தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ்வாறு அவர்களை இனம் பிரிக்கின்றீர்கள்? 300 400 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற மக்களை வந்தேறிகள் என்று கூறுவது எங்கனம் சரியாகும்?" என்ற கேள்விகளும் விவாதங்களும் நிகழ்ந்த வண்ணமேதான் இருக்கின்றன. தமிழகமாகட்டும் சரி, இந்தியமாகட்டும் சரி இதற்கு இன்று விதிவிலக்கல்ல...!!! இந்த நிலையைப் பற்றித்தான் நாம் இங்கே இத்தொடரில் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவின் வரலாற்றினைப் பற்றி நாம் காண வேண்டியிருக்கிறது.

'ஹிந்துராஷ்டிரம்' 'அகண்ட பாரதம்' 'இது இந்துக்களின் பூமி' என்று இன்று இந்தியாவை அழைப்பவர்களின் வாதம் சுருக்கமாக இதுதான் : "இங்கே நாங்கள் இந்துக்கள் வாழ்ந்து வந்து கொண்டிருந்தோம்...எங்கள் தேசத்தின் மீது இசுலாமியர்கள் படை எடுத்து வந்து எங்கள் வளங்களை கொள்ளை அடித்து விட்டீர்கள்...எங்கள் பெருமைகளை சிதைத்து விட்டீர்கள்...நீங்கள் வெளியேறுங்கள்". சுருக்கமாக இதுதான் அவர்களின் வாதம். அந்த வாதம் கிருத்துவ மதத்திற்கும் பொருந்தும்தான். இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அன்னியர்கள் பற்றிய அவர்களது வாதம் பெரும்பாலும் இஸ்லாமிய படையெடுப்பினையே ஆரம்பமாகக் கொண்டிருக்கும். அதற்கு முன்னர் நடந்த படையெடுப்புகளைப் பற்றி அவர்களுக்கு பெரிதும் அக்கறை இல்லை...அப்படிப்பட்ட படையெடுப்புகள் நடந்ததாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.

"இஸ்லாமியர்கள் எங்கள் மீது படையெடுத்து வந்து எங்கள் தேசத்தைக் கொள்ளை அடித்து விட்டீர்கள்...!!!" - இதுதான் அவர்களது தாரக மந்திரம். இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்ததை நாம் மறுக்கவில்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதில் நாம் கேள்வி கேட்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ ஒன்றுமில்லை.

இசுலாமியர்கள் படையெடுத்து வந்தார்கள் - இது உண்மை. ஆனால் அவர்கள் மட்டும்தான் படையெடுத்து வந்தார்களா? அவர்கள் படையெடுத்து வந்த பொழுது இந்திய துணைக்கண்டம் ஒற்றை தேசமாக, ஒரு ஹிந்துராஷ்டிரமாகவா இருந்தது? அப்படி இருந்தால் ஏன் வடக்கே இன்று காணப்படும் இசுலாமியர் எதிர்ப்புத்தன்மை தெற்கே பெருவாரியாக தென்படவில்லை? ஒற்றை நாடாக ஹிந்துராஷ்டிரமாக இந்தத் துணைக்கண்டம் இருந்தது என்றால் - ஏன் தமிழர்கள் ஹிந்துக்களல்ல என்ற முழக்கங்கள் கேட்கின்றன தமிழகத்திலிருந்து?

இந்தக் கேள்விகளைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டுமென்றால்...நாம் முதலில் மனுதர்மத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மனுதர்மம் - இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதனை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் உயர்ந்த நூல் என்று பிராமணர்களால் கொண்டாடப்படுவது. நூலின் காலத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், மிகவும் புராதன நூல் என்று பிராமணர்களால் கொண்டாடப்படுவது. எனவே இந்துராஷ்டிரம் அல்லது அகண்ட பாரதம் என்ற ஒற்றை தேசம் இருந்திருந்தது என்றால், அதனைப் பற்றிய குறிப்பு நிச்சயமாக இந்த நூலில் இருக்க வேண்டும். காரணம், பிராமணர்கள் கூறுவது போல இந்த நூல் மிகவும் பழமையான நூலாக இருக்கக்கூடிய பட்சத்தில், வேறு மதங்கள் எதுவும் உலகில் இருந்திருக்கவில்லை...மேலும் வேறு படையெடுப்புகளும் நிகழ்ந்திருக்க முடியாது. இந்து மதம் எவ்விதமுமான கலப்புமின்றி தூய்மையானதாக அக்காலத்தில் இருந்திருக்கும். இந்த அடிப்படையிலேயே நாம் மனுதர்மத்தை 'ஹிந்துராஷ்டிரம்' பற்றிய குறிப்புகளுக்காக காண வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் மனுதர்மத்தில் 'ஹிந்துராஷ்டிரம்' என்கின்ற ஒரு ஒற்றை தேசத்தைக் குறிக்கக்கூடிய வண்ணம் எந்தொரு குறிப்புமே இல்லை என்பதுதான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்தியாவின் எல்லையை நன்கு அறிந்து இருப்பர். காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை இருக்கின்ற நிலப்பரப்பு இந்தியா. இதில் மாற்றுக்கருத்து இல்லை. 'அகண்ட பாரதம்' என்ற கூற்றானது இந்தியாவுடன் பாகிஸ்தானின் நிலப்பரப்பையும் (பிரிவினைக்கு முன்பிருந்த இந்தியா) சேர்த்துப் பார்ப்பதாகும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனுதர்மத்தில் அத்தகைய நிலப்பரப்பினைப் பற்றிய கூற்றே இல்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

"இந்தா வந்துட்டார்களே இந்து மத விரோதிகள்...தேசத் துரோகிகள்...இந்துராஷ்டிரம் பற்றிய குறிப்பு மனுதர்மத்திலே இல்லைனா என்ன இப்போ? அது தர்மங்களை போதிக்கின்ற நூல்...அதில் எல்லைகளைப் பற்றி குறிப்பு இருக்குமா? சும்மா பேச வேண்டியது!!!" என்ற கூற்றுகள் சில இங்கே எழும்பக்கூடும்.

ஆனால் உண்மை என்னவென்றால் மனுதர்மத்தில் எல்லைகளைப் பற்றிய குறிப்பு இருக்கத்தான் செய்கின்றது. அந்த எல்லைகள் இவர்கள் கூறுகின்ற 'இந்துராஷ்டிரத்தின்' எல்லைகள் அல்ல...மேலும் அவை இந்துராஷ்டிரம் என்ற ஒன்றை குறிக்கவுமில்லை. மாறாக பல்வேறு தேசங்களைப் பற்றியே அவை கூறிக் கொண்டிருக்கின்றன. அந்த தேசங்கள் என்னவென்றால்:

  1. பிரம்மாவர்த்த தேசம்
  2. மத்திய தேசம்
  3. குருஷேத்திரம்
  4. மச்ச தேசம்
  5. பாஞ்சாலம்
  6. வடமதுரை (வடக்கே இருக்கும் மதுரா - நம்ம மதுரை இல்லை)
  7. ஆரியவர்த்தம்

"சரஸ்வதி என்னும் திருஷத்துவதி என்னும் தேவநதிகளையுடைய மத்தியப்பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மாவர்த்த தேசமென்று சொல்லப்படும்" - மனு அத்தியாயம் 2 - 17

"குருஷேத்திரம், மச்ச தேசம், பாஞ்சால தேசம், வடமதுரை இதுகள் பிரம்மரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள்...இவைகள் பிரம்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சம் குறைந்திருக்கின்றன" - மனு அத்தியாயம் 2-19

"இம்மோர்ப் பர்வதத்திற்கும் விஞ்சைப் பர்வதத்திற்கும் (விந்திய மலை) நடுவாயும் சரஸ்வதி நதி மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும் பிரயாகைக்கு மேற்காவும் இருக்கின்ற இடமானது மத்திய தேசமென்று சொல்லப்படுகிறது." - மனு அத்தியாயம் 2-21

"கிழக்கு சமுத்திரம் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கின்ற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது." - மனு அத்தியாயம் 2 - 22

"இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்தில் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலை விட வேறு விர்த்தியை எந்தவிடத்தில் அடைய மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத் தக்கது." - மனு அத்தியாயம் 2: 24

இன்றைய இந்திய கண்டத்தின் அமைப்பினை வைத்துப் பார்த்தோமே என்றால், அந்த எல்லைகள் இன்றைய பிஹார், குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களோடு நின்று விடுகிறது. அந்த தேசங்களைத்தான் மிகவும் புண்ணிய பிரதேசங்களாக மனு தர்மம் கூறுகின்றது. அந்த புண்ணிய தேசங்களின் இன்றைய நிலையை நாம் கண்டோமே என்றால், அவை புண்ணிய தேசங்களா அல்லது பாவப்பட்ட தேசங்களா என்ற குழப்பத்தில் நிச்சயமாக மாட்டிக் கொள்வோம்.

ஆரியவர்த்த நிலப்பரப்பு:
மாடுகளுக்காக மனிதர்களை கொல்லும் இந்தியாவின் மாட்டுப் படுகை மாநிலங்கள்:

பெண்களின் முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ள மாநிலங்கள்:


மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பட்டியல்:



வறுமை அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியல்:


புண்ணிய தேசமென்று மனுநூல் குறிப்பிட்டுள்ள இடங்கள் மிகவும் மோசமான தன்மையுடைய இடங்களாக இன்று இருந்து கொண்டிருக்கின்றன. ஏன் அவை அவ்வாறு இருக்கின்றன என்ற கேள்விக்கும் நாம் விடையினைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது.


அத்தோடு நில்லாமல் துவிஜர்கள் (பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) வேறு எந்த தேசத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் மேற்சொன்ன அந்த புண்ணிய தேசங்களுக்கு வந்து விடுமாறும் அந்த நூல் கூறுகிறது. அதுவும் குறிப்பாக சூத்திரன் அடிமைத் தொழில் செய்யாத தேசங்களில் இருந்து வந்து விடுங்கள் என்று கூறுகிறது. 'இந்துராஷ்டிரம்' என்ற ஒற்றை தேசத்தைப் பற்றிய குறிப்பு இருக்கும் என்று எண்ணி இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த நமக்கு இந்தக் கூற்றும் மேலும் பல கேள்விகளுக்கு வழி வகுக்கிறது...

1) வேறு தேசங்கள் என்றால் அவை என்ன? அங்கு யார் இருந்தார்கள்?
2) சூத்திரர்கள் மனு தர்ம காலத்திலேயே ஊழியத்தொழில் செய்யாமல் இருந்தார்களா?
3) ஏன் விந்திய மலைக்கு கீழே இருக்கக்கூடிய இடங்களைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை?

இந்த கேள்விகளுக்குத்தான் நாம் இப்பொழுது விடை தேட வேண்டியிருக்கிறது...அதுவே காலத்தின் தேவையும் ஆகும்...

தேடுவோம்!!!

தொடரும்...!!!

2 கருத்துகள்:

Miga payanulla thagaval. mattrum arithaana thagaval.....thanks for vazhi pokkan

ஐயா நான் உங்கள் blogன் தொடர்வாசிப்பாளன். ஏன் கடந்த மூன்று வருடங்களாக எந்தவொரு பதிவுகளும் தாங்கள் பதிவேற்றவில்லை. நான் உங்கள் blogன் மூலமான நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டு பலபேருக்கு இறைவன் ஒருவனே என்று சொல்லியிருக்கின்றேன். இன்னும் நிறைய விடயங்கள் உங்கள் மூலமாக கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றேன். தங்கள் பதிவுகள் சிலவற்றில் மீண்டும் காண்போம், பிறகு காண்போம் என்று முற்று பெறாமல் விட்டு சென்றுள்ளீர்கள். தயவு செய்து மீண்டும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு