முந்தையப் பகுதி

இரண்டாம் வருகை நிறைவேறி விட்டதா? திட்டமாய் அறிவது எவ்வாறு?

அப்படியானால், இயேசு கிருத்து கூறி இருந்தபடி இரண்டாம் வருகையில் நிறைவேற வேண்டிய பரலோக இராஜ்யம் நிலை நாட்டப்பட்டு விட்டதா? அவற்றை எவ்வாறு திட்டமாய் அறிவது? என்னும் கேள்விகள் எழுகின்றன.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையைக் கூறும்,

மத்.16:28 ஆம் வசனத்திற்கு

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்.16:28).
 
Full Life Study Bible-இன் அடிக்குறிப்பில் கீழ்க்காணுமாறு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

"COMING IN HIS KINGDOM. the "Son of man coming in his Kingdom" probably refers to the event of pentecost when christ Baptized his followers in the holy sprit and great power."

மேலே கூறப்பட்டு உள்ள விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது. "இரண்டாம் வருகை" என்பது கடவுள் பரிசுத்த ஆவியாக வரும் வருகையைக் குறிப்பதாக இங்கு கொள்ளப்படுவதற்கு இடம் இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கொள்ளுவது பொருத்தமானதா? என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

இவ்வாறு விளக்கம் கூறுவது பொருத்தமானதா?

கிருத்துவ அனுபவம் கடவுளை மூன்று நிலைகளில் நோக்குவதாக அமைந்து உள்ளது.

1. என்றுமுள்ள கடவுள் - முதல் நிலை
2. என்றுமுள்ள கடவுள் குமாரனாக வந்த நிலை - இரண்டாம் நிலை
3. என்றுமுள்ள கடவுள் பரிசுத்த ஆவியாக வந்த நிலை - மூன்றாம் நிலை


இந்த மூன்று நிலைகளும் மூன்று வெவ்வேறு ஆட்களின் நிலை அன்று. ஒரே கடவுளின் மூன்று 'கால நிலை' ஆகும்.

மனிதனைப் படைத்த அதே கடவுள், மனிதனை மீட்கத் தானே மனிதனாக வந்தார். மனிதனை மீட்ட பின்னர், அவன் உள்ளத்தில் இருந்து அவனை வழி நடத்தத் தானே பரிசுத்த ஆவியாக வந்தார்.

ஆகவே, ஒரே கடவுளின் 'இரண்டு வருகை' மூன்று நிலைகளில் செயல் படுகிறது என்பது பரிசுத்த ஆவியை அனுபவிக்கிறவர்களின் அனுபவ நிலை ஆகும்.

என்றுமுள்ள கடவுள் மகனாக வந்த பின்னர், என்றுமுள்ள கடவுள், தந்தை என்று அழைக்கப்படுகின்றார். ஆகவே,

1. தந்தையாகிய கடவுள்
2. மகனாகிய கடவுள்
3. பரிசுத்த ஆவியாகிய கடவுள்

என்று கடவுளை மூன்று நிலைகளில் பார்க்கும் பார்வை கிருத்துவத்தில் நிறைவாகிறது.

இந்த மூன்று நிலைகளையும் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று இணைப்பதற்குக் கடவுளின் முதல் வருகை மகனாகவும், கடவுளின் இரண்டாம் வருகை பரிசுத்த ஆவியாகவும் வந்தால் தான் மூவொரு கடவுள் நிலை தெளிவுபடும்.

ஆகவே "இரண்டாம் வருகை" என்பது கடவுள் இரண்டாம் முறை பூமிக்கு வந்த பரிசுத்த ஆவி நிலையைக் குறிப்பதே ஏற்றதாகும். Full Life Study Bible-இன் அடிக்குறிப்பு சரியாகவே அமைந்துள்ளது.

இந்த நிலை இயேசு கிருத்து கூறியவாறு, யூதாசு காரியோத்தின் இறப்பிற்குப் பின்னர் உருவானமையால்

"இங்கே இருக்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை" என்று இயேசு கிருத்து கூறியது நிறைவேறி உள்ளமையைக் காட்டுகிறது.

பரிசுத்த ஆவியின் வருகையை இரண்டாம் வருகை என்று கொள்ளாவிட்டால், இயேசு கிருத்து கூறியது தவறு என்னும் நிலையை உருவாக்கி விடும்.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையா? கடவுளின் இரண்டாம் வருகையா?

இயேசு கிருத்துவை, யூத மதத்தில், யூத இனத்தில் வந்த யோசேப்புக்குப் பிறந்த, ஒரு யூதனாகிய மனிதனாகவே அவருடைய சீடர்கள் எண்ணினார்கள். அதனால் அவர் யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்று நம்பினார்கள். அவருடைய முதல் வருகையில் அவர் யூதர்களுடைய இராஜ்யத்தை ரோமர்களிடமிருந்து மீட்டுத் தராமல் சென்று விட்டமையால் அவருடைய இரண்டாம் வருகையில் யூதர்களுடைய இராஜ்யத்தை மீட்டு அவர்களுக்குத் தருவார் என்று நம்பினார்கள்.

உண்மையில் அவர் யூத இனத்தில் வந்த யோசேப்புக்குப் பிறந்த ஒரு யூதனாகிய மனிதன் இல்லை. அவர் கடவுளாகிய பரிசுத்த ஆவியினால் உருவான கடவுளின் மகனாகிய கடவுள் என்பதை அவர்கள் அறியவில்லை.

இதனால் இயேசு கிருத்து கூறிய இரண்டாம் வருகை கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியின் வருகை என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி