மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 மே, 2010

வேண்டும் ஒரு மழைகாலம்!!!


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புல்வெளி. புல்வெளியை பிரித்துக் கொண்டு நடுவே ஓர் வழி. அதில் தனியாய் நான். சிறிது நேரத் துணையாய் மழை. மழை விட்டுச் சென்ற துளிகளை காதலோடு தாங்கியவாறு புதிதாய் மலர்ந்த பூக்கள். உடல் சிலிர்க்க தீண்டிச் செல்லும் தென்றல். மனம் சிலிர்க்க தீண்டும் உன் கூந்தல். இப்படியே நீள்கின்றதடி என் கனாக்கள்...ஒரு காதலோடு...ஒரு கவிதையாய்!!! கற்பனைகள் சிறகடித்து பறக்கும் நேரம் இது... நிச்சயமாய்!!! ஏனோ புரியவில்லை, மெய்யில்லா கற்பனை கூட உன்னை எண்ணும் போது மெய் சிலிர்க்கின்றததடி!!!
மாற்றமில்லை...
என் காதலுக்கு நீ வேண்டும்.
அக்காதலை சொல்ல, வேண்டும் கண்டிப்பாய் ஒரு மழைகாலம்!!!

"மழைக்காலம் வேண்டும்...
      துணையாய் நீயும் வேண்டும்...
மாலை நேரத் தென்றல் தீண்டும்
    யாருமில்லா பாதை வேண்டும்...


வயல்களின் வழியாய்
   குடையின்றி வாராய் பெண்ணே....
குடையாய் நானிருக்க
    ஒருசேர நடை பயில்வோம்!!!"

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொங்கல்னா மழை வரும்டே!!!

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.


மழை! எங்கள் ஊர் மிகவும் எதிர் பார்க்கும் ஒரு விருந்தாளி. வேலைக்கு வெளியூர் சென்ற மகன் எப்பொழுது ஊர் திரும்புவான் என்று காத்திருக்கும் அன்னையைப் போல், எங்கள் ஊரும் மழைக்காக காத்து இருக்கும். நாங்கள் சற்றும் எதிர் பார்க்காத பொழுது அவனும் வருவான், சில நேரங்களில் தன் உள்ளத்தில் மறைந்து இருக்கும் காதலை கயல்விழி அசைவில் வெளிப்படுத்தும் பெண்ணைப் போல் ஒரு கவிதையாய்- குற்றாலத்து  சாரலாய்!!! சில நேரங்களில் இன்று உலகத்தின் கடைசி நாள் என்று அறிந்தவுடன் இது வரை தன் நெஞ்சத்தில் சேர்த்து வைத்து இருந்த காதலை தன் காதலியிடம் சொல்லும் காதலனை போல் - பெரு மழையாய்!!! இருக்கும் வரை ஊரை நன்றாக மகிழ்விப்பான். பின் எவ்வாறு சொல்லாமல் வந்தானோ அவ்வாறே சொல்லாமல் சென்று விடுவான். நாங்களும் அவன் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.

உலகமெங்கும் சுற்றினாலும் வீட்டில் ஒரு விழா என்றால் எப்படியாவது வீட்டிற்கு வந்து தன் தாயின் மனத்தை குளிர்விக்கும் மகனை போல் எங்கள் ஊருக்கு தவறாமல் மழை வந்து செல்லும் ஒரு விழா உள்ளது. அது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா. பங்குனி மாதத்தில் மாரியம்மனை துதித்து நடத்தும் பொங்கலை அவன் இது வரை காணாமல் விட்டதில்லை. எதிர்பார்க்காத பொழுதே வந்து பழகியவனை நிச்சயமாய் வருவான் என்று நாங்கள் எதிர் பார்ப்பது அப்பொழுது தான். இது வரை அந்த எதிர்பார்ப்பு பொய்தததில்லை.

இன்றும் அப்படித்தான், மேகம் இல்லா வானில் கதிரவன் கொழுத்திக் கொண்டு இருந்தான். ஊரில் பொங்கல். அருகிலிருந்த சிறுவன் எதிர்பார்ப்போடு கேட்டான்,

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.
"எப்படினே.. ஒரு மேகத்தை கூட காணோம்... அப்புறம் எப்படி வரும்?" என்றான்.
"வரும்டா!... பொறுமையா இரு... வராம எங்க போகும்..." என்று சொல்லி நகர்ந்தேன். அவனும் "ஆகோ.... அய்யாகோ" என்று கூறியவாரே கோவிலை நோக்கி செல்லத் தொடங்கினான். நானும் கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தேன்.

மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டினுள் இருந்த சமயம் வெளியே இருந்து மண் வாசனை வீச ஆரம்பித்தது. ஆவலுடன் வெளியே சென்று பார்த்தேன். எப்படியோ மேகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தன. மழை மண்ணை நனைத்துக் கொண்டு இருந்தது. மண்ணோ மணத்தை பரப்பிக் கொண்டு இருந்தது. மீண்டும் நிமிர்ந்து வானத்தை பார்த்தேன். ஒரு மழைத்துழி என் கண் சேர மனம் சிலிர்த்தது.
மழை அருமையானவன் தான்!!! இந்த வருடமும் பொங்கலுக்கு  தன் அன்னையை காண வந்து விட்டான்.
புன்னகைத்தேன்.
"எங்க ஊர்ல பொங்கல்னா மழை வரும்டே!!!!"

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...