சென்ற பதிவினில் கிருத்துவ சமயத்தில் இயேசு கூறியதாய் வருகின்ற ஒரு கதையினையும் அதற்கான விளக்கத்தினையும் கண்டோம். 'தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த உலகப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை ஒவ்வொரு மனிதனும் அறிந்து இருக்கின்றான். ஆனால் இறைவனின் விருப்பத்திற்கேற்ப அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது எவ்வாறு என்பதனைப் பற்றி மட்டும் அவன் அறிந்துக் கொள்ள விரும்புவதில்லை. செல்வத்தினை எவ்வாறு தன்னுடைய நன்மைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்று அவன் எண்ணுகின்றானே ஒழிய அந்த செல்வத்தை வைத்து எவ்வாறு மக்கள் அனைவருக்கும் நன்மையினை செய்யலாம் என்று அவன் எண்ணுவதில்லை. அதன் விளைவாக அவன் இறைவனுக்கு சேவை செய்வதற்கு பதிலாக செல்வத்தை தன்னுடைய எசமானனாக ஏற்றுக் கொண்டு செல்வத்திற்காகவே அவன் வேலை செய்து கொண்டிருக்கின்றான்' என்பதே அந்த பகுதியின் அர்த்தமாகும். இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் அந்த கதையினை நாம் எவ்வாறு நம்முடைய சமூகத்தில் பொருத்திப் பார்க்கலாம் என்பதையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் சுய சார்பு பொருளாதாரம் என்பது திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. கல்வி, மருத்துவம், நல்ல உணவு என்பன போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாகி இருக்கின்றது. கடன் வாங்கித் தான் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை ஒரு மனிதனால் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலை நம்முடைய சமூகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பொருளாசை என்கின்ற ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு நுகர்வுக் கலாச்சாரமானது பேராசை மிகுந்த ஒரு சமூகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. எளிமையான வாழ்வினை வாழ விரும்பும் மனிதர்களுக்கு அத்தகைய வாழ்வானது வெறும் ஒரு கனவாகவே காட்சி அளிக்கக்கூடிய ஒரு நிலை தான் இன்று பெரும்பாலும் இருக்கின்றது. விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கின்றனர். சிறு தொழில் செய்வோரையும் இயற்கை வளங்களையும் கொள்ளை அடித்து நிர்மூலமாக்க பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கின்றது எது நடக்கின்றது என்பதனை ஒருவன் அறிந்து கொள்ளும் முன்னரே அவனை அந்த அடிமைக் கல்வி முறையானது கடனாளியாக்கி அவனை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சேர்த்து விடுகின்றது. சரி, படிக்கும் பொழுது தான் சிந்திக்க நேரமில்லை, இப்பொழுதாவது அவன் சிந்திப்பான் என்று பார்த்தோமே என்றால், அப்பொழுதும் அவனை சிந்திக்க விடாதவாறு நுகர்வுக் கலாச்சாரமானது பொருளாசையால் அவனை தொடர்ந்து கடனாளியாகவே வைத்து இருக்கின்றது. அத்தகைய பொருளாசையையும் மீறி அவன் சிந்திக்க முற்பட்டான் என்றால், விண்ணளவு உயர்ந்திருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அவனை அச்சம் கொள்ள செய்து விடுகின்றன. அந்த அச்சத்தினாலேயே அவன் தான் விரும்பிய வாழ்வினை வாழாது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றான். இது தான் இன்றைக்கு நமது சமூகத்தில் நாம் பரவலாக காணக்கூடிய நிலையாக இருக்கின்றது. இதனை நாம் சுருக்கமாக கண்டோம் என்றால்...ஒரு மனிதன் சுயமாக நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இருக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பானது திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிற்க. இப்பொழுது இந்த சூழலைத் தான் நாம் இயேசு கூறிய அந்த கதையோடு பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அந்த கதையில் மக்கள் அனைவரும் அந்த பணக்கார எசமானனுக்கு கடன்பட்டு இருக்கின்றனர். அந்த எசமானனாக நமது அரசியல்வாதிகளையும்/பன்னாட்டு நிறுவனங்களையும் வைத்துக் கொள்ளலாம். கடன்பட்டு இருக்கும் மக்களாக நம்முடைய ஏழை எளிய மக்கள்/விவசாயிகள்/மீனவர்கள் போன்ற பொது ஜனங்களை வைத்துக் கொள்ளலாம்.

அந்த பணக்கார எசமானனிடம் பணி புரிகின்ற உக்கிராணியாக நம்மை (பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிபவர்கள்/அரசாங்க ஊழியர்கள்) வைத்துக் கொள்ளலாம். நாம் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்...எப்படி வால்மார்ட் நிறுவனம் வந்தால் உள்நாட்டு வியாபாரிகள் நசிந்து போவார்கள் என்று, எவ்வாறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள் கடன்காரர்களாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று, எவ்வாறு நம்முடைய நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்று நாம் அனைத்தையும் கவனித்துத் தான் கொண்டிருக்கின்றோம். மேலும் நம்முடைய எசமானன் நம்மை எப்பொழுது வேண்டும் என்றாலும் துரத்தி விட்டு விடுவான் என்பதனையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம் (2008 அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியின் பொழுது வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் அறிக்கை, என்று நாம் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்).

மேலும் அவர்கள் இப்பொழுது நம்மைத் துரத்தி விட்டார்களே என்றால், நம்மால் வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்பதனையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம். விவசாயம் கிடையாது...நீர் நிலைகள் கிடையாது...பொருள்களின் விலை மிகவும் அதிகம், ஆரோக்கியம் கிடையாது...என்று ஒரு மிகவும் வருத்தகரமான நிலைக்கே நாம் செல்ல வேண்டி இருக்கும் என்பதனையும் நாம் அறிந்தே தான் இருக்கின்றோம். மேலும் நம்மில் பலரும் கடனாளியாகவும் இருக்கின்றோம். எனவே அப்படி ஒரு இக்கட்டான நிலையில் நாம் சிக்கிக் கொண்டால் அந்நிலையிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம் (சேமிப்புகள், தங்கம், வீடு, உப தொழில்கள்). நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை நாம் அறிந்தே தான் இருக்கின்றோம். ஆனால் அந்த வழிமுறையானது வெறும் சிறிதளவே பயன் தருகின்றது. உதாரணமாக, குடிக்க நீர் இல்லாமல் போயிற்று என்றால் நாம் எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் வர போவதில்லை. மேலும் ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பினை மட்டும் முதன்மையாக உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகத்தினையே அந்த செயலானது கட்டமைக்கின்றது. எனவே இங்கே தான் நாம் மாற்றி சிந்திக்க ஆரம்பிக்க வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக நம்முடைய ஜல்லிக்கட்டு பிரச்சனையையே எடுத்துக் கொள்வோம். பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய காளை மாடுகளை வியாபார நோக்கினில் அழிக்கப் பார்க்கின்றன. அத்துடன், ஆரோக்கியமான உணவினையும் சுய சார்பு வாழ்வு முறையினையும் அவர்கள் அழிக்க முயல்கின்றனர். அவர்களை நேரடியாக நம்மால் எதிர்க்க முடியாது. இந்நிலையில், நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த ஊரினில் ஒன்றிணைந்து மாதம் சிறு தொகையினை ஒதுக்கி நாட்டு மாடுகளை வளர்க்கலாம்/வளர்ப்பதை ஊக்குவிக்கலாம். சிறு விவசாயிகளை அவ்வாறு நாம் ஆதரிப்பதன் வாயிலாக இந்த சமூகத்தில் நாமும் ஒரு அங்கத்தினர் தான் என்று நாம் பொறுப்புடன் ஒன்றிணைகின்றோம். அந்த விவசாயிகளும், அவர்கள் தனியாளாக இந்த உலகத்தில் இல்லை என்பதனை உணர்ந்து, சமூகத்திற்காக அவர்கள் செய்கின்ற பணியினை நாம் அனைவரும் அறிந்து அவர்களுடன் ஒன்றாக இருக்கின்றோம் என்ற தெளிவுடன் தொடர்ந்து தைரியமாக அவர்கள் பணியினை செய்கின்றனர். நமது அந்த செயலால் சமூகமானது ஒரு நல்ல சமூகமாக மாறுகின்றது. ஒருவேளை நம்மையும் அந்த எசமானர்கள் துரத்தி விட்டார்கள் என்றால் நம்மை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிந்தனையும் ஆற்றலும் அந்த சமூகத்திற்கு மிகுதியாகவே இருக்கத் தான் செய்யும்.

ஆனால் கூறுவது போல் அவ்வளவு எளிதான ஒரு காரியம் இது அல்ல என்பதையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம். காரணம், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு இயல்புடன் இன்று இருக்கின்றான். எனவே யாரை நம்புவது/அனைத்தும் ஒழுங்காகத் தான் நடைபெறுகின்றதா என்ற கேள்விகள் இயல்பாகவே எழத் தான் செய்யும். இங்கே தான் ஆன்மீகமானது வர வேண்டி இருக்கின்றது. மனிதர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்றும் ஒற்றுமையாக அவர்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் நிம்மதியாக வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறி மனிதர்களை ஒற்றுமையாக்க இங்கே தான் ஆன்மீகம் பேசும் நல்லோர்கள் வர வேண்டி இருக்கின்றது. மனிதர்களை அன்பினால் ஒன்றிணைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றுமே கிடையாது (ஆனால் அந்த வேலையை அவர்கள் செய்வதே இல்லை என்பது வேறு கதை). நிற்க.

இதுவே தான் இயேசு கூறியஅந்த உவமைக் கதையின் அர்த்தமாகும். 'உலகியல் பொருட்களைக் கொடுத்து நண்பர்களைச் சம்பாதியுங்கள்' என்று அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் இது தான். மனித சமூகத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களுடைய பொருட்களை செலவிடுவதனை கண்டு உண்மையான அன்புடைய மக்கள் உங்களுடன் அன்பினால் ஒன்றிணைவார்கள். அவ்வாறே தான் நீங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது என்பதே இயேசு கூறிய கூற்றாகும்.

அதாவது மனிதர்கள் தாங்கள் கொண்டிருக்கும் உலகியல் செல்வங்களின் மூலமாக இந்த உலகினை நல்லதொரு உலகமாக மாற்ற முயல வேண்டி இருக்கின்றது. அவ்வாறு அவர்கள் முயற்சிக்கும் பொழுது 'பொறாமை,பொருளாசை,பேராசை,பயம்' போன்ற தீய எண்ணங்களால் நல்ல காரியங்கள் நிகழாமல் போய் விடுவதனை தடுத்து அன்பினால் மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது ஆன்மீகவாதிகளின் கடமையாக இருக்கின்றது (அவர்களை அவ்வாறு முயற்சிக்க வைப்பதும் ஆன்மீகவாதிகளின் கடமையாகத் தான் இருக்கின்றது). ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பது தான் வருந்தத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது. சரி இருக்கட்டும்....அதனைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் காணலாம்...!!!

உலக பொருட்களைக் கொண்டு மனிதர்களை தீமையானது பிரித்து வைத்து இருக்கின்றது. எனவே மனிதர்கள் உலக பொருட்களின் மீது உள்ள தங்களது பேராசையினை விட்டுவிட்டு, அந்த பொருட்களை மற்ற மக்கள் அனைவருக்கும் உதவும்படி பயன்படுத்தி ஒற்றுமையான ஒரு சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக இருக்கின்றது என்பது தான் இயேசு கூறிய உவமையின் பொருளாகும்.

பி.கு:

இந்த பதிவுக்கு எதுக்காக டால்ஸ்டாய் தோட்டம் 'TOLSTOY FARM' என்ற ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கின்றேன் என்று சிலர் யோசிக்கலாம். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் வண்ணம் காந்தி அவர்கள் உருவாக்கிய அந்த தோட்டத்திற்கும் நாம் இந்த பதிவில் கண்ட கருத்துக்கும் தொடர்பு இருப்பதால் தான் அந்த படத்தினை பயன்படுத்தி இருக்கின்றேன். டால்ஸ்டாய் தோட்டத்தினைப் பற்றி காந்தி அவர்கள் தன்னுடைய சுய சரிதையில் விலாவரியாக எழுதி இருக்கின்றார். விருப்பமுள்ளோர் அதனைப் படிக்கலாம். இன்றைய சூழலில், தோழர் செந்தமிழன் மணியரசன் அவர்கள் நடத்தும் செம்மை வனமும் கொள்கையில் இந்த முறையினை ஒத்துஇருப்பதனைப் போன்றே இருக்கின்றது.

1 கருத்துகள்:

மனிதர்களை அடிமைகளாக்கும் கார்பரேட் அவசர உலகத்தில் ... ஒர் கனம் நிற்க வைத்து ... சிந்திக்க வைக்கும் கட்டுரை

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு