இன்று உலகம் முழுவதும் அமெரிக்கமயமாகிக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கம் என்றே வெளியில் கூறப்பட்டாலும் அமெரிக்க கொள்கைகள், அமெரிக்க அணுகுமுறைகள், அமெரிக்க பாணியிலான வாழ்க்கைமுறை, அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதாரம் என்ற உண்மையில் அது அமெரிக்கமயமாக்கலைத் தான் குறிக்கின்றது. இந்நிலையில் நாம் உலகமயமாக்கலைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் அமெரிக்காவினைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலாளித்துவத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதுவும் குறிப்பாக தனியார்மயமாக்கல், பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்படுதல், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவி செய்தல் என்பன போன்ற நிகழ்வுகள் இந்தியாவினில் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் நாம் நிச்சயமாக அமெரிக்காவினைப் பற்றியும் முதலாளித்துவத்தினைப் பற்றியும் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. அவ்வாறு நாம் அவற்றைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு ஒரு மிக அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது மைக்கேல் மூரே (Michael Moore) அவர்கள் இயக்கி இருக்கும் 'முதலாளித்துவம் - ஒரு காதல் கதை' என்ற ஆவணப்படம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உண்மையான வெற்றியினைப் பெற்ற நாடென்று ஒரு நாட்டினை நாம் கூற வேண்டும் என்றால் அமெரிக்காவினைத் தான் நாம் கூற முடியும். ஏனைய உலக நாடுகள் அனைத்தும் பேரழிவை சந்தித்து இருந்த நிலையில் அமெரிக்கா அடைந்திருந்த இழப்போ 'பியர்ல் ஹார்பர்' துறைமுகம் மட்டுமே. வேறு எந்தத் தாக்குதல்களையும் அமெரிக்க மண்ணானது சந்தித்து இருக்கவில்லை.  அதே சமயம் இங்கிலாந்து, பிரான்சு, சோவியத் ஒன்றியம், செர்மானி, சப்பான் போன்ற நாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முற்றிலுமாக உருக்குலைந்து போயிருந்தன. மிகப்பெரிய இழப்புகளையும் கடன் சுமைகளையும் அவைகள் பெற்றே தான் இருந்தன. ஆனால் அமெரிக்காவோ மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் யுத்த காலத்தில் கடனுக்கு வழங்கி யுத்தத்தினால் மாபெரும் இலாபத்தினை அடைந்து இருந்தது. அன்றைய காலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் கண்ட வளர்ச்சி அசூரத்தனமானது. மற்ற நாடுகள் தங்களது நாட்டினை மறுகட்டமைப்பு செய்துக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்காவோ பொருள் உற்பத்தியில் எட்டுக் கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைய சூழலில் அதற்கு இருந்த ஒரே பிரச்சனை பொதுவுடைமை என்ற சோவியத் சித்தாந்தம் தான். ஆனால் மக்கள் அனைவரும் பெரிதாக கவலை இன்றி வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த அக்காலத்தில் பெரிய அளவில் பொதுவுடைமைக் கொள்கை அவர்களின் மத்தியில் பரவவில்லை. மேலும் தந்திரமான பிரசங்கங்களால் பொதுவுடைமைக் கொள்கை என்பது வாழ்விற்கு ஏற்ற ஒன்றல்ல என்பதனைப் போன்ற கருத்துக்களையும் அமெரிக்க அரசானது மக்களின் மத்தியில் பரப்பியே தான் வந்துக் கொண்டிருந்தது. இந்த அனைத்து விடயங்களையும் மிகவும் அருமையாக வரலாற்று நிகழ்வுகளின் மூலமாக நம் முன்னே கொண்டு வந்து வைக்கின்றது இந்த ஆவணப்படம்.

போட்டி என்று பெரிதாக யாரும் இல்லாத பொழுது வெல்வது என்பது எளிதான விடயம் தானே. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த காலங்களில் அமெரிக்காவின் நிலையும் அவ்வாறு தான் இருந்தது. ஆனால் நிலைமை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை தானே. மெது மெதுவாக மற்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தங்களது உற்பத்தியைத் துவக்க அமெரிக்க நிறுவனங்கள் கண்டு வந்த அசூரத்தனமான வளர்ச்சியும் இலாபங்களும் சற்றுத் தள்ளாட ஆரம்பிக்கின்றன. அந்தச் சூழலில் அந்த நிறுவனங்கள் தங்களது இலாபங்களையும் செல்வாக்கினையும் தக்க வைத்துக் கொள்வதற்காக கையாண்ட வழிமுறைகள் தான் இன்று வரை உலக இயக்கத்தினையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வழிமுறைகளில் சில

1) பகாசுர நிறுவனங்களின் ஆட்கள் மறைமுகமாக ஆட்சியில் இருப்பது. அல்லது ஆட்சியில் இருப்பவர்களை நல்ல விலை பேசி தங்களுக்குச் சாதகமாக மாற்றி விடுவது.

2) அவர்களின் மூலம் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமான சட்டங்களை இயற்றி விடுவது.

மேலே கூறியுள்ள இந்த இரு வழிமுறைகளைப் பற்றி நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டுவிட்டதினால் அவற்றைப் பற்றி இங்கே நாம் மேலும் நுணுக்கமாக காணவில்லை. ஆனால் அவற்றைப் பற்றி இந்த ஆவணப்படம் மிகவும் அருமையாக விளக்குகின்றது.

3) காரணமின்றி இலாபம் குறைகின்றது என்ற காரணத்தினால் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வது. தொழிலாளர் ஒன்றியங்களை ஒழிப்பது.

இந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட விவரங்களின் படி அமெரிக்காவில் சில நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களை இலாபமாக பெற்று இருந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த இலாபம் வரவில்லை என்பதினால் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து இருக்கின்றனர்.

அவ்வாறு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பொழுது அரசாங்கம் எந்த ஒரு குறுக்கீடும் செய்யாததால் மற்ற ஊழியர்களும் தங்களின் பணியினைக் குறித்து அச்சம் கொள்ளுகின்றனர். அவர்களின் அச்சத்தினை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மேலும் அதிகமாக உற்பத்தியினை பெருக்கும் வண்ணம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றது.

மேலும் அந்த நிறுவனங்கள் மற்றும் அரசின் இந்த நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளாக இந்த ஆவணப்படம் முன்வைப்பது இதனைத் தான்,


  • தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள்.
  • ஆனால் அவர்களின் சம்பளங்களில் பெரிதளவு மாற்றங்களே இல்லாமல் இருக்கின்றது.
  • தேவைகளுக்கு ஏற்றார்ப்போல் சம்பளம் இல்லாததால் மக்களை கடன் வாங்கி (வங்கிக் கடன்கள், கடன் அட்டைகள், தவணை முறைத் திட்டங்கள்) வாழ்வினை வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கு உட்படுத்துகின்றார்கள்.
  • கடன் வாங்கித் தான் வாழ முடியும் என்ற சூழலில் வேலைகளில் இருந்து ஆட்குறைப்பு என்ற பெயரினால் மக்கள் துரத்தப்பட, கடனைக் கட்ட முடியாமல் திவாலாகிப் போன மக்களின் எண்ணிக்கையும் கூடுகின்றது.
  • மக்கள் துயரத்தை மறக்க ஊக்க பானங்களுக்கு அடிமையாக மது மற்றும் சோர்வினைப் போக்கும் மருந்துகளை அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின்றது
  • இத்தகைய சூழலில் குற்றங்களும் அதிகரிக்க சிறையில் அடைக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
இந்த தகவல்களை எல்லாம் புள்ளி விவரங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம். இவற்றை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் இதே நிலை தான் இன்று இந்தியாவினில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மென்பொருள்துறை ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த நிறுவனங்களோ கோடிக்கணக்கில் இலாபங்களை ஈட்டிக் கொண்டு இருக்கின்றன. கடனிலேயே முடிந்து போகும் வாழ்விலே மக்கள் அடைக்கப்படுகின்றனர். ஒருவன் தன்னுடைய கல்வியினை முடித்து வெளி வரும் பொழுதே இலட்சக்கணக்கில் கடன் உடைய ஒருவனாகத் தான் வெளி வருகின்றான். அவனது சுதந்திரம் கடன் என்ற பெயரில் பறிக்கப்படுகின்றது. கடனும் இருக்கின்றது ஆனால் அதனை கட்ட வேலையும் இல்லை என்ற சூழலில் மதுவுக்கும் தவறான குற்றச் செயல்களுக்கும் இளைஞர்கள் ஆளாக மது அருந்துதலும் குற்றச் செயல்களும் சமூகத்தில் அதிகரிக்கின்றன. இவ்வாறு அமெரிக்காவில் நிலவிய/நிலவும் சூழலையே இன்று நம்முடைய நாட்டிலும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும்.

4) அரசாங்கம் தன்னுடைய கைகளில் வைத்து இருக்கும் துறைகளை தனியாருக்கு மாற்றிவிடுமாறு சட்டங்களை இயற்றி அதன் மூலம் கொள்ளை இலாபம் பார்ப்பது.

உதாரணமாக அமெரிக்காவில் அரசின் வசம் இருந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றினை மூடிவிட்டு அந்த சீர்திருத்தப் பள்ளியினை நடத்தும் பொறுப்பினை தனியாரிடம் தருகின்றனர். அந்தத் தனியாரோ 8 மில்லியன் டாலர்களுக்கு ஒரு பள்ளியினை நிறுவி அதனை குத்தகைக்கு அரசிடம் விடுவதற்காக 58 மில்லியன் டாலர்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளுகின்றது. அதாவது ஒன்றுமே செய்யாமலே சுமார் 50 மில்லியன் டாலர்களை அந்த நிறுவனம் இலாபமாக அடைந்து உள்ளது. மக்களின் வரிப்பணமான 50 மில்லியன் டாலர்கள் மக்களுக்கு பயன்படுவதற்கு மாறாக அநியாயமாக சிலருக்குத் தாரை வாக்கப்பட்டு இருக்கின்றது.

இதே நிலை தான் இன்று இந்தியாவிலும் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அரசின் வசம் இருக்கும் அனைத்தையும் தனியார் வசமாக்கும் பணி இன்று வெகு சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றது. இந்திய மக்களின் வரிப்பணத்தினை கொள்ளை அடிக்க இந்திய முதலாளிகளும் சரி உலக நிறுவனங்களும் சரி ஆர்வத்துடன் கழுகுகளைப் போல் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

5) மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு தந்து உதவுவது.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசத்தில் நிலவிய பொருளாதார சிக்கலை முன்னிட்டு மக்களின் வரிப்பணமான கிட்டத்தட்ட 660 பில்லியன் டாலர்களை அந்த நாட்டு அரசாங்கம், நிறுவனங்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு தந்த நடவடிக்கையை மிகவும் அருமையாக விளக்குகின்றது இந்த ஆவணப்படம்.

நமது நாட்டிலும் விஜய் மல்லையா போன்ற செல்வந்த ஏழைகள் நம்முடைய நாட்டு அரசாங்கத்திடம் உதவிகள் கேட்ட கதையினை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம்.

6) ஊடகங்களை பயன்படுத்தி மக்களை சிந்திக்க விடாமல் செய்து தவறான மற்றும் குழப்பமானத் தகவல்களைப் பரப்புவது.

என்பன போன்ற பல்வேறு வழிமுறைகளின் மூலமாக தங்களது இலாபத்திற்கும் செல்வாக்கிற்கும் யாதொரு பங்கமும் வராத வண்ணம் எவ்வாறு அந்த நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன என்பதனை அருமையான எடுத்துக்காட்டுகளோடு இந்த ஆவணப்படத்தில் விளக்குகின்றார் இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கேல் மூரே.

முதலாளித்துவம் என்றால் என்ன? அது எவ்வாறு பரப்பப்பட்டது? முதலாளித்துவத்தால் சமூகத்தில் நேர்ந்து இருக்கின்ற மாற்றங்கள் என்ன என்ன? சூரியனுக்கு யாராவது காப்புரிமை வழங்கி இருக்கின்றார்களா என்று முழங்கிய உண்மையான அறிவியல் போய் எவ்வாறு பணத்திற்காக பெரு நிறுவனங்களில் அமர்ந்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அடிமையாக்கும் போலி அறிவியல் வளர்ந்து இருக்கின்றது? இவற்றால் மக்கள் அடையும் இன்னல்கள் என்ன என்ன? அவற்றை ஒன்றிணைத்து மக்கள் எதிர்த்தக் கதைகள் என்னாயின? என்ற கேள்விகளுக்கு எல்லாம் மிகவும் தெளிவாக விடை அளிக்கின்றது இந்த ஆவணப்படம்.

மென்பொறியாளர்களும், பொதுவுடைமைக் கொள்கையினை உடையவர்களும், மேலும் பொதுவாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பதனை அறியும் ஆர்வம் உடையவர்களும் நிச்சயமாய் காண வேண்டிய ஒரு படம் இது.

தேர்ந்தெடுத்த தலைப்பு மிகவும் சிக்கலான தலைப்பாக இருந்தாலும், அதனை அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் தக்க சான்றுகளுடனும் இந்த படத்தை மைக்கேல் மூரே அவர்கள் எடுத்து உள்ளார். நிச்சயம் அனைவரும் காண வேண்டிய ஒரு படம் இது.

தொடர்புடைய இடுகைகள்:

சிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
உணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் பரவிய வரலாறு)
குடிகாரர்களும் கடன்காரர்களும்
தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

பொதுவாக ஒவ்வொரு சமயத்தினைச் சார்ந்தவர்களிடமும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் புனிதமாகக் கருதும் புனித நூல்கள் எவ்விதமான மாற்றங்களையோ அல்லது இடைச்செருகல்களையோ கொண்டிராது, அவர்களது இறைவன் முதலில் எவ்வாறு அந்த நூலினைத் தந்தானோ அவ்வாறே இன்றுவரை அந்த நூல் இருந்து வருகின்றது என்ற நம்பிக்கையைத் தான் அவர்கள் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றை நாம் கண்டோம் என்றால் உண்மை நிலையோ வேறாகத் தான் இருக்கின்றது. அனைத்து சமயங்களின் நூல்களும் காலங்களில் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு வந்தே தான் இருக்கின்றன. அதற்கான காரணம் எளிது.

மக்களின் மத்தியில் எந்த கருத்து பரவலான ஆதரவைப் பெற்று இருக்கின்றதோ அக்கருத்தினை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கே மக்களில் பலர் முயல்வர் என்பது இயல்பான ஒரு விடயம். இந்த நூற்றாண்டில் மக்கள் ஆட்சியின் மத்தியில் எழுந்து இருக்கும் திராவிடக் கொள்கையையே பலர் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம். அப்படி இருக்கையில் மன்னராட்சிக் காலம் உலகம் முழுவதும் பரவி இருந்த காலங்களில் மக்களின் மத்தியில் எழுந்த சமயக் கருத்துக்களை அரசர்கள் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வது என்பது நடக்கக்கூடிய ஒன்று தானே. அது தான் நடந்தும் இருக்கின்றது.

கிருத்துவ கருத்துக்கள் மக்களிடையே பரவியதைக் கண்ட ரோம பேரரசன் கிருத்துவ கருத்துக்களை தனக்கு சாதமாக வருவது போல் மாற்றி ஏற்றுக் கொண்டு கிருத்துவ சமயத்தினை கைப்பற்றிக் கொண்டான் என்பது வரலாறு. அதே போல் பக்தி இயக்கத்தின் விளைவாய் எழுந்த சமயக் கருத்துக்களான சைவ வைணவ கருத்துக்களை மாற்றி அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அதனைஆரியர்களான பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்றதும் வரலாறு.

அவ்வாறு அரசியலால் கைப்பற்றப்பட்ட சமயக் கருத்துக்கள் காலம்தோறும் அவர்களுக்கு ஏற்ப மாற்றம் கண்டே வந்து இருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகள் அவ்வாறு இருக்க தன்னுடைய சமய நூலானது எவ்விதமான மாற்றமுமே இல்லாமல் முதலில் இருந்தவாறே இப்பொழுதும் இருக்கின்றது என்றுக் கூறுவது ஒன்று அவ்வாறு கூறுபவரின் அறியாமையைக் குறிக்கும் அல்லது அவ்வாறு கூறுபவர் அந்த சமய நூலில் நிகழ்ந்த மாற்றத்தினால் ஆதாயம் அடைந்து இருக்கின்றார் என்பதனையே குறிக்கும். சரி இருக்கட்டும் இப்பொழுது நாம் கிருத்துவ சமய நூலான விவிலியத்தையே காண வேண்டி இருக்கின்றது.

அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் கூறுவதனைப் போல கிருத்துவச் சமயத்தினைச் சார்ந்தவர்களும் தங்களது நூலானது எவ்விதமான மாற்றங்களோ அல்லது இடைச்செருகல்களோ இல்லாமல் இறைவன் அளித்த வண்ணமே இருக்கின்றது என்றே கூறுகின்றனர். மேலும் மற்ற சமய நூல்களை எல்லாம் சாத்தானின் நூல்கள் என்றுக் கூறும் பழக்கமும் அவர்களுள் ஒரு சிலரிடம் இருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் தான் நாம் விவிலியத்தினைப் பற்றி சிறிது பார்க்க வேண்டி இருக்கின்றது.

முதலில் ருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo tolstoy) தன்னுடைய 'இயேசுவின் வாழ்க்கை - சுவிசேஷக் சிறுவரைவு (Gospel in brief - life of jesus)' என்ற நூலில் என்ன சொல்லுகின்றார் என்றே கண்டு விடலாம்.

"வாசகர்கள் ஒன்றினை நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தத்துவஞானிகளான பிளாட்டோ(Plato), பிலோ(Philo), மார்கஸ் அரேலியஸ்(Marcus Aurelius) அவர்களைப் போல் அல்லாது இயேசு அவராக எந்த ஒரு புத்தகத்தையும் எழுதி வைக்கவில்லை. மேலும் சாக்ரடீசைப்(Socrates) போல் படித்த மக்களுக்கு தன்னுடைய போதனைகளை அவர் வழங்கவும் இல்லை.மாறாக பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றிராத மக்களிடமே அவர் பேசியும் போதித்தும் வந்தார். அவர் இறந்து வெகு காலத்திற்குப் பின்னரே மக்கள் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதை எழுதி வைக்க ஆரம்பித்தனர்.

மேலும் வாசகர்கள் அக்காலத்தில் இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறுக் குறிப்புகளில் இருந்தே திருச்சபையானது முதல் மூன்று சுவிசேஷங்களைத் தேர்ந்து எடுத்தது என்பதனை நினைவுக்கூர வேண்டும். பின்னர் அவர்கள் நான்காவது சுவிசேசத்தையும் அவ்வாறே தேர்ந்து எடுத்தனர். அவ்வாறு திருச்சபை ஆனது இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகளில் இருந்து சிறந்ததைத் தேர்ந்து எடுக்கும் பொழுது பல்வேறு குழப்பமான பகுதிகளையும் அவர்கள் தேர்ந்து எடுக்கத்தான் வேண்டி இருந்தது. ஆகையால் தேர்ந்து எடுக்கப்படாத குறிப்புகளில் காணப்படும் மோசமான பகுதிகளைப் போல் தேர்ந்து எடுக்கப்பட்ட சுவிசேஷங்களிலும் மோசமான பல பகுதிகள் இருக்கின்றன என்பதனையும் வாசகர்கள் நினைவிற் கொள்ள வேண்டும்.

மேலும் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த சுவிசேஷங்களும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் மூளைகளாலும் கைகளாலும் உருவாக்கப்பட்டு இருக்கும் படைப்புகள் தான் என்பதையும் வாசகர்கள் நினைவிற்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவைகளில் பல பகுதிகள் சேர்க்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தே தான் உள்ளன. நான்காம் நூற்றாண்டில் இருந்து நம்முடைய கைகளுக்கு வந்துள்ள படைப்புகள் எவ்விதமான நிறுத்தக் குறியீடுகளும் இல்லாமல் தொடர்ச்சியான எழுத்துக்களாக இருக்கும் வண்ணமே அமைந்து உள்ளன. எனவே அந்த நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதில் வேறுபாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே எழத் துவங்கி விட்டன. அப்படி எழுந்த வேறுபாடுகளினால் இன்று நம்மிடையே கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் வகையான சுவிசேஷங்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன"

மேலே லியோ டால்ஸ்டாய் கூறி இருக்கும் கருத்தினைச் சுருக்கமாக காண வேண்டும் என்றால் - விவிலியத்தில் எந்த பகுதியையும் இயேசு எழுதவில்லை. இயேசுவை அறிந்தவர்கள் அல்லது கிருத்துவ சமயத்தினரின் நம்பிக்கைக்கு ஏற்ப பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்ட மக்கள் எழுதிய பல்வேறு குறிப்புகளில் ஒரு சில மட்டுமே விவிலியத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றது. அவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட குறிப்புகளிலும் மோசமான தெளிவில்லாத தவறான பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் காலம்தோறும் மக்களால்அவர்களுக்கு ஏற்றார்ப் போல் மாற்றம் செய்யப்பட்டே வந்து இருக்கின்றன. நிற்க.

விவிலியத்தைப் பற்றிய டால்ஸ்டாயின் கூற்று ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவரைப் போன்று காலங்களில் இன்னும் பலரும் இந்தக் கருத்துக்களைக் கூறித் தான் சென்று உள்ளனர். இருந்தும் சான்றுகள் இன்றி நாம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. விவிலியத்தில் மாற்றங்கள் இருக்கின்றது என்று யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் சான்றுகள் இன்றி நான் நம்ப மாட்டேன் என்று கூறும் கிருத்துவர்கள் இருக்கத்தான் செய்வர். அவ்வாறு சான்றுகளைச் சோதித்துப் பார்த்து அறிந்துக் கொள்வது தான் நன்மையான செயலாகவும் இருக்கும். அவர்களுக்காக இந்த படம்,இதில் விவிலியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பகுதிகளுக்குள் எவ்வாறு முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது சிறு சான்றுகளுடன் காட்டப்பட்டு உள்ளது. (இதனை தமிழில் தர வேண்டும் என்றே முயன்றேன். ஆனால் ஆங்கில விவிலியத்தில் உள்ள முரண்பாடுகள் இவை என்பதால் ஆங்கிலத்திலேயே தந்து விட்டேன். இந்தத் தகவலை நான் கண்டெடுத்த இணையத்தளத்தின் சுட்டியினை கீழே தந்து உள்ளேன்).

ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்களிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருந்தால், அதுவும் தகவல்களைச் சேகரிக்கும் வசதிகளும் நூல்களை அச்சடிக்கும் வசதிகளும் பெருமளவு வளர்ந்து இருக்கும் இந்தக் காலத்தில், அக்காலத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக, இலத்தின் மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் விவிலியத்தை மொழிப்பெயர்க்க முயன்றவர்களை திருச்சபையானது உயிரோடு எரித்த வரலாற்றினைக் காணும் பொழுது நிச்சயம் பல்வேறு மாற்றங்கள் விவிலியத்தில் செய்யப்பட்டு தான் உள்ளன என்பது புலனாகின்றது. அதனை எல்லாம் நாம் காண வேண்டும் என்றால் முதலில் விவிலியம் என்றால் என்னவென்றும் அதன் காலகட்டத்தில் நிலவிய சூழலினைக் குறித்தும் நாம் அறிந்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. ஆனால் அது இங்கே தேவை இல்லை என்பதனால் அதனை வேறொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

இங்கே கிருத்துவ சமயத்தினை சார்ந்தவர்கள் சிந்திக்க வேண்டியது என்னவென்றால்,

  • ஏன் ஆங்கில மொழியாக்கங்களில் இவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன?
  • இயேசுவும் அவரது சீடர்களும் பேசிய மொழி அரமேயம். அவ்வாறு இருக்க விவிலியத்தின் மூல நூல்கள் கிரேக்கம் என்று ஏன் திருச்சபைக் கூற வேண்டும்?
  • இலத்தின் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்தவர்களை, அவர்கள் விவிலியத்தை பொது மக்கள் புரிந்துக் கொள்ளுமாறு மொழிபெயர்த்தனர் என்ற ஒரே காரணத்திற்காக உயிரோடு எரித்தது ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கிருத்துவர்கள் விடையினைத் தேடினார்கள் என்றால் அவர்களுக்கு விடையாய் கிடைப்பது - ஆம். விவிலியத்தில் மாற்றங்கள் இருக்கின்றன என்பது தான். அதற்கு அவர்கள் உண்மையை ஆராய வேண்டும். ஆராய்வார்களா?

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" 1 - தெச.5 : 21 22 

தொடர்புடைய பதிவுகள்:


மேலே ஆங்கில விவிலிய நூல்களுள் இருக்கும் வேறுபாடுகளை நான் அறிந்துக் கொண்ட இணையத்தளம் - 

முனைவர் மு.தெய்வநாயகம் அய்யா அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் பரலோக இராஜ்யத்தினைக் குறித்தும் எவ்வாறு இன்றுள்ள கிருத்துவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் எவ்வாறு விவிலிய நூலானது ஆள்பவர்களுக்கு ஏற்ப மாற்றங்களோடு அமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதனைப் பற்றியும் எழுதி இருந்த நூலினை இணையத்தில் பதிவுகளாக வெளியிட்டு இருந்தேன். இந்த பதிவு அந்த நூலினை மக்கள் வரிசையாக படிப்பதற்கு ஏதுவாக அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து அந்த நூலிற்கு ஒரு முகப்புப் பக்கமாக இருக்கும் வண்ணம் செய்யும் ஒரு முயற்சியே ஆகும்.

இரண்டாம் வருகையும் பரலோக இராஜ்யமும்
இசுரவேலர் மதம்
யூத மதம்
இரண்டாம் வருகையை எதிர்பார்த்தல்
யூதரல்லாத மற்ற புறஜாதியாரின் நிலை
சீடர்களின் அபோஸ்தலர் பட்டமும் பவுலும்
இரண்டாம் வருகை ஏன் நிறைவேறவில்லை
இயேசு கிருத்துவின் இராஜ்யம்
இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு
பரலோக இராஜ்யம்
இரண்டாம் வருகை நிறைவேறி விட்டதா?
மூவொரு கடவுள் என்ற உண்மையை உணர்ந்தவர் புனித தோமா மட்டுமே
இயேசு கிருத்து நிலை நாட்டிய இராஜ்யம்
பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம்
விவிலியத்தில் திரித்தலும் வெட்டலும்
விவிலியத்தில் ஓட்டல்
விவிலியத்தில் இணைத்தல்
விவிலியத்தில் மாற்றல்
விவிலியத்தில் ஏமாற்றல்
விவிலியத்தில் அழித்தலும் மறைத்தலும்
பழைய ஏற்பாட்டு ஆவியும் புதிய ஏற்பாட்டு ஆவியும்
விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?
மக்கள் ஆட்சியும் விசுவாசத் தளர்ச்சியும்
புனித தோமா வழிக் கிருத்துவம்
இறுதிப்பகுதி

ஒரே கடவுள் மூவராக இருக்கின்றார் என்கின்ற கோட்பாட்டினைப் பற்றியே நாம் இந்தப் பதிவுகளில் கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். முதலில் கிருத்துவ சமயத்தில் அந்தக் கோட்பாடானது எவ்வாறு இருக்கின்றது என்பதனையும் பின்னர் பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்தத்தில் ஒரே புத்தர் எவ்வாறு மூன்று நிலைகளில் அறியப்படுகின்றார் என்பதனையும் நாம் கண்டோம். அதன் தொடர்ச்சியாகத் தான் நாம் இப்பொழுது சைவ வைணவ சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதனைப் போன்ற கோட்பாடு காணப்படுகின்றதா என்றே நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

சைவம் - சிவனை முழு முதற்கடவுளாக கொண்டது.

வைணவம் - பெருமாளை முழு முதற்கடவுளாக கொண்டது.

மேலோட்டமாக பார்த்தோம் என்றால் இரு வேறு கடவுள்களை முழு முதற்கடவுளாக கொண்டு விளங்கும் வெவ்வேறு சமயங்களாகவே சைவமும் வைணவமும் தோன்றும். ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது. இதோ திருமூலரின் பாடல் ஒன்று,

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே - திருமந்திரம் 104

சிவனும், பெருமாளும், பிரமனும் பார்க்க மூன்றாகத் தோன்றினாலும் அவர்கள் உண்மையில் ஒருவரே. இந்த உண்மையினை அறியாது உலக மக்கள் அவர்களுக்குள் வேறுபாடுகள் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார்களே என்றே திருமூலர் கூறுகின்றார்.

சைவ வைணவத்தில் மும்மூர்த்திகளாக அறியப்படுபவர்கள் சிவன், பெருமாள், பிரமன். இவர்கள் மூவரும் வெவ்வேறு கடவுளர் என்ற கருத்தே கிட்டத்தட்ட அனைத்து மக்களின் உள்ளும் பதிந்து இருக்கின்றது. காரணம் அவ்வாறு தான் அவர்களுக்கு கூறப்பட்டு உள்ளது. ஆனால் திருமூலரோ, சிவன், விஷ்ணு, பெருமாள் ஆகிய மூவரும் மூன்று வெவ்வேறு கடவுளர் கிடையாது மாறாக அவர்கள் ஒருவரே என்றே கூறுகின்றார். அதாவது ஒரே கடவுள் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்பதே திருமூலரின் கருத்தாகும்.

இதேக் கருத்தினை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்த மற்றப் பெரியோர்களும் கூறியே தான் சென்றுள்ளனர்.

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே. - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

மேலும் 'அரியும் சிவனும் ஒன்று' என்பது சித்தர் பெருமக்களின் கூற்றுமாகும். அதாவது சிவனும் பெருமாளும் இரு வேறு கடவுளர் அல்லர். இருவரும் ஒருவரே என்றே சித்தர்கள் கூறி இருக்கின்றனர். இந்த உண்மையையே ஹரிஹரன் என்ற உருவமும் புலப்படுத்துகின்றது. மேலும் முதல் ஆழ்வார்களும் சரி நாயன்மார்களும் சரி சிவனையும் பெருமாளையும் ஒருவராகவே உருவகப்படுத்தி உள்ளனர்.

மேலும், பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையே தொப்புள் கொடி உறவும் காட்டப்பட்டு உள்ளது. அதாவது தாயிற்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் உறவு முறையே பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் காட்டப்பட்டு உள்ளது. மேலும் திருநாவுக்கரசரும் அவருடைய பாடலில்

ஆவியாய் அவியுமாகி அருக்கமாய் பெருக்கமாய்ப் பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகி' - திருநாவுக்கரசர் தேவாரம் 320

சிவன் பாவிகளின் பாவம் தீர்க்கும் பிரமன் ஆகின்றான் என்றே கூறுகின்றார். இவ்வாறு சிவன், பெருமாள், பிரமன் ஆகிய மூவரும் பொதுவாக வெவ்வேறு கடவுளர் என்றே அறியப்பட்டாலும் உண்மையான சமயக் கருத்துக்கள் அவர்கள் மூவரும் வெவ்வேறு கடவுளர் அல்ல மாறாக ஒரே கடவுள் தான் என்றே கூறுகின்றன. இதே உண்மை தான் சிவலிங்கத்திலும் வெளிப்படுகின்றது.

பொதுவாக சிவலிங்கத்தினைப் பற்றிய கதைகள் பல்வேறு விதமாக வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றன. சிவலிங்கம் என்பது இனப்பெருக்க கல் என்று சிலரால் கருதப்படுகின்றது. அதற்கு காரணம் ஆன்மீகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் சைவ வைணவ சமயத்தினைக் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் அறிவிற்கேற்ப பரப்பிவிட்ட ஆபாசக் கதைகளே ஆகும். உண்மையில் சில இனக்குழுக்கள் இனப்பெருக்க கல் வழிப்பாட்டினைக் கொண்டிருந்தாலும் சிவலிங்கம் என்பது அத்தகைய வழிப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. உண்மையில் சிவலிங்கம் என்பது இரு வேறு தத்துவங்களைக் அடிப்படையாக விளக்கிக் கொண்டு இருப்பது.

ஒன்று - சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அதன் தலைப்பகுதி சிவனைக் குறிப்பது. இடைப் பகுதி பெருமாளைக் குறிப்பது. அடிப்பகுதி பிரமனைக் குறிப்பது. அதாவது ஒரே வடிவம் சிவனையும் பெருமாளையும் பிரமனையும் ஒரு சேரக் குறிக்கின்றது.

இரண்டு - சிவலிங்கம் இறைவனின் அருவுருவமாக கருதப்படுகின்றது. சைவக் கருத்துக்களின்படி ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றான். அருவமாகவும் இருக்கின்றான், அருஉருவமாகவும் இருக்கின்றான், உருவமாகவும் இருக்கின்றான். இதனையே பின்வரும் பாடல் விளக்குகின்றது

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. - சிவஞானசித்தியார்(1:38)

அதாவது உண்மையில் இறைவன் உருவமற்றவன். இதனை மாணிக்கவாசகர்,

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! - திருவாசகம் (திருத்தெள்ளேணம்)

என்றே கூறுகின்றார்.

அத்தகைய இறைவன் உருவமாகவும் வந்தான். இதனைத் திருமூலர்,

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே - திருமந்திரம் 113

ன்ற பாடலின் மூலம் தெளிவாக விளக்குகின்றார். அதாவது விண்ணில் இருந்து இறைவன் மக்களின் பாவத்தினை அழிக்க வினைகளை உடைய உடம்பினைக் கொண்டு உலகிற்கு வந்தான் என்றே அவர் கூறுகின்றார். எனவே உருவமில்லாத இறைவன் மக்களுக்காக உருவமானவராக ஆகின்றார்.

அதேநேரம் இறைவன் அருவமாகவோ அல்லது உருவமாகவோ மட்டும் தான் இருக்கின்றான் என்றால் அதற்கு இல்லை என்றே பதில் வருகின்றது. இறைவன் அருஉருவமாகவும் இருக்கின்றான் என்றே சைவம் கூறுகின்றது. அருஉருவம் என்றால் என்னதென்று உறுதியாகக் கூற இயலாத வடிவம். உதாரணத்திற்கு தண்ணீருக்கு உருவம் இல்லை. ஆனால் அதனை எந்த வடிவ குடுவையில் ஊற்றி வைக்கின்றோமோ அந்தக் குடுவையின் வடிவையே தண்ணீரானது எடுத்துக் கொள்கின்றது. எனவே தண்ணீருக்கு உருவம் இருக்கின்றது என்றோ அல்லது உருவம் இல்லை என்றோ கூற இயலாது. இதனைப் போன்றே இறைவன் அருஉருவமாக திகழ்கின்றான் என்றே சைவம் கூறுகின்றது. இதனையே சிவலிங்கம் விளக்குகின்றது.

இறைவன் அருவம் - உருவம் - அருஉருவம் ஆகிய மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதே சிதம்பர இரகசியமுமாகும். சிதம்பரத்தில் கருவறையில் வெற்றிடம் மட்டுமே இருக்கும். அது இறைவன் அருவமாக இருக்கும் நிலையைக் குறிக்கின்றது. சிவலிங்கம் இறைவன் அருஉருவமாக இருப்பதனைக் குறிக்கின்றது. நடராசர் சிற்பமோ இறைவன் உருவமாக இருப்பதனைக் குறிக்கின்றது.

எனவே ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதே சைவ வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும்.

இங்கே சில கேள்விகள் எழலாம், சைவ வைணவ சமயங்கள் என்றுக் கூறி விட்டு அம்மன், முருகன், பிள்ளையார் போன்ற கடவுளரைப் பற்றி ஒன்றுமே கூறாது அது ஏன் என்ற கேள்வி நிச்சயமாக அவற்றுள் முக்கியமான கேள்வியாக இருக்கும். அக்கேள்விகளுக்கு விடைகளை நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கண்டாகி விட்டதனால் தான் நாம் அவர்களைப் பற்றி நாம் இங்கே காணவில்லை. இருந்தும் சுருக்கமாக காண வேண்டும் என்றால்

1) அம்மன் என்பது தனியான கடவுள் அல்ல. சிவன் என்ற முழுமுதற் கடவுளின் ஆற்றலே சக்தி என்று பெண் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டு இருக்கின்றார். இறைவனின் சக்தியே அம்மன்.

2) பிரமன், முருகன், பிள்ளையார், ஐயப்பன் ஆகியோர் அனைவரும் சிவனின் பிள்ளைகளே ஆவர். இறைவனின் மகன் என்பதனை கூற வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு உருவகங்களே அவர்கள் அனைவரும்.

3. இவர்கள் அனைவரையும் சேர்த்து சமயங்கள் ஆறு வகைப்படும்

சைவம்சிவன்அம்மைமகன்
சாக்தம்சிவன்சக்திமகன்
கௌமாரம்சிவன்சக்திகுமரன்
காணாபத்தியம்சிவன்சக்திகணபதி

விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம்சிவன்விஷ்ணுபிரமன்
சௌரம்சிவன்விஷ்ணுஐயப்பன்.

மேலும் சைவ சமயக் கோட்பாட்டின்படி இறைவனின் ஆற்றல் ஆகிய சக்தியே குருவாக வந்து தன்னை உணர்ந்த ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் வினையினை விட்டு அகல வழிகாட்டுகின்றார். இதனையே திருமூலர்

இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே - திருமந்திரம் - 1527

என்றுக் கூறுகின்றார். இதுவும் நாம் முன்னர் கிருத்துவத்தில் கண்ட பரிசுத்த ஆவி மக்களை வழிநடத்துகின்றார் என்ற கோட்பாட்டினைப் போன்றும் மகாயான பௌத்தத்தில் சம்போக காயா வடிவில் புத்தர் போதிசத்துவர்களுக்கு வழிகாட்டுகின்றார் என்ற கோட்பாட்டினைப் போன்றும் இருக்கின்றது. இதுவும் சிந்திக்கத்தக்கது.

னவே மேலே நாம் கண்டுள்ள விடயங்களின் மூலம் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கும் கோட்பாடானது சைவ வைணவ சமயங்களிலும் இருக்கின்றது என்பது புலனாகின்றது. அதாவது கிருத்துவத்திலும் சரி, பௌத்தத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்தத்திலும் சரி சைவ வைணவ சமயங்களிலும் சரி ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்ற கோட்பாடு வருகின்றது. இவை தற்செயலான ஒற்றுமைகளா அல்லது இவைகள் ஒரே இறைவனைக் கூறுவதனால் ஒரே கோட்பாடு இச்சமயங்களுக்குள் காணப்படுகின்றதா என்றே நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. ஆராய்ச்சிகள் நிச்சயமாக இந்த தலைப்பில் மக்கள் செய்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முற்றும்.

தொடர்புடைய இடுகைகள்:

சென்ற பதிவினில் இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது என்றே நாம் கண்டோம். கூடவே நான்கு வருணம் எனப்படும் பிரிவுகளில் முதல் மூன்று வர்ணங்கள் ஆரியர்களையும் இறுதி இரண்டு வர்ணங்கள் அடிமைகளையும் எதிரிகளையும் குறிக்கின்றன என்பதனையும் கண்டோம்.

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இதைத் தான் நாம் இப்பொழுது சற்று விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் ஒரு நிகழ்வினை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. பெரிய நிகழ்வு தான்...மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டமேற்பு விழாவென்றால் சும்மாவா என்ன? ஆனால் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் நடந்துக் கொண்டிருக்கும் அந்த விழாவினில் ஒரு சிறு பிரச்சனை இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை...அன்றிருந்த பழக்க வழக்கங்களின்படி சமய பெரியோர்களாக அங்கே கருதப்பட்ட பிராமணர்கள், சிவாஜிக்கு முடிசூட்ட மறுக்கின்றனர். அவ்வளவே. அதற்கு அவர்கள் காரணமாய் கூறிய விடயம் 'சிவாஜி க்ஷத்ரியன் அல்ல...ஆகவே அவனுக்கு முடி சூட்டும் சடங்கினை நாங்கள் செய்ய மாட்டோம்' என்பதே ஆகும். இக்கட்டான அந்தச் சூழலில் சிவாஜியின் நண்பரான அவாஜி என்பவர் சிவாஜியின் வம்சாவழி வரலாற்றினை சிறிது மாற்றி சிவாஜி என்பவர் மேவாரில் இருக்கும் இராஜ்புட் வம்சத்தினரின் வழியில் வந்தவர் என்றே கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் இராஜ்புட் வம்சத்தினை சத்திரியர்கள் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு இருந்தனர். எனவே சிவாஜியும் இராஜ்புட் வம்சம் என்று கூறி விட்டால் அவரை சத்திரியர் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்கள் தானே. எனவே தான் அவர் அவ்வாறு கூறுகின்றார். அதனை பிராமணர்கள் தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஏற்றுக் கொண்டு சிவாஜிக்கு உரிய சடங்குகளைச் செய்கின்றனர். ('சூத்திரர்கள் யார்' என்ற அம்பேத்கரின் நூலில் இருக்கும் தகவல்)

சிவாஜி தனியான பல இராஜ்யங்களை தன் வசம் வைத்து இருந்தாலும் அவரை சத்திரியன் என்று பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவரை எப்பொழுது இராஜ்புட் வம்சாவழியைச் சார்ந்தவர் என்ற கருத்து எழுகின்றதோ அப்பொழுது அவரை அவர்கள் சத்திரியர் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அதாவது பிராமணர்களின் பார்வையில் இராஜ்புட் வம்சத்தினைச் சார்ந்தவர்கள் சத்திரியர்களாக அறியப்படுகின்றனர். நிற்க

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால் பிராமணர்களால் சத்திரியர்கள் என்று அறியப்படும் இராஜ்புட்டுகள் - இந்தியர்கள் அல்ல என்பதே ஆகும். அவர்கள் இந்திய தேசத்தின் மேல் பல்வேறு காலங்களில் படையெடுத்து வந்த ஹுன்னேர்கள், சகர்கள், குஷானர்கள் போன்ற பல்வேறு அந்நிய இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாரும் இந்திய தேசத்தினைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட இந்தியாவினைக் கைப்பற்றினர் என்பது நம்முடைய பாட புத்தகத்தினில் காணப்படாத ஒரு வரலாறு. அவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்த பொழுது அவர்களுக்கு அவர்கள் இட்டுக் கொண்ட பெயர் தான் இராஜ்புட். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இராஜ்புட் என்ற பெயர் இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இராஜ்புட்களைத் தான் சத்திரியர்கள் என்று பிராமணர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்திய தேசத்தினைச் சார்ந்த அரசரான சிவாஜியை சூத்திரன் என்று கூறிய பிராமணர்கள், அந்நிய நாட்டினில் இருந்து வந்த ராஜ்புட்களை சத்திரியர்கள் என்று கூறி இருக்கின்றனர். ஏன் அவர்கள் அவ்வாறு கூற வேண்டும் என்றே நாம் கண்டோம் என்றால் மீண்டும் நான்கு வருணத்தில் வந்து நாம் நிற்க வேண்டி இருக்கின்றது.

சகர்கள், ஹுன்னேர்கள், குஷானர்கள், சுங்கர்கள் போன்ற அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்கள் ஆரியர்கள் என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்து வட இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆரியர்கள். எனவே அவர்களில் அரசாள்பவர்கள் க்ஷத்ரியர்களாக அறியப்படுகின்றனர். ஆரியப் பிரோகிதர்களான பிராமணர்களும் அவர்களின் சக ஆரியர்களான இராஜ்புட்களை அறிந்துக் கொண்டு அவர்களை சத்திரியர்கள் என்று உரிமைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் அவர்கள் ஆட்சியினை திராவிடர்களிடம் (இந்திய மக்களிடம்) இருந்து வட இந்தியாவினில் பறித்து இருக்கின்றனர். எனவே அந்த மக்கள் அனைவரையும் சூத்திரர் என்றே அவர்கள் கருதவும் செய்து இருக்கின்றனர். அதாவது வட இந்தியாவினைப் பிடித்த அந்நியர்களின் கூட்டம் தாங்கள் கைப்பற்றிய இடத்தை ஆரியவர்த்தம் என்று அழைத்துக் கொண்டு தங்களிடையே மூன்று பிரிவுகளை வகுத்துக் கொள்கின்றது.

பிரோகிதர் (பின்னாளில் பிராமணர்) - சமய வழிபாடுகளைச் செய்பவர்
க்ஷத்ரியர் - ஆள்பவர்
வைசியர் - வணிக வேலைகளைச் செய்பவர்.

இந்தப் பிரிவுகள் அனைத்தும் ஆரியர்களையே குறிக்கும். ஆரியர்கள் கைப்பற்றிய இடத்தில் இருந்த இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆயினர். எனவே தான் அடிமைகள் என்று குறிக்கப்படும் சொல்லான சூத்திரர்கள் என்பது அம்மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரிவுகள் முழுக்க முழுக்க ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுகளே ஆகும். அவர்கள் எந்த இடங்களில் ஆட்சி செய்கின்றனரோ அந்த இடங்களில் மட்டுமே இந்தப் பிரிவுகள் இருக்கும். மாறாக மற்ற இடங்களில் அப்பிரிவுகளுக்கு எந்தொரு அர்த்தமும் இருக்காது. உதாரணமாக வட இந்தியாவினை கைப்பற்றிய ஆரியர்களின் மத்தியில் மட்டுமே பிரோகிதர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய பிரிவுகள் இருக்க முடியும். மாறாக அவர்களின் ஆட்சிகளுக்கு உட்படாத ஏனைய அரசுகளில், உதாரணமாக தமிழக அரசுகளையே எடுத்துக் கொள்ளலாம், அப்பிரிவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இருக்காது. எனவே தான் அவர்களை ஆரியர்கள் பஞ்சமர்கள் அல்லது எதிரிகள் என்றே குறித்து வைக்கின்றனர். காரணம் ஆரியர்களின் பிரிவுகளும் அவர்களது தேசத்து சட்ட நூலான மனு தர்மமும் ஏனைய அரசுகளில் துளி கூட செல்வாக்குப் பெறாது. இந்தியாவில் அப்பொழுது இருந்த மற்ற அரசுகள் ஆரியர்களின் அந்த அரசுக்கு எதிரியாக இருந்தமையினால் அவர்களை பஞ்சமர் என்றே ஆரியர்கள் குறித்து வைக்கின்றனர்.

எனவே ஆரியர்களின் பார்வையில், பிராமணர் சத்திரியர் வைசியர் என்பன அவர்களின் மத்தியில் இருந்த தொழிற் பிரிவுகள் (இவற்றில் பிற்காலத்தில் அரசியல் பலத்தோடு சமயங்களின் செல்வாக்கையும் சூழ்ச்சிகளால் பெற்றமையினால் பிராமணர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மாறி விட்டனர். அது பெரிய கதை. அதனை நாம் மற்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம்).

சூத்திரர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய மக்கள். இவர்கள் ஆரியர்களின் மனுதர்ம சட்டத்திற்கு உட்பட்டவர்கள். எனவே தான் இவர்களை அடிமைகள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர்.
பஞ்சமர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படாத மற்ற இந்திய ஆட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் மனு தர்மமும் செல்லாது ஆரியர்களின் வர்ணாஸ்ரம தர்மமும் செல்லாது. எனவே தான் இவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் கடவுளிடம் இருந்து தோன்றவில்லை என்றும் அவர்கள் கூறிச் சென்று உள்ளனர்.

இதனால் தான் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் 90% பேர் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருக்கின்றனர். 10% பேர் மட்டும் பிராமணர்களாகவும், சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் இருக்கின்றனர்.

அதனால் தான் சிவாஜி அரசனாக இருந்தாலுமே அவன் இந்திய மண்ணைச் சார்ந்தவனாக இருந்ததினால் அவனை சூத்திரன் என்றே அவர்கள் அழைத்தனர். மேலும் இன்று தமிழகத்தில் உயர் சாதியாக அறியப்படும் சைவ வெள்ளாளர், பிள்ளைமார் போன்ற சாதிகளும் ஆரிய நான்கு வர்ணம் என்று வரும் பொழுது 'சற் சூத்திரர் - சிறந்த அடிமை' என்றே அழைக்கப்படுகின்றனர்.

அதாவது தமிழ் நாட்டில் சைவ வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி. ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவர்கள் சிறந்த அடிமைகள். காரணம் என்ன? ஒரு இந்தியன் மனு தர்மத்தின்படி அல்லது நான்கு வர்ணத்தின் படி என்றுமே ஒரு சூத்திரனாகவோ அல்லது பஞ்சமனாகவோ தான் இருக்க முடியுமே அன்றி அவனால் ஒரு பிராமணனாகவோ அல்லது சத்திரியனாகவோ ஆக முடியாது. இதைத் தமிழ் தேசியம் பேசுவோர் அறிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறியாமல் தமிழர்களிடம் இருந்த தொழிற்பிரிவுகள் தான் நான்கு வர்ணமாக மாறி இருக்கின்றது என்றே கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயமாய் தமிழர்களின் வரலாறு மீண்டு வர வாய்ப்பே இருக்காது.

அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் அவர்களின் வசதிக்கு ஏற்றாப்போல் மாற்றி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இதில் நீங்களாய் போய் நாங்களும் ஏமாறத் தயார் என்றே கூறினீர்கள் என்றால் நிலைமை மோசமாகத் தான் போகும்.

எனவே தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப் பிரிவுகள் என்பது வேறு.

பள்ளர், பறையர், நாடார், வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாயுடு, ரெட்டியார், நாயக்கர் - போன்றவைகள் சாதிய பிரிவுகள். (இவற்றுக்கு இடையே எப்பொழுது எவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன என்பது வேறு வரலாறு. அதனையும் நாம் பின்னர் காணலாம்)

பிராமணர், சத்திரியர், வைசியர் - என்பன ஆரியர்களின் பிரிவுகள். அவர்களின் பார்வையில் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும், அது தமிழர்களின் சாதியப் பிரிவுகளாக இருக்கட்டும் அல்லது தெலுங்கு மக்களின் சாதிப் பிரிவுகளாக இருக்கட்டும், ஒன்று அடிமைகள் என்று அர்த்தம் பொதிந்த சூத்திரப் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும் அல்லது எதிரி என்று முத்திரைக் குத்தப்பட்ட பஞ்சமர் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும். அவ்வளவே.

எனவே சாதிப் பிரிவுகளும் நான்கு வர்ணமும் ஒன்று என்று கூறுவது ஒன்று அறியாமையில் கூறும் ஒன்றாக இருக்கும். அல்லது மீண்டும் திராவிட இனத்தினை அடிமைப்படுத்தும் சூழ்ச்சியின் குரலாகவே இருக்கும்.

சாதிப் பிரிவுகளும் வர்ணப் பிரிவுகளும் ஒன்றல்ல!!!!

அவ்வளவே!!!

தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

 

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு