சென்ற பதிவில் இந்தியா இலங்கையினுள் நுழைந்ததற்கு அதனுடைய அரசியல் நோக்கே காரணமாக இருக்கலாம் என்றுக் கண்டோம். அதற்காகத் தான் அதனுடைய படைப்பிரிவு ஒன்றினை இலங்கைக்கு அமைதியினைக் காக்கும் வண்ணம் அனுப்பியும் வைத்தது என்றும் கண்டோம்.

ஆனால் இது நம்புவதற்கு எளிதான ஒன்று அல்ல. ஒரு வேளை இந்தியா தமிழர்களின் நலன்களுக்காகவே தனது இராணுவத்தினை அனுப்பி இருக்கலாம். எனவே சான்றுகள் இன்றி இந்தியாவினைக் குறைக் கூறுவது சரியானதொரு செயலாக அமையாது. எனவே இந்நிலையில் என்ன நடந்தது என்பதனை சான்றுகளுடன் கண்டால் மட்டுமே நம்மால் எதையும் உறுதியாகக் கூறவோ அல்லது கருதவோ முடியும்.

சரி...இந்திய அரசு இட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டன. அதன் முடிவின் படியே அந்த இயக்கங்களும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவும் செய்கின்றன.

"சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆயுதங்களை ஒப்படைக்கும் பணி விரைவில் துரிதமாக நடைப்பெற ஆரம்பித்தது. மற்ற ஆயுத போராளி இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் தனித் தனியாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தப் பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகுந்த கட்டுப்பாடுடன் ஒற்றுமையாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தனர். எங்களுக்கு இந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆயுதங்களைத் தாங்கிய வண்டி வந்துச் சேரும் என்றத் தகவல் வரும்...அதே நேரத்தில் ஆயுதங்களுடன் வண்டியும் வந்துச் சேரும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலி காவலர்களுடன். அவ்வாறு வந்த ஆயுதங்களைப் பார்க்கும் பொழுது சில புதிய ரக ஏவுகணை செலுத்திகளைப் பார்த்தேன். விடுதலைப் புலிகளே அவற்றைத் தயாரித்து இருந்தனர். அதன் செயலாற்றலைக் கண்ட பொழுது இந்தியா விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்கும் சேர்த்தே அதனை தயாரித்துக் கொடுத்து இருப்பர் என்று ஆயுதங்களை வழங்க வந்த போராளி என்னிடம் தெரிவித்தார்" என்று இந்திய அமைதிக் காக்கும் படையின் தலைமை அதிகாரியான தீபிந்தர் சிங் அவரது 'இலங்கையில் இந்திய அமைதிக் காக்கும் படை' என்ற நூலினில் கூறுகின்றார்.

இதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகள் நல்ல விதமாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன என்றும், இருந்த ஆயுதம் தாங்கிய அமைப்புகளில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியதாகவும் கட்டுப்பாடுடன் கூடிய ஒரு இயக்கமாக இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நோக்கம் உண்மையிலேயே அமைதியினை நிலை நாட்டுவதாக இருந்திருந்தால் அது கொடுத்த வாக்கு உறுதிகள் அனைத்தினையும் நிச்சயம் நிறைவேற்றி இருக்கும். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக இருக்கின்றது.

“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள். காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று தனது புத்தகமான 'இலங்கையில் இந்தியத் தலையீடு' இல் எழுதுகிறார் ஹர்சிரத் சிங் - இவர் இந்திய அமைதிப் படைக்கு தலைமை தாங்கச் சென்ற தளபதி.

மேலும் "தீட்சத்தின் எண்ணத்தின் படி இந்திய அமைதிக் காக்கும் படையின் முக்கிய பணியே தமிழக மக்களின் பார்வையில் விடுதலைப் புலிகளை மட்டமானவர்களாக ஆக்க வேண்டும் என்பதே" என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

மேலும் இந்திய உளவுத்துறை மற்ற ஆயுதப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியிருப்பதாக ஹர்சிரத் சிங்கும் சரி...தீபிந்தர் சிங்கும் சரி அவர்களது நூல்களில் கூறி இருக்கின்றனர்.


மேலும் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் போர் நிறுத்தக் காலத்தில் இந்தியப் படையினருடன் சமாதானமாக பேச வந்த பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு இராசீவ் காந்தி ஆணையிட்டதாக ஹர்சரத் சிங் கூறுகின்றார்.

“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

ஏன் அவர்கள் அவ்வாறுக் கூற வேண்டும்? தமிழர்களின் நலனுக்காக போன இந்தியப்படைகள் எதற்காக விடுதலைப்புலிகளை குறிப்பாக எதிர்க்க வேண்டும்? ஏன் பிரபாகரனை குறி வைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளின் பதிலில் தான் இந்திய உளவுத்துறை ஒளிந்திருக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...ஈழத்தில் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் ஆயுதமேந்தி போராடிக் கொண்டு இருந்தன என்று. அவற்றுள் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறந்த ஒன்றாக மக்களின் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்தியா அவ்வமைப்புகளைப் பார்க்கின்றது. இந்தியாவிற்குத் தேவை இந்தியாவிற்கு கட்டுப்பட்ட ஒரு இயக்கம்...அவ்வாறு இருந்தால் தான் இந்தியாவின் கை அங்கே ஓங்கி இருக்கும்( அனைத்து வல்லரசு நாடுகளும் இதைத் தானே செய்கின்றன... தான் செல்லும் இடங்களில் அவைகளுக்கு வேண்டியது அவைகளின் சொல்லிற்கு தலை ஆட்டும் ஒரு பொம்மை அரசு அவ்வளவே). அதற்காகத் தான் இந்தியா அதன் காய்களை நகர்த்துகின்றது. ஆனால் அங்கே தான் ஒரு சிக்கல் இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் - பிரபாகரன். அவர்கள் முன்னின்றது மக்களின் உரிமைக்காக. இந்நிலையில் அவர்களை ஒன்றும் செய்யாமல் இந்தியாவினால் அதன் செல்வாக்கினை அப்பகுதிகளில் வளர்த்துக் கொள்ள முடியாது. அதனால் தான் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை குறைத்த அதே சமயம் மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை தாரளமாக வழங்கியது இந்தியா...அதனால் தான் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கினைக் குறைக்கவும் அதன் தலைவரான பிரபாகரனை கொல்வதற்கும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகளுக்கு உள்ளே பிரச்சனைகளை கிளப்பி விட்டும், ஆட்களை தன் வசப்படுத்திக் கொண்டு பிரிவினைகளைத் தோற்றுவித்தும் இந்தியா அதன் செல்வாக்கினை அங்கே வளர்த்துக் கொள்ள முயன்றது.

ஆனால் விதி வேறு விதமாக செயல்பட்டது.

திலீபனின் மரணம் (இந்தியா தனது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்) மற்றும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் ஒப்பந்தத்திற்கு மாறாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 17 பேர் இந்திய இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு (அவர்கள் அனைவரும் பின்னர் சயனைட் அருந்தி உயிர் இழந்தனர்) போன்ற நிகழ்வுகள் விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தச் செய்தன.

இம்முறை எதிரிகளாக சிங்களர்களுடன் சேர்ந்துக் கொண்டது இந்திய இராணுவமும் தான். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை ஆரம்பமாயிற்று. இன்று சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமைகளை எல்லாம் செய்து இருக்கின்றதோ அவை அனைத்தும் அன்றே இந்திய இராணுவம் செய்து இருந்தக் கொடுமைகளே.

1987 இல் ஆரம்பித்த அந்தச் சண்டை 1990 இல் ஒரு முடிவிற்கு வந்தது. அதற்கு காரணம் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி... அப்பொழுது ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://www.atimes.com/ind-pak/DD13Df02.html

2) இந்திய இராணுவத்தின் போர் குற்றங்கள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16991:-2&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16348&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17181&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17590&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17739&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17939&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16462:-11&catid=1367:2011&Itemid=615

3) இந்திய உளவுத் துறையின் செயல்பாடு
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.frontlineonnet.com/fl2418/stories/20070921505807900.htm

5 கருத்துகள்:

பதிவு அருமை.... உண்மையை தோலுரித்து கண்பிததிக்கு நன்றி....

தோழர் கீற்று உண்மையை தோலுரித்து கண்பிததின் காரணமாக, இந்திய (ஹிந்திய) உளவு துறைனால் மிரட்ட பட்ட வரலாறு உண்டு... நீங்கள் எப்படி??இந்திய (ஹிந்திய) உளவு துறை இடம் இருந்து மிரட்டல்லை எதிர் கொள்ள அயத்தமா தோழர் .....

தயாரா இல்லையா என்றுக் கூற முடியவில்லை தோழரே... உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டும் அதனை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது...அதன் வழி நடக்கின்றேன்... இறைவன் வழி நடத்துவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது...பார்க்கலாம்...!!!

வாழ்த்துக்கள் தோழர்... உங்கள் பணி தொடரட்டும்............

waiting for the next part

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு