என் கடவுள்...உன் கடவுள்...நம் கடவுள்:

முன்னொரு காலத்தில் எகிப்து நாட்டில் ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவனுக்கு கணிதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் பொருள் இன்மையாலும், தகுந்த ஆசிரியர் கிட்டாமையாலும் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்தது. அவனும் கணிதம் கற்றுக் கொள்ளும் தருணத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டே நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அந்த சமயத்தில் தான் அவர்களின் ஊருக்கு படித்த அறிஞர்கள் ரோமில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வந்து இருக்கும் செய்தியை அவன் கேள்விப்பட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான். அவன் மிகவும் எதிர்பார்த்த தரும் இதோ அவன் அருகே வந்து உள்ளது. நிச்சயம் அந்த அறிஞர்களிடம் போனால் அவர்கள் தனக்கு கணிதம் கற்றுத் தருவார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் அந்த அறிஞர்களிடம் சென்று தனது ஆசையை சொல்லுகின்றான். அவர்களும் அவனது ஆவலைக் கண்டு அவனுக்கு கற்றுத் தர சரி என்கின்றனர்.

முதலில் ரோம் நாட்டு அறிஞர் தான் கற்றுத் தருவதாக கூறி ஆரம்பிக்கின்றார்.
"முதலில் நாம் எண்களில் இருந்து தொடங்குவோம் சிறுவனே!" என்றுக் கூறி அவரிடம் இருந்த எழுத்துப் பலகையில் எதையோ எழுதிவிட்டு அவனிடம் அதைக் கொடுத்தார்.
"இதோ இந்த பலகையில் முதல் ஐந்து எண்களை எழுதி இருக்கின்றேன். இதை நீ படித்து முடித்த பின்னர் நாம் அடுத்த எண்களுக்கு போகலாம்" என்றார் அந்த ரோம் நாட்டு அறிஞர்.

ஆனால் ஆவலுடன் அந்த எழுத்துப் பலகையை வாங்கிப் பார்த்த சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. அங்கே அவனுக்கு புரியாத மாதிரி சில குறியீடுகள் இடப்பட்டு இருந்தன.

I,II,III,IV,V.

அவன் அவனது நண்பர்களில் கணித புத்தகங்களில் சில எண்களைப் கண்டு இருக்கின்றான். ஆனால் அவன் அந்த பலகையில் கண்ட எதுவுமே அவன் முன்னர் கண்டு இருந்த எண்களைப் போல இல்லை.

அவன் ஏமாற்றத்துடன் "மதிப்பிற்குரிய ஐயா! என்னை மன்னியுங்கள். நான் சில எண்களை ஏற்கனவே படித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் எதுவும் நீங்கள் எழுதி இருப்பதை போன்று இல்லை. அவை வேறுத் தோற்றம் உடையவை. தயவு செய்து எனக்கு ஏன் இவைகள் மாறுபடுகின்றன என்று கூறுகின்றீர்களா?" என்று கூறி விட்டு அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட அந்த ரோம் அறிஞர் மிகுந்த சினமுற்று "உனக்கு எண்கள் தெரியவில்லை. ஏனெனில் உனக்கு படித்த அறிவில்லை" என்று கூறி விட்டு அந்த பலகையை இந்திய அறிஞரிடம் கொடுத்தார்.

இந்திய அறிஞர் அந்த பலகையை கண்ட உடன் சிரித்தார். "சிறுவனே நீ சொல்லுவது சரிதான். இதில் எழுதி இருக்கும் எண்கள் தவறானவை தான். இரு நான் உனக்கு சொல்லித் தருகின்றேன்" என்று கூறி விட்டு அந்த எழுத்துப் பலகையில் இருந்த எண்களை அழித்து விட்டு வேறு எதையோ எழுதி விட்டு அவனிடம் அந்த பலகையை கொடுத்தார்.

"இதோ இவை தான் சரியான எண்கள். இவற்றை நீ படித்த பின்னர் நாம் மற்ற எண்களுக்கு போகலாம்" என்றார்.

அந்தச் சிறுவனும் ஆவலுடன் அந்தப் பலகையை வாங்கிப் பார்த்தான். ஆனால் இம்முறையும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இம்முறையும் அந்த குறியீடுகள் அவன் முன்னர் கண்டு இராதவாறே இருந்தன.
1,2,3,4,5.

"ஐயா! மீண்டும் என்னை மன்னியுங்கள். இந்த குறியீடுகளையும் நான் இதற்கு முன் என் நாட்டினில் நான் கண்டதில்லை. வேறு ஏதாவது எண்கள் இருக்கின்றனவா?" என்று கூறி அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட அந்த இந்திய அறிஞரும் கோபம் அடைந்து "உனக்கு கணக்கு தெரியவில்லை. நான் எழுதி இருப்பதே உண்மையான கணக்கு! கற்க வேண்டும் என்றால் இவற்றைக் கற்றுக் கொள்" என்றார்.

அப்பொழுது  அந்த ரோம் நாட்டு அறிஞர் " அவனுக்கு கணக்கு தெரியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன். ஆனால் உமது கணக்கு தான் சரியான கணக்கு என்பதை நான் ஒரு காலும் ஒப்புக் கொள்ள முடியாது. நீரும் அந்த சிறுவனைப் போலவே தவறான கணக்கை கற்று வைத்து உள்ளீர். எனது கணக்கே சரியான கணக்கு" என்று இந்திய நாட்டு அறிஞருடன் வாக்குவாதத்தை ஆரம்பித்தார்.

மிகு விரைவில் அவர்கள் இருவரும் காரசாரமாக சண்டை இட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். அதை கண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் தான் இது வரை கற்று இருந்த கணக்கு தவறானதோ என்ற எண்ணத்தாலும் மனம் உடைந்து போய் அந்தச் சிறுவன் ஒரு ஓரமாய் நின்று அவர்களை சோகமாய் கண்டு கொண்டு இருந்தான்.

அந்தச்  சமயம் தான் அந்த சாது அங்கு வந்து சேர்ந்தார். இரு அறிஞர்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு சிறுவனோ சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றான். ஏதோ பிரச்சனை என்பதை அறிந்த அவர்
"ஏன் குழந்தாய் சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றாய். என்ன நடந்தது" என்று பாசத்துடன் அந்த சிறுவனிடம் விசாரித்தார்.
நடந்த அனைத்தையும் அவன் அவரிடம் எடுத்து உரைக்க அவர் சிரித்தார்.

பின்னர் " அறிஞர்களே சண்டை இட்டது போதும். தீர்வுக் காணும் நேரம் வந்து விட்டது" என்றுக் கூறியவாறே அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

அவர்கள் அந்த சாதுவைக் கண்டு சண்டை இடுவதை நிறுத்தி விட்டு அவரின் அருகே வந்த உடன் தொலைவில் ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்களை வைத்து விட்டு அவர் அவர்களை நோக்கி " அறிஞர்களே அதோ அந்த கூடையில் உள்ள பழங்களில் இருந்து ஒவ்வொருவரும் இரண்டு பழங்களைக் எடுத்து வாருங்கள்" என்றார்.
அவர்களும் அவர் சொன்ன மாதிரியே சென்று இரண்டுப் பழங்களை எடுத்து வந்தனர்.
அப்புறம் அவர் அந்த சிறுவனை நோக்கி" சிறுவனே! நீயும் போய் அந்த கூடையில் இருந்து இரண்டு பழங்களை எடுத்து வா பார்போம்" என்றார்.
அவனும் அவர் சொன்ன மாதிரியே இரண்டு பழங்களை எடுத்து வந்தான்.
சாது சிரித்தார்.
"அறிஞர்களே!!! சற்று நேரம் வரை தனது கணக்குத் தான் சரியானது. அடுத்தவரின் கணக்கு தவறானது என்று சண்டை இட்டுக் கொண்டு இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நான் இரண்டு பழங்கள் என்று கூறிய பொழுது அனைவரும் சரியாக இரண்டு பழங்களையே எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றீர். இப்பொழுது சொல்லுங்கள், யார் கணக்கு சரியானது?" என்றார்.
அறிஞர்கள் முழித்தார்கள்.
"நீங்கள் அனைவரும் கற்றக் கணக்கு சரிதான். உங்கள் ஊருக்கு ஏற்றார்ப் போல் வார்த்தைகளில் கணக்கைக் கற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் வார்த்தைகளை மட்டுமே கற்றுக் கொண்டு விட்டது தான் தவறாகி போய் விட்டது. வார்த்தைகளை தாண்டி நிற்கும் பொருளினை நீங்கள் மறந்து விட்டர்கள். எப்பொழுது நீங்கள் பொருளினை மட்டும் பார்க்க ஆரம்பிக்கின்றீர்களோ அப்பொழுது தான் நீங்கள் உண்மையிலையே அறிஞர்கள் ஆவீர்கள். அறிந்து கொள்ளுங்கள் மனிதர்களே... கற்றது கை அளவு .. கல்லாதது உலகளவு!!!" என்று கூறி விட்டு அந்த சிறுவனை நோக்கித் திரும்பினார்.
"சிறுவனே நீ என்னுடன் வா. நான் உனக்கு கற்றுத் தருகின்றேன். இவர்கள் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது." என்று கூறி விட்டு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"அவர்கள் இன்னும் கற்க வேண்டி இருக்கின்றதா?" என்று ஆச்சர்யத்துடன் ஆரம்பித்தான் அந்த சிறுவன்.
"ஆம்! அவர்கள் ஓரளவு கற்றதுமே அவர்கள் கற்றது தான் எல்லை. அதைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற அகந்தையுள் மாட்டிக் கொள்ளுகின்றனர். அந்த அகந்தை இருக்கும் வரை அவர்கள் கற்ற உண்மையான பொருளை அவர்கள் அறிய முடியாது. அந்த அகந்தை வட்டத்தை அவர்கள் எப்பொழுது உடைக்க கற்றுக் கொள்ளுகின்றார்களோ அப்பொழுது தான் அவர்கள் பிறருக்கு கற்றுத் தர தயாராவார்கள். இந்த அறிஞர்கள் இன்னும் தயாராக வில்லை." என்று கூறி விட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அந்த சிறுவனும் அவரைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தான்.

இதைப் போன்றே மதங்களும் சரியாக அறியப்படாமல், என் மதம் பெரியது... என் மதம் தான் கடவுளை அடையும் வழி என்று வெறும் வார்த்தைகளாக அறிந்துக் கொள்ளப் பட்டமையால் பல சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அடிக்கோல் இட்டுக் கொண்டு இருக்கின்றன.


