கடந்த சில பதிவுகளில் செல்வத்தைக் குறித்து இயேசு என்ன கூறி இருக்கின்றார் என்றே கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது அவர் மிகத்தெளிவாக செல்வத்தைப் பற்றி கூறி இருக்கக்கூடிய ஒரு விடயத்தைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

'செல்வந்தன் எவனும் என்னிடத்தில் வாரான்' என்று இயேசு தெள்ளத்தெளிவாக கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார். அதாவது செல்வத்திற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, எனவே நீ செல்வந்தனாக இருந்தாய் என்றால் உனக்கும் எனக்கும் சம்பந்தமே இருக்கப் போவதில்லை என்று பொருள் படுமாறே இயேசு அவ்வாறு கூறி இருக்கின்றார். இதனை எத்தனை கிருத்துவ திருச்சபைகள் இன்று போதித்துக் கொண்டிருக்கின்ற என்று எனக்குத் தெரியவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் ஒருவனை செல்வந்தன் என்று எவ்வாறு கூறுவது?

ஒருவன் தன்னிடம் இரண்டே இரண்டு சட்டைகள் மட்டும் வைத்து இருக்கின்றான். மற்றொருவனோ ஒரே ஒரு சட்டையினை மட்டுமே வைத்து இருக்கின்றான். இன்னொருவனிடம் ஒரு சட்டை கூட கிடையாது. இப்பொழுது இவர்களை நாம் கண்டோம் என்றால்...ஒரு சட்டை மட்டும் வைத்திருப்பவனுக்கு இரண்டு சட்டைகள் வைத்திருப்பவன் செல்வந்தன். ஒரு சட்டையுமே இல்லாமல் இருப்பவனுக்கு சட்டை வைத்திருப்பவர்கள் இருவருமே செல்வந்தர்கள். இந்நிலையில் செல்வந்தன் எவனுமே இறைவனிடம் செல்ல முடியாது என்றால், சட்டை இல்லாத மனிதன் மட்டும் தான் இறைவனிடம் செல்ல முடியுமா என்ன? ஒரே ஒரு சட்டையை மட்டும் தன்னிடம் வைத்திருந்த காரணத்திற்காக ஒருவன் பணக்காரனாக கருதப்படுவது சரியானதாக இருக்குமா? என்பன போன்ற கேள்விகள் இங்கே நிச்சயமாக எழத் தான் செய்யும். இந்த கேள்விகளுக்கு நாம் விடையினைக் காண இயேசு கூறிய வேறு இரண்டு வசனங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

  • ஒன்று ஒருவன் செல்வத்திற்கு சேவை செய்து கொண்டிருக்க வேண்டும்...அல்லது இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருக்க வேண்டும்..இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒருவனால் சேவை செய்ய முடியாது.
  • உலகியல் பொருட்களை வைத்து நண்பர்களை சம்பாதியுங்கள் (உக்கிராணி கதை)

இப்பொழுது நாம் மேலே கண்ட அந்த மூன்று மனிதர்களையே மீண்டும் காண வேண்டி இருக்கின்றது.

ஆடைகள் ஏதுமற்றவன் ஒரு பரிதாபகரமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றான் என்றே வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு ஆடையை வைத்திருப்பவனோ இரண்டு ஆடைகளை வைத்திருப்பவனைக் கண்டு பொறாமை அடைந்து மேலும் ஆடைகளை தான் வாங்க வேண்டும் என்றே எண்ணுகின்றான் என்றும் இரண்டு ஆடைகளை உடையவனோ, ஆடைகள் ஏதுமற்ற அந்த மனிதனைக் கண்டு இரக்கம் கொண்டு தன்னிடம் கூடுதலாக இருக்கின்ற ஒரு ஆடையை அந்த மனிதனிடம் தர வேண்டும் என்று எண்ணுகின்றான் என்றும் வைத்துக் கொள்வோம்.

அந்நிலையில், இங்கே ஒருவனுடைய மனதில் பொறாமையானது இருக்கின்றது...அவன் மேலும் மேலும் பொருளினைச் சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தினைக் கொண்டிருக்கின்றான். மற்றொருவன் மனதிலோ அன்பானது இருக்கின்றது...அவன் மற்றொருவன் துயரப்படுவதனைக் கண்டு வருந்தி அவனுக்கு தன்னால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும் என்றே எண்ணுகின்றான். இந்த எண்ணங்கள் தான் அவர்களை வேறுபடுத்துகின்றன. ஒருவன் செல்வத்தைத் தேடுகின்றான்...மற்றொருவனோ தன்னிடம் இருக்கின்ற செல்வத்தினைக் கொண்டு மற்ற மனிதர்களுக்கு உதவி செய்ய எண்ணுகின்றான். அவர்களின் அந்த சிந்தனையினை இயேசு கூறிய மற்ற இரு வசனங்களின் அடிப்படையில் கண்டோமே என்றால்,

ஒரே ஒரு ஆடையினை தன்னிடம் வைத்திருந்தாலும் அவன் செல்வந்தனாக இறைவனால் கருதப்படுகின்றான். காரணம் அவன் செல்வத்தையே தேடுகின்றான். அதே சமயம், இரண்டு ஆடைகள் வைத்திருந்தவனோ செல்வந்தனாக கருதப்படுவதில்லை...காரணம், அவன் அவனுடைய செல்வத்தை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துகின்றான். நிற்க

இறைவன் மனிதர்களின் மனதினையே காணுகின்றார். எவனுடைய இதயத்தில் அன்பானது இருக்கின்றதோ அவனால், அவனைச் சுற்றி பலர் வாடிக் கொண்டிருக்கும் பொழுது, சுயநலத்துடன் தன்னை மட்டும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. அன்பானது அவனை அவ்வாறு சுயநலத்துடன் இருக்க விடாது. அன்பே இறைவன் என்ற கூற்றினையும் நாம் இங்கே கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம், எவனுடைய மனதில் சுயநலமானது இருக்கின்றதோ, அவனால் மற்றவர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. அவன் தன்னைப்பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பான். எனவே ஒருவனது மனதில் இருக்கின்ற எண்ணங்களையும் செயல்களையும் வைத்துத் தான் ஒருவன் செல்வந்தனா இல்லையா என்பதனை இறைவன் முடிவு செய்கின்றார். எவரெல்லாம் மனதளவில் செல்வங்களை நாடுகின்றாரோ அவர் எல்லாம் இறைவனின் பார்வைக்கு செல்வந்தர்களாக காட்சியளிக்கின்றார்கள். அவர்கள் இறைவனை அடைவதில்லை.

உண்மையான அன்பானது எப்பொழுதும் பிறருக்காகவே இருக்கும். இறைவனின் குழந்தைகளும் அவ்வாறே தான் இருப்பார்கள். அவர்களால் வேறு எப்படியும் இருக்க முடியாது.

உதாரணமாக, டால்ஸ்டாய் அவர்கள் பிறவிப் பணக்காரர். மாபெரும் பணக்காரர். அப்படிப்பட்ட அவர் எப்பொழுது இறைவனை உணர்ந்து வாழ்வென்றால் என்னவென்பதை அறிந்தாரோ, அப்பொழுது அவரின் செயல்கள் மாறின. அவரிடம் பணம் இருந்தது ஆனால் அவர் பணக்காரராக இருக்கவில்லை. அவருடைய நூல்கள் பொதுவுடைமையாக்கப்பட்டன. அவருடைய தோட்டமானது அனைத்து மக்களும் ஒற்றுமையாக வேறுபாடுகளின்றி வாழும் வண்ணம் அனைவருக்கும் உரிய இடமானது. அவர் விவசாயியின் வாழ்வினை வாழத் துவங்கினார். அவருடைய செல்வம் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டது. கட்டாய இராணுவச் சேர்க்கை என்ற கொள்கையின் அடிப்படையில் இரசிய அரசானது இராணுவத்தில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக சில காலம் பணி புரிய வேண்டும் என்று கட்டளையிட்ட பொழுது,  'துக்கோபோர்' எனப்பட்ட கிருத்துவ மக்கள், இயேசுவின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தங்களால் இராணுவத்தில் சேர முடியாது என்று இரசிய அரசாங்கத்தின் கோரிக்கையினை மறுத்தனர். அதனால் ஆத்திரப்பட்ட இரசிய அரசாங்கமானது அந்த மக்களை தண்டிப்பதற்காக செயல்படும் முன், தன்னுடைய செல்வத்தினைச் செலவழித்து அந்த மக்களை பத்திரமாக கனடா நாட்டிற்கு அனுப்பி வைத்தவர் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயிடம் பணம் இருந்ததா...ஆம்!!!
டால்ஸ்டாய் பணக்காரரா...இல்லை!!!

காரணம் அவருடைய நோக்கம் செல்வம் சேர்ப்பதாக இல்லை. அவருடைய செல்வத்தினைக் கொண்டு எவ்வாறு மக்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ வழி செய்வது என்றே அவர் இருந்தார்.

அந்த எண்ண ஓட்டத்தினைத் தான் இறைவன் கவனிக்கின்றார். மற்றவர்களுக்காக உதவ வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டிருப்பவன் எப்பொழுதும் இறைவனுடன் இருக்கின்றான். ஆனால், எவன் ஒருவன் செல்வத்தை மட்டும் தேடுகின்றானோ, அவன் இறைவனைத் தேடுவதில்லை. இறைவனை அவன் அடைவதும் இல்லை. இதனையே தான் இயேசு அவர்கள் மிகவும் தெளிவாக கூறி இருக்கின்றார். இதனை கிருத்துவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொண்டு இந்த உலகமானது நல்லதொரு உலகமாக மாறிட அவர்களது கடமையை அவர்கள் செய்ய வேண்டும்.

தொடர்புடைய இடுகைகள்:

இராயனுக்கு உரியதை - 1
இராயனுக்கு உரியதை - 2
உக்கிராணி கதை - 1
உக்கிராணி கதை - 2

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு