இயேசு கிருத்து கூறியதும், அப்போஸ்தலர்கள் எதிர்பார்த்ததும், பவுல் திட்டமாக எதிர்பார்த்ததுமாகிய இரண்டாம் வருகை அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஏன் நிறைவேறவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.

அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறாதது மட்டுமல்லாமல், இப்பொழுது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் நிறைவேறவில்லை.

இதுவரை அவர் வந்து விடுவார் என்று நம்பி, அவர் சொல்லி இருந்த அடையாளங்களைக் கணக்கிட்டு, இந்த நேரத்தில் வந்து விடுவார் என்று நம்பிக் காத்திருந்த பல கூட்டத்தினர் ஏமாற்றமடைந்த வரலாறுகள் இருக்கின்றன. இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இயேசு கிருத்து ஏன் இப்படிச் செய்தார்?

பொய் சொல்ல அவர் மனிதரல்ல. அவர் கூறியது நிச்சயம் நடந்திருக்க வேண்டும். இரண்டாம் வருகை இன்னமும் நிறைவேறவில்லையா? அல்லது நிறைவேறி விட்டதை சீடர்கள் அறியாமல் போனார்களா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

யூத இன மீட்பரா? உலக மீட்பரா?

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு, யூதருடைய இராச்சியத்தை மீட்டு அவர்களுக்குக் கொடுக்க வந்த யூத அரசனாகிய கிருத்துதான் இயேசு கிருத்துவா? அல்லது உலக மக்களை மீட்க்க வந்த உலக மீட்பராகிய அரசனாகிய கிருத்துவா? என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது. இயேசு கிருத்து தம்மை உலக மீட்பராகிய கிருத்து என்று அவருடைய சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால் அவர்களோ யூத மீட்பராகிய கிருத்து என்று புரிந்து கொண்டார்களே தவிர, உலக மீட்பராகிய கிருத்து என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை அவருடைய வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகளே நமக்கு விளக்குகின்றன.

மத்தேயு 16 ஆம் அதிகாரத்தில் 13 முதல் 28 வரையுள்ள வசனங்கள் கூறும் நிகழ்ச்சி இதைத் தெளிவுபடுத்துகின்றது.

" அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." (மத் 16 : 22-23)

இயேசு கிருத்துவோ தம்மை உலக மீட்பராக விளக்குகிறார். சீடர்களோ அவரை யூத இன மீட்பராகப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு விருப்பமான நிலை. அவர் தம்மை உலக மீட்பராக விளக்கினாலும், சீடர்கள் அவரை யூத இன மீட்பராகவே பார்த்தமைக்குக் காரணம் அவருடைய இராஜ்யத்தைப் பற்றி அவர்களால் புரிய இயலாமையேயாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு