கடந்த பதிவுகளில் அமெரிக்கா சந்தித்த பொருளாதார நெருக்கடியின் காரணிகளைப் பற்றி பார்த்திருந்தோம். அதிலிருந்து நாம் அறிந்து கொண்டவை...

 • வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் தான் அந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தன.
 • அவை அனைத்தும் தனியார் நிறுவனங்கள்.
 • தனி நபர்களின் பேராசையின் காரணமாகவே தான் அந்த நெருக்கடிக்கு காரணமாக இருந்தது.
 • அந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ப சட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். அதற்கு ஏதாக ஆட்சியாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
 • அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அமெரிக்க அரசானது கண்டு கொள்ளவே இல்லை. அனைத்து கட்டுப்பாடுகளையும் அது தளர்த்தி இருந்தது.
மிகவும் கட்டுக்கோப்பான சட்டங்களைக் கொண்ட நாடு...40 KM வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 41 KM வேகத்தில் சென்றாலே அபராதம் கட்ட வேண்டி வரும், இலஞ்சம் கிஞ்சம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சராசரி மனிதனால் புகழப்படும் அமெரிக்காவிலேயே நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தான் நாம் இந்தியாவை பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகையே உலுக்கிய அந்த பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை...எந்தெந்த துறைகள் அமெரிக்காவையும் ஐரோப்பியாவையும் சார்ந்து இருந்தனவோ (ஏற்றுமதி...மென்பொருள்) அந்த துறைகள் மட்டுமே தான் பாதிப்படைந்து இருந்தன. ஏனென்றால் இந்தியாவின் ஏனைய துறைகள் ஒன்று அரசாங்கத் துறைகளாக இருந்தன, அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவைகளாக இருந்தன. மக்களின் வாழ்க்கை முறை பெருமளவு வங்கிகளைச் சார்ந்து இருக்கவில்லை. இதனால் மற்றைய துறைகள் எவ்விதமான பாதிப்புகளுமின்றி இயல்பாகவே இயங்கிக் கொண்டிருந்தன என்றே கூறலாம். தனது கொள்கைகளை அரசாங்கம் மாற்ற முயன்ற பொழுதும் வலுவான எதிர்ப்புகள் அந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தின...உதாரணமாக,

பங்குச் சந்தையை ஊக்குவிக்க, மக்களின் PF பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று மன்மோகன் சிங் அரசு முடிவெடுத்த பொழுது, அப்பொழுது எதிர்ந்த எதிர்ப்பால் அந்த நடவடிக்கையை அது கைவிட்டது.

இத்தகைய நடவடிக்கைகளால் எவனோ எங்கோ செய்த தவறினால்/திருட்டினால் ஒட்டு மொத்த நாட்டு மக்களுமே இன்னலுக்கு உள்ளாகும் அந்த நிலை தடுக்கப்பட்டது. சரி, இப்பொழுது நாம் இன்றைய சூழலைப் பார்ப்போம்...

 • கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுத்த நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழக்க நடவடிக்கையின் பலனாக எஞ்சியிருப்பது, மக்கள் அனைவரின் பணமும் வங்கிகளுக்கு வந்து விட்டது...அவ்வளவே!!!
 • அனைத்து துறைகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 • நிறுவனங்களின் மீதிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு கொண்டிருக்கின்றன (Deregulating the industry) (உதாரணமாக பெட்ரோல் டீசல் விலைகளை அரசு கட்டுப்படுத்தாமல், அதனை அந்த நிறுவனங்களிடமே விட்டு இருக்கின்றது தானே...)
 • PF மற்றும் பென்ஷன் தொகைகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முயற்சிகள் (இன்றைக்கு தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் இதனை எதிர்த்து தான் போராட்டம் செய்கின்றனர்)
 • அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடு அளவுக்கு அதிகமாக அனுமதிக்கப்படுகின்றது. அதாவது அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பெரு நிறுவனங்கள் இந்தியாவிலும் முதலீடு செய்யலாம்.
 • காங்கிரஸ் பிஜேபி போன்ற கட்சிகளுக்கு பெருவாரியான நிதிகள் பெரு நிறுவனங்களிடமிருந்தே வருகின்றது.
ஒருவரின் சொற்களால் அல்ல மாறாக செயல்களிலாலேயே அவரது குணத்தினை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்...அதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது அரசாங்கத்தையும் காண வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கண்டோமென்றால், நமக்கு புலனாவது, அமெரிக்காவைப் போன்றே, நமது அரசும் பெரு நிறுவனங்களின் கைப்பாவையாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களின் நலனை அதனிடம் இருந்து எதிர் பார்க்க முடியாது.

அரசாங்கம் இப்பொழுது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எல்லாம்வெற்றி பெற்றது என்றால், அடுத்த முறை இப்படி ஒரு பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் வரும் பொழுது இந்தியாவிலும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இது பொய் அல்ல...!!!

உதாரணமாக, ஐஸ்லேன்ட் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அருமையானதொரு பொருளாதாரமாக இருந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டில், IMFயின் சிபாரிசின் பேரில், அது தன்னுடைய மூன்று மாபெரும் பொது வங்கிகளை தனியார் மயமாக்கியது. அதன் விளைவு, 2007 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியில், அந்த நாடும் அதிகமாக அடிபட்டு, அங்கும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர், உடைமைகளை இழந்தனர்...சேமிப்புகளை இழந்தனர்...!!! அதே நிலை தான் நாளை நமக்கும் வரலாம்...வரும்!!!

உலக முழுவதையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து, தங்களது வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள சில நிறுவனங்கள் விரும்புகின்றன...அதற்கு அவை 'கடன்', 'ஆசை' என்ற மாபெரும் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன...IMF, உலக வங்கி போன்ற நிறுவனங்களும் அந்த நிறுவனங்களின் கொள்கைகளும், அந்த மாபெரும் வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன...

ஒரு சாதாரண மனிதன் விரும்புகின்ற ஒரு எளிமையான அமைதியான வாழ்வினை, தங்களது பேராசையால் அந்த நிறுவனங்கள் வெறும் பகற் கனவாக்கி விடுகின்றன...!!!

வாழ்க்கை உண்மையில் எளிமையானது தான்...அதனை நம்மிடமிருந்து அவர்கள் மறைத்து விடுகின்றார்கள்...முடியாத ஒரு வட்டத்தில் நம்மை அவர்கள் ஓட வைத்து விடுகின்றார்கள்...!!!

அந்த வட்டத்தில் இருந்து வெளிவரவே நாம் போராட வேண்டியிருக்கின்றது...ஒரு எளிமையான வாழ்விற்காகவே நாம் முயல வேண்டி இருக்கின்றது...!!!

அந்த எளிமையான வாழ்வினை நம்மிடம் இருந்து மறைக்கின்ற பொய்களை நாம் அடையாளம் காண வேண்டியிருக்கின்றது...அதற்காகவே நாம்அதிகமாய் அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது...அறிந்து கொண்டு பிறருக்கும் போதிக்க வேண்டியிருக்கின்றது...!!! தற்சார்பு பொருளாதார அமைப்பிற்கே நாம் முயல வேண்டியிருக்கின்றது...அதுவே தான் தீர்வு!

உண்மை நம்மை விடுவிக்கும்...!!!

ரியல் எஸ்டேட் வணிகம்...!!!

2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா சந்தித்த அந்த பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணம் இந்த வணிகம் தான் என்றால் அது மிகையாகாது. எனவே இதனடிப்படையில் அந்த பொருளாதார நெருக்கடியினைப் பற்றிப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

"குறைந்த காலத்தில் அதிக இலாபம்" என்பதே அமெரிக்கா நிதி நிறுவனங்களின் இலக்காக இருந்தது. அதற்கு ரியல் எஸ்டேட் வணிகம் அவர்களுக்கு பெரிதும் உதவியது.

"வீடு என்பது இலாபகரமான முதலீடு, அதில் நீங்கள் தங்கவும் செய்து கொள்ளலாம்...வாடகைக்கும் விட்டு வருமானம் பார்க்கலாம், இல்லையேல் அதனை விற்கவும் செய்யலாம்...பாருங்கள், சென்ற வருடத்தினை விட வீட்டின் விலை இப்பொழுது எவ்வளவு அதிகரித்து இருக்கின்றது என்று. எனவே வீட்டில் முதலீடு செய்வது நிச்சயமாக இலாபகரமானது தான்" என்ற விளம்பரங்களின் வாயிலாக ரியல் எஸ்டேட் வணிகம் பெரிதும் வளர்க்கப்பட்டது.

வீட்டு மனைகளின் விலை உயர்வு


அனைவருக்கும் கடன் வாரி வாரி வழங்கப்பட்டது. அவர்களால் கடனினைத் திருப்பி அடைக்க முடியுமா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை, அவர்கள் கடன் வாங்க வேண்டும், அவ்வளவு தான் என்ற குறிக்கோளுடன் இயங்குவது போல் வங்கிகள் செயல்பட்டன. என்ன, வட்டியின் அளவு தான் சற்று மிக அதிகம். இதன் விளைவாக வீட்டு மனைகளின் விலைகளும் உயர்ந்தன...கடனாளிகளான அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.


அமெரிக்காவில் தனி மனிதனின் கடன் அளவு

ஆனால், இங்கு ஒரு கேள்வி எழலாம்...அவ்வளவு கடன் தருவதற்கு வங்கிகளிடம் பணம் எவ்வாறு வந்தது? இந்த கேள்விக்கு விடையில் தான் அரசியலே இருக்கின்றது. வங்கிகள் தாங்கள் கடன் வாங்கிய பணத்தினைக் கொண்டே தான் மற்ற மக்களுக்கு கடனினைத் தந்தன. அதாவது கடன் வாங்கி கடன் தந்தன. புரியவில்லை தானே...இங்கு தான் பங்குச்சந்தை வருகின்றது.

வங்கிகள் கொடுத்த வீட்டு மனைக் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகம்...மிகஅதிகம்...எனவே அந்த வட்டிகள் எல்லாம் முறையாக வந்திருந்தன என்றால் அந்த வங்கிகள் கொள்ளை இலாபம் அடைந்திருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு பங்குச் சந்தை நிறுவனங்கள் என்ன செய்தன என்றால், அந்த கடன்களை எல்லாம் ஒரு பங்காகத் திரட்டி, அதனை முதலீட்டாளர்களிடம் 'அதிக வருமானம் பெற்றுத் தரக் கூடிய பங்குகள்' என்று கூறி விற்கத் துவங்கின. எனவே அந்த பங்குகளில் பெருமளவு முதலீடு செய்ய மக்கள் ஆரம்பித்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு வங்கிகள் தொடர்ந்து கடன் தந்து கொண்டிருந்தனர்.

மேலும், இங்கே அந்த நிதி நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை...'நாங்கள் இந்த பங்குகளை விற்று இருக்கின்றோம்...' அவை வீழ்ச்சியடைந்தால் எங்களுக்கு இழப்பீடு தேவை என்று கூறி தங்களைத் தாங்களே அதிகத் தொகைக்கு காப்பீடும் செய்து கொண்டன (மேலும் தாங்கள் விற்ற அந்த பங்குகள் தோல்வியடையும் என்று அவர்கள் பங்குச் சூதாட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது வேறு கதை).

அதாவது, முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை வைத்துக் கொண்டு வங்கிகள் கடன் தந்திருக்கின்றன. அந்த கடன் திரும்பி வருமா இல்லையா என்பதையெல்லாம் அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களது நோக்கம் குறுகிய கால இலாபம் மட்டுமே தான். அந்த இலாபத்தை அவர்கள் அடையவும் செய்தார்கள். அவ்வாறு இலாபமானது கூட கூட, அவர்கள் இந்த வணிகத்தை மேலும் மேலும் வளர்க்கலாயினர்.

Wall Street நிதி நிறுவங்களின் தலைமை அதிகாரிகள் பெற்ற போனஸ் தொகைகள்

"நீங்கள் அபாயகரமான முதலீடுகள் செய்கின்றீர்கள்..." என்ற கூற்றுகளையும், "இந்த நிதி நிறுவனங்களின் செயல்களை வரையறை செய்து கட்டுப்படுத்த வேண்டும் (regulate)" என்ற வாதங்களையும் அந்த நிறுவனங்கள் மதிக்காமல் சென்று கொண்டே இருந்தன...காரணம் - அவர்களின் பண பலம் அத்தகையது. தங்களது பண பலத்தினைக் கொண்டு அவர்கள் அரசை விலைக்கு வாங்கி இருந்தனர்.

ரகுராம் ராஜனின் எச்சரிக்கை அறிக்கை


அந்த நிதி நிறுவனங்களின் இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என்றும், அதனால் மாபெரும் பொருளாதார நெருக்கடி உலகமுழுவதும் வரலாம் என்று பலர் எச்சரிக்கை செய்தும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. உதாரணமாக நம்முடைய ரகுராம் ராஜனும் நிதி நிறுவங்களின் சந்திப்பில் இதனைப் பற்றி கூறி இருக்கின்றார். "நீங்கள் குறைந்தளவு ரிஸ்கில் அதிகளவு இலாபம் அடைகின்றோம் என்று கூறுகின்றீர்கள்...ஆனால் அதிகளவு ரிஸ்க் எடுத்து நீங்கள் அதிகளவு இலாபம் பார்க்கின்றீர்கள். இது ஒரு மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்" என்றே ரகுராம் ராஜன் அவர்கள் கூறி இருக்கின்றான். ஆனால் அதனை அந்த நிர்வாகிகள் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் குறிக்கோள் முழுவதும் 'குறுகிய காலத்தில் கொள்ளை இலாபம்' என்பதாகவே இருந்தது.

அதன் விளைவு தான் அமெரிக்காவின் 2008ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பித் தர முடியாத பொழுது அந்த பிரச்சனைத் துவங்கியது. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை என்ற பொழுது, ஒன்றிற்கும் ஆகாத வீட்டு மனைகளை வைத்துக் கொண்டு வங்கிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை...மேலும் அதன் விளைவாக தாங்கள் வாங்கிய கடன்களையும் அந்த நிறுவனங்களால் திருப்பித் தர முடியவில்லை. அதன் விளைவாக வங்கிகள் மற்றும் அந்த பங்குச் சந்தை நிறுவனங்கள் வீழ்ச்சி அடைகின்றன.

மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது இந்த விளையாட்டில் காப்பீட்டு நிறுவனங்களையும் இழுத்து விட்டு வைத்திருப்பதால், அந்த காப்பீட்டு நிறுவனங்களும் வீழ்ச்சியடைகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் ஒற்றை நாளில் வேலை இழக்கின்றனர். மேலும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கின்றது. வங்கிகளில் தங்களது பணத்தினைப் போட்டு வைத்திருந்த மக்களால் எவ்வாறு அந்த வங்கியானது மூடியதற்கு பின்பு அப்பணத்தை எடுக்க முடியும்? அவர்களின் பணமும் பறி போகிறது. அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தாலும், அதன் தலைமை நிர்வாகிகள் தாங்கள் அடைந்த இலாபத்தை அப்படியே வைத்துக் கொண்டனர். அதாவது வங்கியில் பணத்தைப் போட்ட சாதாரண மனிதன் ஆண்டியாகி விட்டான்...ஆனால் அந்த வங்கி நிர்வாகியோ கோடீஸ்வரராகி விட்டார். எப்படி இருக்கிறது கதை?இந்த சூழலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றது. ஆனால் இம்முறை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமுமே இந்த நெருக்கடிக்கு ஆளாகின்றது. ஏனென்றால், அமெரிக்காவில் இருக்கின்ற நிறுவனங்கள் உலகமுழுதும் தங்களது செயல்பாடுகளை வைத்து இருக்கின்றன. அதனால் அவற்றின் தாக்கம் உலகமுழுவதும் இருக்கின்றது.

அதாவது ஒரு சில நிதி நிறுவன அதிகாரிகளின் பேராசையின் காரணமாக உலகமே ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது...இலட்சக்கணக்கான மனிதர்கள் வேலை இழந்து இருக்கின்றார்கள்...இன்னும் அநேக பாதிப்புகள் இருக்கின்றன...சரி இருக்கட்டும்...'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பிட்டு விட்டு அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினைப் பற்றியே நாம் இது வரை அநேகமாக கண்டு வந்திருக்கின்றோம்...அதன் காரணம் என்னவென்றால், இன்றைய இந்திய அரசின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் இந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் நம்மால் முழுதாக இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

சரி இப்பொழுது நாம் நம்முடைய நாட்டைப் பற்றிப் பார்க்கலாம்...!!!

(அடுத்த பதிவில் முடியும்)

பணமதிப்பிழக்கத்தின் மூலமாக அனைவரது பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்த நடவடிக்கையினைப் பற்றியே நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழக்கத்தின் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கின்றன...எனவே தான் நாம் அதைப் பற்றி காண வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது நாம் சென்ற பதிவின் முடிவில் நாம் கண்ட விடயத்திலிருந்தே தொடரலாம்.

என்னிடம் இருக்கின்ற 1000 ரூபாயை வங்கியில் போடுகின்றேன்...அந்நிலையில் அந்த வங்கிக்காரன் கடையைச் சாத்தி விட்டு கிளம்பி விட்டான் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியினைத் தான் நாம் சென்ற பதிவில் கண்டிருந்தோம். இந்த கேள்வி சிலருக்கு அபத்தமாகத் தெரியலாம்...ஆனால் நம்மைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் தெரியும்.

உதாரணமாக விஜய் மல்லையாவின் கதையையே எடுத்துக் கொள்ளலாமே...9600 கோடி கடனினை மல்லையாவிற்கு தந்து விட்டு நமது ஊரிலேயே ஒரு வங்கி முழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறதே. அந்த 9600 கோடி ரூபாய் யாருடைய பணம்? அந்த வங்கியில் சேமித்து வைத்தவர்களின் பணம் தானே...அதைத் தானே எடுத்து மல்லையாவிற்கு தந்திருக்கிறது அந்த வங்கி...இப்பொழுது அந்த பணம் திரும்பி வரவில்லை என்றால், அந்த வங்கியினால் எவ்வாறு அந்த பணத்தின் உரிமையாளர்களுக்கு மீண்டும் பணத்தினைத் தர இயலும்? முடியாது தானே. வங்கியில் பணத்தினை போட்டு வைப்பதுடன் எனது வேலை முடிந்து விடுகின்றது, அந்த பணத்தினை அவர்கள் எங்கே வைத்திருக்கின்றார்கள், அதற்கு வட்டியினை அவர்கள் எவ்வாறு தருகின்றார்கள், அந்த பணத்தினைக் கொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள், அதனை யாருக்குத் தருகின்றார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை...பணம் போட்டு இருக்கின்றோம், அது பத்திரமாக இருக்கும், கூடுதலாக அவர்கள் அதற்கு வட்டியும் தருகின்றார்கள் என்பதுடன் நாம் மன நிறைவடைந்து நின்று விடுகின்றோம்.

அட என்னங்க...எல்லாத்தையுமா நம்ம கவனிச்சிக்கிட்டு இருக்க முடியும், அதுக்குதான் வங்கி அதிகாரிகள் இருக்கின்றார்கள், அரசாங்கம் இருக்கிறது, அதன் சட்டங்கள் இருக்கின்றது...எல்லாம் முறைப்படி நடக்கிறதா என்று அவர்கள் கவனித்துக் கொள்ள மாட்டார்களா? ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டது என்பதால் அதனையே பிடித்துக் கொண்டு குறை கூறுவது சரிதானா? என்ற ஒரு வாதம் இங்கே இயல்பாக எழக்கூடும். இந்தக் கேள்விக்காகத்தான் நாம் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

நாம் சென்ற பதிவில் கண்டிருந்தோம், 1930களில் அமெரிக்கப் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்து விட்டது என்று. அதன் காரணம் பங்குச் சந்தையும் வங்கிகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வீழ்ந்தது தான். அந்த வீழ்ச்சியினைப் பற்றி நாம் சிறிது மேலோட்டமாக கண்டு விடலாம்.

முதலாம் உலக யுத்தத்தில் மாபெரும் வெற்றியையும் அதன் விளைவாக மாபெரும் செல்வத்தையும் அடைந்த அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் இருந்தது. போரில் அமெரிக்காவிற்கு இழப்பென்று பெரிதாய் ஒன்றும் கிடையாது, ஆனால் அனைத்து ஐரோப்பிய தேசங்களும் மாபெரும் இழப்பை அடைந்து இருந்தன, ஏனெனில் யுத்தம் நிகழ்ந்ததே ஐரோப்பிய நிலப்பரப்பில்தான்...ஆகவே அவர்கள் தங்களை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும், தங்களது தொழில்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு அத்தகைய தேவை என்று எதுவும் கிடையாது...அதன் தொழில்கள் முன்னைவிட சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தேவைகள் இருந்தன, அமெரிக்காவில் தேவைக்கு மீறிய உற்பத்தி இருந்தது. போதாதா, புதிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றோம், உற்பத்தி செய்கின்றோம் என்று தொடர்ந்து அமெரிக்காவில் தொடங்கிய வண்ணம் இருந்தன...இலாபம் கணக்கில்லாமல் வந்து கொண்டிருந்தது...பங்கு சந்தையும் கட்டுப்பாடின்றி வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எப்பொழுது ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தமது உற்பத்தியை தொடங்கினவோ, அப்பொழுது அவற்றுக்கு பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லாது போய் விடும்தானே. அசுரத்தனமான இலாபங்களைக் கண்டு வந்து கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களின் இலாபம் குறைய ஆரம்பிக்கும்தானே...ஆனால், தங்களது இலாபங்கள் உண்மையிலேயே குறைந்தாலும், அவற்றை மறைத்து வைத்துவிட்டு, தொடர்ந்து தாங்கள் இலாபம் அதிகமாக கண்டு வந்து கொண்டிருக்கின்றோம்...எங்களது வணிகம் அருமையாகப் போய் கொண்டு இருக்கின்றது என்று அந்த அமெரிக்க நிறுவனங்கள் போலிக் கணக்குகளைக் காட்டி மக்களைத் தொடர்ந்து தங்களது பங்குகளில் முதலீடு செய்ய வைத்தால் என்னவாகும்?

மக்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருப்பார்கள்...அந்த பணத்தினைக் கொண்டு அந்த நிறுவனம் தனது வணிகத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யும், ஆனால் விழுந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தை எத்தனை காலம் தான் வண்ணம் பூசி மறைத்து வைக்க முடியும்? ஒருநாள் விழுந்துத் தானே ஆகும். அதுதான் அமெரிக்காவிலும் நிகழ்ந்தது...பெரிய நிறுவனங்கள் என்று கருதப்பட்ட நிறுவனங்களின் பெருந்தலைகள் கிடைத்த இலாபம் போதுமென்று மக்களின் பணத்தினை எடுத்துக் கொண்டு இராவோடு இராவாக நிறுவனத்தை இழுத்து மூடிக் கொண்டு ஓடினர். அவர்களைச் சார்ந்திருந்த ஏனைய நிறுவனங்கள் அவர்களைத் தொடர்ந்து கையை விரிக்க ஆரம்பித்தன. பங்குச் சந்தைகளில் பணம் போட்டிருந்த மக்கள் அதே இரவில் ஆண்டியாகிப் போயினர்.

சரி, பங்குச் சந்தையில் போட்ட பணத்தின் நிலைதான் இப்படி ஆயிற்று, நல்லவேளை வங்கிகளில் நமது பணம் பத்திரமாக இருக்கும் என்று எண்ணியவர்களின் நிலையும் அப்படியேத்தான் ஆயிற்று. வங்கிகளும் தங்கள் வசமிருந்த பணத்தினை பங்குச் சந்தையில் தான் போட்டு வைத்திருந்தன...எனவே அந்த வங்கிகளும் திவாலாகத் துவங்கின. இப்படித்தான் ஒரு மாபெரும் விஞ்ஞான ஊழல் ஆரம்பமாயிற்று...அதன் விளைவு, அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாதவர்களாக மாறிப் போனது. அந்த நெருக்கடியிலிருந்து அமெரிக்கா வெளிவருவதற்கு நீண்ட காலம் ஆனது. அது வேற கதை...ஆனால் நாம் இங்கே அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது கட்டுப்படுத்தப்படாத பங்குச் சந்தைதான் என்பதனை அமெரிக்கா அறிந்து கொண்டு, பங்குச் சந்தையையும் ஏனைய நிறுவனங்களையும் வலுவான சட்டதிட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த ஆரம்பித்தது. எவரும் ஏமாற்ற முடியாத வண்ணம் அந்த கட்டுப்பாடுகள் இருந்தன...வங்கிகள், தங்களது முதலீட்டார்களின் பணத்தினைக் கொண்டு ஊக வணிகம் செய்வதற்கோ அல்லது ஆபத்தான முதலீட்டினை செய்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை...பங்கு சந்தையிலும் அதிகாரம் பரவலாக இருக்கும்படியும், ஊக வணிகம் செய்யாமல் அந்த நிறுவனங்கள் இருக்கும்படியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் விளைவாக 1930 களுக்குப் பின் 1980கள் வரை அமெரிக்காவில் எந்த விதமான பொருளாதார நெருக்கடியும் எழவில்லை.

ஆனால் 1980களில் கதை மீண்டும் மாற ஆரம்பித்தது. அமெரிக்க நிதி நிறுவனங்களின் (Wall Street) பலம் அதிகரிக்கத் துவங்குகின்றது.

1980களில் இருந்து, அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்தவர்களுக்கும் மற்ற துறையில் இருந்தவர்களுக்கும் இடையில் இருக்கும் சம்பள வேறுபாட்டினைக் காட்டும் படம்.

பலம் பொருந்தியதாக இருக்கின்ற அமெரிக்க தனியார் நிதி நிறுவனங்கள், தங்களது கொள்கைகளுக்கு ஏற்பாக இருக்கும் ஒரு அதிபரை பதவிக்கு கொண்டு வருகின்றனர்...அவர் தான் ரொனால்டு ரீகன். இவரின் காலகட்டத்தில் தான் அமெரிக்க நிதி நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன (Deregulate). பொருளாதார வளர்ச்சிக்காக எந்த முதலீட்டை வேண்டுமென்றாலும் செய்யலாம், அது எவ்வளவு ஆபத்தான முதலீடாக இருந்தாலும் சரி, அரசாங்கம் இனி கட்டுப்பாடுகள் விதிக்காது என்று அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. மேலும் ஊக வணிகத்திற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது. அதன் விளைவு தான் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா 5 பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து விட்டது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே சென்றனர்.

அமெரிக்க மக்களின் மத்தியில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வினை காட்டும் படம். 1 சதவீதம் இருக்கின்ற மக்கள் ஏனைய அனைத்து மனிதர்களைக் காட்டிலும் எந்தளவு அதிகம் சம்பாதிக்கின்றார்கள்.


அந்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு ஏற்ற சட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டனர். நிதி நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தும் நிலை போய், நிதி நிறுவனங்கள் மறைமுகமாக அரசை கட்டுப்படுத்தும் நிலை ஆரம்பமாயிற்று. அந்த நிலைதான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இந்த நெருக்கடியைப் பற்றி நாம் இந்த பதிவில் முழுதாக காண வேண்டியத் தேவையில்லை, ஆயினும் மேலோட்டமாக நாம் அதனைப் பற்றி சிறிது கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல...இதனை முதலிலேயே நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்தப் பதிவில் நுணுக்கமான பொருளாதார கோட்பாடுகளையோ அல்லது அதன் விமர்சனங்களையோ நீங்கள் எதிர்பார்த்தீர்களே என்றால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றமடையக் கூடும். எனவே நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல என்ற ஒரு விடயத்தை உங்களிடம் முதலிலேயே சொல்லியாகத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, ஒரு சாமானிய மனிதனான எனது வாழ்வில் நான் கண்டறிந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு அமையப்பட்டிருக்கும். சரி, இப்போது நாம் இரண்டு நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

2001ஆம் ஆண்டு. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த காலம். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்று வரலாற்றுப் பாடத்தில் (மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம்) யுத்தங்களுக்கு மத்தியில் உலாவிக் கொண்டிருந்த ஒரு காலமது.

"ஹிட்லரின் ஆட்டம் அதிகமாக இருக்கிறதே, இரு இரு அமெரிக்கா மட்டும் போரினுள் இறங்கட்டும்...அப்புறம் பார் ஹிட்லரின் கதியை" என்று ஒரு கதாநாயகனின் வருகைக்காக காத்திருப்பது போல் யுத்தத்தில் 'அமெரிக்காவின்' வருகையை எதிர்பார்த்திருந்த ஒரு காலமது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்கள் கதாநாயகர்களாவது இயல்பு தானே. அமெரிக்காவும் அவ்வாறுதான் எங்கள் முன் ஒரு கதாநாயனாக அப்பொழுது உருவாகி இருந்தது.

ஆனால் போர் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது போல், பொருளாதாரம் எங்களுக்குப் புரியவில்லை. 'என்னடா இவன், வரலாறு...போர் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சிட்டு திடீர்னு பொருளாதாரம் பற்றி பேசுகிறான்' என்ற எண்ணம் இங்கே வரலாம். ஏனென்றால் எங்களது பாடப் புத்தகத்தில் இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் 'அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவு (The Great American Depression)' என்று வந்த அந்தப் பகுதியைக் கண்டதும் எங்களுக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

முதலாம் உலகப் போரில் பெரிய வெற்றியினைப் பெற்று மாபெரும் இலாபங்களை அடைந்த அமெரிக்கா திடீரென்று ஒன்றுமில்லாதப் பஞ்ச பரதேசியாக மாறி விட்டது என்று அதில் கூறி இருந்தார்கள். கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள் என்றார்கள். வேலையில்லாமல் அமெரிக்கர்கள் அனைவரும் வாடினார்கள் என்று கூறினார்கள். புதுப் பணக்காரனாக அமெரிக்கா அழிந்து விட்டது என்று இங்கிலாந்து மற்றும் ஏனைய உலக நாடுகள் கருதின என்று கூறினார்கள்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எங்கும் தோற்கவில்லை, யுத்தத்தில் வென்றுதான் இருக்கிறார்கள், இயற்கை பேரழிவுகள் ஒன்றுமில்லை, அப்படி இருக்கும் போது எப்படி அந்த நாடு திடீரென்று ஒன்றுமில்லாத நாடாக மாற முடியும்? கோடிக்கணக்கான பணத்தினை வைத்திருக்கும் மனிதன், அவனிடம் இருந்து யாரும் கொள்ளையடிக்காமல் எவ்வாறு திடீரென ஒன்றுமில்லாதவனாக முடியும்?

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

இது எனக்கு அன்று புரிந்திருக்கவில்லை. நீண்ட காலம் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அதன் தேவையும் அப்பொழுது இருந்திருக்கவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் 2008 ஆம் வருடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

 2008 ஆம் ஆண்டு...மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிப் புரிந்து கொண்டிருந்த காலம். 'அமெரிக்காவில் பூம்...பூம் (Boom - அதாவது அமெரிக்காவின் பொருளாதாரம் பிச்சுக் கொண்டு போகின்றது என்று அர்த்தம்)' என்று கூறி மென்பொருள் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்களை எடுத்துக் கொண்டிருந்த காலம்.  அந்த நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கியதாம், அவனுக்கு இவ்வளவு சம்பளமாம் என்று எங்கு திரும்பினாலும் அதே பேச்சு.

ஆனால் திடீரென்று ஒரு நாள், 'அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமாகி வருகின்றது...புதிய வேலைகளை அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் எளிதாக வழங்க மறுக்கின்றன, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..அனைவருக்கும் வேலை போனாலும் போகலாம்' என்ற செய்தி பரவலாக வெளிவர ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் மண்ணைக் கவ்வுகின்றன...தினமும் 'அந்த வங்கி திவாலானது' 'இந்த வங்கி திவாலானது' என்ற செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்றார்ப் போல், மென்பொருள் நிறுவனங்களிலும் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேருவதற்காக காத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கோர் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும், 'வேலைக்கு கூப்பிடுவார்களா இல்லையா?' என்பதனை அறியாமலே தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ஏற்றுமதி முற்றுலுமாக படுத்துக் கொண்டது.

இம்முறையும் இந்த நிலை எதனால் வந்தது என்று புரியவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் அமோகமாக இருக்கின்றது என்று கூறிய ஒரு சில தினங்களிலேயே, அங்கே மாபெரும் பொருளாதார நெருக்கடி நேருகின்றது. இலட்சக்கணக்கானோர் வேலை இல்லாமல் இருக்கின்றனர், பெரிய பெரிய நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன...1930களில் நடந்ததை விட மோசமான ஒரு நிலையில் அமெரிக்கா தள்ளப்படுகின்றது. ஆனால் இம்முறை பாதிப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அதன் தாக்கம் இருக்கின்றது...ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றது...உலக முழுவதும் இருக்கின்றது.

இந்தியாவிலும் எந்தெந்த துறையெல்லாம் அமெரிக்காவைச் சார்ந்து இருந்ததோ, அந்த துறையெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது....அந்த துறைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தன. மற்ற ஏனைய துறைகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. 2008 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய அந்த நெருக்கடி இந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏன் இந்த நிலைமை? எதனால் இவ்வாறு நிகழ்கின்றது? என்ற கேள்விகளுக்கு அப்பொழுதும் எனக்கு தெளிவான விடை கிட்டவில்லை. சரி இருக்கட்டும், இப்பொழுது, 'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பை வைத்து விட்டு அவற்றைப் பற்றி ஒன்றுமே கூறாமல், ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டுப் போகின்றானே என்றே நீங்கள் எண்ணலாம். ஆனால் நான் சம்பந்தமில்லாமல் பேசவில்லை...நான் கூறிய நிகழ்வுகளுக்கும் நமது நாட்டில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்தத் தொடர்பினைத் தான் நாம் இன்று காண வேண்டி இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக பணமதிப்பிழக்கம் என்ற ஒற்றை நடவடிக்கையின் மூலமாக மக்களது ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்து விட்ட இந்த காலத்தில் நாம் இதனைப் பற்றி கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முதலில், கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றார்கள்...ஆனால் கருப்பு பணமே நாட்டில் இல்லை என்ற முடிவினைத் தான் இப்பொழுது அவர்களது புள்ளி விவரங்கள் தருகின்றன...ஒரு கருப்பு பணத்தையும் அவர்கள் பிடித்த பாடில்லை. பிடிக்கவும் மாட்டார்கள் என்பது வேற கதை.

ஆனால் வெற்றிகரமாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், மக்களது பணத்தை வங்கிகளுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்...மேலும் இனிமேல் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளும் வங்கிகளின் மூலமாகவே நடைபெறும் வண்ணம் இருக்கின்ற ஒரு அமைப்பினை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைகளினாலேயே தான் நாம் மேலே உள்ள விடயங்களை காண வேண்டியதாயிற்று. ஏனென்றால் இரண்டுக்கும் தொடர்பு இருக்கின்றது. இப்பொழுது உங்களிடம் முதலில் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்கிறேன்...

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

முடியாது தானே. சரி, இப்பொழுது அந்த ஆயிரம் ரூபாயை நான் வங்கியில் போட்டு வைத்திருக்கின்றேன்...அந்த வங்கிக்காரன் வங்கியை இழுத்து சாத்திவிட்டு போய் விட்டான் என்றால், ஆயிரம் ரூபாய் என்னிடம் இருந்தும் கூட நான் பிச்சைக்காரனாகி விடுகின்றேன் தானே...!!!

அமெரிக்காவிலும் அதேதான் நடந்தது. ஒரே நாளில் இலட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் பிச்சைக்காரர்களானது இப்படித்தான். அமெரிக்காவில் இருப்பவை அனைத்தும் தனியார் வங்கிகள்...ஒரே நாளில் அவை கடையை சாத்த, அந்த வங்கியில் பணத்தினை வைத்திருந்த மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து விட்டார்கள். அரசாங்க வங்கி என்றால் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கலாம், தனியார் வங்கிகள் என்றால் யாரைக் கேள்வி கேட்பது...? சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த விடயத்தினைப் பற்றித் தான் நாம் விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:

வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

சிறிது விசித்திரமானதொரு தலைப்புதான். வில்லங்கமானதாகவும் இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை, இன்று இல்லுமினாட்டிகள் என்ற ஒரு சொல்லாடல் நம் மத்தியிலே பரவலாக பரவி வருகின்ற பொழுது, இராஜ இராஜ சோழனையும் நாம் இழுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், முதலில் இல்லுமினாட்டி என்று இன்றைக்கு கூறப்படும் அந்த கூற்றினைப் பற்றி நாம் சிறிது கண்டு விடலாம்.

இல்லுமினாட்டி - இன்றைக்கு உலக முழுவதையும் தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கும் வண்ணம் அதிகாரம் படைத்த 13 குடும்பங்களைக் கொண்ட ஒரு குழு இது. மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்து அனைத்து வணிகங்களையும் சரி உலகில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் சரி கட்டுப்படுத்துகின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. பல்வேறு நாட்டின் தலைவர்களை கொலை செய்வது, வங்கிகளை வைத்துக் கொண்டு மக்களையும் நாடுகளையும் அடிமைகளாக ஆக்குவது என்று அதன் நடவடிக்கைகள் அநேகம். கிட்டத்தட்ட நமது நகரத்தின் உள்ளாட்சி செயலாளராக யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முதற்கொண்டு தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாக அது இருக்கின்றது. சுதந்திரமாக இருப்பதாக மனிதர்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரிய குடும்பங்கள் தான் அவர்கள்.

இவ்வாறு தான் இன்றைக்கு இல்லுமினாட்டிகளைப் பற்றிய செய்திகள் நம்மிடையே பரவலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் முற்றிலுமாக மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த கூற்றில் பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. ஒரு சில நபர்கள் இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையுமே கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், இல்லுமினாட்டிகளைப் பற்றிக் கூறுவோர், அவர்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறார்களேத் தவிர, அவர்கள் அந்த ஆற்றலை எப்படி அடைகின்றார்கள் என்பதனைப் பற்றி கூறுவதில்லை. இதனால், இல்லுமினாட்டிகளை வீழ்த்த முடியாது, ஒரு சாதாரண மனிதனால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்றொரு பிம்பமும், வரலாற்றில் அவர்களைப் போல் எவருமே இருந்ததில்லை, இது இதுவரை மனிதகுலம் சந்தித்திராத மாபெரும் தீயசக்தி என்பன போன்ற பிம்பமுமே தான் தோற்றுவிக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையோ முற்றிலும் வேறாக இருக்கின்றது. மனிதர்கள் இல்லுமினாட்டிகளை காலந்தோறும் சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பல சமயங்களில் தோற்று இருக்கின்றனர், சில நேரங்களில் வென்றும் இருக்கின்றனர். இது நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தம். இது புதியதொரு பிரச்சனை அல்ல. இதை மக்களை உணரச் செய்வதற்கு இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவோர் தவறி விடுகின்றனர்.

பிரச்சனையில்லை...நாம் முயல்வோம்!!! முதலில் இல்லுமினாட்டிகளைப் பற்றிய முக்கிய விடயங்களாக கூறப்படுவதை நாம் காணலாம்.

 1. உலக முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்.
 2. அவர்களுக்கு உடன்படும் மனிதர்களை பல்வேறு தேசங்களை ஆள செய்கின்றார்கள்.
 3. எதிர்க்கும் தலைவர்களை கொலை செய்கின்றார்கள்.
 4. மக்களை பொழுதுபோக்கு என்ற மாயையில் சிக்க வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்கின்றார்கள்.
 5. எதற்கும் பயன்படாத கல்வியை பரப்பி மக்களை விலங்குகளைப் போல் மாற்றுகின்றார்கள்.
 6. வங்கிகளை கையில் வைத்து கொண்டு உலகின் நிதியினை கட்டுப்படுத்துகின்றார்கள்.
இவைதான் இல்லுமினாட்டிகளைப் பற்றி கூறப்படும் முக்கியமான விடயங்கள். இப்பொழுது இந்த விடயங்களை நாம் வரலாற்றின் அடிப்படையில் காண வேண்டியிருக்கின்றது. அப்படி கண்டோமே என்றால்,

தங்களது ஆளுமைக்குள் வராத மற்ற தேசங்களின் மீது போர் தொடுத்துச் சென்று அவற்றை வென்ற அரசர்கள் யாவரும் இல்லுமினாட்டிகள் தான். அது அசோகனாகட்டும், சீசராகட்டும், இராஜ இராஜ சோழனாகட்டும், பாபராகட்டும், ஆங்கிலேய பேரரசாகட்டும் - இவர்கள் அனைவரும் இல்லுமினாட்டிகள் தான். ஏன், வேறொரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஒவ்வொரு மனிதனுமே இல்லுமினாட்டி தான்.

அதிகாரம் என்பது அந்தளவு போதையூட்டக்கூட ஒன்றுதான். மனித வரலாறு முழுவதும் அதிகாரத்திற்கான மோதல்களைத்தான் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.

கிழக்கு கடல் முழுவதும் பயணம் செய்து போர் பல புரிந்து வெற்றி பெற்ற இராஜ இராஜ சோழன், தான் வெற்றி புரிந்த நாடுகளை ஆட்சிப் புரிய அந்த தேசத்து நபர்களைத் தேர்வு செய்தானா அல்லது அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான சோழ மனிதர்களை தேர்வு செய்தானா?

ஐரோப்பிய கண்டம் மற்றும் ஆப்பிரிக்க கண்டம் ஆகிய கண்டங்களில் பல இடங்களைப் போர் புரிந்து வெற்றி கண்ட சீசர், ரோம பேரரசினைச் சார்ந்தவர்களையோ அல்லது தனது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்ற அந்தந்த தேசத்து மனிதர்களையோ தானே அந்த தேசங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தான்.

மற்ற தேசத்து அரசர்களை போரில் வெற்றி கண்டு, அவர்களது குடும்பங்களை கொன்ற பின்பு, தனக்கு வேண்டியவர்களை அந்த பதவிகளில் வீற்றிருக்க செய்வது என்பது அன்றிலிருந்தே வழக்கத்தில் இருக்கிறதே.

மேலும், சூழ்ச்சியால் அதிகாரங்களை கைப்பற்றுவதும் வரலாறு முழுவதிலும் நிகழத்தானே செய்திருக்கிறது. அசோகனின் பேரனான பிரகரதத்தனை, பெர்சிய வம்சாவளியைச் சார்ந்த புஷ்யமித்தர சுங்கன் என்ற படைத்தளபதி சூழ்ச்சியால் கொன்று, அரசைப் பிடித்ததை வரலாறு நமக்கு கூறத் தானே செய்கின்றது. ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணமும் சூழ்ச்சியினால் நிறைவேறியது என்ற கூற்றும் நிலவத்தானே செய்கின்றது. எனவே சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடிப்பது என்பதும் புதுமையானதொன்று அல்ல.

அவ்வாறு சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடித்தவர்கள் இல்லுமினாட்டிகள் என்றால், புஷ்யமித்திர சுங்கனும் அவனைப் போன்றவர்களும் இல்லுமினாட்டிகள் தான்.

மேலும், பொழுது போக்கினால் மக்களை அறியாமையில் வைத்திருப்பது என்பதும் புதுமையானதொன்று அல்லதான், ரோமர்கள் காலத்து அடிமை சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும், ரோமர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துமஸ் கொண்டாட்டங்களும், மன்னர் காலங்களில் போற்றி வளர்க்கப்பட்ட கோவில் திருவிழாக்களும் மக்களை மயக்குவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் தானே. மக்கள் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதிகாரத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும். அறியாமையும் சிந்திக்காத தன்மையும் அதிகாரத்திற்கு அந்தளவு முக்கியமானவை. எனவே காலத்தில் நாம் எந்தளவு பின் நோக்கி சென்றாலும், அப்பொழுதெல்லாம் மக்களை பொழுது போக்கினால் அரசுகள் மயக்கி வைத்திருப்பதை நம்மால் காண முடியும். எனவே இதிலும் புதுமை இல்லை.

சிந்திக்க வைக்காத கல்வி முறையை இல்லுமினாட்டிகள் பரப்புகின்றார்கள் என்று கூறினால், சூத்திரன் எவனும் படிக்கவே கூடாது, கோவிலுக்குள் வேறு யாரும் நுழைய கூடாது என்று கூறி அதிகாரத்தினால் மக்களை அறியாமையில் கல்லாமல் இருக்க வைத்த பிராமணர்களும் அவர்களுக்குத் துணை போன அரசர்களும் இல்லுமினாட்டிகளின் முன்னோர்கள் ஆவார்கள். அவ்வாறே விவிலியத்தை வேறு எவரும் படிக்கக் கூடாது, இலத்தினைத் தவிர வேறு மொழியில் மொழிபெயர்க்க கூடாது என்று கூறி அவ்வாறு செய்தவர்களை தீயிட்டுக் கொளுத்திய ரோம கத்தோலிக்கத் திருச்சபையும் இல்லுமினாட்டியின் முன்னோர் தான்.

மேலும் வங்கிகளைக் கொண்டு இல்லுமினாட்டிகள் மக்களின் நிதி நிலைமைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்றும் நிலவுகின்றது. இந்த கூற்று உண்மையானது தான்...ஆனால் புதிதானது அல்ல. ஏனென்றால் 'பணம்' அல்லது 'நாணயம்' என்ற ஒன்றினை இவர்கள் கூறுகின்ற இல்லுமினாட்டிகள் கண்டுபிடிக்கவில்லை. அவை என்றோ புழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக, ரோம பேரரசின் கீழ் இருந்த யூதர்கள், ரோம சாம்ராஜ்யத்திற்கு ரோம நாணயங்களின் மூலமாகவேதான் வரியினைக் கட்ட வேண்டியிருந்தது. ரோம நாணயங்களை அச்சிடும் உரிமை ரோம மன்னனுக்கே இருந்தது. எனவே அந்த நாணயத்தின் மூலமும் ரோமர்கள் மற்ற இனத்தவரை அடிமைப்படுத்தி இருந்தனர். சோழர்களும் தங்களுக்கென்று தனி நாணயங்களை வைத்துத் தான் இருந்தனர். ஒவ்வொரு பேரரசும் சிற்றரசை கப்பம் கட்ட சொல்லுவது என்பது இன்றிருக்கும் கடன்களுக்கு வட்டியினை கட்டுவது போன்றதொரு செயலாகத் தான் இருக்கின்றது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எவனொருவன் நாணயத்தினைக் கண்டு பிடித்தானோ அவன் தான் வரலாற்றிலேயே மிகப் பெரிய இல்லுமினாட்டியாக இருந்திருப்பான்.

மேலும், இல்லுமினாட்டிகள் அனைத்து வணிகங்களையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர் என்ற ஒரு வாதமும் இங்கே இருக்கின்றது. அதனடிப்படையில் பார்த்தோமே என்றால், இங்கிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், போத்திஸ், கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கோவை பழமுதிர் நிலையம், ரிலையன்ஸ் என்பன போன்ற அனைத்து நிறுவனங்களையும் இல்லுமினாட்டிகளாக கருதலாம் தான்.

எனவே இல்லுமினாட்டிகள் என்பது, ஏதோ இதுவரை இருந்திராத புதியதொரு தீய இயக்கம் அல்ல. முற்காலங்களில் இருந்த அதே தீய வழிமுறைகள் தான் இன்றைய காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் மாறி வந்திருக்கின்றன. அவ்வளவு தான். எவ்வாறு அழியவே அழியாது என்று கருதப்பட்ட ரோம பேரரசும், ஆங்கிலேய சாம்ராஜ்ஜியமும் வீழ்ந்தனவோ, அவ்வாறே ஒரு காலத்தில் இந்த இல்லுமினாட்டிகள் என்ற ஒன்றும் நிச்சயம் வீழ்ச்சி அடையும். ஆனால் அன்று, அவர்களுக்கு பதிலாக அந்த இடத்திற்கு வேறொருவர் வந்திருப்பார்.

ஏனென்றால் இல்லுமினாட்டிகள் போன்ற நபர்கள், அவர்களது பலத்தினால் அதிகாரங்களை பெற்று இருப்பதில்லை. மாறாக மக்களின் பலவீனங்களின் மூலமாகவே தான் அவர்கள் அவர்களது அதிகாரங்களை அடைந்து இருக்கின்றார்கள்.

டால்ஸ்டாய் அவர்கள் இந்தியாவின் விடுதலையைப் பற்றி கூறும் பொழுது ஒன்றைக் கூறுவார் :

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுது, தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.'

அதே நிலை தானே இன்றும் தொடர்கின்றது. வெறும் 13 குடும்பங்கள் உலக மக்கள் அனைவரையும் ஆட்சி புரிகின்றனர் என்றால், தவறு யார் மீது இருக்கின்றது? அதுவும் மன்னராட்சி காலம் முடிந்து மக்களால் தேர்வு செய்யப்படும் மனிதர்கள் ஆட்சி புரியக்கூடிய மக்களாட்சிக் காலத்தில் இத்தகைய நிலை இருந்தால், மக்களைக் குறை கூறாமல் வேறு எவரையோ குறை கூறி என்ன பயன்?

மனிதர்கள் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் அன்புடன் பொதுநலத்துடன் வாழ்ந்து வரக்கூடிய ஒரு தேசத்தில், அந்த மக்களை மீறி யாரால் என்ன செய்து விட முடியும்? அதே சமயம், சுய நலத்துடன் இருக்கின்ற இரு சகோதரர்களுக்குள் ஒரு சின்ன வதந்தி கூட பெரிய விரிசலை ஏற்படுத்தி மாபெரும் சேதத்தை அந்த வீட்டிற்கே உண்டாக்கி விட முடியும்.

இதில்தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றது. மக்களை ஏமாற்றுபவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். மக்களோ பிரிந்து இருக்கின்றார்கள், அல்லது ஆசைகள், பயம், சுயநலம் போன்றவற்றின் காரணமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் பிரிந்து இருப்பதினால், அவர்களை மற்றைய ஒரு சில நபர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப அடக்கி ஆண்டு கொள்கின்றனர். இதனை  வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது. இனிமேலும் காண முடியும்.

எனவே, நம்முடைய இன்றைய மோசமான சூழல்களுக்கு இல்லுமினாட்டிகள் தான் காரணம் என்று மூன்றாம் நபரை காரணம் காட்டுவதை விட, 'நாம் ஒழுக்கமானவர்களாக, சுயநலமற்றவர்களாக அன்புடையவர்களாக இல்லை...அதனால் தான் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்...நம்முடைய சமூகமும் சீரழிந்துக் கொண்டிருக்கின்றது' என்று நம்மை நாமே திருத்திக் கொள்ள செய்வதே உண்மையான மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

எல்லோரும் சமமாக வாழ வேண்டும்...அதற்கான உரிமை எல்லாருக்கும் இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்வதற்காகத் தான் நாம் இங்கே வந்திருக்கின்றோம் என்ற எண்ணம் பரவ வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதுவே தான் ஒரே வழி.

ஒற்றுமையே என்றும் பலமாம்...!!!

'கடனின்றி அமையாது உலகு' என்று இன்றைய காலக்கட்டத்தில் கூறுவது நிச்சயம் தவறானதொரு கூற்றாக அமையாது என்பதனைப் போன்றே தான் இன்றைய உலகம் முற்றிலும் கடனினால் சூழப்பட்டு இருக்கிறது. படிப்பதற்கு கடன், பொருட்கள் வாங்குவதற்கு கடன், வீடு கட்டுவதற்கு கடன், மருத்துவத்திற்காக கடன் என்று இன்றைக்கு ஒரு தனி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வுமே கடனினால் நிறைந்திருக்கிறது. கடனில்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது என்ற நிலைக்கே இன்றைய சமூக சூழல்கள் இருக்கின்றன. கடன், ஒரு மனிதனின் சுதந்திரத்தை பறிக்கின்றது என்பதனைத் தெரிந்தும், வேறு வழியில்லாமல் கடன் வாங்குகின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடனை விரைவாக அடைக்க வேண்டுமே இல்லாவிடில் வட்டி கூடிக் கொண்டே போகுமே என்ற ஒரே சிந்தனை அவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள, 'அடிமகள் என்று பெயரிடப்படாத அடிமைகளாக அவர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் படம் அவர்களைப் பற்றிய ஒரு படமல்ல. ஆம், தனி நபர் கடனினைப் பற்றி இந்தப் படம் பேசுவதில்லை. மாறாக, ஒரு கடனினால் தனி நபர் ஒருவனின் வாழ்வே பெரிதளவு மாறிப் போகின்ற பொழுது, மாபெரும் கடன்களை வாங்குகின்ற தேசங்களின் நிலை என்னவாகின்றது என்பதனைக் குறித்தேதான் இந்த படம் பேசுகின்றது. அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைப் பற்றியும், உலக வங்கியிடமிருந்தும் சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்தும் அவை பெற்ற கடன்களைப் பற்றியும் அவற்றால் அவை அடைந்த இன்னல்களைப் பற்றியும் இந்த படம் பேசுகின்றது. 'ஜமைக்கா' என்றொரு மூன்றாம் உலக நாட்டினை நம் கண் முன்னே கொண்டு வந்து, அதன் வரலாற்றை விரிவாக விரித்து, எப்படி அந்த நாடு கடன் என்ற பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டது...அதனால் அதன் நிலை என்னவானது என்று தெளிவாக நமக்கு விளக்க முற்படுகின்றது. அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது சிறிது காண வேண்டி இருக்கின்றது.

ஜமைக்கா - அழகான ஒரு தீவு. மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போன்றே அந்நிய ஆதிக்க சக்தியிடமிருந்து (இங்கேயும் ஆட்சி புரிந்தது ஆங்கிலேயர்கள் தான்) இரண்டாம் உலக போருக்குப் பின்னர் விடுதலை அடைந்து, சுதந்திர காற்றினை சுவாசித்ததொரு நாடு அது. ஆனால் சுதந்திரம் என்ற சொல், கேட்பதற்கு இனிமையாக இருப்பதனைப் போன்றே செயல்முறையில் இருப்பதில்லை என்பதனை அது விரைவில் கண்டு கொண்டது.

சுதந்திரம் இருக்கின்றது...ஆனால் பணம் இல்லை...வேண்டிய மருந்துகளை வாங்க முடியவில்லை, தொழிற் கருவிகளை வாங்க முடியவில்லை, சம்பளம் தர முடியவில்லை...புதிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை...இந்நிலையில் வெறும் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே அந்த நாட்டின் பிரதமர் மைக்கேல் மான்லி திணறிக் கொண்டிருக்கும் பொழுதுதான், வேறு வழியில்லாமல் அவர் உலக வங்கியிடமும் IMFயிடமும் உதவிக் கோரி செல்லுகின்றார்.

"ஓ...நிதி நெருக்கடியில் இருக்கின்றீர்களா...நல்லது. கவலைப் படாதீர்கள், உங்களுக்கு உதவுவதற்குத் தானே நாங்கள் இருக்கின்றோம். நிச்சயமாக உதவி செய்கின்றோம். என்ன கொஞ்சம் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது தானே. அப்புறம் கூற மறந்து விட்டோம், உங்களுக்கு நாங்கள் தருகின்ற பணத்தினை நீங்கள் எங்களுக்கு திருப்பித் தருவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது? நீங்கள் அந்த பணத்தினை மோசமான வழிகளில் செலவழித்து விட்டீர்கள் என்றால் எப்படி அதனைத் திரும்பத் தருவீர்கள்? உங்களை நாங்கள் எப்படி நம்புவது? எனவே உங்களுக்கு நாங்கள் பணத்தினைத் தருகின்றோம்...ஆனால் அதனை நாங்கள் கூறுகின்றபடிதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும். உங்களுக்கென்று நாங்கள் முன் வைத்திருக்கும் திட்டம் இதோ..." என்றே அந்த நிறுவனங்கள் அவரை எதிர் கொள்ளுகின்றன (கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளையும் அவை இவ்வாறே தான் எதிர் கொள்ளுகின்றன).

அந்த நிறுவனங்கள் போட்ட கட்டுப்பாடுகளில் முக்கியமான சில விடயங்கள் என்னவென்றால்,

 • சுதந்திர வணிகத்தை அனுமதிக்க வேண்டும். அதாவது மற்ற உலக நாடுகளுக்கு (அமெரிக்கா, இங்கிலாந்து...) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தனது சந்தையை திறந்து வைக்க வேண்டும்.
 • மக்களுக்கு வழங்குகின்ற மானியங்களை நிறுத்த வேண்டும்.
 • கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மிகவும் குறைவாகவே செலவழிக்க வேண்டும்.
 • அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளின் விளைவாக ஜமைக்காவின் பல்வேறு தொழில்கள் என்னவாயின என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் இந்த ஆவணப்படமானது விளக்குகின்றது. அதனைச் சுருக்கமாக நாம் கண்டு விடலாம்.

விவசாயம்:

சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜமைக்கா தனது சந்தையை உலக நாடுகளுக்குத் திறந்து வைத்தது. அதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலிருந்தும்...குறிப்பாக அமெரிக்காவிலிருந்து காய்கறிகள் ஜமைக்கன் சந்தைகளில் வந்து குவிய ஆரம்பித்தன. வெளிநாடுகளிலிருந்து வந்த காய்கறிகள் விலை மலிவாக இருந்த காரணத்தினால் உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்குவோர் குறைந்தனர். விவசாயம் அழிந்தது.

கடன்:

உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்களின் மோசமான திட்டங்கள் காரணமாக, ஜமைக்காவின் கடன் மேலும் வளர்ந்து கொண்டேதான் சென்றது. 1970களில் 800 மில்லியன் டாலராக இருந்த கடன், 1980களின் முடிவில் நான்கு பில்லியன் டாலர்களாக இருந்தது. அதுவே 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 7 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது அந்த நாட்டின் கடன் கூடிக் கொண்டேதான் சென்று இருக்கின்றது.

பால் வணிகம்:

விவசாயத்தைப் போன்றே பால் வணிகத்திலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்ததால், ஜமைக்கன் பால் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை விட்டு விட நேருகின்றது. இதனைப் பற்றி இந்த படம் என்ன கூறுகின்றது என்பதனை சற்று விரிவாக காணலாம்.

பால் பண்ணையாளர் ஒருவர் - வருடத்திற்கு 18 மில்லியன் லிட்டர் முதல் 30 மில்லியன் லிட்டர் வரை பாலினை உற்பத்தி செய்யும் அளவு நாங்கள் முன்னேறி இருந்தோம். 1991ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 34 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்தோம். ஆனால் 1992 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டு வளர்ச்சி வங்கியிடமிருந்து, விவசாயம் மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்கென்று 50 மில்லியன் டாலர்கள் கடன் வாங்குவதற்கென்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தமிட்டுக் கொண்டது. அதன்படி, அரசாங்கமானது எவ்விதமான மானியத்தையும் உள்நாட்டுப் பொருட்களுக்கு வழங்கக் கூடாது, மேலும் பால் பவுடர் மற்றும் மாமிசம் போன்ற பொருட்களின் இறக்குமதியின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கமானது நீக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக பாலிற்கான போட்டி கடினமானதொன்றாக மாற ஆரம்பித்தது. பெருமளவு பால் பவுடர் இங்கே வந்து குவியத் துவங்கியதால் பால் தொழில் அழிந்து போயிற்று. அனைவரும் பால் பவுடரை பயன்படுத்தத் துவங்கியதால், பால் துறை தவிக்கலாயிற்று. இதில் கொடுமை என்னவென்றால், உள்நாட்டு பாலுக்கு அரசாங்கம் எவ்விதமான மானியமும் அளிக்கக் கூடாது, ஆனால் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் பவுடருக்கு அமெரிக்க அரசானது கிட்டத்தட்ட 137 சதவீத மானியத்தை வழங்குகின்றனர். யாரால் அதனை எதிர்த்து வணிகம் செய்ய முடியும்? தேசிய உணவு பாதுகாப்பு இல்லாமல் போவதே இதன் முடிவாக இருக்கும். எப்பொழுது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பால் பவுடருக்கான மானியம் நிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்த பொருட்களின் விலைகள் நமது உள்நாட்டு பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். ஆனால் அப்பொழுது நாம் இந்த வணிகத் துறையை விட்டே விலகிச் சென்றிருப்போம்.

நிற்க.

இவ்வாறு இன்னும் பல புள்ளி விவரங்களுடன் வரலாற்றுத் தரவுகளுடன் இந்த படமானது, உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்கள் கடன்களின் மூலமாக எவ்வாறு பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை சீர்குலைக்கின்றன என்பதனைத் தெளிவாக விளக்குகின்றது. அதுவும் அந்த நிறுவனங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதனையும் எதனால் அவை உருவாக்கப்பட்டன என்பதனைப் பற்றியும் சுருக்கமாக இது விளக்குகின்றது. எனவே இந்த படத்திற்கு நாம் சிறிது கவனத்தைத் தந்தாகத்தான் வேண்டியிருக்கின்றது.

ஏனென்றால், நாமும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நம்முடைய அரசும் இன்று,

 • மானியங்களை குறைத்து வந்து கொண்டிருக்கின்றது.
 • அனைத்தையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கின்றது.
 • 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருக்கிறது.
 • சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டினை ஏற்று இருக்கின்றது.
 • விவசாயத்தினை முன்னுரிமை படுத்த மறுக்கின்றது.
 • வங்கிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
 • அனைத்திற்கும் மேலாக நம்முடைய நாடும் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கான வட்டியினைக் கட்டிக் கொண்டிருக்கின்றது.
ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் பொழுது கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்கட்சியானது எதிர்க்கின்றது. எதிர்கட்சியானது ஆட்சியில் இருக்கின்ற பொழுது தான் எதிர்த்த அதே திட்டங்களை செயல்படுத்துகின்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, வரிவிலக்கு வரம்பை 1.5 லட்சத்திலிருந்து  4.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கூறிய அருண் ஜெட்லீ, ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்ற போதிலும் 1.5 லட்ச வரம்பிலிருந்து ஒரு பைசா கூட கூட்டியிருக்கவில்லை. இதையேதான் காங்கிரசும் செய்தது...செய்திருக்கும்...இனியும் செய்யும். இந்த நடவடிக்கைகள் கேலிகரமாக தெரிந்தாலும், அதனுள் ஒளிந்திருக்கும் அந்த முக்கியமான விடயத்தை நாம் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டியிருக்கின்றது.

கடன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் பொழுது, ஒரு நாட்டினை என்ன செய்யும் என்ற கேள்வியை நாம் இங்கே எழுப்ப வேண்டியிருக்கின்றது.

கடன்...ஒவ்வொரு மனிதனும் இதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்தப் படம் சிறிது உதவும் என்றே நம்புகின்றேன்.

கடனின்றியே அமைய வேண்டும் உலகு. அதற்கே நாம் முயல வேண்டும்.

முற்றும்.

பி:கு:

IMFஐ பற்றி அறிந்து கொள்ள 'ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை சைபர்' என்ற நூலும் உதவும்.

தொடர்புடைய இடுகைகள்:

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இசுலாமிய மசூதி எங்கே இருக்கின்றது என்று தெரியுமா?

அது தமிழகத்திலேயே தான் இருக்கின்றது. ‘சேரமான் ஜம்மா மஸ்ஜித்’ என்று சேர மன்னன் சேரமான் பெருமாளுக்கு கட்டப்பட்ட அந்த மசூதி இன்று திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்காளூர் தாலுக்காவில் மேதாலா என்னும் இடத்தில் அமைந்து இருக்கின்றது.

பொதுவாக இசுலாமியர்கள் வடக்கில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் என்ற எண்ணமேதான் நம்மிடம் இருக்கின்றது. ஆனால் அதற்கு மாறாக இசுலாமியர்களான அராபியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சேர நாட்டின் வழியாக வாணிப ரீதியான நட்பு முறை இருந்திருக்கின்றது என்பதனை இந்த மசூதி நிரூபணம் செய்து கொண்டே இருக்கின்றது. வடக்கே இசுலாமியர்கள் படை எடுத்து வருவதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் இசுலாமிய மக்களுடன் நட்புறவுக் கொண்டு வாணிக உறவினைக் கொண்டிருந்தது. எனவே தான் தமிழகம் அனைத்து சமய மக்களும் அமைதியாக வாழும் ஒரு தேசமாக இருக்கின்றது.

பொதுவாக ஒரு நூலினை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகின்ற படங்கள், அந்த நூலினை வாசித்த நபர்களுக்கு திருப்தியளிக்கும் வண்ணம் இருப்பதில்லை. அந்த நூல் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை, ஒன்று திரையில் கதை மாந்தர்களால் வெளிப்படுத்த முடியாது போகும் அல்லது அவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் அந்த படத்தின் திரைக்கதை அமைந்திருக்காது. எனவே பெரும்பாலும் ஏமாற்றமே தான் அந்த நூலின் இரசிகர்களுக்கு எஞ்சியிருக்கும். வெகு சில படங்கள் மட்டுமே தான், அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். அதைக் காட்டிலும் குறைந்தளவு படங்களே தான் அவர்களது எதிர்பார்ப்பினை மிஞ்சிய வண்ணம் இருக்கும். அத்தகைய ஒரு படம் தான், அதாவது எதிர்பார்ப்புகளை மிஞ்சியிருக்கின்ற ஒரு படம் தான் இந்த 'குட்டி இளவரசன்'.

'குட்டி இளவரசன்' என்று பிரென்ச் மொழியில் வெளிவந்த ஒரு நூலினை அடிப்படையாக வைத்தே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கின்றது (அந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை நாம் ஏற்கனவே இந்த பதிவில் கண்டிருக்கின்றோம் - குட்டி இளவரசன் - இதனை முதலில் படித்து விடுவது நல்லது). ஆனால் அந்த கதையினை அப்படியே எடுக்காமல், இந்த காலத்தில் அந்த கதையானது எவ்வாறு பொருந்தும் என்று எண்ணி அதன்படி இந்தத் திரைப்படத்தின் கதையினை அமைத்திருப்பதில் தான் இந்தப் படத்தின் சிறப்பு அடங்கியிருக்கின்றது.

உலகப்புகழ் பெற்ற பள்ளிக்கூடத்தில் தன்னுடைய மகளைச் சேர்ப்பதற்காக ஒரு தாய் காத்திருப்பதிலிருந்து இந்தக் கதைத் தொடங்குகின்றது. "இந்த கேள்விகளைத் தான் கேட்பார்கள்...இந்த வரிசையில் தான் கேட்பார்கள்...அதற்கான பதில்களை நன்றாக மனப்பாடம் செய்து விட்டாய் அல்லவா...அதனை அப்படியே அவர்கள் கேட்கும் பொழுது கூறி விட்டாய் என்றால் உனக்கு இந்தப் பள்ளிக்கூடத்தில் நிச்சயம் இடம் கிடைத்து விடும்...அப்புறம் உன்னுடைய வாழ்வில் கவலையே கிடையாது" என்றே அவள் தன்னுடைய மகளை அந்த பள்ளியின் நேர்முகத் தேர்விற்கு தயாராக்கிக் கொண்டிருக்கின்றாள். ஆனால் அந்த நேர்முகத் தேர்வில் கேள்விகள் மாற்றிக் கேட்கப்பட, தவறாக பதில் கூறி தோல்வியுறுகின்றாள் அந்தச் சிறுமி.

ஆனால் தோல்வியினை ஏற்றுக் கொள்வதற்கு அவளுடைய அம்மா தயாராக இல்லை. 'வாழ்வென்பது ஒரு ஓட்டப் பந்தயம்...அதில் அனைத்தையும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே தான் வெற்றியடைய முடியும்' என்பதை தனது கோட்பாடாக கொண்டிருக்கும் அவள், தன்னுடைய மகளை அந்த பள்ளியில் சேர்ப்பதற்கான மாற்று வழியினைத் தேட ஆரம்பிக்கின்றாள். அதன் முதல் கட்டமாக அந்த பள்ளிக்கு அருகாமையில் ஒரு வீட்டினை பார்த்து அங்கே குடியேறுகின்றாள். பின்னர் தன்னுடைய மகள் அந்த வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மணி நேரத்திலும் என்ன செய்ய வேண்டும் என்பதனை வரையறை செய்யும் வண்ணம் ஒரு அட்டவணையையும் தயாரித்து அதனை அவளிடம் 'இதனை மட்டும் நீ பின்பற்றினாய் என்றால் நீ நிச்சயம் ஒரு அருமையான பெண்ணாய் வெற்றிகரமாக உருவாவாய்' என்று கூறியே தருகின்றாள். தன்னுடைய தாய் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்றே நம்புகின்ற அந்த சிறுமியும், இயந்திரமயமான வாழ்க்கைக்கு வித்திடும் வண்ணம் இருக்கின்ற அந்த அட்டவணையைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றாள்.

அனைத்தும் அவளது தாய் எண்ணியவாறே நிகழ்ந்து கொண்டிருக்க பிரச்சனை பக்கத்து வீட்டிலிருந்து வருகின்றது. ஓய்வு பெற்ற வயதான விமானி ஒருவர் தன்னுடைய பழுதடைந்த விமானத்துடன் அங்கே வசித்து வந்து கொண்டிருக்கின்றார் (குட்டி இளவரசன் கதையில் சகாரா பாலைவனத்தில் சிக்கிய விமானி தான் அவர்). ஒரு நாள் அவர் அவருடைய விமானத்தை சரி செய்ய முயன்று கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக அவரது விமானத்தின் காத்தாடி அந்த சிறுமியின் வீட்டினைச் சேதப்படுத்தி விடுகின்றது. அதற்கு நஷ்டயீடாக அவர் தான் ஒரு சேகரித்து வைத்திருக்கும் பணத்தினை அந்த சிறுமியிடம் தந்து விடுகின்றார். அந்தப் பணத்தினை எண்ணிக் கொண்டிருக்கையில் சில விசித்திரமான பொம்மைகளை, ஒரு நரி, ஒரு சிறுவன், ஒரு குட்டி கத்தி என்பன போன்ற பொம்மைகளை அந்த பணத்தின் இடையில் அவள் காணுகின்றாள். அவை என்னவென்று அவளுக்கு சரியாகப் புரியாதிருந்தாலும் அவளுடைய கவனத்தை அவை ஈர்த்து விடுகின்றன.

பின்னர் மற்றொரு நாள் அந்த முதியவரின் வீட்டிலிருந்து ஒரு சிறிய காகிதம் அவளுடைய அறைக்கு சன்னலின் வழியாக வந்து சேருகின்றது. அதில் விமானி ஒருவர் பாலைவனத்தில் மாட்டிக் கொண்டதாய் தொடங்குகின்ற கதையின் ஒரு பகுதி ஓவியங்களுடன் இருக்கின்றது. முதலில் அந்த கதையில் ஆர்வமற்றவளாய் தன்னைத்தானே அவள் காட்டிக் கொண்டாலும், அந்த கதையானது அவளை கவரத்தான் செய்கின்றது. அந்த கதையினைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக அவள் அந்த முதியவரின் வீட்டிற்குச் செல்லுகின்றாள். இயந்திரமயமான உலகையே அதுவரை கண்டு வந்திருந்த அவளுக்கு அந்த முதியவரின் வீடு வித்தியாசமானதாய் இருக்கின்றது.

அவள் அவரிடம் அந்த காகிதத்தில் இருந்த கதையைப் பற்றி கேட்கின்றாள். அவரும் அந்த கதையை அவளுக்கு சிறிது சிறிதாய், எவ்வாறு அவர் அந்த பாலைவனத்தில் குட்டி இளவரசனை சந்தித்தார் என்பதைப் பற்றியும், அவனது விண்கல்லைப் பற்றியும், அவனது ரோஜாவைப் பற்றியும் கூற ஆரம்பிக்கின்றார். கதைகள் என்பன நேர விரயம், அவற்றால் யாதொரு உருப்படியான பயனும் இல்லை என்றே அதுவரை கருதி வந்து கொண்டிருந்த அவள், அந்த கதையினுள் மூழ்கின்றாள். மெதுவாய் அவளுடைய குழந்தைத் தனம் உயிர்பெற ஆரம்பிக்கின்றது. அதுவரை வேண்டத்தகாதவராய் இருந்து வந்த அந்த முதியவர் இப்பொழுது அவளுக்கு ஆர்வமூட்டக்கூடியவராகவும் இனிமையானவராகவும் அவளுக்கு தோன்றுகிறார்.அவர்கள் விரைவில் சிறந்த நண்பர்களாகின்றனர். தந்தையும் தாயும் பணம் சேர்க்க வேண்டுமென்று எப்பொழுதும் வீட்டினை மறந்து உழைத்துக் கொண்டிருந்த சூழலில் அவள் எப்பொழுதுமே தனியாகத் தான் இருந்து வந்திருக்கின்றாள். அவ்வாறு தான் வாழ்வானது இருக்கும்...வேறு எப்படியும் இருக்க முடியாது என்றே அவள் நம்பியும் வந்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அந்த நம்பிக்கைகள் யாவும் மெதுவாய் உடைந்து கொண்டிருந்தன. அந்த குட்டி இளவரசனும் அந்த முதியவரும் அவளது உலகினை மாற்றியமைத்துக் கொண்டிருந்தனர். அட்டவணைகளுக்கு அப்பாற்பட்ட உலகினில் அவள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தாள். முதியவருக்கும் அந்தச் சிறுமியின் நட்பு மகிழ்ச்சியானதாக இருந்தது. தனியாகவே வசித்து வந்திருந்த அவருக்கு அந்தச் சிறுமி புத்துணர்ச்சி ஊட்டுகின்ற ஒரு வசந்தம் போலவே இருந்தாள். ஆயினும் தான் என்றாவது விரைவில் மரணமடைய போவதை உணர்ந்திருந்த அவர் சூசகமாக அவளிடம் தான் விரைவில் மீண்டும் அந்த குட்டி இளவரசனைக் காணப் போவதாகவே கூறி வந்து கொண்டிருந்தார். அவர் கூறிய அர்த்தத்தை அறியாமலே அந்தச் சிறுமியும் அவர் கூறியதை அப்படியே நம்புகின்றாள்.

அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, தனது மகள் ஒழுங்காகப் படிக்காமல் அந்த முதியவருடன் நட்பு கொண்டிருக்கின்றாள் என்பது அவளது தாயிற்கு தெரிய வருகின்றது. அவர்களது நட்பிற்கு அவள் தடை போடுகின்றாள். ஆனாலும், தன்னுடைய தாயின் இயந்திரமயமான உலகத்திற்கும் அந்த முதியவரின் உணர்வுபூர்வமான உலகத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டினை சிறிதளவு உணர்ந்துவிட்ட நிலையில் அந்த சிறுமி மீண்டும் அந்த முதியவரின் வீட்டிற்கு செல்லுகின்றாள். இம்முறை ஒரு முடிவுடன் தான் அவள் செல்லுகின்றாள் - குட்டி இளவரசனைக் காண்பதற்காக அவர் கிளம்பும் பொழுது அவருடன் அவளும் செல்லப் போகின்றாள் - இதுதான் அந்த முடிவு. இந்த முடிவினை அவரிடம் அவள் கூறுகின்ற பொழுது அவர் அதனை மறுக்கின்றார். அதனால் வருத்தமடையும் அவள், 'உங்களுக்கு உண்மையிலேயே அந்த இளவரசனின் மீது அக்கறை கிடையாது...பின்னர் எதற்காக அவனைப் பற்றி என்னிடம் கூறினீர்கள்?' என்றே கோபத்துடன் அந்த முதியவரின் வீட்டை விட்டு கிளம்புகின்றாள்.

அவள் மனம் முழுக்க ஒரே சிந்தனை தான் நிறைந்திருக்கின்றது...'தன்னுடைய ரோஜாவிடம் திரும்பிச் செல்ல வழி தெரியாத அந்த இளவரசன் என்னவாகியிருப்பான்...அந்த பாம்பினை அவன் நம்புகின்றான்...அது அவனை அவனது விண்கல்லிற்கு அனுப்பி வைக்கும் என்றே அவன் நம்பியிருக்கின்றான்...ஆனால் அது அவனை அங்கே தான் அனுப்பி வைத்தது என்பதற்கு ஏது உத்திரவாதம்...ஒருவேளை அவன் வழி தவறியிருந்தான் என்றால் என்னவாவது? அப்படியிருக்கையில் ஏன் இவர் என்னை அழைத்துச் செல்ல மாட்டேன் என்கின்றார்' என்ற எண்ணமே அவளது சிந்தனையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்தச் சிந்தனையை விட்டு வெளியேவர முடியாத காரணத்தினால் அவள் குட்டி இளவரசனையையும் வெறுக்க ஆரம்பிக்கின்றாள். மீண்டும் அவள் தனது அன்னை தந்திருந்த அந்த அட்டவணைகளின்படி வாழத் துவங்குகின்றாள். அந்நிலையில்தான் அந்த முதியவரும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். நிற்க

இயந்திரமயமான உலகிற்கும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு உலகிற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டினை அறியத் துவங்கியிருந்த அந்த சிறுமியின் வாழ்வு என்னவானது? அவள் மீண்டும் இயந்திரமயமான வாழ்வினுள்ளேயே நுழைந்து விட்டாளா? அந்த முதியவர் என்னவானார்? அந்த குட்டி இளவரசன் தன்னுடைய ரோஜாவிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தானா அல்லது அவன் மோசமான இந்த உலகினில் அந்த சிறுமி பயந்ததைப் போன்றே வழிதவறி விட்டானா? என்பன போன்ற கேள்விகளுக்கு மிகவும் அருமையான வண்ணமே இந்தப் படமானது பதில்களைத் தந்து நிறைவுறுகின்றது.

அந்த சிறுமிக்கு விமானியின் வாயிலாக 'குட்டி இளவரசனின்' கதையை விவரிப்பதாக அமைந்திருக்கின்ற இந்த கதை, அந்த சிறுமியின் வாயிலாக 'எவ்வாறு அன்பும் நேசமும் நிறைந்த கதைகளும் உறவுகளும் அர்த்தமற்ற இயந்திரத்தனமான வாழ்வினை சுக்குநூறாக உடைத்து ஒரு குழந்தைகளுக்கான உலகினைப் படைக்கின்றன என்பதனை அற்புதமாக விவரிக்கின்றது.

எவ்வாறு அந்த குட்டி இளவரசன் நம்முள் இருக்கின்ற அந்தத் தொலைந்து போன சிறுவனைப் பிரதிபலிக்கின்றானோ, அதனைப் போன்றே அந்தச் சிறுமி நம்மைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றாள். வாழ்வென்றால் இயந்திரத்தனமாகத் தான் இருக்க வேண்டும் என்றே பெரியவர்கள் குழந்தைகளிடம் போதிக்கின்றனர். அவர்கள் கூறுவதைத் தவிர வேறு எதனையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில், அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்றெண்ணியே குழந்தைகளும் இயந்திரமயமான வாழ்வினை ஏற்றுக் கொள்ளுகின்றனர். பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் பொழுது, அவர்கள் நம்பிய அந்த இயந்திரமயமான உலகினையே அவர்கள் மீண்டும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு போதித்துச் செல்லுகின்றனர். இந்தச் சூழலின் காரணமாக இயந்திரமயமான வாழ்வானது தொடர்ந்து உலகினில் தனது செல்வாக்கினை நிலைநிறுத்திக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.

இந்தப்படம் அதனைக் கேள்வி கேட்கின்றது....குட்டி இளவரசனின் மூலமாகவும் அந்த சிறுமியின் மூலமாகவும் 'வாழ்வானது இயந்திரமயமானதாகத்தான் இருக்க வேண்டும்' என்கின்ற அந்த கோட்பாட்டினை அது கேள்வி கேட்கின்றது. கேள்வி கேட்பதுடன் நில்லாமல், வாழ்வென்றால் என்ன, அதனால் எவ்வளவு அருமையானதாக இருக்க முடியும் என்பதனையும் இந்தப்படமானது மிகவும் அற்புதமாக விளக்குகின்றது.

மேலும், இன்றைய கல்விமுறை, உலகமயமாக்கல், வேலைமுறை போன்றவை எவ்வாறு மனிதனின் தாழ்ந்த இயல்புகளை கையகப்படுத்திக் கொண்டு அதன் மூலமாக உலகினை அர்த்தமற்ற ஒன்றாக மாற்றி வைத்திருக்கின்றன என்பதனை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அவற்றின் அந்த கோரப்பிடியில் இருந்து நம்முள் இருக்கும் அந்த சிறுவனை மீட்பதற்காக அது முயல்கின்றது.

அந்த முயற்சிக்கு நாம் கை கொடுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு