தோமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜனவரி, 2014

கேரளத்து சீரியக் கிருத்துவர்களுக்கும் தோமாக்கும் தொடர்பு இருக்கின்றதா...!!!

பொதுவாக இன்றைக்கு தோமாவின் இந்திய வருகை என்பது சீரியக் கிருத்துவர்களுடன் இணைத்தே பேசப்படுகின்றது. அது உண்மையா இல்லையா என்பதை நான் பின்னர் விரிவாக பதிவுகளாக காணலாம்....இப்போதைக்கு சீரியக் கிருத்துவத்திற்கும் தோமாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை விளக்கிக் கூறும் சீரிய மலபார் கத்தோலிக்கச் திருச்சபையிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்து விடலாம்.

தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!

தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் இயேசு கிருத்துவிற்கு எதிரானதாக கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதா?




இன்றைக்கு இருக்கும் சாந்தோம் ஆலயத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு இருப்பதனால் அதனை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைக் கூறும் இந்தியத் தொல்பொருள் துறையின் கடிதம் கீழே. போப் பெனிடிக்டின் காலத்தில் தோமா பற்றிய சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்பது இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.

செவ்வாய், 1 மே, 2012

கிருத்துவமும் இந்தியாவும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!!!-25

கி.பி 52...!!!

தூய தோமா இந்தியா வந்ததாக சொல்லப்படும் காலம்.

கிருத்துவின் கருத்துக்களைப் பரப்புவதற்காக கடல் கடந்து தமிழகத்தின் மேற்கு பகுதியை வந்தடைந்து, பின்னர் இந்திய தேசம் முழுவதும் தனது பணியை மேற்கொண்டு இறுதியில் தமிழகத்தில் மயிலையில் சிலரால் கி.பி 72 ஆம் ஆண்டில் கொல்லப்படுவதாக நீள்கிறது இவரது வரலாறு. இது தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுபவர்கள் கூறும் கூற்று.

இதனை மறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

"ரோம மன்னன் ஆகசுடசு காலத்து நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன சரி...இந்தியாவின் வட பகுதியில் கொண்டாபோரசு என்ற அரசன் ஆண்டான். அதுவும் சரி. ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுவது எவ்வாறு சரியாகும். அசோகர் பௌத்தத்தை பரப்பினார் என்றால் அதற்கு சான்றாய் இந்தியா முழுவதும் பௌத்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அதைப் போலவே தோமாவும் கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப வந்தார் என்றால் கிருத்துவின் கருத்துக்கள் இங்கே காணப்பட வேண்டுமே. அவ்வாறுக் காணப்பட்டால் தானே அவர் வந்தார்...சேவை செய்தார் என்றுக் கூற முடியும். அவ்வாறு சான்றுகள் இல்லாமல் எவ்வாறு தோமா இந்தியா வந்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?" என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது.

நியாயமான கேள்விதான். தோமா இந்தியா வந்து இருந்தால் கிருத்துவின் கருத்துக்களும் அவருடனே வந்து இருக்க வேண்டுமே. இந்தியாவினில் பரவி இருக்க வேண்டுமே. அவ்வாறு இருந்தால் தானே தோமா இந்தியா வந்தார் என்றுக் கூற முடியும்.

எனவே இப்பொழுது நாம் இந்தியாவில் தோமா கொண்டு வந்த கிருத்துவின் கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை காண வேண்டி இருக்கின்றது.

முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தபடி சிலுவை கிருத்துவர்களின் சின்னம் அல்ல. மாறாக திருநீறே அவர்களின் சின்னம் என்று நாம் கண்டு இருந்தோம்.

இந்நிலையில் சில கேள்விகள் இயல்பாகவே எழலாம்...!

இந்துக்களும் திருநீற்றினை இடுகின்றார்கள்...அதே முறை தான் கிருத்துவத்திலும் இருக்கின்றது. ஏன் இந்த ஒற்றுமை? ஒரு வேளை இரண்டு மதங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? இல்லையெனில் எதேச்சையாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் உருவான இரு மதங்களில் ஒரே மாதிரியான பழக்கம் தற்செயலாக உருவாகி இருக்குமோ?

இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நமது இலக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கிருத்துக்கு முற்பட்ட காலத்து தமிழ் இலக்கியங்களிலும் சரி, சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று பெரும்பாலானோரால் நம்பப்படும் வேதங்களிலும் சரி திருநீற்றினைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. கிருத்துக்கு பிற்பட்ட தமிழ் இலக்கியங்களில் திருநீற்றினைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன ஆனால் கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் இது வரை திருநீரைக் குறிக்கும் செய்திகள் காணப்படவில்லை.

அதைப்போலவே சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையும் கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களிலும் சரி வேதங்களிலும் சரி காணப்படவில்லை. ஆனால் அத்தகைய வழிபாட்டு முறை விவிலியத்தில் குறிக்கப்பட்டு இருப்பதை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சிவலிங்கம்/கல் வழிபாட்டு முறை கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களில் பல கிடைத்தாலும் நந்தி/கன்றுக்குட்டி உடன் இருப்பது போன்ற வழிபாட்டு முறை கிருத்துக்கு பிந்தைய கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றது.

இங்கே தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள வழிபாட்டு முறைகள் இன்று சைவ வைணவ சமயங்களில் பழக்கத்தில் உள்ளன. ஆனால் சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று கூறப்படும் வேதங்களிலோ அந்த வழிப்பாட்டு முறைகளைப் பற்றிய குறிப்புகளே இல்லை, மேலும் கிருத்துவுக்கு முற்பட்ட கால இலக்கியங்களில் அந்த பழக்க வழக்கங்கள் இந்தியாவினால் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை கிட்டவில்லை.

அப்படி இருக்கையில் விவிலியத்தில் காணப்படும் அந்த பழக்க வழக்கங்கள் எவ்வாறு இந்திய சமயங்களில் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் ஆராயும் பொழுது தான் அந்த இணைப்பு அவர்களின் கண்ணுக்கு புலப்படுகின்றது.

அந்த இணைப்பு தான் - தோமா!!!

ஆம். தோமா இந்தியாவுக்கு வந்தார் என்று கூறப்படும் காலத்திற்கு பின்னரே மேலே நாம் கண்ட வழிபாட்டு முறைகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலே நமக்கு கிடைக்க பெறுகின்றன. அவை சைவ இலக்கியங்களாக இருக்கட்டும் வைணவ இலக்கியங்களாக இருக்கட்டும் அனைத்தும் தோமாவின் காலத்திற்கு பின்னரே உருவானவைகளாகவே இருக்கின்றன.

எனவே தோமா கொண்டு வந்த கருத்துக்களின் படி தான் மேலே நாம் கண்ட வழிபாட்டு பழக்க வழக்கங்கள் இந்தியாவினுள் தோற்றம் பெற்றன என்று நாம் கருத முடிகின்றது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதாவது அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் சிவலிங்க/கல் வழிபாடு தெற்கில் இருந்து சிந்து சமவெளியை அடைந்து பின்னர் மேற்கே சென்று யூதர்களின் பழக்கமாகவும் மாறுகின்றது. பின்னர் அதேப் பழக்கம் கிருத்துவுக்கு பின்னால் தனது மாறுபட்ட நிலையில் தோமாவின் வாயிலாக இந்தியா வந்தடைகின்றது...!

அவ்வாறு வந்த கருத்துக்களும் பழக்க வழக்கங்களும் தான் சைவ வைணவ சமயங்களாக வளர்ந்தன என்றும் அவர்கள் கருதுகின்றனர். நிற்க.

வில்லங்கமான கூற்று தான்....இல்லையா!!! ஆனால் இந்தக் கூற்றினை முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை ஏனெனில் அனைத்து சைவ வைணவ இலக்கியங்களும் சரி அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் சரி எல்லோரும் தோமா இந்தியாவுக்கு வந்த காலத்திற்கு பின்னரே தான் தோன்றி இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என வழங்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அனைவருமே தோமா மறைந்ததாக கூறப்படும் மயிலையை சுற்றி உள்ள இடத்தில இருந்தே தோன்றி உள்ளனர். மேலும் திருவள்ளுவரும் அதே காலத்தில் திருமயிலையில் தோன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் ஒற்றுமைகளாக இருக்கலாம் அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக இருக்கலாம். அதனை அறிந்துக் கொள்ள நாம் கிருத்துவ மதத்தின் கொள்கையையும் காண வேண்டும்...சைவ வைணவ மதங்களின் கொள்கைகளையும் காண வேண்டும்.

காண்போம்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |  

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இந்தியாவில் தோமா - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!!!-22

தூய தோமா (St. Thomas)!!!

நிச்சயம் கிருத்துவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயராக இருக்கக் கூடும். சென்னை வாழ் மக்களுக்கும் ஒருவேளை சாந்தோம் (Santhome), பரங்கி மலை (St.Thomas Mount) போன்ற இடங்களின் வாயிலாக இந்த பெயர் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு இந்தப் பெயர் அவ்வளவு பரிச்சியமாக இருக்குமா என்பது சந்தேகமே...எனவே தூய தோமா இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா என்பதனை காணும் முன் நாம் சற்று அவரைப் பற்றி அறிந்துக் கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

விவிலியத்தின்படி தோமா இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவர். இயேசுவின் கூடவே இருந்து அவரின் கருத்துக்களை கேட்டு, பின்னர் அக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்காக மற்ற சீடர்களைப் போலவே இவரும் வேறு நாடுகளுக்கு கிளம்பியவர். அவ்வாறு கிளம்பி இவர் வந்தடைந்த நாடு தான் இந்தியா. இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது.

தோமா இந்தியா வந்தார் என்று ஒரு கூட்டம் கூற மற்றொரு கூட்டமோ தோமா இந்தியா வந்தது வெறும் கட்டுக்கதை, தோமா இந்தியா வந்ததற்கு சான்றுகள் எதுவும் இல்லை என்கின்றது. எனவே இப்பொழுது தோமா இந்தியா வந்தாரா இல்லையா... வந்தார் எனில் அதற்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் தோமாவின் இந்திய வரலாற்றினை சற்று சுருக்கமாக கண்டு விடலாம்.

வரலாற்று குறிப்புகளின் படி தோமா இந்தியாவிற்கு கி.பி 52 ஆம் ஆண்டில் வருகின்றார். வந்து இறங்கிய இடம் அன்றைய சேர நாடான இன்றைய கேரளா. பின்னர் 20 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து இயேசுவின் கருத்துக்களைப் பரப்பியப் பின் தமிழகத்தில் சிலரால் அவர் கொல்லப்படுகின்றார். அவ்வாறு அவர் கொலையுண்ட இடமே இன்றைய பரங்கி மலையாகும். பின்னர் அவர் அன்றைய தமிழகத்தின் அரசனால் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றார். அவ்வாறு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமே இன்றைய சாந்தோம் ஆகும். நிற்க.

இப்பொழுது நாம் அந்தக் கதையினையும் அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களின் கூற்றினையும் சற்று காண்போம்.

௧) தோமா இந்தியா வந்து இருக்கவே முடியாது. ஏனெனில் அத்தனை தூரம் அக்காலத்தில் பயணித்து ஒருவர் வந்து இருக்க முடியும் என்பது நம்ப முடியாத ஒன்று. எனவே தோமா இந்தியாவுக்கு அதுவும் சேர நாட்டிற்க்கு வந்தார் என்பது கட்டுக்கதையே என்பது தோமாவை மறுப்பவர்களின் ஒரு முக்கிய கூற்றாகும்.

ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது, தோமாவின் காலத்துக்கு முன்பே கிரேக்கர்களும், ரோமர்களும், யூதர்களும் இந்தியாவுடன் வணிக தொடர்பில் இருந்தது...அதுவும் குறிப்பாக தமிழகத்துடன் தொடர்பில் இருந்தது சங்க இலக்கியங்களின் மூலமும் மற்றும் பல்வேறு சான்றுகள் மூலமும் நமக்கு புலனாக வருகின்றது. தமிழர்கள் அவர்கள் அனைவரையும் யவனர் என்ற பொது பெயரினைக் கொண்டே அழைத்தனர். உதாரணமாக...

'யவனர் தந்த வினைமாண் நன்கலம்...' அகநானூறு 149 
'யவனர் இயற்றிய வினைமாண் பாவை ...' நெடுநல்வாடை 101 

போன்ற சங்க இலக்கியங்கள் மூலம் யவனர்கள் அக்காலத்திலேயே தமிழகத்துடன் தொடர்பில் இருந்து இருக்கின்றனர் என்பது நமக்கு புலனாகின்றது.

மேலும் இயேசுவின் காலத்தில் ரோமப் பேரரசினை ஆண்ட ஆகசுடசு (Augustus Ceaser) என்ற மன்னனின் காலத்துக்கு உட்பட்ட ரோம நாணயங்கள் பல மதுரை மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அதிகமாக கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

மேலும் அசோகரின் கல்வெட்டுகளில் கூட அவரின் ஆளுமைக்கு கீழே இருந்த யவன மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மேலும் அசோகரின் கல்வெட்டுகள் அரேமிய மொழியிலும் கிடைப்பது இங்கே கவனிக்கத்தக்கது ஏனெனில் இயேசு பேசிய மொழி அரேமியமே.

எனவே சான்றுகள் இவ்வாறு இருக்க தோமா இந்தியா வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கத் தான் செய்கின்றன. சரி... இப்பொழுது நாம் மறுப்பவர்களின் மற்றொரு கூற்றினையும் கண்டு விடலாம்.

௨) தூய தோமா இந்தியாவின் வட பகுதியில் தட்சசீலத்தில் கொண்டாபோரோசு (Gondophares) என்னும் மன்னனை சந்தித்ததாக செய்திகள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய ஒரு அரசன் அங்கே வாழ்ந்ததாக எந்த ஒரு சான்றுமே இல்லை. கொண்டாபோரோசு என்பது ஒரு கற்பனைப் பாத்திரமே. எனவே தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பதும் ஒரு கற்பனையே. இது தோமாவை மறுப்பவர்களின் மற்றுமொரு கூற்றாகும்.

ஆனால் சமீத்திய ஆராய்ச்சிகள் கொண்டோபோரோசு என்ற மன்னன் ஒருவன் வட நாட்டில் ஆட்சி செய்து வந்து இருக்கின்றான் என்று கண்டு பிடித்து இருக்கின்றன. அவ்வரசனின் நாணயங்களும் பல கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. எனவே தோமாவின் வரலாற்றில் கூறப் படும் இந்த அரசன் உண்மையாகவே இருந்து இருக்கும் பொழுது தோமாவும் உண்மையாகவே இந்தியாவுக்கு வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

௩) தோமாவை மறுப்பவர்கள் கூறும் மூன்றாவது கருத்து. அவ்வாறே தோமா இங்கே வந்து இருந்தார் என்றால் அவரின் தாக்கங்கள் இங்கே தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. எனவே அவர் இந்தியா வந்தது என்பது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்கும்.

ம்ம்ம்....உண்மையான கூற்று. தோமா இந்தியா வந்து இருந்தார் என்றால் அவர்தம் கருத்துக்கள் இங்கே பல மாற்றங்களை உருவாக்கி இருக்க வேண்டுமே....அத்தகைய மாற்றங்கள் உருவாக்கி இருந்தன என்றால் தானே தோமா இங்கே வந்தார்...அவர் இயேசுவின் கருத்துக்களை பரப்பினார் என்பதனை நாம் நம்ப முடியும். எனவே இப்பொழுது தோமா பரப்பிய கருத்துக்களை நாம் அறிய வேண்டி இருக்கின்றது.

தோமா ஒரு கிருத்துவர் தான். அதில் மாற்றுக் கருத்துக்களே கிடையாது. ஆனால் அவர் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கக் கூடிய ஐரோப்பியக் கிருத்துவரா என்றால் இல்லை என்பதே பதில் ஆகக் கூடும். தோமா ஒரு ஆசியக் கிருத்துவர்.

என்னங்க குழப்புறீங்க...ஐரோப்பிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க...ஆசிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க... கிருத்துவம் அப்படினாலே ஒண்ணுதானுங்களே அத எப்படி நீங்க பிரிக்குறீங்க என்று கேட்கின்றீர்களா...!!! அந்தக் கேள்விக்கு விடையினைக் காணும் முன் உங்களுக்கு ஒருக் கேள்வி.

கிருத்துவ சமயத்தின் சின்னம் எது?

சிலுவை அப்படின்னு சொல்றீங்களா. அப்படி என்றால் உங்களுக்கு ஒருத் தகவல்.

கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக இருக்கவில்லை. நான்காம் நூற்றாண்டில் எப்பொழுது ரோம பேரரசின் மன்னனான கான்சண்டீன் (Constantine) கிருத்துவ சமயத்தை அரச சமயமாக ஏற்றுக் கொள்கின்றானோ அப்பொழுது தான் சிலுவையும் கிருத்துவத்தின் சின்னமாக உருவாகின்றது.

அதற்கு முன்னர் வரை, இயேசுவின் காலத்திலும் சரி...தோமாவின் காலத்திலும் சரி சிலுவைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான். சிலுவை என்பது மக்களைக் கொள்ளும் ஒரு ரோமானிய கொலைக் கருவி. அவ்வளவே. அத்தகைய சிலுவையைத் தான் ரோமர்கள் கிருத்துவத்தின் சின்னமாக ஆக்குகின்றார்கள். அப்படியாக்கப்பட்ட கிருத்துவத்தைத் தான் நாம் ஐரோப்பியக் கிருத்துவம் என்கின்றோம்.

தோமா அப்படிப்பட்ட கிருத்துவர் அல்ல. அவர் சிலுவையை வழிபடவில்லை. அவர் வழி வேறு.

அது என்ன வழி... சான்றுகள் இருக்கின்றனவா... என்றுக் கேட்கின்றீர்களா...!!!

ஆம்...சான்றுகள் இருக்கின்றன. அச் சான்றுகளுடன் இயேசுவுக்கு பின்னர் வளர்ந்த கிருத்துவத்தைப் பற்றியும் நாம் இப்பொழுது நம் பயணத்தில் காண வேண்டி இருக்கின்றது....!!!

காண்போம்... அடுத்த பதிவில்....!!!

பயணிப்போம்...!!!

இன்னொரு முக்கியத் தகவல்:

தமிழகம் வந்த தோமாவினை அவரின் மரணத்திற்குப் பின் சாந்தோம் என்ற இடத்தில அடக்கம் செய்தனர் என்பதனை நாம் கண்டோம்.

'சாந்தோம்' என்பது போர்சுகிசிய சொல்.

சாந்தோம் என்றால் தூய தோமா என்றே அர்த்தம். இன்று அந்த இடத்தில தூய தோமாவின் நினைவாக ஒரு தேவாலயம் இருக்கின்றது.

சாந்தோம் தேவாலயம். நிச்சயம் சென்னையில் இருக்கும் அனைவரும் இதனைக் கண்டு இருப்பர் என்றே நம்புகின்றேன்.

இந்த தேவாலயம் தோமாவின் நினைவாக கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் நாம் அறியாத சில விடயங்களும் இந்த தேவாலயத்தில் இருக்கின்றன.

தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். ஆனால் இந்த தேவாலயம் கட்டப்பட்டதோ கி.பி 16 ஆம் நூற்றாண்டில். இந்தியாவுக்கு அப்பொழுது வந்த போர்சுகிசியர்களால் தான் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.

தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். வரலாற்றின் படி அன்றைய தமிழக மன்னன் அவரை சிறப்பித்து அவரை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஆலயத்தினை கட்டுகின்றான் என்று நாம் கண்டு இருக்கின்றோம். அப்படி இருக்க, கி.பி 16 நூற்றாண்டில் போர்சுகிசியர்கள் வந்து ஒரு தேவாலயத்தினைக் கட்டுகின்றார்கள் என்றும் காண்கின்றோம். அப்படி என்றால் தமிழக அரசன் தோமாவினை சிறப்பித்து கட்டிய ஆலயம் என்ன ஆனது...அது எந்த ஆலயம் என்றக் கேள்விகள் எழலாம்...!!! அக்கேள்விகளுக்கு விடை இதோ...

தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது மயிலாப்பூரில், அவரை மதித்து தமிழக அரசனால் கட்டப்பட்ட ஆலயம் - கபாலீஸ்வரர் கோவில். அந்தக் கோவிலை கி.பி 16 நூற்றாண்டில் வந்த போர்சுகிசியர்கள் இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தினை கட்டுகின்றனர். அவ்வாறு இடித்த கபாலீஸ்வரர் கோவிலை வேறு இடத்தில் கட்டுகின்றனர். இது வரலாறு. (சாந்தோம் வரலாறு)

அதாவது இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் சுமார் 400 ஆண்டுகள் முன்னர் வரை இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அக்கோவில் ஆனது தூய தோமாவினை சிறப்பித்துக் கட்டப்பட்டதாகும். நிற்க.

இத்தகவலை நான் இங்கே கூறியது, இந்து கோவிலை கிருத்துவர்கள் இடித்து விட்டனர் என்ற ஒரு கருத்தினை விதைக்க அல்ல. ஏனெனில் தோமாவின் காலத்தில் அவ்விரு மதங்களுமே வேர் ஊன்றி இருக்க வில்லை. மாறாக கிருத்துவராக சித்தரிக்கப்படும் தோமாவை சிறப்பித்து இந்து கோவில் என்றுக் கூறப்படும் ஒரு கோவில் ஏன் கட்டப்பட்டது என்றக் கேள்வியினை எழுப்பத் தான் அக்கருத்தினை நான் பகிர்வு செய்து இருக்கின்றேன். மேலும் இக்கோவிலே சைவ சமயத்தின் முதல் கோவில் என்று கூறப்படுவதும் இங்கே முக்கியமான ஒரு தகவலாகும்.

தோமா - கிருத்துவர்.
கபாலீஸ்வரர் கோவில் - சைவ கோவில்.


இவ்வாறு இருக்க தூய தோமாவை சிறப்பித்து ஒரு சைவ கோவில் கட்டப்பட்டது எதனால்?....இதையும் நம்முடைய பயணத்தில் காண்போம்.

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...