சுவிசேஷங்களைப் பற்றிய முழுமையான விளக்கத்தினைக் கொண்டிருக்கும் எனது மூன்றாவது நூலினில் சுவிசேஷத்தில் உள்ள அனைத்து பகுதிகளைக் குறித்தும் விளக்கங்கள் தந்திருக்கின்றேன். எந்த பகுதியினையும் அந்த நூலினில் நான் நீக்கி இருக்கவில்லை. ஆனால் இந்த நூலிலோ பின்வரும் இந்தப் பகுதிகளை நான் நீக்கி இருக்கின்றேன் : யோவான்ஞானஸ்னானனின் தாய் கருவுறுதல், யோவானின் பிறப்பு, யோவான் சிறை இடப்படுதல், யோவானின் மரணம், இயேசுவின் பிறப்பு, அவரது குடும்பப் பின்னணி, இயேசுவின் தாயார் எகிப்துக்குச் செல்லும் பகுதி, கானாவிலும் கப்பர்நகூமிலும் அவர் செய்த ஆச்சர்யங்கள், பிசாசுகளைத் துரத்துதல், கடலின் மேல் நடத்தல், அத்தி மரத்தினை எரிய வைத்தல், நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துதல், மரித்தோரை உயிரோடு எழுப்புதல், இயேசு கிருத்து உயிர்த்து எழுதல் மற்றும் இயேசுவினால் நிறைவேறிய தீர்க்கத்தரிசனங்கள் பற்றிய குறிப்புகள். இவை அனைத்தையும் நான் இந்தச் சிறு குறிப்பில் இருந்து நீக்கி உள்ளேன்.

இப்பகுதிகளை நான் இங்கே நீக்கி இருப்பதற்கு காரணம் என்னவென்றால், இப்பகுதிகள் இயேசுவின் போதனைகளைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை. மாறாக இவை இயேசுவின் காலத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும், இயேசு அவருடைய போதனைகளை செய்துக் கொண்டிருந்த பொழுதும் சரி இயேசுவின் காலத்திற்குப் பிறகும் சரி நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றியும் மட்டுமே விலாவரியாக விளக்கிக் கொண்டு இருக்கின்றன. இயேசுவின் போதனைகளை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் இந்த சிறு குறிப்பினில் அப்பகுதிகள் அனைத்தையும் நாம் இணைத்தோம் என்றால் அச்செயலானது  இந்தச் சிறு குறிப்பினைப் புரிந்துக் கொள்வதற்கு சிக்கலானதொன்றாக மாற்றி விடும். அந்தப் பகுதிகளை நாம் எப்படி புரிந்துக் கொண்டாலும் சரி அவை இயேசுவின் போதனைகளை மறுக்கப்போவதும் இல்லை ஆதரிக்கப்போவதும் இல்லை. இயேசுவின் தெய்வீகத்தன்மையில் நம்பிக்கைக் கொண்டிராத மக்களிடம் இயேசுவின் தெய்வீகத்தன்மையினைப் புரிய வைப்பதற்காகவே அப்பகுதிகள் கிருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த காரணத்திற்காகவே அவை முக்கியமாக இருக்கின்றன. ஆனால் எவன் ஒருவன் அதிசயங்களைப் பற்றிய கதைகளிலோ அல்லது இயேசுவின் தெய்வீகத்தன்மையானது அவருடைய கருத்துக்களில் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது என்பதிலோ நம்பிக்கை இல்லாது இருக்கின்றானோ, அவனது பார்வையில் மேற்கூறியப் பகுதிகள் அனைத்தும் தாமாகவே மிதமிஞ்சிய கற்பனைகளாகப் போய் விடும்.

சுவிசேஷங்களைப் பற்றிய விரிவான நூலினில், இன்று நம்மிடையே பொதுவாக நிலவிக் கொண்டிருக்கும் கருத்துக்களில் இருந்து நான் மாறுபடும் ஒவ்வொரு இடத்திலேயும், அதற்குரிய முழுமையான விளக்கத்தினைத் தந்து இருக்கின்றேன். மேலும் என்னுடைய கருத்துக்களுக்கு அதரவாக மற்ற சுவிசேஷ வசனங்களில் இருந்து தக்கச் சான்றுகளையும் நான் தந்து இருக்கின்றேன். என்னுடைய ஒவ்வொரு கருத்திற்கும் சரி, நான் நீக்கி இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் சரி, சரியான முறையில், இன்று நடைமுறையில் பல்வேறு விதமாக வழங்கி வரும் சுவிசேஷ விளக்கங்களோடு எனது கருத்தினை ஒப்பாய்வு செய்தே நான் விளக்கம் அளித்து உள்ளேன். மேலும் அந்த ஒப்பாய்வுடன் அன்று நிலவியச் சூழலினைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் மொழியினைக் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே தக்க விதத்தில் விளக்கங்கள் தந்து இருக்கின்றேன். ஆனால் இந்த சிறு குறிப்பினில், அந்த அனைத்துச் சான்றுகளையும் சரி, திருச்சபைகளின் தவறான புரிதல்களுக்கு மேற்கூறிய என்னுடைய மறுப்பினையும் சரி, மேலும் பல்வேறு விளக்கங்களையும் அதற்குரிய குறிப்புகளையும் சரி சேர்க்காமலே தான் வைத்து இருக்கின்றேன். ஏனென்றால் அவை மெய்யானவைகளாகவே இருப்பீனும், இயேசுவின் போதனைகளை உண்மையாகப் புரிந்துக் கொள்வதனை விட அவை முக்கியமானவை அல்ல.

ஒவ்வொரு வசனமாக அலசி ஆராய்ந்து இயேசுவின் போதனைகளின் உண்மையான அர்த்தத்தினை அறிந்துக் கொள்வது என்பது இங்கே (இந்தச் சிறு குறிப்பில்) முக்கியமானதொன்று இல்லை. மாறாக உண்மையினைத் தேடிக் கொண்டிருக்கும் மக்களின் உள்ளமானது இயேசுவின் கருத்துக்களோடு ஒன்றுபடும்படி செய்வதே இங்கே சரியானதொன்றாக இருக்கும். அதற்கு நாம் இயேசுவின் போதனைகளின் அர்த்தத்தினை முழுமையாகயும் தெளிவாகவும் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.  திருச்சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நான் வேறுபடும் இடங்களை வாசகர்கள் கடந்து வருகையில் அவர்கள் ஒன்றினை நினைவிற் கொள்ள வேண்டும் என்றே நான் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன். நான்கு சுவிசேஷங்களும் முழுக்க முழுக்க புனிதமான நூல்கள் என்று இன்று நிலவி வரும் நம்பிக்கையானது, ஒரு மிகப் பெரியத் தவறு என்பதனை அவர்கள் மறக்காது இருக்க வேண்டும்.

வாசகர்கள் ஒன்றினை நிச்சயமாக நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தத்துவஞானிகளான பிளாட்டோ, பிலோ, மார்கஸ் அரேலியஸ் அவர்களைப் போல் அல்லாது இயேசு தானாக எந்த ஒரு புத்தகத்தையும் எழுதி வைத்திருக்கவில்லை. மேலும் சாக்ரடீசைப் போல் படித்த மக்களுக்குத் தன்னுடையப் போதனைகளை அவர் வழங்கவும் இல்லை. மாறாக பெரும்பாலும் கல்விஅறிவு பெற்றிராத மக்களிடமே அவர் பேசியும் போதித்தும் வந்தார். அவர் இறந்து வெகுகாலத்திற்குப் பின்னரே மக்கள் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதை எழுதி வைக்க ஆரம்பித்தனர்.

மேலும் வாசகர்கள், திருச்சபையானது அக்காலத்தில் இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறு குறிப்புக்களில் இருந்தே முதல் மூன்று சுவிசேஷங்களைத் தேர்ந்து எடுத்தது என்பதனை நினைவுக்கூர வேண்டும். பின்னர் திருச்சபையைச் சார்ந்தவர்கள் நான்காவது சுவிசேஷத்தையும் அவ்வாறே தேர்ந்து எடுத்தனர். அவ்வாறு திருச்சபையானது இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகளில் இருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் பொழுது பல்வேறு குழப்பமான பகுதிகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்கத்தான் வேண்டி இருந்தது. எனவே தேர்ந்து எடுக்கப்படாத குறிப்புகளில் காணப்படும் மோசமானப் பகுதிகளைப் போன்றே தேர்ந்து எடுக்கப்பட்ட சுவிசேஷங்களிலும் மோசமானப் பல பகுதிகள் இருக்கின்றன என்பதையும் வாசகர்கள் தங்களது நினைவிற் கொள்ள வேண்டும்.

இயேசுவின் போதனைகள் மட்டுமே புனிதமானதாக இருக்க முடியும். அதனை விடுத்து குறிப்பிட்ட ஒரு சில வாசகங்களோ அல்லது உச்சரிப்புகளோ நிச்சயமாக புனிதமாக இருக்க முடியாது. அங்கும் இங்குமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வசனங்களை சில மக்கள் புனிதமானவை என்று கூறுவதனால் மட்டுமே அந்த வசனங்கள் புனிதமாகி விடுவதில்லை என்பதையும் வாசகர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சுவிசேஷங்களும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் மூளைகளாலும் கைகளாலும் உருவாக்கப்பட்டு இருக்கும் படைப்புகள் தான் என்பதையும் வாசகர்கள் நினைவிற் கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவற்றில் பல பகுதிகள் சேர்க்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தே தான் இருக்கின்றன. நான்காம் நூற்றாண்டில் இருந்து நம்முடைய கைகளுக்கு வந்துள்ள படைப்புகள் எவ்விதமான நிறுத்தக் குறியீடுகளும் இல்லாமல் தொடர்ச்சியான எழுத்துக்களாக இருக்கும் வண்ணமே அமைந்து இருக்கின்றன. எனவே அந்த நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதில் வேறுபாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே எழத் துவங்கிவிட்டன. அப்படி எழுந்த வேறுபாடுகளினால் இன்று நம்மிடையே கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் வகையான சுவிசேஷங்கள் உலாவிக் கொண்டு இருக்கின்றன.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு