"அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்"


இன்றைக்கு ஈழத்தினைக் குறித்து நாம் எந்த ஒரு விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டாலும் நாம் நிச்சயமாய் இந்தக் கூற்றினை எதிர்பார்க்கலாம். நிச்சயமாய் எமாற்றமடையமாட்டோம். காரணம் பெருவாரியான தமிழர்களின் சிந்தனையில் அந்தக் கருத்தே நிலைப்பெற்று இருக்கின்றது. தமிழர்களின் மத்தியிலேயே இப்படி என்றால் மற்றவர்களின் சிந்தனையினைக் குறித்து நாம் கூற வேண்டியதில்லை.

அவர்களின் பார்வையில் இலங்கை - ஒரு சிங்கள நாடு... தமிழர்கள் - அங்கே பிழைப்பிற்காக குடிப்பெயர்ந்தவர்கள். பிழைப்பிற்காக சென்றவர்கள் எங்ஙனம் அந்த நாட்டிற்கு சொந்தம் கொண்டாட இயலும்...வாடகைக்கு குடி இருப்பவன் அவ்வீட்டினில் சொந்தம் கொண்டாடுவது முறையற்ற செயல் அல்லவோ...திமிர் பிடித்த தமிழர்கள் சிங்களவனின் நாட்டினில் பங்குக் கேட்கின்றனர்...அதனால் அடி வாங்குகின்றனர். அவ்வளவே.

இது தான் இன்றைக்கு பெருவாரியான மக்களின் எண்ணம். அந்த எண்ணம் சரியானதொன்றா என்றே நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் தமிழர்கள் என்றால் யார்...சிங்களர்கள் என்றால் யார் என்றே காண வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் யார் அவர்களின் வரலாறு என்ன என்று நாம் நோக்கினோம் என்றால் அது ஒரு நீண்ட நெடியப் பயணமாகவே சென்றுக் கொண்டு இருக்கின்றது... குமரிக்கண்டம், பூம்புகார் அகழ்வாராய்ச்சிகள், சிந்து சமவெளி, சுமேரிய-எகிப்திய-பாபிலோனிய நாகரீகங்கள் என்றே நீளும் ஆராய்ச்சிகள் உலகின் முதல் மனிதன் தமிழனாக இருக்கலாம் என்றும் முதன் மொழி தமிழாக இருக்கலாம் என்றுமே கூறுகின்றன. இதனைப் பற்றி நம்முடைய பல்வேறுப் பதிவுகளில் நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் எனவே அதனை மீண்டும் விவரிக்கத் தேவை இல்லை என்றுக் கருதுகின்றேன். சுருக்கமாக கூற வேண்டும் எனில் குமரிக்கண்டத்தில் இருந்துப் பரவும் தமிழனே உலகின் பல்வேறுப் பகுதிகளில் சென்று இருக்கின்றான்.

சரி இப்பொழுது சிங்களவர்களின் வரலாற்றினைக் காணலாம். சிங்களவர்களின் வரலாறு இளவரசன் விஜய சிங்க என்ற ஒருவனிடம் இருந்து தான் தொடங்குகின்றது. அவனின் காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர். அது நமக்கு இங்கே முக்கியமானதொன்றில்லை. நமக்கு முக்கியமான விடயம் இங்கே என்னவென்றால் அந்த இளவரசன் இன்றைக்கு இலங்கை என்று அழைக்கப்படும் தீவில் என்று அவனது படையினரோடு காலடி எடுத்து வைக்கின்றானோ அதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தொடங்குகின்றது. அவ்வாறு தான் அவர்களின் நூலான மகாவம்சம் கூறுகின்றது. நாம் அந்தக் காலத்தினை கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றே வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது சில கேள்விகள் எழலாம்... இலங்கையின் பூர்வக் குடியினர் சிங்களவர்கள் என்றுக் கூறுகின்றனர்...ஆனால் அவர்களின் வரலாற்றினைப் பார்த்தால் எங்கிருந்தோ வந்த ஒரு இளவரசன் அவன் வந்திறங்கிய தீவில் ஏற்கனவே அரசாண்டுக் கொண்டிருந்த இளவரசியான ஒரு பெண்ணினை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தொடங்குகின்றது. இந்நிலையில் அந்த இளவரசன் யார்? அவன் எங்கிருந்து வந்தான்? அவன் வருவதற்கு முன்னர் அத்தீவினில் அரசாண்டுக் கொண்டிருந்த அந்த மக்கள் யார்? அவன் அத்தீவிற்கு வந்தக் காரணம் யாது? போன்ற பல கேள்விகள் நம் முன்னே வரிசையாக நின்றுக் கொண்டிருக்கின்றன.

அக்கேள்விகளுக்கு விடை... விஜய சிங்க என்ற இளவரசன் அன்றைக்கு கலிங்க நாட்டில் இருந்து (இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) போரில் தோற்று ஓடிய ஒருவன் (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது). அவனும் அவனைப் பின்பற்றியவர்களும் நாட்டில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்வதற்காக கப்பலின் மூலம் தெற்கே பயணிக்க ஆரம்பித்தனர். அவ்வாறு அவர்கள் பயணித்து வந்தடைந்த தீவு தான் இன்றைக்கு இலங்கை என்று வழங்கப்படும் தீவாகும் (அத்தீவிற்கு அன்று எந்தப் பெயர் வழங்கப்பட்டது என்று நான் இன்னும் படித்தறிய வேண்டி இருக்கின்றது...ஒரு வேளை அது நாகதீபத் தீவு என்று வழங்கப் பட்டு இருக்கலாம்).

அத்தீவினில் வந்து இறங்கிய விஜயனை வரவேற்கின்றனர் அங்கே ஏற்கனவே ஆண்டுக் கொண்டு இருந்த மக்கள்...அவர்களை இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது. அவ்வாறு வரவேற்ற மக்களின் இளவரசியினை விஜயன் மணம் முடித்துக் கொள்வதில் இருந்து தான் சிங்கள இனமே தோற்றம் பெறுகின்றது. அந்த இளவரசியின் பெயர் குவேனி.நிற்க


விஜயனின் கதையினுள் நாம் மேற்கொண்டு செல்ல வேண்டியத் தேவை இல்லை. நமக்குத் தேவை சிங்களவர்கள் என்பவர்கள் விஜயனின் வம்சாவழியினர் என்பதும்...விஜயன் அன்றைக்கு கலிங்க நாட்டினில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இனக் குழுவின் இளவரசன் என்பதும்...அவன் இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் ஒரு தமிழ் பெண்ணினை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான். (விஜயனின் உடன் இருந்த வீரர்கள் பாண்டிய நாட்டுப் பெண்களை மணம் முடித்தனர் என்ற செய்தியும் இருக்கின்றது...ம்ம்ம்….வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் விஜய சிங்கனையும் வாழத்தான் வைத்து இருக்கின்றனர்.)

பின்னர் காலங்களில் விஜயனின் வம்சாவழியினர் வளருகின்றனர். ஆனால் காலங்கள் மாற மாற மனிதனும் மாறுவான் தானே...அதுவும் பல்வேறு இனக்குழுக்களாக இருப்போரின் மத்தியில் சண்டைகள் வருவதும் இயல்பு தானே. அது தான் அந்தத் தீவினிலும் நிகழ்கின்றது. தமிழர்கள் வடக்கேயும் கிழக்கேயும் வலுவாக இருக்க தெற்கில் சென்று தங்களது அரசுகளை அமைத்துக் கொள்கின்றனர் சிங்களர்கள்.

போர்கள்..வெற்றிகள்...தோல்விகள்...சமாதானம் என்று இரு தரப்புக்களும் மாறி மாறி மோதிக் கொண்டிருக்க காலமும் விரைவாகக் கடந்துக் கொண்டு இருக்கின்றது. இராச இராச சோழனின் காலத்திலும் அச்சண்டைகள் நீடித்துக் கொண்டு தான் இருந்தன என்பதனை நம்மில் பலர் அறிந்து இருப்போம்.

ஆயிரம் சண்டைகள் வந்த பொழுதிலும் இலங்கை என்றைக்குமே முழுமையாக சிங்களவர்களின் நாடாக நீடித்து இருந்ததேக் கிடையாது. தமிழர்கள் அங்கே ஆண்டுக் கொண்டு தான் இருந்தனர். இலங்கை ஐரோப்பியர்களின் வருகை வரை இந்தியாவினைப் போல் பல நாடுகள் கொண்ட ஒரு நிலப்பகுதியாகவே இருந்தது.

ஆனால் ஐரோப்பியர்களின் வருகை அதுவரை இருந்த வரலாற்றினை முற்றிலுமாக மாற்றிப் போடுகின்றது...!!!

எவ்வாறு...அதோ தொலைவில் போர்துகீசியர்களின் கப்பல் ஒன்று தென்படுகின்றது. விடை ஒருவேளை அதனில் இருந்தாலும் இருக்கலாம்...காண்போம்!!!

தொடரும்...!!!

குறிப்பு:


மேலே உள்ளப் படம் இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று?

1 கருத்துகள்:

ஒரு இனம் வளர்வதும் அழிவதும் அந்த இனம் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்கிறது, அல்லது அனுசரித்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தது என்று நான் நினைக்கிறேன்.

இலங்கையில் தமிழர்கள் இவ்வாறு தங்களை மாற்றிக்கொள்ள தவறி விட்டார்கள். அதுதான் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் இலங்கைக்குப் போனபோது மலயாளிகளும் சென்றிருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லையே?

உங்கள் அடுத்த பதிவுகளில் இந்தக் கருத்துகளைப் பற்றிய விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு