பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூலை, 2012

சில பயணங்கள்

ஒவ்வொரு பயணத்தையும் 
ஒரு பயணியாகவே தொடங்குகின்றேன்…
இருந்தும் தனித்திருக்கும் அமைதியில்
சாளரம் தாண்டிய தென்றல் தீண்ட
எங்கோ என்னுள் நீ புகுந்துத் தான் கொள்கின்றாய்… ஒவ்வொரு முறையும்!!!
 
பயணியாய் தொடங்கிய நானும்
ஏனோ ஒரு புதுக் கவிஞனாகவே
என் பயணத்தை முடித்துக் கொள்கின்றேன்… அவ் ஒவ்வொரு முறையும்!!!
 
நான் கவிஞனா…???
அல்லது கவிஞன் ஆக்கப்பட்டவனா…???
விடைத் தேடுதல்களில் பிறக்கின்றது
மற்றுமொரு கவிதை!!!
 
******************************************
நீண்ட நெடிய இரவு ஒன்று
நினைவுகள் என்ற சாட்டையினைச் சுழட்ட
என் நினைவுப் படிமங்களில் புதைந்திறந்த அவள்
ஒவ்வொரு படிமமாய் கடந்து வருகின்றாள்
சிறு புன்னகையில்
மீண்டும் தொடங்கிற்று ஒரு பழைய பயணம்.
 
என்றோ ஒரு மழைக்காலத்தில்
சிதறிய மழைத் துளிகளோடு…அவள் சிந்திய முதல் புன்னகை…
என் முதல் கவிதை… தொடங்கி
ஏதோ ஒரு இலையுதிர்க்காலத்தில்
சிதறிய சருகளோடு…மறைந்த அவள் காலடித் தடம் வரை
எங்கேயோ நான் தொலைத்த உலகங்களில்
மீண்டும் ஒரு காலச் சுழலில் உலா வரத் தான் செய்கின்றேன்…நான்!!!
 
பயணத்தின் முடிவில் இன்று
எஞ்சி இருப்பது நானும்…ஒரு வெற்றுக் காகிதமும் தான்.
எழுதப்படாத அக்காகிதமும் நாளை
என் கவிதை புத்தகத்தினொரு பக்கமாகும்…
நான் அறிந்தக் கவிதை ஒன்றை
நான் மட்டுமே அறிய ஏந்திக் கொண்டு!!!
***************************************

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இயற்கையைத் தேடி-4

நம்ப முடியவில்லை!!!

பேரிஜம் ஏரியைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டு நின்றேன். அதற்குள் இந்த பயணம் முடிவிற்கு வந்து விட்டதா?. ஏதோ நேற்றுக் காலை தான் இந்த ஏரியின் கரையில் வந்து இறங்கியது போல் இருந்தது. ஆனால் என்னை அறியாமலே மூன்று நாட்கள் கடந்து சென்று இருந்தன. சோலைகள்,ஏரிகள்,நீர் நிலை ஆதாரங்கள், அருவிகள், செந்நாய்கள் ... மிக முக்கியமாய் அட்டைகள் என அந்த மூன்று தினங்களில் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். நிச்சயம் எங்களில் யாரும் இந்த பயணத்தை தங்கள் வாழ்நாளில் மறக்கப் போவதில்லை. ஆரம்பத்தில் "நாலு நாளு காட்டுக்குள்ள என்னடா பண்றது" என்று வந்தவர்கள் கூட இன்று "ச்சே... இன்னும் கொஞ்ச நாள் கூடுதலா இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்குமேடா" என்று மாற்றிச் சொல்லும்மாறு அமைந்து இருந்தது எங்களின் பயணம்.

"ஹ்ம்ம்.. எப்படி இருந்தா என்ன... இதோ பயணம் முடிந்து கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டு இருகின்றதே" என்று எண்ணியவாறே ஏரிக்கரையில் இருந்த என்னுடைய குடிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.

"எல்லோரும் இங்கே வாருங்கள்!!!" சற்று தூரத்தில் பேராசிரியர் கந்தசாமியின் குரல் ஒலித்தது. அனைவரும் அவரின் அருகில் விரைவாகச் சென்றோம்.
"எல்லாரும் கிளம்புவதற்கு தயாராக இருகின்றீர்களா" என்றார்.
கூட்டத்தில் இருந்து பதில் இல்லை.
புன்னகைத்தார்.
"என்ன... கிளம்புவதற்கு மனம் இல்லையா?" தொடர்ந்தார்.
இம்முறையும் கூட்டத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் அவர் கூற்றை ஆமோதிப்பதை போல பல தலைகள் அசைய மட்டும் செய்தன.
" சரி! அப்படி என்றால் நீங்கள் கிளம்புவதற்குள் புதிதாய் ஒரு இடத்திற்கு சென்று வந்து விடலாமா?" என்றார்.
கூட்டத்தில் இருந்து புன்னகைகள்.
" எங்களுக்கு சரி... எங்கே போகின்றோம்.. மீண்டும் காட்டுக்குள்ளேயா" என்றான் ஒருவன்.
"இல்லை இல்லை. நாம் இப்பொழுது பேரிஜம் ஏரிக்கு செல்லப்போகின்றோம்.. அங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்னும் 10 நிமிடங்களில் நாம் கிளம்ப வேண்டும். அனைவரும் போய் தயார் ஆகுங்கள்" என்று கூறி அவர் அவரின் குடிலின் உள்ளே சென்றார். நாங்களும் கிளம்பத் தயார் ஆனோம்.

நாங்கள் செல்ல இருந்த ஏரிக்கரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம். நாங்கள் சென்ற நேரம் காலை 8 மணி என்பதால் எந்த சுற்றுலாப் பயணியும்(எங்களைத் தவிர) இல்லாது அமைதியாய் காட்சி அளித்தது அந்த ஏரிக்கரை. நாங்கள் அந்த காட்டினுள் கண்ட அனைத்து இடங்களைப் போலவே இந்த இடத்தையும் இயற்கை நன்றாக அலங்கரித்து இருந்தது.

"அனைவரும் வந்து விட்டீர்களா" என்றவாறே தனது பேச்சை ஆரம்பித்தார் பேராசிரியர். " சரி! மூன்று நாட்களாக நாம் இயற்கையை பற்றி படித்து வந்து கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது சொல்லுங்கள். இயற்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சக்தி எது?"

"....மனிதன்" என்றாள் ஒருத்தி.

"மிகவும் சரி... அதே போல் இயற்கையை காக்கும் வல்லமையும் யாரிடம் இருக்கின்றது" தொடர்ந்தார் பேராசிரியர்.

"அதுவும் மனிதன் தான்" என்றாள் அவள்.

"சரியாகச் சொன்னாய்... ஆனால் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கின்றது என்றால் தன்னிடம் காக்கும் வல்லமையும் பொறுப்பும் இருக்கின்றது என்பதை பல மனிதர்கள் மறந்துவிட்டு அழிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துவதினால் தான் இயற்கைக்கு பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. இதோ இந்த எரிக்கரையைப் பாருங்கள். இயற்கை மனிதன் ஓய்வெடுக்க ஒரு நிம்மதியான இடத்தை உருவாக்கி விட்டு அவனுக்காக காத்து இருக்கின்றது. ஆனால் அவனோ அவனது இன்பத்திற்காக அவனை அறியாமலே இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று அந்த ஏரிக்கரையில் இருந்த ஒரு சிகரட் பெட்டியை எடுத்தவாறே முடித்தார்.

"புகைப் பிடிப்பதினால் சுற்றுச் சுழல் மாசுப் படுகின்றதே அதை பற்றியா சொல்லுகின்றீர்கள்?" என்றேன்.

"அதை மட்டும் அல்ல... இதோ இந்த ஏரிக்கரையில் நீங்கள் பார்த்தால் தெரியும்.. மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் ... இன்னும் பல இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கின்றன. அதுவும் குறிப்பாக அந்த பிளாஸ்டிக் கவர்கள்... நாம் நேற்று பைன் மரங்களைப் பற்றியும் அவைகள் மண்ணிற்கு செய்யும் தீங்கைப் பற்றியும் பார்த்தோம் அல்லவா... இந்த பிளாஸ்டிக் கவர்கள் அந்த பைன் மரங்களையே வளரவிடாது செய்து விடும் தன்மை பெற்றவை. அப்படி என்றால் இவைகளை இப்படி இயற்கையின் மத்தியில் விட்டுச் செல்வது இயற்கைக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களா?. மண்ணிற்கு உரிய தண்ணீரை மண்ணிடம் சேர்க்காது, அதே போல் வேறு செடிகளையும் வளர விடாது இந்த கவர்கள் இயற்கையை மெதுவாக அழித்து விடும்." என்று கூறி முடித்தார்.

"சரி ஐயா! இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றேன்.
"பெரிதாய் ஒன்றும் இல்லை. மனிதன் மாசு படுத்திய இடங்களை மனிதனே தான் தூய்மை செய்ய வேண்டும். இப்பொழுது நாம் இந்த இடத்தில இருக்கும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் நீக்கி இந்த இடத்தை சுத்தம் செய்யப் போகின்றோம். உங்களுக்குள்ளேயே அணிகள் பிரித்து கொண்டு ஆரம்பியுங்கள் பாப்போம்" என்றார்.

புதிதாய் எதையாவது இன்று கற்றுக்கொள்வோம் என்று எதிர்ப் பார்த்துக் கொண்டு இருந்த நான் சற்று ஏமாந்து தான் போனேன். அவர் இன்று சொன்ன அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே பாடங்களில் படித்து இருந்தோம். என்னை அறியாமலே முகம் கொஞ்சம் வாடிப் போனது.

"என்ன ஆயிற்று" என்றார் பேராசிரியர்.

"இல்லை... இன்று நீங்கள் முக்கியமான விஷயம் எதையாவது சொல்லித் தருவீர்கள் என்று எண்ணி இருந்தேன்... ஆனால் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் எனக்கு ஏற்கனவே தெரியும் .." என்றேன்.

"அப்படி என்றால் நான் இன்று சொன்ன விஷயம் முக்கியமானதாக உனக்கு படவில்லையா...!!!" என்றார்.

"நான் அப்படி சொல்லவில்லை... ஆனாலும் நீங்கள் சொன்ன சோலைகள், நீர் நிலை ஆதாரங்கள் போல இது பெரிய விஷயமாக படவில்லை... அதான்..." என்றேன்.
சிரித்தார்.

"உனக்கு உண்மை ஒன்று தெரியுமா. உலகில் மிக முக்கியமான விஷயங்கள் அனைத்தும் சிறிய விஷயங்கள் தான். ஒன்று சொல், சோலைகள் எத்தனை இடங்களில் அழிக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதே போல் எத்தனை இடங்களில் இயற்கை இந்த பிளாஸ்டிக் கவர்களால் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது." என்றார்.

நான் பதில் எதுவும் சொல்லாததால் அவரே தொடர்ந்தார் " சோலைகள் என்பன பெரிய விஷயங்கள்.... நிச்சயம் நாம் அவற்றை காக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம்முடைய வீட்டிலும் சரி நம் ஊரிலும் சரி இயற்கையை வளர விடாது அழித்துக் கொண்டு இருக்கும் இந்த சின்ன விஷயங்களையும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இயற்கையை உண்மையாக நாம் பேண முடியும். என்ன புரிந்ததா. இப்பொழுது போய் இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை பார்ப்போமா!!!" என்று கூறி முடித்தார்.

நானும் என்னால் முடிந்த அளவிற்கு இயற்கையை மாசுபடுத்திக் கொண்டு இருக்கும் பொருட்களை நீக்குவதற்காக செல்லத் தொடங்கினேன்.

இத்துடன், இயற்கையைத் தேடி என்ற தலைப்பில் பேரிஜம் பற்றிய பதிவுகள் முடிந்தன. என்னால் முடிந்தவரை, நான் பெரிஜமைப் பற்றியும் சோலைகளைப் பற்றியும் அறிந்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளேன்.

பேரிஜம் ஒரு அருமையான இடம். கொடைக்கானலுக்கு மேலே ஒரு 30 கி.மி தூரத்தில் இருக்கின்றது அந்த ஏரி. பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுவார்கள். நாங்கள் தங்கி இருந்தது போல காட்டுக்குள் தங்க வேண்டும் என்றால் அதற்காக சிறப்பு அனுமதி வன இலாகா அதிகாரிகளிடம் வாங்க வேண்டி இருக்கும்.

மலையையும் இயற்கையும் ரசிப்பவர்கள் நிச்சயம் பேரிஜமை ரசிப்பார்கள். குறிப்பாக ட்ரெக்கிங் (trekking) மீது ஆவல் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடம்.

இந்த தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவுகள்,
சோலைகள்:
இயற்கையைத் தேடி - 2
சோலைகளும் கூட்டுக்குடும்பங்களும்:
 இயற்கையைத் தேடி-3
 **********************************************************************

எப்பொழுது உலகில் கடைசி மரம் சாய்கின்றதோ, எப்பொழுது கடைசி மீன் அழிகின்றதோ, கடைசி ஆறு வற்றுகின்றதோ அப்பொழுது தான் மனிதன் உணர்ந்து கொள்வான் - பணத்தை அவனால் உண்ண முடியாது என்று.
-ஒரு செவிந்தியப் பழமொழி:

புதன், 7 ஜூலை, 2010

இயற்கையைத் தேடி - 3

பைன் மரங்களின் வழியாக கதிரவன் நாங்கள் செல்லும் பாதையில் ஒளிப்பரப்பி கொண்டு இருந்தான். நாங்களும் மதி கெட்டான் சோலையை நோக்கி ஆர்வத்துடன் சென்று கொண்டு இருந்தோம்.
"இன்னும் சோலையை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?." என்றேன்.
"ஏன் கேட்கிறாய்" என்றார் பேராசிரியர் கந்தசாமி.
"இல்லை நாமும் வெகு நேரமாக நடந்து கொண்டு இருக்கின்றோம், ஆனால் இந்த பைன் மரக்காட்டைத்தவிர வேறு இடமே தெரியவில்லையே அதான் கேட்டேன்" என்றேன் தயக்கத்துடன்.
நின்றார் பேராசிரியர். அவரை தொடர்ந்து வந்த மாணவர் கூட்டமும் நின்றது. சில நொடிகளில் வனம் அமைதி ஆனது.
"தூரத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதா" என்றார்.
கூர்ந்து கவனித்ததில் சிறு தொலைவில் ஒரு நீரோடை ஓடுகின்ற சத்தம் கேட்டது.
"ஆம்" என்றோம்.
"அப்படி என்றால் சோலை நெருங்கி விட்டது என்று அர்த்தம். சோலை எங்கு இருக்கின்றதோ அங்கே நீரும் இருக்கும்." என்றார்.
பயணத்தின் இலக்கு நெருங்கி விட்டதை எண்ணி சற்று மகிழ்ச்சியோடு நடக்க ஆரம்பித்தோம்.
"நில்லுங்கள்! சோலைக்குள் செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அமருங்கள்" என்று கூறி அவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
நாங்களும் அவரைச் சுற்றி அமர்ந்தோம்.
"ஓங்கி வளர்ந்து இருக்கும் இந்த பைன் மரங்களை பார்த்தீர்களா? இவற்றை பார்க்கும் போது என்ன எண்ணம் வருகின்றது?" என்றார்.
"தமிழ் சினிமா படத்தில் சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வரும் காடுகள் போல இருக்கின்றன" என்றான் ஒருவன்.
"ஆம். இந்த காடுகளை நீங்கள் அடிக்கடி படங்களில் பார்த்து இருப்பீர்கள். காடுகளில் பல வகைகள் இருக்கும் போது என் இந்த காடுகளில் மட்டும் அதிகமாக படம் எடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?"
"இவை அழகாய் இருக்கின்றன! அதனாலா?" என்றாள் ஒருத்தி.
"ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளிகள் அவர்கள் படம்பிடிக்க சிரமமாய் இருக்காது. அதனால் இருக்கும்" என்றான் இன்னொருவன்.
"ஆம்!! இந்த மரங்களுக்கு இடையில் இருக்கும் இந்த இடைவெளிகள் தான் காரணம். இந்த மரங்களை உற்று கவனியுங்கள். இந்த நிலப்பரப்பில் இந்த மரங்களை தவிர வேறு மரங்கள் எதையாவது நீங்கள் காணமுடிகின்றதா" என்றார் பேராசிரியர்.
"இல்லை!" என்றோம். அந்த நிலப்பரப்பு முழுவதும் பைன் மரங்கள் தவிர வேறு மரங்கள் தென்படவில்லை.
"இருக்கும் மரங்களும், தனித் தனியாக இருப்பதையும் பார்த்து கொள்ளுங்கள். இந்த இடத்தில், நீரோட்டம் இல்லை, அதிகமான மிருக நடமாட்டமும் இல்லை. இருப்பவை அனைத்தும் பைன் மரங்களும் அவை உதிர்த்த இலைகளுமே. இவற்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான உண்மையை அறிய இந்த விஷயங்கள் தேவையாக இருக்கும்" தொடர்ந்தார் பேராசிரியர்.
ஆம். அவர் கூறியதை போலவே அந்த பகுதியில் பைன் மரங்களையும் அதன் உதிர்ந்த இலைகளையும் தவிர வேற இயற்கையின் படைப்புகளை காண முடியவில்லை.

"சரி வாருங்கள்!!! இப்பொழுது சோலைக்குள் செல்லலாம்" என்று கூறி விட்டு எழுந்து தண்ணீரின் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நாங்களும் பின் தொடர்ந்தோம்.
இது வரையிலும் தனித் தனி மரமாக காட்சியளித்த வனம் இப்பொழுது சற்று இறுக்கமாய் காட்சியளிக்க ஆரம்பித்தது. மரங்கள் மிகவும் நெருக்கமாய் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டு வெயில் உள்ளே வராதவாறு இருந்தன.
தண்ணீரின் சத்தம் சற்று பலமாக கேட்க ஆரம்பித்தது. கூடவே சில பறவைகளின் சங்கீத சத்தமும்தான்.
"இதோ....இது தான் மதி கெட்டான் சோலை. இனி அனைவரும் தங்கள் முன்னால் செல்பவரை பின் தொடர்ந்தே சீக்கிரம் வரப் பாருங்கள். ஏன் எனில், இந்த சோலையின் பெயருக்கு ஏற்ப ஒருவர் வழி தவறினால் அவரை கண்டு பிடிப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாது. எனவே இயற்கையை ரசியுங்கள் ஆனால் ஜாக்கிரதையாய் ரசியுங்கள். என்னை தொடர்ந்து பின் வாருங்கள்" என்று சொல்லி அந்த அடர்ந்த சோலைக்குள் பிரவேசித்தார்.

இது வரை நாங்கள் கடந்து வந்த அந்த பைன் மரக்காட்டை விடவும் மிகவும் வித்தியாசமான ஒரு சூழல் எங்களை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை, வித விதமான மரங்கள்,நீரோடை, நீரோடும் வழியில் தடைகல்லாய் சில பாறைகள், வரையறுக்காத பாதை என முற்றிலும் மாறுபட்ட ஒரு இடமாய் காட்சியளித்தது அந்த சோலை.
பேராசிரியரின் எச்சரிக்கை எங்களுக்கு ஞாபகம் வந்தது. இங்கே தொலைந்தால் கண்டிப்பாய் திரும்பி சரியான வழி கண்டு பிடிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது.
"இந்த சோலை முழுவதும் நீரோடைகள் ஓடிக் கொண்டே இருக்கும். சோலைகள் எங்கேயோ, அங்கே நீர் ஆதாரங்களும் இருக்கும் என்பது எழுதப்படாத விதி" என்றார் பேராசிரியர்.
"ஏன் அப்படி! இதுவும் ஒரு வகையான காடுதானே. ஏன் அந்த பைன் மரக்காட்டில் இல்லாத நீர் ஆதாரம் இந்த சோலைகளில் மட்டும் இருக்கின்றது." என்றேன்.
"அது தான் சோலைகள். விவரமாக சொல்கின்றேன் அமருங்கள்!" என்று கூறி ஒரு பாறையில் அமர்ந்தார். நாங்களும் கிடைத்த பாறைகளில் அமர்ந்து கேட்க ஆரம்பித்தோம்.
"அங்கு அந்த பைன் மரங்களை பார்த்தீர்கள் அல்லவா... அந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் ஏதாவது வித்தியாசத்தை உணருக்கின்றீர்களா?" என்றார்.
"ஆம். நிறைய வேறுபாடுகள் உள்ளன" என்றோம்.
"அந்த வேறுபாடுகள் என்ன என்னவென்று சொல்லுங்கள். நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகின்றேன்." என்றார்.
"ம்ம்ம்... இங்கே நிறைய மரங்கள் இருக்கின்றன. பெரிய மரங்கள், சின்ன செடிகள் ஆகியவையெல்லாம் ஒன்றாய் இருக்கின்றன. அங்கே அந்த பைன் மரங்கள் மட்டும் தனியாக இருந்தன." என்றான் ஒருவன்.
புன்னகைத்தார் பேராசிரியர். "சரியாக கவனித்து இருக்கின்றாயே. வாழ்த்துகள். ஆம்! இங்கே மரங்கள் ஒன்றாக இருக்கின்றன. ஒற்றுமையாய் இருக்கின்றன. அங்கே உள்ளது போல் ஒவ்வொரு மரமும் தனித் தனியாக இல்லை. அது தான் இந்த இடம் செழித்து இருப்பதற்கு காரணம்." என்றார்
"புரியவில்லையே" என்றேன்.
"இந்த மரங்கள் இங்கே ஒன்றை ஒன்று கவனித்து கொள்கின்றன. இந்த சிறிய செடிகள் அளவிற்கு அதிகமாய் வெயில் பட்டால் வளராது போய் விடும். எனவே இந்த பெரிய மரங்கள் அந்த செடிகளை வெயில் படாதவாறு காத்து தங்கள் பாதுகாப்பில் வளர செய்கின்றன. அதே போல் இந்த செடிகளும் மண்அரிப்பை தடுத்து மழைக்காலத்தில் நீரை சேமித்து, நிலத்தடி நீரை அதிகரிப்பதின் மூலம் பெரிய மரங்கள் செழித்து வளர உதவுகின்றன. இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதின் மூலம் இந்த இடத்தை செழிப்பாக வைத்துக் கொள்கின்றன. இங்கே உதிர்ந்து விழும் இலை கூட உரம் ஆகுமே தவிர குப்பை ஆகாது. ஆனால் அந்த பைன் காட்டிலோ மரங்களுக்குள் இந்த ஒற்றுமை கிடையாது. எனவே அங்கே இந்த சோலைகளில் இருக்கும் உயிர் கிடையாது. சோலை இயற்கை.... அந்த பைன் காடுகள் செயற்கை!!!" என்று கூறி முடித்தார்.
"என்ன அந்த பைன் காடுகள் செயற்கையா?" என்றேன் ஆச்சரியத்துடன்.
"ஆம். அவை செயற்கை தான். நீங்கள் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சில அடிகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் அந்த பைன் காடுகளில் நீர் இருந்த அறிகுறியையே காணோமே. இது இயற்கையா..... இல்லை.... மனிதன் பணம் வேண்டும் என்பதற்காக சோலைகளை அழித்து இந்த பைன் காடுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டான். சோலைகள் சேர்ந்து இருப்பது இந்த மண்ணிற்காக... இந்த பைன் மரங்கள் தனித்து நிற்பது பொன்னிற்காக. இது அவற்றின் பிழை அல்ல. மனிதனின் பேராசை. பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மலைகளில் இருக்கும் சில முக்கியமான நீர் ஆதாரங்களை அவன் அழித்து விட்டான்" என்றார்.
"அந்த அழிந்து போன சோலைகளை நம்மால் திரும்பவும் கொண்டு வர முடியுமா?" என்றான் ஒருவன்
"ஏன் முடியாது. சோலைகள் நாம் மண்ணின் வனங்கள். அந்த பைன் மரக்காடுகளை அழித்து விட்டோம் என்றால்மீண்டும் சோலைகள் செழித்து வளரும். இது சோலைகளின் பூமி. ஆனால் அந்த பணி எளிதல்ல. அரசாங்கம் முயற்சியெடுக்க வேண்டும். இல்லை என்றால் இன்றைய சோலைகள் நாளைய பைன் மரக்காடுகளாவோ அல்லது தேயிலை தோட்டங்களாவோ மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.சரி நான் இந்த சோலைகள் நம் மண்ணின் வனங்கள் என்று சொன்னேனே... அதற்கு ஒரு சான்று சொல்லமுடியுமா" என்றார்.
வழக்கம் போல் எங்கள் குழு மௌனம் சாதித்தது.
"என்ன தெரியவில்லையா?"
மீண்டும் மௌனம்.
"சரி. நானே சொல்கிறேன்." என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒருவனை நோக்கி திரும்பினார்.
"உங்கள் வீட்டில் எத்தனை பேர்" என்றார்.
"மூன்று! நான், அப்பா அப்புறம் அம்மா" என்றான்.
"சரி. உங்களில் யாருடைய வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றீர்கள்" என்றார் மீண்டும் கூட்டத்தை நோக்கி.
நான் எதிர்பார்த்தததை விட அதிக கைகள் மேலே எழூம்பின.
புன்னகைத்தார்.
"நன்று. எப்படி இந்த சோலைகள் நம்முடைய நாட்டினை கட்டி எழுப்பி இருக்கின்றனவோ அது போலவே தான் நம்முடைய கலாச்சாரம் கூட்டுக் குடும்பங்கள் வாயிலாகவே கட்டப்பட்டு உள்ளது." என்றார்.
அவர் எதை நோக்கி செல்கின்றார் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது.
" இந்த சோலைகளில் மரங்கள் எவ்வாறு கூடி ஒற்றுமையாய் ஒன்றுக்கொன்று பயன் உள்ளதாய் உதவிக்கொண்டு இருக்கின்றனவோ அதே போல் தான் நம் நாட்டின் குடும்பங்களும் கூட்டு குடும்பமாய் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கொண்டு வாழ்ந்து வந்தன. இந்த சோலைகளும் நம் குடும்பங்களும் ஒன்று தான். இரண்டும் நம் மண்ணின் அடையாளங்கள். வாழ்க்கை நெறியை உணர்த்துபவை. வாழ்வில் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கை என்னும் நீரோடை மகிழ்ச்சியாய் அதன் வழியே ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்று இந்த சோலைகளை போலவே ஒற்றுமையான குடும்பங்களும் அழிந்து
கொண்டு இருக்கின்றன. சோலைகள் அழிந்து சில பைன் மரங்கள் பணம்  என்னும் காரணம் ஒன்றிர்க்காக புதிதாய் துளிர் விட்டு கொண்டு  இருக்கின்றன." என்றார்.
திடீர் என்று தொலைவில் இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தை உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் எங்களை நோக்கி திரும்பினார்.
 "அந்த தனி பைன் மரங்களால் இந்த மண்ணிற்கு எந்த பயனும் இல்லை. தீமை மட்டுமே உண்டு. இந்த பைன் மரங்களில் இருந்து மண்ணை காப்பாற்ற அரசாங்கத்தால் முடியாது. உங்களால் மட்டுமே முடியும். எப்படி இந்த சோலைகளை புதுப்பிக்க முடியுமோ அதே போல் குடும்பங்களையும் வளம் படுத்த முடியும். இரண்டுமே இயற்கை. நம் மண்ணின் சொத்துக்கள். நம் அடையாளங்கள். முயலுங்கள். இந்த மண் உங்களை நம்பியே. கிளம்புவோம் இன்னும் 5 நிமிடங்களில் மழை இங்கு வந்து விடும். அதற்குள் நாம் ஒரு  அருவியை கடக்க வேண்டும்" என்று கூறிக் கிளம்பினார்.
நாங்களும் புதிய சிந்தனையோடு நடக்க ஆரம்பித்தோம். 
பயணிப்போம்...

ஞாயிறு, 23 மே, 2010

அலையாய் பயணங்கள்- மௌனத்தை நாடி

பிறவிக் கரை-
நீயோ ஆழ்கடல் மௌனம்!
மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
ஆர்ப்பரிப்பாய் மனம்...
மௌனமாய் நீ...
ஆர்ப்பரிக்கும் வரை மௌனம் புலப்படுவதில்லை -
மௌனமோ என்றும் ஆர்ப்பரிப்பதில்லை!!!




எம்பிரானே!
மௌனத்தின் சிறப்பு மௌனத்தால் அறியப்படுவதில்லை
இதோ
இவ்ஆர்பரிப்புகளுக்கு நடுவேயே அதன்  அர்த்தம் புரியும்
என்றோ
காலத்தால் அலையாய் இப்பயணம்?

உன் எண்ணப்படியே பயணிக்கின்றோம்
வழிகள் நீ தந்தவை...
பயணமும் நீ வகுத்தவை...
பயணிப்பது மட்டுமே நாங்கள் செய்பவை!!!

வழித்துணையாய் நீ இருக்கையில்
கவலைகள் எதற்கு இவ்வாழ்க்கையில்!!!   

சனி, 15 மே, 2010

இயற்கையைத் தேடி - 2


"கண்களை திறங்கள்".
இயற்கையின் அமைதியை குலைக்காதவாறு ஒலித்தது அந்த குரல்.
மெதுவாய் கண்களை திறந்தேன். கண் குளிர்ந்தது.
பசுமை.
சுற்றிலும் பசுமை.
காடுகள் எங்களுக்கு கீழே சுற்றி பரந்து விரிந்து கிடந்தன. கொடைக்கானலுக்கு 20கிமீ மேலே உள்ள மலையிலா நான் இப்போது இருக்கின்றேன்!, நினைக்கும் போதே சற்று பிரமிப்பாய் இருந்தது. 
"என்ன உணர்ந்தீர்கள்" தொடர்ந்தார் பேராசிரியர் கந்தசாமி, எங்களது இந்த பயணத்தின் வழிகாட்டி. இவர் இல்லை என்றால், நான்கு நாட்கள் நாங்கள் காட்டினுள் தங்கி இயற்கையை படிப்பதற்கு வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இருக்க வாய்ப்பே இல்லை.

"அமைதி". ஆச்சரியமாய் அங்கு இருந்த அனைவரும் ஒரே பதிலைக் கூறினோம்.


புன்னகைத்தார்.
"ஏன் இங்கு அமைதி நிலவுகிறது தெரியுமா?" என்றார்.
".... இங்கே மனிதர்கள் இல்லை.... அதனாலயா?" தயக்கத்துடன் பதிலளித்தான் ஒருவன்.
"ஆம்! அதனாலே தான்!!!. இங்கே நம்மையும் சில வன அதிகாரிகளையும் தவிர மிக நெருங்கிய ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி நமக்கு 25 கிமி கிழே. அதான் இங்கே அமைதி நிலவுகிறது. மிருகங்களும் நிம்மதியாய் உலவுகின்றன." என்றார் நிதானமாய். "சரி! நீங்கள் ஏன் இங்கு வந்து இருக்கின்றீர்கள் என்று தெரியுமா?" தொடர்ந்தார் பேராசிரியர்.

"இயற்கையை படிக்க..." என்றான் ஒருவன்.
"ஹ்ம்ம்ம்... சரி."
"இயற்கையை ரசிக்க..." என்றான் இன்னொருவன்.
"ஹ்ம்ம்ம்... இதுவும் சரி தான்.!! ஆனால் எப்படி இயற்கையை படிப்பீர்கள்?... சொல்லுங்கள்" என்றார்.
இம்முறை கூட்டத்தினுள் இருந்து பதில் வரவில்லை.
அவரே தொடர்ந்தார்,
"இயற்கையை புத்தகத்தை கொண்டு படிக்க முடியாது. இயற்கையுடன் வாழ்வதன் மூலமே அதனை படிக்கமுடியும். அதற்காகத்தான் நாம் இங்கே வந்து இருக்கின்றோம். இதோ மேற்குத் தொடர்ச்சி மலை உங்களை அன்போடு அரவணைத்துக் கொண்டு நிற்கின்றது. இந்த மலையில் தான் நாம் நான்கு நாட்கள் தங்கப்போகிறோம். தனிமையில் இயற்கையோடு!. கற்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் காலமோ வழக்கம் போல சிறிதே கிடைத்து இருக்கின்றது. எனவே உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. கவனமாய் கவனியுங்கள்." என்று கூறி முடித்து அவர் அமர்ந்திருந்த பாறையில் இருந்து எழுந்தார்.

"அதோ அங்கே அடர்த்தியாய் மரங்கள் தெரிகின்றதே. அவை என்ன என்று தெரியுமா" என்றவாறே தொலைவில் இருந்த ஒரு இடத்தை நோக்கி கை காட்டினார்.
அனைவரும் அவர் காட்டிய திசையை நோக்கி திரும்பினோம். அங்கே வித்தியாசமாய் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. மற்ற மலைகளில் இருந்ததை விட சற்று அடர்த்தி அதிகமாய் அந்த இடத்தில் மரங்கள் இருந்தன. அவ்வளவு தான்.

"அவைகளும் காடுகள் தானே" என்றான் ஒருவன்.
"காடுகளா... அவைகள் பொக்கிசங்கள். நம் வாழ்வின் ஆதாரங்கள்... அவைகள் சோலைகள்...!"
"சோலைகளா! அப்படி என்றால்?" என்றேன்.
நின்றார்.
"காடுகள் என்றால் என்ன?"
"ஹ்ம். மரங்கள் அடர்த்தியாய் இருக்கும் பகுதி." என்றேன்.
"சரி... ஆனால் நாம் மலை ஏறி வந்த பொழுது இருந்த மரங்கள் அடர்த்தியாய் இல்லையே. அவைகளையும் நாம் காடு என்று தானே சொல்கின்றோம்." என்றார்
இம்முறை யாரிடம் இருந்தும் பதிலில்லை. எனவே தொடர்ந்தார்
"காடுகள் பல வகைப்படும். சோலைகள் அவற்றில் ஒரு வகை.சோலைகள் நம் நாட்டின் ஆதி வனங்கள். இயற்கை நம் நாட்டிற்க்கு வழங்கிய செல்வம். சோலைகளும் புல்வெளிகளுமே நம் நாட்டின் இயற்கைச் சொத்துகள்.அவற்றை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் இன்று வருத்தப்பட வேண்டி இருக்கின்றது" என்றார்
"வருத்தமா!!!" என்றேன் சற்று குழப்பமாய்
"ஆம்!!! வருத்தம் தான்...இன்று அவை அழிந்து கொண்டு இருக்கின்றன." என்றார்
"அழிந்து கொண்டா!... ஏன்?" என்றான் ஒருவன்.
"நீ ஒரு நாளைக்கு எத்தனை முறை தேநீர் குடிப்பாய்?"என்றார்    
"மூன்று முறை"
"அதுவும் ஒரு காரணம் தான். நீங்கள் பருகும் தேநீர்க்காக சோலைகள் தேயிலைத் தோட்டங்களாக உருமாறிக் கொண்டு இருக்கின்றன" என்றார்.
"சோலைகள் அழிகின்றது என்று சொல்லுகின்றீர்கள்... இதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா" என்றேன்
"ம்ம்ம். ஆதாரங்கள் இல்லை என்றால் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் வெல்ல முடியுமா?" என்றார்.
"முடியாது"
"அதே போல தான்!! நம் வாழ்வின் ஆதாரங்கள் ஆன இந்த சோலைகள் இல்லை என்றால் நம் வாழ்வையும் வெல்ல முடியாது. நேரில் பார்த்தால் நீங்களே சோலையின் சிறப்பை அறிந்து கொள்வீர்கள். நாளை சோலையுள் செல்லலாம். இன்று நேரமாகி விட்டது. இருட்டுவதற்குள் நாம் நம் கூடாரங்களை அடைய வேண்டும். வன விலங்குகள் நடமாடும் பகுதி இது" என்று கூறி மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தார்.

நாங்களும் பின் தொடர்ந்து இறங்க ஆரம்பித்தோம்... மலையில் இருந்து காட்டை நோக்கி!!!

பயணிப்போம் .... சோலையினுள்...
மதி கெட்டான் சோலையினுள்!!!

ஞாயிறு, 2 மே, 2010

இயற்கையைத் தேடி - 1

மழை...
இதோ கொட்டி விட்டு அடங்கி இருக்கின்றது. உலகமே குளிர்ந்து போனது போல் உணருகின்றேன். உண்மையும் அது தான். நாணம் என்னும் முகில் தன்னை மறைக்காது இதோ வானமகள் நட்சத்திரங்கள் என்னும் நகைகளை சூட்டிக்கொண்டு தெளிவாய் புன்னகைக்கிறாள்.

நான் என்னை மறந்து கண்டு கொண்டு நிற்கின்றேன்.

மனிதன் பறப்பதில்லை என்று யார் சொன்னது?... இதோ இந்த குளிர்ந்த தென்றல் என்னை வந்து தீண்டும் போது சற்று விண்ணில் பறந்து சென்று அந்த நிலவை கண்டு கொண்டு தான் வருகின்றேன்... தென்றலோடு தென்றலாய்!!!

யாருக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் முளைக்கும் தருணம் இது. காதலர்களுக்கு அவர்களது காதலர்களை பற்றியும், காதலிக்க நினைப்பவர்களுக்கு காதலை பற்றியும் வார்த்தைகள் பொழியும் நேரம்!!!
நானோ மழைக்காதலன்... இல்லை இல்லை... இயற்கையின் காதலன்!!! நிச்சயமாய் கவிதைகள் கொட்ட வேண்டிய நேரம் தான். ஆனால் ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன.

என் அன்னை அழுது கொண்டு இருக்கின்றாள். ஆம்! இயற்கை அன்னை அழுது கொண்டு இருக்கின்றாள். அவளை நினைத்து அவள் அழவில்லை! "ஐயோ! நான் இன்றி என் செல்லங்கள் இல்லை என்பதை அறியாது என் பிள்ளைகளே என்னை அழித்துக் கொண்டு இருக்கிறார்களே!" என்று நம்மை எண்ணியே அவள் அழுது கொண்டு இருக்கின்றாள். மொழிப்பெயர்க்க பட முடியாத கவிதை அவள். அவளை காக்க வேண்டிய பொறுப்பை உணருகின்றேன்! இந்த பதிவுகள் அவளை பற்றியே!!!

வாருங்கள் தோழர்களே - இயற்கையை உணர்வோம்...காப்போம்...ரசிப்போம்...அவளுடன் வாழ்வோம் - இயற்கையாய்!!!

முதல் பதிவு - வைகையில் கிரிக்கெட் விளையாடி கண்டு இருப்போம்... தண்ணீர் ஓடி???. ஏன்?.... வைகையில் தண்ணீர் இல்லாததற்கு கொடைக்கானலில் சில சோலைகள் அழிந்ததும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவதற்கு எளிதாய் இருகின்றதா? உண்மை அது தான்.

ஆனால், முதலில் சோலைகள் என்றால் என்ன என்பதையும் கொடைகானலையும் சற்று தெரிந்து கொள்வோம்! இயற்கையை தேடி ஒரு பயணம்...தொடங்குகிறது கொடைகானலிற்கு 30  கிலோமீட்டர் மேல் ஒரு காட்டில்... பெயர் பேரிஜம்(Berijam)!!! பயணிப்போம்...!!!  

"இயற்கை நம் அனைவரின் தேவையை பூர்த்தி செய்ய வல்லமை பெற்று இருக்கின்றது. நம்முடைய பேராசைகளை பூர்த்தி செய்யும் வல்லமை அதற்கு இல்லை" - மகாத்மா காந்தி    

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...