அவர் உயரே எடுத்துக் கொல்லப்பட்ட பின்னர் தேவதூதர், "அவர் எவ்வாறு மேலே போனாரோ அவ்வாறே மறுபடியும் வருவார்" என்று கூறியமையால் அவருடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினர்.

"கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்."(அப்.1:11)

அவர் இரண்டாம் முறை விரைவில் வரப்போகிறார் என்று நம்பிய சீடர்கள், அவர் வந்து இசுரவேல் இராச்சியத்தை மீட்டு ஆளும் பொழுது, உடன் இருந்து பன்னிரண்டு கோத்திரங்களையும் ஆளுவதற்குப் பன்னிரண்டு சீடர்கள் உரிமையுடையவர்களாய் இருப்பதால், தற்கொலை செய்து கொண்ட யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவரைத் தேர்ந்து எடுத்து 12 என்னும் எண்ணை நிறைவு செய்தார்கள்.

" பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்." - (அப். 1 : 26)

இவர்களுடைய 12 கோத்திரம் என்பது யாக்கோபின் பிள்ளைகள் 12 பேரையும் குறிக்கிறது என்பதை வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்துகிறது. (வெளி. 7: 5 - 8)

இதையே நம்பி மக்களுக்குப் போதித்தார்கள்.இதனால், யோவானுடைய வெளிப்படுத்துதல் நூலிலும் சீடர்கள் பன்னிருவருடைய சிறப்பு பற்றிக் கூறப்பட்டு உள்ளது.

"வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.  நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன." (வெளி. 21: 13-14)

யூத மதத்திலிருந்து கிருத்துவத்திற்கு வந்த யூதர்கள், இயேசு கிருத்துவின் முதல் வருகையில் கொடுக்காத இசுரவேல் இராச்சியத்தை இரண்டாம் வருகையில் கொடுக்கப் போவதாக உறுதியாகப் போதித்தார்கள்.

ஆனால் கிருத்தவர் அல்லாத மற்ற யூதர்கள் இயேசு கிருத்துவை அவர்கள் எதிர்பார்த்த கிருத்துவாகிய மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால், கிருத்துவர் அல்லாத யூதர்கள் இன்று வரை யூத அரசனாகிய கிருத்து இன்னமும் வரவில்லை என்றும், இனிமேல் தான் யூத அரசனாகிய கிருத்து வரப்போகின்றார் என்றும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

ஆகவே,

1. யூத மதத்தைச்சேர்ந்த யூதர்கள், யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

2) கிருத்துவ மதத்தைச் சேர்ந்த யூதர்களும், அவர்களைப் பின்பற்றிய புற ஜாதிக் கிருத்தவர்களும் யூத அரசனாகிய கிருத்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு இருக்கும் யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகை இயேசு கிருத்துவில் நிறைவேறிவிட்டது என்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் கடமையை கிருத்தவர்களாகிய யூதரும், கிருத்தவ யூதர்களைப் பின்பற்றும் புற ஜாதிக் கிருத்தவர்களும் இன்று வரை செய்து வருகின்றார்கள்.

ஆகவே இரண்டாம் வருகை என்பது யூதா கோத்திரத்தில் பிறந்த, யூத இனத்தைச் சேர்ந்த யூதனாகிய இவ்வுலக அரசனை எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பே ஆகும்.

யோசேப்புக்குப் பிறந்த யூதா கோத்திரக் கிருத்து:

இதனால், இரண்டாம் வருகையை எதிர்பார்த்த பேதுருவும், யோவானும், பவுலும், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தைச் சேர்ந்த யோசேப்புக்குப் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பியமையை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு நம்பியமையே அவர்கள் இரண்டாம் வருகையை எதிர்பார்த்தமைக்கு அடிப்படை ஆகிறது. இந்த நம்பிக்கைக்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

1. பேதுரு - அப். 2:30
"உன் சிங்காசனத்தில் வீற்று இருக்க மாம்சத்தின் படி உன் (தாவீது) சந்ததியிலே கிருத்துவை எழும்பப் பண்ணுவேன்."

2. பவுல் - ரோமர் :1:5
(இயேசு கிருத்து) மாம்சத்தின் படி தாவீதின் சந்ததியில் பிறந்தவர்.

3. யோவான் - வெளி.22:16
நான் (இயேசு கிருத்து) தாவீதின் வேரும் சந்ததியும்...

அவர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகை இசுரவேலரின் அரசியல் மீட்புக்காக இருப்பதாக எண்ணப்பட்டதே தவிர, உலக மக்களின் ஆன்ம மீட்புக்காக அன்று.

அதனால், அவருடைய இரண்டாம் வருகையில் பங்குள்ளவர்களாகிய ஊழியக்காரர்களாக முத்திரை போடப்பட்டவர்கள் இசுரவேல் புத்திரர் 12 கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்திலும் 12 ஆயிரம் பேர் வீதம் மொத்தம் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என்று குறிக்கப்படுகிறது. (வெளி. 7:3-8)

"அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்." (வெளி. 14: 3-4)

இங்கே "ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள், கற்புள்ளவர்" என்று கூறப்படுவன கடவுள் மனிதனைப் படைத்த பொழுது ஒருவன் ஒருத்தியாக வாழ்ந்ததைப் போன்ற வாழ்க்கை உடையவர்கள் என்பதையும், யூத மதத்தில் பல மனைவியரை மணந்து ஒருவன் ஒருத்தியாக வாழாமல் கற்பு நெறி தவறி, பல மனைவியருடன் வாழ்ந்ததைப் போன்ற வாழ்க்கை இல்லாத கிருத்தவர்களாகிய, ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்கள் என்று கூறுவதையும் குறிக்கின்றன.

ஆக, இரண்டாம் வருகையில் "இசுரவேலருக்கு இராச்சியமும், இசுரவேல் இராச்சியத்தை ஆளும் ஆட்டுக்குட்டியானவரும், ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்களாகிய ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் இசுரவேலரும் சிறப்புக்குரியவர்களாக இருக்கின்றனர்" என்பது விளக்கப்படுகிறது.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு