மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2017

தடுப்பூசிகள் - ஒரு சாமானியனின் பார்வையும் கேள்விகளும்!!!

இன்று இணையத்தளத்தில் பரவலாக ஒரு விவாதத்தைக் காண முடிகின்றது. தடுப்பூசிகளைக் கண்டிப்பாக போட வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அவற்றால் தான் உயிர்கொல்லியான பல தொற்றுநோய்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன என்று அவர்கள் தங்களது தரப்பு வாதத்தையும் வைக்கின்றனர். தடுப்பூசிகள் வேண்டாம் என்பதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு புறமோ தடுப்பூசிகள் தேவையே இல்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஏராளமாக இருக்கின்றன என்றும் சில நேரங்களில் மரணங்களுக்கே அவை வழி வகுக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் தடுப்பூசிகள் என்பது குழந்தைகள் மீது நாம் செலுத்துகின்ற வன்முறையாகும் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

இந்த இரண்டு தரப்பு வாதங்களுக்கு நடுவில் தான் ஒரு சாமானியனாக அவர்கள் இருவரையும் பார்த்தவாறே நான் நின்று கொண்டிருக்கின்றேன். நான் மட்டும் அல்ல, மருத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்ற பல்வேறு மக்களும் என்னைப் போன்றே தான் நின்று கொண்டிருப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன். காரணம், இது குழந்தைகள் சம்பந்தப்பட்டது. யாரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதற்கு தயாராக இருப்பதில்லை தான். ஆனால் இங்கே நம் முன்னே இருக்கும் கேள்வி தான் நம்மை மிகவும் குழப்புகின்றது.

'தடுப்பூசிகள் போடாததால் நாம் குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா அல்லது போடுவதால் அவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா?' நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதே நமக்குள் இருக்கும் மாபெரும் கேள்வியாக இருக்கின்றது. அதுவும் மருத்துவத்தைப் பற்றிய அறிவு மிகவும் சிறிதே இருக்கக்கூடிய நிலையில் அந்த கேள்விக்கு தெளிவான விடையினைக் காண்பது என்பது கடினமான ஒரு செயலாகத் தான் இருக்கின்றது. அந்நிலையில் 'அரசாங்கம் சொல்லுகின்றது...மக்கள் பலரும் போடுகின்றனர்...எனவே நல்லதே நடக்கும் என்றும் நாமும் நம்புவோம்' என்று எண்ணிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக பெருவாரியான மக்களின் முடிவோடு ஒன்றிணைந்து விடத் தான் ஒரு சராசரி மனிதனின் மனமானது விரும்பும்.

நானும் அத்தகைய ஒரு சராசரி மனிதன் தான். இருந்தும், மனம் ஏனோ சற்று நிம்மதியற்றே இருக்கின்றது. நம்மைச் சுற்றி நடக்கின்ற விடயங்களைக் காணும் பொழுது என்னுள் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • மருத்துவம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றுக் கூறுகின்றோம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதன் விளைவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடிய ஒரு சமூகமாக அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இங்கே நாம் பார்த்தோம் என்றால், நிலைமை முற்றிலுமாக மாறியல்லவா இருக்கின்றது. மருத்துவமனைகளும் நோயாளிகளும் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிய வண்ணம் அல்லவா நமது சமூகத்தில் இருக்கின்றனர். தரமான உணவினை அதிகமாக உற்பத்தி செய்து அனைவருக்கும் வழங்குகின்றோம் ஆனால் பசியுடன் வாடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமாக கூடிக் கொண்டே இருக்கின்றனர் என்பது எப்படிப்பட்ட ஒரு முரணான வாக்கியமோ, அதனைப் போன்றே தானே மருத்துவம் முன்னேறி இருக்கின்றது ஆனால் அதன் கூடவே நோய்களும் நோயாளிகளும் கூடி இருக்கின்றனர் என்பதும் முரணாக இருக்கின்றது. இந்த முரண் எதனால் வந்திருக்கின்றது.
  • மருத்துவம் அந்தளவு முன்னேறி இருக்காத காலகட்டம் என்று உங்களால் கூறப்படுகின்ற காலத்தில் பிறந்து வளர்ந்த மனிதர்கள், வயதான போதிலும் கூட இன்றளவும் ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நவீன மருத்துவமானது கோலோச்சிக் கொண்டிருக்கும் காலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் அந்த மனிதர்களை விட ஆரோக்கியம் குன்றியவர்களாகவே இருக்கின்றார்கள். இதனை நாம் நடைமுறை வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டிருக்கின்றோம். 'முன்னாடி எல்லாம் வயசானவங்க கூட்டம் தான் மருத்துவமனைல அதிகமாக இருக்கும்..ஆனா இப்போ எல்லாம் அவங்கள விட அதிகமா சின்ன கொழந்தைங்க தான் வருதுங்க' என்ற கூற்று அரசு மருத்துவமனையின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய காதில் விழுந்தது. அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை ஒவ்வொருவருமே அறிவோம். எதனால் இந்த நிலை?
  • நான் சிறுவனாக இருந்த பொழுது எப்பொழுதாவது காய்ச்சல் வரும். மருத்துவரிடம் போனால், மூன்று நாட்களுக்கு மருந்து தருவார். அதுவும் பெரும்பாலும் அரை மாத்திரை அளவே தான் இருக்கும். 'மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு' என்ற ஒரு கூற்று என்னுடைய நினைவிற்கு இப்பொழுது வருகின்றது. ஆனால் இப்பொழுதோ, குறைந்தது பத்து நாட்களுக்காவது மாத்திரைகள் தரப்படுகின்றன. இதுவும் புரியவில்லை...மருத்துவம் முன்னேறி இருக்கின்றது என்றால் மருந்துகளின் வீரியம் கூடி இருக்க வேண்டுமல்லவா...அல்லது அதே அளவு வீரியமாகவாவது இருக்க வேண்டுமல்லவா? அதனை விடுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டு செல்வது ஏன்?
இன்னும் கேள்விகள் அநேகம் கேட்கலாம் தான்...ஆனால் அவை எதுவும் புதியதாய் இருக்காது. ஏனென்றால் நமது சமூகத்தில் நாம் அன்றாடம் காணுகின்ற நிகழ்வுகளாகவே தான் அவை நமக்கு பரிச்சியமாக இருக்கும். நம்மில் ஒவ்வொருக்குள்ளேயும் அந்த கேள்வியானது இருக்கும்.

எனக்குத் தடுப்பூசிகளைப் பற்றி அதிகம் தெரியாது. அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதன் பக்கவிளைவுகள்/பயன் என்ன என்பதைப் பற்றி ஒரு சாமானிய மனிதன் எந்தளவு அறிந்து இருப்பானோ, அந்தளவே தான் நானும் அறிந்திருக்கின்றேன். அனுபவ அறிவே தான் இங்கே பேசுகின்றது தவிர அறிவியல் அறிவல்ல.

எனக்குத் தடுப்பூசி போட்டார்கள்...எனக்கு சின்னம்மை வரவில்லை. எனது தம்பிக்கும் அதே தடுப்பூசி போட்டார்கள். அவனுக்கு சின்னம்மை வந்தது. சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட என்னுடைய சித்தி மகளுக்கும் சின்னம்மை வந்திருக்கின்றது.

போலியோ சொட்டு மருந்தினால் போலியோ நோயை ஒழித்தோம் என்கின்றீர்கள். நம்புகின்றேன். ஆனால் அதே நேரம், போலியோ சொட்டு மருந்தினை பெற்றிராத என்னுடைய நண்பனின் குழந்தைகளும் போலியோவின் தாக்குதலின்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் நலமாகவே தான் அதே சமூகத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை நாம் எப்படி புரிந்து கொள்வது...தடுப்பூசி போட்டும் சிலர் நோய்களுக்கு ஆளாகின்றனர்...தடுப்பூசி போடாமலும் சிலர் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசியின் உண்மையான பயனை ஒரு சாதாரணமான மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது?

உணவும் மருத்துவமும் செல்வம் கொழிக்கும் வியாபாரமாக மாறிவிட்டிருக்கும் இந்த காலத்தில் சிறிது சந்தேகங்கள் எழுவதனைத் தவிர்க்க முடியவில்லையே. உதாரணமாக உணவினையே எடுத்துக் கொள்ளுங்கள்,

உணவு உற்பத்தியை அதிகரிக்கின்றோம் என்றுக் கூறி இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைக் கணக்கில்லாமல் கொட்டி நஞ்சு கலந்த உணவினை இன்றைக்கு நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.உணவு இருக்கின்றது...ஆனால் உணவில் சத்து இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. மாறாக நம்முடைய ஆற்றலைக் குறைக்கின்ற நஞ்சே தான் இருக்கின்றது. பசி நோய் வருவதில்லை தான். ஆனால் ஆற்றல் இல்லாத உடலில் பல்வேறு விதமான வேறு நோய்கள் வரத் தான் செய்கின்றன. இந்த முறையைத் தான் நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் அவர்களின் கூற்றினை 'இவர்கள் கூறுவது போல விவசாயம் செய்தால் உணவினை போதுமான அளவு தயாரிக்க முடியாது' என்ற ஒன்றினைக் கூறியே மழுங்கடித்து விட்டார்கள். 'இல்லை இயற்கை முறையில் அதிகளவு உணவினை உற்பத்தி செய்ய முடியும்' என்று அவர்கள் நிரூபித்தாலும் கூட அதனை ஏற்பதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை. காரணம் அதில் பெரிய நிறுவனங்களுக்கு பணம் ஏதும் கிட்டப்போவதில்லை.

தமிழக விவசாய கல்லூரிகளில் நான் அறிந்தவரை நம்மாழ்வாரின் சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பாடத் திட்டத்தில் கிடையாது. அங்கிருக்கும் ஆசிரியர்களும் இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியைப் பற்றி மட்டுமே தான் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். அந்த மாணவர்களும் தாங்கள் எதனைக் கற்று கொண்டிருக்கின்றார்களோ அந்த அறிவுடனேயே தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் நம்மாழ்வாரின் கருத்தினை நாம் அவர்களின் முன்னே வைத்தால், அவர்களின் போக்கானது 'அவர்களா அல்லது நம்மாழ்வாரா' 'நம்முடைய அறிவு பெரியதா அல்லது அவர்களுடைய அறிவு பெரியதா' என்ற ஒரு போட்டி மனப்பான்மையினுள்ளேயே போய் சிக்கிக் கொண்டு விடுகின்றது. அவனுக்கு ஆதரவாக பணம் கொழிக்கும் இரசாயன உர நிறுவனங்களும் சரி பூச்சிக் கொல்லி நிறுவனங்களும் சரி அடுக்கடுக்காக ஆராய்ச்சி கட்டுரைகள் என்பனவற்றை தந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோமே என்றால், அவர்கள் எந்தளவு ஆராய்ச்சி கட்டுரைகள் தந்தாலும் கூட, கடனில் வாடும் விவசாயி, பெரும் பணத்தினை கொட்டிக் குவிக்கின்ற பெரு நிறுவனங்கள்  மற்றும் இறுதியாக ஆரோக்கியமில்லாத சிறிது சிறிதாக நஞ்சு கலக்கப்பட்ட உணவு...இவை மட்டுமே தான் நம்முடைய சமூகத்தில் எஞ்சி இருக்கின்றன.

எனவே தான் நவீன மருத்துவம் வழங்குகின்ற தடுப்பூசிகளைப் பற்றியும் நான் சிறிது அஞ்ச வேண்டி இருக்கின்றது. அந்த பூச்சிக்கொல்லிகளைப் போன்றே தான் தடுப்பூசியும் இருக்குமோ என்ற சிந்தனையை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஆம்...பூச்சிக்கொல்லி நிச்சயமாக ஒரு வெற்றிகரமான அறிவியல் கண்டுபிடிப்பு தான். ஆனால் அது அந்த பூச்சி எதனால் வருகின்றது என்பதனை கண்டறிந்துக் கூறுவதில்லை. அதன் பணி அந்த பூச்சியினைக் கொல்வது மட்டும் தான். அதனை அது செம்மையாகச் செய்கின்றது. ஆனால், அது அந்த மரத்திற்கும் சிறிது கேடு விளைவிக்கின்றதே...அந்த செடியானது தன்னுடைய முழுமையான ஆற்றலுடன் உணவினை தயார் செய்வதில்லையே. உணவின் ஆற்றல் குறைகின்றதே.

ஒருவேளை தடுப்பூசியும் அதனைப் போன்றே தான் இருக்குமா? சில நோய்களை அழித்து விட்டு வேறேதாவது பாதிப்பினை உண்டாக்குமா? என்பன போன்ற கேள்விகளை 'மருத்துவமனைகளும், நோய்களும், நோயாளிகளும், பெரு நிறுவனங்களின் ஆதிக்கமும் கூடிக் கொண்டே இருக்கின்ற நம்முடைய சமூகத்தினைக் காணும் பொழுது' கேட்காமல் இருக்க முடியவில்லை. இருந்தும் சாமானியர்களான நாங்கள் தடுப்பூசியினைப் பயத்தினால் போடத் தான் செய்வோம்.

ஆம்...அறிவினாலோ அல்லது தெளிவான நம்பிக்கையினாலோ அல்ல (அதனை நீங்கள் எங்களுக்குத் தந்திருக்கவில்லை), மாறாக எங்களது குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்கின்ற பயத்தினால் தான் நாங்கள் அவ்வாறு செய்வோம்.

ஆம்...உங்களுடைய மருத்துவமானது பெரும்பாலும் சாமானியர்களின் மனதினில் பயத்தினைத் தான் விதைத்து இருக்கின்றது.

பி.கு:

எனது மனதில் இருப்பதை இங்கே கூறி இருக்கின்றேன். மாற்றுக் கருத்துகள் இருப்பின், தயைக் கூர்ந்து தெரிவிக்கவும்.


தொடர்புடைய இடுகைகள்: 

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!
வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!
சிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
உணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
 

ஞாயிறு, 30 ஜூன், 2013

இலவச மருத்துவம் வழங்கும் நாடுகள் - ஒரு ஆவணப்படம்: சிக்கோ (SICKO)

இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே ஒரு பணம் கொழிக்கும் தொழில் என்ற நிலை தான் உள்ளது. சேவை என்ற நிலையில் இருந்து தாழ்ந்து வணிகம் என்ற நிலைக்கு மருத்துவம் சென்று நாட்கள் பலவாகி விட்டன. மருத்துவ செலவுகள், மருந்துகளின் விலைகள் மற்றும் நமது அரசின் தனியார் மருத்துவமனைகளை ஆதரிக்கும் மனப்பாங்கு போன்ற விடயங்களால் இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே அது பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்ற நிலை உருவாகி விட்டது. இந்த நிலையினைத் தான் நாம் இங்கே கேள்விக்கு உள்ளாக்க வேண்டி இருக்கின்றது.

மருத்துவ வசதி பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவத்தினை வழங்க வேண்டியது ஒரு அரசின் தலையாயக் கடமைகளும் ஒன்று. அவ்வாறு இருக்க ஒரு அரசு அதன் கடமையை புறக்கணித்து விட்டு மருத்துவத்தினை தனியார் மயமாக்குவது என்பது எங்ஙனம் நியாயமாகும்? தனியாரிடம் மருத்துவம் இருப்பது தான் வளர்ச்சியா? போன்ற பல கேள்விகளை நாம் எழுப்பலாம். இக்கேள்விகளுக்கு பொது விடையாக நமக்குக் கிட்டுவது,

"அது எப்படிங்க அரசால எல்லாரையும் கவனிக்க முடியும். அரசால் தரமான மருத்துவ சேவையினை தர இயலாதக் காரணத்தினால் தனியாரிடம் அச்சேவைகளைக் கொடுக்கின்றது. மேலும் இலவசமாகவா மருத்துவத்தினைப் பெற முடியும்...அவ்வாறு இலவசமாகத் தந்தனர் என்றால் அம்மருத்துவர்கள் எங்கே செல்வர்...மேலும் ஒவ்வொரு மருத்துவ சேவைக்கும் ஒவ்வொரு வகையான கட்டணங்கள் இருப்பது சரியான ஒன்று தானே...அவ்வாறு இருக்கையில் நாம் இதனை எவ்வாறுக் குறை கூற முடியும்" என்பதே ஆகும்.

அதாவது சுருக்கமாக காண வேண்டும் என்றால், ஒன்று...மருத்துவத்தினை அரசே அனைவருக்கும் தருவது என்பது இயலாதக் காரியம்...இரண்டு...இலவசமாக மருத்துவ வசதியினை மக்கள் பெறுவது என்பதும் முடியாத ஒரு காரியமே. இதுவே சிலரின் கூற்று.

ஆனால் இவர்கள் எதனை முடியாதக் காரியம் என்றுக் கூறுகின்றனரோ அக்காரியங்களை பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக செய்துக் கொண்டு தான் வருகின்றன. கனடா, பிரான்சு, இங்கிலாந்து, கியூபா...போன்ற நாடுகளில் மருத்துவம் என்பது முழுக்க முழுக்க அரசின் பொறுப்பில் இருக்கும் ஒரு சேவையே ஆகும். அந்நாடுகள் அவர்களின் மக்களுக்கு மருத்துவத்தினை இலவசமாகத் தான் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்பொழுது நாம் அவற்றைப் பற்றி விவரிக்கும் ஒரு ஆவணப் படத்தைத் தான் காணப் போகின்றோம்.

சிக்கோ: (Sicko)

அமெரிக்காவில் மரம் அறுக்கும் தொழிலைச் செய்து கொண்டு வரும் நபர் ஒருவருக்கு ஒரு சிறிய விபத்தில் மோதிர விரலும் நடு விரலும் வெட்டுப்பட்டுப் போய் விடுகின்றன. எந்த ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் இல்லாத அவர் மருத்துவமனையினை அணுகுகின்றார்...வெட்டுப்பட்ட அவரது இரு விரல்களைத் தூக்கிக் கொண்டு.

மருத்துவமனையில் அவரைக் காணுகின்றனர்...மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏதும் இல்லை...இவர் தான் கட்டணத்தினைக் கட்ட வேண்டும்....'சரி இதோ நாங்கள் உங்களுக்கு தரும் வாய்ப்புகள்...உங்களின் மோதிர விரலை கையோடு இணைக்க வேண்டும் என்றால் ஆகும் செலவு 12,000 டாலர்கள்...அதுவே நடு விரல் என்றால் 60,000 டாலர்கள். முடிவு செய்து விட்டு சொல்லுங்கள்...நாம் ஆக வேண்டியக் காரியங்களை மேற்கொள்ளலாம்' (அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்றால் மருத்துவச் சேவையினைப் பெற நாம் தான் அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

கடினப்பட்டு 12000 டாலர்கள் சேர்த்து மோதிர விரலை மட்டும் சரிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு திரும்புகின்றார் அவர்...ஒரு கேள்வியோடு....ஒரே கேள்வியோடு. "என் உடம்பிற்கு விலை நிர்ணயம் செய்கின்றனரே...இது சரியா?"

இக்கேள்விக்கு விடையினைத் தேடித் தான் கிளம்புகின்றார் மைகேல் மூரே. (பாரன்ஹீட் 9/11 என்ற படத்தினை எடுத்தவர்). ஆனால் அவ்விடையினைத் தேடும் முன்னே அவருக்கு முன்னே இருக்கும் ஒரு முக்கியமான விடயத்தினை அவர் கண்டாக வேண்டி இருக்கின்றது. அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பவர்களே. ஒருவேளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இல்லாததால் தானா அந்த மரம் அறுக்கும் நபரால் முழுமையான சேவையைப் பெற இயலாது போனது? என்பதே அவ்விடயம் ஆகும். அதனை பற்றித் தெளிவாக அறிந்துக் கொள்ள அவர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு மக்களிடம் அவர்களின் மருத்துவமனை அனுபவங்களைப் பற்றி விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றார். அந்த விவரங்களின் மூலம் அவர் அறிந்துக் கொள்ள வருவது,

1) மருத்துவக் காப்பீடு இருந்தாலும்...செலவாகும் தொகையில் மருத்துவ சேவையினை எடுப்பவரும் ஒரு பங்கினை அவர் பக்கம் இருந்து கட்டத் தான் வேண்டும்.

2) பெரும்பாலும் மருத்துவ காப்பீட்டினை வழங்கும் நிறுவனங்கள் முழுமையான மருத்துவத் தொகையை வழங்குவதில்லை...ஏதாவது காரணம் கூறி தொகையினை வழங்காது இருக்கவே முயல்கின்றனர்.

அதாவது மருத்துவ காப்பீட்டினை வழங்கும் நிறுவனங்கள் அக்காப்பீடுகளை மக்களின் சேவைக்கான திட்டங்களாகக் காணாது அதனை தங்களுக்கு இலாபங்களை ஈட்டுத் தரும் திட்டங்களாகவே பார்க்கின்றன என்பதனை அவர் அறிகின்றார். இதனைப் பற்றித் தெளிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்க மருத்துவத் துறையைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

அமெரிக்கா என்பது தனியார்மயத்தை ஊட்டி வளர்க்கும் ஒரு தேசம் என்பதனை நாம் அறிவோம். அங்கே காப்பீட்டுத் துறையும் தனியார் வசம்...மருத்துவத் துறையும் தனியார் வசம். சரி...இப்பொழுது காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

நமக்கு ஏதாவது எதிர்பாராத இழப்பு நேர்ந்து விட்டால் அதனை நாம் ஈடு கட்டிக் கொள்ள நமக்கு உதவும் ஒரு திட்டம் தானே. உதாரணத்திற்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒருவேளை எதிர்பாராத ஒரு விபத்து நமக்கு நேர்ந்து விட்டால் நம்முடைய குடும்பத்திற்கு உதவ வழி செய்யும் ஒரு திட்டம் தானே அது. அதற்கு நாம் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு பணம் செலுத்திக் கொண்டு வருவோம்.

அதனைப் போன்று தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும். நமக்கு ஏதாவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் நமக்கு உதவ அந்த காப்பீட்டுத் திட்டத்தினை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு நாம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவுப் பணம் செலுத்திக் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவில் அத்தகைய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களே. நிற்க.

இப்பொழுது அந்த நிறுவனங்கள் இலாபம் காண வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...

1) மக்களிடம் இருந்து அதிகமாக பணம் பெற வேண்டும்.
2) பெற்றப் பணத்தினை திரும்பத் தரும் நிலை எழக் கூடாது. அதாவது மக்கள் எவரும் மருத்துவச் சேவைக்கென்று பணத்தினைக் கோரக் கூடாது. ஒருவேளை மக்கள் பணத்தினை வேண்டினால் அதனை தராது தவிர்க்க வேண்டும்.

அப்படி இருந்தால் தான் அவர்கள் இலாபத்தினைப் பார்க்க முடியும். அப்படித் தான் அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று அந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களே கூறுகின்றனர். அவர்களின் கூற்றின்படி,

1) அந்த காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வழிகளை தேடுவதற்கு மாறாக அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்காது தவிர்க்கவே வழிகளைத் தேடுகின்றன. அவ்வாறு இழப்பீட்டினை வழங்காது தவிர்க்க உதவும் ஊழியர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்கப்படுகின்றது.

2) ஒருவேளை ஒரு நபருக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டால், எவ்வகையிலாவது அந்த நபருக்கு வழங்கப்பட்டத் தொகை தவறாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்று நிரூபிக்க முடியுமா என்றே அந்நிறுவனங்கள் பார்கின்றன. அதற்கென்று தனியாக ஊழியர்களும் இருக்கின்றனர். அவர்களின் பணி என்னவென்றால், நாம் ஒரு இழப்பீட்டுத் தொகையைக் கோரி இருக்கின்றோம் என்றால், அக்கோரிக்கையை செல்லாத ஒன்றாக ஆக்கி நமக்கு பணத்தினை மறுக்கும் வழியைக் கண்டுப் பிடிப்பதே அவர்களின் பணி ஆகும்.

3) இந்த நிறுவனங்களின் இப்போக்கிற்கு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கின்றது. காரணம் அரசில் பதவியில் இருப்பவர்கள் பலர் இந்நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும் பதவிகளை வகிப்பவர்களாகவும் இருக்கின்றனர். (இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள படிக்கவும் இணைப்பு : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்)

அதாவது மருத்துவத்தினை சேவையாகக் காணாது ஒரு வணிகமாகவே அந்நிறுவனங்கள் காணுகின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.  மைகேல் மூரே இதைப் பற்றித் தான் தன்னுடைய ஆவணப் படத்தினில் விரிவாக அலசுகின்றார். அவரின் அனுபவங்கள் மூலம் எவ்வாறு அமெரிக்க மருத்துவத்துறை வணிகமாக மாறி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதை அவர் அறிந்துக் கொள்கின்றார்.

இப்பொழுது அவர் முன் இன்னொரு கேள்வி நிற்கின்றது. ஒரு வேளை மருத்துவம் என்பது இப்படித் தான் இருக்குமோ? இலவச மருத்துவம் என்பது இயலாத ஒன்றா? இக்கேள்விக்கு விடையினைத் தேடும் பொழுது தான் அண்டை நாடான கனடாவில் சென்று மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொண்டு திரும்பும் ஒரு அமெரிக்கப் பெண்மணியினைக் காணுகின்றார்.

அப்பெண்மணி கனடாவில் சென்று மருத்துவ சேவை பெற்று வருவதற்கு காரணம் அங்கே மருத்துவம் இலவசம். முற்றிலும் இலவசம். மக்களிடம் இருந்துப் பெரும் வரிப்பணத்தின் மூலம் மக்களுக்கான சேவையான மருத்துவம் போன்றவைகளை அந்த அரசாங்கம் இலவசமாக வழங்குகின்றது. 'நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் சரி...நீங்கள் என் நாட்டினைச் சார்ந்தவர் உங்களுக்கு மருத்துவ சேவையினை வழங்குவது இந்த நாட்டின் கடமை' என்றே அந்நாடு அதன் மக்களுக்கு மருத்துவத்தினை இலவசமாக வழங்கிக் கொண்டு இருக்கின்றது. சாதாரண காய்ச்சல் என்றாலும் சேவை இலவசம் தான்...புற்று நோய் என்றாலும் சேவை இலவசம் தான். அதிர்ந்து தான் போகின்றார் மூரே. பக்கத்து நாட்டில் கோடி கோடியாய் மக்கள் செலவு பண்ணி பார்க்கும் சேவைகள் இங்கே இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதனைப் பற்றி ஒரு கனடா நாட்டினைச் சேர்ந்தவரிடம் பேசும் பொழுது,

"இலவச மருத்துவ சேவையை எவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள்....ஒருவன் குறைந்த அளவு வரி கட்டுகின்றான்...நீங்கள் அதிகமாக வரி கட்டுகின்றீர்...இந்நிலையில் அவன் மருத்துவ சேவையை உங்களின் காசில் அல்லவா பெற்றுக் கொள்கின்றான்...மேலும் அவர்களின் பிரச்சனைக்கு நீங்கள் ஏன் உதவ வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்" என்ற கேள்விக்கு...

"முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் உதவுவது சரியான ஒன்று தானே...எனக்கும் அத்தகைய சூழ்நிலை உருவானால் நானும் அதைத் தானே எதிர்பார்ப்பேன்..." என்றே பதில் வருகின்றது. அருமையான பதில் தானே. ஒரு அருமையான ஆரோக்கியமான சமூகத்தினை அது காட்டுகின்றது. நிற்க.

கனடாவினைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு மூரே செல்கின்றார்...இங்கிலாந்து...பிரான்சு...கியூபா போன்ற நாடுகளில் மருத்துவம் முற்றிலுமாக இலவசமாக இருப்பதனைக் காணுகின்றார். மேலும் அந்நாடுகளில் மக்களுக்கு இருக்கும் மருத்துவ சலுகைகள், வசதிகள் போன்றவைகளைப் பற்றியும் அவரது இந்தத் திரைப்படத்தில் விரிவாக கூறி இருக்கின்றார். அவற்றுள் சில,

1) அந்த நாடுகள் அனைத்திலும் மருத்துவம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாகவே அம்மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

2) அனைத்து மருத்துவர்களும் அரசால் நியமனம் செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு சம்பளம் அரசாலேயே வழங்கப்படுகின்றது.

3) மருத்துவம் இலவசம் என்ற நிலையில் மருத்துவமனைகளில் பணம் கட்டும் தேவையே இல்லாது இருக்கின்றது. மேலும் ஒரு வேளை மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்லும் செலவினை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள் என்றால் அச்செலவினை மருத்துவமனையிலேயே பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கின்றது. (அதாவது உடல் நலக் கோளாறுக் காரணமாக நீங்கள் மருத்துவமனை செல்ல 50 ரூபாய் ஆகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதனை மருத்துவமனையிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்)

4) அமெரிக்காவில் 120 டாலருக்கு கிடைக்கும் மருந்து கியூபாவில் 5 சென்டுக்கு கிடைக்கின்றது. (அதாவது அமெரிக்காவில் 120 ரூபாய் என்றால் அதே மருந்து கியூபாவில் 5 பைசா). அதே போல் இங்கிலாந்தில் மருந்துகளுக்கு ஒரு குறைந்த கட்டணத்தினை நிர்ணயம் செய்து வைத்து இருக்கின்றார்கள். 6.65 பவுண்டினை செலுத்தி விட்டால் போதும் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கிக் கொள்ளலாம். 10 மருந்து வாங்கினாலும் அதே விலை...100 மருந்து வாங்கினாலும் அதே விலை. சில நேரம் அவ்விலையினை நம்மால் தர இயலாத நேரம் இலவசமாகவும் மருந்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

5) மருத்துவ செலவுகள், நோயாளிகளின் இன்ன பிற தேவைகள் போன்றவைகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கவனிக்கப்படுகின்றன. வரி செலுத்துவதன் நோக்கம் அது தானே. நிற்க.

அந்த நாடுகளில் இந்த நிலை நீடிக்க காரணம் என்று அம்மக்கள் கூறுவது அந்த நாட்டினில் மக்களைக் கண்டு அரசாங்கம் பயப்படுகின்றது. மக்கள் ஒன்றிணைந்து அந்நாடுகளில் போராடுகின்றனர்...எனவே அரசு மக்களுக்காக செயல்படுகின்றது.

ஆனால் அமெரிக்காவில் மக்கள் அரசைப் பார்த்து அஞ்சுகின்றனர்...அதனால் அரசு அதன் கடமைகளை மறந்து மக்களுக்கு சேவை ஆற்றாமல் தனியார்கள் இலாபம் குவிக்க உதவிக் கொண்டு இருக்கின்றது. மருத்துவம் என்பது உரிமையாக இல்லாது பணம் இருப்பவர்கள் மட்டும் பெற்றுக் கொள்ளும் ஒரு பொருளாக மாறி விட்டது அதனால் தான். இந்நிலையில் அரசின் கடமைகளை அதற்கு வலியுறுத்தப் போகின்றோமா அல்லது உரிமைகளைப் பெறாமலேயே அச்சத்தில் வாழ்ந்து இருக்கப் போகின்றோமா என்பதே நமக்கு முன்னே இருக்கும் கேள்வி...என்றுக் கூறியே இந்த ஆவணப் படத்தினை முடிக்கின்றார் இயக்குனர் மூரே.

இந்தியர்களாகிய நம் முன்னும் அக்கேள்வி தான் இருக்கின்றது...!!!

கிட்டத்தட்ட இந்தியாவினை அமெரிக்க மயமாக்கும் அரசு முயன்றுக் கொண்டு இருக்கும் சூழலில் தான் நாமும் இருக்கின்றோம். அரசு தனது கடமைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு அனைத்தையும் தனியார்களின் கைகளுக்கு மாற்றித் தந்து கொண்டிருப்பதை நாமும் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம்.

1) அரசு மருத்துவமனைகள் பேணப் படாமல் தனியார் மருத்துவமனைகள் அரசில் பதவிகளில் இருப்பவர்களாலேயே தொடங்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் இருக்கின்றன.

2) போலி மருத்துவர்களும், மருந்துக்களும் வெறும் இலாபத்திற்காக நம்முடைய உடலினை பதம் பார்க்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். அரசு அதனைத் தடுக்க யாதொரு வழிமுறையையும் எடுக்கவில்லை.

3) மருத்துவம் என்றாலே செலவு அதிகம் ஆகும் என்றும் பணம் இல்லை என்றால் நமக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள தகுதி இல்லை என்ற நிலையம் இன்று வளர்ந்துக் கொண்டு வருகின்றன.

4) அமெரிக்காவில் கொள்ளையடிக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களைப் போலவே இந்தியாவிலும் நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றன. அரசுகளும் அவற்றை ஊக்குவிக்கின்றன.

கிட்டத்தட்ட மருத்துவம் என்பது வணிகமாகி விட்டு முடிந்த ஒரு சூழலில் தான் நாம் நிற்கின்றோம்...ஆனால் இதுவே முடிவு அல்ல. முடிந்தது என்று நாம் எண்ணும் வரை எதுவுமே முடிந்தது அல்ல. நாம் கட்டும் வரிகள் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றன என்று நமக்குத் தெரியாது....இருந்தும் தொடர்ந்து நாம் வரி செலுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகின்றோம்? பொறுப்பினை செய்யாது இருக்கும் அரசைக் கண்டிக்கப் போகின்றோமா அல்லது அச்சத்தால் முடங்கியே கிடக்கப் போகின்றோமா?

நம்முடைய பதிலில் தான் அடங்கி இருக்கின்றது நமது சமூகத்தின் நிலைமை...எதிர்காலம்!!!

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

தொடர்புடைய இடுகைகள்:

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!
வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!

முதலில் இந்தப் பதிவுகளை முன்னரே படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள்

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்
அழகுச் சாதனத்தில் அரசியல்
சரி இப்பொழுது தொடர்வோம்…!!!
இரு செய்திகள்…!!

ஒன்று….டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்தான நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்படுகின்றது.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=35520

இரண்டு…புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகமான ‘ஸ்கை வாக்’ கினால் ஏற்படும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நீண்ட காலமாக இருந்து வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையினை இடிக்க அரசு திட்டமிட்டு வருகின்றது.
http://savukku.net/home1/1676-2012-10-19-16-49-32.html

இந்த இரண்டு செய்திகளைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதாவது ஆங்கில மருத்துவ முறையில் இல்லாத மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றது. ஆனால் அப்படிப்பட்ட மருத்துவ முறையை வளர்த்து எடுக்க அரசு எவ்வித முயற்சியும் செய்யாது மாறாக அம்மருத்துவ முறையினை சிறிது சிறிதாக அழிக்கும் வண்ணமே செயல்களைப் புரிந்துக் கொண்டு வருகின்றது. அரசு ஏன் அவ்வாறான செயல்களைப் புரிகின்றது என்பதனை நாம் அறிய வேண்டும் என்றால் இன்றைக்கு நம் மத்தியில் இருக்கும் மருத்துவத் துறையினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் என்பது மக்களின் வாழ்வில் நீண்ட காலமாகவே இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது. காரணம் எளிதான ஒன்று தான். நம்முடைய உடல் சில நேரங்களில் நோய் வாய்ப்பட்டு விடுகின்றது, சில நேரங்களில் உடலில் காயங்களும் ஏற்பட்டு விடுகின்றன…அந்நேரங்களில் அந்தக் காரணிகளால் நாம் இன்னலுக்கு ஆளாகின்றோம்…அந்த நேரத்தில் உடலில் ஏற்பட்டுள்ள அந்த இன்னலினை நீக்கி மீண்டும் உடலினை சீரான நிலைக்குக் கொண்டு வர மருத்துவத்தின் உதவித் தேவைப்படுகின்றது. அக்காரணத்தினாலேயே மருத்துவம் மனிதர்கள் சென்ற இடம் எல்லாம் அவர்களுடன் சென்று அவர்களுடனேயே வளர்ந்து உள்ளது.

நோயும் காயமும் எவ்வாறு மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றனவோ அவ்வாறே மருத்துவமும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது. அதாவது பிறந்தக் குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரைக்கும் மருத்துவம் என்ற ஒன்று இன்றியமையாதுத் தேவைப்படுகின்றது. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்…மக்களுக்குத் தெரியும், அரசுக்குத் தெரியும், மருத்துவ நிறுவனங்களுக்கும் தெரியும்.

மருத்துவம் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் தேவைப்படுகின்றது…மேலும் மருத்துவம் என்றுக் கூறினாலே மக்கள் பலரும் கேள்விக் கேட்க மாட்டார்கள். இந்த உண்மையும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையிலேயே நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது.
100 கோடி மக்கள் இங்கே வாழ்கின்றனர். அவர்களை சமூகமாகவும் பார்க்கலாம் அல்லது சந்தையாகவும் பார்க்கலாம்…ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் இங்கே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமும் தேவைப்படத் தான் செய்கின்றது.

இந்நிலையில் அப்படிப்பட்ட ஒரு சந்தையை நாம் பிடித்தோம் என்றால், அதாவது அவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் நம்முடைய மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகளையே நாடி வரும் வண்ணம் செய்தோம் என்றால், நாம் இலாபம் பெறுவோமா மாட்டோமா?…பணம் கொட்டுமா அல்லது கொட்டாதா?… கொட்டும் தானே. அந்த நிலையைத் தான் மருத்துவ நிறுவனங்கள் விரும்புகின்றன…அந்த நிலையைக் கொண்டு வருவதற்கே அவைகள் செயலும் புரிகின்றன. 100 கோடி மக்கள் உள்ள இந்தச் சந்தையைப் பிடிக்க அவைகள் அடித்துக் கொள்கின்றன…காரணம் பணம்!!! நம் கற்பனைக்கு எட்டாத பணம்…அவ்வளவே…!!! அந்த பணத்தினைப் பெறுவதற்கு அந்த மருத்துவ நிறுவனங்கள் விலையாய் காவுக் கொள்வது நம்முடைய ஆரோக்கியத்தையும் நல்வாழ்வினையுமே!!! அது எவ்வாறு…காண்போம்!!!

இன்று நம்முடைய சமூகத்தினுள் முக்கியமாக மூன்று மருத்துவ முறைகள் திகழ்கின்றன…ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். இதில் ஆங்கில மருத்துவ முறை ஆங்கிலேயர்களோடு நம் மண்ணில் நுழைந்த ஒன்று…மற்ற இரண்டு மருத்துவ முறைகளும் நம்முடைய மண்ணிலேயே விளைந்த மருத்துவ முறைகள். ஆங்கில மருத்துவ முறையில் செலவுகள் அதிகமாக இருக்கும்…மேலும் மருந்துக்களும் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருக்கும். ஆனால் நம்முடைய மருத்துவ முறைகள் பெரும்பாலும் உணவினையும், இயற்கை மூலிகைகளையுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. செலவும் கம்மியான அளவே இருக்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடையது ‘உணவே மருந்து’ என்ற நிலையில் இருக்கும் மருத்துவமாகத் திகழ்கின்றது…ஆங்கில மருத்துவமோ ‘மருந்தே உணவாகும்’ நிலையில் இருக்கின்றது. இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

‘உணவே மருந்து’ என்ற நிலையில் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு தேவையான வலுவினையும் மற்ற ஆற்றல்களையும் வழங்கி விடுகின்றது. உடல் நலத்திற்கென்று நாம் தனியாக வேறு எந்த மருத்துவப் பொருட்களையும் நாம் தேட வேண்டியதும் இல்லை அவற்றை நம்பி இருக்கவும் வேண்டியது இல்லை.

உடல் நலம் சரி இல்லை என்றால் வெறும் கஞ்சியினைக் குடித்து விட்டு படுத்துக் கொள்வது, உடலில் காயம் ஏற்பட்டால் மஞ்சளை எடுத்துப் பூசிக் கொள்வது, காய்ச்சல் என்றால் வெறும் இட்லியோடு கருப்பட்டி சாறினை வைத்து உண்ணுவது (இந்தக் கருப்பட்டி ஆனது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களின் பொருளான சீனியை வியாபாரம் செய்வதற்காக கருப்பட்டியினை பின்னுக்கு தள்ளி விட்டனர். அதாவது மற்ற பல பொருள்களைப் போல நல்லதான கருப்பட்டி பின்னுக்கு சென்று விட்டது, தீயதான சீனி முன்னுக்கு வந்து விட்டது வெறும் வணிக நோக்கிற்காக), மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள், உணவு உண்ணும் காலங்களை சரியாகப் பின்பற்றுதல்…இன்னும் பல.

இவைகள் தாம் ‘உணவே மருந்து’ என்று நமது மண்ணில் இருந்த முறைகள் ஆகும். இந்த முறைகளில் செலவுகள் இல்லை…எவரையும் நாம் நம்பி இருக்க வேண்டியத் தேவையும் இல்லை. நமக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் போன்றவைகளை நாமே எளிதாய் பெற்றும் கொள்ளலாம் வளர்த்தும் கொள்ளலாம். எனவே இந்நிலையில் மருத்துவத்தினை அறிவாக மட்டுமே காண முடியுமே அன்றி வணிகமாகக் காண முடியாது. இவ்வகையான மருத்துவம் வளர நாம் அதனைப் பற்றிய அறிவே போதுமானதொன்றாக இருக்கின்றது.

ஆனால் ஆங்கில மருத்துவ முறையோ முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கின்றது. அம்முறையில் நாம் மருந்துக்களை நம்பி இருக்க வேண்டிய நிலையே நிலவுகின்றது. அந்த மருந்துகள் ஏதாவது மருந்து நிறுவனத்தினைச் சார்ந்த ஒன்றாக இருக்கின்றன. அந்த மருந்துக்களை நாமே உருவாக்கிக் கொள்ளவோ அல்லது அம்மருந்துக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. மருத்துவர் பரிந்துரைப்பார்…நாம் வாங்குவோம்…அவ்வளவு தான். இந்நிலையில் நாம் மருந்துக்களுக்கு அந்த நிறுவனத்தினைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அங்கே அறிவு முக்கியத்துவத்தினை இழந்து வணிகம் முக்கியமடைய ஆரம்பிக்கின்றது.

நம்முடைய நாட்டினில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் பல நோய்களுக்குரிய மருந்துக்களை தயார் செய்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நம்மால் அனைத்து நிறுவனங்களின் மருந்துக்களையும் வாங்கி உண்ண முடியாது. நாம் நம்முடைய மருத்துவர் என்ன மருந்தினைக் கூறுகின்றாரோ அந்த மருந்தினை மட்டுமே வாங்கி அருந்துவோம். இது அந்த மருந்து நிறுவனங்களுக்கும் தெரியும். இந்நிலையில் அம்மருந்து நிறுவனங்களின் மருந்துக்கள் விற்பனை ஆக வேண்டும் என்றால் மருத்துவர்கள் அந்நிறுவனங்களின் மருந்துக்களை பரிந்துரைக்க வேண்டும். அதற்கு அந்த நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்ட மருத்துவர்களிடம் கூட்டு வைக்க வைக்கலாம்….அம்மருத்துவர்கள் அந்த நிறுவனங்களின் மருந்துக்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு ஏதேனும் கைமாறு செய்யும் என்றும் மறைமுகமாக ஒப்பந்தங்கள் இட்டுக் கொள்ளலாம்…அவ்வாறு செய்வதன் மூலம் மருந்துச் சந்தையில் தங்களின் பிடியினை பலப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நிகழ வாய்ப்புகள் இருக்கின்றனவா இல்லையா என்பதனை உங்களின் அனுபவத்தில் இருந்து கிட்டப் பெற்று இருக்கும் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

இவ்விடத்தில் நண்பர் ஒருவரின் கதையினை இங்கே காண்பதும் நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். நண்பருக்கு நீண்ட நாட்களாக கால் வலி இருந்துக் கொண்டே இருக்க அவர் ஒரு மருத்துவரிடம் சென்று இருக்கின்றார். நண்பரின் காலினை பரிசோதித்த மருத்துவரும், நண்பருக்கு இரண்டு மருந்துக்களை பரிந்துரை செய்து உள்ளார். ஒரு மருந்து கால் வலியினை குணமாக்க…ஆனால் அந்த மருந்தினால் குடல் அரிப்பு (அல்சர்) ஏற்படுமாம், எனவே அல்சருக்காக இரண்டாம் மருந்தாம்(எப்படி இருக்கு இலவசமா ஒரு நோயையும் தந்து அதுக்கு மருந்தையும் தாரானுங்க).

இப்பொழுது நாம் கண்டு உள்ள ஆங்கில மருத்துவமுறையில் நம்முடைய அறிவிற்கு வேலை மிகவும் குறைவாகவே உள்ளது….மாறாக நமது பணத்திற்குத் தான் வேலை அதிகமாக இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கண்டு உள்ள இரு மருத்துவமுறைகளில், ஒன்று அறிவினைச் சார்ந்தும் மக்கள் அனைவருக்கும் எளிதாய் இயல்பாகவே கிட்டும் வண்ணம் இருக்கின்றது. மற்றொன்றோ வணிகமயமாக்கப் படுவதற்கு மிகவும் உகந்ததாய் இருக்கின்றது. பணம் அதனில் அதிகமாகத் தேவைப் படுகின்றது. இதனில் எந்த முறையினைத் தாங்கள் தேர்வு செய்வீர்கள்?
பணமும் அதிகமாகச் செலவாகி அடுத்தவரை நம்பி இருக்க வேண்டிய மருத்துவ முறையினையா அல்லது பணச் செலவு அதிகம் இன்றி இயல்பாகவே கிட்டும் மருத்துவ முறையினையா?
பணச் செலவு அதிகமில்லாத முறையினைத் தானே தாங்கள் தேர்வு செய்வீர்கள். அது தானே மனிதரின் இயல்பான போக்காக இருக்கும். அவ்வாறு இருக்க இன்றைக்கு நம்முடைய நாட்டினில் பார்க்கும் பொழுது, அத்தகைய இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போயும், ஆங்கில மருத்துவ முறைகள் பெருமளவு பரவி இருப்பதையுமே நாம் காணுகின்றோம். வித்தியாசமான நிலை தான் அல்லவா…இப்பொழுது ஏன் இந்த நிலை இருக்கின்றது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இந்த நிலை ஒன்று, இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்துக்கள் இல்லாத காரணத்தினால் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு மருத்துவ முறையில் நோய்களுக்கு மருந்துக்கள் இல்லாத நிலையில் மக்கள் வேறு முறைகளுக்கு செல்வது இயல்பு தானே. ஆனால் நாம் சில நிகழ்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காணும் பொழுது இயற்கை மருத்துவத்தினில் நோய்களுக்கு தீர்வுகள் இருப்பதாகவே அறியப்பெருகின்றோம். எனவே நோய்களுக்கு மருந்தில்லை அதனால் இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போயின என்ற வாதத்தினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே வேறு ஏதேனும் காரணிகள் இருக்கக் கூடுமா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் இயற்கை மருத்துவம் என்பது அறிவினைச் சார்ந்தது…பழக்க வழக்கங்களைச் சார்ந்தது…ஒருவேளை அந்தச் சிந்தனைகள், மருத்துவ முறைகள் குறித்த அறிவுகள் மறைந்துப் போயிருந்தால் இந்த மருத்துவ முறையும் மலிந்து போயிருக்கலாம் அல்லவா…? அதாவது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாவிட்டால் எந்த முறையும் நிலைத்து நிற்காது அல்லவா…ஒருவேளை காலத்தில் மக்கள் இயற்கை மருத்துவத்தினை புறக்கணிக்க ஆரம்பித்து இருப்பர்…அல்லது புறக்கணிக்க வைக்கப்பட்டு இருப்பர்…அந்நிலையில் கவனிப்பார் எவரும் இன்றி காலப்போக்கில் அம்மருத்துவ முறையும் மலிந்துப் போய் இருக்கலாம் அல்லவா. இந்த வாதம் ஓரளவு சரி என்றே படுகின்றது. ஆனால் நோய்களுக்கு மருந்துகளும் இருக்கின்றது… செலவும் இல்லை என்று இருக்கும் மருத்துவ முறையினை மக்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றுக் கண்டோம் என்றால் அதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது ஒன்றே ஒன்று தான்.

அரசியல்…!!! இதனைப் பற்றி நாம் இந்தப் பதிவில் விரிவாக காண வேண்டாம்….சுருக்கமாகவே கண்டு விடலாம்.

மக்கள் என்றுமே மன்னன் எவ்வழியோ அவ்வழியே தான்…(அன்றும் சரி…இன்றும் சரி சமூகத்தில் பெருவாரியான மக்கள் அவ்வாறு தான் இருக்கின்றனர்). ஆங்கிலேயர் இங்கே வணிகத்திற்காகத் தான் வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள் இங்கே நீண்ட காலம் ஆட்சியையும் புரிகின்றனர். நிலைமை அப்படி இருக்கும் பொழுது ஆங்கிலேயர் எவ்வித மருத்துவத்தினை வளர்த்து இருப்பர்? எவ்வித மருத்துவத்தினை கற்றவர்களுக்கு முன்னிலை அளிக்கப்பட்டு இருக்கும்? ஆங்கிலேயரின் மருத்துவத்தினை பயின்றவருக்கா அல்லது மாற்று மருத்துவத்தினைப் பயின்றவருக்கா? அவர்களின் மருத்துவத்தினை கற்றவர்களுக்குத் தானே முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கக் கூடும். அப்படி இருக்கும் பொழுது மாற்று மருத்துவங்கள் பின் தள்ளப்பட்டுத் தானே இருக்கும். அப்படிப் பார்க்கும் பொழுது எவ்வாறு இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போய் இருக்கின்றன என்பதனை நாம் கணிக்க முடிகின்றது தானே. (ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது…அது அப்பொழுதும் ஓடுக்கப்பட்டு இருந்ததா இல்லையா என்பது வேறு வரலாறு…அது இங்கேத் தேவை இல்லை).

சரி ஆங்கிலேயர்கள் ஆங்கில மருத்துவத்தினை வளர்த்தார்கள்…பிழையில்லை…அவர்கள் எதனை உருவாக்கினார்களோ அதனை அவர்கள் வளர்த்தனர்…அவர்களின் பார்வையில் அது சரிதான். விட்டு விடலாம். ஆனால் இப்பொழுது கேள்வி நம்முடைய ஆட்சியாளர்களை நோக்கித் திரும்புகின்றது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஏன் நாமும் ஆங்கில மருத்துவ முறையையே வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம்? நம்முடைய பிள்ளைகள் கவனிப்பாரற்று இருக்கும் பொழுது எதற்காக நாம் அடுத்த வீட்டுப் பிள்ளைகளையே ஏந்திக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்றோம். கொஞ்ச வேண்டாம் என்று சொல்லவில்லை…ஆனால் சொந்தப் பிள்ளைகளை பட்டினி போட்டு விட்டா வேறு பிள்ளைகளுக்கு விருந்துப் படைக்க வேண்டும்?

நம்முடைய அரசு அவ்வாறு தான் செய்துக் கொண்டு இருக்கின்றது. ஆங்கில மருத்துவத்தினை வளர்க்க காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கே அது நமது சொந்த மருத்துவ முறைகளில் காட்டுகின்றது. தவறு தான்…போய்த் தொலையட்டும்…ஏதோ ஒரு மருத்துவத்தினையாவது மக்களுக்காக வளர்க்கின்றதே என்று நாம் எண்ணலாம் என்றால் அதற்கும் வழி செய்ய மாட்டேன் என்கின்றது அரசு. காரணம் அரசு மக்களுக்காக ஆங்கில மருத்துவத்தினை வளர்ப்பதில்லை…மாறாக வணிகத்திற்காகவே வளர்க்கின்றது.

அதனால் தான் அரசு மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களின் சட்டங்கள் போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு அவற்றுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்கள் போன்றவைகளை அரசு ஊக்குவிக்கின்றது. காரணம் அரசே மருத்துவ வசதிகளை தரமாக வழங்கினால் எவ்வாறுக் காசு பார்க்க முடியும்? அரசு மக்களுக்கு சேவைகள் வழங்கக் கடமைப்பட்டு இருக்கின்றது…ஆனால் தனியார்கள் அவ்வித கடமை ஏதும் அற்றவர்கள்…அவர்களைக் கேள்விக் கேட்க மக்களால் முடியாது…அரசாலே மட்டுமே முடியும். ஆனால் அரசில் இருப்பவர்களே தனியார்களாகச் செயல் பட்டால் யார் யாரைக் கேள்விக் கேட்பது? அது தான் இங்கே நடக்கின்றது.
வணிகமாக பயன்படுத்தப்பட முடியாத ஒரே காரணத்தினால் இயற்கை மருத்துவ முறைகள் இங்கே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன…அவ்வாறே அரசு சார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இலாபம் தரமாட்டாது என்றே ஒரேக் காரணியினாலே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அனைத்திற்கும் காரணம் ஒன்றே ஒன்று தான்…பணம்…கனவிலும் கற்பனைப் செய்ய முடியாத அளவு பணம்.

அதற்காகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இங்கே காளான்களைப் போல் முளைக்கின்றன…அதனால் தான் தனியார் மருத்துவமனைகள் பல இயங்குகின்றன…அதனால் தான் ஆங்கில மருத்துவம் தழைத்து விளங்குகின்றது. அதனால் தான் இன்றைக்கு மருத்துவத்திற்கு ஆகும் செலவுகள் எகிறிக் கொண்டே போகின்றன…ஆயினும் உடல் முற்றிலுமாக குணமாக மாட்டேன் என்கின்றது.

காரணம் இன்றைய சமூகத்தில் உள்ள மருத்துவ முறை நோயாளிகளை வாடிக்கையாளர்களாக மாற்றுகின்றதே அன்றி அவர்களை குணப்படுத்த மாட்டேன் என்கின்றது. நீங்கள் நோயாளியாக இருக்கும் வரை தான் அவர்கள் பிழைப்பினை நடத்த முடியும். இன்று மருத்துவம் என்பது சேவையாக இல்லாது ஒரு வணிகமாகவே மாறி விட்டது.

இதனைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ, அந்த வணிகத்தில் இலாபத்தினைப் பார்க்கும் பங்குதாரராகவே தன்னை இன்று வைத்துள்ளது. அதனால் தான் புதியக் கல்லூரிகளை அது திறக்காமல் தனியார்களிடம் விடுகின்றது…அவ்வாறே மருத்துவமனைகளையும் தான். இன்று மருத்துவம் பயில வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பலரும் ஆங்கில மருத்துவத்தினையே அவர்களின் சிந்தையில் கொண்டு இருக்கின்றனர். இதனையும் மாற்றாது பேணிப் பாதுகாத்துக் கொண்டு வருகின்றது நம்முடைய அரசு.

காரணமாக அது கூறுவது ஒரு வேடிக்கையான விடயம்…”அனைத்து துறைகளையும் எவ்வாறு அரசாங்கமே ஏற்று ஒழுங்காக நடத்த முடியும்…அது கடினமான ஒரு செயல்” என்று சாக்குபோக்கு சொல்கின்றனர். ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று தான் அவர்களுக்கு வாக்களித்து ஆட்சியினை கையில் தந்து இருக்கின்றார்கள் மக்கள்…அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் எதற்காக இவர்கள் முன்னே வந்தனர்…தாராளமாக பதவியினை விட்டு விலகி விட வேண்டியது தானே…ஏனெனில் அரசு செய்வதுக் கடினம் என்றுக் கூறும் விடயங்களை செம்மையாகச் செய்யும் மக்கள் இங்கே பலர் உள்ளனர். வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கிட்டப்பெற மாட்டேன் என்கின்றது. அதனை விடுத்து எங்களால் முடியவில்லை நாங்கள் தனியாரிடம் தந்தோம் என்றுக் கூறுவது எல்லாம் காசு பார்க்கும் செயலே அன்றி வேறு இல்லை.

அரசின் இந்த நிலையினால் தான் காலாவதியான மருந்துகள் கூட நாட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. மருந்துகள் விற்பனையாகவில்லை என்றால் இலாபம் போய் விடுமே என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காலாவதியான மருந்துக்களை அவை மக்களின் உயிர் பறிக்கும் என்று அறிந்தும் கூட சிலர் நாட்டினில் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் பண மயம். மேலும் அவர்களே அரசிலும் பங்கு வகித்தும் கொண்டு இருக்கலாம்…எனவே அவர்களின் மேல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதினை நாம் நம்பலாமா அல்லது கூடாதா என்பதனை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் தான் நம்முடைய பொறுப்புகள் அதிகமாகின்றது. நம்முடைய உடல் நலத்தினை மட்டும் அன்றி நம்முடைய சமூகம், நமக்கு பின் வரக் கூடிய தலைமுறை அவர்களின் உடல் நலத்தினையும் நாம் கருத்தில் கொண்டே செயல் ஆற்ற வேண்டி இருக்கின்றது.

நம்முடைய இயற்கை அறிவினை, மருத்துவ முறையினை பற்றிய தெளிவினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது…அதற்காக முயற்சிகளாவது செய்ய வேண்டி இருக்கின்றது. அத்துறைகளில் ஈடுபட்டோரை அணுகி, அவர்கள் கூறும் முறைகள் சரியானவைகளாகத் தெரிந்தால் அவற்றை நாம் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியக் கடமையும் இருக்கின்றது. மருத்துவம் வணிகம் என்ற நிலையில் இருந்து சேவை என்ற நிலைக்கு கொண்டு வருவது சரியான ஒன்று தானே…காசிருந்தால் மட்டுமே உயிர் காக்கும் மருத்துவம் மருத்துவமா? மருத்துவம் பணத்தின் அடிப்படையிலா கட்டப்பட்டு இருக்க வேண்டும்? மனிதத்தின் அடிப்படையில் அல்லவா அது கட்டப்பட்டு இருக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி, சிந்தனைத் திறன் ஆகியவை அந்த இலக்கிற்கும் சிறிது பயன்படலாமே…தவறில்லையே….!!!

நம் உடல்நலம்…நம் மருத்துவம்…நம் உரிமை அல்லவா!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும்.

2) அதனைப் போன்றே இயற்கை மருத்துவ முறையினை வளர்க்கவோ அல்லது அதனைப் பற்றி அறிந்துக் கொள்ளவோ ஏதேனும் வழிமுறைகள் தங்களுக்கு தோன்றியது என்றால் அதனையும் பகிர்ந்துக் கொள்ளலாம். நிச்சயமாக உதவும்.

3) இந்தப் பதிவில் ஆங்கில மருத்துவத்தினை முற்றிலுமாக மறுத்து பேசவில்லை. அதுவும் ஒரு மருத்துவ முறை தான். ஆனால் பெரும்பாலும் வணிகத்திற்கு அடிமையாய் கிடக்கின்றது. இருந்தும் அதனை நாம் எப்பொழுது பயன் படுத்த வேண்டி இருக்கின்றதோ அப்பொழுது பயன் படுத்தலாம். நம்மிடையே இருக்கும் முறைகளில் இல்லாத தீர்வு வேறொரு முறையில் இருந்தால் ஏற்றுக் கொள்வது முறைதானே. அனைத்துக் குழந்தைகளையும் நாம் கொஞ்சலாம்…ஆனால் அதற்கு அடிப்படையாக அவர்கள் அனைவரையும் நாம் நல்லவர்களாக சமமானவர்களாக வளர்க்க வேண்டும் அல்லவா.

4) இயற்கை மருத்துவக் குறிப்புகளைப் பற்றி தமிழக அரசு வெளி இட்ட ஒரு புத்தகத்தில் இருந்துச் சில குறிப்புகளை நண்பர்களுக்கு இயன்ற நாள்தோறும் அனுப்பி வருகின்றேன். ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டுமே என்றுக் கருதியே அனுப்புகின்றேன். அவை என் எண்ணப்படி குறிப்புகளுக்காக மட்டுமே இப்பொழுது பயன்படும். அவற்றினை எவ்வாறு செயல் படுத்துவது? எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது? அவை சரியானதொன்றாக இருக்குமா என்பதனைக் குறித்து சிந்தனைகள் போய்க் கொண்டு இருக்கின்றன…பல்வேறுக் கனவுகளோடு ஒருக் கணவாய் இதுவும் சுற்றிக் கொண்டு இருக்கின்றது…காண்போம்…என்ன செய்ய முடிகின்றது என்பதனைப் பற்றி!!!

திங்கள், 1 அக்டோபர், 2012

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!

ஒரு கேள்வி?

உங்களுக்கு உங்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா அல்லது மற்றவர்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா? யாரை நீங்கள் அதிக அக்கறையுடன் பேணிக் காப்பீர்கள்?

"அட என்னங்க இது ஒரு கேள்வி? அவரவர்களுக்கு அவர் அவர் குழந்தைகள் தானே முக்கியம். அவர்களைத் தானே அவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் அன்பாக வளர்ப்பர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்கின்றீர்களா....ம்ம்ம்...சரி தான் நீங்கள் சொல்வது...ஆனால் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடக்காமல் தன்னுடைய குழந்தைகளை பசியோடு வீதியில் விட்டுவிட்டு மற்ற வீட்டுக் குழந்தைகளை அனைத்து வித ஊடச்சத்துக்களுடன் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றதே... அந்த நிகழ்வினைப் பார்க்கும் பொழுது தான் எனக்கு அந்த சந்தேகம் வருகின்றது. ஏன் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கின்றன?. இப்பொழுது இதனைப் பற்றி விரிவாகப் பார்க்க சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

சம்பவம் 1:

நண்பர் ஒருவருக்கு முதுகில் திடீரென்று கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏன் எதனால் அவை வந்தன என்றுத் தெரியவில்லை ஆனால் அவர் என்ன முயன்றும் அவை போன பாடில்லை. இறுதியில் ஒரு தோல் நிபுணரிடம் சென்றுக் காட்டலாம் என்றே முடிவு செய்து நிபுணர் ஒருவரிடம் சென்றுக் காட்டினார். அந்த நிபுணரும் அந்த கரும் புள்ளிகளை ஆராய்ந்து விட்டு 'இது ஒன்றும் இல்லை...சரியாகி விடும்...இந்த களிம்பினை மட்டும் போடுங்கள்' என்றுக் கூறி ஒரு களிம்பினையும் அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவனும் சிறிது நாட்கள் அந்தக் களிம்பினை பயன்படுத்திப் பார்த்தான்...களிம்பு தீர்ந்ததே தவிர அந்தக் கரும் புள்ளிகள் மட்டும் மறையவே இல்லை. மீண்டும் அவன் அந்த நிபுணரிடம் செல்ல இம்முறை வேறு ஒரு களிம்பினைக் கொடுத்து அனுப்பினார் அந்த நிபுணர். களிம்பு மாறியது...ஆனால் விளைவு மாறவே இல்லை. கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருந்தன. என்னடா இது என்று எண்ணியவாறே அவன் வேறொரு மருத்துவரை அணுக, மருந்தாக மற்றுமொரு களிம்பு கிட்டியது. அவ்வளவே... ஆனால் கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டேத் தான் இருந்தன. இந்நிலையில் என்ன செய்வதென்றே தெரியாது அவன் முழித்துக் கொண்டு இருந்த பொழுது தான் அவனுடைய பாட்டியிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைக் கிட்டியது. அப்பொழுது அவனுடைய அந்தக் கரும் புள்ளிகளைப் பற்றி அவனுடைய பாட்டியிடம் அவன் கூற, உடனே அவனது பாட்டி "சில வேப்ப இலைகளை நன்றாக அரைத்து ஒரு பசை மாதிரி செய்து அதனை முதுகில் தேய்த்து வா...கரும் புள்ளிகள் சரியாகி விடும்...வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை" என்றே அறிவுரை வழங்கி இருக்கின்றார். அவனும் அவ்வாறே செய்ய மூன்றே தினங்களில் கரும் புள்ளிகள் மறைந்து விட்டன.


சம்பவம் 2:

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்காக நண்பர்களைக் காணச் சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக தனது வலது நெஞ்சுப் பகுதியில் வாயுத் தொல்லை இருந்துக் கொண்டே இருப்பதாகவும், மருத்துவர்கள் 'அது பலருக்கும் இருப்பது தான்...பிரச்சனை இல்லை' என்றே கூறி அனுப்பியதாகவும் மற்றொரு நண்பரிடம் கூறிக் கொண்டு இருந்தார். அதனைக் கேட்ட அந்த நண்பர் "அட.. இது தான் பிரச்சனையா...ஒரே நிமிசம் பொறு...எங்க அப்பா இத சரி செஞ்சிடுவாரு" என்றுக் கூறி விட்டு அவரின் தந்தையை அழைத்து வரச் சென்றார்.

"டேய்...என்னடா...!!! அவங்க அப்பா விவசாயி தானடா அப்புறம் எப்படிடா அவருக்கு மருத்துவம் தெரியும்?" என்றே நான் கேட்க..."தெரியும் மச்சி... விவசாயி தான் ஆனா வர்மக் கலையும் அவருக்குத் தெரியும்,,,ஏற்கனவே இப்படி பல பேருக்கு அவரு வைத்தியம் பார்த்து இருக்கார்" என்பதே விடையாக வந்தது. 'வர்மம்' என்றச் சொல் காதினில் விழவே ஆர்வமாக அடுத்து நடக்க இருந்த நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் வந்த நண்பரின் தந்தையார் வீட்டுக்கு முன்னர் ஒரு இருக்கையை கிழக்கே பார்க்கும்படி வைத்து விட்டு அந்த உடல் சரி இல்லாத நண்பரை அதிலே அமர வைத்தார். அந்த நண்பரும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது போல் அந்த இருக்கையிலே அமர்ந்து இருக்க மெதுவாக அந்த நண்பரின் கழுத்துப் பகுதியில் அழுத்த ஆரம்பித்தார் அவர். ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை...'அட வர்மம்னா இவ்வளவு தானா' என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே திடீர் என்று நண்பரின் கழுத்துப் பகுதியில் ஓர் இடத்தில அவர் அழுத்தம் கொடுத்து அழுத்த அவ்வளவு தாங்க...'ஒரு நிமிசம் கண்ணு ரெண்டும் உள்ள போயி..கழுத்து தொங்கிடுச்சி....அப்படியே அவன் உடலும் ஒரு உலுக்கு உலுக்க...' பதறித் தான் போனேன் சற்று. ஆனால் அடுத்த நிமிசமே தலையை சற்று அசைத்தவாறு இயல்பான நிலைக்கு அந்த நண்பன் திரும்பி விட்டான்...ஆனால் அவன் கொடுத்த பாவனையை வைத்துப் பார்த்தால் ஏதோ மறு உலகைப் பார்த்து விட்டு வந்தவன் போலவே இருந்தது.

'இனிமே அந்த பிரச்சனை இருக்காது தம்பி...சரி பண்ணியாச்சி' என்றுக் கூறி விட்டு கிளம்ப ஆரம்பித்த அவரிடம் சற்று பேச்சிக் கொடுக்க ஆரம்பிக்க 'அவனின் இரத்தக் குழாயில் காற்று சிறிது இருந்தது என்றும், அதனால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயினை சிறிது நேரம் அடைத்துவிட்டு காற்றினை வெளியே எடுத்ததாகவும்...மூளைக்கு சென்ற இரத்த ஓட்டத்தினை அடைத்ததினால் தான் மூளைக்கு இரத்தம் செல்லாமல் அவனின் உடல் சற்று உலுக்கியதாக்கவுமே' அவர் கூறினார்...மேலும் இது ஆபத்தான வழிமுறை இல்லையா என்றதுக்கு 'இம்முறையினை தெளிவின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது...நன்கு பயிற்சிப் பெற்றவர்களே இதனை செய்ய வேண்டும்... எனக்கு பயிற்சி இருப்பதினால் நான் செய்தேன்...நான் அழுத்திய நரம்பிற்கு பதிலாக வேறு நரம்பினை அழுத்தி இருந்தால் உயிர் போயிருக்கும்... எனவே இம்முறைக்கு பயிற்சியும் கவனமும் மிக முக்கியம்..." என்றுக் கூறிவிட்டு அவர் புகைப் பிடித்துக் கொண்டே சென்று விட்டார்.

சம்பவம் 3:

கைதராபாதினில் நான் பணிக்கு சேர்ந்த புதிதில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம். முதல் முறையாக பணிக்கு சேர்ந்து இரு வாரங்களே ஆகி இருந்தன. புதிய ஊர்...புதிய வகை உணவுகள் என்பதினால் உடல் ஒத்துழைக்காமல் காய்ச்சல் வந்து விட்டது. இருந்தும் அப்பொழுது பணிக்குரிய பயிற்சிகள் ஓடிக்கொண்டு இருந்தமையால் விடுப்பு எடுக்க முடியாத ஒரு நிலையில் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். காய்ச்சல் சற்று அதிகமாக, மதியவேளை உணவினையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ஏற்கனவே குன்றி இருந்த உடல் நலம் மேலும் குன்றலாயிற்று. அந்நிலையில் நிச்சயம் மருத்துவரைப் போய் பார்த்து தான் ஆக வேண்டும் என்ற நிலை வர "புதிய ஊரில்...எவர் எப்படிப்பட்ட மருத்துவர் என்று யாருக்குத் தெரியும்...எனவே பிரச்சனை இல்லாமல் இருக்க பெரிய மருத்துவமனைக்கே செல்லலாம்" என்று 'இமேஜ்' மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர்(அது என்னவோ தெரியலைங்க பெரிய மருத்துவமனைனா நல்ல மருத்துவமனை அப்படினும் சின்ன மருத்துவமனைனா ஏதோ சராசரியா மருத்துவம் பார்க்கும் இடங்கள் அப்படினும் எண்ணங்கள் எப்படியோ நம்மில் பதிந்து தான் விடுகின்றன...). அதுவரை பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து பழக்கம் இல்லை ஆதலால் 'நம்ம ஊர்ல 30 ரூபா வாங்குவாங்க...இங்க மிஞ்சிப் போனா 100 ல இருந்து 150 ரூபாகுள்ளத் தான் வாங்குவாங்க என்று எண்ணியே சென்றேன். ஆனால் என்னுடைய அந்த எண்ணம் எவ்வளவு தவறான எண்ணம் என்று அடுத்த சில நொடிகளில் நான் உணர்ந்துக் கொண்டேன். உள்ள நுழைந்ததும் 'அங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே நமக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும் என்றும் அதற்கு 400 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் கூற வாழ்க்கையிலேயே மருத்துவரைப் பார்க்காமலேயே மருத்துவத்திற்காக 400 ரூபாய் தண்டம் அழுதேன். சரி காச வாங்கிடானுங்க...மருத்துவமாவது ஒழுங்காப் பார்பானுங்க என்று எண்ணிக் கொண்டே மருத்துவரைக் காணச் சென்றேன்(நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் அந்த மருத்துவர் பெயர் என்னுடைய பெயராக இருந்ததே)...!!!

ஆனால் அந்த மருத்துவரும் சாதரணமாக அனைத்து மருத்துவரும் செய்யும் சோதனைகளைச் செய்து விட்டு 'உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் கம்மியான நிலையில் இருக்கின்றது...இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே சேர்ந்து மருத்துவம் பார்த்துக் கொண்டால் தான் நல்லது..." என்றுக் கூற அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது (பேரக் கெடுக்குரானுங்க மை லார்ட்..)..."ஏன்டா...எவனா இருந்தாலும் உடம்பும் சரியில்லாம சாப்பாடும் சாப்பிடாம இருந்தானா அவனுக்கு இரத்த அழுத்தம் கம்மியாத் தான்டா இருக்கும்...அதுக்கு என்னவோ அடுத்த நாளே சாவப் போற மாதிரி ஏத்தி விடுறீங்களேடா" என்று மனதினுள் எண்ணிக் கொண்டு "இல்லைங்க இருக்கட்டும்...மாத்திரை மட்டும் கொடுங்க" என்றுக் கூறி மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்(மாத்திரைக்கு தண்டம் 100 ரூபாய் ...). அதாவது எந்த ஒரு உருப்படியான மருத்துவமும் பார்க்காமல் வெறும் 50 ரூபாய் செலவழித்து இருக்க வேண்டிய இடத்தில நான் செலவழித்த தொகை 500. ஆனால் நான் பரவாஇல்லை....நீண்ட நாட்களுக்கு பின்னர் என்னுடைய தோழி ஒருவர் காய்ச்சலுக்காக அதே மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார்...அவரிடமும் இதேக் கதையினைக் கூறி மருத்துவமனையில் ஒரு நாள் சேரச் சொல்லி இருக்கின்றனர். அவரும் சேர்ந்து இருக்கின்றார். இறுதியில் அவர் கட்டியத் தொகை வெறும் 25000 ரூபாய் மட்டுமே!!! இதில் இருந்து நாம் அந்த மருத்துவமனை உண்மையில் எதன் மேல் அக்கறையோடு இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம் தானே. சரி இருக்கட்டும். இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம்.

மேலே நாம் கண்ட மூன்று சம்பவங்களும் உண்மைச் சம்பவங்களே. வெவ்வேறு சம்பவங்களாக இருப்பீனும் அவைகள் கூறும் செய்திகளை நாம் உற்று நோக்கத்தான் வேண்டி இருக்கின்றது இன்றைய சூழலில்.

முதல் சம்பவத்தில், எளிமையான மருத்துவமுறை நம்மை சுற்றியும் பரவிக் கிடக்கின்றது என்ற விடயம் இருக்கின்றது. வேப்ப மரம் இல்லாத ஊரினை நாம் தனியொரு படை அமைத்துத் தான் தேட வேண்டும் தமிழகத்தில். அவ்வளவு எளிதாக ஒரு மாபெரும் மருத்துவக் களஞ்சியம்/கருவூலம் நம்மிடையே காலம் காலமாக நின்றுக் கொண்டுத் தான் இருக்கின்றது. ஆனால் அதன் பயனைப் பற்றிய அறிவினை மட்டும் நாம் மறைந்துக் கொண்டு இருக்கின்றோம்...அல்லது சிலரால் மறக்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம். வேம்பு தான் என்றில்லை இன்னும் பல அறிய செல்வங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டே இன்று கிடக்கின்றன.
இரண்டாவது சம்பவத்தில், நாம் அழிந்தே விட்டது என்று என்னும் கலைகள் இன்னும் கிராமப் புறங்களில் இன்னும் உயிர் கொண்டு இருப்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. ஆனால் அவை அழிந்துக் கொண்டு வருகின்றன...வேகமாக!!! வர்மத்தின் சில கூறுகளை நண்பனின் தந்தை அவர்கள் அறிந்து வைத்து இருக்கின்றார். ஆனால் என்னுடைய நண்பனுக்கோ அதனைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஆவல் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. மேலும் அத்தகைய கலைகளுக்கு மிக முக்கியம் முறையான பயிற்சியும் மேற்பார்வையும் கவனமுமே...அவை மூன்றும் இருந்தால் தான் அந்தக் கலை முறையாக வளரும்....காரணம் அவை நுண்ணியக் கலைகள்.

மூன்றாவது சம்பவத்தில் நாம் நம்முடைய நாட்டில் இன்று இருக்கும் மருத்துவர்களின் நிலையையும் மருத்துவமனைகளின் நிலையையுமே காணுகின்றோம். அனைத்தும் வியாபார நிறுவனங்களாக மாறி நீண்ட காலம் ஆகின்றன. அவற்றின் ஒரே குறி பணம்....பணம் மட்டுமே. உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் காசாக்கும் ஒரு மனிதாபிமானம் இல்லாத இயந்தரங்களாகி விட்டனர் அங்கே அனைவரும். அட உண்மைதாங்க, நாம் நேசிக்கும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் அந்நிலையில் 'அவரைக் காப்பாற்ற முடியாது என்று நன்கு அறிந்த நிலையிலும்' மருத்துவர்கள் "ஒரு 10 சதவீத வாய்ப்பு இருக்குங்க ஆனால் ரொம்ப செலவாகும்" என்றுக் கூறி விட்டால் நம்முடைய மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா அல்லது "ரொம்ப செலவாகும்" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா?


மனம் உள்ளவர்களின் மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற ஒன்றையே பிடித்துக் கொண்டு எதிர்பார்க்க ஆரம்பித்து விடும்....அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் பரவாஇல்லை "வாய்ப்பு இருக்கின்றது என்றுக் கூறிவிட்டார்கள்" என்றே ஒருவர் காத்து இருக்க ஆரம்பித்து விடுவார் (10 சதவீத வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியதற்காக 20 லட்சம் கடன்பட்டு நிற்பவர்களின் கதையினை நான் அறிந்து இருக்கின்றேன்). அவரின் அத்தகைய உன்னதமான உணர்ச்சியையும் நம்பிக்கையையும் வெறும் காசுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டத்தினையே இன்றைய மருத்துவ உலகில் நாம் பார்க்க முடிகின்றது. ஒன்று உணர்ச்சிகளின் மூலம் பணம் பார்கின்றது...இல்லையெனில் பயத்தின் மூலம் பணம் பார்கின்றது....இதுவே இன்றைய ஆங்கில மருத்துவ உலகின் கொள்கை..வழி எவ்வழியாக இருந்தாலும் பரவாஇல்லை...பணம் வந்தாக வேண்டும். அவ்வளவே அவைகளின் நீதி...அவ்வளவே அவற்றின் எண்ணம்!!! நிற்க.


 
சில வைத்திய முறைகள் செலவே இன்றி மேலும் பக்க விளைவுகள் ஏதுமின்றி எளிதான வகையில் இருக்கின்றன...ஆனால் அவை எல்லாம் மக்களின் மத்தியில் பரவலாக அறியப்பெறாமல் இருக்கின்றன...இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால் அவை அழிந்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றிக்கு பதிலாய் மிகுந்த செலவுகளும் எதிர்பாராத பக்க விளைவுகளும் கிட்டப்பெரும் மருத்தவ முறைகள் பரவலாகப் பரவி இருக்கின்றன...அம்முறைகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் மழையில் தோன்றியக் காளான்கள் போல் அங்கங்கே முளைத்த வண்ணம் இருக்கின்றன. இன்று மருத்தவம் என்றாலே ஆங்கில மருத்துவம் தான் என்ற நிலை.

இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது....ஒரு வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு வைத்திய முறையோ செழித்து வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஏன் நிலைமை இவ்வாறு இருக்கின்றது என்பதனை அறிய நாம் இந்தக் கேள்விக்கு விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது...நம்முடைய வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருப்பதால் ஆங்கில வைத்திய முறை வளருகின்றதா...அல்லது நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு வளருகின்றதா?..இக்கேள்விக்கு நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு தான் ஆங்கில வைத்திய முறை வளருகின்றது என்பதே பதிலாக வரும்.

அது எவ்வாறு அழிக்கின்றது...அதனை தடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை அடுத்தப் பதிவில் காணலாம்...!!!

ஞாயிறு, 6 நவம்பர், 2011

பொது மருத்துவம் - 1

வலி…!!!

திடீரென்று பயங்கர வலி…!!!

உணவருந்திக் கொண்டு இருந்த ராகுல் உண்ண முடியாமல் தவித்தான்.

அதுவரை நன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பன் திடீரென்று நிறுத்தியதைக் கண்ட செல்வனும் உண்பதை நிறுத்தினான்.

“என்னடா ஆச்சி… ஏன் திடீர்னு ஒரு மாதிரி இருக்க?” என்றான் செல்வன்.

“என்னனு தெரியலடா… திடீர்னு சாப்பிடும் போது மட்டும் இடுப்புப் பக்கம் வலிக்குது… வலி பயங்கரமா இருக்குடா” என்று வலியுடனே பதில் அளித்தான் ராகுல்.

“இடுப்புப் பக்கமா?… எந்த இடத்திலேனு சரியா சொல்லு” என்றான் செல்வன் சற்று யோசித்தவாறே.

“இங்கடா..” என்று கூறியவாறே ராகுல் காட்டிய இடம் அவனின் சிறுநீரகம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்தது.

செல்வன் மேலும் யோசித்தான்… பின்னர் “சரி இது ஒண்ணும் பெருசா இருக்காது… நீ போயி எதுக்கும் நம்ம அலுவலகத்துல இருக்குற மருத்துவரைப் போய் பார்த்திட்டு வந்துடு” என்றுக் கூறிவிட்டு தனது உணவைத் தொடர்ந்தான்.

ராகுலும் செல்வனின் சொற்படியே சென்று மருத்துவரைச் சந்தித்தான். சில சோதனைகளும் கூடவே சில மணி நேரங்களும் கடந்தப் பின்பு அவன் வலியின் காரணம் அவனுக்கு தெரிய வந்தது.
வலிக்கு காரணம் சிறுநீரகத்தில் கல்(Kidney Stone)!!!

இதை செல்வனிடம் அவன் தெரிவித்தபோது அந்தச் செய்தியினை முன்னரே எதிர்ப்பார்த்து இருந்த மாதிரி தலையினை அசைத்து “நினைத்தேன்…!!!” என்றான் செல்வன்.

“என்னடா சொல்ற… இது கல்லாதான் இருக்கும்னு நெனச்சியா… எப்படிடா?” என்றான் ராகுல் ஆச்சர்யத்துடன்.

“சிறுநீரகக் கல்லைப் பற்றி எனக்கு கொஞ்சம் முன்னாடியே தெரியும்… நீ சொன்ன அறிகுறியும் அதுக்குரிய அறிகுறி மாதிரியே இருந்துச்சி… அதான் இது சிறுநீரக் கல்லா இருக்கலாம்னு நெனச்சேன்..” என்றான் செல்வன்.

“உனக்கு இதப் பத்தி தெரியுமா.. அப்படினா சொல்றா மச்சான்… இது ஒண்ணும் ஆபத்தானது இல்லைலே… சரியாயிடும்லே… சொல்றா” என்றான் ராகுல் சிறிது பயத்துடன்.

“ம்ம்ம்ம்…. சொல்றேன் கேள்…” என்று தொடங்கினான் செல்வன்.

சிறுநீரகக் கல்:

ஒருக் குடத்தினில் உப்புத் தண்ணீரை பிடித்து வைத்து கொள்ளுங்கள். பின்னர், அதை நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தாமலேயே விட்டு விடுங்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்த நீரினை கீழே ஊற்றி விட்டு, அந்தக் குடத்தினைப் பாருங்கள். குடம் முன்னர் இருந்த நிலையிலேயேவா இருக்கும்???

இல்லை… குடத்தில் உப்பு படிந்து ஒரு கடின படிவநிலையாக உருவாகி இருக்கும். அந்த நிலையைக் கரைத்து குடத்தினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது சற்று கடினமான காரியம் தான்… ஆனால் முடியாதது அல்ல!!!

அதேப் போலத்தான் நம் சிறுநீரகமும். சிறுநீரகம் இரத்தத்தினை சுத்தப்படுத்தவும் கழிவுகளை அகற்றவும் செய்கின்றது. இந்தப் பணிக்கு அதற்கு இன்றியமையாதத் தேவை தொடர்ச்சியான நீரோட்டம் தான். அந்த நீரோட்டம் நின்று விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ அதன் பாடு திண்டாட்டம் தான்.

ஏனெனில், சிறுநீரகத்தில் இருக்கும் தண்ணீரில் தாதுப் பொருட்கள் உள்ளன. தேவை இல்லாத தாதுப் பொருட்கள் கழிவுகளாய் வெளி ஏற்றப்படுகின்றன. தேவை உள்ள தாதுப் பொருட்கள் இரத்தத்தின் மூலம் உடலுக்கு அளிக்கப் படுகின்றன.

அப்பேர்ப்பட்ட தாதுப் பொருட்கள், தக்க நேரத்தில் வெளி ஏற்றப் படாவிட்டாலோ, அல்லது சுழற்சி முறைக்காக தக்க நேரத்தில் வராவிட்டாலோ, அந்தத் தாதுப் பொருட்கள் கடினமாகி ஒரு படிவமாக உருவாகிவிடும். இதே நிலை தொடர்ந்தால் அந்தப் படிவத்தைக் கரைக்கும் தன்மையை அல்லது வலிமையினை சிறுநீரகம் இழந்து விடும். அந்தப் படிவமும் வலிமையான ஒன்றாக நிலைப் பெற்றுவிடும். அந்தப் படிவமே கல். சிறுநீரகத்தினில் அது உருவாவதால் அது சிறு நீரகக் கல்.

தண்ணீர்க் குடம் — > சிறுநீரகம்.
உப்புத் தண்ணீர் — > தாதுக்கள் கலந்த நீர்.
உப்புப் படிவம் — > சிறுநீரகக் கல்.

சரி இந்த கல் நம்முடைய உடம்பினில் உருவாகாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்???

பெரிதாய் ஒன்றும் இல்லை… நேரத்திற்கு தண்ணீர் குடியுங்கள்… அதிகமாக குடியுங்கள். அது போதும்!!! தேநீர் குடிப்பதினை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.உடம்பின் நீர் சுழற்சியினை சீராக வைத்துக் கொள்ளுங்கள்…!!! கல் உருவாக வாய்ப்பே இருக்காது.

சரி… கல் உருவாகிவிட்டது… இப்பொழுது என்ன செய்ய வேண்டும்…???

இப்பொழுதும் தண்ணீர் குடியுங்கள். அதிகமாக குடியுங்கள்… உருவாகிய கல்லினை அது கரைத்து விடும். அதற்கு என்ன, அது தான் உலகக் கரைப்பான் (universal solvent …  எப்படி எங்க மொழியாக்கம் !!!) ஆயிற்றே…

கூடுதலாக வாழைத் தண்டினை நன்றாக அரைத்து உண்டால், அது அந்தக் கல்லினைக் கரைத்து விடும். (பாட்டி மற்றும் சித்த மருத்துவ வழி). அவ்வளவே…!!! சரியான உணவுப் பக்குவம்… தண்ணீர் குடிக்கும் பழக்கம்… இவை இருந்தால் போதும்… கல் அதுவாய் கரையும்!!! மேலும் நீர் அதிகமாக பருகுவது உடலிற்கு எல்லாவிதத்திலும் நல்லது.

நண்பர்களே இந்தப் பேரண்டமே 75% நீர் இருப்பதினால் தான் இயங்குகின்றது என்றால்… நம்முடைய சிறிய உடல் இயங்க நீர் அவசியம் தானே.!!!

பி.கு:

இந்தப் பதிவு மென்பொறியாளர்களுக்கான ஒரு முக்கியப் பதிவு. எங்கோ விரைந்துக் கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் எதைத் தேடி அலைகிறோம் என்றுத் தெரியாமல் உடலினைத் தொலைத்துக் கொண்டு ஓடும் பலர் இங்கேத் தான் இருக்கின்றனர். ஏன்… நானும் அவர்களுள் ஒருவனே!!!

“உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேன்..” என்று உடலின்

முக்கியத்துவத்தினைக் கூறிச் சென்றுவிட்டார் திருமூலர்.
ஆனால் இன்றோ “உடல் தொலைத்தேன்… பணம் வளர்த்தேன்” என்றுக் கூறும் சமூகத்தினர் கூடி விட்டனர். எனவே நோய்களும் தான்.
அப்படிப்பட்ட நோய்களையும் வலிகளையும், அதற்குரிய நிவாரண வழிகளையும் பற்றி என்னால் இயன்ற அளவு மக்களுக்குத் தெரிவிக்கலாமே என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு. இந்தப் பதிவு ஒரு கையேடு… அவ்வளவே!!!
வாருங்கள் ‘உடல் வளர்ப்போம்… உயிர் வளர்ப்போம்…!!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...