முந்தையப் பகுதி

உலகம் முழுவதிலுமுள்ள கிருத்தவர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். பலர் இரண்டாம் வருகையின் நாள் இது தான் என்று குறித்து ஏமாற்றமடைந்த வரலாறுகளும் இருக்கின்றன. இதன் அடிப்படைக் காரணம் என்ன? என்பதைப் பைபிளின் அடிப்படையில் நோக்குவோம்.

கிருத்துவர்களை பைபிள் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கிறது.

1. யூதக் கிருத்தவர்கள்
2. புற ஜாதிக் கிருத்தவர்கள்.

இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். இதனால் கிருத்துவை ஏற்றுக் கொண்டு முதலில் கிருத்தவர்கள் ஆனவர்கள் யூதர்கள். யூதக் கிருத்தவர்கள் தங்கள் நம்பிக்கையை யூதரல்லாத மற்ற புற ஜாதி மக்களிடையே பரப்பினார்கள். இதனால், பின்னர் புற ஜாதிக் கிருத்தவர்கள் உருவானார்கள்.

இதனால் புற ஜாதிக் கிருத்தவர்கள் யூதக் கிருத்தவர்களின் நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றார்கள். இன்று உலகம் முழுவதிலுமுள்ள கிருத்தவர்கள் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இது யூதக் கிருத்தவர்கள் கற்றுக் கொடுத்த எதிர்பார்ப்பே ஆகும்.

யூதக் கிருத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை எவ்வாறு வந்தது என்றால் யூதர்களுடைய வேதமாகிய பழைய ஏற்பாட்டில் இருந்து வந்தது ஆகும்.

பைபிள் முக்கியமாக மூன்று மதங்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. அவை,
1. இசுரவேலர் மத நம்பிக்கை
2. யூதர் மத நம்பிக்கை
3. கிருத்துவ மத நம்பிக்கை
ஆகும்.

இசுரவேலர் மதம்:

இசுரவேலர் 12 கோத்திரத்தினர். இசுரவேல் என அழைக்கப்பட்ட யாக்கோபு தம் குடும்பத்தைப் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றிய யோசேப்பின் மக்கள் இருவரையும் இசுரவேல் கோத்திரங்களில் சேர்த்துக் கொண்ட காரணத்தால் இசுரவேல் கோத்திரத்தார் எண்ணிக்கை 13 ஆனது.

இந்த 13 கோத்திரத்தாரும் எகிப்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுத் துன்புற்றக் காலத்தில், இசுரவேலரை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து கானான் நாட்டுக்கு வழி நடத்தியவர் மோசே.

கானான் நாட்டை வென்று இசுரவேலருக்கு அந்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர் யோசுவா.

கானான் நாட்டில் வாழ்ந்த இசுரவேலரைத் திறமையாக ஆட்சி செய்து, கூடாரங்களை ஆலயமாக வைத்திருந்த நாடோடி நிலையிலிருந்து, எருசலேமில் ஆலயம் கட்ட வழி வகுத்தவர் தாவீது.

தாவீதின் மகனாகிய சாலமோன் எருசலேமில் தேவாலயத்தைக் கட்டினார். சாலமோனின் மகன் ரெகொபெயாம் காலத்தில் இசுரவேல் நாடும் இசுரவேல் மதமும் இரண்டாக உடைந்தன.

13 கோத்திரங்களில், அரசாண்ட யூதக் கோத்திரமும், பென்யமின் கோத்திரமும், ஆசாரியராயிருந்த லேவி கோத்திரத்தில் ஒரு பகுதியும் ஆகிய இரண்டரை கோத்திரத்தார் எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூத நாட்டில் தங்கினர்.

இசுரவேலரின் வழிபாட்டிடங்களில் வழிபடக் கூடாது. எருசலேம் கோவிலில் மட்டுமே பலி இட வேண்டும். மற்ற இசுரவேலர் வழிபாட்டிடங்களில் பலியிடக் கூடாது என்னும் கட்டுப்பாடுகளுடன், யூத மதத்தைத் தோற்றுவித்தனர். யூத மதத்தின் உயிர்நாடி எருசலேம் கோவில் ஆயிற்று.

யூத அரசனாகிய ரெகொபெயாமிடமிருந்து பிரிந்து சென்ற பத்தரைக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பழைய வழிபாட்டிடங்களான பெத்தேல், மிஸ்பா, சீனாய், கில்கால், சீகேம், எபனேசர் முதலிய இடங்களில் பலியிட்டு இசுரவேலர் மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதுடன், எருசலேமுக்குப் பதில் சமாரியா பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு இசுரவேல் நாட்டை ஆளத் தொடங்கினர்.

யோசுவா கானான் நாட்டை வென்று, பிரித்துக் கொடுக்கும் பொழுது, 13 கோத்திரங்களில் லேவி கோத்திரத்திற்குப் பங்கு கொடுக்கவில்லை. ஆலயத்தில் பணி செய்யும் பொறுப்புக் கொடுக்கப்பட்டு, தசமபாகம் லேவிக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் 12 கோத்திரம் என்று கூறும் வழக்கம் மீண்டும் வந்தது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

நாடு இரண்டாகப் பிரிந்த பின்னர், "யூத நாடு" என்னும் பெயரும், "யூத மதம்" என்னும் பெயரும் இசுரவேலர் வரலாற்றில் புதிதாகத் தோன்றின.

சமாரியா பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இசுரவேலரை, சமாரியர் என்றும், இசுரவேலரின் வழிபாட்டைச் சமாரியர் வழிபாடு என்றும் யூத நாடினர் அழைக்கலாயினர்.

சமாரியர் நாடு கி.மு. 721 இல் அசீரியர்களால் பிடிக்கப்பட்ட பின்னர், சமாரியர்களாகிய இசுரவேலரும், சமாரியர் வழிபாடாகிய இசுரவேலர் வழிபாடும், யூத இனத்தவராலும், யூத மதத்தவராலும் அலட்சியமாகவும் இழிவாகவும் நோக்கப்பட்டனர்.

சமாரியர் வழிபாட்டிடங்களாகிய இசுரவேலர் வழிபாட்டிடங்களில் சில, யூத மதத்தைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டதுடன், சமாரியர்களாகிய இசுரவேலரை, இசுரவேல் மதத்தில் இருந்து யூத மதத்திற்கு மாற்றும் முயற்சிகளும் அது முதல் மேற்கொள்ளப்பட்டன. இயேசு கிருத்து இவ்வாறு மதம் மாற்றுகிறவர்களைப் பற்றியே மத்.23 : 15 இல் குறிப்பிடுகின்றார்.

இதனால், இசுரவேலராகிய சமாரியர்கள் இழிவானவர்கள் எனவும், யூதர்கள் உயர்வானவர்கள் எனவும் எண்ணுகின்ற மனப்போக்கு யூதர்களிடையே வளர்ந்தது. இதனால் இசுரவேலர் மதம் அழியும் நிலையை அடைந்து, யூத மதம் சிறப்படையும் நிலை உருவானது.

இந்த நிலைகளுக்குக் காரணம் இசுரவேலர் ஆட்சியை இழந்தமையும், யூதர்கள் ஆட்சியில் இருந்தமையுமே ஆகும்.

தொடரும்...!!!

அடுத்தப் பகுதி

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு