ஒருவேளை நம்முடைய வாசகரானவர் திருச்சபையின் நம்பிக்கையிலேயே வளர்ந்து, கல்வியறிவினைப் பெற்று, பின்னர் தன்னுடைய மனசாட்சியின் கூற்றிற்கு ஏற்ப திருச்சபையின் நம்பிக்கையினைக் கைவிட்டப் பெரும்பாலான படித்த மக்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுள் சிலர் கிருத்துவ போதனைகளின் மீது தங்களுக்கு இருந்த நேசத்தையும் மரியாதையையும் தக்க வைத்துக் கொண்டு இருப்பர். ஆனால் வேறு சிலரோ ('தன்னுடைய மேற்சட்டையில் இருந்த பூச்சிகளின் மீது கோபம் கொண்டு அந்த மேற்சட்டையினை நெருப்பினில் எறிந்து விட்டான்' என்ற கூற்றுக்கேற்ப) ஒட்டு மொத்த கிருத்துவத்தையுமே ஓர் ஆபத்தான மூடநம்பிக்கையாக கருதுவர். அவர்களிடம் நான் ஒன்றினை நினைவுக்கூற வேண்டுகின்றேன். எந்த ஒன்று அவர்களை கிருத்துவிடம் இருந்து விலக்குகின்றதோ, எந்த ஒன்று மூடநம்பிக்கையாக அவர்களுக்குப்படுகின்றதோ அது இயேசுவின் போதனை அல்ல. இதனை அவர்கள் நினைவிற் கொள்ள வேண்டும். பாரம்பரியம் என்ற பெயரில் அவருடைய போதனைகளுடன் ஒன்றிணைக்கப்பட்டு இன்று கிருத்துவம் என்று அழைக்கப்படும் அசூரத்தனமான நடவடிக்கைகளுக்கு இயேசு கிருத்துவினை பொறுப்பாளி ஆக்க முடியாது என்றுமே நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒருவன் கிருத்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் கிருத்துவத்தை குறைக் கூறவேண்டும் என்றால் அவன் முதலில் கிருத்துவின் போதனைகளை மட்டுமே படிக்க வேண்டும். அவ்வாறு கிருத்துவின் போதனைகளை மட்டுமே அவன் படிப்பானாயின் கிருத்துவத்தை ஒரு மூட நம்பிக்கையாக பார்க்கும் அவனது பார்வை மாறிவிடும். கிருத்துவம் என்பது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அமைந்த ஒரு புனிதமான நீதிநெறிக் கோட்பாடு என்பதனை அவன் அப்பொழுது அறிந்துக் கொள்வான். மேலும் மனித சிந்தனை இன்னும் அடைந்திராத ஓர் உயர்ந்த நிலையினில் அக்கோட்பாடானது இருக்கின்றது என்பதனையும் அதனை அடிப்படையாகக் கொண்டே அரசியல், கல்வி, தத்துவம் என்று அனைத்து விதமான மக்களின் நடவடிக்கைகளும் அடங்கி இருக்கின்றன என்பதனையும் அறிந்துக் கொள்வான்.

ஒருவேளை நம்முடைய வாசகரானவர் வெளிப்புற பயன்களுக்காக அல்லாது மன அமைதிக்காகவும் நிம்மதிக்காகவும் திருச்சபை போதிக்கும் சமயத்தினைப் பற்றிக் கொண்டிருக்கும் சிறுபான்மையான படித்த மக்களுள் ஒருவராக இருக்கலாம். அவரிடம் நான் இதனையே நினைவிற் கொள்ளச் சொல்லுகின்றேன். அவரிடம் இருக்கும் புத்தகத்தினில் இயேசுவின் போதனைகள் என்று கொடுக்கப்பட்டு இருக்கின்றவை (இயேசு என்ற பெயரினையே அவை கொண்டிருந்தாலும்) உண்மையில் இயேசு போதித்தக் கருத்துக்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றன. இதனை அவர்கள் நினைவிற் கொள்ள வேண்டும். மேலும் இங்கே கூறி இருக்கும் கோட்பாடானது தங்களுடைய நம்பிக்கையினை ஏற்றுக் கொள்கின்றதா இல்லையா என்றக் கேள்வியினை விட, தங்களின் மனசாட்சிக்கேற்ப எந்த போதனைகள் இருக்கின்றன – கிருத்துவின் போதனைகளா அல்லது திருச்சபைகள் கூறும் போதனைகளா? என்றக் கேள்வியே அவர்களின் முன்னே இருக்கும் முக்கியமான கேள்வியாக இருக்கின்றது. புதிய சிந்தனைகளை அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றாரா அல்லது தன்னுடைய பழைய நம்பிக்கையினையே தக்கவைத்துக் கொள்ள அவர் எண்ணுகின்றாரா என்பதே அவருக்கு முன்னே இருக்கும் கேள்வி ஆகும்.

மேலே உள்ள இரண்டு வகையான மக்களைத் தவிர்த்து, திருச்சபையின் நடவடிக்கைகளை வெளிப்புறமாக மட்டுமே பின்பற்றிக் கொண்டு இருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். திருச்சபைகளின் நடவடிக்கைகள் தங்களுக்கு இலாபகரமாக இருப்பதனால் அவர்கள் அதனை வெளிப்புறமாக பின்பற்றிக்கொண்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட வாசகர்கள் ஒன்றினை நினைவிற் கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. அவர்கள் பெருமளவு ஆதரவாளர்களைப் பெற்றிருந்தாலும் சரி, அவர்கள் எந்தளவு அதிகாரமிக்கவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் குற்றவாளியாகவே இருக்கின்றனர். அவர்கள் எந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாலும் சரி எந்த பெயரினைக் கொண்டு தங்களை அழைத்துக் கொண்டாலும் சரி அவர்கள் குற்றவாளிகளாகவே இருக்கின்றனர். மற்ற மக்களை குற்றவாளிகள் என்று முடிவினை செய்யும் ஆற்றலினைத் தாங்கள் பெற்று இருப்பதாக அவர்களே கருதிக் கொண்டாலும் சரி, உண்மையினில் அவர்களே தாம் குற்றவாளிகளாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட வாசகர்கள் ஒன்றினை நினைவிற் கொள்ள வேண்டும். அவர்கள் நிருபிப்பதற்கு என்று இங்கே எந்த ஒரு பொருளும் கிடையாது. அவர்கள் சொல்ல வேண்டிய அனைத்தையும் வெகுகாலத்திற்கு முன்னரே சொல்லி முடித்தாயிற்று. மேலும் அவர்கள் தாங்கள் நம்புகின்ற எதையேனும் நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினார்கள் என்றால், அதனைத் தங்களுக்குள் மட்டுமே அவர்களால் நிரூபித்துக் கொள்ள முடியும். அவர்களை எதிர்க்கும் மற்ற நூற்றுக்கணக்கான திருச்சபைகளும் அவ்வாறேதான் தங்களின் நம்பிக்கைகளை தங்களுக்குள் மட்டுமே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் அவர்கள் தாங்கள் நம்புகின்ற கருத்துக்களை நிரூபிக்க வேண்டும் என்று எண்ணுவது, அக்கருத்துக்களை வாழ்வினில் நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, தாங்கள் நம்புகின்ற கருத்துக்கள் உண்மையானவை என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். அவர்கள் இறைவனாகிய இயேசுவின் கருத்துக்களைத் திரித்து, அதனைத் தங்களது வசதிக்கு ஏற்ப மற்ற கருத்துக்களோடு இணைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மனிதர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப இறைவனின் வார்த்தைகளை மாற்றி இருக்கின்றனர். அவர்களின் மனதினில் இருந்த வெறியினை எல்லாம் இறைவனின் பெயரினில் சுமத்தி அதனையே இயேசுவின் போதனைகள் என்றுக் கூறியதன் மூலம் இறைவனுக்கு அவப்பெயரினை உண்டாக்கி இருக்கின்றனர். உலகிற்கு மக்களை ஆசீர்வதிக்க வந்த இறைவனின் போதனைகளை மறைத்து, அதற்குப் பதிலாக தங்களுடைய மதிப்பற்ற சமயத்தினை முன்னிறுத்தி இருக்கின்றனர். அவர்களின் அத்தகைய செயல்கள் தாம் இயேசு கிருத்து மக்களுக்காக தந்திருக்கும் ஆசீர்வாதத்தினை கோடிக்கணக்கான மக்களிடம் இருந்து மறைத்து வைத்து இருக்கின்றன. இன்றும் மறைத்து வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இயேசு கிருத்து உலகிற்கு கொண்டு வந்த அன்பிற்கும் சமாதானத்திற்கும் பதிலாக இவர்கள் உலகிற்குள் பிரிவினையும், கொலைகளையும் மற்ற அனைத்து விதமான குற்றங்களையும் கொண்டு வந்து இருக்கின்றனர்.

அத்தகைய வாசகர்களுக்கு தங்களது இந்த நிலையினில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று – தாழ்மையுடன் தாங்கள் செய்த குற்றத்தினை ஒப்புக் கொண்டு தங்களது வாழ்வினைத் திருத்தி அமைத்துக் கொள்ளுவது. இரண்டாவது – அவர்கள் இதுவரை செய்துள்ள குற்றத்தினை வெளிப்படுத்துவதுடன் நில்லாது அவர்கள் இன்றளவிலும் செய்துக் கொண்டு இருக்கும் குற்றங்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்களைத் தண்டிப்பது. இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றினைத்தான் அவர்களால் தேர்ந்து எடுக்க முடியும்.

அவர்கள் தங்களது பொய்களைத் துறக்கவில்லை என்றால் அவர்கள் செய்யக்கூடியது என்று ஒன்றே ஒன்றுதான் எஞ்சி இருக்கும்: என்னை அவர்களால் தண்டிக்க முடியும். நான் எழுத வேண்டியவற்றை எழுதி முடித்து விட்டேன். இந்நிலையில் நான் மகிழ்ச்சியோடும் என்னுடைய சுயபலவீனத்தின் மீது மட்டும் நான் கொண்டிருக்கும் அச்சத்தினோடும் அவர்களின் தண்டனைக்காக என்னை நானே தயாராக்கிக் கொள்கின்றேன்.

லியோ டால்ஸ்டாய்
யாஸ்னையா போல்யானா, 1883

டால்ஸ்டாயின் நூல் முன்னுரை முடிந்தது.

1 கருத்துகள்:

சிறந்த எண்ணங்களைப் படிக்க முடிந்தது

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு