என்று மாறியது என் பயண வழிகள் என்று தெரியவில்லை
அடுத்த தெருவிற்குச் செல்லும் வழி கூட இப்பொழுது உன் வீட்டைச் சுற்றியே!!!
உலக அழிவை நான் பள்ளிக்கு நேரத்தில் வரும் நாளெனக் கணக்கிட்டிருந்த‌
கணக்கு ஆசிரியர் மிரண்டு தான் போனார் -
பள்ளியில் முதல் மாணவனாய் - நான் ஒரு மாதமாய்!!!
'என்னடா திருந்திட்டியா என்றார்' புன்னகைத்தேன்...
'ஓ!! இதுதான் பிறவி பிழை - காதல் திருத்தமா??'


நன்றி உன் பள்ளிக்குத்தான் சொல்லவேண்டும்...
உன் பள்ளி நேரம் மட்டும் என் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம்
முன்னதாக இல்லாதிருந்தால்
திண்டாடி இருப்பேன்
ஏன் தாமதம் என்ற கேள்விக்குப் புது பதில்கள் தினம் தேடியே!!!

பாவம் வண்ணத்துப்பூச்சிகள்
வாழ்ந்து தான் போகட்டுமே
அவற்றிடம் சொல்லி விடு – அவை எண்ணுவது போல்
கரும் பூக்கள் சூழ்ந்த சோலை அல்ல
உன் கூந்தல் என்று!!!
************************************************************************************
உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!

"ஏலேய்! இன்னும் பந்த எடுக்காம என்னல பண்ணிகிட்டு இருக்க?"
" டேய் இருடா ! நல்லா முள்ளுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்குடா. இங்க பாரு கைய வேற கிழிச்சி விட்டுறிச்சி"
"முள்ளுனா கிழிக்கதான் செய்யும். பார்த்து சீக்கிரம் எடுடா. விளையாட வேண்ணாமா"

இவ்வாறு, சுடுமணலும், முட்கள் குத்தி வரும் குருதியும் கூட எங்களின் ஆட்டத்தை நிறுத்தும் வலிமைப் பெற்றுத் திகழவில்லை. அல்லது அவையும் எங்களின் ஆட்டத்தை நிறுத்த விரும்பவில்லை. தொடர்ந்து கொண்டிருந்தது எங்களின் ஆட்டம். தாகம் வரும் வரை. அனைத்தையும் தந்த எங்கள் ஊர் தாகத்தை அடக்கும் வழியை தரவில்லை. இயற்கையால் முடியவில்லையா! சரி, அங்க ஒரு கடைய போடு என்று அங்கும் ஒரு அண்ணாச்சி கடையைப் போட்டு இருப்பார்.
தண்ணீர் விற்பனைக்கு வராத காலம் அது. வேண்டிய அளவிற்கு இலவசமாகவே கிடைக்கும். எங்கள் தாகம் தணிக்க தண்ணீர் போதும் தான், ஆனால் எங்களை நம்பி கடை வைத்திருக்கும் அந்த அண்ணாச்சியின் பாடு?...
"டேய்!! எம்புட்டு ரூபா வச்சிருக்கீங்க?"
"என்கிட்ட 2.00பா"
"நம்மகிட்ட வழக்கம் போல சுத்தம்"
"இங்க 5.00"
"சரி! என்கிட்ட 3.00 ரூபா இருக்கு! அண்ணாச்சி 5 ஜூஸ் பாக்கெட் எடுத்துக்கிறோம்."
பத்து பேர் விளையாட போனா, அஞ்சு பேர்க்கிட்ட காசு இருக்காது. 5 ஜூஸ் பாககெட்ட 10 பேர் சேர்ந்து காலிபண்ணுனத்துக்அப்புறமும் தாகம் தீர்ந்து இருக்காது.
"அண்ணாச்சி. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"
"எடுத்துக்கோங்கபா! இத போயி என்ன கேட்டுக்கிட்டு, அதோ அந்த பானைல இருக்குல." என்று கடையின் ஓரமாய் இருக்கும் பானையை காட்டியத்தோடு முடிந்துவிடும் அண்ணாச்சியின் வேலை. தாகம் தணியும் வரை தண்ணீய குடித்துவிட்டு மீண்டும் மைதானத்தை நோக்கி எங்கள் பயணம் தொடரும்.
சில சமயம் அண்ணாச்சி கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு  போயிருக்கும் நேரங்களில் தான் எங்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும். மிதிவண்டிய எடுத்துகொண்டு தண்ணீர் தேடி அலைய ஆரம்பிப்போம். வழிப்போக்கர்களை உபசரிக்க திண்ணைகளை உருவாக்கிய தமிழ் கலாசாரம் மண்ணின் மைந்தர்களையா தாகத்தோடு பரித்தவிக்க விடும்?... எங்கள் தாகம் தணிக்க பல வீட்டிற்கு வெளியே மண்பானைகள் காத்துக்கொண்டு இருந்தன, பாசமான ஆச்சிகளால்.
"கொளுத்துர வெயில்ல அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு. பேசாம வெயில் தனிஞ்சதுக்அப்புறமா விளையாடலாம்ல" என்று அக்கறையோடு விசாரிக்கும் ஆச்சிகளும், எங்களுக்காக குளிர்ந்த தண்ணீரை சுமக்கும் மண்பானைகளும் அர்த்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் எங்களின் விளையாட்டுக்கும்...வாழ்க்கைக்கும்!!!

"அது ஒரு காலம்!!! கையில் காசின்றி இருந்தாலும் உண்மையான தாகத்தோடு இருந்த காலம். இன்றோ கையில் காசு இருக்கின்றது... ஆனால் உண்மையான தாகத்தை தான் எங்கேயோ தொலைத்து விட்டோம். அன்று விளையாடிய சில இடங்கள் இன்று பாதி முட்காடுகளாய், மீதி வீடுகளாய். அண்ணாச்சி இன்றும் கடை வைத்து இருக்கிறார், இன்றும் இலவசமாக தண்ணீர் கொடுக்கிறார், ஆனாலும் தண்ணீர் என்றவுடன் முதலில் Aquafina வா என்ற கேள்வி புதிதாக வருகின்றது.அன்று வியர்வையை மட்டும் கண்ட எங்கள் மைதானங்கள் இன்று புதிதாய் எங்கள் கண்ணீரை காண்கின்றது. காலத்தை துரத்தியததில் எதையோ எங்கேயோ தொலைத்து விட்டோமோ என்ற உள் உணர்வை மட்டும் அலட்சிய படுத்த முடியவில்லை. முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். சந்தேகமில்லை. ஆனால் மனதையும் வாழ்க்கையையும் பின்னாடி விட்டுவிட்டு எதற்காக முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்று தான் தெரியவில்லை. அன்று நண்பர்களின் வருகைக்காக மைதானத்தில் காத்திருக்கும் போது என்னுடன் காத்திருந்த காலம், இன்று எங்கோ விரைந்து கொண்டு இருக்கிறது என்னையும் அழைத்து கொண்டு. இது வாழ்வின் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா? தெரியவில்லை. இருந்தும் அலைகிறேன்.
இதோ அன்று வீட்டிற்கு வெளியே இருந்த மண்பானைகளை இப்பொழுது காணவில்லை. அந்த ஆச்சிகளையும் தான்!!! "அந்த காலத்துல" என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகள் சற்று நினைவிற்கு வந்து போயின. அவற்றை அப்பொழுது கேலி செய்த நாங்கள் இன்று எங்களை அறியாமல் சொல்லுகின்றோம் "அந்த காலத்துல..."!!!
ஆம்! அந்த காலத்தில் நாங்கள் நாங்களாய் இருந்தோம். சற்று யாராவது தேடி தருகிறீர்களா! அந்த பானைகளையும் அதனுடன் தொலைந்த எங்களையும்!!!
                                     முற்றும்.     

வெயில்! எங்கள் ஊருக்கு மிகவும் நெருங்கிய ஒன்று . 'விருதுநகரா? சரியான  பொட்டக்காடாச்சேப்பா' என்று தான்  பலரும் கூறுவர். உண்மையும் அதுதான். கருவேலங்காட்டையும் வெயிலையும் தவிர இயற்கை எங்கள் ஊருக்கு வேறு எதையும் அருளவில்லை. தவறில்லை! எங்கள் ஊருக்கு அவை போதும். அப்படி என்றால் மற்றவை? "அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோமே. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று மார்தட்டிக் கிளம்பிய பறவைக்கூட்டத்தில் நானும் ஒருவன்.
பள்ளி தினங்களில் காலை 8:00 மணி ஆகியும் கலையாத உறக்கம், விடுமுறை தினங்களில் 6:00 மணிக்கே கலைந்துவிடும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்த பருவம் அது. உணவு உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு என்பது எழுதாத விதியாக இருந்த காலம். "டேய்! சாப்பிட்டு போடா" என்ற அன்னையாரின் குரல்களும் "அப்புறம் வந்து சாப்பிடுறேன்மா இப்பவே நேரமாயிடுச்சி"  என்ற எங்களின் பதில்களும் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் கலந்திருந்த காலம். இன்றை மட்டும் இன்று காண்போம், நாளையை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வாழ்க்கையைப் புரியாமலையே புரிந்து கொண்டிருந்த பருவம்.
பரந்து விரிந்த செம்மண் தளங்களை மைதானங்களாய் எங்களுக்கு தந்த எங்கள் ஊர், வெயில் சற்று கோபமாக இருக்கும் சமயம் நிழலில் இளைப்பாற சில மரங்களையும், மைதானத்தின் எல்லைகளாய் முட்ச்செடிகளையும் சேர்த்தே தந்திருந்தது. "வெயிலோடு விளையாடி" என்றொரு பாடலை ஒரு பாடலாசிரியர் எங்கள் ஊரில் எடுத்த ஒரு படத்திற்காக எழுதி இருந்தார். உண்மைதான். வெயில் இன்றி எங்களின் அநேக விளையாட்டுகள் இல்லை.  வெயில் எங்களுக்கு இன்னொரு நண்பன். வெயில் இருக்கும் வரை நாங்கள் ஆடுவோம், நாங்கள் ஆடும் வரை அவனும் இருப்பான்,எங்களை பார்த்துக்கொண்டே!



"தோட்டத்தில் பூக்கள் வைத்துப் பார்த்திருக்கின்றேன்
         பூக்களே தோட்டம் வைப்பதை உன் வீட்டில் தான் கண்டிருக்கின்றேன்!!!
அன்று விழுந்த பனித்துளியைத் தாங்கி
         மண் பார்த்து நிற்கும் நாணலாய்
அன்று பூத்த பூக்கள் சூடி
         மண் பார்த்து நிற்கின்றாய் உன் கண் நான் பார்க்கும்போது நாணமாய்!!!
'நீ கைராசிக்காரியாம்!!!' ஊரில் சொல்லிக்கொள்கிறார்கள்
         ஊரெங்கும் பூக்கின்றன வெள்ளை உரோசாக்கள்
ஆனால் உன் வீட்டில் மட்டும் பூக்கின்றனவாம் உரோசாக்கள் சிவப்பாய்!!!
         தண்ணீர் ஊற்றிப் பூக்கள் வளர்க்கும் அவர்கள் எப்படி அறிவார்கள்,
நீ வெட்கம் ஊற்றிப் பூக்கள் வளர்ப்பதை!!!

இரவெல்லாம் எரியும் விளக்காய் - நிலவு
பகலும் சேர்த்து எரியும் நிலவாய் - நீ
நீயாய் - நான்
நாமாய்க் - காதல்!!!


இரவு 11:00 மணி

       நட்சத்திரங்களை நோக்கியபடியே அமர்திருந்தேன். எப்பொழுதும் சிணுங்கி கொண்டு இருக்கும் எனது கைபேசி சலனம் அற்று என் அருகே கிடந்தது, அவளிடம் இருந்து குறுஞ்ச்செய்தியை எதிர்பார்த்து. எப்பொழுதும் பேச்சை ஆண்கள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி போலும். இன்று அந்த விதிக்கு விதிவிலக்கு அளித்துவிட்டு அவள் ஆரம்பிப்பதற்காக காத்திருந்தேன். இன்றாவது  அவள் ஆரம்பிக்கட்டும்.

சிணுங்கியது என் கைபேசி.
சிணுங்கிஇருந்தது அவள்தான் ஒரு குருஞ்செய்தியாய். 
"ஜீஸஸ் ஆடு மேய்தார்! கிருஷ்ணன் மாடு மேய்தார்! நீ என்ன மேய்கிறியோ தெரியல. ஒரு மெசேஜும் காணோம்! குட் நைட்...ஸ்வீட் ட்ரீம்ஸ்"
மேலோட்டமா பார்த்தால் இது ஒரு ஃபார்வர்ட் மெஸேஜ் தான். ஆனா இதுக்குள் இருந்த உண்மையான அர்த்தம் "கூப்பிடுடா முட்டாள்!!".
நான் முட்டாளாய்  இருந்த காலம் கடந்து வெகு நாட்களாகி விட்டதால் இன்னொரு எச்சரிக்கை மணி எனக்கு தேவைப்படவில்லை.
"மணி எத்தனை தெரியுமா?" எடுத்தவுடன் கேட்டாள் பொய் கோபத்துடன்.
"காலை 6:00 மணி" என்றேன்.
"ஐயோ பாவம்! உனக்கு மணி பார்க்க தெரியாதுன்னு முன்னாடியே சொல்லி இருந்தேனா நானாவது சொல்லி கொடுத்து இருப்பேன்ல" என்றாள்.
"ஹலோ ! மணி எல்லாம் எங்களுக்கு பார்க்க தெரியும். ஆனா பிரச்சனை என்னனா, உன்கிட்ட இருந்து குட்நைட் மெஸேஜ் வந்தா மட்டும் என்னோட கைபேசி அதுவா மணி காலை 6:00னு செட் ஆயிடுது " என்றேன்.
"அப்படியா...!!! அப்படினா அந்த டப்பா கைபேசிய தூக்கி போட்டுட்டு புதுசா ஒண்ணு வாங்க வேண்டியதுதான" என்றாள்
"ஏன் சொல்ல மாட்ட... என்னோட கைபேசிய பத்தி உனக்கு தெரியாது. என் கைபேசி பேசும் தெரியுமா?" என்றேன்.   
 "உன் கைபேசி பேசுமா?... என்னதும் தான் பேசுது. இதோ இப்பக்கூட என்கிட்ட பேசிக்கிட்டு தான் இருக்கு... உன் குரல்ல" என்றாள் சிரித்தபடியே.
"ஹேய் உண்மையைத்தான் சொல்றேன்! அது ஏன் உன்னோட மெஸேஜ் வந்தா மட்டும் அப்படி நேரத்தை மாத்தி வைக்குதுனு ஒரு நாள் சொல்லுச்சி தெரியுமா?"
"அப்படினா அது என்ன சொல்லுச்சினு தயவு பண்ணி சொல்ல முடியுமா!!"
" நிலவு உறங்க போகும் நேரம் தான் பொழுது விடிய ஆரம்பிக்கும். எனவே தான் அவள் உறங்க போகிறேன் என்று செய்தி அனுப்பிய உடனேயே, ஐயகோ தவறான நேரத்தை அல்லவா காட்டிக்கொண்டிருக்கின்றோம்... நிலவு உறங்க போகிறதே... என்று நேரத்தை விடியல் நேரத்திற்கு தோதாக 6: 00 மணி என மாற்றி வைக்கின்றேன். இது தவறா என்றது. இல்லை என்றேன். எனவே இது தொடர்கின்றது!!!" என்றேன்.
எதிர்முனையில் பதிலில்லை. நிலா சற்று அதிக பிரகாசமாகி இருந்தது. அவள் வெட்கப்பட்டு கொண்டு இருந்தாள்.
"இந்நேரம் மொட்டைமாடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்றேன்.
"ஹேய் நான் எங்க வீட்டு மொட்டை மாடில இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சரியத்தோடு ஒலித்தது அவள் குரல்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு