இன்றுவரை சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இறைவன் மூன்றாக இருக்கும் நிலையினில் இரண்டாவதாக இருப்பவர் என்றே இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இருந்தும் இயேசுவின் கொள்கைகளைத் தனியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இயேசுவின் போதனைகளை ஏதாவது ஒரு மூன்றாவது மனிதனின் போலி வெளிப்பாட்டினுடன் இணைத்தே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அது பழைய ஏற்பாட்டில் காணப்படும் போலி வெளிப்பாடாக இருக்கட்டும், அல்லது நிருபங்களில் காணப்படுவதாக இருக்கட்டும் அல்லது பல்வேறு குழுக்களின் ஆணைகளில் காணப்படுவதாக இருக்கட்டும், அல்லது திருச்சபையின் மூதாதையர்களின் முடிவுகளாக இருக்கட்டும், இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் இணைத்தே தான் அவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஏற்றுக் கொள்வதன் மூலமாக விசித்திரமான நம்பிக்கைகளை அவர்கள் போதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதனையே இயேசுவின் சமயம் என்று அவர்கள் உறுதியும் கூறுகின்றனர்.

மற்றவர்களோ இயேசுவை கடவுள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தும் தன்னுடைய போதனைகளை இயேசு எவ்வாறு கூறி இருந்திருப்பார் என்று யோசிக்காமல் பவுல் மற்றும் பிறர் அதனைப் புரிந்துக் கொண்ட நிலையினில் இருந்தே இயேசுவின் போதனைகளை அவர்கள் காணுகின்றனர். இயேசுவினை இறைவனாகப் பார்க்காமல் மனிதனாகப் பார்க்கும் அவர்கள், ஒரு நியாயமான அடிப்படை மனித உரிமையினை அவருக்கு மறுக்கின்றார்கள். இயேசுவின் வார்த்தைகளுக்கு மட்டுமே அவரை அவர்கள் பொறுப்பாக்க வேண்டும். மாறாக அவருடைய வார்த்தைகளுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு போலி விளக்கங்களுக்கும் அவரை விளக்கம் அளிக்கச் சொல்லி பொறுப்பாளி ஆக்கக்கூடாது. ஆனால் அந்தப் படித்த மக்கள் இயேசு தான் அளித்திராத விளக்கங்களுக்கும் அவரையே பொறுப்பாக்குகின்றார்கள். அவருடைய போதனைகளை விளக்குகின்றோம் என்றப் பெயரினில் அந்தப் படித்த மக்கள் இயேசு எதனை எல்லாம் போதிக்க வேண்டும் என்று எண்ணவில்லையோ அதனை எல்லாம் இயேசு கூறியதாகக் கூறிக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வாறு இயேசுவின் போதனைகளை விளக்குவதற்காக இருக்கும் அந்த நபர்கள், இயேசு போதித்தக் கருத்துகளுக்கும் அவருடைய கருத்துக்களுக்கு அளிக்கப்பட்ட தவறான விளக்கங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைப் பிரித்து அறிய முயல்வது இல்லை. இயேசுவின் போதனைகளை மேலும் கவனமாகப் புரிந்துக் கொள்வதற்கும் அவர்கள் முயல்வது இல்லை. அவர்களுள் மிகவும் பிரபலமாக இருக்கும் ரேனான் முதற்கொண்டு அவ்வாறு தான் இருக்கின்றார்கள். அவர்கள் இயேசுவின் போதனைகளை தெளிவாக அறிந்துக் கொள்ள முயல்வதில்லை. மாறாக இயேசுவின் தோற்றம் குறித்தும், அவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அவர் வாழ்ந்த காலச்சூழலுக்கு ஏற்பவும் அவருடைய கருத்துக்கள் எவ்வாறு பரவின என்பதனைக் குறித்து மட்டுமே அவர்கள் அறிந்துக் கொள்ள முயல்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் முயலுகையில் ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. அந்த பிரச்சனை இதுதான். ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு பரம ஏழையானவன் தோன்றி குறிப்பிட்ட சில கருத்துக்களைக் கூறினான். அதற்காக அவன் சாட்டையால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். அக்காலம் முதல் (தங்களுடைய நம்பிக்கைகளுக்காக உயிரினைத் துறந்த வேறு மனிதர்கள் ஏராளமானோர் இருந்தாலும்) கோடிக்கணக்கான மக்கள், அவர்கள் ஞானிகளாக இருக்கட்டும் அல்லது முட்டாள்களாக இருக்கட்டும், படித்தவர்களாக இருக்கட்டும் அல்லது கல்வி அறிவில்லாதவர்களாக இருக்கட்டும், ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அந்த ஒரு மனிதன் மட்டுமே இறைவன் என்ற நம்பிக்கையினைப் பற்றிக் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆச்சர்யமான விடயத்தினை எவ்வாறு விளக்க முடியும்?

திருச்சபை ஊழியர்களின் கூற்றின்படி இயேசு இறைவனாக இருந்த காரணத்தினால் தான் அந்த நம்பிக்கையானது உலகினில் நிலைத்து நின்றுக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கூற்று உண்மையாக இருந்தது என்றால், ஏன் இயேசு என்ற மனிதரை மட்டும் இறைவனாக கோடிக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதனை நாம் அப்பொழுது சந்தேகமில்லாமல் புரிந்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் இயேசு கடவுளாக இல்லாத பட்சத்தில் இந்த நிலையை நாம் எவ்வாறு விளக்குவது? அனைத்து மக்களும் இந்த சாதாரண மனிதனை மட்டும் கடவுளாக ஏன் கருதுகின்றார்கள் என்பதனை எவ்வாறு விளக்குவது?

இயேசுவினை வெறும் மனிதனாக மட்டுமே காணும் நம்பிக்கையினை உடைய படித்த அறிஞர்கள் இயேசுவின் வாழ்வினைக் குறித்த ஒவ்வொரு விவரத்தையும் ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு தான் நுணுக்கமாக அந்த விவரங்களை ஆராய்ந்தாலும் (உண்மையில் அவர்கள் இயேசுவின் வாழ்வினைக் குறித்து எந்த ஒரு விவரத்தையும் அறிந்து இருக்கவில்லை), இயேசுவின் வாழ்வினைத் துளியளவு கூட மாறாமல் மறுகட்டமைப்பினை செய்யும் முயற்சியில் அவர்கள் வென்றாலும் கூட, ஒரு கேள்விக்கு அவர்களால் விடை கூற இயலாமல் தான் போகும். ஏன் இயேசுவினால் மட்டும் மக்களின் மத்தியில் இவ்வளவு செல்வாக்கினைப் பெற முடிந்தது என்ற கேள்விக்கு அவர்களால் நிச்சயம் விடைக் கூற இயலாது. அக்கேள்விக்கான விடையானது இயேசு பிறந்த சமூகத்தினைக் குறித்த அறிவினில் இருந்தோ அல்லது இயேசு எவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டார் என்று அறிந்துக் கொள்வதில் இருந்தோ கிடைக்கப் போவதில்லை. மேலும் அப்பொழுது ரோமினில் நடைப்பெற்ற சம்பவங்களை அறிந்துக் கொள்வதில் இருந்தோ அல்லது அக்காலத்தில் மக்கள் மூடநம்பிக்கைகளில் நம்பிக்கையினைக் கொண்டு இருந்தனர் என்று கூறுவதில் இருந்தோ அக்கேள்விக்கான விடையினை நாம் அறிந்துக் கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் மேலும் கம்மியாகவே இருக்கின்றன. மாறாக அந்த மனிதர் போதித்தக் கருத்தினை அறிந்துக் கொள்வதன் மூலமாகவே அந்த கேள்விக்குரிய விடையினை நாம் அறிந்துக் கொள்ள முடியும். ஏன் காலங்காலமாக மக்கள் மற்றவர்களில் இருந்து இவரை வேற்றுமைப்படுத்தி இவரை மட்டும் கடவுள் என்று அழைக்கின்றார்கள் என்பதனை அறிந்துக் கொள்வதற்கு அவருடைய போதனைகளைப் புரிந்துக் கொள்ள முயல்வதே ஒரே வழியாகும். எனவே ஒருவர் இயேசுவினைக் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அவருடைய கருத்துக்களை அறிந்துக் கொள்ள முயல்வதே அவருடைய முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக இயேசுவின் போதனைகளை அவர் புரிந்துக் கொள்ள வேண்டுமே அன்றி அவருடைய போதனைகளுக்கு மற்றவர்கள் கொடுத்த விளக்கங்களை அல்ல. ஆனால் இதனை எவரும் செய்வதில்லை.

கிருத்துவத்தின் வரலாற்றினைக் குறித்து நன்கு அறிந்த வரலாற்றறிஞர்கள் இயேசு என்பவர் இறைவன் இல்லை என்று தாங்கள் புரிந்துக் கொண்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றனர். எனவே இயேசுவின் போதனைகள் தெய்வீகத்தன்மை வாய்ந்தவை அல்ல என்றும் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றுமே அவர்கள் நிரூபிக்க முயல்கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றினை மறந்து விடுகின்றனர். இயேசு என்பவர் ஒரு சாதாரண மனிதர் என்றும் அவருடைய போதனைகள் தெய்வீகத்தன்மை வாய்ந்தவை அல்ல என்றுமே அவர்கள் நிரூபிக்க முயலுகையில், உண்மையில் அவர்கள் முன்னே இருக்கின்ற பிரச்சனைக்குத் தீர்வினைக் காண்பதற்குப் பதிலாக அத்தீர்வினில் இருந்து விலகியே செல்லுகின்றனர். அவ்வாறு தீர்வினில் இருந்து விலகிச் செல்வதற்கே அவர்கள் தங்களுடைய அனைத்து வலிமையினையும் பயன்படுத்துகின்றனர்.

இங்கே முக்கியமான விடயமாக இருப்பது இயேசு என்பவர் இறைவன் இல்லை ஆகையால் அவருடைய போதனைகள் தெய்வீகமானவை அல்ல என்று நிரூபிப்பது இல்லை. மேலும் இயேசு என்பவர் கத்தோலிக்கர் என்று நிரூபிக்க முயல்வதும் இங்கே முக்கியமானது இல்லை. இயேசு அவர்களின் போதனைகளைப் புரிந்துக் கொள்வதே இங்கே முக்கியமானதொன்றாகும். மக்களுக்கு மத்தியில் மிகவும் உயர்ந்த நிலையினை அடைந்து விலைமதிப்பற்றதாகத் திகழும் அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் தான் இயேசுவை அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளனர். எனவே அந்தக் கருத்துக்களை அறிந்துக் கொள்வது தான் முக்கியமான ஒரு செயலாக இருக்க வேண்டும். அதனையே நான் செய்ய முயன்று உள்ளேன். குறைந்தபட்சமாக என் அளவிலாவது நான் இயேசுவின் அந்த கருத்துக்களைப் புரிந்துக் கொண்டு விட்டேன். இப்பொழுது நான் புரிந்துக் கொண்டவற்றை என்னுடைய மற்ற சகோதரர்களுக்காகத் தருகின்றேன்.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு