கிருத்துவ நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்தே 'இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும்' என்று இந்தத் தொடரில் நாம் இதுவரை கண்டு வந்திருக்கின்றோம்.
"நில்லுங்க...நில்லுங்க...!!! கிருத்துவ நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அல்ல...மாறாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்களா அதனை அடிப்படையாக வைத்து கண்டிருக்கின்றோம் என்று கூறுங்கள்...அது தான் சரியானதாக இருக்கும்" என்றே சில நண்பர்கள் இங்கே கூறலாம் தான். அவர்களின் அந்த கூற்றினை நம்மால் மறுக்க முடியாது. காரணம், நாம் இன்றைய கிருத்துவ சமயத்தின் நம்பிக்கைகளை முற்றிலுமாக மறுத்து அதற்கு வேறு ஒரு விளக்கத்தினைத் தான் தந்து இருக்கின்றோம்.
- இறைவன் உலகத்தை வெள்ளத்தால் அழித்தார் என்றே இன்றைய கிருத்துவ சமயம் கூறுகின்றது...ஆனால் இறைவன் அவ்வாறு உலகை வெள்ளத்தால் அழிக்கவில்லை என்றே நாம் கூறுகின்றோம்.
- மனிதனானவன் பாவி என்றும் அவன் பலவீனமானவன் என்றுமே அது கூறுகின்றது...ஆனால் நாமோ மனிதன் பலவீனமானவன் அல்ல என்றே கூறுகின்றோம்.
- இறைவன் யூதர்களை தன்னுடையவர்களாகத் தேர்ந்தெடுத்தார் என்றும் அவர்களுக்காக மற்ற இன மக்களை அழித்தார் என்றுமே இன்றைய கிருத்துவ சமயம் கூறுகின்றது. மேலும் யூதர்களுக்கான இசுரவேல் தேசத்தினை இறைவன் உருவாக்கித் தருவார் என்றுமே அது போதிக்கின்றது. நாமோ அவர்களின் அந்த கூற்றினை முற்றிலுமாக மறுக்கின்றோம்.
- சாத்தானுக்கும் இறைவனுக்கும் நடுவே யுத்தம் நடக்கும் என்றே கிருத்துவ சமயம் கூறுகின்றது...ஆனால் நாமோ மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையில் யுத்தம் நடக்கின்றது என்று கூறுகின்றோம்.
- மனிதர்களின் பாவத்திற்காக இறைவன் பலியாக உலகிற்கு வந்தார் என்றே கிருத்துவ சமயம் கூறுகின்றது. நாமோ, சாத்தானிடம் தோற்றுக் கொண்டிருந்த மனிதர்களுக்கு, சாத்தானை வெல்வதற்கான வழியினைக் காட்டி அவர்களை நல்வழியில் வழிநடத்துவதற்காகவே இறைவன் உலகிற்கு வந்தார் என்று கூறுகின்றோம்.
இவ்வாறு கிருத்துவ சமயத்தின் நம்பிக்கைகளை முற்றிலுமாக மறுத்துவிட்டு, 'கிருத்துவ நம்பிக்கைகளின் அடிப்படையில் நாம் இறைவன் எதற்காக மனிதனாக உலகிற்கு வந்தார் என்று நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்' என்று கூறினால் நிச்சயம் அது மாபெரும் முரணாகத்தான் தெரியும். அது தான் எதார்த்தம். எனவே நாம் நம்முடைய கூற்றுகளுக்கு தகுந்த சான்றுகளை வரலாற்று ரீதியாகவும், கிருத்துவ நம்பிக்கைகளின் ரீதியாகவும் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது (இந்த தொடரில், இயேசு கூறிய சில கருத்துகளின் அடிப்படையிலேயே தான் நாம் நம்முடைய கருத்தினை முன் வைத்து இருக்கின்றோம். ஆனால் நம்முடைய கூற்றினை நிரூபிப்பதற்கு அது மாத்திரம் போதாது).
கிருத்துவர்கள் தங்களது நம்பிக்கையினை விவிலியம் என்ற ஒற்றை நூலினை அடிப்படையாகக் கொண்டு அமைத்து இருக்கின்றனர். யூத சமய நம்பிக்கையினை கொண்டிருக்கும் பழைய ஏற்பாடு, இயேசுவின் வாழ்வினையும் போதனைகளையையும் பற்றி கூறும் நான்கு சுவிசேஷங்கள் மற்றும் ஆரம்பகால கிருத்துவர்களின் வரலாற்றினை கூறும் நடபடிகளைக் கொண்டிருக்கும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டு பகுதிகளைத் தான் இன்றைய விவிலிய நூலானது கொண்டிருக்கின்றது. 2000 ஆண்டுகளாக அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினைத் தான் நாம் இங்கே கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றோம். ஆனால் வெறும் கேள்விகள் மட்டுமே நாம் இங்கே கேட்கப் போவதில்லை...மாறாக அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் விளக்கமும் தர முயல போகின்றோம்.
அந்த விளக்கங்களை நாம் இனி வரும் பதிவுகளில் தனித்தனியாக காணலாம். இப்போதைக்கு 'இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும்' என்கின்ற கேள்விக்கு 'சாத்தானின் ஆசை வலைகளில் விழுந்து தனித்தனியாகப் பிரிவுற்று பாடுபட்டுக் கொண்டிருந்த மனிதர்களை, 'அவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்' என்று ஒன்றிணைத்து அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய நன்மையையும் தீமையையும் தெளிவாக எடுத்துக் கூறி, சாத்தானை அவர்கள் வெல்வது எவ்வாறு என்ற வழியினைக் காட்டுவதற்காகவே இறைவன் மனிதனாக உலகிற்கு வந்தார்.' என்றே நாம் கண்டிருக்கின்றோம். இத்துடன் இந்த தொடர் முடிந்தது.
இனி..கிருத்துவ நம்பிக்கைகளைக் குறித்த நமது விளக்கங்களை காண முயலலாம்...!!!
பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு
வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும்
சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே
மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு
தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.