அவனை வார்த்தைகளால் அறிய முயலும் மதங்கள் வெறும் மதங்களாய் தேங்கி நின்று விடுகின்றன. இறைவனை வெறும் வார்த்தைகளால் அறிய முடியாது, உணர மட்டுமே முடியும். உணர்தல் அன்பினாலையே முடியும். அன்பே அவனை அடையும் வழி என்பதினை உணர்த்தும் மதங்கள் அவனை அடையும்  வழியின் வாயில்கதவாய் நிற்கின்றன. உலகின் அனைத்து மதங்களையும் ஒழுங்காக புரிந்துக் கொண்டோம் எனில் அனைத்தும் ஒரே வழியைத் தான் காட்டுகின்றன என்பதினை அறிவோம்.

தயவு செய்து வார்த்தைகளில் இறைவனை தேட வேண்டாம். அவன் தென் பட மாட்டான்.
வார்த்தைகளைக் கடந்து பொருள் நிற்பதுப் போல, மதங்களைக் கடந்து இறைவன் நின்று கொண்டு இருக்கின்றான்.
வாழ்வின் பொருளாய்.!!!
பரம் பொருளாய்!!!

அதை உணர்ந்துக் கொள்வோம். அப்படியே அவனையும் அன்பினால் அறிந்து கொள்வோம்!


அன்பே இறைவன்!!!  

மைதானத்தில் தேவதைகள் : (Angels in the outfield )


உங்கள் வாழ்வில் நீங்கள் விளக்கம் அளிக்க முடியாதவாறு சில சம்பவங்கள் நடந்து இருக்கின்றனவா?. நீங்கள் மிகவும் வேண்டிய ஒன்று நீங்கள் எதிர்பாராத வண்ணம் நிறைவேறுவதை கண்டு இருக்கின்றீர்களா? ஒரு சிறுவனின் வேண்டுதலால் ஏற்படும் அப்படிப்பட்ட சில சம்பவங்கள் ஒரு சிலரின் வாழ்வை எப்படி மாற்றுகின்றன என்பதே 1994ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் கதை.

குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு சிறுவர்கள். அவர்கள் உயிருக்கு உயிராய் நேசிக்கும் அவர்கள் ஊரின் மட்டைப் பந்து (baseball) அணி. தோற்றுக் கொண்டே இருக்கும் அந்த அணியின் பயிற்சியாளராய் விளங்கும் காயத்தால் ஓய்வு பெற்ற முன்னாள் பிரபல மட்டைப்பந்து வீரர். சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை உலகின் சிறந்த அணிகளில் தலை சிறந்த பந்து வீச்சாளராக இருந்துவிட்டு காயம் காரணமாக பந்தை வீச முடியாமல் தனது விளையாட்டுக் காலத்தின் கடைசி நாட்களை அந்த அணியில் இருந்து விளையாட முடியாமலே எண்ணிக் கொண்டு இருக்கும் ஒரு வீரர். வெற்றியேப் பழக்கப்பட்டு இராத இதர வீரர்கள். அப்புறம் சில தேவதைகள். இவர்கள் தான் இந்தக் கதையின் மாந்தர்கள்.

சிறு வயதிலேயே தனது அன்னையை இழந்த ரோஜெருக்கு ஒரே ஒரு கனவு தான். அவன் அவனது தந்தையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாய் ஒரு குடும்பமாக வாழ வேண்டும். ஆனால் பொறுப்பு இல்லாது ஊர் சுற்றித் திரியும் அவனது தந்தையோ அவனை கவனிக்காது போகவே அரசாங்கம் நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் அவன் சேர்க்கப் படுகின்றான். மிக விரைவில் அதே காப்பகத்தில் இருக்கும் மில்டன் என்றொரு சிறுவனுடைய நட்பினாலும் அந்த காப்பகத்தை நிர்வகிக்கும் மேகி (Megi) என்ற பெண் காட்டும் அன்பினாலும் ரோஜெர் அந்த காப்பகத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றான். இருந்தும் மனதின் ஒரு ஓரத்திலே என்றாவது ஒரு நாள் அவனது தந்தை அவனைக் கூட்டிச் செல்ல வருவார் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொண்டே வருகின்றான். காப்பகத்தில் 'மேகி'க்கி உதவி புரியும் தருணங்கள் தவிர மற்ற நேரம் எல்லாம் ரோஜெரும் மில்டனும் அவர்கள் ஊரின் மைதானத்திலையே பொழுதைக் கழிக்கின்றனர்.
காரணம்...
 ஏன்ஜெல்ஸ் (Angels)!!! அவர்கள் ஊரின் மட்டைப் பந்து அணி. ரோஜெர் மற்றும் மில்டனின் ஒரே லட்சியம் அவர்கள் ஊரின் அணி சில போட்டிகளையாவது வெல்வதைக் காண வேண்டும். கோப்பையை வெல்லா விட்டாலும் பரவாயில்லை, இது எங்கள் அணி.. இதற்குத் தான் நாங்கள் எங்களது ஆதரவை அளிப்போம் என்று ஊர் முழுக்க கனவுகளோடு சுற்றிக் கொண்டு இருக்கின்றனர் அவர்கள் இருவரும்.

ஆனால் ஏன்ஜெல்ஸ் அணியின் நிலைமையோ மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கின்றது. தொடர் தோல்விகள்... திறமை இருந்தும் அதை உணராத வீரர்கள்... இவை அனைத்தின் காரணமாக போட்டித் தொடரில் கடைசி இடம்...போட்டியில் இவர்கள் வெல்ல வேண்டுமானால் எதாவது அதிசயம் தான் நிகழ வேண்டும் என்ற நிலைமை. இயல்பிலையே கோபக்காரராக இருக்கும் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ்க்கு இந்த சூழ்நிலை மிகவும் கோபத்தை உண்டாக்குகின்றது. அந்த கோபத்தை எல்லாம் அந்த அணி வீரர்களிடம் கொட்டித் தீர்க்கிறார்... அதுவும் குறிப்பாக மெல் கிளார்க் என்னும் காயத்தால் அவதிப்படும் ஒரு வீரரின் மேல். காரணம், ஜார்ஜும் காயத்தின் காரணத்தால் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெற்றவர். 'மெல்'லால் விளையாட முடியாது என்று தெரிந்த பின்னும் இன்னும் அவன் ஓய்வு பெறாமல் விளையாட முயற்சி செய்வது அவருக்கு வீணாகத் தெரிகின்றது. இதன் காரணமாகவே 'மெல்'லுக்கு விளையாட வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. இருந்தும் மெல் காத்து இருக்கின்றான் வாய்ப்புகளுக்காக. ஜார்ஜும் காத்து இருக்கின்றார் வெற்றிகளுக்காக.

அந்த சமயத்தில் தான் ரோஜெரின் அப்பா அவனை சந்திக்க அவனது காப்பகத்திற்கு வருகின்றார். தன்னை கூட்டிச் செல்லத் தான் வந்து இருக்கின்றார் என்று நினைத்த ரோஜெருக்கு, அவர் தொலைதூரப் பயணத்திற்கு தனியாய் செல்ல இருப்பதாக சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. "பின்னர் எப்பொழுது என்னை வந்து கூட்டிச் செல்வீர்கள்" என்று அப்பாவியாய் கேட்கும் ரோஜெரிடம் "உனது அணி இந்த கோப்பையை வெல்லும் அன்று நான் உன்னை அழைத்துச் செல்வேன்" என்று விளையாட்டாய் கூறி விட்டு கிளம்புகின்றார் அவனது தந்தை. அவர் சொல்லியதை உண்மை என்று நம்பும் ரோஜெரும் இரவு உறங்கப் போவதற்கு முன் "இறைவா! எனக்கென ஒரு குடும்பம் வேண்டும். அதற்கு எனது அணி வெல்ல வேண்டும். அதற்காக தயவு செய்து உதவி செய்" என்று வேண்டி விட்டுப் படுக்கின்றான்.

அடுத்த நாள், வழக்கம் போல் மண்ணைக் கவ்விக் கொண்டு இருக்கும் தனது வீரர்கள் திடீர் என்று நன்றாக விளையாடுவதைக் கண்டு ஆச்சர்யப்படுகின்றார் ஜார்ஜ். ஏன்! ஒட்டு மொத்த மைதானமே ஆச்சர்யப்படுகின்ற்து. ரோஜெரும் ஆச்சர்யப் படுகின்றான்."ஏன் அந்த தேவதைகள் திடீர் என்று தோன்றி அவனது அணியின் வீரர்களுக்கு உதவுகின்றார்கள்?" என்று. அவன் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு தேவதை அவனது அருகில் தோன்றி அவனின் வேண்டுதலைக் கேட்டு அவனுக்கு உதவி புரிய அவர்கள் வந்து இருப்பதாகவும் அவனின் கண்களைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் அவர்கள் புலப்பட மாட்டார்கள் என்றும் கூறிவிட்டு மறைகின்றது.

தேவதைகளின் உதவியால் அந்த அணியும் தனது முதல் வெற்றியைப் பெறுகின்றது. எப்படி தனது அணியின் வீரர்கள் திடீரென்று மிகவும் திறமையாக விளையாடினார்கள் என்று ஜார்ஜ் குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது ரோஜெர் அவரிடம் தேவதைகளைப் பற்றி சொல்லுகின்றான். முதலில் அதை நம்ப மறுக்கும் ஜார்ஜ், அவரது அணி தொடர்ந்து ஆச்சர்யப் படும் வகையில் வெற்றிகளைக் குவிக்க ரோஜெரை நம்ப ஆரம்பிக்கின்றார். அவரின் அழைப்பின் பெயரிலே அந்த அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் ரோஜெரும் மில்டனும் செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது. "அவர் கோபப்பட்டுக் கத்துவது தேவதைகளுக்கு பிடிக்கவில்லை" என்று ஒரு நாள் ரோஜெர் ஜார்ஜிடம் சொல்ல அவர் அன்றிலிருந்து தனது அணியிடம் கோபம் காட்டுவதை தவிர்த்துவிட்டு பயிற்சியாளராக அன்பைக் காட்ட ஆரம்பிக்கின்றார். அதேப் போல தேவைதைகளின் செயலால் மெல்லுக்கும் விளையாட ஒரு வாய்ப்பு வருகின்றது. அவனுக்கு துணையாய் தேவதைகள் நிற்க அவன் மிகவும் சிறப்பாக விளையாட ,பத்திரிகைகள் அவனை மீண்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன. அந்த அணியின் வீரர்களுக்கு அவர்களுள் ஏதோ நிகழ்வது புரிகின்றது ஆனால் அது என்ன என்று தெரியாது இருக்கின்றனர். இருந்தும் முதல் முறையாக ஒரு அணியாக அவர்கள் உணருகின்றனர்.
தொடர் வெற்றிகளின் மூலமாக அந்த அணி போட்டியில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுகின்றது.

எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டு இருக்கும் பொழுது, அந்த அணியின் வெற்றிகளுக்கு தேவதைகள் காரணம் என்று ஜார்ஜ் நம்புகின்றார் என்ற செய்தி வெளியில் கசிய, "இப்படி முட்டாள் தனமாக இந்த ஆள் நம்பிக் கொண்டு இருகின்றாரே... தேவதைகள் இல்லை என்று சொல்லிவிடு இல்லையெனில் உன்னை வேலையை விட்டு தூக்குவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று அந்த அணியின் நிர்வாகம் சொல்லி விடுகின்றது. அதே சமயத்தில் ரோஜெரின் தந்தை அவருக்கும் அவனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நீதி மன்றத்தில் அனுமதியை வாங்கி விட மனம் உடைந்து போகின்றான் ரோஜெர். அனைத்துக்கும் மேலாக இறுதிப் போட்டிகள் திறமையாலையே வெல்லப்பட வேண்டும், அந்த போட்டியில் தேவதைகள் உதவ மாட்டார்கள் என்று தேவதைகளும் சொல்லிவிடுகின்றார்கள்.

ஏன்ஜெல்ஸ் அணி இறுதிப் போட்டியை வென்றார்களா? ஜார்ஜின் வேலை என்ன ஆயிற்று? ரோஜெருக்கு அவன் விரும்பியவாறே ஒரு குடும்பம் அமைந்ததா? இறுதி போட்டியில் உலகத்தின் கண்கள் முழுவதும் மெல்லின் மீது இருக்க , தேவதைகளின் உதவி இன்றி அவன் சாதித்தானா? என்பதே மீதிக் கதை.

நகைச்சுவைக் கலந்த ஒரு நல்ல குடும்பப் படத்தை காண விரும்பும் அனைவரும் கண்டிப்பாகக் காண வேண்டிய ஒரு திரைப்படம்.

அனைத்து நடிகர்களும் அவர்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்து இருக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக அணியின் பயிற்சியாளராக வரும் டேணி க்ளோவர் மிகவும் சிறப்பாக நடித்து இருக்கின்றார். படத்தில் அவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்து "முதலில் என்னை வெறுத்த அனைவரையும் நானும் வெறுக்க ஆரம்பித்தேன். வெறுப்பு தான் வாழ்க்கை என்று ஆனது. இதோ நான் இப்பொழுது தனியாக நிற்கின்றேன். வெறுப்புக்கு வெறுப்பு தீர்வாகாது. நான் அவர்களிடம் அன்பினைக் காட்டி இருக்க வேண்டும்." போன்ற சில கருத்துகளும் படம் முழுக்கவே சொல்லப் பட்டு இருக்கின்றன.

என் கருத்து - இந்த படத்தில் தனிச் சிறப்பென எதுவும் இல்லை. ஆனால் மந்திரம் உள்ளது. நம்மை படத்தோடு கட்டிப் போடும் மந்திரம் உள்ளது.

நம்புவோம்.... அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்!!! :) 

சூன் 25 2009
என்றும் போல் தான் அன்றும் விடிந்து இருந்தது. வழக்கம் போல் எழுந்து அலுவலகத்திற்கு செல்லத் தயாராகிக் கொண்டு இருந்தேன்.
"யோவ்.. மைக்கேல் ஜாக்சன் இறந்துட்டாராமே"
வேறொரு அறையில் இருந்து வந்த நண்பரின் குரல் என்னை திடுக்கிட வைத்தது.
"சும்மா விளையாடாதடா... உனக்கு இதே வேலையா போச்சி" என்றவாறே அவர் இருந்த அறையினுள் நுழைந்தேன்.
"நான் ஒண்ணும் விளையாடலையப்பா.. இந்தா செய்தியில காட்டிக்கிட்டு இருக்கானுங்க பாரு" என்றவாறே தொலைக்காட்சியை காட்டினார்.
ஒரு கணம் என் உலகம் நின்று போனது.
தொலைக்காட்சியில் மைக்கேல் மரணம் என்ற செய்தி தலைப்புச் செய்திகளாக ஓடிக் கொண்டு இருந்தது.
இல்லை... எங்கோ தவறு நடந்து இருக்க வேண்டும்.. மைக்கேலாவது இறப்பதாவது... வாய்ப்பே இல்லை.
ஆனால் நான் பயந்தது தான் நடந்து இருந்தது.
இறந்து தான் போயிருந்தார் மைக்கேல்.
அந்த நாள், உலக இணையமே செயல் புரிய முடியாமல் சில நிமிடங்கள் திணறி நின்றது என்றார்கள். உலகமே அதிர்ச்சியுடன் நின்றது என்றார்கள்.
ஏன்?.
ஏன் என்னுடைய உலகமும் ஒரு கணம் நின்று போனது?.
அவர் என்னுடைய ஊர் கிடையாது.
என் மொழி அவருக்கு தெரியாது. ஏன்.. என்னையும் தான்!!!
இருந்தும் ஏன் எனக்குள் ஒரு வருத்தம். உலகத்தில் ஏன் பலருக்கும் அதே வருத்தம்.
ஒரு மனிதனுக்கு இது சாத்தியப்படுமா? அதுவும் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியவன், மனித முகத் தோற்றத்தையே அறுவைச் சிகிச்சைகளின் மூலம் இழந்தவன் என்று உலகத்தால் இகழப்பட்டு தனது சொத்துகளைக் கிட்டத்தட்ட முழுவதுமாய் இழந்து நின்ற ஒருவனால் இது சாத்தியப்படுமா?
சாத்தியப்பட்டு இருக்கின்றதே!!!
அப்படி எங்களை இணைத்தது எது?
இசையா...!!!
இசை மட்டுமா.........???
இல்லை....!!! நிச்சயம் இல்லை.
இசையை தாண்டியும் ஏதோ ஒன்று எங்களை இணைத்துக் கொண்டு இருந்தது... இருக்கின்றது.
அந்த ஏதோ ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் மைக்கேலைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
யார் அந்த ஜாக்சன்?....
அறிவோம்... உலகம் இது வரை கண்டிராத, மொழிகளைக் கடந்து நின்ற ஒரு கலைஞனைப் பற்றி!!!!

பி.கு:
இந்த பதிவு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையைப் பற்றிய சரிதையோ அல்லது, அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற விவாதமோ கிடையாது. மைக்கேல் என்ற ஒரு கலைஞன் .. ஒரு மனிதன்... என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை ...அவரைப் பற்றி நான் உணர்ந்தவைகளைப் பற்றியப் பதிவே ஆகும்.

************************************************************************************
"இசை... எனது உணர்ச்சிகளின் வடிகால். உலகம் முழுவதும் உள்ள இசைக் காதலர்களுக்கு எனது பரிசு. அதன் வழியே... எனது இசையின் வழியே... எனக்குத் தெரியும்... நான் என்றென்றும் வாழ்ந்திருப்பேன் " - மைக்கேல்

அன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love): 


என்றாவது ஒரு நாள் பொழுது போகாமல் தற்செயலாய் காண ஆரம்பித்த ஒரு படம், அதன் முடிவில் நீங்கள் உங்கள் வாழ்வில் கண்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உருமாறி இருப்பதை உணர்ந்து இருக்கின்றீர்களா?. நான் அப்படி உணர்ந்த ஒரு படம் தான் இது.

கட்டுப்பாடுகளற்ற ஒரு பள்ளி. சமுகத்தால் ஒதுக்கப்பட்ட மாணவர்கள். காலத்தால் தற்காலியமாக அந்த மாணவர்களுக்கு ஆசிரியராகும் ஒரு கருப்பின இளைஞர். மாணவர்களுக்கு நல்ல வழி காட்ட அவர் எடுக்கும் முயற்சிகள். அவருக்கு பாடம் கற்பிக்க மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள். இடையில் கொஞ்சம் நிறவெறி... நிறைய அன்பு. முடிவில் ஆசிரியர் வென்றாரா அல்லது மாணவர்கள் தோற்றார்களா( நல் வழி காணாத மாணவர்கள் தோற்றவர்கள் தானே!!) என்பதே கதை.

1967ஆம் ஆண்டு  லண்டனின் அருகில் உள்ள ஒரு சேரியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்டு ஆரம்பிகின்றது இந்தப் படம். சேரிப் பகுதியிலுள்ள மாணவர்களுக்காக இயங்கும் அரசாங்கப் பள்ளி என்பதினால் அதிக நிதி உதவியும் இல்லாது , வசதியும் இல்லாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி மாணவர்களுக்கோ அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சேரியில் இருந்து வருபவர்கள். அவர்கள் என்ன தான் படித்தாலும் இந்த உலகம் அவர்களை மதிக்காது. அப்படி இருக்க அவர்கள் எதற்காக தேவை இல்லாது படித்து நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்க வேண்டும். எனவே அவர்கள் சற்றும் பொறுப்பில்லாது புகைப் பிடிக்கவும், மது அருந்தவும், வகுப்பில் ஆசிரியரை கிண்டல் அடிக்கவும் என்று படிப்பதைத் தவிர மற்ற விசயங்களில் கவனத்தை அதிகம் செலுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்களை நல்வழிப் படுத்த வேண்டிய ஆசிரியர்களில் சிலரோ அந்த மாணவர்களை மாற்ற முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவ முயற்சிச் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். வேறு சில ஆசிரியர்களோ "ஆள விட்டாப் போதும்டா சாமி" என்றாவாறே வேறு பள்ளிகளுக்கு பணிமாற்றம் வாங்கிக் கொண்டு செல்ல முயன்று கொண்டு இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தான் அந்த பள்ளிக்கு ஆசிரியராய் பணி உத்தரவு பெற்றுக் கொண்டு வருகின்றார் மார்க் தாக்ரே.

மார்க் தாக்ரே, ஒரு திறமையான பொறியாளர். ஆனால் அவருக்கு தகுதி இருந்தும் வேலை தர மறுத்து விடுகின்றன இங்கிலாந்தின் பெரிய பொறியியல் நிறுவனங்கள். காரணம் அவர் ஒரு கருப்பர். வேலை இல்லாது திண்டாடும் தாக்ரேக்கு இந்த சூழ்நிலையில் தான் காலத்தின் பதிலாய் கிடைகிறது அந்த ஆசிரியர் பணி.

ஆவலுடன் பணிக்கு வரும் அவரை அதிர்ச்சியடைய செய்கின்றது அந்த பள்ளியின் கோலம்.  புகைப் பிடித்துக் கொண்டே ஆசிரியரை வரவேற்கும் மாணவன், மாணவர்களைப் பற்றி சிறிதும் கவலைப் படாத சில ஆசிரியர்கள், யாருக்கும் அடங்காது வகுப்பறையில் சத்தம போட்டுக் கொண்டு இருக்கும் மாணவர்கள்... அதிர்ந்து தான் போகிறார் தாக்ரே...அவர் எதிர்பார்த்த பள்ளிச் சூழல் நிச்சயம் அது அல்ல. இருந்தும் சில ஆசிரியர்கள் "அந்த மாணவர்கள் பாவம். உண்மையில் அவர்கள் நல்லவர்கள் தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நம்முடைய உதவி கண்டிப்பாக அவர்களுக்கு தேவை" என்று கூறி தாக்ரேவிற்கு உதவியாக இருப்பதினால் பள்ளியில் இருக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக தனது ஆசிரியப் பணியைத் தொடங்குகிறார் தாக்ரே. அப்படியே ஒரு ஓரமாய் தனது கனவுப் பணியான பொறியியல் வேலைக்கும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்.

மாணவர்களை வகுப்பை கவனிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொறுப்பை புகட்ட வேண்டும் என்ற அவரது முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர் டென்ஹம்(denham), பார்பரா, பமீலா மற்றும் பாட்டர் என்ற அந்த வகுப்பு மாணவர்களில் சிலர். கோபமே படக் கூடாது என்று முடிவு எடுத்து இருந்த தாக்கரேவை அந்த பட்டாளம் எளிதும் கோபப்படுத்தி விட அதிகாரத்தினால் மாணவர்களை மாற்றி விட முடியாது என்பதை உணருகின்றார் தாக்ரே.

அவருக்கு தேவை ஒரு உபாயம். அந்த மாணவர்களை மாற்றும் ஒரு வழி. அவர்கள் சிறுவர்கள் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும், அவர்கள் கற்க வேண்டியது புத்தகங்களை அல்ல வாழ்க்கையை என்று முடிவு கொண்டு தனது வகுப்பின் போக்கை மாற்றுகிறார் தாக்ரே. புத்தகங்கள் முதலில் வேண்டாம். முதலில் விவாதிப்போம்... எதைப் பற்றி வேண்டும் என்றாலும்... அரசியல், கல்யாணம், கலாச்சாரம்... முதலில் வாழ்க்கையை கற்போம். மற்ற பாடங்களை அது கற்றுக் கொடுத்து விடும் என்ற தாக்கரேவின் இந்த கொள்கை பெண்களிடம் முதலில் நல்ல மாற்றத்தை கொண்டு வர ஆரம்பிகின்றது. அப்படியே நாளடைவில் ஆண்களும் மாற ஆரம்பிகின்றனர். இந்த காலக் கட்டத்தில் பமீலாவிற்கு தாக்ரேவின் மீது காதல் வருகின்றது. அவர் வகுப்பை திருத்த எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அவள் துணை நிற்கின்றாள். தாகேரேயும் ஒரு ஆசிரியராய் அவளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்றார். கிட்டத்தட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரும் தாக்ரேவை மதிக்க ஆரம்பிகின்றனர். அவரை அவர்களுள் ஒருவராகவே பார்க்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் டென்ஹம் மட்டும் மாறாது பழைய படியே இருக்கின்றான்.

எல்லாம் தாக்ரே எதிர் பார்த்த மாதிரியே போய்க் கொண்டு இருக்க, அவர் எதிர்பார்க்காத இரண்டு சம்பவங்களால் மாணவர்கள் மத்தியில் அவர் உருவாக்கிய அந்த மாற்றம் சிதறுகின்றது. ஒரு ஆசிரியர் செய்த தவறுக்காக பாட்டர் அந்த ஆசிரியரை அடிக்க போக, அதைத் தடுத்து பாட்டரை "தவறுக்கு தவறு தீர்வாகாது" என்று கூறி அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றார் தாக்ரே. இது மாணவர்களிடம் அவருக்கு இருந்த நற்பெயரை "ஆசிரியர்கள் ஆசிரியருக்கு தான் உதவுவார்கள்" என்று கெடுக்கின்றது. அந்த நிலையிலும் பமீலா தாக்ரேவின் பக்கம் தான் நிற்கின்றாள். ஆனால் பமீலாவும் தாகேரேவின் மீது கோபம் கொள்ளும் ஒரு சம்பவம் நடக்கின்றது.  அவளும் தாக்ரேவை விட்டு மற்ற மாணவர்களிடம் மீண்டும் சேருகின்றாள்.

தான் அன்பினைக் காட்டி செதுக்கிய மாணவர்கள் அனைவரும் இப்பொழுது தனக்கு எதிராய் நிற்பதைக் காணுகின்றார் தாக்ரே. என்ன செய்வதென்று அவர் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சூழ்நிலையில் அவர் மிகவும் எதிர்ப்பார்த்த பொறியியல் வேலைக்கு அவரை சேர வரச் சொல்லி கடிதமும் வந்து சேருகின்றது.

தாக்ரே வேறு பணிக்கு சென்றாரா?. மாணவர்கள் தாக்ரேவை உணர்ந்து திருந்தினார்களா?. டென்ஹம் என்ன ஆனான்?. பமீலாவின் காதல் என்ன ஆனது? என்பது தான் மீதிக் கதை.

அருமையான கதை, இயல்பான திரைக்கதை மற்றும் இன்னும் பலப்பல விசயங்களுக்காக இந்த படத்தைப் புகழலாம். ஆனால் அவை அனைத்துக்கும் மேலாக படம் முழுவதும் ஒரு மனிதர் தாக்ரேவாக நிற்கின்றார். அவரைப் பற்றி நிச்சயம் விரிவாய் சொல்லியே ஆக வேண்டும்.
 
சிட்னி போய்தியர் (sidney poitier )- மார்க் தாக்ரேவாக இவரது நடிப்பை பார்த்து எனக்கு தோன்றிய முதல் எண்ணம். நிச்சயம் பல ஆஸ்கார் விருதுகளை இந்த மனிதன் வாங்கி இருக்க வேண்டும் என்பதே. அப்படி ஒரு நடிப்பு. படத்தில் இவர் வரும் ஒவ்வொரு இடத்திலும் இவர் தான் தெரிகின்றார். இவருக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.

இந்த படம் நிச்சயம் ஆசிரியர்களுக்கான ஒரு சிறந்தப் படம். மாணவர்களின் சிறப்பையும் அவர்களை செதுக்கும் ஆசிரியர்களின் சிறப்பையும் ஒரு சேர எடுத்துக் காட்டும் இந்த படம் நிச்சயம் ஒரு அழியாக் காவியம் தான்.

ஆசிரியராக கனவுக் காணும் அனைவரும் நிச்சயம் காண வேண்டிய ஒரு படம். அதே போல் தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய ஆசிரியர்களை நினைவுக்கோரும் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களும் காண வேண்டிய ஒரு படம்.

சில உபரி செய்திகள்:
இந்த கதை உண்மையில் நடந்த ஒரு கதை. பிறைத்வைடே (braithwaite ) என்ற ஒருவரின் சுய சரிதையை தழுவியே இந்த படம் எடுக்கப் பட்டு உள்ளது.

சிட்னி போய்தியர் - இவர் தான் ஆஸ்கார் விருதினைப் பெற்ற முதல் கருப்பின நடிகர்.

வானத்தை வெறித்துப் பார்த்தவாறு தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தான் செல்வன். இரவினை அலங்கரிக்கும் நட்சத்திரங்கள், ஒற்றை நிலா, அந்த நிலவொளியில் மேலும் அழகுக் கூடி மிளிரும் அவன் வளர்த்த ரோசாக்கள் என்று அவன் வாழ்வில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமானதாய் கருதிய பலவும் இன்றும் மாறாது இருந்தன.
அவனும் மாறாது தான் இருந்தான்.
ஆனால் அவனை அறியாது கடந்த சில தினங்களில் பல மாற்றங்கள் அவன் ஊரினில் நடந்து இருந்தன. அந்த மாற்றங்கள் தான் அவனுக்கு புரியவில்லை.
ஏன் இந்த மாற்றங்கள்?.
எப்பொழுதும் பள்ளி முடிந்து வரும் அவனை பாசத்துடன் விளையாட வரவேற்கும் அவன் வீட்டிற்க்கு எதிரே இருந்த மைதானத்தை அவனிடம் இருந்து பிரிக்கும் வண்ணம் புதிதாய் அந்த வேலி எதற்கு?.
எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அவனுடைய ஊரில் திடீர் என்று தோட்டாக்கள் முழக்கம் இடுவது ஏன்?
எப்பொழுதும் அவனுடன் விளையாடும் அவனுடைய நண்பர்கள் சிலரை கடந்த சில நாட்களாக காணவில்லையே. எப்பொழுதும் புன்னகையோடு பாசத்தோடு வரவேற்கும் அவனின் நண்பர்களின் தாய்மார்கள் இப்பொழுது ஏன் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கின்றனர்... ஏன்?
எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது புதிதாய் ஊரடங்கு உத்தரவு என்று சொல்கின்றனர். இருட்டிய பின்பு யாரும் வீட்டின் வெளியே செல்லக் கூடாதாம். இரவில் மைதானத்திலுள்ள ஏரியில் நிலவின் பிரதிபலிப்பை அவன் பார்த்து ரசிப்பதில் அந்த வேற்று மொழி பேசும் மனிதர்களுக்கு என்ன தீங்கு வந்து விடும் என்றும் அவனுக்கு புரியவில்லை.
எட்டே வயதான அவனுக்கு அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடைத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்தவரை அந்த வேற்று மொழி பேசுபவர்கள் அவர்களுக்கு எதிரிகள். அவனது ஊரினை பிடிப்பதற்கு வந்து இருப்பவர்கள். அவ்வளவே!!!
இதிலும் ஒரு குழப்பம் அவனுக்கு.
ஏன் அவன் ஊரினை பிடிக்க வந்து இருக்கின்றார்கள்?.
அவனுடைய ஊரில் அப்படி என்ன இருக்கின்றது?. பொதுவாக பொன்னும் பொருளும் அதிகம் உள்ள ஊரைத் தானே பிறர் பிடிக்க வருவர்... அவனது ஊரில் மகிழ்ச்சியைத் தவிர அவனுக்கு தெரிந்து வேறு பொருட்கள் இல்லையே... பின் ஏன் இந்த துப்பாக்கி தூக்கிய நபர்கள் அவனது ஊரினை பிடிக்க வந்து இருக்கின்றனர்.
அவர்களது புன்னகை, பொன்னையும் பொருளையும் விட அவ்வளவு விலை மதிப்பு உயர்ந்ததா?.
அதற்காகவா அவனது ஊரினில் உள்ள அனைத்துப் புன்னகையையும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
செல்வனுக்கு புரியவில்லை. அந்தக் கேள்விகளுக்கு விடையினை யோசித்தவாறே அவன் அவன் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தான்.
"அண்ணா...."
வீட்டினுள் இருந்து அவன் தம்பி இளங்கோவின் குரல் கேட்டது.
செல்வன் திரும்பி வீட்டினுள் பார்த்தான். அவனுடைய மூன்று வயதுத் தம்பி அவர்களின் அன்னை படுத்து இருந்த படுக்கையின் அருகே அமர்ந்து இருந்தான்.
செல்வன் எழுந்து பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய் இருந்த அவனின் அன்னையின் அருகிலே சென்றான். அவனுடைய அன்னை தாகத்தால் விக்கிக் கொண்டு இருந்தார்கள்.
"அண்ணா... அம்மாவுக்கு தண்ணி..." என்றான் இளங்கோ.

செல்வன் வீட்டினுள் சுற்றியும் பார்த்தான். தண்ணீர் வைத்து இருந்த பானைகள் எல்லாம் காலியாக இருந்தன.
செல்வன் மணியைப் பார்த்தான்.
இரவு 11:30 என்று கடிகாரம் காட்டிக் கொண்டு இருந்தது.
மீண்டும் திரும்பி அவனது அன்னையைப் பார்த்தான்.
அவனின் அம்மா தண்ணீர் வேண்டாம் என்பதுப் போல் தலையை அசைத்துக் கொண்டு இருந்தார்.
செல்வன் திரும்பி வாசலை நோக்கினான். ஏரி அவனது வீட்டினில் இருந்து மிகத் தொலைவினில் இல்லை. அருகில் தான் இருந்தது. என்ன, நடுவிலே ஒரு வேலி ஏரியை மறைத்துக் கொண்டு இருந்தது. போதாகுறைக்கு இந்த ஊரடங்கு உத்தரவு வேறு. இந்த நேரம் வெளியிலே தென்பட்டால் சுடுவார்கள். அவ்வளவு தானே!!!
அவன் முடிவு செய்து இருந்தான்.
மாட்டினால் தோட்டாக்கள் கிடைக்கும். சரி பிரச்சனை இல்லை.
ஆனால் அவன் போகவில்லை என்றால் நிச்சயம் அவன் அன்னை உயிர் வாழ்வதற்கு வாய்ப்புகள் கடினம் தான்.
தோட்டாக்களா அல்லது அன்னையா?. நிச்சயம் அன்னைதான்.
செல்வன் கிளம்பத் தயார் ஆனான்.
"இளங்கோ... அந்தக் கோப்பையை எடுத்துக் கொண்டு வா... நாம் சென்று தண்ணீர் கொண்டு வருவோம்" என்று அவனது தம்பியை அழைத்துக் கொண்டு கவனமாக வீட்டை விட்டு வெளியேறினான் செல்வன். அவனது தம்பி இளங்கோவும் அண்ணனின் சொல்லைக் கேட்டு அண்ணனைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.
செல்வனுக்குத் தெரிந்து வேலியைக் கடப்பதற்கு ஒரு இடம் இருந்தது. ஒரு புதர் மறைவில் வேலியின் அடியே ஊர்ந்து மைதானத்தின் பக்கம் போகும் வழி இருந்தது.
செல்வன் இளங்கோவை அழைத்துக் கொண்டு அந்த புதரின் அருகிலே சென்றான்.
"இளங்கோ... இந்த புதரின் பின்னாடியே பத்திரமாக பதுங்கி இரு. நான் போய் தண்ணி பிடித்து வந்து விடுகின்றேன்" என்று இளங்கோவை பத்திரமாக புதரின் மறைவில் இருத்தி விட்டு வேலியின் அடியில் நுழைந்து மைதானத்திற்குள் நுழைந்தான் செல்வன்.
மெதுவாய் ஏரியை நோக்கிச் சென்றான்.
நிலவொளியில் ஏரி மின்னிக் கொண்டு இருந்தது. ஆனால் அவன் மிகவும் நேசித்த இயற்கையை நின்று ரசிக்க நேரம் இல்லாமல் செல்வன் தான் கொண்டு வந்து இருந்த கோப்பையினில் நீரினைப் பிடித்து விட்டு தான் வந்த வழியிலேயே திரும்பி வேலியை நோக்கிச் செல்லலானான்.
வேலியை நெருங்கியப் பின் செல்வன் அவன் தண்ணீர் பிடித்து வந்து இருந்த கோப்பையை இளங்கோவிடம் கொடுத்து விட்டு மீண்டும் வேலியின் அடிப் பகுதி வழியாக அவன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்ற பொழுது தான் அவன் பயந்து கொண்டு இருந்த விசயம் நடந்தது.
எங்கிருந்தோ இருந்து இருளைக் கிழித்துக் கொண்டு வந்த தோட்டா ஒன்று அவனின் காலைப் பதம் பார்த்தது.
எப்பொழுதும் இதை எதிர்ப் பார்த்து இருந்த செல்வன் அவன் வலியால் கத்தினான் என்றால் அவன் தம்பியும் மாட்டிக் கொள்வான் என்பதால் செய்கையால் இளங்கோவை வீட்டிற்க்கு போகும் படி சொல்லிவிட்டு "இறைவா! அவர்கள் எங்களைப் பார்த்து இருக்க கூடாது. ஏதோ சத்தம கேட்டே சந்தேகத்தின் பெயரில் இங்கு சுட்டு இருக்க வேண்டும். என்னுடைய தம்பி பத்திரமாக வீடு போய்ச் சேர உதவி செய்" என்று வேண்டிக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு அசையாது வலியைத் தாங்கிக் கொண்டான்.
இளங்கோவும், அண்ணன் சொன்னால் சரி என்றே அந்த கோப்பையை எடுத்துக் கொண்டு வீட்டினை நோக்கி செல்ல ஆரம்பித்தான். செல்வனின் எண்ணப்படி அவனைச் சுட்டவர்கள் சந்தேகத்தின் பெயரிலையே சுட்டதினால் இளங்கோ இருந்த பக்கம் அவர்களின் கவனத்தைச் செலுத்தாது அவர்களின் பார்வையைச் செல்வன் இருந்த வேலியின் பக்கமே செலுத்தியிருந்தார்கள். இதனால் இளங்கோ பத்திரமாக வீடு போய் சேர்ந்தான்.
"அம்மா ... தண்ணீ.." என்றவாறே அவன் கொண்டு வந்து இருந்த தண்ணீர்க் கோப்பையை விக்கிக் கொண்டு இருந்த அவனின் அன்னையின் அருகிலே வைத்தான்.
இரண்டு பேராகச் சென்றவர்கள் ஒரு குண்டுச் சதத்திற்கு பின்னால் ஒருவராக வந்து இருக்கின்றார்கள் என்பதைப் பார்த்ததுமே அவர்களின் அன்னைக்குப் புரிந்து விட்டது.
"ஐயோ... நானே என்னுடைய பையனின் மரணத்திற்கு காரணம் ஆகி விட்டேனே... இந்த பாழாப் போன விக்கல் என்னுடைய உயிரை எடுக்காது என்னுடைய பையனின் உயிரை எடுத்து விட்டதே" என்று எண்ணியவாறே அவள் கண் கலங்கியது. தொண்டைக்குழி வரை வந்து நின்ற சோகம் அவளின் வாய் வழியாக சத்தமாக வெளியேறாது , கண்களின் வழியாக கண்ணீராக வெளியேறிக் கொண்டு இருந்தது.
"அம்மா .. அழாதே...!!! அண்ணா ... அம்மா அழுதுப் பாரு..." என்று இளங்கோக் கூறி விட்டு வழக்கம் போல அவனது அண்ணனைத் தேடித் திரும்பிப் பார்த்தான். அப்பொழுது தான் அவன் அண்ணன் இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என்பதை உணர்ந்தான்.
"அம்மா ... அண்ணா வரல" என்றுக் கூறிவிட்டு அவன் திரும்பி வீட்டு வாசலை நோக்கி நகர ஆரம்பித்தான்.

"இளங்கோ போகாதே.." என்று சொல்ல முயன்றும் சொல்ல இயலாத அவளின் முடியாமையை எண்ணி அவளின் கண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
இளங்கோ அவன் அண்ணன் முன்பு அமர்ந்து இருந்த அதே வாசலில் அமர்ந்து அவனின் அண்ணனை காண காத்து கொண்டு இருக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் சற்றுத் தொலைவில் தோட்டாக்கள் மீண்டும் வெடிக்கும் சத்தம கேட்டது. பின் ஒரே அமைதி.
அண்ணனை எதிர்ப்பார்த்து இளங்கோ அண்ணனின் ரோசக்களைப் பார்த்தவாறே காத்துக் கிடந்தான்.
அவனின் அன்னையின் கண்ணீரால் அவன் கொண்டு வந்து இருந்த தண்ணீர்க் கோப்பை நிரம்பி வழிந்துக் கொண்டு இருந்தது.
விடியலை எதிர்பார்த்து அந்த ஊர் காத்துக் கொண்டு இருந்தது. ஒரே கேள்வி தான் அந்த மக்களுக்கு,
விடியல் எப்பொழுது?....

அன்பையும் உறவையும் புதைத்து விட்டு இவர்கள் வேறு எதை அறுவடைச் செய்யப் போகிறார்கள்.
ரோசாக்களைப் சிதைத்துவிட்டு முட் தோட்டங்களால் மட்டும் என்ன பயன்...
விடியல் எப்பொழுது?....

கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands) :

1990ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வித்தியாசமான காதல் கதை.

ஒரு குன்றின் உச்சியில் ஒரு பாழடைந்த மாளிகை. அந்த மாளிகையினுள் அனாதையாய் கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் கொண்டவாறு வசிக்கும் ஒரு அப்பாவிச் செயற்கை மனிதன். அவன் மேல் பாவப்பட்டு அவனை ஊருக்குள் அழைத்து வந்து தங்கள் குடும்பத்தினுள் அவனையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணின் மேல் அவனுக்கு உண்டாகும் காதல். அந்த காதலுக்கு எதிர்ப்பாய் அந்த பெண்ணின் காதலன். இறுதியில் அந்த செயற்கை மனிதனின் காதல் கை கூடியதா என்பதே கதை.

சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படம் அதிரடி சண்டைகள், கிராபிக்ஸ் வித்தைகள் என்று எதுவும் இல்லாத அந்த கால எந்திரன் படம் என்றுக் கூட சொல்லலாம்.

ஆவான் என்றொரு இடத்தில உள்ள குன்றில் ஒரு மாளிகையில் ஒரு விஞ்ஞானி தனது படைப்புகளுக்கு எல்லாம் தலைமையான படைப்பாய், தனிமையாய் இருக்கும் அவருக்கு ஒரு மகனாய் ஒரு செயற்கை மனிதனை உருவாக்க முயன்றுக் கொண்டு இருகின்றார். அவரின் முயற்சியின் பயனாய் எட்வர்ட் என்னும் செயற்கை மனிதனும் உயிர் பெறுகின்றான். பார்ப்பதற்கு உண்மையான மனிதனைப் போலவே இருக்கும் எட்வர்டிடம் ஒரே ஒரு குறை. அவனுக்கு கைகள் கிடையாது. தனது மாளிகையின் தோட்டத்தில் உள்ள செடிகளை எல்லாம் அழகுப் படுத்தி சீர் அமைப்பதற்கு எட்வர்டிற்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் வைத்துப் படைத்தது இருந்தார் அந்த விஞ்ஞானி. எட்வர்ட் தோட்டக் கலைகளில் சிறந்தவனான உடனையே அவனுக்கு கத்திகளுக்கு பதிலாகஉண்மையானக் கைகளை மாற்றி விடுவோம் என்று காத்து இருந்த விஞ்ஞானி, அந்த நாள் வந்த பொழுது எட்வர்டிற்கு கைகளை மாட்டாமலேயே மாரடைப்பால் இறந்துப் போகிறார். அந்த பதட்டத்தில் எட்வர்ட் அவனுடைய கத்திக் கைகளால் அந்த உண்மையான கைகளை எடுக்க முயல, அந்த கைகள் கிழிந்துப் போகின்றன. எனவே தனது கத்திக் கைகளுடனேயே அந்த மாளிகையில் தோட்டத்தை பராமரித்துக் கொண்டே தனது காலத்தை கழிக்க ஆரம்பிகின்றான்.

பின் ஒரு நாள், பெக் என்னும் பொருட்களை விற்பனை செய்யும் பெண் ஒருத்தி, எட்வர்ட் தங்கி இருக்கும் மாளிகைக்கு பொருட்களை விற்பனை செய்ய போகும் போது தனியாய் இருக்கும் எட்வர்டின் மீது பாவம் கொண்டு அவனை அவளுடன் அவளின் வீட்டிற்க்கு வர அழைக்கின்றாள். எட்வர்டும் அவளுடன் அவளின் வீட்டிற்க்கு சென்று அவளின் குடும்பத்தில் ஒன்றாகி விடுகின்றான்.

பெக்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் பார்த்த முதலிலேயே எட்வர்டைப் பிடித்து விடுகின்றது. பெக்கின் மூத்த மகள் கிம்மைத் தவிர. கிம் முதலில் எட்வர்டை ஒரு மிருகமாகப் பார்க்க ஆரம்பிகின்றாள். பின் போகப் போகப் எட்வர்டின் உண்மையான குணம் அறிந்து அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிக்கின்றது. அதற்குள் எட்வர்ட் பெக்கின் குடும்பம் வசிக்கும் ஆவான் பகுதியில் தனது தோட்டக் கலையின் மூலமாகவும் தனது சிகை அலங்காரத் திறமைகள் மூலமாகவும் நல்ல பெயர் பெற்று அந்த மக்களுள் இணைந்து விடுகின்றான். அவனின் கத்திக் கைகளும் கற்பனைத் திறனும் அவனுக்கு புகழை வாரிக் குவித்த வண்ணம் இருக்கின்றன. அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டு இருக்கும் வேளையில் எட்வர்டிற்கு புதிதாய் பிரச்சனை ஜிம் என்றவனின் வடிவில் வருகின்றது. ஜிம் கிம்மின் காதலன். அவனுக்கு சுத்தமாகவே எட்வர்டை பிடிக்கவில்லை. ஒருநாள் தனது தந்தை தான் கார் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்றவுடன், தன் சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு திட்டமிட்டு அந்த திட்டத்தில் எட்வர்டையும் கிம்மின் உதவியால் சேர்த்துக் கொள்கின்றான் ஜிம். அந்த திருட்டு முயற்சி தோல்வி அடைய எட்வர்டைத் தவிர மற்ற அனைவரும் தப்பி விடுகின்றார்கள். எட்வர்டை போலீஸ் கைது செய்து கொண்டு போய் விடுகின்றது.

பின்னர் எட்வர்ட் தனிமையிலேயே வளர்ந்ததால் அவனுக்கு நல்லதுக் கெட்டது தெரியாது, அவனுக்கு அதை யாரவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அது வரை அவன் மேல் சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நீதிபதி சொல்லி எட்வர்டை விடுதலை செய்கிறார். "இன்னொரு முறை இவனால் இந்த பகுதி மக்களுக்கு எதாவது பிரச்சனை வந்தது என்றால் இவனை நான் சிறையில் அடைக்க வேண்டி இருக்கும்" என்று ஒரு எச்சரிக்கை செய்துவிட்டு எட்வர்டை பெக்கின் குடும்பத்திடம் விட்டு விட்டு செல்கின்றார் எட்வர்டை கைது செய்த போலீஸ் அதிகாரி. அதன் படியே எட்வர்டிற்கு நல்லதையும் கெட்டதையும் சொல்லிக் கொடுக்க பெக்கின் குடும்பம் முயல்கிறது. அந்த சம்பவத்திற்கு பின் எட்வர்ட் என்ன தான் நல்லது செய்தாலும் அந்த பகுதி மக்கள் எட்வர்டை ஒரு திருடனாகப் பார்ப்பதை நிறுத்த மாட்டேன்கின்றார்கள். இந்த காலக் கட்டத்தில் கிம்மிற்கு ஜிம்மின் மேல் வெறுப்பும் எட்வர்டின் மேல் பற்றும் வர ஆரம்பிக்கின்றது. ஒரு நாள் இரவு ஜிம்மும் அவனது நண்பனும் குடித்துவிட்டு கிம்மின் வீட்டிற்க்கு வேகமாக காரில் வரும் பொழுது எதிர்பாராவிதமாக காருக்கு நடுவில் கிம்மின் தம்பி கெவின் வந்து விட, கெவினைக் காப்பற்றுகின்றான் எட்வர்ட். காப்பாற்றப்பட்ட கெவின் நலமாக இருக்கின்றானா என்று அறிய அவனின் முகத்தில் தன்னுடைய கத்திக் கையை வைத்துப் பார்க்கும் பொழுது எட்வர்டை அறியாமலேயே கெவினின் முகத்தில் கத்தி கீறி விட, சுற்றி இருந்தவர்கள் எட்வர்ட் தான் கெவினைத் தாக்குகின்றான் என்று தப்பாக புரிந்துக் கொண்டு அவனைத் துரத்துகின்றனர்.

எட்வர்ட் அவர்களிடம் இருந்து ஓடி மீண்டும் தனது மாளிகைக்கே செல்கின்றான். அவனைத் துரத்தியவாறே ஆவான் நகர மக்களும், அவனைக் கொள்வதற்காக ஜிம்மும், அவனைக் காப்பற்றுவதற்காக கிம்மும் அந்த மாளிகைக்குள் செல்கின்றனர்.

ஜிம் எட்வர்டைக் கொன்றானா?. எட்வர்டின் காதல் என்னவாயிற்று?. கிம் என்னவானாள்?. என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் முழுவதையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துகின்றார் ஜானி டெப்(johnny depp). அப்பாவியான செயற்கை மனிதனாய், வசனங்கள் அதிகம் இன்றி அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் வாய்ப்புகள் அதிகம். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு எட்வர்ட் என்ற அந்த கதாப்பாத்திரதிற்கு உயிர் கொடுத்து இருக்கின்றார். அவருடைய திரைப்பட வாழ்க்கை பயணத்தில் இந்த படம் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜானி டெப்பின் திறமைக்கு தீனி அளிக்கும் படி காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் டிம் பர்டன் (tim burton) வெற்றிப் பெற்று இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பக் காட்சியில் இருந்தே தனது கற்பனை உலகைத் திரையில் அருமையாக விவரித்துக் காட்டி இருக்கின்றார்.

எளிமையான காதல் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் விரும்புபவர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள். அதுவும் குறிப்பாக ஜானி டெப்பின் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக காண வேண்டிய ஒரு படம்.   

"முன்னொரு காலத்தில்" என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்காமல் நம் நாட்டில் எந்த ஒரு குழந்தையும் வளர்ந்து இருக்கவே முடியாது. ஏன்!!! இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. குழந்தைகளுக்கு என்று எழுதப்பட்டு இன்று சாகா வரம் பெற்று விளங்கும் நாடோடிக் கதைகளும் தேவதைக் கதைகளும் உலகத்தில் ஏராளம். அப்படி உலகம் எங்கும் கூறப்படும் கதைகளை 'பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் நம் மொழியில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும்" என்ற கூற்றின் படி பலப் பதிப்பகங்கள் மொழிப்பெயர்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த பதிப்பகங்கள் வாயிலாக வெளிநாட்டு காவியங்களும் , கதை மாந்தர்களும் இனிய தமிழ் மொழி பேசிக் கொண்டு நம்முள் உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.

எல்லாம் அப்படி இருக்க எனக்குள் திடீர் என்று ஒரு எண்ணம் 'நாமும் ஏன் நாம் படித்தக் கதைகளை மொழிபெயர்த்துப் பார்க்கக் கூடாது. நாம் ரசித்த கதைகளை பிறரும் அறியும் வண்ணம் நாம் ஏன் எழுதிப் பார்க்க கூடாது?' என்று!. அந்த எண்ணத்தின் விளைவாகவே இந்தப் பதிவு.


பன்னிரு மாதங்களும் மரிசாவும் - ஒரு செக் நாட்டு நாடோடிக் கதை!

முன்னொரு காலத்தில் மரிசா என்னும் பெண் தன்னுடைய கொடுமைக்காரச் சித்தியுடனும் தங்கை ஒலினாவுடனும் கானகத்திற்கு அருகே ஒரு மர வீட்டினில் வசித்து வந்தாள். மரிசா இயல்பிலேயே மற்ற உயிர்களிடத்து அன்பான பெண். எனவே ஊரில் உள்ள அனைவருக்கும் மரிசாவை மிகவும் பிடிக்கும். ஆனால் ஒலினாவோ அவள் அன்னையைப் போலவே செருக்கானவள். பிறரை சிறிதும் மதிக்க மாட்டாள். எனவே ஊரில் ஒலினாவை யாருக்கும் பிடிக்காது.
இது ஒலினாவின் தாயாரை கோபம் கொள்ளச் செய்தது. "என்ன ... என்னுடைய மகளை யாரும் பாராட்ட மாட்டேன்கின்றார்கள் ஆனால் இந்த மரிசாவை மட்டும் இப்படி தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றார்களே... அறிவில்லா மக்கள்!" என்று எண்ணிக் கொண்டு அவள் கோபத்தை எல்லாம் மரிசாவின் மேல் காட்ட ஆரம்பித்தாள்.

காலை தொடங்கி மாலை வரைக்கும் உள்ள வீட்டு வேலை எல்லாம் மரிசாவே தனியாய் செய்ய வேண்டியதாய் ஆயிற்று. மரிசா கடினப்பட்டு தோட்டத்திலும் முற்றத்திலும் வேலைச் செய்து கொண்டு இருப்பாள் ஆனால் ஒலினாவோ வேலை எதுவும் செய்யாது நேரத்தை சோம்பேறித்தனமாக கழித்துக் கொண்டு இருப்பாள். இவ்வளவு கடினப் பட்டும் மரிசா அவள் சித்தியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளுக்கு வேலை செய்வது பிடித்து இருந்தது. அது அவளுக்கு கடினமாய் படவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்த அன்பும் பாசமும் அவள் சித்தியிடமும் தங்கையிடமும் கிடைக்காதது மட்டுமே அவளுக்கு மிகவும் மன வருத்தம் தருவதாய் இருந்தது. தன்னுடைய சோகத்தை பகிர்ந்து கொள்வதற்கு வேறு யாரும் இல்லாததினால் அவள் தான் வளர்த்த ரோசா செடிகளிடம் மட்டும் தன்னுடைய கதையையும் சோகத்தையும் சொல்லி காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தாள்.

இவ்வாறே காலங்கள் வேகமாய் நகர்ந்தன.

மரிசா மிக அழகான பெண்ணாய் வளர்ந்து இருந்தாள். ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மரிசாவை மணம் முடிக்க தயாராய் இருந்தனர். ஆனால் ஒலினாவை மணக்கவோ யாரும் முன் வரவில்லை. இது மரிசாவின் சித்தியை மேலும் கோபமும் பொறாமையும் கொள்ளச் செய்தது. "இந்த மரிசா இருக்கும் வரை நம்முடைய மகளை யாரும் மணக்க முன் வரப் போவதில்லை. எனவே இந்த மரிசாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும்" என்று எண்ணிக் கொண்டு மரிசாவை துரத்த வழிகளை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவள் காத்து இருந்த அந்த நாளும் வந்தது. அது ஒரு பனிக்காலம். வெளியில் பனி பயங்கரமாக பெய்துவிட்டு அடங்கி இருந்தது.

திடீர் என்று ஒலினாவிர்க்கு செவ்வூதா(violet) பூக்களை சூடிக் கொண்டு தன்னை அழகுப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. உடனே அவள் மரிசாவை நோக்கி,
"ஏய் மரிசா! எனக்கு செவ்வூதாப் பூக்களை சூட வேண்டும் போல் இருக்கின்றது. நீ காட்டுக்குள் போய் எனக்காக அவற்றைத் தேடிப் பறித்துக் கொண்டு வா." என்றாள்.
மரிசா அதிர்ந்து போனாள். மார்ச்சு மாசம் பூக்கும் செவ்வூதாப் பூக்களை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த பூக்கள் பூக்கும் காலம் இது அல்லவே. அந்த பூக்களுக்கு நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"அம்மா ... மரிசாவைப் பாருங்கள். நான் சொன்ன வேலையைச் செய்ய முடியாது என்கின்றாள்" என்று தன்னுடைய துணைக்கு அவளின் அன்னையையும் அழைத்துக் கொண்டாள்.
ஒலினாவின் அன்னையும் இது தான் மரிசாவை வீட்டை விட்டு துரத்தி விட அருமையான சந்தர்ப்பம் என்று முடிவு செய்து கொண்டு
" என்ன மரிசா. ஒலினா சொன்ன வேலையை செய்ய முடியாது என்றாயாமே... ஏன்?" என்றார் கோபமாய்.
"இல்லை சித்தி .. இந்த காலத்தில் அந்த பூக்கள் பூக்காது... அவற்றைப் நான் எங்கே போய் பறிப்பது. மார்ச்சு மாதத்தில் நானே தங்கைக்கு அந்த பூக்களை வேண்டிய அளவிற்கு கொண்டு வந்து தருகின்றேன்" என்றாள் மரிசா.
"அது எல்லாம் எனக்கு தெரியாது. அவள் ஆசைப்படுவதை இப்பொழுதே நீ கொண்டு வந்து தர வேண்டும். இல்லாவிடில் இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை. போ போய் அந்த பூக்களைக் கொண்டு வா!" என்றார் மரிசாவின் சித்தி.
"ஐயோ சித்தி..." என்று ஆரம்பித்த மரிசாவை வீட்டை விட்டு வெளியே பனியில் தள்ளிவிட்டு கதவை அடைத்தனர் மரிசாவின் சித்தியும் ஒலினாவும்.
மரிசா அழுதுக் கொண்டே காட்டினுள் செவ்வூதாப் பூக்களைத் தேடி நடக்க ஆரம்பித்தாள்.   எவ்வளவு நேரம் நடந்து இருப்பாள் என்று தெரியாது ஆனால் அவள் நடந்துக் கொண்டே இருந்தாள். பூக்கள் இல்லாமல் அவள் வீட்டிற்க்கும் செல்ல முடியாது, வேறு எங்கு செல்வது என்றும் அவளுக்கு தெரியவில்லை. எனவே கால் போன போக்கிலே அவள் நடந்துச் சென்றாள். விரைவில் இருட்ட ஆரம்பித்தது. பனி வேறு தூற ஆரம்பித்தது.
பயங்கரமான காட்டில் இது வரை தனியாக போய் பழக்கப்படாத மரிசா பயப்பட ஆரம்பித்தாள்.
"கடவுளே ... எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தூரத்தில் யாரோ நெருப்பை மூட்டி இருப்பதை கண்டாள். சிறிது நம்பிக்கை அவளுக்கு பிறந்தது. இங்கு வேறு யாரோ இருகின்றார்கள். நமக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்று அவள் எண்ணிக் கொண்டு அந்த நெருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போகும் வழியில் சிறிது பயமும் ஆவலுடன் தொற்றிக் கொண்டது. இந்த பனியில் மனிதர்கள் யாரும் காட்டினுள் வர மாட்டார்களே. ஒரு வேலை அங்கு இருப்பது திருடர்களாக இருக்குமோ என்று அஞ்சியவாறே அவள் நெருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அந்த நெருப்பை நோக்கி நெருங்க நெருங்க அங்கு இருந்தவர்கள் அவளுக்கு நன்றாக தெரிய ஆரம்பித்தனர். அவர்கள் மொத்தம் 12 பேர் இருந்தனர். 3 பேர் வயதானவர்களாகவும், 3 பேர் நடுத்தர வயதினராகவும், 3 பேர் இளைஞர்களாகவும் மற்ற மூன்று பேர் சிறு வயதினராகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அந்த நெருப்பை சுற்றி அமர்ந்து இருந்தனர். அவர்களுள் 11 பேர் நிலத்தில் அமர்ந்து இருக்க ஒரு சிறு வயது நபர் மட்டும் ஓர் அரியணையில் அமர்ந்து இருந்தார். மரிசா அவர்களை நோக்கி ஆச்சர்யத்துடனும் பயத்துடனும் நெருங்கினாள்.
நெருங்கிய பொழுதே மரிசா உணர்ந்து கொண்டாள், அந்த நெருப்பை சுற்றி அமர்ந்து இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள் தான் பன்னிரு மாதங்கள் என்று.
மரிசா அவர்களை நெருங்கி "பெரியவர்களே வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்று ஆரம்பித்தாள்.
மரிசாவை கண்ட அவர்கள் அதிர்ச்சி உற்றனர். இந்த பனியில் அவர்கள் யாரையும் அந்த காட்டினுள் எதிர்பார்க்கவில்லை.
"உனக்கும் வந்தனங்கள் சிறுமியே... கண்டிப்பாக நீயும் எங்களுடன் சேர்ந்து குளிர் காயலாம். ஆனால் இந்த பனியில் இவளவு தூரம் எதற்காக வந்து இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா ? உன்னை உன் வீட்டில் தேட மாட்டார்களா?" என்றார் அரியணையில் அமர்ந்து இருந்த சனவரி.
"இல்லை ஐயா!! என்னை தேட மாட்டார்கள். என்னை செவ்வூதாப் பூக்கள் பறித்துக் கொண்டு வர அனுப்பியதே அவர்கள் தான். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?. இந்த கானகத்துள் இப்பொழுது அந்த பூக்களை நான் எங்கு பார்க்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மரிசா.
"செவ்வூதா பூக்களா... அதுவும் இந்த காலத்திலா" என்றார் சனவரி அதிர்ச்சியாய் " அவை இந்த பனியில் பூக்காது என்று உன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாதா?".
"தெரியும்... இருந்தாலும்..." என்று ஆரம்பித்த மரிசாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. அதைக் கண்ட சனவரி,
"அழாதே பெண்ணே!!! உனக்கு இப்பொழுது செவ்வூதாப் பூக்கள் தானே வேண்டும்.. ஒரு கணம் பொறு" என்று கூறி விட்டு அங்கு கூடி இருந்தவர்களுள் கொஞ்சம் இளமையானவரை நோக்கித் திரும்பினார்.
"சகோதரா மார்ச்சு... இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை மார்ச்சுவிடம் கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
மார்ச்சு அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,

"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
    கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
 இவளை வாட்டுகின்றது இவள் சொந்தம்...
     வாட்டாதே நீயும்.. வழிவிடு வரட்டும் சிறிது வசந்தம்!!!" என்றார்.

நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகி பச்சைப்பசேல் புல் வெளிகள் தென்படலாயிற்று. அவற்றின் நடுவே கொடிகள் எங்கும் பூத்துக் குலுங்கின செவ்வூதாப் பூக்கள்.
மரிசா சிரித்தாள்.
"போ பெண்ணே!!! போய் உனக்கு வேண்டிய மட்டும் மலர்களை பறித்துக் கொள்." என்று கூறினார் மார்ச்சு.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று மலர்களை வேண்டிய மட்டும் பறித்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே பூக்களை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி பூக்களை கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த பூக்களை வாங்கிக் கொண்டாள். "இந்த பூக்களை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் பூக்களை சுடி தன்னை அழகுப் பார்க்க ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த பூக்கள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. மரிசாவின் சித்திக்கு தான் ஐயோ நாம் மரிசாவை வீட்டை விட்டு துரத்த போட்ட திட்டம் தோற்று விட்டதே என்று கோபம் தலைக்கு ஏறியது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.
அவளின் யோசனைக்கு ஏற்றார்ப்போல் அடுத்த நாள் ஒலினாவிற்கு செம்புற்றுப்பழம்  (strawberry) சாப்பிட வேண்டும் என்பது போல் ஆசை வந்தது. உடனே அவள் மரிசாவை அழைத்தாள்.
"மரிசா. எனக்கு செம்புற்றுப்பழம் சாப்பிட வேண்டும் என்பது போல ஆசையாக உள்ளது. நீ காட்டினுள் போய் எனக்கு அந்த பழங்களைப் பறித்து வா" என்றாள்.
மரிசா மீண்டும் அதிர்ந்து போனாள். சூன் மாசம் கனிக்கும் செம்புற்றுப் பழத்தை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த கனிகள் வரும் காலம் இது அல்லவே. அந்த கனிகளுக்கு இந்த பனியில் நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"எனக்கு அது எல்லாம் தெரியாது. அந்த கனிகள் இல்லாது நீ வீட்டினுள் வர முடியாது" என்று கூறிவிட்டு மரிசாவை வெளியே தள்ளி கதவை பூட்டினர்.
மரிசா மீண்டும் சோகத்துடன் காட்டினுள் நடக்க ஆரம்பித்தாள். விரைவில் முந்தைய இரவு அவள் மாதங்களை சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
"பெரியவர்களே மீண்டும் வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்றாள்.
அவளை மீண்டும் கண்டு அதிர்ச்சியுற்ற சனவரி
"நிச்சயமாக எங்களுடன் நீ இணைந்துக் கொள்ளலாம்! ஆனால் ஏன் பெண்ணே மீண்டும் இந்த பனியில் காட்டினுள் வந்து இருக்கின்றாய் என்று நாங்கள் அறிந்துக் கொள்ளலாமா?. என்ன பிரச்சனை?" என்றார்.
"என்னுடைய தங்கைக்கு இம்முறை செம்புற்றுப்பழம் வேண்டுமாம். அதை பெறாது நான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர்" என்றாள் மரிசா.
"செம்புற்றுப்பழமா!!! இந்த பனிக் காலத்திலா... நீ ஒன்றும் கவலைப் படாதே பெண்ணே" என்றுக் கூறிக் கூட்டத்தில் இருந்த சற்று நடுத்தர வயதை சேர்ந்த ஒருவரை பார்த்து திரும்பினார்.
"சகோதரா சூன் .. இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை சூன்இடத்து கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
சூன் அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,

"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
    கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
 செடிகளை விழுங்கி நின்றதுப் போதும் பனியே...
     சற்று விலகிடு கனியட்டும் இவள் விரும்பிய கனியே!!! என்றார்.

நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகி பச்சைப்பசேல் புல் வெளிகளும் பழம் கனிக்கும் செடிகளும் தென்படலாயிற்று.
"போ பெண்ணே!!! போய் உனக்கு வேண்டிய மட்டும் கனிகளைப் பறித்துக் கொள்." என்று கூறினார் சூன்.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று கனிகளை வேண்டிய மட்டும் பறித்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே கனிகளை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி கனிகளைக் கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த கனிகளை வாங்கிக் கொண்டாள். "இந்த கனிகளை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் கனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த கனிகள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. மரிசா மிகத் தொலைவு அலைந்து வந்து இருந்தமையால் பசியுடனே உறங்கப் போனாள்.
மீண்டும் மறுநாள் ஒலினாவிற்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல் ஆசை வந்தது. உடனே அவள் மரிசாவை அழைத்தாள்.
"மரிசா. எனக்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல ஆசையாக உள்ளது. நீ காட்டினுள் போய் எனக்கு அந்த பழங்களைப் பறித்து வா" என்றாள்.
மரிசா மீண்டும் அதிர்ந்து போனாள். செப்டம்பர் மாசம் கனிக்கும் ஆப்பிள் பழங்களை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த கனிகள் வரும் காலம் இது அல்லவே. அந்த கனிகளுக்கு இந்த பனியில் நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு மீண்டும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"எனக்கு அது எல்லாம் தெரியாது. அந்த கனிகள் இல்லாது நீ வீட்டினுள் வர முடியாது" என்று கூறிவிட்டு மரிசாவை வெளியே தள்ளி கதவை பூட்டினர்.
மரிசா மீண்டும் சோகத்துடன் காட்டினுள் நடக்க ஆரம்பித்தாள். விரைவில் முந்தைய இரவு அவள் மாதங்களை சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
"பெரியவர்களே மீண்டும் வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்றாள்.
அவளை மீண்டும் கண்டு அதிர்ச்சியுற்ற சனவரி
"நிச்சயமாக எங்களுடன் நீ இணைந்துக் கொள்ளலாம்! ஆனால் ஏன் பெண்ணே மீண்டும் இந்த பனியில் காட்டினுள் வந்து இருக்கின்றாய் என்று நாங்கள் அறிந்துக் கொள்ளலாமா?. என்ன பிரச்சனை?" என்றார்.
"என்னுடைய தங்கைக்கு இம்முறை ஆப்பிள் பழம் வேண்டுமாம். அதை பெறாது நான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர்" என்றாள் மரிசா.
"ஆப்பிள் பழமா!!! இந்த பனிக் காலத்திலா... நீ ஒன்றும் கவலைப் படாதே பெண்ணே" என்றுக் கூறிக் கூட்டத்தில் இருந்த சற்று வயது முதிர்ந்த ஒருவரை பார்த்து திரும்பினார்.

"சகோதரா செப்டம்பர் .. இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை செப்டம்பர் இடம் கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
செப்டம்பர் அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,

"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
    கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
 மரங்களை மறைத்து நின்றதுப் போதும் பனியே...
     சற்று விலகிடு கனியட்டும் இவள் விரும்பிய கனியே!!! என்றார்.

நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகியது. வானம் வரை உயர்ந்து நின்ற ஒரு மரத்தில் இருந்து மட்டும் இரு பூக்கள் பூத்து உடனே ஆப்பிள் பழங்களாய் கனிந்து மண் மேலே விழுந்தன.

"போ பெண்ணே!!! போய் அந்த இரண்டு ஆப்பிள் கனிகளைப் எடுத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்க்கு போ." என்று கூறினார் செப்டம்பர்.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று அந்த இரண்டு கனிகளை எடுத்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே கனிகளை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி கனிகளைக் கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த இருக் கனிகளை வாங்கிக் கொண்டாள். "இந்த கனிகளை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் கனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த கனிகள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. அந்த பழங்கள் மிகவும் இனிமையாய் இருக்கவே ஒலினா மரிசாவை நோக்கி
"இந்த பழங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இரு பழங்களை மட்டுமே கொண்டு வந்து தந்து விட்டு மீதிப் பழங்களை எல்லாம் தின்று விட்டாயா?" என்றாள் கோபமாய்.
"ஐயோ! இல்லை ஒலினா... அந்த மரத்தில் இந்த இரு கனிகள் மட்டும் தான் இருந்தன. என்னை நம்பு. நான் பொய் சொல்லவில்லை" என்றாள் மரிசா.
"உன்னை நம்புவதா... நீ அந்த பழங்களை சாப்பிட்டு இருந்தாலும் சாப்பிட்டு இருப்பாய். நானே போய் அந்த பழங்களை பறித்துக் கொள்கிறேன்." என்று கூறி விட்டு தன்னுடைய அங்கியை அணிந்துக் கொண்டு பனியில் தனது அன்னை எவ்வளவு தடுத்தும் வெளியே செல்ல ஆரம்பித்தாள்.
விரைவில் அவளும் அந்த பன்னிரு மாதங்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். குளிர் அவளை பயங்கரமாக வாட்டவே அவள் அவர்களின் அனுமதி இன்றியே அவர்கள் மூட்டி இருந்த நெருப்பில் குளிர் காய ஆரம்பித்தாள்.
இதைக் கண்டு கடுப்புற்ற சனவரி
"சொல் பெண்ணே... நீ யார்!. இந்த பனியில் இந்த நேரத்தில் காட்டுக்குள் என்ன செய்துக் கொண்டு இருக்கின்றாய்?" என்றார்.
இது வரை யாரிடமும் பதிலோ இல்லை காரணமோ சொல்லிப் பழக்கமில்லாத ஒலினா அதைக் கேட்டு கோபமுற்று,
"என்னுடைய வேலையை நான் எதற்காக கிழவா உன்னிடம் சொல்ல வேண்டும். உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போ!" என்றாள்.
அதைக் கேட்டு மிகவும் கோபம் அடைந்த சனவரி தன் கையில் இருந்த செங்கோலை அசைக்க, வானம் மிகவும் இருட்டிக் கொண்டு வந்து மிகவும் பெரிய பனி அந்த இடத்தில பெய்ய ஆரம்பித்தது. அந்த பனியில் மாட்டி வழித் தவறி ஒலினா காட்டினுள் தொலைந்து போனாள்.
மிக நேரம் ஆகியும் தன்னுடைய மகள் திரும்பாததால், "அவள் ஆப்பிள் பழங்களை தின்றுக் கொண்டே அவளை மறந்து காட்டினுள் அமர்ந்து இருக்க கூடும்" என்று எண்ணி, வீட்டை மரிசாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மரிசாவின் சித்தியும் காட்டினுள் ஒலினாவைத் தேடி செல்ல ஆரம்பித்தார்.
மிக விரைவில் மரிசாவின் சித்தியும் பனியில் மாட்டிக் கொண்டு காட்டினுள் தொலைந்து போனார். 
நீண்ட நேரம் ஆகியும் தன் சித்தியும் திரும்பவில்லை, தங்கையும் திரும்பவில்லை என்பதை கண்டு கவலை உற்று அவர்கள் திரும்ப மரிசா இறைவனிடம் வேண்டினாள். அப்படியே அவர்களின் வருகைக்காக காத்து இருந்தாள். ஆனால் நாட்கள் பல ஓடியும் அவர்கள் வராததால் அவள் தன்னுடைய வீட்டினுள் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தாள்.

பின் ஒரு நாள், அவளுக்கு ஏற்ற ஒருவனை மணம் முடித்துக் கொண்டு அவள் தன் வாழ்நாள் முழுவதும் மாதங்களின் ஆசியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்.

முற்றும்.


   

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு