சென்ற பதிவினில் 'மனிதன் பாவம் செய்வான்' என்று தெரிந்தும் இறைவன் மனிதனைப் படைத்ததற்கு காரணம் 'மனிதனால் பாவம் செய்யாமல் இருக்க முடியும் என்றும் அவன் அடிப்படையில் நல்லவனாக இருக்கின்றான்' என்று அவர் அறிந்திருந்ததே ஆகும் என்றே நாம் கண்டிருந்தோம். இப்பொழுது இதனைப் பற்றியே தான் நாம் மேலும் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதனை பாவியாகவோ அல்லது பலவீனனாகவோ படைத்திருக்கவில்லை. இயேசுவின் கூற்றின்படி மனிதன் இறைவனின் மகனாகவே இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனுள்ளும் 'பரலோக இராஜ்யமானது வீற்று இருக்கின்றது' என்றே இயேசு தெளிவாக கூறி இருக்கின்றார். மேலும் ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவனானவர் வீற்று இருக்கின்றார் என்றுமே கிருத்துவம் கூறுகின்றது. ஆகையால் இத்தகைய சிறப்புடன் படைக்கப்பட்டு இருக்கக்கூடிய மனிதனானவன் நிச்சயம் அடிப்படையில் தீயவனாகவோ அல்லது பலவீனனாகவோ இருக்க முடியாது. இறைவன் பலவீனமான ஒருவனை தன்னுடைய மகன் என்று படைத்திருக்கவில்லை. மேலும் இறைவன் பலவீனமான ஒருவனைப் படைத்தார் என்று கூறுவதும் இறைவனின் தன்மைக்கு சிறிது கூட பொருந்துவதில்லை. நிற்க

இறைவன் மனிதனை பாவியாகப் படைக்கவில்லை...சரி. மனிதனை அவர் நல்லவனாகவே படைத்து இருக்கின்றார். அதுவும் சரி...ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனிதன் பாவத்தில் விழுந்து பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றானே அது எவ்வாறு? மனிதனுடைய இன்றைய செயல்களை பார்த்தால் அவன் அடிப்படையில் தீயவனாகவே இருக்கின்றான் என்றே நிச்சயமாக ஒருவருக்குத் தோன்றும். அந்நிலையில் மனிதன் அடிப்படையில் நல்லவன் என்று எவ்வாறு கூற முடியும்? என்பன போன்ற கேள்விகள் நிச்சயமாக இங்கே எழத்தான் செய்யும். அந்த கேள்விகளுக்கான விடையினை நாம் இப்பொழுது காண முயற்சிக்கலாம்.

கிருத்துவ நம்பிக்கைகளின்படி மனிதனானவன் சாத்தானின் தூண்டுதலினாலேயே பாவத்தில் விழுகின்றான். இறைவன் மனிதனுக்கு விதித்திருந்த கட்டளையை மீறி நடக்கும்படியே சாத்தானானவன் மனிதனைத் தூண்டினான் என்றும் மனிதன் அவ்வாறே அந்த கட்டளையை மீறியதால் பாவத்தில் விழுந்தான் என்பதே தான் கிருத்துவ சமயம் இன்று கூறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தினை சற்று விரிவாக காண்பது நலமாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

இறைவன் உலகத்தைப் படைத்து அதனை ஆட்சி புரியும்படிக்கு மனிதனையும் படைக்கின்றார். அந்த உலகத்தில் குறிப்பிட்ட ஒரு மரத்தினை நட்டி வைத்து, அந்த மரத்தின் கனிகளை மனிதனானவன் உண்ணக் கூடாது என்றுமே ஆவர் மனிதனுக்கு கட்டளையிடுகின்றார். ஆனால், சாத்தானோ மனிதனிடம் வந்து, அந்த மரத்தின் கனிகளைத் தின்றால் இறைவனைப் போன்ற ஆற்றலினை அடையலாம் என்று ஆசை காட்டி அந்த மரத்தின் கனிகளை உண்ணுமாறு அவனைத் தூண்டுகின்றது. மனிதனும் அந்த தூண்டுதலில் விழுந்து அந்த கனியை உண்ணுகின்றான். பின்னர் இறைவன் மனிதனைத் தேடி வரும் பொழுது, மனிதனானவன் அவருடைய கட்டளையினை மீறி விட்டான் என்று அறிந்து அவனை அவனை சபிக்கின்றார். மனிதன் இறைவனிடம் இருந்து பிரிந்து பாவத்தில் விழுகின்றான். இது தான் கிருத்துவ சமயம் 'மனிதன் பாவத்தில் விழுந்ததை'க் குறித்து கூறுகின்ற விடயமாகும்.

இதனை நாம் சற்று கூர்ந்து கவனித்தோம் என்றால், 'இறைவன் மனிதனுடன் இல்லாத ஒரு நேரம் பார்த்து சாத்தான் மனிதனை ஏமாற்றி அவனை பாவம் செய்ய வைத்து விட்டான் என்றும், பின்னர் இறைவன் எப்பொழுது மனிதனைக் காண வருகின்றாரோ அப்பொழுது அவன் தன்னுடைய பேச்சினை மீறி இருப்பதனை அறிந்து அவனைத் தண்டிக்கின்றார்' என்பதனைப் போன்று தான் நமக்குத் தோணுகின்றது. அதாவது இறைவன் தனியொரு நபராக இருக்கின்றார்...மனிதன் ஒரு தனியான நபராக இருக்கின்றான், அவர்களுக்கு இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதனைப் போன்ற ஒரு பிம்பத்தைத் தான் அந்த விடயமானது தருகின்றது.

ஆனால் 'இறைவன் என்றும் மனிதனுள் இருந்து கொண்டிருக்கின்றார்' என்கின்ற பவுலின் கூற்றினை நாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தோமே என்றால், மேலே நாம் கண்ட அந்த விடயமானது முற்றிலுமாக உடைந்து போகின்றது. மனிதனுள் எப்பொழுதுமே இறைவன் இருந்து கொண்டிருக்கின்றார்...அந்நிலையில் இறைவன் மனிதனை விட்டுப் பிரிந்து இருந்த பொழுது மனிதன் சாத்தானால் ஏமாற்றப்பட்டான் என்பது முற்றிலுமாக பொருந்தாது போகின்றது. மேலும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் மனிதன் பாவத்தில் வீழ்வான் என்று இறைவன் அவனைப் படைக்கும் முன்னரே அறிந்திருந்தார் என்று. அதனால் தான் உலகைப் படைக்கும் முன்னரே, மனிதனாக தானே உலகிற்கு வர வேண்டி இருக்கும் என்பதனை அவர் அறிந்திருந்தார் என்பதனையும் நாம் முன்னர் கண்டு இருக்கின்றோம்.

இதன் அடிப்படையில் நாம் கண்டோம் என்றால், சாத்தான் மனிதனை ஆசைகளைக் காட்டி சோதிப்பான் என்பதனை இறைவன் அறிந்தே தான் இருக்கின்றார். ஆயினும், அவர் சாத்தானை தடுத்து நிறுத்தவோ அல்லது மனிதனுக்கு வெளியே இருந்து எச்சரிக்கை செய்யவோ முயலவில்லை. நடக்கும் நிகழ்வுகளை அவர் பார்வையிட்டுக் கொண்டு மட்டுமே இருக்கின்றார். ஏன் அவர் அவ்வாறு ஒன்றுமே செய்யாது இருந்தார் என்ற கேள்விக்கான பதிலினை நாம் தேடினோமே என்றால் நமக்கு விடையாகக் கிட்டுவது இது தான் - 'சாத்தானானவன் ஆசைகளைக் காட்டி தன்னை மயக்குகின்ற பொழுது மனிதனானவன் என்ன செய்யப் போகின்றான் என்பதனை பார்ப்பதற்காகவே அவர் சாத்தானை தடுக்கவில்லை'.

அட...என்னங்க சொல்றீங்க...முந்தைய பதிவுல 'மனிதன் பாவத்தில் வீழ்வான்னு இறைவன் அறிந்திருந்தார் அதனால் தான் உலகத்திற்கு மனிதனாக வருவதற்கு அவர் தயாராக இருந்தார் அப்படின்னு சொன்னீங்க...ஆனால், இப்பொழுதோ 'மனிதனானவன் என்ன செய்ய போகின்றான் என்று பார்ப்பதற்காக இறைவன் காத்திருந்தார்' அப்படின்னு சொல்றீங்க...நீங்கள் கூறுவது தெளிவில்லாமல் இருக்கின்றதே...மனிதன் என்ன செய்வான் என்று இறைவன் அறிந்திருந்தாரா இல்லையா? தெளிவாகக் கூறுங்கள் என்று இங்கே நீங்கள் நிச்சயமாக வினவ முடியும். அதற்கான விடையை நாம் காண வேண்டும் என்றால் நாம் மனிதனைக் காண வேண்டி இருக்கின்றது.

முந்தைய பதிவினில் நாம் கண்டு இருக்கின்றோம்...மனிதனுக்கு 'சுயமாக முடிவெடுக்கும்' ஆற்றலை இறைவன் வழங்கி இருக்கின்றார். அவன் மற்ற விலங்குகளைப் போல் இருப்பவன் அல்ல. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு சிங்கமானது சிங்கமாகவே தான் இருக்கின்றது. அதன் குணநலன்கள் மாறி இருப்பதில்லை. மேலும் சிங்கங்கள் அனைத்தும் ஒன்றைப் போலவே தான் இருக்கின்றன. அனைத்து மிருகங்களுக்கும் அதே நிலை தான் பொருந்துகின்றது. ஆனால் மனிதனோ, அப்படி இருப்பதில்லை...ஒவ்வொருவனும் ஒவ்வொரு குணநலன்களைக் கொண்டு இருக்கின்றான். அவன் அவ்வாறு இருப்பதற்கு காரணம் அவனிடம் இருக்கின்ற 'சுயமாக முடிவெடுக்கும்' ஆற்றலே ஆகும். எனவே தான் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சுய சிந்தனைகளுக்கு ஏற்ப ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருக்கின்றான். அந்த 'சுயமாக சிந்திக்கும்' ஆற்றலின் காரணமாகவே தான் அவனால் தீமையும் செய்ய முடிகின்றது...நன்மையையும் செய்ய முடிகின்றது. அதனாலேயே தான் கிருத்துவ நம்பிக்கையின்படி மனிதனுக்கு மட்டும் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது. மேலும் மனிதன் இறைவனின் மகனாக இருக்கின்றான் என்றும் மனிதனுள் இறைவன் வீற்று இருக்கின்றான் என்றுமே கிருத்துவ சமயம் கூறுகின்றது. இதன் அடிப்படையில் தான் நாம் சாத்தான் மனிதனை ஆசைகளின் மூலமாக தூண்டிய நிகழ்வை காண வேண்டி இருக்கின்றது.

சாத்தான் ஆசைகளைக் காட்டி மனிதனைத் தவறு செய்யத் தூண்டுகின்றது...அதே நேரம் மனிதனுள் இருக்கின்ற அந்த நல்ல குணமானது (மனிதனுள் இருக்கும் இறைத்தன்மை) 'தவறு செய்யாதே' என்று மனிதனிடம் அவனுள் இருந்தவாறே வலியுறுத்துகின்றது. இந்த இரண்டு கருத்துகளுக்குள் நடக்கின்ற யுத்தமானது மனிதனின் மனதிலேயே நடக்கின்றது. அந்த இரண்டினுள் ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்து எடுக்கும் ஆற்றல்/உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அது அவனது உரிமை...என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளும் பொறுப்பு மனிதனுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்த பொறுப்பினில் இறைவன் அத்துமீறி தலையிடுவதில்லை.

எனவே தான், சாத்தான் மனிதனை ஆசைகளைக் காட்டி தூண்டுகின்ற பொழுது, இறைவன் மனிதன் என்ன செய்வான் என்பதனை அறிந்து கொள்வதற்காக அந்த நிகழ்வினில் தலையிடாது வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

மனிதனால் சாத்தானின் தூண்டுதல்களை நிராகரித்து இருக்கவும் முடியும்...அதனை ஏற்று இருக்கவும் முடியும். அவனுடைய அந்த முடிவானது முற்றிலுமாக அவனைச் சார்ந்தே இருக்க போகின்றது. அவனது வாழ்வினையே அது பாதிக்கப் போகின்றது. அந்த முடிவு அவனது பொறுப்பு. எனவே தான் இறைவன் மனிதனையோ அல்லது சாத்தானையோ தடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க சாத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கின்ற ஒரு போராட்டம். ஆசைகளை காட்டி சாத்தான் மனிதர்களை மயக்குகின்றது. சாத்தானின் அந்த சூழ்ச்சி வலையில் இருந்து தப்பிக்கும் ஆற்றலினை மனிதனானவன் பெற்றே தான் இருக்கின்றான். ஆனால் ஆசைகளில் இருந்து தப்பிப்பதோ அல்லது ஆசைகளில் விழுவதோ மனிதனானவன் எடுக்கின்ற முடிவுகளில் அடங்கி இருக்கின்றது. அந்த முடிவுகளைப் பொறுத்தே அவன் அந்த யுத்தத்தில் வென்றானா இல்லையா என்பது தெளிவாகும்.

இறைவனுக்கு மனிதனால் சாத்தானின் தூண்டுதல்களில் விழுந்து விட முடியும் என்பது தெரியும். அதனால் தான் அவர், அவ்வாறு அவன் வழி தெரியாது தவறாக ஆசைகளில் விழுந்து விட்டான் என்றால் அவனுக்கு சரியான வழியினை காட்டி சாத்தானை வெல்லும் வண்ணம் அவனைத் தயார்படுத்துவதற்காக, தான் மனிதனாக வர வேண்டும் என்று அறிந்திருந்தார். அதாவது 'மனிதன் பாவத்தில் வீழ்வான்' என்று இறைவன் அறிந்திருந்தார் என்று சொல்வதை விட 'மனிதனானவன் பாவத்தில் வீழலாம்' என்றே இறைவன் அறிந்திருந்தார் என்று கூறுவதே இங்கே சரியானதாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

சரி இருக்கட்டும்...!!! மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடக்கின்ற போர் என்றே நாம் மேலே சற்று கண்டிருந்தோம். இப்பொழுது அதனைப் பற்றியே தான் நாம் மேலும் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்....!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்எனவே மாற்றுக் கருத்துக்களும்கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு