நான் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவன் அல்ல!!!

இதனை இங்கே நான் முதலில் கூறிக் கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. நான் சமயத்தால் ஒரு இந்து. ஆனால் இன்று அனைத்துச் சமயங்களும் அரசியல் கருவிகளாக மாறி அவற்றிற்கும் இறைவனுக்கும் சரி ஆன்மீகத்திற்கும் சரி சிறிதும் தொடர்பற்று இருக்கும் இந்நிலையில் ஒரு சமயத்தினைச் சார்ந்தவனாக என்னை அடையாளம் காட்டிக் கொள்வதனை விட 'நான் ஒரு இறை நம்பிக்கையாளன்' என்றே என்னை அடையாளம் காட்டிக் கொள்வது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். ஆனால் அதிலும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது. இறை நம்பிக்கையாளன் என்றால் எந்த கடவுளை நீ நம்புகின்றாய் என்ற கேள்வியினை நாம் எதிர் கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு பதிலாக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்' என்றே நாம் விடையினை அளித்தாலும் அதனை பலர் ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் மக்கள் பல்வேறாக பிரிந்து இருக்கின்றனர்...பல்வேறு சமயங்கள் இருக்கின்றன...அச்சமயங்களிலேயே பல பிரிவுகள் இருக்கின்றன...அவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக் கொண்டே வேறு இருக்கின்றன. இந்நிலையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றே நாம் பொதுவாக கூறினோம் என்றால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வது என்பது கடினமான ஒன்றாகத் தான் இருக்கும்.

எனவே இந்நிலையில் இறை நம்பிக்கையாளராக விளங்கும் நம் மீது நம்மையும் நமது சமயங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, நாம் உண்மையாகவே சரியான கருத்தில் தான் இருக்கின்றோமா...நமது சமயம் உண்மையாகக் கூறுகின்ற கருத்துக்களை நாம் அறிந்து இருக்கின்றோமா?...உலகில் உள்ள சமயங்கள் கூறுகின்ற கருத்துக்களும் நமது சமயக் கருத்துக்களும் வேறுபட்டவையா அல்லது அவை அனைத்தும் ஒரே கருத்தினைத் தான் கூறுகின்றனவா என்றும் நாம் ஆராய்ந்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அனைத்துச் சமய நூல்களையும் அவற்றின் வரலாற்றையும் அறிந்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அதனை ஒரு ஆன்மீகத் தேடல் பயணம் என்றும் கூறலாம்...வரலாற்றுப் பயணம் என்றும் கூறலாம். எனதும் அப்படிப்பட்ட ஒரு தேடல் பயணம் தான். எனது தேடலில் நான் உண்மை என்று கண்டவற்றை இவ்வலைத்தளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு வருகின்றேன். காரணம் அக்கருத்துக்களும் விடயங்களும் நிச்சயமாக மக்களால் அறியப்பட வேண்டியவைகள் என்றும் அறிந்து விவாதிக்கப்பட வேண்டியவைகள் என்றும் நான் எண்ணுவதே ஆகும். இப்பொழுது தொடங்கப் போகும் இப்பதிவும் அப்படிப்பட்ட ஒன்றே.

பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

எச்சரிப்பின் பகுதி:

"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று (மத் 7: ) இயேசு கூறுகின்றார். யாரைப் பார்த்து?

"கர்த்தாவே; கர்த்தாவே; உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?" (மத் - 7 :22 )


என்றுக் கூறும் ஊழியக்காரர்களைப் பார்த்து.

அதாவது அவர் நாமத்தினாலே ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களைப் பார்த்து இயேசு கிருத்து இவ்வாறு கூறுவது ஏன்?

இது ஊழியக்காரர் பலரால் புரிய முடியாத கேள்வி.
ஏன்?
இந்த ஊழியங்களை இவர்களுக்குக் கொடுத்ததே இயேசு கிருத்து தான்.

"இயேசு கிருத்து தம்முடைய (சீடர்களை) ஊழியக்காரர்களைத் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்." (மத் - 10 :1)

நோய்களையும் பேய்களையும் நீக்கும் அதிகாரத்தைக் கொடுத்த கர்த்தர், அவர் நாமத்தினாலே அவர் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்களைப் பார்த்து "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே; என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமானது என்னும் கேள்வி எழுகின்றது.

அவருடைய ஊழியக்காரர் அப்படி என்ன அக்கிரமத்தைச் செய்தார்கள்? என்பதைக் குறிப்பிடாமல் அவர்களை நோக்கி, "அக்கிரமச் செய்கைக்காரரே; என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்னும் எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

அதாவது அவர் கொடுத்த ஊழியமாகிய, அவர் நாமத்தால் பிசாசுகளைத் துரத்தலும், அவர் நாமத்தால் தீர்க்கதரிசனம் உரைத்தலும், அவர் நாமத்தால் அநேக அற்புதங்களைச் செய்தலும் அக்கிரமச் செய்கையா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

இவற்றிற்கு விடைகாண இயேசு கிருத்து இவற்றிற்கான அதிகாரத்தைக் கொடுத்த பின்னணியைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மத்தேயு 10 ஆம் அதிகாரத்தின் 7 ஆம் வசனம் இந்த அதிகாரத்தை அவர் தம் ஊழியக்காரர்களுக்குக் கொடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தைக் கூறுகிறது.

போகையில் "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கியுங்கள் என்னும் கட்டளையைச் சொல்லுகிறது. அவருடைய கட்டளையை அவர்கள் நிறைவேற்றச் செல்லும் பொழுது, தங்குவதற்கும், உணவுக்கும், உடுத்துவதற்கும் ஆகும் செலவுகளுக்காக எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று (மத் 10 : 9-10 ) கட்டளையிட்டதுடன், "வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரமாவான்" (மத் 10: 10) என்றும் தெரிவித்து உள்ளார்.

இயேசு கிருத்து தம் சீடர்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையும், அந்த வேலையைச் செய்வதற்கான கூலியாகத் தங்குமிடம் முதலியன கிடைப்பதற்குரிய வாய்ப்பாக வரங்களைக் கொடுத்ததுடன்

"இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்" (மத் 10 :8 ) என்றும் கூறி உள்ளதை நாம் பார்கின்றோம்.

இந்தப் பகுதியில் முக்கியமாக நடைபெற வேண்டிய வேலையையும், அந்த வேலை தடையில்லாமல் நடைபெறுவதற்கு, வேலை செய்கிறவர்களுக்குக் கூலியாகக் கிடைக்க வேண்டிய வசதிகளுக்காக வரங்களும் கொடுக்கப்பட்டுள்ள நிலை விளக்கப்பட்டு உள்ளது.

இந்த விளக்கத்தின்படி,

"பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று அனைத்து இடங்களிலும் பிரசங்கம் செய்வதற்கு வாய்ப்பாக வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதை நாம் அறிகின்றோம். ஆனால் அந்த ஊழியக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வெளியாகிய பரலோக இராஜ்யத்தைப் பற்றியும், அதை அறிவிக்கும் முறைகளைப் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல், வசதிக்காகக் கொடுக்கப்பட்ட வரங்களைப் பயன்படுத்தி வசதியாக வாழ்ந்தமையால், அவர்களுடைய வாழ்க்கை முறை அக்கிரமச் செய்கை என்று கண்டிக்கப்படுவது நமக்கு விளங்குகிறது.

இன்றும் ஊழியக்காரர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிற, இத்தகைய வரங்களையும் மற்ற வரங்களையும் பெற்றவர்கள், பரலோக இராஜ்யம் பற்றி எண்ணிப் பார்க்க இயலா நிலையில் பூலோக இராஜ்யம் பற்றிய சிந்தனையிலேயே வாழ்கின்றவர்களை நாம் பார்க்கின்றோம். இவர்களை இயேசு கிருத்து "அக்கிரமச் செய்கைக்காரர்களே, அகன்றுப் போங்கள்" என்று கூறும் நிலை இன்றும் இருப்பதைக் காணுகின்றோம்.

அதாவது 'பரலோக இராஜ்யம்' பற்றி அறிய விரும்பாமலும், அதைப்பற்றிப் பிரசங்கிக்க விரும்பாமலும், தங்களுக்குக் கிடைத்துள்ள வரங்களால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தும் பூலோக இராஜிய ஊழியக்காரர்கள் அக்கிரமச் செய்கைக்காரர்கள் என்று இன்றும் கண்டிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இது மட்டுமன்று, பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, ஊழியக்காரர் என்று உரிமை பாராட்டும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிப்பின் பகுதியாகும்.

இந்த எச்சரிப்பின் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு இயேசு கிருத்து தெளிவாகக் கூறியுள்ள பரலோக இராஜ்யத்தைப் பற்றியும், பரலோக இராஜ்யம் வரக் காரணமான இரண்டாம் வருகையைப் பற்றியும் பைபிளைப் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் கூர்ந்து ஆராய்வோம் வாருங்கள். "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று இயேசு கிருத்து பிரசங்கிக்கக் கூறியபடி பரலோக இராஜ்யம் கேட்டவர்களுக்குச் சமீபமாக வந்ததா?

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் ஊழியக்காரர்கள் இப்படித்தான் மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ண வேண்டுமா? அல்லது பரலோக இராஜ்யம் இயேசு கிருத்து கூறி இருந்தபடி வந்துவிட்டது. ஆனால் நாம் அதை அறிய முடியாமல் இருக்கின்றோமா?

இப்பொழுது எப்படிப் பிரசங்கிக்க வேண்டும்? என்று இயேசு கிருத்து விரும்புகின்றார் என்பதை அறிந்துக் கொள்ள பைபிளை ஆராய்வோம் வாருங்கள்.

"எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெச. 5 :21 : 22)

தொடரும்...!!!

அடுத்தப் பகுதி

பி.கு:

இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு