மூன்றாவது கட்டளை: முந்தைய சட்டத்தில் 'ஆண்டவரின் பெயரில் பொய் ஆணை இடாதே.  தேவை இல்லாது ஆண்டவரின் பெயரை களங்கப்படுத்தாதே' என்றே கூறப்பட்டு உள்ளது. ஆனால் நான் உங்களுக்குக் கூறுகின்றேன் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு உறுதிமொழியும் ஆண்டவருக்கு களங்கத்தையே உண்டு பண்ணுகின்றது. எனவே எவ்விதமான உறுதிமொழிகளையும் ஏற்காதீர்கள். ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைவனின் சக்திக்கு உட்பட்டு தான் இருக்கின்றான். எனவே அவன் எதனைக் குறித்தும் உறுதிக் கூறுவது என்பது இயலாத ஒரு காரியமாகின்றது. அவனால் ஒரு நரை முடியை மீண்டும் கருப்பாக மாற்ற முடியாது. அந்நிலையில் அவனால் எதிர்காலத்தைக் குறித்து தான் இதனை செய்வேன் அதனைச் செய்வேன் என்று எதனை வைத்து இறைவனின் பெயரால் உறுதிக் கூற முடியும். அனைத்து விதமான உறுதிமொழிகளும் இறைவனை களங்கப்படுத்துபவையே. ஏன் என்றால், ஒரு மனிதன் இறைவனின் விருப்பத்திற்கு மாறான செயலைச் செய்ய அவன் மேற்கொண்ட உறுதிமொழியினாலே அழைக்கப்பட்டான் என்றால், அவன் இறைவனின் விருப்பத்திற்கு எதிரான காரியத்தினை செய்ய உறுதி அளித்துள்ளான் என்றே ஆகின்றது. எனவே அனைத்து விதமான உறுதிமொழிகளும் தீமையானவையே. ஆகையால் உங்களிடம் ஏதேனும் கேட்கப்பட்டால் உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் கூறுங்கள். அதனை மீறி நீங்கள் கூறும் எதுவும் தீமையினாலே உண்டாயிருக்கும். எனவே இது தான் மூன்றாவது கட்டளை: எதைக் குறித்தும் எவருக்கும் உறுதிமொழியினை அளிக்காதீர்கள். ஆம் என்றால் ஆம் என்று கூறுங்கள். இல்லை என்றால் இல்லை என்றே கூறுங்கள். மேலும் அனைத்து விதமான உறுதிமொழிகளும் தீமையானவை என்றே அறிந்துக் கொள்ளுங்கள்.

நான்காவது கட்டளை: முந்தைய சட்டத்தினில் 'கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, அடிமைக்கு அடிமை' என்பன போன்றே மேலும் பல கூறப்பட்டு உள்ளன. ஆனால் நான் உங்களுக்குக் கூறுகின்றேன். தீமையை தீமையால் எதிர்க்காதீர்கள். ஒரு அடிமைக்கு மாற்றாக மற்றொரு அடிமையையோ அல்லது ஒரு எருதுக்கு மாற்றாக மற்றொரு எருதினையோ நீதிமன்றங்களில் கோருவதை தவிர்ப்பதோடு நிற்காது தீமையை எந்த வடிவிலும் எதிர்காது இருக்க வேண்டும். எவன் ஒருவனாவது உங்களிடம் இருந்து ஓர் எருதை வழக்காடி நீதிமன்றத்தின் வாயிலாக பெற நினைத்தான் என்றால் அவனுக்கு இன்னொரு எருதையும் சேர்த்தே கொடுங்கள். எவன் ஒருவனாவது உங்களுடைய ஆடையை வழக்காடி பெற விரும்பினான் என்றால் அவனுக்கு உங்களுடைய அங்கியையும் தாருங்கள். உங்களுடைய வலது கன்னத்தில் ஒருவன் அறைந்தான் என்றால் உங்களுடைய இடதுக் கன்னத்தையும் அவனுக்கு காட்டுங்கள். உங்களை ஒரு வேலையைச் செய்ய சொல்லி யாராவது நிர்பந்தித்தார்கள் என்றால் இரண்டு வேலையை எடுத்துச் செய்யுங்கள். எவனாவது உங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டால் என்றால் அவன் மீது வழக்காடாமல் அவனை சுதந்திரமாகச் செல்ல விடுங்கள். உங்களுக்கு பணம் தர வேண்டி இருந்தவர்கள் பணம் ஏதும் தரவில்லை என்றால் பணம் எதுவும் கேட்காதீர்கள்.

எனவே எவரையும் நியாயந்தீர்காதீர்கள். நீங்களும் நியாயந்தீர்கப்பட மாட்டீர்கள். எவரையும் தண்டிக்காதீர்கள். நீங்களும் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக மாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். ஏன் என்றால் நீங்கள் பிறரை நியாயந்தீர்தீர்கள் என்றால் பிறரும் உங்களை நியாயந்தீர்ப்பார்கள்.

நீங்கள் பிறரை குற்றவாளி என்று நியாயந்தீர்ப்பதற்கு தடை செய்யப்பட்டு இருக்கின்றீர்கள். ஏன் என்றால் நீங்களும் மற்றவர்களைப் போலவே குருடராய் உண்மையைக் காணாதவராகத் தான் இருக்கின்றீர்கள். உங்களுடைய கண்ணிலே தூசியினை வைத்துக் கொண்டு நீங்கள் எவ்வாறு உங்களுடைய சகோதரரின் கண்ணில் உள்ள தூசினை காணப் போகின்றீர்கள்? முதலில் நீங்கள் உங்களது கண்ணினை தூய்மை ஆக்க வேண்டும்; ஆனால் தூய்மையான கண்களை இங்கே கொண்டிருப்பது யார்? ஒரு குருடரால் மற்றொரு குருடரை வழிநடத்த முடியுமா? இருவரும் சென்று குழியிலே தான் விழுவர். குருடரை குருடர் வழிநடத்துவதைப் போன்றே தான் பிறரை நியாயந்தீர்க்கவும் தண்டனை அளிக்கவும் ஒருவர் செய்யும் செயல்கள் இருக்கின்றன.

எவர் ஒருவர் பிறரை கொடுமையான தண்டனைகளுக்கும் காயங்களுக்கும் மரணத்திற்கும் நியாயந்தீர்த்து உள்ளாக்குகின்றாரோ அவர் மற்ற மக்களுக்கு அந்தத் தீர்ப்பின் மூலமாக ஒரு பாடத்தினை போதிக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறு செய்கின்றார். தண்டனைகள் மூலமாக மக்களை திருத்தலாம் என்றே அவர் போதிக்கின்றார். ஆனால் அவருடைய இந்த போதனைகளினால் பயன் என்ன? அவருடைய போதனைகளைக் கேட்கும் அவருடைய மாணவன் அவரைப் போன்றே மாறுவதைத் தவிர அவருடைய இந்த வழிமுறைகளினால் பெறப்படும் பயன் என்ன? அவருடைய இந்த நடைமுறைகளைக் கற்கும் மாணவன் அதில் தேர்ச்சிப் பெற்றுத் தான் குருவானதும் என்ன செய்வான்? அவனுக்கு முன்னர் இருந்த குரு செய்ததைப் போல வன்முறைச் செயல்களையும் கொலைச் செயல்களையும் தானே இவனும் செய்வான்..

மேலும் நீதிமன்றங்களில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்றே எண்ணாதீர்கள். மனித நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்றே எண்ணி அதன் மேல் உங்களது நம்பிக்கையை வைக்கும் செயலானது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு வைர நகையை பன்றிகளிடம் தூக்கி எறியும் செயலுக்கு ஒப்பாக இருக்கின்றது. அவைகள் அந்த வைர நகையினை நசுக்கி அதனை துண்டுத் துண்டாகப் பிய்த்துப் போட்டு விடுங்கள். எனவே நான்காவது கட்டளையானது இது தான் : உங்களை எவ்வளவு தான் சோதனைக்கு உள்ளாக்கினாலும் அவமதித்தாலும் தீமையை தீமையால் எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள் நீங்களும் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். எவரையும் குறை சொல்லாதீர்கள். தண்டனைக்கும் உள்ளாக்காதீர்கள்.

ஐந்தாவது கட்டளை: முந்தைய சட்டத்தில் 'உங்களுடைய மக்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். வேற்று நாட்டு மக்களுக்கு தீமை புரியுங்கள்' என்றே கூறப்பட்டு உள்ளது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன் : உங்களுடைய நாட்டு மக்களை மட்டும் நேசித்து அவர்களிடம் மட்டுமே அன்பு செலுத்தாதீர்கள், ஆனால் மற்ற நாட்டவர்களிடமும் அவ்வாறே அன்பு கூருங்கள். பிற நாட்டவர் உங்களை வெறுக்கட்டும், உங்களைத் தாக்கி உங்களை அவமானப்படுத்தட்டும். இருந்தும் நீங்கள் அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள். அவர்களை வாழ்த்துங்கள். உங்களுடைய நாட்டு மக்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் நீங்களும் மற்றவர்களைப் போல் தானே இருக்கின்றீர். அனைத்து நாட்டு மக்களும் அவர்களது நாட்டு மக்களை நேசிக்கின்றனரே. இவ்வாறு நீங்கள் இருப்பதனால் தான் யுத்தங்கள் நிகழப் பெறுகின்றன. நீங்கள் அனைத்து நாடுகளையும் ஒன்றாகவே கருத வேண்டும். அவ்வாறே நீங்கள் செய்தால் தான் தந்தைக்கு மகன்களாய் இருப்பீர்கள். உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் தந்தையின் குழந்தைகளே. அவ்வாறு இருக்க நீங்கள் அனைவரும் சகோதரர்களாகவே ஆகின்றீர்கள். எனவே இது தான் ஐந்தாவது கட்டளை: உங்களினிடையே பின்பற்றுங்கள் என்று நான் கூறி இருக்கும் சட்டங்களை பிற நாட்டு மக்களிடமும் பின்பற்றுங்கள். ஏன் என்றால் தந்தையின் பார்வையில் பல்வேறு நாடுகள் என்ற ஒன்று இல்லை. அவ்வாறே பல்வேறு இராஜ்யங்கள் என்பதும் இல்லை. அனைவரும் சகோதரர்களே. ஒரே தந்தையின் மக்களே. மக்களிடயே நாடுகளைக் கொண்டும் ஆட்சிகளைக் கொண்டும் பிரிவினை உருவாக்காதீர்கள்.

எனவே, 1. கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடனேயே இருங்கள். 2) விபசாரத்தின் மூலம் உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள். 3. எவரிடத்தும் எக்காலத்திற்கும் எவ்விதமான உறுதிமொழியினையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 4. தீமையை எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள், மனித சட்டத்தினிடமும் செல்லாதீர்கள். 5. வெவ்வேறு நாடுகளிடையே பிரிவுகளை உருவாக்காதீர்கள். உங்களுடைய நாட்டு மக்களை நேசிப்பதைப் போலவே பிற நாட்டவர்களையும் நேசியுங்கள்.

இந்த அனைத்து கட்டளைகளையையும் சுருக்கி ஒன்றாகக் கூற வேண்டும் என்றால் 'பிறர் உங்களுக்கு எதனை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அதனையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள்' என்றே கூறலாம். இந்தக் கட்டளைகளைப் பின்பற்றினால் மக்கள் உங்களைப் புகழ்வார்கள் என்று எண்ணி இவற்றைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் மக்களுக்காக செயல்களைச் செய்தீர்கள் என்றால், அச்செயல்களுக்குரிய பயனும் மக்களிடம் இருந்தே இருக்கும். ஆனால் மக்களுக்காகச் செய்யவில்லை என்றால் அதற்குரிய பலனோ விண்ணகத் தந்தையிடம் இருந்தே கிட்டப் பெறும்.


தொடரும்...!!!
பி.கு:
டால்ஸ்டாயின் 'சுவிசேஷங்களின் சுருக்கம் (Gospel In Brief)' என்ற நூலில் வரும் பகுதி இது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு