முந்தையப் பகுதி

யூத மதம்:

இசுரவேலராகிய சமாரியர் ஆட்சியை இழந்து துன்புற்று இழிவடைந்த காரணத்தால், யூதர்கள் தங்கள் நாட்டையும், தங்கள் ஆட்சியையும், தங்கள் மதத்தையும் மிகவும் உயர்ந்தவையாகவும், தாங்களே தங்கள் தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர்கள் எனவும் நம்பத் தொடங்கினர்.

தங்கள் நாடாகிய யூத நாடும், தங்கள் மதமாகிய யூத மதமும், தங்கள் கோவிலாகிய எருசலேம் கோவிலும் தங்கள் தெய்வத்தால் என்றும் அழியாமல் நிலையாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களை இழிவாகவும் மற்ற வழிபாடுகளை இகழவும் தொடங்கினர். அதாவது ஆணவ நிலையின் உச்சத்தை அடைந்தனர்.

இந்த நிலையில் பாபிலோனில் இருந்து வந்த படை ஒன்று யூதர் நாட்டை வென்று, யூதர் தேவாலயத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, யூத வாலிபர்களைக் கைதிகளாக அடிமைப்படுத்தி கி.மு586 இல் பாபிலோனுக்குக் கொண்டு சென்றது.
யூதர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் தவிடு பொடியாகி, எஞ்சி இருந்த யூதர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அந்த நேரத்தில் அவர்களுடைய மனவேதனையைக் குறைக்கவும் மாற்றவும் தீர்க்கதரிசிகள் உருவாயினர்.

தாவீதின் கோத்திரத்தில் ஒரு வீர அரசன் தோன்றுவான்; அவன் யூத நாட்டையும் யூத மதத்தையும் யூதக் கோவிலையும் திரும்பவும் மிகச் சிறப்புகுரியனவாக எழுப்புவான் என்று யூத மக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டினர். யூதர்களின் தெய்வம், யூதர்களின் எழுச்சிக்கு ஏற்ற வாக்குத்தத்த வாக்கியங்களைக் கொடுத்திருப்பதாகக் கூறி யூதர்களுடைய தளர்ச்சியிலிருந்து அவர்களுக்கு எழுச்சியை ஊட்டினர்.

பாபிலோனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையால், அடிமைப்படுத்தப்பட்ட யூதர்களுக்கு விடுதலை கிடைக்கத் தொடங்கியது. விடுதலை அடைந்தவர்கள் படிப்படியாகப் பெருகி, கி.மு 516 இல் திரும்பவும் எருசலேமின் கோவிலையும், எருசலேமின் மதிலையும் கட்டத் தொடங்கினர்.

யூத நாட்டிற்கும், யூத மதத்திற்கும், எருசலேமின் வழிப்பாட்டிற்கும் புத்துணர்வு கொடுக்க முயன்றனர்.

ஆயினும் பழைய பெருமைக்குரிய நிலையை அடைய வேண்டுமானால், எதிரி அரசர்களை எல்லாம் வீழ்த்தி ஆட்சி அமைத்த தாவீதைப் போன்ற பெரு வீரனாகிய அரசனைத் தங்கள் தெய்வம் தங்களுக்காக எழுப்புவார் என்று நம்பிச் செயல்பட்டு வந்தனர். இந்த நம்பிக்கை யூத மத நம்பிக்கையாக மாறியது.

இவரே யூத அரசனாகிய கிருத்து:

யூத மதத்தில் இயேசு கிருத்து பிறந்தார்;வளர்ந்தார்; இவரே யூதர்கள் எதிர்ப்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்று சிலர் நம்பத் தொடங்கினர். அவருடைய சீடர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்ததை நாம் புதிய ஏற்பாட்டில் பார்க்கின்றோம்.

இயேசு கிருத்துவின் காலத்தில் யூத நாட்டை ஆண்டவர்கள் ரோமர்கள்.

யூத அரசனாகிய கிருத்து ரோம ஆட்சியாளர்களை வென்று, யூத இராச்சியத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவார் என்று யூத மதத்தினர் முழுமையாக நம்பினர்.

இயேசு கிருத்துவின் சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள். ஆகையால் இயேசு கிருத்துவின் செயல்பாடுகளைப் பார்த்து இவரே யூத அரசனாகிய கிருத்து என்று முழுமையாக நம்பத் தொடங்கினர்.

யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகை:

இயேசு கிருத்துவே யூதர்கள் எதிர்பார்த்த கிருத்துவாகிய மேசியா என்று இயேசு கிருத்துவின் சீடர்கள் முழுமையாக நம்பியமையால், இயேசு கிருத்து ரோமர்களை விரட்டி யூத இராச்சியத்தை நிறுவும் பொழுது அவருடைய சீடர்களாகிய தாங்கள் பன்னிருவரும் பன்னிரு கோத்திரங்களாகிய இசுரவேலின் மொத்த மக்களையும் ஆளும் நிலையை அடைவோம் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.

இதனால் இயேசு கிருத்து ஆளும் பொழுது சீடர்களின் யார் முக்கிய பொறுப்பில் இருப்பது என்பது பற்றி அவர்களிடையே போட்டி இருந்ததையும் நாம் பார்க்கின்றோம்.

இந்த நிலையில், அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத முறையில் இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டுக் கொலை செய்யப்பட்டது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. எம்மாவூருக்குச் சென்றுக் கொண்டிருந்த சீடர்களின் உரையாடல் இதை வெளிப்படுத்துகிறது.

"அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது." - லூக்கா 24:21

ஆயினும், இயேசு கிருத்துவின் உயிர்த்தெழுதல் சீடர்களுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது. உயிர்த்தெழுந்த கிருத்து இசுரவேல் இராச்சியத்தை ரோமர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்து விடுவார் என நம்பினர்.

ஆனால், இயேசு கிருத்துவின் விண்ணேற்றம் அவர்களுக்குக் கேள்விக் குறியை ஏற்படுத்தியது. அதனால் அவர் விண்ணேற்றத்தை அடையும் பொழுது கூடி வந்திருந்தவர்கள்,

"அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்." - (அப். 1:6)

என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் கொடுத்த பதிலை அவர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.
தொடரும்...!!!

அடுத்தப் பகுதி
பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு