கிருத்துவம் என்ற பெயரிலேயே இயேசுவின் கருத்துக்களுக்கு மாறாக இருக்கும் திருச்சபையின் கருத்துக்கள், இயேசுவின் கருத்துக்களாக போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. இதுவே தவறான விளக்கங்களைப் பரப்புவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு வழியாகும். நாம் அனைவரும் இந்தத் தவறான விளக்கத்தினைக் கொண்டே வளர்ந்தும் இருக்கின்றோம். திருச்சபையின் போதனைகளானவை இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுப்பட்ட போதனைகளாகவே இருக்கின்றன. அவை தம்மில் மிகக் குறைந்த அளவே இயேசுவின் போதனைகளைக் கொண்டு இருக்கின்றன. மிகக் குறைந்த அளவே இருந்தாலும் கூட இயேசுவின் அந்தக் கருத்துக்களும் திருச்சபையின் மற்ற கருத்துக்களுக்கு ஏற்ப திரிக்கப்பட்டும் மாற்றப்பட்டும் தான் இருக்கின்றன.

திருச்சபைத் தரும் அந்தத் தவறான விளக்கத்தின்படி இயேசுவின் போதனை என்பது, உலகத் தொடக்கத்திலிருந்து இன்றிருக்கும் திருச்சபைக் காலம் வரை தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தெய்வீக நிகழ்வுகளில் ஒரு நிகழ்வு, அவ்வளவே. இந்தத் தவறான விளக்கத்தினைக் கூறுவோர் இயேசுவினை இறைவன் என்றே அழைக்கின்றார்கள். ஆனால் அவரை அவர்கள் இறைவன் என்று அழைத்தாலும் அவருடைய போதனைகளுக்கு அவர்கள் அதிகமாக முக்கியத்துவம் தருவதில்லை. மாறாக யூத சட்ட நூல்களுக்கும், சங்கீதங்களுக்கும், அப்போஸ்தளர் நடபடிகளுக்கும், நிருபங்களுக்கும் வெளிப்படுத்தலுக்கும், திருச்சபைகளின் முடிவுகளுக்கும், திருச்சபையினது தந்தைகளின் எழுத்துக்களுக்கும் எந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ அதே அளவு முக்கியத்துவத்தைத் தான் அவர்கள் இறைவன் என்று அழைப்பவரின் போதனைகளுக்கும் அவர்கள் தருகின்றனர்.

இவ்வாறு தவறான விளக்கங்களை வழங்குபவர்கள், இயேசுவின் காலத்திற்கு முன்னர் நிகழ்ந்தது என்று தாங்கள் கருதும் வெளிப்பாடுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வாறே இயேசுவின் காலத்திற்குப் பின்னர் நிகழ்ந்த வெளிப்பாடுகள் என்று அவர்கள் கருதும் வெளிப்பாடுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் இயேசுவின் போதனைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வாறு மாறுபட்டு இருக்கும் இயேசுவின் போதனைகளைப் பற்றி தங்களுக்கு ஏதும் புரிதல் இல்லாததனைப் போலவே அவர்கள் காட்டிக் கொள்கின்றனர். எனவே அவர்களின் நோக்கம் இயேசுவின் போதனைகளின் அர்த்தங்களைப் புரிந்துக் கொண்டு அதனை மக்களுக்கு விளக்குவது இல்லை என்பது புலனாகின்றது. மாறாக யூத சட்டநூல், சங்கீதங்கள், சுவிசேஷங்கள், நிருபங்கள், நடபடிகள் என்று முற்றிலுமாக முரண்பட்ட பல்வேறு நூல்கள் அனைத்தையும் புனிதநூல்கள் என்று ஒன்றிணைத்து அவற்றைப் பேணிப் போற்றுவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

அவர்களின் அத்தகைய விளக்கங்கள் உண்மையை நோக்கி இருப்பவை அல்ல. மாறாக எவற்றை ஒன்றிணைக்க முடியாதோ அவற்றை ஒன்றிணைப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளாகவே அவர்களின் விளக்கங்கள் இருக்கின்றன. உதாரணமாக பழைய ஏற்பாட்டு பகுதிகளுக்கும் புதிய ஏற்பாட்டு பகுதிகளுக்கும் உள்ள வேற்றுமைகள் கணக்கில் அடங்காதவை. அவை இரண்டும் முற்றிலுமாக வேறுபட்ட நூல்கள். இருந்தும் இந்தத் தவறான விளக்கங்களை அளிப்பவர்கள் பழைய ஏற்பாட்டுடன் புதிய ஏற்பாட்டினை இணைக்கும் வண்ணமே விளக்கங்களை அளிக்கின்றனர். பவுலின் நிருபங்கள், திருச்சபைகளின் முடிவுகள் ('எங்களுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் திருப்தி அளித்த' என்றே அந்த முடிவுகள் அனைத்தும் தொடங்குகின்றன*), போப்பினால் இயற்றப்பட்ட சட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களின் மூலம் இயற்றப்பட்டச் சட்டங்கள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைக்க முடியாதவற்றை ஒன்றிணைக்கச் செய்யும் முயற்சிகளாகவே இருக்கின்றன.

மேலும் இயேசுவின் கருத்துக்களுக்குத் தவறான விளக்கங்களை அளிப்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவர் எங்களின் இதழ்களில் இருந்து பேசுகிறார் என்றுக் கூறிக் கொண்டு மேற்கூறிய அதே வேலையைத் தான் செய்து வருகின்றனர். எவற்றை ஒன்றிணைக்க முடியாதோ அவற்றை அவர்கள் ஒன்றிணைக்க முயல்கின்றனர். அவர்கள் அனைவரும் தாங்கள் கூறுவது உண்மை என்பதனை நிரூபிக்க ஒரே ஒரு வழியினை மட்டுமே கடைப்பிடிக்கின்றனர். தாங்கள் கூறும் விளக்கங்கள் மனிதனில் இருந்து வருவன அல்ல மாறாக பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது என்றே அவர்கள் கூறிக் கொள்கின்றனர். அவ்வாறு கூறுவதன் வாயிலாகவே தாங்கள் கூறியது உண்மை என்று அவர்களே அவர்களை நம்ப வைத்தும் கொள்கின்றனர். தங்களது நம்பிக்கையினை சோதனை செய்துப் பார்க்காமல் இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களின் விளக்கம் உண்மையானது என்று கூறிக் கொள்கின்றார்கள். மேலும் பழைய ஏற்பாட்டினிலும் புதிய ஏற்பாட்டினிலும் உள்ள அனைத்துப் பகுதிககளையும் புனிதமானவை என்றே அவர்கள் ஏற்றும் கொள்கின்றனர். தங்களின் இச்செயல்களின் காரணமாக இயேசுவின் உண்மையான போதனைகளை அறிந்துக் கொள்ள முடியாத வண்ணம் ஒரு கடக்க இயலாத தடையினை தாங்களே தங்களுக்கு உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் செய்யும் இந்தத் தவறானது இயேசுவின் போதனைகளை குறித்து பல்வேறு விதவிதமான விளக்கங்கள் முடிவின்றி எழுவதற்கு ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தந்து விடுகின்றது. தெய்வீக வெளிப்பாடுகள் என்று அவர்கள் கருதுகின்றவற்றின் எண்ணிக்கைகளில் அவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் சமரசம் செய்துக் கொள்ளலாம் ஆனால் அவர்களால் இறைவன் என்று கருதப்படும் அந்த ஒரு மனிதரின் போதனைகளை அவர்கள் எப்பொழுதும் புறக்கணிக்கக்கூடாது.

இறைவன் மக்களுக்குப் போதிப்பதற்காகவே உலகிற்கு வந்திருந்தார் என்றால், தன்னுடைய போதனைகளை அவர் தெளிவாகக் கூறி இருப்பார். அவருடைய நோக்கே போதிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவர் போதித்தக் கருத்துக்கள் ஒரே அர்த்தத்தினைத் தான் கொண்டிருக்கக்கூடும். அவருடைய போதனைகள் பல்வேறு விதமான முரண்பட்ட விளக்கங்களை நிச்சயம் கொண்டிருக்காது. உண்மையினை வெளிப்படுத்துவதற்காக இறைவன் உலகிற்கு வந்தார் என்றால் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணமே அவர் அதனை வெளிப்படுத்தி இருப்பார். அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் இறைவனாக இருக்க முடியாது. மேலும் இறைவனாலேயே மனிதர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்க இயலாத வண்ணமே தெய்வீக உண்மைகள் இருந்தன என்றால் நிச்சயமாய் மனிதரால் அவற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.

ஒருவேளை இயேசு கடவுளாக இல்லாமல் ஒரு மாபெரும் மனிதராக மட்டுமே இருந்தார் என்றால் அவருடைய கருத்துக்கள் முரண்பாடுகளோடு இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மேலும் குறையத்தான் செய்கின்றன. ஏனென்றால் மற்ற அறிஞர்களால் தெளிவில்லாமலும் புரிந்துக் கொள்ள இயலாத வண்ணமும் கூறப்பட்ட கருத்துக்களை, தெளிவாக மற்றவர்களால் புரிந்துக் கொள்ளும் வண்ணம் கூறிய காரணத்தினால் தான் ஒரு மாபெரும் மனிதரின் போதனைகள் சிறந்தவைகளாக இருக்கின்றன. ஒரு உயர்ந்த மனிதனின் போதனைகளில் எந்தப் பகுதிகள் புரிந்துக் கொள்ள முடியாத வண்ணம் இருக்கின்றனவோ அவை உயர்ந்தவைகளாக இருப்பதில்லை. எனவே ஒரு உயர்ந்த மனிதனின் போதனைகள் என்றுமே பிரிவினைகளை உருவாக்குவதில்லை.

ஆனால் திருச்சபைகள் தங்களது கருத்துக்களுக்கு 'எங்களுடைய கொள்கை பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாகும், எனவே எங்களுடைய கருத்துகள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரே உண்மையாகும். மற்ற அனைத்துக் கொள்கைகளும் தவறானவை' என்றுத் தரும் விளக்கங்களே பல்வேறு பிரிவுகளுக்கும், ஒருவருக்கொருவர் இடையே தோன்றும் பகைமைக்கும் பிறப்பினைத் தருகின்றன. இந்தத் திருச்சபைகளானவை தாங்கள் மற்றச் சபைகளைக் கண்டிப்பதில்லை என்றும் அனைத்துச் சபைகளுக்குமிடையே ஒற்றுமை நிலவுவதற்காகவே தான் தாங்கள் பாடுபடுவதாகவும் வெளியேக் கூறிக் கொண்டாலும் அது உண்மை அல்ல. அரியசின் காலத்திலிருந்து இந்தச் திருச்சபைகள் மற்றக் குழுக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை பொய் என்றுக் கூறி கண்டனம் செய்வதற்காகவேதான் தங்களது நம்பிக்கையை உறுதியாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன.


தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு