சென்ற பதிவினில் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் வழங்கப்பட்டு இருக்கின்றது என்றும் அதனால் தான் சாத்தானால் அவனை பாவம் செய்ய வைக்க முடிந்தது என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். மேலும், தான் அவனுக்கு வழங்கி இருக்கின்ற அந்த முடிவெடுக்கும் சுதந்திரத்தை மனிதனானவன் எப்படி பயன்படுத்துகிறான் என்று காண்பதற்காகவே இறைவன், சாத்தான் மனிதனை ஆசைகள் காட்டி மயக்கிய நிகழ்வில் தலையிடவில்லை என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். சரி இருக்கட்டும்...இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி,

நன்மை தீமை என்று ஏதாவது இருக்கின்றதா இல்லையா? நல்ல செயல் தீய செயல் என்று ஏதேனும் இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தால் நாம் அவற்றை எவ்வாறு அறிந்து கொள்வது?

உதாரணமாக காவேரி நீர் பிரச்சனையையே நாம் எடுத்துக் கொள்வோம். தமிழர்களைப் பொறுத்த வரை காவேரி நீரைத் திறந்து விடுவது என்பது நல்ல செயல்...காவேரி நீரைத் திறந்து விடாமல் அணை கட்டுவது என்பது தீய செயல். ஆனால் அதே நேரம், கன்னடர்களுக்கோ காவேரியில் அணை கட்டுவது என்பது நல்ல செயலாக இருக்கின்றது...தமிழகத்துக்கு தண்ணீர் தருவதோ தீமையான செயலாகத் தோன்றுகின்றது. அதாவது ஒரே செயலானது, இரு வேறு நபர்களுக்கு வெவ்வேறான அபிப்பிராயத்தை தருகின்றது. ஒருவருக்கு சரி என்று படுவது மற்றொருவருக்கு தவறென்று தோன்றுகின்றது. இந்நிலையில் எந்த செயலை நாம் சரி என்றும் எந்த செயலை தவறென்றும் நம்மால் கூற முடியும்? எதனை வைத்து நம்மால் முடிவெடுக்க முடியும்?

குடிப்பது தவறென்று நாம் கூறினால், 'அது என்னுடைய உரிமை....உன்னுடைய பார்வையில் குடிப்பது தவறாகத் தெரிகின்றது...ஆனால் எனக்கு அது சரியாகப் படுகின்றது...எல்லாம் நமது பார்வையைப் பொறுத்தே இருக்கின்றது. நல்லது கெட்டது என்றெல்லாம் இங்கே ஒன்றும் கிடையாது' என்று பதில் கூறுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி மட்டும் பார்த்துக் கொண்டு சுயநலமாக இருக்கக்கூடிய நிலையில் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப நல்லவைகளையும் கெட்டவைகளையும் வரையறை செய்து வைத்திருக்கின்றனர். நானும் மனிதன்...அவனும் மனிதன்...அவ்வாறு இருக்க யார் சொல்வதை சரி என்று யாரால் முடிவு செய்ய முடியும். அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக இருக்கும்படி 'இவை நல்ல செயல்கள்...இவை தீய செயல்கள்' என்று யாரால் வரையறை செய்ய முடியும்?

மனிதர்களைப் படைத்த இறைவனால் மட்டுமே தான் முடியும். வேறு ஒருவராலும் முடியாது. இப்பொழுது இதன் அடிப்படையில் தான் இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் என்று நாம் காண வேண்டி இருக்கின்றது.

மனிதனானவன் நல்லவனாக இருந்த பொழுதிலும், அவன் சாத்தானின் ஆசை வலைகளில் விழுந்து விட்டான் என்றே நாம் கண்டிருக்கின்றோம். அதன் விளைவாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், பேராசை பொறாமை கோபம் ஆகிய குணங்களைத் தங்களுள் வளர்த்துக் கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். அன்பினால் ஒற்றுமையாக இருக்க வேண்டிய மனிதர்கள், பல்வேறு இனக்குழுக்களாகவும் தேசங்களாகவும் பிரிந்து கொண்டு உலகையும் சரி மனித இனத்தையும் சரி அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவன் வாழ வேண்டும் என்றால் மற்றொருவன் சாவதில் பிழையில்லை என்ற எண்ணத்தை சாத்தான் மனிதர்களுள் பரவலாக பரப்பிக் கொண்டிருக்கின்றது. எது சரி, எது தவறு என்று தெளிவான வரையறையில்லாத நிலையில் மனிதர்களும் சாத்தானின் தூண்டுதல்களுக்கு ஆட்பட்டு சாத்தானிடம் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர். சாத்தான் வென்று கொண்டே இருக்கின்றது. சாத்தானை வெல்வதற்கு வழி தெரியாமலே மனிதனானவன் இருக்கின்றான். ஏனென்றால் எது சரி என்றும் எது தவறென்றும் அவன் அறியாமலே தான் இருக்கின்றான்.

ஒரு தவறும் செய்யாமல் இருக்கின்ற ஒருவனை மற்றொருவன் அடித்து விட்டான். இந்நிலையில் அந்த மனிதனின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும்...'ஏன்டா...நான் எவருக்கும் தீங்கு செய்யாமல் ஒழுங்காகத் தானே இருந்து கொண்டிருந்தேன்...என்னை எதற்காக அடித்தாய்...இந்தா வாங்கிக் கொள்...' என்று அவனைத் திருப்பி அடிப்பதாகத் தானே இருக்கும். அந்த எண்ணவோட்டத்தினை தவறென்று எவரும் கூற மாட்டார்கள். அதுவே தான் மனித சிந்தனையாக இருக்கின்றது. ஆனால், கூர்ந்து கவனித்தோம் என்றால் 'பழிக்குப் பழி' வாங்க வேண்டும் என்ற எண்ணத்தினை மெதுவாக சாத்தான் அந்த மனிதனின் மனதிலும் விதைத்து விடுகின்றது. எனவே 'மன்னித்து விடுவது' என்கின்ற நல்ல குணமானது மறைந்து அதற்குப் பதிலாக 'பல்லுக்குப் பல்...இரத்தத்திற்கு இரத்தம்' என்கின்ற சாத்தானின் குணமானது மனிதர்களின் மனதினில் மலர்ந்து விடுகின்றது. அதன் விளைவாக இறுதியில் என்றும் சாத்தானே மனிதர்களை வென்று அவர்களை ஆட்சி புரிந்து வருகின்றது.

அத்தகைய ஒரு சூழலில் தான், அதாவது 'எது நன்மை எது தீமை' என்று அறியாமல் மனிதன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அந்த சூழலில் தான், 'இது தான் நன்மை...இது தான் தீமை' என்று மனிதர்களுக்குப் போதித்து சாத்தானை மனிதர்கள் எந்த வழியாக வெல்லலாம் என்று சரியான ஒரு வழியினை அவர்களுக்கு காட்டவே தான் இறைவன் உலகிற்கு வருகின்றார். மனிதனால் சாத்தானை வெல்ல முடியும் என்பதனை நிரூபிப்பதற்காகவே தான் அவர் மனிதனாக வருகின்றார்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...இது சாத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்று...!!! மனிதனால் சாத்தானை வெல்ல முடியும்...அந்த ஆற்றல் அவனுக்கு இருக்கின்றது...அது இறைவனுக்குத் தெரியும். அந்த ஆற்றலினை அவன் அறிந்து கொண்டு...அவனாகவே சாத்தானை வெல்ல வேண்டும் என்பதற்காகத் தான் அவர் மனிதனாக வருகின்றார். அவர் மனிதராக வந்த அந்த காரணத்தினால் தான் சாத்தானால் அவரை சோதிக்க முடிந்தது. இறைவனும், சாத்தானின் சோதனைகளை எவ்வாறு மனிதனால் வெல்ல முடியும் என்று காண்பிப்பதற்காகத் தான் மனிதனாக வந்து அந்த சோதனைகளை எதிர் கொண்டார். மனிதர்களுக்கு எது உண்மையான நன்மையாக இருக்கின்றது என்றும் ஒரு மனிதனானவன் எவ்வாறு வாழ வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்துவதற்காகவுமே தான் அவர் தொடர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனைகளில் இருந்தே நாம் அதனைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

எனவே இதற்காகத் தான் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்தார்...!!! சாத்தானின் ஆசை வலைகளில் விழுந்து தனித்தனியாகப் பிரிவுற்று பாடுபட்டுக் கொண்டிருந்த மனிதர்களை, 'அவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்' என்று ஒன்றிணைத்து அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய நன்மையையும் தீமையையும் தெளிவாக எடுத்துக் கூறி, சாத்தானை அவர்கள் வெல்வது எவ்வாறு என்ற வழியினைக் காட்டுவதற்காகவே இறைவன் மனிதனாக உலகிற்கு வந்தார்.

அவர் அவ்வாறு வந்ததால் தான் நம்மால் எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெளிவாகப் பிரித்துப் பார்க்க முடிகின்றது. உதாரணமாக 'குடிப்பது என்னுடைய சொந்த உரிமை' என்று கூறுவோரிடம் சென்று...'சகோதரனே...குடிப்பது உனக்கு நலமாக இருக்கலாம்...ஆனால்...அதன் தாக்கத்தை சமூகத்தில் சற்று உற்றுப் பார்...எவ்வளவு தீமைகளுக்கு அது காரணமாக இருக்கின்றது...நம்முடைய சகோதரர்களும் சகோதிரிகளும் அதன் மூலமாக பயங்கரமான இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள்...நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்...எனவே நம்மைப் பற்றியும் நம்முடைய சந்தோசத்தினைப் பற்றியும் மட்டுமே நாம் சிந்திக்கக் கூடாது...ஒட்டுமொத்த சமூகத்தைப் பற்றியும் அதன் நலனைப் பற்றியும் நாம் என்ன வேண்டி இருக்கின்றது. எனவே குடிப்பதை நிறுத்துவது என்பது நல்லதொரு செயலாக இருக்கின்றது.' என்று நம்மால் கூற முடிகின்றது. காரணம், நாம் தனி மனிதர்கள் அல்ல அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்றும் 'தன்னைப் போல் பிறரையும் நினை' என்றும் இறைவன் கூறிவிட்டு சென்று இருக்கின்றார். அதன் அடிப்படையில் நம்மால் நாம் கூறுவது நன்மையான செயலாக இருக்கின்றது என்று நம்பிக்கையுடன் ஒட்டுமொத்த மனித இனத்தின் சார்பாக பேச முடிகின்றது. நிற்க.

சாத்தானை இறைவன் அழிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார் என்றால், 'சாத்தானே அழிந்து போ...!!!' என்று அவர் கூறினாலே போதுமே...சாத்தான் அழிந்து போய் இருக்குமே. ஆனால் சாத்தானை மனிதன் வெல்ல வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றார்...தன்னுடைய மகனாக மனிதன் நிமிர்ந்து நின்று அன்புடன் சாத்தானை எதிர்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருக்கின்றது. அதற்காகவே தான் அவர் மனிதனாக உலகிற்கு வந்தார்.

இன்றைய கிருத்துவ சமயம் 'இயேசு தன்னுடைய மரணத்தினால் சாத்தானை/பாவத்தை வென்றார்' என்றே கூறுகின்றது. ஆம் உண்மை தான்...இயேசு சாத்தானை வென்றார். சாத்தானால் அவரை தோற்கடிக்க முடியவில்லை. சாத்தானானது எவ்வளவு தான் முயன்றும், இயேசுவை சுயநலத்துடன் நடக்க வைக்கவோ, ஆசைகள் அல்லது பயத்தினால் வீழ்த்தவோ முடியவில்லை. இயேசு ஒரு மனிதனாக சாத்தானை வென்றார். அவர் எப்படி சாத்தானை வென்றாரோ அவ்வாறே மற்ற மனிதர்களும் சாத்தானை வெல்ல வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கின்றது. மாறாக கிருத்துவத் திருச்சபைகள் இன்று போதிப்பது போல் அனைத்து மக்களுக்காகவும் அவர் சாத்தானை வென்று இருக்கவில்லை. எப்படி வெல்ல வேண்டும் என்றே அவர் வழிகாட்டி இருக்கின்றார்...அதன்படி சாத்தானை வெல்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாக இருக்கின்றது. ஆனால் இதனை கிருத்துவ சபைகள் கூறுவது இல்லை. மாறாக மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடக்கும் சண்டையினை, இறைவனுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் சண்டை என்பதைப் போல் போதித்து மனிதர்களை தொடர்ந்து பாவிகளாகவே அவை வைத்திருக்கின்றன.

'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கின்றேன்' என்று இயேசு கூறி இருக்கின்றார். ஆம்...உண்மை தான்...!!! சாத்தானை வென்று எவ்வாறு பரலோக இராஜ்யத்தினை அமைப்பது என்று காட்டுகின்ற வழியாக அவரே தான் இருக்கின்றார். அவர் காட்டிய வழியிலேயே தான் மனிதன் செல்ல வேண்டி இருக்கின்றது.

எனவே இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் என்ற நமது கேள்விக்கு, மனிதன் எவ்வாறு சாத்தானை வெற்றி கொண்டு அன்பால் ஒண்றிணைந்து 'பரலோக இராஜ்யத்தினை' இந்த உலகில் அமைக்க முடியும் என்பதனை அவனுக்கு காட்டி அவனை வழிநடத்துவதற்காகவே உலகிற்கு வந்தார் என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது இது வரை நாம் கண்டவற்றை சுருக்கமாக காண்பது நலமாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

காண்போம்...!!!
 
பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்எனவே மாற்றுக் கருத்துக்களும்கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

இயேசுவின் மலைச் சொற்பொழிவினை படிப்பதும் இங்கே பயனுள்ளதாக இருக்கும்...


பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு