விவிலியத்தில் மாற்றல் - பரலோக இராஜ்யம்

"பரலோக இராஜ்யம்" என்னும் கொள்கைப் பெயரை "தேவனுடைய இராஜ்யம்" என்னும் கொள்கைப் பெயராக ரோம ஆட்சியாளர்கள் மாற்றியது ஏன்?

இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பும், இயேசு கிருத்துவின் பலியும், இயேசு கிருத்துவின் உயிர்த்தெழுதலும், இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யத்தை இப்பூலோகத்திலே நிலைநாட்டும் வரிசையான முயற்சிகளாகும்.

"பரலோக இராஜ்யம்" என்பது தன்னல வாழ்க்கை முறையில் இருந்து நீங்கி, பொது நல வாழ்க்கை முறையை ஏற்று வாழும் ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையாகும் என்பதை ஓரளவு பார்த்து உள்ளோம்.

பரலோக வாழ்க்கை அனுபவத்தை இப்பூலோகத்திலே பெற்று அனுபவிக்கும் வாழ்க்கை முறையை உடையதே பரலோக இராஜ்ய வாழ்க்கை முறையாகும்.

இந்த அனுபவத்தைக் கொடுப்பவர் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவரிடம் தம்மை ஒப்படைத்து, பரிசுத்த ஆவியானாவர் தம் உள்ளத்திலே அமர்ந்திருந்து தம்மை வழி நடத்தும் அனுபவத்தைப் பெற்றவர்கள், 1. தியாகம் 2. இழப்பு 3. துன்பம் ஆகிய மூன்று நிலைகளிலும் தம் உள்ளத்தில் இன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் அனுபவத்தில் வாழ்வார்கள்.

தியாகம் - என்பது தாமே விரும்பி தம் பொருளையும், தம்மையும் தியாகம் செய்தல்

இழப்பு - என்பது இயற்கையாகவோ, செயற்கையாகவோ இழப்பு ஏற்படுதல்

துன்பம் - இயற்கையாகவோ, செயற்கையாகவோ துன்பம் வருதல்

இந்த மூன்று நிலைகளிலும், பரிசுத்த ஆவியின் நிறைவையும், வழி நடத்தலையும் அனுபவிக்கிறவர்கள் துன்பம் அனுபவிப்பதில்லை. அவர்கள் வாழ்க்கை இவ்வுலகிலும் இன்பமானது. மறு உலகிலும் இன்பமானது. இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. இதுவே பரலோக இராஜ்ய அனுபவம்.

இதை மனிதர்களுக்குக் கொடுக்கவே மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் இருமுறை கடவுள் இவ்வுலகிற்கு வந்தார்.

இரண்டாம் வருகையில் நிலைநாட்டப்பட்டதே பரலோக இராஜ்யம். ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை.

இரண்டாம் வருகையில் நிலைநாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை என்பது பொருளாசையைக் கைவிட்டு அனைவருடனும் பகிர்ந்து உண்டு வாழ்தல். இது பணக்காரனாக வேண்டும் என்னும் எண்ணத்திற்கு எதிரானது. இதனால் பணக்காரனாக வாழும் வாழ்க்கை முறை இயேசு கிருத்துவால் கண்டிக்கப்படுகிறது. பணக்காரன் ஆக விருப்பமுடையவன், நரகத்தை அடைவான் என்று கூறப்படுகிறது.

"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்;" (மத். 6:19)

"இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." (மத். 6:24)

"ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." (லூக். 18:25)

"அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது." (லூக். 18:240

"தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்." (லூக். 12:20)

" மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்." (லூக். 16:25)

இயேசு கிருத்துவின் இத்தகைய போதனைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியின் வருகையால் வழி நடத்தப்படும் பொழுது, தங்கள் ஆஸ்திகளை விற்று, அதை அனைவருக்கும் பொதுவாக வைத்து ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர் என்பதைப் பார்க்கின்றோம்.
 
"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" (அப். 2: 44 - 46).
 
இதையே நாம் அப்.4 : 24-37, ஆம் பகுதியிலும் காணுகின்றோம்.
 
ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையில் பண ஆசைக்கு இடம் இல்லை. உலக மக்களுக்கு முன் மாதிரியான வாழ்க்கை முறையாக அது அமைந்து இருந்தது. அதுவே பரலோக ராஜ்யத்தை வெளிப்படுத்தும் பரலோக வாழ்க்கை முறையாக இருந்தது.

திருச்சபை வரலாற்றில் கடவுளால் உருவாக்கப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டமைக்குக் காரணமாக, யூத மதமும், ரோம அரசும் செயல்பட்டதை நாம் திருச்சபை வரலாற்றில் பார்க்கின்றோம். யூதர்களும் பூலோக ஆட்சியை எதிர்பார்த்தவர்கள். ரோமர்களும் பூலோக ஆட்சியில் இருந்தவர்கள்.

பூலோக ஆட்சி சாத்தானுடைய அதிகாரத்தில் இருப்பதை லூக். 4:5-7 தெளிவாக விளக்குகிறது.
 
"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்." (லூக். 4:5-7)
 
ஆயினும் இயேசு கிருத்துவால் அவர் வாழ்நாளில் விளக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிலை நாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமையின் வாழ்க்கை முறை இன்று நம்மாலும் மற்றவர்களாலும் சிந்திக்கப்பட திருச்சபை வரலாறு நமக்குத் துணை புரிகிறது.

ஆகவே, பழைய ஏற்பாட்டின் வழி, யூதக் கிருத்துவர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகை சாத்தானோடு தொடர்புடைய இவ்வுலக ஆட்சி ஆகும்.

ஆனால், புதிய ஏற்பாட்டின் வழி இயேசு கிருத்துவால் விளக்கப்பட்டு, கடவுளின் இரண்டாம் வருகையில் பரிசுத்த ஆவியினால் நிலைநாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை, பரலோக இன்பத்தை இப்பூலோகத்தில் அனுபவிக்கும் ஆன்மீக அனுபவம் ஆகும்.

ஆகவே, பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை வேறு; புதிய ஏற்பாட்டு வாழ்க்கை முறை வேறு.

பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை சாத்தானோடு தொடர்பு உடையது. அதாவது இவ்வுலக ஆட்சியோடு தொடர்பு உடையது. புதிய ஏற்பாட்டு வாழ்க்கை முறை பரலோக இராஜ்யத்தோடு தொடர்பு உடையது.

இந்த இரண்டு வாழ்க்கை முறைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட வாழ்க்கை முறை என்பது 2கொரிந். 3 ஆம் அதிகாரத்தில் சரியாக விளக்கப்படுகிறது.

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?" - (2கொரிந். 3: 5-8)

கி.பி. 312 இல் ரோம ஆட்சியாளராகிய கான்ஸ்டன்டைன், அதுவரை வேட்டையாடப்பட்டு வந்த கிருத்தவர்களை, வேட்டையாடுவதை தடுத்தாரே தவிர, இயேசு கிருத்துவின் மீட்பை உணர்ந்து மனம் மாறிக் கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

கலிங்கப் போரில் இறந்த வீரர்களின் குவியலைக் கண்ட அசோகர் மனம் மாறி பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்தத்தைப் பரப்ப தம் சொந்த மக்களையும் அனுப்பியதைப் போன்ற மாற்றத்தை நாம் கான்ஸ்டன்டைனில் காணுவதற்கில்லை.

கிருத்துவத்தை வேட்டையாடியதை நிறுத்தி, கிருத்துவத்தைத் தம் அரசியலுக்கு பயன்படுமாறு அவர் காலத்தில் புதிய ஏற்பாட்டின் தொகுப்பு வேலை தொடங்கப்பட்டு, திரித்தல், வெட்டல், ஒட்டல், இணைத்தல், மாற்றல் முதலிய பணிகளைச் செய்து கிருத்துவம் ரோம ஆட்சிக்கு கி.பி 312 முதல் இன்று வரை 1700 ஆண்டுகள் பயன்படுமாறு திறமையாகச் செயல் பட்டுள்ளமையை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்.

இதற்கு ரோம ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட கருவி இரண்டாம் வருகைக் கோட்பாடு.

இரண்டாம் வருகைக் கோட்பாட்டின் வழி, புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகள், பழைய ஏற்பாட்டில் உள்ள யூத மதக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 1700 ஆண்டுகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு, பணக்காரன் லாசரு கதையில் இயேசு கிருத்து கூறி இருப்பதைப் போன்று, கிருத்தவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றார்கள்.

இதில் மிகவும் பரிதாபப்பட வேண்டிய செய்தி கிருத்தவர்கள் தாங்கள் பழைய ஏற்பாட்டின் வழி நரகத்திற்கு ஆயுத்தப்படுத்தப்படுகின்றோம் என்பதை உணராமல் பைபிளைப் படிக்கும் பரிதாப நிலையேயாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

1 கருத்துகள்:

மாற்கு13:24 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.
0 இவையனைத்தும் நிகழும்வரை இப்போது பூமியில் வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு