ஒரு குறிப்பிட்ட கோட்பாடானது பரிசுத்த ஆவியினிடம் இருந்து வந்திருக்கும் தெய்வீகமான வெளிப்பாடு என்று கூறிக் கொள்ளும் செயலானது ஆணவத்தின் உச்சகட்ட நிலையாகும். ஏனென்றால் நான் கூறும் வார்த்தைகள், இறைவன் என் மூலம் பேசும் வார்த்தைகள் என்று கூறுவதனை விட ஆணவமுள்ள செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அவ்வாறு கூறிக் கொள்வதனை விட மிகப்பெரியத் தீய எண்ணம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஏனென்றால் தன்னிடம் மட்டுமே சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரே உண்மையானது இருக்கின்றது என்று ஒருவன் கூறி கொள்வதன் வாயிலாக, அவனை எதிர்த்து வரும் கருத்துக்கள் அனைத்தையும் அவன் தவறென்று உறுதியாகச் சொல்லும் நிலையினை உருவாக்கி விடுகின்றான். இருந்தும் அவ்வாறு தான் அனைத்து திருச்சபைகளும் இன்று சொல்லிக் கொண்டு இருக்கின்றன. திருச்சபைகளின் இந்த ஆணவச் செயலினிலிருந்தே உலகத்தில் சமயத்தின் பெயரினால் செய்யப்படும் அனைத்துத் தீமைகளும் தோன்றி இருக்கின்றன. திருச்சபைகளின் இந்த நிலைமையினால் தான் இன்றும் சமயங்களின் பெயரினால் உலகினில் தீமை பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இவ்வாறு தாங்கள் கூறும் வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டு இருக்கின்றன என்று திருச்சபைகளும் மற்றப் பல்வேறு பிரிவுகளும் உரிமைப் பாராட்டிக் கொள்வதில் இருந்தே அவற்றுக்கு இடையே பூசல்கள் எழத் துவங்குகின்றன. இவ்வாறு திருச்சபைகளுக்குள் எழுகின்ற பூசலானது நிரந்தரமற்றதொரு தீமையாகவே இருக்கின்றது. ஆனால் திருச்சபைகளின் இடையே எழும் பூசலைக் காட்டிலும் மிக முக்கியமானதொரு பிழையும் தாங்கள் கூறுவது பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டு இருக்கின்றதுஎன்று திருச்சபைகள் உரிமைப் பாராட்டிக் கொள்வதிலிருந்து எழுந்து இருக்கத்தான் செய்கின்றது. அந்தப் பிழையானது தான் திருச்சபைகள் கூறும் கூற்றுகளுக்கு நேர்மையற்றதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கின்ற ஒரு வடிவத்தைத் தருகின்றது.

அந்தப் பிழையானது இது தான். அனைத்துத் திருச்சபைகளும் அப்போஸ்தளர்களின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி அவர்களுக்கு வெளிப்படுத்திய வெளிப்பாட்டினை ஏற்றுக் கொள்கின்றன. மேலும் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக திருச்சபைகளால் கருதப்படும் பல்வேறு மக்கள் 'பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் வெளிப்படுத்தி இருக்கின்றார்' என்று கூறுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தியதாக அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அந்த வெளிப்பாட்டின் முடிவான குறிக்கோளினைப் பற்றித் தெளிவாகவும் முடிவாகவும் அவர்கள் ஒரு விளக்கமும் அளிப்பதில்லை. இது பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டது என்று கூறிக் கொள்வதன் மூலமாக 'தெய்வீக வெளிப்பாடுகள்' என்று அவர்கள் கருதுபவைகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் அவர்கள் கூட்டிக் கொண்டே போகின்றனர். இருந்தும் அவற்றின் முடிவான அர்த்தம் என்னவென்பதைக் குறித்தத் தெளிவான விளக்கத்தினை அவர்கள் வழங்குவதில்லை. இவ்வாறு உலகினில் தொடர்ச்சியாக நிகழ்ந்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதும் அனைத்து வெளிப்பாடுகளின் மீதும் நம்பிக்கையினை வைத்துக் கொண்டு அவற்றையும் கிருத்துவக் கருத்துக்கள் என்றே அவர்கள் அழைத்துக் கொள்கின்றனர். இதில் தான் அந்த மிகப் பெரிய பிழையானது அடங்கி இருக்கின்றது.

பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலை ஏற்றுக் கொண்டுள்ள திருச்சபையினைச் சார்ந்த அனைத்து மக்களும் மொத்தம் மூன்று வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றனர் (முகமதியர்களைப் போன்று) : மோசேவின் வெளிப்பாடு, இயேசுவின் வெளிப்பாடு மற்றும் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு. ஆனால் முகமதியர்களின் சமயத்திலோ மோசேவுக்கும் இயேசுவுக்கும் அடுத்து வந்த முகமது அவர்களே இறுதியானத் தூதர் என்று நம்பப்படுகின்றது. அவரே மோசேவின் வெளிப்பாடுகளுக்கும் சரி இயேசுவின் வெளிப்பாடுகளுக்கும் சரி ஒருசேர சரியான விளக்கத்தினை அளித்து இருக்கின்றார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். எனவே அந்த சமயத்தினைச் சார்ந்த உண்மையான விசுவாசி எவனும் முகமது அவர்கள் அளித்த வெளிப்பாட்டினையே தனது முன்னே கொண்டு இருக்கின்றான்.

ஆனால் திருச்சபைகளின் விசுவாசமோ அவ்வாறு இருப்பதில்லை. முகமதிய நம்பிக்கையினைப் போன்றே அவர்கள் மோசே, இயேசு, பரிசுத்த ஆவி ஆகியோர் அருளியது என்று கருதப்படும் மூன்று வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறே அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் தங்களைத் தாங்களே பரிசுத்த ஆவியின் சமயம் என்று அவர்கள் அழைத்துக் கொள்வதில்லை. முகமதியர்களின் நம்பிக்கையின்படி இறுதியான வெளிப்பாடு முகமது அவர்களின் மூலமாக வந்தது. எனவே அவர்களின் சமயத்தினை முகமது அவர்களின் பெயரில் வைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் கிருத்துவத்திலோ இறுதியான வெளிப்பாடு பரிசுத்த ஆவியினால் வழங்கப்பட்டு இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் இயேசு கிருத்துவின் போதனைகளையையே தங்களது விசுவாசத்திற்கு அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவே அனைத்துத் திருச்சபைகளும் கூறுகின்றன. எனவே அந்தத் திருச்சபைகள் அனைத்தும் தங்களுடைய கருத்துக்களை இயேசு கிருத்துவின் அதிகாரத்தினாலேயே போதிப்பதாகக் கூறிக் கொண்டு பரப்புகின்றன. திருச்சபைகளைச் சார்ந்தவர்கள் முந்தைய அனைத்து வெளிப்பாடுகளையும் விளக்கக் கூடிய ஒரு வெளிப்பாட்டினை கடைசியாக ஏற்றுக் கொண்டனர் என்றால் அதனைக் கொண்டு தானே அவர்களின் சமயத்தினை அமைத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த இறுதியான வெளிப்பாட்டினை பவுல் பெற்று இருந்தாலும் சரி, அல்லது திருச்சபையின் பல்வேறு குழுக்களுள் ஏதேனும் ஒன்றோ அல்லது போப்பாண்டவரோ பெற்று இருந்தாலும் சரி அதனை அடிப்படையாகக் கொண்டு தானே அவர்கள் தங்களது சமயத்தினை அமைத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த இறுதியான வெளிப்பாடானது திருச்சபைகளின் முதாதையர்களிடம் இருந்து வந்ததாக இருக்கட்டும் அல்லது லூதேரின் மத இலக்கணத்திலோ அல்லது போப்பின் அதிகாரம் பெற்ற கடிதத்திலோ அடங்கி இருப்பதாக இருக்கட்டும். அது எவ்வாறு இருந்தாலும் திருச்சபையினைச் சார்ந்தவர்கள் அதனை இறுதி வெளிப்பாடாக ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அதனை வைத்துத் தானே தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அவர்கள் பெயர் இட்டு அழைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முந்தைய வெளிப்பாடுகள் அனைத்தையும் விளக்குகின்ற இறுதியான வெளிப்பாடு தானே முந்தைய அனைத்தைக் காட்டிலும் எப்பொழுதும் முக்கியமானதொன்றாக இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. மாறாக இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும் கருத்துக்களை அவர்கள் போதித்தாலும் அவை அனைத்தும் இயேசுவால் போதிக்கப்பட்டவை என்றே அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

'இயேசு தான் இரத்தம் சிந்தியதன் மூலமாக ஆதாமின் பாவங்களினால் கேடுற்று இருந்த மனித குலத்தினை மீட்டுக் கொண்டேன் என்று அறிவித்தார்' என்றே அவர்கள் போதிக்கின்றார்கள். மேலும் இறைவன் மூவராக இருக்கின்றார் என்றும், பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தளர்கள் மீது இறங்கினார் என்றும், கைகளை வைத்து ஆசீர்வாதம் வழங்குவதன் வாயிலாக பரிசுத்த ஆவியானவர் சமய குருக்களுக்கு பரப்பப்பட்டார் என்றும் ஏழு வகையான சடங்குகள் இரட்சிப்பிற்கு தேவையாக இருக்கின்றன என்றுமே அவர்கள் போதிக்கின்றார்கள். இவை அனைத்தும் இயேசுவின் போதனைகள் என்றே நம்மை அவர்கள் நம்ப வைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் இவற்றைப் பற்றிய ஒரு வார்த்தைக் கூட இயேசுவின் போதனைகளில் காணப்படுவதில்லை. இத்தகையப் போலி போதகர்கள் தங்களுடையப் போதனைகளையும் சமயத்தையும் பரிசுத்த ஆவியின் போதனைகள் என்றும் பரிசுத்த ஆவியின் சமயம் என்றுமே அழைத்துக் கொள்ள வேண்டும். கிருத்துவின் சமயமாக அவற்றை அழைத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் இறுதியான வெளிப்பாடு என சுவிசேஷங்களில் இருந்து இயேசுவின் போதனைகளை எந்த நம்பிக்கை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றதோ, அந்த நம்பிக்கையினையையே நாம் கிருத்தவம் என்று அழைக்க முடியும். இந்த விடயமானது மிகவும் சாதரணமானதாகத் தோன்றலாம். இதனைப் பற்றி பேச ஒன்றுமே இல்லையே என்பதனைப் போன்றும் தோணலாம். ஆனால் ஆச்சர்யவசமாக இன்று வரை இயேசு கிருத்துவின் போதனைகள் ஒருபுறம் செயற்கையாக நியாயப்படுத்தப்பட முடியாத வகையில் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறமோ பரிசுத்த ஆவியின் பெயரினால் மனம் போன போக்கில் எழுதப்பட்டுள்ள தவறானக் கருத்துக்களோடு ஒன்றிணைக்கப்பட்டு உள்ளது.

தொடரும்...!!!

1 கருத்துகள்:

இந்நூல் கிடைக்குமா?

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு