்முடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்துக் கொள்ள நாம் கடினப்படத் தேவை இல்லை.

வெளிநாடுகளுக்கு விண்ணப்பிப்பதனைப் பற்றி நாம் தெளிவாக பார்த்து விட்டோம். இனி அடுத்த பதிவில் எவ்வாறு அங்கு கல்விக் கற்க உதவித் தொகையினைப் பெறுவது என்பதினைப் பற்றிப் பார்ப்போம்.

தொடரும்....

புதன், 27 ஏப்ரல், 2011

மேலை நாட்டில் மேற்படிப்பு - 3

வெளிநாடுகளில் மேற்ப்படிப்பினை மேற்கொள்ள அந்த நாடுகளின் மொழியினை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்றும் நம்முடைய ஆங்கிலத் திறமையை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்துக் கொள்ள நாம் எழுத வேண்டிய தேர்வுகளைப் பற்றியும் சென்றப் பதிவில் பார்த்தோம்.

சரி... மொழித் தேவையை நிறைவு செய்தாயிற்று. அடுத்ததாக அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கின்றன என்பதினை அறிந்துக் கொள்ள ஒருக் கேள்வி.

நம்முடைய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கு என்ன தகுதியினை எதிர்ப்பார்க்கின்றன?

மதிப்பெண்கள்...!!!
மேற்ப்படிப்புக்களுக்கு என தனியாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) ,பொதுத் திறமைத் தேர்வு (CAT) மற்றும் மேலாண்மைத் திறமைத் தேர்வு (MAT) போன்ற சில நுழைவுத் தேர்வுகளில் போதுமான மதிப்பெண்கள்...

அவ்வளவுத் தானே...!!! நம்முடைய பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த விசயத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் மாறுபடுவதில்லை.

உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் மிகவும் கூர்மையாக கவனிக்கின்றன. மதிப்பெண்கள் அதிகமாக இல்லாவிடினும் பரவாயில்லை அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்து வைத்து இருக்கும் குறைந்தப்பட்ச மதிப்பெண் சதவீத அளவிற்கு உங்கள் மதிப்பெண்கள் இருந்தால் போதும். உங்களது விண்ணப்பங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அநேக பல்கலைக்கழகங்களில் அந்த குறைந்தப்பட்ச மதிப்பெண் அளவானது 65% முதல் 70% வரை இருக்கும் (இது ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்ப மாறுப்படும்).

ஆனால் நீங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது பாடத்தில் தோற்று இருந்தாலோ அல்லது பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலோ (Arrears) உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதுவும் குறிப்பாக 3 பாடங்களுக்கு மேல் தோற்று இருந்தால் அநேக பல்கலைக்கழகங்களில் உங்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், நம்முடைய மதிப்பெண்கள் அவர்கள் நம்முடைய விண்ணப்பத்தை தேர்வு செய்வதற்கு மட்டுமே உதவும். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே நமக்கு இடம் கிடைத்துவிட்டது என்றுப் பொருள் கிடையாது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம்முடைய மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றார்களோ அதே அளவு நம்முடைய இதர செயல்களுக்கும், அதாவது விளையாட்டுச் சாதனைகள்... அறிவியல் சார்ந்த கருத்தரங்குகளில் பங்குப் பெற்றுக் கொள்வது... தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தும் செயல்கள் போன்றவற்றிற்கும் தருவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு உரிய செயல்களில் நாம் நாமாகவே ஈடுபாடு காட்டி இருக்கின்றோமா என்றும் அவர்கள் பார்ப்பார்கள். அதன் அடிப்படையிலேயும் நமது விண்ணப்பத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

உதாரணத்திற்கு, ஒருப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் மாணவர் படிப்பில் கெட்டி. 80% மதிப்பெண் வைத்து இருக்கின்றார். ஆனால் வேறு இதர செயல்கள் என்று அவர் எதுவும் செய்யவில்லை.

இரண்டாம் மாணவரோ 70% மதிப்பெண்கள் வைத்து இருக்கின்றார். அதனுடன் பலச் செயல்களை முன்னின்று கல்லூரியில் நடத்தி இருக்கின்றார். பல கருத்தரங்குகளில் பங்குப் பெற்று வென்று இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது, இவர்கள் இருவரின் விண்ணப்பங்களுமே ஏற்றுக் கொள்ளப் படும். ஆனால் அந்த இரண்டாம் மாணவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப் படும்.

அதேப் போல, ஒரு சில படிப்புகளுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் மேலாண்மைப் படிப்புக்களில் சேர ஒரு சிலத் தேர்வுக்களை மாணவர்கள் நிச்சயம் எழுத வேண்டி இருக்கின்றது. பட்டதாரிகளுக்கான மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் (GMAT) மற்றும் பட்டதாரிகளுக்கான சான்றுத் தேர்வுகள் (GRE) போன்றத் தேர்வுகளில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே உலகில் உள்ள தலைச் சிறந்த பல்கலைக்கழகங்கள் அவரைத் தேர்வு செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்கின்றன.

இந்தத் தேர்வுகள் முக்கியமான தேர்வுகள் தான், ஆனால் இந்தத் தேர்வுகள் எழுதாத மாணவர்களையும் தேர்வு செய்யும் நல்லப் பல்கலைக்கழகங்களும் இருக்கத் தான் செய்கின்றன. எனவே இந்தத் தேர்வுகளை எழுதினால் தான் வெளிநாட்டினில் படிக்க முடியும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. அதுவும் குறிப்பாக மாணவர்களைச் சேர்க்க இந்தத் தேர்வுகள் நிச்சயம் வேண்டுமா? என்றக் கேள்வி பலப் பல்கலைக்கழகங்களுக்கு எழுந்து உள்ளது. எனவே இந்தத் தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு நீங்கள் படிக்க விரும்பும் பாடத்திற்கான அடிப்படைத் தகுதிகளில் அந்தத் தேர்வுகள் குறியிடப்பட்டு உள்ளனவா என்று அந்தப் பல்கலைகழக இணையத்தளத்தில் சரிப் பார்த்துக் கொள்வது நல்லது.

ஆனால் இந்தத் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் கல்விப் பயில உதவித் தொகையைப் பெற முடியும் என்பதினால் இந்தத் தேர்வுகளை எழுதுவது நல்லது.

இந்தத் தேர்வுகளுக்கும் நமது நாட்டின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொதுத் திறமைத் தேர்வு (CAT) ஆகியத் தேர்வுகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது. இந்தத் தேர்வுகளைப் பற்றி நாம் விரிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

சரி... வேண்டியத் தேர்வுகளை எல்லாம் அறிந்தாயிற்று, போதிய மதிப்பெண்களும் கைவசம் உள்ளது, இதற்கு மேலும் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபிக்க நாம் வேறு ஏதாவது அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதா? என்றால் ... ஆம் என்பதே பதிலாகும்.

ஒரு சிலக் கடிதங்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் இருந்து விண்ணப்பிக்கும் பொழுது எதிர்ப்பார்கின்றன. அந்தக் கோப்புக்களைப் பற்றியும் விண்ணப்பிக்கும் முறையினைப் பற்றியும் நாம் அடுத்த பதிவினில் பார்ப்போம்.

தொடரும்...

புதன், 13 ஏப்ரல், 2011

மேலை நாட்டில் மேற்படிப்பு - 2

உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காக கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன.... உண்மை தான்.ஆனால் அந்தக் கதவுகளோடு சில எதிர்பார்ப்புக்களையும் சேர்த்து வைத்தே அந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.


அந்தப் பல்கலைக்கழகங்கள் அப்படி என்னவற்றைத் தான் மாணவர்களிடம் இருந்து எதிர்ப்பார்கின்றன என்பதினைப் பற்றி நாம் சற்று விரிவாக பார்ப்போம்.

மொழி:

சொந்த நாட்டிலேயே வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு செல்லும் பொழுது அந்த மொழி தெரியாது நாம் சில சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டி இருக்கின்றது. இவ்வாறு உள்நாட்டிலேயே மொழியினால் பிரச்சனை உண்டாகும் பொழுது, படிப்பதற்காக கடல் கடந்து வெளிநாட்டிற்குச் சென்று, அங்கு அந்த நாட்டின் மொழியினை அறியாது திணறுவது அந்த மாணவர்களுக்கு எவ்வளவு சிரமங்களை கொடுக்கும் என்பதனை அறிந்தே பல பல்கலைக்கழகங்கள், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது நாட்டின் மொழியை எழுதவும் பேசவும் அறிந்து இருக்க வேண்டும் என்ற விதியை இன்றியமையாததாய் வைத்து இருக்கின்றன.

அதுவும் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ள பொது மொழியாய் ஆங்கிலம் ஆகி விட்டதால், அந்த நாடுகளில் உள்ளப் பல்கலைக்கழகங்களில் எல்லாம் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்கின்றது. எனவே அந்தப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு மாணவர்கள் தங்களது ஆங்கிலத் திறமையை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

ஆங்கிலம் வேண்டும்.... சரி!!!
ஆங்கிலத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் .... அதுவும் சரி!!!!...

ஆனால் நான் ஆங்கிலத்தில் திறமையானவன் என்பதை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு நான் ஏதாவது தேர்வுகள் எழுத வேண்டுமா?...

இது தான் உங்கள் கேள்வியாக இருக்குமாயின் அந்தக் கேள்விக்கு உரிய பதில்...ஆம்!

உங்களின் ஆங்கிலத் திறமையை பறைசாற்ற நீங்கள் சிலத் தேர்வுகளை எழுத வேண்டும். அதுவும் நீங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளும் தேர்வாக அது இருக்க வேண்டும். அப்படி உலகில் உள்ள அநேக பல்கலைக்கழகங்கள் ஆங்கில மொழியில் ஒருவரது திறமையை அறிந்து கொள்ள அவைகள் ஏற்றுக் கொண்டு உள்ள முக்கியமான இரண்டு தேர்வு முறைகளைப் பற்றிப் பார்போம்.

1) அந்நிய மொழியாய் ஆங்கிலத்தை சோதிக்கும் தேர்வு (TOEFL)

2) ஆங்கில மொழியை சோதிக்கும் சர்வதேச முறைத் தேர்வு (IELTS)

இந்த இரண்டு தேர்வுகளுமே உலகம் முழுவதும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இந்த இரண்டுத் தேர்வு முறைகளுக்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை.

அ) ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல்
ஆ) ஆங்கிலத்தில் சரளமாக எழுதுதல்
இ) ஆங்கிலத்தில் நன்றாக வாசித்தல்
ஈ) ஆங்கிலத்தில் நன்றாக கேட்டு புரிந்து கொள்ளுதல்.

மேலே குறிப்பிட்டு உள்ள இந்த நான்கு பிரிவுகளிலும் ஒரு மாணவர் எவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்துகிறாரோ அதை வைத்தே அவரது ஆங்கிலத் திறமையை அந்த இரண்டு தேர்வு முறைகளும் மதிப்பிட்டு முடிவு செய்கின்றன. அந்த மதிப்பீட்டை வைத்தே பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவரின் ஆங்கிலத் திறமையை கணித்துக் கொள்கின்றன.

இந்த இரண்டுத் தேர்வு முறைகளைப் பற்றியும் அவற்றிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அந்த தேர்வில் மதிப்பிடும் முறையினைப் பற்றியும் நாம் விரிவாக இன்னொரு பதிவில் பார்போம்.

"இந்தத் தேர்வுகள் முக்கியம் என்கின்றீர். அப்படி என்றால் இந்தத் தேர்வுகளை எழுதாமல் ஒரு பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியாதா?" என்று நீங்கள் வினவலாம்.

இந்தத் தேர்வுகளை மட்டுமே வைத்து பலப் பல்கலைக்கழகங்கள் உங்களின் ஆங்கிலத் திறமையை மதிப்பிடுவதில்லை. நிச்சயம் இந்த தேர்வுகளை எழுதாமலும் நீங்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியும்.

அதுவும் குறிப்பாக, இந்தியாவில் தனது இளநிலை பட்டத்தை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிற்றுவிக்கப் பட்டு பெற்ற ஒருவர், தனது முதுநிலைக் கல்விக்காக சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவருடைய ஆங்கில வழிக் கல்வி முறையில் பெற்ற பட்டமே அவருடைய ஆங்கில மொழித் திறமைக்கு சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அவர் தனியாக ஆங்கிலத் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று எந்த தேர்வையும் எழுத தேவை இல்லாது போகின்றது. (ஆனால் இந்த முறையை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வேறுபடும்.)

ஆனால் பொதுவாக அவர் அந்த ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவது பயன் அளிக்க கூடிய ஒன்றாகும். ஏனெனில், அந்த தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்து சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி உதவி செய்கின்றன. மேலும், அவர் தனியாக சில உதவித் தொகைக்கு விண்ணபித்தாலும் அவருக்கு அந்த மதிப்பெண்கள் நிச்சயம் தேவைப் படும். எனவே வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர் TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளை எழுதுவது நன்றாகும்.

சரி... ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுள் நுழைய TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளை எழுத வேண்டும். ஆனால் உலகத்தில் ஆங்கிலம் பேசாத நாடுகள் பல இருக்கின்றன. செர்மன், பிரான்சு, ரசியா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டின் மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இந்த நிலையில், அந்த நாடுகளில் சென்று படிக்க ஆங்கிலம் பெருமளவு உதவாத பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் பொழுது தான் அந்த நாடுகளே இதற்குரிய தீர்வினை நமக்கு அளிக்கின்றன.
"எங்கள் நாட்டில் படிக்க வேண்டுமா... அப்படியானால் முதலில் எங்கள் மொழியைப் படி அப்புறம் அதன் வழியாக மற்றப் பாடங்களைப் படி" என்பதே அந்தத் தீர்வாகும். 

அதாவது, நீங்கள் அந்த நாட்டுப் பல்கலைக்கழங்கங்களில் பயில வேண்டுமானால் முதலில் ஒரு வருடமோ அல்லது 6 மாத காலத்திற்கோ அந்த நாட்டின் மொழியைப் படித்து அதில் தேர்ச்சி ஆக வேண்டும். (இந்த கால அளவுகள் நாட்டிற்க்கு நாடு வேறுபடும். இந்தத் தேர்வுகளைப் பற்றிய விவரங்களை அந்த அந்த கல்லூரி இணையத் தளங்களிலையே கண்டு அறிந்து கொள்ளலாம்). அதாவது நீங்கள் படிக்க விரும்பும் படிப்பின் கால வரம்பு 3 வருடம் என்று வைத்துக் கொண்டால் நீங்கள் முதலில் 1 வருடம் அந்த நாட்டின் மொழியைப் படிக்க வேண்டும் அதற்கு அப்புறம் தான் உங்களுடைய 3 வருட படிப்பு தொடங்கும். அதாவது நீங்கள் அந்த நாட்டில் தங்கி இருந்து படிக்கும் காலம் சராசரியாக 1 வருடம் கூடுகின்றது. 

சில நாடுகள் நீங்கள் அவற்றின் மொழியைப் படிக்க நிதி உதவி செய்வதும் உண்டு.

ஆனால் தற்சமயம் அனைத்து நாடுகளும் பல்வேறு நாடு மாணவர்களை கவர்வதற்காக ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாக வைக்க ஆரம்பித்து உள்ளனர். ஆனால் என்ன தான் ஆங்கிலத்தில் பாடங்களைப் படித்தாலும் அந்த நாடுகளில் வாழ்வதற்கு அந்த நாட்டின் மொழியை அறிந்து கொள்வது என்பது இன்றி அமையாத ஒன்றாகின்றது. இந்த விசயத்தை மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் தங்களது நினைவில் நிச்சயம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடரும்....

வியாழன், 24 மார்ச், 2011

மேலை நாட்டில் மேற்படிப்பு - 1

அடுத்தது என்ன?.
இன்றைய இளைஞர்களின் மனதில் நீங்காது இன்று நின்று கொண்டு இருப்பது இந்தக் கேள்வி தான்.
ஒரு சிலருக்கு இளநிலைப் பட்டம் வாங்கியாயிற்று, ஆனால் வேலை வாங்கியப்பாடில்லை.என்ற கவலை!
இன்னும் சிலருக்கு வேலை பிடிக்கவில்லையே என்ற கவலை!
மேலும் சிலருக்கு தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு சாதிக்க சரியான இடம் அமையவில்லையே என்ற கவலை!
இவர்கள் அனைவரின் மனதிலும் இருப்பது ஒரு கேள்வி...ஒரே கேள்வி!!!
அடுத்தது என்ன... மேலே ஏதாவது படிக்கலாமா?.

எளிய கேள்வி தான். ஆனால் இந்த கேள்விக்குத் தான் இன்றைய இளைஞர்கள் முடிவெடுக்க திணறுகின்றார்கள். அல்லது பலக் காரணங்களால் திணரடிக்கப் படுகின்றார்கள். அதுவும் மதிப்பெண்களை மட்டுமே குறியாக வைத்து மாணவர்களைத் தயார் செய்யும் கல்லூரிகள் இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிய அவர்களுக்கு வழிகாட்ட மறந்து விட மாணவர்களும் சந்தையில் உலவும் மந்தைகளைப் போலவே தங்களின் தனித் தகுதியை மறந்து ஒவ்வொரு தலைநகரத்திலும் உலாவ ஆரம்பிக்கின்றனர்.

படிப்பதா... சரி நல்லது!!!
ஆனால் என்னப் படிப்பது?... எங்குப் படிப்பது?... படித்தால் வேலைக் கிடைக்குமா? போன்ற கேள்விகள் அவர்களை முடிவெடுக்க விடாது தடுக்கின்றன. 

அவை அனைத்திற்கும் மேலே பணம்!!!. 

ஐயோ, நாம் இது வரை படித்ததிற்க்கே இவளவு செலவாகி விட்டதே இதற்கு மேலும் நாம் படித்தால் அந்தப் பணத்தை நாம் எங்குச் சென்று சம்பாதிப்பது என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பிடுங்கிச் சென்று விடுகின்றது.

இலவசமாக தொலைக்காட்சியையும் மற்ற பொருட்களையும் தரும் அரசாங்கம் கல்விக் கட்டணத்தை மட்டும் குறைக்காது வருடத்திற்கு வருடம் உயர்த்திக் கொண்டே போகின்றது.

பணம்... படிப்பதற்கு வேண்டும்... சரி!
படிப்பு?... முதலாக போட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற ஒரு முடியா வட்டத்தினுள் மாட்டிக் கொண்டு மாணவர்கள் முழிக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக பொறியியல் மாணவர்கள்.

இளநிலை பட்டதை முடிப்பதற்கே கிட்டத்தட்ட 4இல் இருந்து 5 லட்சம் வரை பணம் செலவழிந்த நிலையில் மேலும் படிக்கச் செல்ல அவர்கள் மிகுந்த யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது.
தமிழகத்தில் அவர்கள் பொறியியல் துறையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று எண்ணினால், அரசுக் கல்லூரிகளைத் தவிர மற்றக் கல்லூரிகளில் அதற்காக மேலும் ஒரு 3 லட்சத்தை எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது.

சரி மேலாண்மைத் துறைக்கு செல்லலாம் என்றால், அதிலும் சிலத் தரமான கல்லூரிகளில் வருடத்திற்கு கல்விக் கட்டணம் மட்டுமே 3 இல் இருந்து 5 லட்சம் வரை!!! 

இவ்வளவு பணம் செலவு செய்தும் தரமான கல்வி பொதுவாகக் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. 
இந்த நிலையில் தான் நாம் வெளி நாடுகளில் சென்று படிப்பதைப் பற்றியும் அறிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

"என்னடா இவன் நம்ம ஊர்ல படிச்சா 3 லட்சம் ஆகும் ,10 லட்சம் ஆகும் அத பசங்க கட்டுறதுக்கு யோசிக்கிறாங்க அப்படின்னு சொல்றான் ஆனா வெளிநாட்ல படிக்கிறத பத்தியும் சொல்லப் போறேன்னு சொல்றானே, அங்க படிச்சா மட்டும் என்ன கம்மியாவா செலவு ஆகும்" என்று நீங்கள் கேட்கலாம்.

செலவு நிச்சயம் கம்மி ஆகாது ஆனால் அந்தச் செலவை முழுதும் அவர்களே ஏற்றுக்கொள்ளும் பல்கலைகழகங்கள் உள்ளன.
ஏன், கல்வியை இலவசமாக வழங்கும் நாடுகளும் உலகத்தில் இருக்கின்றன. அவைகளைப் பற்றி நமது மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தத் தொடர்ப் பதிவு.

வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், அவற்றில் நுழைய நாம் எழுத வேண்டிய தேர்வுகள், கல்விக் கட்டணங்கள், கல்விக் கட்டணத் தள்ளுபடிகள், அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றியும் அந்த பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்கின்றன என்பதினைப் பற்றியும் நாம் தெளிவாகப் பார்ப்போம்.

நம்முடைய நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை தான் மாணவர் சேர்க்கை கல்லூரிகளில் நடை பெறுகின்றது. ஆனால் பெரும்பாலான வெளி நாடுகளில் வருடத்திற்கு இரண்டு முறை மாணவர் சேர்கை நடைபெறும். ஒன்று வசந்த கால மாணவர் சேர்கை(Spring intake) மற்றொன்று இலையுதிர் கால மாணவர் சேர்கை (fall intake).

இலையுதிர் கால சேர்க்கையின் பொழுது கல்லூரிகள் ஆகத்து (August -September) மாதம் பொதுவாக பாடத்தினைத் தொடங்குவார்கள். இதற்குரிய விண்ணப்பங்கள் டிசம்பர் அல்லது சனவரி மாதம் முதல் கொடுக்கத்  தொடங்கப்பட்டு பொதுவாக மார்ச் மாதத்தில் விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப இறுதி நாள் நிச்சயிக்கப்படும். இந்த தேதிகள் கல்லூரிக்கு கல்லூரி, நாட்டிற்க்கு நாடு வேறுபடும்.  
 
வசந்தக் கால சேர்க்கையிலோ சனவரி அல்லது பிப்புரவரி (February) மாதம் கல்லூரிகள் தொடங்கப்படும். அதற்குரிய விண்ணப்பங்களோ ஆகத்து மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு இறுதி நாள் நிச்சயிக்கப்படும். இதிலும் இந்த தேதிகள் கல்லூரிக்கு கல்லூரி, நாட்டிற்க்கு நாடு வேறுபடும்.

இந்த இரண்டு சேர்க்கையிலும் முக்கியமான வித்தியாசம் என்ன என்றால், இலையுதிர் கால சேர்கையில் ஒரு கல்லூரியில் இருக்கும் அனைத்துப் படிப்பிற்கும் ஆள் சேர்கை நடைபெறும். அதாவது எந்த படிப்பிற்கு வேண்டும் என்றாலும் ஒரு மாணவன் விண்ணப்பிக்கலாம்.இது தான் அந்த வருடத்தின் முதன்மையான சேர்கை.

ஆனால் வசந்த கால சேர்க்கையிலோ சில படிப்புகளுக்கு ஆள் சேர்கை நடை பெறாது. ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

எனவே மாணவர்கள் தாங்கள் என்ன படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக இருந்தாலும், அந்த விண்ணப்பத்திற்கான தேதிகளையும் அது எந்த சேர்கை என்பதையும், ஒரு வேளை அது வசந்த கால சேர்கையாக இருந்தால் அவர் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு அந்த சேர்கையில் ஆள் சேர்கை நடைபெறுகின்றதா என்பதையும் தெளிவாக முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த செய்திகள் அனைத்தும் அந்த கல்லூரிகளின் இணையத்தளையங்களிலேயே  தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கும். சரி வெளிநாடுகளின் சேர்கை முறைகளைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இனி ஒவ்வொரு நாடுகளைப் பற்றியும், அந்த நாட்டிற்க்கு விண்ணப்பிப்பதைப் பற்றியும் தெளிவாக பார்ப்போம்.

இளைஞர்களே,
 உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காக கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன....!!! 

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...