சென்ற பதிவில் இந்தியா இலங்கையினுள் நுழைந்ததற்கு அதனுடைய அரசியல் நோக்கே காரணமாக இருக்கலாம் என்றுக் கண்டோம். அதற்காகத் தான் அதனுடைய படைப்பிரிவு ஒன்றினை இலங்கைக்கு அமைதியினைக் காக்கும் வண்ணம் அனுப்பியும் வைத்தது என்றும் கண்டோம்.

ஆனால் இது நம்புவதற்கு எளிதான ஒன்று அல்ல. ஒரு வேளை இந்தியா தமிழர்களின் நலன்களுக்காகவே தனது இராணுவத்தினை அனுப்பி இருக்கலாம். எனவே சான்றுகள் இன்றி இந்தியாவினைக் குறைக் கூறுவது சரியானதொரு செயலாக அமையாது. எனவே இந்நிலையில் என்ன நடந்தது என்பதனை சான்றுகளுடன் கண்டால் மட்டுமே நம்மால் எதையும் உறுதியாகக் கூறவோ அல்லது கருதவோ முடியும்.

சரி...இந்திய அரசு இட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டன. அதன் முடிவின் படியே அந்த இயக்கங்களும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவும் செய்கின்றன.

"சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆயுதங்களை ஒப்படைக்கும் பணி விரைவில் துரிதமாக நடைப்பெற ஆரம்பித்தது. மற்ற ஆயுத போராளி இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் தனித் தனியாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தப் பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகுந்த கட்டுப்பாடுடன் ஒற்றுமையாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தனர். எங்களுக்கு இந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆயுதங்களைத் தாங்கிய வண்டி வந்துச் சேரும் என்றத் தகவல் வரும்...அதே நேரத்தில் ஆயுதங்களுடன் வண்டியும் வந்துச் சேரும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலி காவலர்களுடன். அவ்வாறு வந்த ஆயுதங்களைப் பார்க்கும் பொழுது சில புதிய ரக ஏவுகணை செலுத்திகளைப் பார்த்தேன். விடுதலைப் புலிகளே அவற்றைத் தயாரித்து இருந்தனர். அதன் செயலாற்றலைக் கண்ட பொழுது இந்தியா விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்கும் சேர்த்தே அதனை தயாரித்துக் கொடுத்து இருப்பர் என்று ஆயுதங்களை வழங்க வந்த போராளி என்னிடம் தெரிவித்தார்" என்று இந்திய அமைதிக் காக்கும் படையின் தலைமை அதிகாரியான தீபிந்தர் சிங் அவரது 'இலங்கையில் இந்திய அமைதிக் காக்கும் படை' என்ற நூலினில் கூறுகின்றார்.

இதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகள் நல்ல விதமாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன என்றும், இருந்த ஆயுதம் தாங்கிய அமைப்புகளில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியதாகவும் கட்டுப்பாடுடன் கூடிய ஒரு இயக்கமாக இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நோக்கம் உண்மையிலேயே அமைதியினை நிலை நாட்டுவதாக இருந்திருந்தால் அது கொடுத்த வாக்கு உறுதிகள் அனைத்தினையும் நிச்சயம் நிறைவேற்றி இருக்கும். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக இருக்கின்றது.

“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள். காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று தனது புத்தகமான 'இலங்கையில் இந்தியத் தலையீடு' இல் எழுதுகிறார் ஹர்சிரத் சிங் - இவர் இந்திய அமைதிப் படைக்கு தலைமை தாங்கச் சென்ற தளபதி.

மேலும் "தீட்சத்தின் எண்ணத்தின் படி இந்திய அமைதிக் காக்கும் படையின் முக்கிய பணியே தமிழக மக்களின் பார்வையில் விடுதலைப் புலிகளை மட்டமானவர்களாக ஆக்க வேண்டும் என்பதே" என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

மேலும் இந்திய உளவுத்துறை மற்ற ஆயுதப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியிருப்பதாக ஹர்சிரத் சிங்கும் சரி...தீபிந்தர் சிங்கும் சரி அவர்களது நூல்களில் கூறி இருக்கின்றனர்.


மேலும் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் போர் நிறுத்தக் காலத்தில் இந்தியப் படையினருடன் சமாதானமாக பேச வந்த பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு இராசீவ் காந்தி ஆணையிட்டதாக ஹர்சரத் சிங் கூறுகின்றார்.

“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

ஏன் அவர்கள் அவ்வாறுக் கூற வேண்டும்? தமிழர்களின் நலனுக்காக போன இந்தியப்படைகள் எதற்காக விடுதலைப்புலிகளை குறிப்பாக எதிர்க்க வேண்டும்? ஏன் பிரபாகரனை குறி வைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளின் பதிலில் தான் இந்திய உளவுத்துறை ஒளிந்திருக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...ஈழத்தில் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் ஆயுதமேந்தி போராடிக் கொண்டு இருந்தன என்று. அவற்றுள் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறந்த ஒன்றாக மக்களின் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்தியா அவ்வமைப்புகளைப் பார்க்கின்றது. இந்தியாவிற்குத் தேவை இந்தியாவிற்கு கட்டுப்பட்ட ஒரு இயக்கம்...அவ்வாறு இருந்தால் தான் இந்தியாவின் கை அங்கே ஓங்கி இருக்கும்( அனைத்து வல்லரசு நாடுகளும் இதைத் தானே செய்கின்றன... தான் செல்லும் இடங்களில் அவைகளுக்கு வேண்டியது அவைகளின் சொல்லிற்கு தலை ஆட்டும் ஒரு பொம்மை அரசு அவ்வளவே). அதற்காகத் தான் இந்தியா அதன் காய்களை நகர்த்துகின்றது. ஆனால் அங்கே தான் ஒரு சிக்கல் இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் - பிரபாகரன். அவர்கள் முன்னின்றது மக்களின் உரிமைக்காக. இந்நிலையில் அவர்களை ஒன்றும் செய்யாமல் இந்தியாவினால் அதன் செல்வாக்கினை அப்பகுதிகளில் வளர்த்துக் கொள்ள முடியாது. அதனால் தான் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை குறைத்த அதே சமயம் மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை தாரளமாக வழங்கியது இந்தியா...அதனால் தான் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கினைக் குறைக்கவும் அதன் தலைவரான பிரபாகரனை கொல்வதற்கும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகளுக்கு உள்ளே பிரச்சனைகளை கிளப்பி விட்டும், ஆட்களை தன் வசப்படுத்திக் கொண்டு பிரிவினைகளைத் தோற்றுவித்தும் இந்தியா அதன் செல்வாக்கினை அங்கே வளர்த்துக் கொள்ள முயன்றது.

ஆனால் விதி வேறு விதமாக செயல்பட்டது.

திலீபனின் மரணம் (இந்தியா தனது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்) மற்றும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் ஒப்பந்தத்திற்கு மாறாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 17 பேர் இந்திய இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு (அவர்கள் அனைவரும் பின்னர் சயனைட் அருந்தி உயிர் இழந்தனர்) போன்ற நிகழ்வுகள் விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தச் செய்தன.

இம்முறை எதிரிகளாக சிங்களர்களுடன் சேர்ந்துக் கொண்டது இந்திய இராணுவமும் தான். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை ஆரம்பமாயிற்று. இன்று சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமைகளை எல்லாம் செய்து இருக்கின்றதோ அவை அனைத்தும் அன்றே இந்திய இராணுவம் செய்து இருந்தக் கொடுமைகளே.

1987 இல் ஆரம்பித்த அந்தச் சண்டை 1990 இல் ஒரு முடிவிற்கு வந்தது. அதற்கு காரணம் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி... அப்பொழுது ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://www.atimes.com/ind-pak/DD13Df02.html

2) இந்திய இராணுவத்தின் போர் குற்றங்கள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16991:-2&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16348&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17181&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17590&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17739&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17939&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16462:-11&catid=1367:2011&Itemid=615

3) இந்திய உளவுத் துறையின் செயல்பாடு
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.frontlineonnet.com/fl2418/stories/20070921505807900.htm

"12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்.

சரினே...இங்கிருந்து அங்க போனவங்க தான நீங்க...அப்புறம் எதுக்கு போன இடத்துல ஒழுங்கா அமைதியா வாழாம நீங்க தனி நாடு கேட்குறீங்க...அதுவும் அந்த நாட்டுல உங்க மொழியே ஆட்சி மொழியாவும் வேணுமாம்...ஏன் தேவை இல்லாம இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க...பேசாம இந்தியாவுக்கே வந்துருங்க...நீங்க இருந்த வட நாட்டிலேயே நீங்க உங்க உரிமையோட வாழ நிச்சயம் மத்திய அரசு வழி செய்யும்...அத விட்டுபுட்டு அங்கே இருக்கிற பூர்வக் குடியான தமிழன அடிக்கிறது எந்த விதத்துல நியாயம்...!!!

இது முகநூலில் நான் ரசித்த ஒரு கருத்து. சரி இருக்கட்டும் இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.

இந்தியாவில் இந்திரா கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவருக்கு பின்னர் ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். காலம் 1984 ஆம் ஆண்டு. ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இருந்தப் போராட்டம் மிகவும் தீவிரமானதொன்றாக மாறத் தொடங்கி இருந்தக் காலக்கட்டம்.

இலங்கையின் பிரதம மந்திரியாக ஜெயவர்தனே இருக்கின்றார். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுள் விடுதலைப் புலிகள் முக்கியமானதொரு அமைப்பாக உருவாகி இருக்கின்றனர்.

யாழ்ப்பாண நூலக எரிப்பு (கிட்டத்தட்ட 90000 விலைப் மதிக்கப் பட முடியாத தமிழ் நூல்கள், ஏடுகள், சுவடிகள் போன்றவைகள் ஒரே இரவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன), 1983 தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் (கருப்பு யூலை... கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டனர்) போன்றவைகள் சிங்களர்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருந்தன. பல்லுக்கு பல் இரத்தத்திற்கு இரத்தம் என்று அங்கங்கு தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்துக் கொண்டு இருந்தன.

இக்காலத்தில் தான் இராசீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக வருகின்றார். இள வயது...இந்தியாவினை ஆசியாவில் வல்லரசான நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு...வல்லரசென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்...நாம் அவை அனைத்திற்கும் 'பெரிய அண்ணனாக' இருக்க வேண்டும்...சரி தானே..அந்த கண்ணோட்டத்துடன் தான் இலங்கையை அவர் பார்கின்றார்.

ஒரு சிறியத் தீவான இலங்கையில் பிரச்சனைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வல்லரசுக் கனவினைக் கொண்ட ஒரு பெரிய நாடு என்ன செய்ய வேண்டும்...சிறிய நாட்டின் பிரச்சனையினுள் தலையிட்டு அதனைத் தீர்த்து வைக்க வேண்டும்...அப்படிச் செய்தால் தானே அது வல்லரசான ஒரு நாடு என்றுப் பொருள் படும். அதையேத் தான் இராசீவும் செய்ய எண்ணுகின்றார்.

"என்னயா நடக்கின்றது அங்கே இலங்கையில்... தமிழர்கள் தனி நாடு கேட்கின்றார்களே...நாம் என்ன செய்வது" என்றவாறே அவர் சிந்திக்க அவரைச் சுற்றி இருந்தவர்கள் "சிங்களர்களை நம்ப முடியாது...ஆனால் அதே நேரம் தமிழர்களுக்கும் தனி நாடு கொடுக்கக் கூடாது...பின்னர் இந்தியாவிலும் அக்குரல்கள் எழும்பக் கூடும்....இரண்டுமே இந்திய நலன்களுக்கு மாறானவை...நாம் செய்ய வேண்டியது நிலைமையை பயன்படுத்திக் கொண்டு நமக்கு சாதகமான அரசினை, சூழலை இலங்கையில் இந்நேரத்தில் உருவாக்கிக் கொள்வதனை மட்டுமே..." என்றுக் கூற வல்லரசுக் கனவிலிருந்த இராசீவும் அவர்களின் கூற்றினை ஏற்றுக் கொண்டார். இலங்கையைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாற ஆரம்பித்தது....மறைமுகமாக. மறைமுகமாக என்றால் அங்கே இந்திய உளவுத் துறை இல்லாமலா?

இலங்கை அரசியலுள் தனது மூக்கினை நுழைக்க ஆரம்பித்தது இந்திய உளவு அமைப்பான 'ரா (RAW)'. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகள் பலவற்றுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்பதனை வரலாறு நமக்கு காண்பிக்கின்றது.

சரி இருக்கட்டும்...இலங்கையின் மேல் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுவுவதே இலக்கு என்று முடிவு செய்யப்பட்டதின் பின்னர் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று பார்க்க வேண்டாமா...அதில் தான் இந்தியா முழு மூச்சாக ஈடுப்பட ஆரம்பித்தது.

'இரண்டுத் தரப்பினருக்குள்ளும் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்யலாம்...ஆனால் அமைதி என்பது வெளிப்புற அமைதியாகவே இருக்க வேண்டும்...அதே நேரம் இலங்கையில் உள்ள பல்வேறு ஆயுதப் போராளிக் குழுக்களில் நம்முடைய எண்ணத்திற்கு யார் சரிப்பட்டு வருவார்களோ அவர்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்து அவர்களை வலுப்படுத்திக்கொள்ளலாம்...பின்னர் என்றாவது தேவை என்றால் அவர்களை நாம் நம்முடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்...இதன் மூலம் இலங்கையில் நம்முடைய பிடியை வலுவாகவே வைத்துக் கொள்ளலாம். மேலும் நம்முடைய இராணுவத்தின் ஒரு பகுதி இங்கே இருந்தால் நமக்கும் நலமாக இருக்கும். ஆம்...அவ்வாறே செய்யலாம்' என்று முடிவினை எடுத்துக் கொண்டு இலங்கையினை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இந்தியா.

1987 ஆம் ஆண்டு இராசீவிற்கும் ஜெயவர்தனேவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (அந்த ஒப்பந்தத்தினைப் பற்றிப் பார்க்க இந்த இணைப்பினை சொடுக்கவும்)

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழர்களுக்கென்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அங்கே தேர்தலின் வாயிலாக ஒரு அரசு அமைக்கப்படும். மேலும் அனைத்தும் நன்றாக நடக்கின்றனவா என்பதனை சரி பார்க்க இந்தியாவில் இருந்து ஒரு அமைதிப்படை அங்கே அனுப்பி வைக்கப்படும்.

தமிழர்களின் உரிமைக்காகவென்று போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக யாருமே சேர்க்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

பிரபாகரன் இந்தியாவினை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். ஒப்பந்தத்தினை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை நேரும் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. இருந்தும் இராசீவ் காந்தி பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, என்ன தான் நடக்கின்றது என்றுக் காண தயாரானார். அதனைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் யாழ்பாணத்தில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது...

"எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் ஆயினர்.

ஆனால் உண்மையில் இந்தியாவின் அந்த ஒப்பந்தத்தை பலர் அன்று சந்தேகக் கண்ணோடு தான் கண்டுக் கொண்டு இருந்தனர். பலருக்கு அது பிடிக்கவில்லை... தமிழர்களுக்கும் சரி...சிங்களர்களுக்கும் சரி. அதன் விளைவு தான் ராசீவ் இலங்கையில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்த நாளான 30 யூலை 1987 ஆம் ஆண்டு தெரிந்தது.

இராசீவை வரவேற்ற இலங்கை இராணுவ வீரர்களில் ஒருவன் தனது துப்பாக்கியினால் இராசீவை தாக்க முயன்றான். மயிரிழையில் உயிர் தப்பினார் இராசீவ். நல்லவேளை அணிவகுப்பில் கலந்துக் கொண்ட வீரர்களின் துப்பாக்கியில் குண்டுகள் போட்டிருக்கப்படவில்லை. மாறி போடப்பட்டு இருந்தாலோ அன்றே இராசீவ் கொல்லப்பட்டு இருக்கக் கூடும்.

ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வினைப் பற்றி இன்று எந்தக் காங்கிரசுக்காரர்களும் பேசுவதில்லை....சிங்களர்களை அவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

சரி இருக்கட்டும்...இந்தியாவில் இருந்து அமைதியினை காக்க படை வீரர்கள் இலங்கையில் இறங்கத் துவங்கி விட்டனர்...தமிழ் ஆயுதப் போராளிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க துவங்கி விட்டனர்... அடுத்து என்ன நடந்தது/நடந்து இருக்கலாம்...காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://en.wikipedia.org/wiki/Vijitha_Rohana

"வேண்டும் தனி நாடு...!!!"

1970 களில் பெருன்பான்மையான ஈழத் தமிழர்களின் மத்தியில் இருந்த சிந்தனை இது தான். சிங்களவர்களின் அடக்குமுறை, இளைஞர்களின் எழுச்சி, அமைதியானப் போராட்டங்களின் தோல்விகள் என்றுப் பல காரணிகள் அவர்களை அம்முடிவிற்கு வர வைத்து இருந்தாலும் அவர்களை மேலும் கனவுக் காணவும் தனி நாடுக் குறித்துப் போராடவும் வைத்த மற்றுமொரு நிகழ்வும் இருக்கத்தான் செய்தது.

அது தான் வங்க தேசப் பிரிவினை.

1971 இல் அன்றைக்கு மேற்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய வங்காள தேசம்) இடையில் நிகழ்ந்த மோதலில் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு வங்காள தேசம் என்ற தனி நாட்டினைப் பெற்றுத் தந்து இருந்தது.

அந்த நிகழ்வினைத் தான் ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் கண்டுக் கொண்டு இருந்தனர்...'கண்டீர்களா...இந்தியா வங்காளதேசத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்து விட்டது. ஒரு வழியாக வங்காளத்து மக்கள் விடுதலை அடைந்து விட்டார்கள்... இன்று அவர்கள்... நாளை நாம்... ஏன் நடக்காது...நம்முடைய உறவுகள் இந்தியாவில் இருக்கின்றார்கள் தானே... நிச்சயம் நமக்காக அவர்கள் குரல் கொடுப்பார்கள்...இந்தியா நிச்சயம் நமக்கு உதவி செய்யும்...நாமும் வங்காள மக்கள் போல் விரைவில் சுதந்திரம் அடைந்து விடுவோம்...!!!" என்றே அவர்கள் நம்பிக்கையுடன் இந்தியாவினைக் கண்டுக் கொண்டு இருந்தனர்.

இந்தியாவும் அவர்களைக் கண்டுக் கொண்டு தான் இருந்தது. இந்த நிலையில் தான் நாம் அன்றைய உலக அரசியல் நிலவரத்தினை சற்றுக் கண்டு விட வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினை எடுத்துக் கொண்டோம் என்றால் அதன் வடக்கு எல்லையில் இருக்கும் நாடுகளுடன் நட்புறவுகள் என்று ஏதும் பெரிதாக இல்லை...காரணம் அனைத்து நாடுகளும் ஆசியாவிலே யார் வல்லரசு ஆவது என்ற போட்டியினிலே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இருந்தன...அதன் காரணமாக வடக்குப் பகுதியில் யுத்தம் என்பது சர்வ சாதாரணமான ஒரு விடயமாக இருந்து வந்தது.

ஆனால் இந்தியாவின் தெற்குப் பகுதியிலோ அதற்கு முற்றிலும் மாறுப்பட்ட ஒரு சூழலே நிலவி வந்தது. காரணம் மூன்று புறமும் கடல் சூழ்ந்து உள்ள தென்னாட்டின் மீது எவரும் இலகுவில் படை எடுத்து வந்து விட முடியாது. அதன் காரணமாக வட இந்தியாவினை விட தெற்கு இந்தியா மிகவும் பாதுகாப்பானதொன்றாக இருக்கின்றது. தென் இந்தியாவின் மீது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்றால் ஒன்று மாபெரும் கடற்படையோடு வர வேண்டும்...இல்லையெனில் இந்தியாவின் காலின் கீழ் சிறு கண்ணீர்த் துளியினைப் போன்று இருக்கும் தீவான இலங்கையினை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.

இது அமெரிக்காவிற்கு தெரியும்...சீனாவிற்கு தெரியும்...பாகிஸ்தானிற்கு தெரியும்...இந்தியாவிற்கும் தெரியும்...!!! அந்த ஒரு காரணத்தினாலேயே தான் அந்நாடுகளுக்கு இலங்கையின் மீது ஒரு கண் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது. (இன்றும் கூட பல உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக் கொண்டு இருப்பதற்கு இது ஒன்று தான் முக்கியமானக் காரணம்)

மேலாக இந்தியா 1970 களிலும் சரி 1980 களிலும் சரி ஒரு தீவிர சோவியத் ஆதரவு நாடாகத் தான் இருந்தது...சோவியத் ஆதரவு என்றாலே அமெரிக்க எதிர்ப்பு என்பது அங்கே இயல்பாகவே வந்து விடும் தானே. இந்தியா அப்படி ஒரு நாடாகத் தான் இருந்தது அக்காலத்தில்.

அக்காலத்தில் தான் இந்திரா காந்தி இலங்கையினைக் கண்டுக் கொண்டு இருக்கின்றார்...தமிழர்கள் அங்கே தனி நாடுக் கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்...அவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டிலும் குரல்கள் எழும்பத் தொடங்கி உள்ளன. மேலும் இலங்கை அமெரிக்காவிற்கு ஆதரவாக வேறு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது...அது போதாதென்று பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் வேறு நல்லுறவுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்திரா காந்தி சிந்திக்கின்றார்..."எந்நேரம் வேண்டும் என்றாலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் இருக்கின்றன... ஏற்கனவே அமெரிக்கர்களுடனும் பாகிஸ்தானியர்களுடனும் நட்புறவை இலங்கை வளர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது...இது இந்தியாவிற்கு ஆபத்து. இலங்கையினை நாம் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்றால் நாம் அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிப் புரிய வேண்டும்...இலங்கையில் தமிழர்கள் வலுவாக இருந்தனர் என்றால் அங்கே வேறு நாட்டவர்கள் அவர்களது செல்வாக்கினை எளிதில் நிலை நாட்ட முடியாது... மேலாக ஈழத் தமிழர்களும் சரி இந்தியத் தமிழர்களும் சரி ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய மாட்டார்கள்... அவ்வாறு இருக்க இந்தியாவின் தெற்குப் பகுதி பாதுகாப்பாக இருக்கும்...கூடுதலாக தமிழகத்தில் இருந்து வேறு ஈழத் தமிழர்களுக்கு உதவிப் புரியுங்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர்... இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நாம் உதவிப் புரிந்தோம் என்றால் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரினை எடுத்து விடலாம்...கூடுதலாக சிங்களவர்களையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியினை பாதுகாப்பானதாக பார்த்து கொள்ளலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..நமக்கு நல்லது தானே!!!" என்று எண்ணிய வண்ணம் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன் வருகின்றார் இந்திரா காந்தி.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்கின்றது..."சுதந்திரத்திற்காக போராடப் போகின்றீர்களா...நல்லது...இன்னின தேதிகளில் உங்களுக்கான பயிற்சி முகாம்கள் இருக்கின்றன...உங்களுக்கான பயணத் திட்டங்கள் இதோ...சரியாக உங்களின் அமைப்பின் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்..." என்றே இந்தியா தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுக்கு அழைப்பினை விடுக்கின்றது.

உற்சாகமாக தமிழ் போராளி அமைப்புகள் இந்தியாவினுள் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன (ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் அமைப்புகள் பல இருந்தன..விடுதலைப் புலிகள் அப்படிப்பட்ட அமைப்புகளில் இருந்த ஒரு அமைப்பே ஆகும்). இலங்கையோ இந்தியாவினை என்ன செய்வது என்றே எண்ணிக் கொண்டு இருந்தது.

இந்தியாவின் ஆதரவில் ஈழத் தமிழர்களின் போராட்டம் புத்துணர்வுடன்  தொடர்கின்றது....நிச்சயம் நமக்கென்று ஒரு தேசம் நாம் உரிமையுடன் வாழ கிடைத்து விடும் என்று எண்ணியே ஈழத்தில் மக்களும் கனவுகளைக் கண்டுக் கொண்டு இருந்தனர். "அதோ இந்திரா அம்மையார் இருக்கின்றாரே...நமக்கென கவலை...நிச்சயம் நமக்கு சுதந்திரம் கிட்டி விடும்..." என்றே மக்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். இந்தியா அவர்களுக்கு உதவி செய்வது வெறும் அரசியல் நோக்கிற்காக மட்டுமே என்பதனை அறிந்திருந்த சில போராளி இயக்கங்களும் இந்திராவின் மேல் மரியாதையை வைத்து இருந்தன. ஆனால் முழுதாய் இந்தியாவினை அவர்கள் நம்பவில்லை.

"இந்தியாவிற்கு நம்முடைய உதவிகள் தேவை...அதனால் நமக்கு அவர்கள் உதவுகின்றனர்....மாறாக நாம் படும் இன்னல்களை எண்ணி அவர்கள் உதவுகின்றனர் என்று நாம் கருத முடியாது...இருப்பீனும் அவர்களுடைய உதவிக்கு நாம் நிச்சயம் நன்றிக் கடன் பட்டவர்களாகத்தான் இருப்போம்...நம்முடைய உரிமைகளுக்கு அவர்களால் பங்கம் வராத வரை" என்ற எண்ணம் அவ்வியக்கங்களுள் இருந்துக் கொண்டு தான் இருந்தது.

இந்நிலையில் தான் இந்திரா காந்தி கொலை செய்யப்படுகின்றார். சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர்... தமிழர்களோ 'ஐயகோ... ஈழத்தினைப் பெற்றுத் தருவார் என்று எண்ணிய அம்மையார் இறந்து விட்டார்களே...அடுத்து நம்முடைய நிலை என்னவாகும்...இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்...' என்று கவலைக் கொள்ளத் தொடங்கினர்.

இந்தியாவில் இந்திராவினைத் தொடர்ந்து ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்கின்றார்.

தொடரும்....!!!

இன்றைக்கு ஈழத்திற்காக மாபெரும் எழுச்சி தமிழர்களின் மத்தியில் எழுந்துள்ளது...'ஈழத்தில் உள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும்...அவர்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்...அதற்கு அவர்களுக்கென்று தனி நாடு வேண்டும்...அதில் சிறிதளவும் மாற்றுக் கருத்துக்கள் எங்களிடம் இல்லை...கூடுதலாக தமிழர்களின் மேல் கொடூரமான இனப்படுகொலையினை ஏவி விட்ட அனைத்து நபர்களின் மேலும் நேர்மையான விசாரணையும் அதற்கேற்ற தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.' இதுவே தான் அனைத்து தமிழர்களின் குரலாக இன்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இக்குரல்களுக்கு எதிராக ஒலிக்கும் சில குரல்களையும் இந்நேரத்தில் நாம் இனம் காண வேண்டி இருக்கின்றது.

"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.

"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்.


இப்பொழுது நாம் காண வேண்டியது அரசியல் அளவில் அவர்களுள் பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புவது ஏன்?

இக்கட்சிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்ட பொழுதும் ஒற்றுமையாக மௌனம் காப்பது ஏன்?

ஏன் தமிழர்களின் மீது மட்டும் இத்தனை வன்மம்?

இந்தக் கேள்வியினை நண்பர் ஒருவருடன் விவாதித்தப் பொழுது அவர் கூறிய விடை,

'ஆமாம்...அந்தக் கட்சிகளினால் தமிழகத்துல ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது...அதுனால தான் அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டு அவன் எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த இடத்தை மட்டும் பார்த்துக்கிறான்..."

ஆனால் இவ்விடையினை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்,

1) எந்த கட்சியானாலும் சரி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். அந்நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றால் செல்வாக்கினைப் பெறவே கட்சிகள் முயற்சி செய்யுமே அன்றி, அவர்களே அவர்களின் செல்வாக்கினைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் செயலாற்ற மாட்டார்கள்.அவ்வாறே அவர்கள் செயலாற்ற ஆரம்பித்தனர் என்றால் விரைவில் அவர்களின் கட்சி அழிந்து விடும்.

2) அந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்கும் அவர்கள் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறுவதற்கு முடியாமல் இருப்பதற்கும் அடிப்படையானக் காரணம் ஏதேனும் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே மேலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று நாம் காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்திலே அக்கட்சிகள் கால் ஊன்றாதிருப்பதற்கு என்ன காரணம் என்றே காண வேண்டி இருக்கின்றது.

அப்படி அந்த காரணத்தினை நாம் தேடினோம் என்றால் அதற்கு விடையாய் கிடைப்பது திராவிடர் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் இங்கே எழுந்தக் காரணத்தினாலேயே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளால் இங்கே வேரூன்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

அதாவது பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.

ஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல் தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது. இதனை அம்பேத்கர் அவர்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுமே கூறி இருக்கின்றனர்.

அப்படி இருக்க தமிழகத்தினில் தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய தமிழர் இயக்கங்களின் வாயிலாக ஆரியர்கள்/பிராமணர்களின் இயக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திலே பின்னடைவு அடைகின்றன. மீண்டும் அக்கொள்கைகளோ அந்த இயக்கங்களோ தமிழகத்திலே மலரப் போவதே இல்லை.

இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஆரியர்கள் பயப்படுகின்றனர். ஒருவேளை இந்தத் தெளிவு மற்ற மாநிலங்களுக்கும் பரவி விட்டால், அங்கும் நமது செல்வாக்கு மலிந்து விட்டால்... நாம் என்ன செய்வோம்? நாம் எங்குப் போவோம்?

அவர்களின் பயத்திற்கும் காரணமின்றி இல்லை.

இந்திய சனத்தொகையினில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே... அதிலும் பிராமணர்கள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. அந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் அவர்களின் செல்வாக்கு சரிந்து விட்டால், அவர்களின் வேடம் கலைந்து விட்டால்...அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் போக்கிடம் தான் என்ன?

அதனால் தான் பிரச்சனைக்குரிய மூலத்தினை அழித்துக்கட்ட அவர்கள் உறுதியாக முயல்கின்றனர்...அரசாட்சிக் காலத்தில் அரசனைக் கைக்குள் போட்டுவிட்டு எளிதாக மக்களை தாழ்த்தியதினைப் போன்ற வசதிகளை சனநாயகம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தான் அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

ஆரியர் - திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்று கதைகளைக் கட்டி விடுவது, தங்களால் இயன்ற அளவு வரலாற்றினை மறைக்க/திரிக்க முயல்வது, பெருன்பான்மையான திராவிட மக்கள் ஒற்றுமையாக இருக்காத வண்ணம் அவர்களின் நடுவே சாதி/ மதச் சண்டைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற இவை அனைத்தையும் தாங்கள் அடிமையாக்கி வைத்துள்ள சைவ வைணவ சமயங்கள் மூலமாகவும், சூழ்ச்சியினால் பிடித்த அரசியல் உரிமையினாலும் செம்மையாகச் செய்துக் கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.


ஆனால் தமிழும் சரி தமிழர்களும் சரி அவர்களுக்கு மிகப் பெரிய இடையூறாகத் தான் இருக்கின்றனர். பிராமணர்கள், சைவ வைணவ சமயத்தினை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பதனை தமிழ் இலக்கியங்கள் பறைசாட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழர்களோ தங்களின் மண்ணில் பிராமண செல்வாக்கு உள்ள இயக்கங்களை துரத்தி அடித்து விட்டு இருக்கின்றனர்.

இது தான் ஆரியர்களுக்கு கவலையையும் கோபத்தினையும் வர வைக்கின்றது. சைவ வைணவ சமயங்களை அவர்கள் அடிமையாக்கி வைத்து இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டால் அச் சமயங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடி போய் விடும். பின்னர் எவ்வாறு அவர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றுக் கூறிக் கொண்டு வாழ்வை வாழ்வது?

மேலும் தமிழர்களைப் போன்றே அனைத்து மக்களும் ஆரியச் சதியினை அறிந்துக் கொண்டு தெளிவடைந்து விட்டனர் என்றால் ஆரியர்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும்? வேறு எங்கும் செல்லுபடியாகாதல்லவா....அதனால் தான் இங்கே தமிழ் மொழியும் தமிழர்கள் அழிவதையும் மகிழ்ச்சியாக ஆரியன் கண்டுக் கொண்டு நிற்கின்றான். பிரச்சனைக்குரியவர்கள் ஒழிந்துவிட்டால் பின்னர் அவன் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...!!!

அதனால் தான் தனி ஈழம் அமைவதை அவன் தடுக்கின்றான். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யாது நிற்கின்றான். தன்னை இந்து மதத்தின் தலைவன் என்றுக் (பொய்) கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களையும் இந்துக்களான தமிழர்களையும் கொன்றுக் குவித்த இராசபக்சேவினை மகிழ்ச்சியாய் திருப்பதிக் கோவிலில் வரவேற்கின்றான் (சிங்களர்கள் தங்களை ஆரியர்கள் என்றுக் கூறிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது). அவர்களுக்குத் தேவை தமிழ் அழிய வேண்டும்... தமிழர்கள் அழிய வேண்டும்...ஏன் என்றால் அவைகள் அழிந்தால் தான் அவன் நிம்மதியாக மக்களை ஏமாற்றி வாழ முடியும்....!!!

இதனால் தான் திருமூலர் அன்றே பாடிச் சென்று விட்டார்...

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

இன்று ஈழத்தில் நிகழ்வதும்...இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டு இருப்பதும் ஆரியத் திராவிடப் போரின் ஒருக் கட்டமே அன்றி வேறல்ல...!!!

இவை அனைத்தையும் விரிவாகக் காண முயற்சிப்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

1) சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினரா?

இல்லை. சிங்களவர்கள் என்பவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த கலிங்கத்துப் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு இலங்கைக்கு பிழைத்துப் போன இளவரசன் விஜய சிங்கனின் வம்சாவழியினரே ஆவர்.

அவர்கள் இலங்கைக்குப் போவதற்கு முன்னரே அங்கே தமிழர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் வந்திருக்கின்றனர். இதனை விளக்கும் வண்ணம் இலங்கை அரசாங்கமே ஒரு தபால் தலையினை வெளியிட்டு உள்ளது.2) அப்படி என்றால் அங்கே தமிழர்களும் வசித்து வந்தார்கள் என்றுக் கூறுகின்றீர்களா?

ஆம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இலங்கை முழுவதையும் பிடிக்கும் வரை இலங்கையில் தமிழர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர்...சிங்களவர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர். இலங்கை என்றுமே ஒரே நாடாக இருந்தது கிடையாது. பல்வேறு நாடுகள் இலங்கையில் இருந்து வந்துக் கொண்டு தான் இருந்தன.3) இலங்கை ஒரே நாடாக இருந்தது கிடையாது என்றுக் கூறுகின்றீர்களே...ஆனால் இன்று அது ஒரே நாடாகத் தானே இருக்கின்றது. இது எவ்வாறு எப்பொழுது நிகழ்ந்தது?

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கை ஒரே நாடாக மாற்றப்படுகின்றது. இது நடக்கும் காலம் 1831 ஆம் ஆண்டு. தமிழர்கள் ஆண்ட பகுதியினையும், சிங்களவர்கள் ஆண்ட பகுதியினையும் ஒன்றாக இணைத்து ஒரே நாடாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே.

4) தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினர் என்றுக் கூறுகின்றீர்கள். ஆனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கச் சென்றவர்கள் தான் தமிழர்கள் என்றும் அவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் எவ்வாறு தனி நாடுக் கோரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றனவே...அது ஏன்?

இலங்கையில் இன்று இரு வகையான தமிழர்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் ஈழத்தினையே பூர்வீகமாகக் கொண்டத் தமிழர்கள். மற்றொரு வகையினர் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலைத் தோட்டங்களின் பணிப்புரிய அழைத்துச் செல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள். இவர்கள் இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.

அந்த வேறுபாட்டினை அறியாது தான் இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்தியாவில் இருந்துச் சென்ற தமிழர்கள் என்ற தவறானக் கருத்து இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டும் விட்டனர்.

5) சரிங்க...தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியாகவே இருக்கட்டும்...ஆனால் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று கருதாமல் தனி நாடுக் கோருவது சரியா?

தனி நாடு என்றக் கோரிக்கை திடீரென்று எழுந்த ஒன்று அல்ல. மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே எண்ணினர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல சிங்களவர்களின் செயல்களால் தமிழர்கள் தாங்கள் தங்களது உரிமைகளோடு வாழ்வதற்கு தனி நாடினைப் பெறுவதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதனை உணர்ந்தே 'தனி ஈழம்' என்றக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டில். தமிழர்கள் தனி ஈழம் என்றக் கோரிக்கையினை முன் வைக்க ஆரம்பித்தது 1973 ஆம் ஆண்டில் இருந்து தான். அதாவது சுமார் 25 ஆண்டுகள் அமைதியாக ஒன்றாக வாழ முயற்சிகள் செய்து, அவைகள் அனைத்தும் பலன் தராது சென்ற பின்னர் தான் தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை தமிழர்கள் அங்கே முன் வைக்கின்றனர்.

6) அதற்காக ஆயுதப் போராட்டத்தினை தான் முன்னெடுக்க வேண்டுமா?

ஈழத் தமிழர்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியான காந்திய முறையில் தான் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்துக் கொண்டு வந்தனர். தந்தை செல்வா என்ற ஒரு காந்தியவாதியின் தலைமையில் தான் 30 ஆண்டுகளாக தமிழர்கள் போராடினார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தும், தமிழர்களின் மேல் வன்முறையினை பயன்படுத்தியும் சிங்கள அரச தொடர்ந்து தமிழர்களை ஒடுக்கியதைக் கண்ட இளைஞர்கள் சிலர் தான் பின்னர் ஆயுதப் போராட்டங்களில் இறங்கினர்.

எனவே தமிழர் போராட்டங்கள் என்பது ஆரம்பத்தினில் இருந்தே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு போராட்டம் அல்ல...காந்திய வழியிலான போராட்டம் நீண்ட காலங்களுக்கு பின்னரே ஆயுதப் போராட்டமாக மாறி இருக்கின்றது.

காந்தி வாழ்ந்த மண்ணில் தான் பகத் சிங்கும் சுபாஷ் சந்திர போசும் செம்பகராமன் பிள்ளையும் தோன்றி இருக்கின்றார்கள்.

7) தனி ஈழம் தான் தீர்வு என்கின்றீர்களா?

ஒன்றரை இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். பிஞ்சுகள் என்றுக் கூட பார்க்காது பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் அகதிகளாக தமிழர்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் இடங்களின் சிங்களர்கள் இடம் பெயர்ந்து நாட்கள் பல ஓடி விட்டன.

இன்றும் சிங்களப் படைகளில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலைப் பெற்று இருக்கின்றன. சுதந்திரம் இல்லாத அடிமைகளாகவே தமிழர்கள் அங்கே உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.

இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்கள் வாழ முடியுமா இல்லை வாழ்ந்தாகத் தான் வேண்டுமா?

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் தனித் தனி நாடுகளைக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் தானே. அப்படி இருக்க தமிழர்கள் ஆண்ட பகுதியை தமிழர்களே மீண்டும் பெறுவது என்பது நியாயமான கோரிக்கை தானே.

மாபெரும் இழப்புகள் இலங்கையில் நம் இனம் கண்டிருக்கின்றது. ஒரு இனப் படுகொலையே அங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இதில் இருந்து மீளவும் சுய மரியாதையுடன் சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் அவர்களுக்கு அவர்களின் உரிமை வேண்டும்.

அவர்களுக்கு உரிமை வேண்டும் என்றால் தனி ஈழம் மலர வேண்டும்.

அதற்கு நமது குரல்கள் வேண்டும்...!!!

தமிழர்களின் தாகம்... தனி ஈழத் தாயகம்...!!!

பண்டாரநாயகா இறந்து விட்டார்...அவருடன் இட்டுக் கொண்ட ஒப்பந்தமும் செயல்படுத்தப்படவில்லை... இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் என்னவாகும் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அடுத்த தேர்தலில் வென்று இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகின்றார் பண்டாரநாயகாவின் மனைவியார் திருமதி. சீறிமாவோ பண்டாரநாயகா.

ஆனால் இவருடையக் கொள்கையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை... "சிங்களமே ஆட்சி மொழி...உத்தியோக மொழி...நீதி மன்ற மொழி...இதில் மாற்றமே இல்லை... சிங்களம் தெரியாத பணியாளர்கள் சிங்களம் கற்றுக் கொள்ள வேண்டும்...இல்லையேல் வேலை இழக்க நேரிடும்...அனைத்துப் பள்ளிகளிலும் சிங்களமே போதனை மொழியாக இருக்கும்...சிங்கள மொழியில் தேர்ச்சி பெறத் தவறினால் ஆசிரியர்களுக்கும் சரி மற்ற பணியாளர்களுக்கும் சரி வேலை இல்லாத நிலை உருவாகிவிடும்...நன்றி". இதுவே தான் அவரது கொள்கையாக இருந்தது.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இலங்கையில் தமிழுக்கு இடம் இல்லை... நீ இங்கே இருக்க வேண்டுமானால் சிங்களவனாக மாறி விடு...வேறு வழிகள் உனக்குக் கிடையாது. அவ்வளவே...!!!

"பார்த்தீர்களா ஐயா...நம்மை இரண்டாம் தர குடிமக்களாகவே அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது...ஏற்கனவே 1958 இல் அவர்கள் அடித்தப் பொழுது பொறுத்துக் கொண்டோம்...ஆனால் அவர்கள் மாறியபடி தெரியவில்லை...இப்படியே போனால் நாம் என்ன ஆவது தந்தையே...நாம் இருவரும் தனி நாடுகளாக இருந்தவர்கள் தானே...தனியாகப் பிரிந்து விடலாமே...என்ன சொல்லுகின்றீர்?" என்று இளைஞர்களின் மத்தியில் புதிதாக எழுந்த சிந்தனையை தந்தை செல்வா பொறுமையாகப் பார்த்தார்.

"இல்லை இளைஞர்களே..உங்களின் உணர்ச்சிகள் எனக்குப் புரிகின்றன...ஆனால் நாம் தனி நாடு கோர வேண்டிய அளவிற்கு பிரச்சனைகள் மோசமாகவில்லை என்றே நான் எண்ணுகின்றேன்... பேசிப் பார்ப்போம்...நிச்சயம் உண்மை வெல்லும்..." என்றார்.

சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் 'தந்தை செல்வாவே கூறி விட்டார்... இன்னும் சில நாட்களுக்கு பொறுமையாகத் தான் இருப்போமே...நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்க இருக்கவே இருக்கின்றது சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போராட்டங்கள்' என்றே அகிம்சை வழியில் போராடத் தொடங்கினர்.

ஆனால் முடிவு தான் அவர்களுக்குக் கிட்டியப்பாடில்லை. அரசு வன்முறையால் அவர்களை அடைக்க முயலும்...வன்முறை கை கொடுக்கவில்லையென்றால் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்...வாக்குறுதிகளையும் அள்ளி வீசும். ஆனால் அந்த வாக்குறுதிகளோ வெறும் வார்த்தையாகவே நின்றுப் போகும்.

இந்த நிலை தான் யார் ஆட்சிக்கு வந்தாலும். சிங்களவர்கள் பெருவாரியாக இருக்கும் நாட்டினில் அவர்கள் தானே ஆட்சிக்கு வர முடியும்...அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சில நேரங்களில் தமிழர்களின் உதவி தேவைப்படும்...அப்பொழுது தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று வாக்கினைக் கொடுத்து விட்டு ஆட்சியினைப் பிடித்தப் பின்பு அவ்வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது என்பது அனைத்து சிங்கள கட்சிகளும் செய்யும் ஒரு பொதுவான செயலாக மாறிற்று.

சில நபர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு சிங்கள மக்கள், பத்திரிக்கைகள், எதிர் கட்சியினர் ஆகியோரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தமையின் காரணமாக அவர்களின் எண்ணம் வெறும் எண்ணமாகவே போயிற்று.

இவ்வாறே ஆண்டுகள் பல கடந்தன...தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள அரசு நிச்சயம் வழங்காது என்ற எண்ணங்கள் தமிழர்களின் மத்தியில் நன்றாக பதியத் தொடங்கி இருந்தன.

தோல்வி அடைந்த பேச்சுவார்த்தைகள்...கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தங்கள்...ஏமாற்றங்கள் இவைகளை மட்டும் தான் தமிழர்களின் போராட்டங்கள் பெற்றுத் தந்துக் கொண்டு இருந்தன... புதிதாக தமிழர்களின் மரணங்களும் அங்கங்கே ஏற்படலாயின. 1948 இல் ஆரம்பித்த போராட்டங்கள் 1971 வரை இவைகளை மட்டுமே தமிழர்களுக்குத் தந்து இருந்தன.

23 வருடங்கள் தமிழர்களின் பொறுமையினை சற்று சோதித்துத் தான் பார்த்து இருந்தன. அது போதாதென்று கல்வியினை சீர்திருத்தும் திட்டம் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் தமிழ் மாணவர்களை கொந்தளிக்கச் செய்து இருந்தது.

'தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் நேர்மையாக மதிப்பெண்கள் வழங்குவது இல்லை...அவர்களுக்கு குறுக்கு வழியில் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றனர்...அதனால் இனிமேல் தமிழ் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மறுபரிசீலனைப் பண்ணப்படும்...கூடுதலாக நேர்மையாக தேர்வினை எழுதும் சிங்கள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.' இது தான் சுருக்கமாக அந்தக் கல்விச் சீர்திருத்தத் திட்டம். இதன் மூலம் சிங்கள மாணவனை விட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ் மாணவன் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை உருவானது.

மாணவர்கள் கொதித்தார்கள்...போராட்டத்தில் இறங்கினார்கள்...அவர்களின் போராட்டங்கள் காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டன...பலர் கைது செய்யப்பட்டனர்...சிலர் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர்...சிலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாது மறைந்தனர். சிங்கள அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் இளைஞர்களை வேறு விதமான போராட்டத்திற்கு தயார் செய்துக் கொண்டு இருந்தன.

அந்தக் காலக்கட்டத்தில் தந்தை செல்வாவும் இனியும் பேச்சு வார்த்தைகள் பலன் தருமா? என்ற எண்ணத்தினில் இருந்துக் கொண்டு இருந்தார். அவரின் கட்சிக்குள்ளே 'தனி நாடு தான் தீர்வு தந்தையே...' என்ற குரல்கள் பலமாகக் கேட்கத் தொடங்கி இருந்தன. 'தனி நாடு கேட்பதற்கு காலம் கனியவில்லை என்று முன்னர் கூறியவர்களும் இப்பொழுது வேறு வழி இல்லாதவர்களாக தனி நாடு கோரலாமா என்ற எண்ணத்தில் இருந்தனர்.

தந்தை செல்வா அரசுக்கு கடிதம் எழுதினார்...'அரசே...தமிழர்களின் உரிமைகளும் அவர்களது மண்ணும் இங்கே பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகின்றோம்...நாம் சுதந்திரம் பெற்ற பொழுது எந்த கொள்கையுடன் இருந்தோமோ அதற்கு நீங்கள் மதிப்பளிப்பீர் என்றே கருதி உங்களின் பதிலினை ஆர்வத்துடன் எதிர் பார்கின்றேன்...நன்றிகள்'

பதில் வரவில்லை...ஏன் கடிதம் கிட்டியது என்ற செய்தியே வரவில்லை.

"தந்தை செல்வாவின் வழிமுறைகள் அருமையானவை தான்... ஆனால் சிங்களவர்களின் முன்னே அவை அர்த்தமற்று நிற்கின்றன...நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்...கடிதத்திற்கு பதில் இல்லையா...சரி...துப்பாக்கிச் சத்தத்திற்கு பதில் வருகின்றதா என்று பார்ப்போம்" என்று சில இளைஞர்கள் கூட்டம் களம் இறங்கத் தொடங்கியதும் அப்பொழுது தான்.

அவ்வாறு களம் இறங்கியவர்களுள் ஒருவன் தான் மாவீரன் பிரபாகரன்.

நிற்க...!!!

ஈழத்தின் வரலாற்றினைப் பற்றி இவ்வளவு தூரம் கண்டாயிற்று...25 வருட அமைதியானப் போராட்டங்கள் எவ்வித தீர்வினையும் தமிழர்களுக்கு வழங்க வில்லை. இந்நிலையில் நீங்கள் அக்காலத்தில் இருந்தீர்கள் என்றால் உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...?

ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக எந்நேரமும் பயத்துடன் வாழ்வீர்களா...அல்லது 'எங்கள் நாடு எங்களுக்கே' என்றுக் கோருவீர்களா?

உங்களின் நடவடிக்கை சிந்தனை எவ்வாறு இருக்கும்?

'எங்களின் நாடு எங்களுக்கே...உரிமைகளை இழந்து வாழ நாங்கள் அடிமைகள் அல்ல...எங்களின் உரிமைகளை நீ மறுக்கின்றாயா? நல்லது அதை நாங்களே எடுத்துக் கொள்கின்றோம்...!!!' என்பதே உங்களின் சிந்தனையாக இருக்கும் என்றால் உங்களின் சிந்தனை தான் அன்றைய ஈழத் தமிழ் இளைஞர்களின் சிந்தனை.

அதுவே தான் பிரபாகரனின் சிந்தனை!!!

தேவை தனி ஈழம்... இனியும் சிங்களவனிடம் இருந்து எந்தப் பிச்சையும் தேவை இல்லை.

மோதிப் பார்பதற்கு நாங்கள் தயார் என்றே தமிழ் இளைஞர்கள் களம் இறங்க ஆரம்பித்தனர்.

தொடரும்...!!!

சில குறிப்புகள்:

1) தனி ஈழம் என்றக் கோரிக்கைகள் எழும் என்று 'சிங்களம் மட்டுமே' என்றச்  சட்டத்தினை பண்டாரநாயகா என்று கூறினாரோ அன்றே பல சிங்களத் தலைவர்கள் கூறி இருந்தனர். சம சமாச கட்சித் தலைவரான டாக்டர். கொலவின் ஆர்.டி. சில்வா 'இரு மொழிகளென்றால் ஒரு தேசம் உருவாகும்...ஒரு மொழி என்றால் இரு தேசங்கள் உருவாகும்' என்றே முன்னர் கூறி இருந்தார்.

2) தந்தை செல்வா முதல் முறையாக தனி நாடுக் கோரிக்கையினை 1973 ஆம் ஆண்டில் தான் முன் வைக்கத் தொடங்குகின்றார்...25 ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முயற்சிகள் செய்த அவர் இறுதியில் சிங்களர்களிடம் தமக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்தப் பின்னரே தனி நாடுக் கோரிக்கையினை முன் வைக்கின்றார்.

3) சுதந்திர இலங்கையின் முதல் தேசியக் கொடி முழுக்க முழுக்க சிங்களர்களைக் குறிப்பதாக இருந்தது...பின்னர் 1951இல் தான் அதில் தமிழர்களைக் குறிக்க சிகப்புக் கோடும் இசுலாமியர்களைக் குறிக்க பச்சைக் கோடும் சேர்க்கப்பட்டன.

4) 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

ஒரு வேண்டுகோள்:

நண்பர்களே இப்பொழுது நீங்கள் ஈழத்தின் வரலாற்றையும் 'தனி ஈழம்' என்ற கோரிக்கை எழுந்த வரலாற்றினையும் அறிந்து இருப்பீர்.

தனி ஈழம் என்ற கோரிக்கை நியாயமானதான ஒன்றாக நீங்கள் உணருகின்றீர்களா?

அவ்வாறு உணர்ந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய தகவல்களையும் உண்மையினையும் நம்மால் இயன்ற அளவுப் பரப்புங்கள்... போராடுபவர்களுக்கு இயன்ற வண்ணம் உதவியையும் ஆதரவினையும் வழங்குங்கள்...போராடுங்கள்....மடிந்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு ஒரு வாழ்வளிக்க நம்மால் இயன்றதெல்லாம் செய்யலாம்...அல்லது அதனைப் பற்றிய விழிப்புணர்வினையாவது பரப்பலாம்.

யாராவது..."அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்"   என்றுக் கூறினால் அவரின் கூற்றில் உள்ளப் பிழை நமக்கு இன்று தெரியும் தானே...அவரின் அறியாமையை விலக்குவோம்.

இல்லை தனி ஈழக் கோரிக்கை சரியானதொன்று இல்லை என்று நீங்கள் கூறினால் ஏன் அவ்வாறுக் கூறுகின்றீர்கள் என்றும் கூறுங்கள்...உங்களின் கருத்துக்களை நாங்கள் அறிந்துக் கொள்ள அது மிக்க உதவியாக இருக்கும்.

நன்றி...!!!

அடிமையாய் இருக்கும் ஒருவனுக்கு சுதந்திரத்தினைப் போல் கனவுகளைத் தரக் கூடிய விடயங்கள் வேறெதுவும் கிடையாது. சுதந்திரம் என்றச் சொல் அவனுள் நம்பிக்கையினை விதைக்கின்றது...அந்த நம்பிக்கையினைக் கொண்டே அவனும் ஆவலாய் சுதந்திரத்தினை எதிர்பார்த்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கின்றான். அவனைப் பொறுத்தவரை சுதந்திரம் அவனுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வினைக் கொண்டு வந்து விடும்.

ஆனால் உண்மையோ பல நேரங்களில் வேறாக இருக்கின்றது...தீர்வினைத் தரும் என்று நம்பியச் சுதந்திரங்கள் பல நேரங்களில் வேறு பல பிரச்சனைகளுக்கே அடித்தளம் அமைத்து விட்டுச் சென்று இருக்கின்றன. இலங்கையிலும் அதே வரலாறு தான் நிகழ்ந்து இருக்கின்றது.

தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி சுதந்திரத்தினை மிகவும் ஆர்வமாகத் தான் எதிர்பார்த்தனர்...அதற்காக ஒன்றாகத் தான் போராடவும் செய்தனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அவ்வளவே...மற்ற பிரச்சனைகளை எல்லாம் பின்னர் அவர்களாகப் பார்த்துக் கொள்ள முடியாதா என்ன என்ற எண்ணமே அவர்களுள் மேலோங்கி இருந்தது.

அந்த எண்ணம் எவ்வளவு தவறான ஒன்றாக அமையும் என்பதனை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. சரி இப்பொழுது வரலாற்றுக்குள் வருவோம்.

இலங்கை சுதந்திரம் அடைந்து விட்டது. அதன் முதல் பிரதம மந்திரியானார் சேனநாயகே. பிரச்சனைகள் அன்றில் இருந்தே தொடங்க ஆரம்பிக்கின்றன.

1) மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிக்கப்படுகின்றது.
2) தமிழர்களின் இடங்களில் நிலச் சீரமைப்புத் திட்டங்கள் என்றுக் கூறி சிங்களவர்கள் குடி ஏற்றப்படுகின்றனர்.

தமிழர்களின் சார்பாக தந்தை செல்வா மேலே உள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றார். "சேனநாயகேவிற்கு எங்களது வணக்கங்கள்...உங்களுடைய நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் சில கசப்பு உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் எங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக எண்ணுகின்றோம்...அதுவும் குறிப்பாக தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது என்பது நம் இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து வாழும் சூழலை நிச்சயமாக கெடுக்கும் ஒரு செயலாகவே அமையும்...இதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் நடவடிக்கைகள் எடுப்பீர் என்றே நம்புகின்றோம்...நன்றிகள்!!!"

"ஆ...செல்வா...!!! தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத செயல்களை என்னுடைய அரசாங்கம் ஒரு பொழுதும் செய்யாது...கவலையினை விடுங்கள்...தக்க நேரத்தில் அனைத்தும் சரியாக்கப் படும்...!!!"...சேனநாயகேவிடம் இருந்து பதில் விரைவாக வந்தது. பதில் மட்டுமே வந்தது. ஆனால் வருடங்கள் ஓடியும் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும் சரி மலையகத் தமிழர்களின் பறிக்கப்பட்ட குடியுரிமைகளும் சரி நிகழ்ந்தவை நிகழ்ந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில் ஒரு விபத்தில் சேனநாயகே காலமாக...அரசியல் என்றால் என்ன என்று இலங்கை அறிய ஆரம்பிக்கின்றது. சில கட்சிகள் உடைகின்றன...பல கட்சிகள் புதிதாய் உருப்பெறுகின்றன...அனைத்திற்கும் காரணம் ஒன்று தான்...பதவி...!!!

'சனநாயக நாட்டினில் யார் வேண்டும் என்றாலும் தலைவர் ஆகலாம் தானே...தப்பில்லையே...அப்படி இருக்க ஒரு முயற்சி செய்துத் தான் பார்ப்போமே...!!!' இந்த எண்ணத்திலேயே தான் பல கட்சிகள் புதிதாய் தோற்றம் பெற ஆரம்பிக்கின்றன.

'சரி கட்சியினை ஆரம்பித்தாயிற்று...நல்லது. இனி வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்...அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்றால் பெருவாரியான மக்களை நாம் கவர வேண்டும்...நம் நாட்டினில் பெருவாரியான மக்கள் சிங்களவர்களே...அப்படி என்றால் அவர்களை நாம் கவர்ந்தாலே போதுமே...ஆட்சி நம் கைக்கு வந்து விடுமே...அடடே...இவ்வளவு எளிதான ஒன்றா ஆட்சியினைப் பிடிக்கும் தந்திரம்...' என்ற சிந்தனையுடனே அக்கட்சிகள் சிங்கள மக்களை குறி வைத்து தங்களது பிரச்சாரத்தினை தொடங்குகின்றனர். அதனைத் தொடங்கி வைப்பவர் பண்டாரநாயகா என்றொருவர்.

"இது சிங்களர்கள் அதிகமாக இருக்கும் நாடு...நம் நாடு...இங்கே எதற்காக இரண்டு மொழிகள்...அதிகார மொழியாக சிங்களம் மட்டுமே இருந்தால் தானே சிங்களவர்கள் வளர முடியும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த ஒரே நாளிலேயே சிங்களம் மட்டுமே அதிகார மொழி என்ற சட்டத்தினைக் கொண்டு வருவோம்...அதற்காக தமிழையும் மறந்து விட மாட்டோம்...வடக்கு மட்டும் கிழக்கு மாகாணங்களில் தமிழுக்கென்று சில சலுகைகள் வழங்கப்படும்...ஆனால் சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும்..." இது தான் பண்டாரநாயகாவின் தேர்தல் வாக்குறுதி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியினைத் தூண்டி விட்ட முதல் தீக்குச்சி!!!

பண்டாரநாயகாவின் பேச்சினைக் கேட்ட சிங்களவர்கள் அகமகிழ்ந்தனர். "வாழ்க பண்டாரநாயகா...வாழ்க சிங்களம்..." என்ற முழக்கங்கள் சிங்களர்கள் இருந்தப் பகுதி எங்கும் கேட்க ஆரம்பிக்க 'தமிழுக்கும் சிங்களத்திற்கும் சரிசமமான உரிமை வழங்கப்படும்' என்றுக் கூறி வந்த மற்ற சிங்களத் தலைவர்களுள் சிலரும் வாக்குக்காக 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களமே அரசு மொழியாக அறிவிக்கப்படும்...பௌத்தமே அரச சமயமாக அறிவிக்கப்படும்' என்றுக் கூற ஆரம்பித்தனர்.

ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான சிந்தனை அங்கே விதைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. தமிழர்கள் அதனைக் கண்டு கொதித்துக் கொண்டு இருந்தனர்.

"சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றால் பின்னர் நாம் யார்...இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்களா?...அனைத்தும் சிங்களத்தில் என்றால் பின்னர் அங்கே நமக்கும் நம் இனத்திற்கும் என்ன மரியாதை இருக்கின்றது...இது நம்மைத் தாழ்த்தும் திட்டமிட்ட செயல்...இதனை இவ்வாறே விடக் கூடாது..." என்று தமிழர்கள் கொந்தளித்துக் கொண்டு இருந்த வேளையில் தான் தந்தை செல்வா அரசாங்கத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்.

"சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என்பது ஏற்புடையதில்லை...இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் மற்றொரு செயலாகும்...எங்களுக்குரிய உரிமைகளை நீங்கள் வழங்குவீர் என்றே நம்புகின்றோம்...இல்லையேல் போராடுவதனைத் தவிர்த்து எங்களுக்கு வேறு வழிகள் இல்லை என்றே எண்ணுகின்றேன்....முடிவு உங்கள் கையில்."

செல்வாவின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலும் வந்தது..."அட...தமிழர்களை நாங்கள் எவ்வாறு கை விடுவோம்...கவலைப்படாதீர்...அவர்களுடைய உரிமைகள் என்றும் எங்களால் மறுக்கப்படப்போவதில்லை...இது நமது நாடு".

ஆனால் வெறும் பதில் மட்டுமே வந்தது. 1956 தேர்தல்களில் பண்டாரநாயகா வெற்றிப் பெற்ற உடன் அறிவித்த முக்கியத் தீர்மானம் 'இனி சிங்களமே அரச மொழி...'

சிங்களவர்கள் சிரித்தார்கள். தமிழர்கள் தங்களது பகுதிகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி விட்டு தந்தை செல்வாவின் குரலுக்காக காத்திருந்தார்கள்.

"அவர்கள் அவர்களது முடிவினைக் கூறி விட்டனர்...நாம் நம்முடைய முடிவினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்...ஆட்களைத் திரட்டுங்கள்...நமக்கு உரிமைக் கிடைக்கும் வரை போராட வேண்டும்... ஆரம்பிக்கட்டும் சத்தியாகிரகப் போராட்டங்கள்...!!!" தந்தை செல்வாவின் குரல் ஒலித்தது. தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்...அமைதியாக.

"எங்களின் உரிமையினை எங்களுக்குத் தா...தமிழர் வாழும் பகுதிகளுள் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்" என்ற முழக்கங்களுடன் ஆரம்பமாகின சத்தியாக்கிரகப் போராட்டங்கள்...கூடவே ஒத்துழையாமை இயக்கங்களும் தான்.

போராட்டங்களை சில சிங்கள இன வெறியர்கள் கண்டனர்...'என்னடா இது நம்முடைய நாட்டினில் இவர்கள் போராடுகின்றனர்...சிங்களம் ஆட்சி மொழியாக இருந்தால் இவர்களுக்கு என்ன வந்ததாம்...விட்டால் நம்மை இவர்கள் வளர விட மாட்டார்கள்...ம்ம்ம்...அடித்து துரத்துங்களடா அவர்களை..." என்று எண்ணி அமைதியாய் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர்.

பண்டாரநாயகா பார்த்தார். பாராளுமன்றத்தின் வாசலின் முன்னேயே சிங்களர்கள் தமிழர்களை அடித்துக் கொண்டு இருந்தனர். 'அரசாங்கத்துக்கு எதிராக தமிழர்கள் போராடுகின்றார்களா...சரி....அவர்களை சிங்களர்கள் அடிக்கின்றார்களா...சரி,,,தமிழர்களுக்குத் தேவை தான்...சில அடி வாங்கியவுடன் போராட்டம் முடிந்து விடும்...முடியட்டும் முடியட்டும்' என்று எண்ணி அமைதியாக இருந்தார்.

ஆனால் பண்டாரநாயகா எண்ணியது நடக்கவில்லை. சிங்களவர்களின் இன வெறி அடக்க முடியாத ஒன்றாக மாறிற்று. தமிழர்கள் தேடிப் பிடித்து அடிக்கப் பட்டனர்...எரிக்கப் பட்டனர்...அவர்களது உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன...காவல் துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது...வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றது. வண்டி வண்டியாக மத்திய இலங்கையில் இருந்து வடக்கே தமிழர்கள் இடம் பெயரத் தொடங்கினர். இது நடந்தது 1958 ஆம் ஆண்டு. சிங்களர்கள், தமிழர்கள் ஆகியோருக்கு இடையே இனக் கலவரத்தினைத் தோற்றுவித்து வைத்த ஒரு ஆண்டு.

சிங்களவர்கள் அடித்துக் கொண்டு இருந்தனர்...தமிழர்கள் அமைதியாக போராடிக் கொண்டே இருந்தனர்.

"நாம் காந்திய வழியில் போராடுகின்றோம்...அது தோற்காது...நாம் தொடர்ந்து போராட வேண்டும்..." என்றே தந்தை செல்வா சொன்னார்...அவ்வண்ணமே தமிழர்கள் செய்தனர்.

"சாதாரணக் கலவரமாக ஓய்ந்து விடும் என்று என்னியக் கலவரம் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டதே...ஐயகோ எவ்வளவு சேதங்கள்...போதும் இவ்வாறே விட்டால் தேசம் இரண்டாகி விடும் வாய்ப்பும் உள்ளது...சரி தமிழர்கள் கேட்பதும் சரியாகத் தானே உள்ளது...அவர்கள் பகுதியில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருந்து விட்டுத் தான் போகட்டுமே...என்ன குறைந்து விடும் இப்பொழுது..." என்று தாமதமாக மனம் திருந்திய பண்டாரநாயகா தந்தை செல்வாவினை அழைத்து புது ஒப்பந்தத்தையும் போட்டுக் கொள்கின்றார். அதன் படி,

1) தமிழர் பகுதிகளில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும்.
2) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அவர்களாக ஆட்சி செய்துக் கொள்ளலாம்...இலங்கை கூட்டாட்சியினை கொண்ட நாடாக இருக்கும்.
3) தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றங்கள் நிகழ பெறாது.
4) குடியுரிமை பறிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

தமிழர்கள் மகிழ்ந்தனர். அவர்களின் உரிமையை தந்தை செல்வா பெற்றுத் தந்து விட்டார். அறவழியிலான போராட்டம் வென்று விட்டது. காந்திய வழிக்கு கிட்டிய மற்றுமொரு வெற்றி இது.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தான் போட்ட ஒப்பந்தத்திற்கு சிங்களவர்களின் மத்தியில் எழும்பிய எதிர்ப்பினைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தினை கிழித்துப் போட்டார் பண்டாரநாயகா. அவரை தமிழர்களின் ஆதரவாளர் என்றுக் கூறி பின்னர் பௌத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றான். எந்த இனவெறியினைத் தூண்டி ஆட்சியினைப் பிடித்தாரோ அந்த இனவெறியே அவரின் உயிரைப் பறித்த ஒன்றாக மாறியது.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நிலை இலங்கையில் சாத்தியமே இல்லாத நிலையினை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தது.

தொடரும்....!!!

ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு. மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது.

1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால் இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக் தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது. இன்றுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது. அதற்கு பின்னர் ஹாக்கி விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்... எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.... இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எண்ணுகின்றேன்.

பிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா? பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது. இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு. பார்ப்பன‌ர்கள் அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தன பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக இருக்கட்டும்... பிரச்சனை இல்லை... "இந்திய அணி வென்று விட்டது... உலகை இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்" என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.

அதாவது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன‌ர்களாலோ அல்லது பார்ப்பன‌ர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.

1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் (Matriculation Syllabus English Subject - The Cup Of joy) என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...!!!

இது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது. எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும் கிரிக்கெட்...!!! ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை... மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது. அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை... ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.

இவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பன‌ர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பன‌ர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பன‌ர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.

சில கேள்விகளும் பதில்களும்:

1) பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டினை இந்தளவு ஆதரிக்கின்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள்? ஏன் அதனை வீரர்களின் திறமையை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்று நாம் கருதக் கூடாது. ஏன் வீணாக சாதியினை இங்கே கொண்டு வர வேண்டும்?

திறமையினை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றால் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் உள்ள வீரர்களின் திறமைகளையும் அது ஆதரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து இருந்தால்

1.       தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற சாந்தி இன்று செங்கல் சூளையில் பணி செய்து கொண்டு இருக்க மாட்டார்

2.       தனக்கு பதக்கத்தினைப் பெற்றுத் தந்த வில்லினை தேசிய வில் வித்தை வீராங்கனையான நிஷா ராணி தத்தா விற்று இருக்க மாட்டார்

3.       கபடி உலகக் கோப்பையை வென்ற இந்தியக் கபடி வீரர்கள் வரவேற்க ஆட்கள் யாரும் இன்றி தானியங்கியில் தமது சொந்த செலவினில் சென்று இருக்க மாட்டார்கள்.

இன்னும் பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். சற்று கவனித்துப் பார்த்தோம் என்றால் மேலே நாம் கண்டவர்கள் யாரும் பார்ப்பன‌ர்கள் அல்லர். இந்நிலையில் பார்ப்பன‌ர்கள் கையில் உள்ள விளையாட்டும் சரி விளையாட்டு வீரர்களும் சரி செல்வ செழிப்போடு இருக்கும் பொழுது பார்ப்பன‌ர்கள் அல்லாதோர் விளையாடும் விளையாட்டுக்களும் சரி, அந்த வீரர்களும் சரி கவனிப்பாரின்றி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கூறுவீர்.

2) என்ன காரணமா...அரசாங்கம் தான் காரணம்? அரசாங்கம் கவனிக்காததற்கு பார்ப்பன‌ர்களைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்?

அரசாங்கம் காரணம் என்றால் அரசாங்கத்தினை நடத்துபவர்கள் தான் காரணம். இன்று வரைக்கும் மத்தியில் ஆட்சியில் இருந்து இருக்கும் ஆட்சிகள் அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து இருக்கின்றன. அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பாஜக-வாக இருக்கட்டும்... அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ராகுல் காந்தியும் 'நான் ஒரு பார்ப்பன‌ன்' என்று கூறிய செய்தியும் இங்கே கவனிக்கத்தக்கது. மேலும் இடதுசாரிக் கட்சியான பொதுவுடமைக் கட்சியாகட்டும் அதன் தலைமையிலும் பார்ப்பன‌ர்களே வீற்று இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தான் மற்ற விளையாட்டுக்கள் வளராது இருக்க காரணம் என்று நாம் கூறினோம் என்றால் அக்குற்றச்சாட்டுகளும் பார்ப்பன‌ர்களையே சென்று அடையும்.

3) அப்படி என்றால் அரசாங்கம் பார்ப்பன‌ர்களை மட்டுமே கவனிக்கின்றது என்று கூறுகின்றீர்களா?

குறிப்பாக அவர்களையும் மற்ற உயர் சாதியினரையுமே கவனிக்கின்றது என்றுக் கூறுகின்றோம். சான்றாக சதுரங்க விளையாட்டு வீரர் ஆனந்த ஒரு பார்ப்பன‌ர் என்று நாம் அறிவோம். சமீபத்தில் அவர் வென்ற பட்டத்திற்காக தமிழக அரசு அவருக்கு இரண்டு கோடி உருபாய் பரிசுத் தொகையை அளித்துள்ளது. இரண்டு கோடி என்பது சாதாரணத் தொகை அன்று. இத்தகைய ஒரு தொகையினை வேறு சாதியினைச் சார்ந்த வீரருக்கு செயலலிதா வழங்கி இருப்பாரா என்பதும் கேள்விக்குறியே.

4) விசுவநாதன் ஆனந்த அவர்களால் தமிழகம் உலகப் புகழ் அடைந்து உள்ளது. அவரை பரிசுத் தொகை வழங்கி பெருமைப் படுத்துவதனை தவறு என்று கூறுகின்றீர்களா?

பரிசுத் தொகை வழங்குவது என்பது தவறான ஒன்று அல்ல. ஆனால் எவ்வளவு தொகை வழங்குகின்றோம், எப்பொழுது வழங்குகின்றோம், எவருக்கு வழங்குகின்றோம் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது அல்லவா. ஏற்கனவே அந்த உலகப் போட்டியில் வென்றதற்காக ஆனந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை கிட்டத்தட்ட ஆறரைக் கோடி. அந்நிலையில் அவருக்கு மேலும் இரு கோடியினை (மின்சாரம் வாங்குவதற்காக காசில்லாது தவித்துக் கொண்டு இருக்கும் வேளையிலும்) வழங்குவது சரியான ஒன்றா? மேலும் அது தமிழக அரசின் தனிப்பட்ட செல்வமும் அன்று. அது மக்களின் வரிப்பணம்.

உண்மையிலேயே விசுவநாதன் ஆனந்தை சிறப்பிக்க தமிழக அரசினை எண்ணி இருந்தால் அந்த இரண்டு கோடியினைக் கொண்டு ஆனந்தின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு சதுரங்க விளையாட்டினை செம்மையாக பயிற்றிவிக்கும் பணியினைச் செய்து இருக்கலாம். அவ்வாறு மேலும் பல திறமையான வீரர்களை உருவாக்கி இருக்கலாம் தானே. அதனை விடுத்து ஏற்கனவே செல்வம் கொழிக்கும் ஒருவருக்கு கூடுதலாக ஒரு மிகப் பெரியத் தொகையினைத் தருவது என்பது சரியான செயலாக அமையாது.

ஆனந்த் மட்டும்தான் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிறாரா? கேரம் விளையாட்டில் தொடர்ந்து உலகப் பட்டங்களைப் பெற்று வரும் இளவழகிக்குக் கிடைத்த பரிசுப் பணம் எவ்வளவு தெரியுமா? பத்து லட்சம் மட்டுமே. அதுவும், தமிழக அரசு தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக அவர் பல பேட்டிகள் கொடுத்தபின்பே, வேறு வழியின்றி அந்தப் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது. காரணம், வியாசர்பாடியைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததுதான் அவர் செய்த குற்றம். (http://www.tehelka.com/story_main39.asp?filename=cr030508late_breakfast.asp)

5) பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களே ஆனால் இசுலாமிய வீரர்களும் அந்த அணியில் விளையாடி வருகின்றனரே?

சிலருக்கு சில முகமூடிகள் தேவைப் படுகின்றது. இந்தியாவுக்கு தான் ஒரு மத சார்பற்ற நாடு என்ற முகமூடி தேவைப்படுகின்றது. அதே முகமூடி பிசிசிஐக்கும் தேவைப்படுகின்றது. எனவே தான் இசுலாமிய வீரர்களையும் பிசிசிஐ தேர்ந்து எடுக்கின்றது. என்று இந்தியா தனது முகமூடியினைக் களைகின்றதோ அன்று பிசிசிஐயும் தனது முகமூடியினைக் கலைத்து விடும்.

6) எதற்கெடுத்தாலும் பார்ப்பானையே குறைக் கூறாதீர்...கிரிக்கெட் விளையாட்டு இவ்வளவு தூரம் இந்தியாவில் புகழ் பெற்று இருப்பதற்கு காரணம் அந்த விளையாட்டின் எளிமையே அன்றி வேறு எவரும் அல்லர். ஒரு மட்டை ஒரு பந்து இவை மட்டுமே இருந்தால் போதும், கிரிக்கெட் விளையாட்டினை விளையாடி விடலாம். அதனால் தான் மக்களின் மத்தியில் இது புகழ் பெற்று இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களா?

சரி...கிரிக்கெட் எளிதான விளையாட்டென்றே வைத்துக் கொள்ளலாம். அதனால் தான் அது இந்தியா முழுவதும் புகழ் பெற்று இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளலாம்...அப்படி நிலை இருக்கையில் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் 90 சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் தானே அந்த எளிதான விளையாட்டினில் அதிக இடங்களைப் பிடித்து இருக்க வேண்டும்...மாறாக 3 சதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள் அதிக இடங்களைப் பிடித்து இருப்பது எவ்வாறு? அந்த எளிய விளையாட்டினில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனித் திறமை பிறப்பிலேயே வந்து விடுகின்றதா?

தொடர்புடைய சுட்டிகள்:

பி.கு:

மேலே கூறிய விடயங்கள் அனைத்தும் சில இணையங்களின் மூலமும் சில நண்பர்களின் தொடர்புகள் மூலமும் பெறப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை. இதனில் மாற்றுக் கருத்துக்களை எவரேனும் கூற விரும்பினால் தாராளமாகக் கூறலாம்.

௧) இன்றைய கிரிக்கெட் அணியில் விளையாடும் பதினோரு பேரில் பாதிக்கு மேற்பட்ட இடத்தினை பிடித்து இருப்பவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதாவது இந்திய தேசத்து மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவீதம் இருக்கும் பார்ப்பன‌ர்கள் கிரிக்கெட் அணியில் 60 சதவீத இடத்தினை பிடித்து இருக்கின்றனர். இந்நிலை இன்று தான் என்று இல்லை கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்...இந்நிலை ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது என்று. உதாரணத்துக்கு சில பார்ப்பன‌ கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்

ரவி சாஸ்த்ரி
சுனில் கவாஸ்கர்
சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
சௌரவ் கங்குலி
ஜவகல் ஸ்ரீநாத்
வெங்கடேஷ் பிரசாத்
அணில் கும்ப்ளே
V.V.S. லட்சுமணன்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சுனில் ஜோஷி
மனோஜ் பிரபாகர்
அஜீத் அகர்கர்
ரோஹித் ஷர்மா
இஷாந்த் ஷர்மா
சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்
ரவீந்திர அஷ்வின்
சடகோபன் ரமேஷ்
நிலேஷ் குல்கர்னி
L. சிவராம கிருஷ்ணன்
வேங்கர்சர்கார்

இன்னும் இந்தப் பெயர்களின் வரிசை நீண்டு கொண்டே போகும். காரணம் பிசிசிஐ-காக விளையாடிய மக்களுள் பெரும்பான்மையானோர் பார்ப்பன‌ர்களே. இதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் ஒன்றும் இல்லை. பிசிசிஐயே பார்ப்பன‌ர்களின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் தானே. ஒரு பார்ப்பன‌ நிறுவனம் பார்ப்பன‌ர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது ஆச்சரியப்படத் தக்க விடயம் அல்ல தானே.

௨) பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருப்பதில் மற்ற உயர் சாதியினரே முன்னிலையில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு ஜட் இனத்தினைச் சார்ந்தவர்களும் ராஜ்புட் இனத்தினைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் இன்று இந்தியாவில் திகழும் சாதியக் கட்டமைப்பில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். அவர்களே கிரிக்கெட் அணியில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக இடம் பெற்று உள்ளனர். உதாரணம்,

அஜய் ஜடேஜா
விரேந்தர் செஹ்வாக்
கௌதம் கம்பீர்
விராட் கொஹ்லி
M.S. டோனி
யுவராஜ் சிங்
ஹர்பஜன் சிங்
கபில்தேவ்
மேலும் பலர்....!!!


௩) அதுவும் குறிப்பாக தமிழகத்தினை நாம் இப்பொழுது எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடாத கிராமங்கள் கிடையாது... ஏன் தெருக்களே கிடையாது என்றே நாம் இன்றுச் சொல்லலாம். அப்படி ஒரு செல்வாக்கு மக்களின் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை சற்று பார்த்தோம் என்றால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன‌ர்களாகவே இருக்கின்றனர். உதாரணம்...

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சடகோபன் ரமேஷ்
W.V. இராமன்
L. சிவராம கிருஷ்ணன்
ஹேமங் பதானி
லக்ஷ்மிபதி பாலாஜி
ரவீந்திர அஷ்வின்
S.பத்ரிநாத்
முரளி கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
அபினவ் முகுந்த்
முரளி விஜய்
இன்னும் பலர்.... இவர்கள் அனைவருமே பார்ப்பன‌ர்கள்.

ஏன் தமிழகத்தில் நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடிய ஒரு பிற்படுத்தப்பட்ட வீரனோ அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்த வீரனோ இவர்களுக்கு கிட்டவில்லையா என்ன? என்று கேள்வியோடு தமிழகத்தின் பிசிசிஐ தேர்வுக் குழுவைப் பார்த்தால் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பன‌ர்கள் என்றே நமக்கு செய்தி வருகின்றது. என்ன விந்தையப்பா... விளையாடுபவர்களும் பார்ப்பன‌ர்கள்... விளையாடுபவர்களைத் தேர்வு செய்பவர்களும் பார்ப்பன‌ர்கள்... ஆனால் இவர்கள் யாரும் சாதியினைப் பார்ப்பதில்லை. சாதியினைப் பார்க்காமலேயே இந்தளவு ஒரு ஒற்றுமை நிச்சயம் ஆச்சர்யம் தான்...இல்லையா!!!

௪) இது வரை பிசிசிஐ யின் சார்பாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இரண்டே இரண்டு பேர் தான் தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்கள் என்றே நமக்குத் தகவலும் கிடைக்கின்றது. அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களில் இருந்து இது வரை இரண்டே இரண்டு பேர் தான் பிசிசிஐ-யால் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நம்மில் எவருக்கும் தெரியாது (பல்வாங்கர் பாலு (Palwankar Baloo) - இவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடியவர்), மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரையும் தவிர தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டினை சர்வதேச அளவில் விளையாட வேறு எவரும் தேர்வாகவில்லை என்பதும் ஒருத் தகவல்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு விழுக்காடே இருக்கும் பார்ப்பனர்கள் மத்தியில் இருந்து வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது சமுகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் இருந்து மிக மிக குறைந்த அளவிலேயே மக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றனர். ஆச்சர்யமான விடயம் தான் அல்லவா....!!!

"கொஞ்சம் பொறுங்கள்...இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கின்றது... பார்ப்பனர்கள் திறமைசாலிகள்...ஆகவே வாய்ப்பினைப் பெறுகின்றனர்... திறமையில்லாதவர்களுக்கு வாய்ப்பினை தந்து ஒன்றுக்கும் ஆகாத அணியினை உருவாக்கச் சொல்லுகின்றீர்களா" என்ற கருத்து உங்களின் மனதில் இப்பொழுது எழுந்தால்(சிலரின் மனதில் நிச்சயமாக இந்த எண்ணம் எழும்) அவர்களுக்காக...

"ஐயா வணக்கங்கள்... பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்றே வைத்துக் கொண்டோம் என்றால்... அவர்கள் அனைத்துத் துறையிலும் அல்லவா திறமையாக விளங்க வேண்டும்... அனைத்து அணியிலும் அவர்களே சிறந்து விளங்க வேண்டும்... கபடி, ஹாக்கி, கால்பந்து...மற்றும் இன்ன பிற விளையாட்டுகளில் பார்ப்பனர்கள் செய்த சாதனைகள் யாது என்று கூறுவீர்களா?... அந்த விளையாட்டு அணிகளில் பார்ப்பனர்கள் இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். பார்ப்பனர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்றால் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் திறமைகள் அற்றவர்கள் என்றால் மற்ற விளையாட்டிலும் அவர்கள் திறமையற்றவர்களாகவே இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நிலைமை வேறாக அல்லவா இருக்கின்றது. கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் அங்கே இல்லையே. எனவே கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே திறமையாக இருக்கின்றனர் என்று நீங்கள் கருதுவது எங்கனம் பொருந்தும்.... வாய்ப்புகளைத் தந்தால் அந்த விளையாட்டிலும் மற்ற மக்கள் சாதனைகள் படைப்பார்கள் என்ற கூற்றினை மறுக்க உங்களால் எங்கனம் முடியும்?".

ஆனால் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்-ஐ பார்ப்பனர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

௧) மற்ற விளையாட்டுகளைப் போல் கிரிக்கெட் விளையாட்டில் உடல்கள் அதிக அளவில் தொட்டுக் கொள்ள வேண்டிய தேவை கிரிக்கெட்டில் கிடையாது. கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் உடல்கள் அடிக்கடி மோத வேண்டிய சூழ்நிலைகள் நேரும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் அத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழாது. பந்தைப் பிடித்தால் போதும்... பந்தை அடித்தால் போதும். தீண்டாமைக் கொள்கையை போற்றி வளர்த்த பார்ப்பனர்கள் இதனாலையே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினர் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா?

௨) சோம்பேறிகளின் விளையாட்டாக அறியப்பட்ட கிரிக்கெட்டில் உடல் உழைப்பும் கம்மி என்பதாலேயே பார்ப்பனர்கள் அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர் என்றும் அதனால் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களாக அறியப்பட்டவர்களின் பீல்டிங் முறையும் (பந்தை தடுக்கும் முறையும்) ஓட்டம் எடுக்கும் முறையும் (running Between the wickets) யுவராஜ் சிங், முஹம்மத் கைப் போன்ற வீரர்கள் வரும் வரை வெகு சுமாராகவே இருந்து இருக்கின்றது என்பதனை மறுக்க முடியுமா?

௩) மற்றவர்களை வேலை வாங்கியே பழகிய காரணத்தினால் தான் பெரும்பான்மையான நேரம் எதிரணியின் வீரர் அடித்த பந்தினைத் துரத்திச் செல்லாமல் மற்றவர்களுக்கு கை காட்டிவிட்டு நின்ற இடத்தில் நிற்பதும், அதிகமாக ஓட்டங்களை ஓடி எடுக்காமலும், ஓடும் பொழுது தமது ஆட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தன்மையும் (அடுத்தவரை ஆட்டம் இழக்க செய்தாலும் பரவாஇல்லை தான் பாதுகாப்பாக நிற்க வேண்டும்) வீரர்களின் மத்தியில் இருந்து இருக்கின்றது என்ற கூற்றினையும் மறுக்க முடியுமா?

மேலே நாம் இட்டுள்ள கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் அவற்றுள் உண்மை இருக்கின்றது என்பதனை சற்றே சிந்தித்துப் பார்ப்போர் அறிந்துக் கொள்வர். நிற்க.

இப்பொழுது நாம் கிரிக்கெட் எவ்வாறு நமது தேசத்தில் இன்று அது இருக்கும் உயரத்தினை அடைந்தது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காண்போம்...!!!

நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட செய்தியினைத் தாங்கிக் கொண்டு இருந்த ஒரு படத்தினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் அடிப்படைக் கரு இது தான்

"அனைத்து அரசுத் துறைகளிலும் திறமைகள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுக்காது சாதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு சலுகைகளும் வழங்குகின்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று வேலைகளை சாதிகளின் அடிப்படையில் வழங்குகின்றனர். இத்தகைய நடைமுறையை கிரிக்கெட் விளையாட்டிலும் அரசு நடைமுறைப்படுத்தலாமே...இந்திய அணியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை இடங்கள் என்று இடங்களை வழங்கி அவர்களுக்கு ஏற்ப கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றலாமே. தாழ்த்தப்பட்டவர் ஒரு ஓட்டம் எடுத்தால் அதற்கு நான்கு ஓட்டங்கள் வழங்கலாம்...பிற்படுத்தப்பட்டோர் ஒரு ஓட்டம் எடுத்தால்  இரு ஓட்டங்கள் வழங்கலாம்...இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் சட்டங்களையும் மாற்றலாமே...திறமைக்குத் தான் இந்நாட்டிலே மதிப்பு கிடையாதே" என்பதே அக்கருத்தின் சாரம்.

இட ஒதுக்கீட்டை தாக்குவதாக அமைந்து இருக்கும் இக்கருத்தினை விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கூறியதாகவே இணையத்தில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மெய்யா என்பது எனக்குத் தெரியவில்லை...மெய்யாக இருப்பீனும் அக்கருத்தினை கூறியவரைப் பற்றி காணவோ அல்லது விமர்சனம் செய்யவோ நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. நமது இலக்கு அவர்கள் கூறியதாக கூறப்படும் கருத்தே ஆகும். இட ஒதுக்கீட்டை கிரிக்கெட் விளையாட்டிலும் கொண்டு வர வேண்டியது தானே என்று நக்கலாக கூறப்பட்டு இருக்கும் கருத்தினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது... கூடவே கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியும் தான்.

இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள மக்கள் பலருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளையாட்டுக்கு அத்தகைய வரவேற்பு...விளம்பரம்...மோகம் மக்களின் மத்தியில் இருக்கின்றது.  இத்தகைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியோ அல்லது அந்த விளையாட்டு வீரர்களை பற்றியோ நாம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் கூற ஆரம்பித்தால் இந்திய மக்களால் 'தேச விரோதி..தேச பக்தி இல்லாத அற்பப் பதர்..' என்றும் இன்னபிற வாழ்த்துரைகளிளாலும் சிறப்பிக்கப்படுவது நிச்சயம். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது நாம் சில விடயங்களைக் கூறியாக வேண்டிய நிலை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. சரி  இப்பொழுது நம்முடைய கருத்துக்களைக் காணலாம்...

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயமாக இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வந்தாக வேண்டும் என்பதே நமது முதன்மையான கருத்து. வில்லங்கமான கருத்தாகப் படுகின்றது தானே. ஆனால் இந்தக் கருத்தினை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் எனது இந்தக் கருத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சனை,

இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

இரண்டாவது பிரச்சனை,

அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.

இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

௧) இந்திய அணி என்றால் என்ன?

இந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்... அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது.

௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?

ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே. அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.


௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?
நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர். அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க.

இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!!!

ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா? ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!!!

பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த/ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது. இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம். அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.

இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.

அரசியல்!!!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால்,

பார்ப்பன‌ அரசியல்!!!

ஆம். பார்ப்பன‌ அரசியலே மற்ற விளையாட்டுத் துறைகள் இந்திய நாட்டில் வளராது இருப்பதற்கும், கிரிக்கெட் இவ்வளவு பெரிய விளையாட்டாக வளர்ந்து நிற்பதற்கும் காரணம் ஆகும்.

"ஆரம்பிச்சிடீங்களா...இதுக்கும் பார்ப்பன‌ன் தானா பழி போடுவதற்கு கிடைத்தான்" என்று நண்பர்கள் சிலர் இந்நேரம் பேச ஆரம்பித்து இருப்பர். இந்நிலையில் நாம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்தோம் என்றால் நம்மை 'இவன் பார்ப்பன‌ர்களை குறை சொல்வதையே குறியாக வைத்து இருக்கின்றான்... சாதிகளை யாரும் பார்க்காத இக்காலத்திலும் சாதியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்' என்று பழியினை நம் மீது திருப்பி விடுவர். எனவே நாம் குற்றச்சாட்டுகளோடு சில ஆதாரங்களையும் வைக்க வேண்டி இருக்கின்றது. அதற்கும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

தொடரும்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு