1988...!!!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிக் காக்கும் படைக்கும் இடையே யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு வருகின்றது. அட என்னடா இது...பிரச்சனை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தானே...அப்படி இருக்கும் பொழுது அமைதியினை நிலைநாட்டச் சென்ற இந்தியப் படை எதற்காக தமிழர்களுக்கு எதிராக
சண்டையிட வேண்டும் என்றக் கேள்வி இங்கே பலருக்கும் இயல்பாக எழும் (வரலாற்றில் இப்படிப்பட்ட குழப்படிகள் தான் அதிகமாக இருக்கின்றன)...அக்கேள்விக்குரிய விடையினை கணித்துக் கொள்ள உதவுகின்ற சில விடயங்களை நாம் ஏற்கனவே சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்.

சரி அது இருக்கட்டும்...இப்பொழுது நாம் 1989 ஆம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது...அந்த ஆண்டில் தான் ஜெயவர்தனேவை ஓரம் கட்டி விட்டுவிட்டு பிரேமதாசா இலங்கையின் சனாதிபதியாக ஆட்சியில் அமர்கின்றார். ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டிருந்த இலங்கை பிரேமதாசாவினைப் பார்கின்றது. பிரேமதாசா இலங்கையைப் பார்க்கின்றார்.

தெற்கே 'எதற்காக இந்திய வீரர்களை இலங்கையினுள் அனுமதித்தாய்...இலங்கையில் இந்தியாவிற்கு என்ன வேலை..திரும்பிப் போகச் சொல் அவர்களை' என்றவாறே சிங்கள போராளி அமைப்புக்கள் போராடிக் கொண்டு இருந்தன. வடக்கேயோ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே பலத்த சண்டை ஓடிக் கொண்டிருக்கின்றது. இலங்கை முழுவதுமே ஒரு குழப்பமான நிலை நிலவிக் கொண்டிருந்தது. ஒரு சனாதிபதியாய் அவரிடம் இருந்து அந்நாடு நிறைய எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்தே இலங்கையில் இந்தியா தலையிடுவதினை அவர் விரும்பி இருக்கவில்லை...அதுவும் குறிப்பாக இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருப்பதினை அவர் சிறிதும் விரும்பவில்லை...பின்னே யார் தான் மற்றொரு நாட்டின் இராணுவம் தமது நாட்டினில் இருப்பதனை விரும்புவார்?

சிந்தித்தார் பிரேமதாசா. 'தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி இங்கேயே இருப்பவர்கள்...இங்கேயே தான் இருக்கவும் போகின்றோம்...சில பிரச்சனைகள் இருக்கின்றன, ஆனால் அவைகளை நாங்களே பார்த்துக் கொள்ள முடியும்...இந்நிலையில் எதற்காக தமிழர்களும் சிங்களவர்களுக்கும் இடையில் மற்றொரு நாட்டின் தலையீடு? இந்தியா இலங்கையில் இருப்பது சிங்களர்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி நன்மையான ஒரு விடயம் அல்ல...பின்னர் எதற்காக அவர்கள் இங்கே இருக்க வேண்டும்...அவர்கள் செய்த செயல்களுக்கெல்லாம் நன்றி என்று கூறி வழி அனுப்பி விடலாம் தானே' என்று எண்ணி அவ்வாறே செய்யவும் செய்தார்.

"அன்புள்ள இந்தியாவிற்கு... உங்களின் உதவிக்கு மிக்க நன்றிகள்...இங்கே அனைவரும் நலமாக இருக்கின்றோம்...அமைதி தழைத்தோங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே தங்களின் அமைதிக் காக்கும் படையினை சற்று திரும்பப் பெற்றுக் கொள்கின்றீர்களா...நன்றி...!!!' என்றுக் கூறி போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றார்.

பிரேமதாசா அறிவித்த போர் நிறுத்தத்தினை முதலில் சந்தேகத்துடன் பார்த்து அதனை ஏற்காத புலிகளும் சில நாட்களில் போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றனர். இலங்கை அதிகாரிகளுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளும் நிகழத் தொடங்குகின்றன.

பிரேமதாசாவின் அந்த அறிவிப்பினைக் கேட்ட இந்திய இராணுவம் அதிர்கின்றது...இந்தியாவும் தான்..."என்ன இராணுவம் திரும்ப வேண்டுமா...என்ன சொல்லுகின்றீர்...உங்களுக்கு புலிகளைப் பற்றித் தெரியவில்லை...அவர்கள் இன்னும் பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கின்றனர்...இந்நிலையில் நாங்கள் இல்லை என்றால் இலங்கைக்கு அது மாபெரும் ஆபத்தாக முடியும்" என்று இந்திய இராணுவம் இலங்கையிடம் கூற சிரித்துக் கொண்டே மறுக்கின்றார் பிரேமதாசா.

"இல்லை இருக்கட்டும்...புலிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்...தெரியவில்லை என்றாலும் இதோ பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன, அதன் மூலம் தெரிந்துக் கொண்டு விட்டால் போயிற்று அவ்வளவு தானே...இதில் உங்களுக்கு என்ன கவலை...உங்களுக்கு இரு மாதங்கள் அவகாசம் தருகின்றேன்...29 யூலை 1989 க்குள் பத்திரமாக உங்களின் தேசத்திற்கு திரும்பி விடுங்கள்...நன்றி" என்றே ஒரு கெடு நாளினையும் விதிக்கின்றார். புலிகளும் இலங்கை அரசும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்கின்றன. நிற்க...!!!

இங்கே நாம் காண வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது... அதே 1989 ஆம் ஆண்டிலேயே தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் மேற்பார்வையில் நடந்திருந்த தேர்தலில் வெற்றிப் பெற்று வரதராஜ பெருமாள் என்பவர் முதலமைச்சராக பதவி ஏற்று இருந்தார். அத்தேர்தலை பல அமைப்புகள் புறக்கணித்து இருந்தன...விடுதலைப் புலிகளும் தான். தேர்தலைப் புறக்கணித்த விடுதலைப் புலிகள் புதிய முதலமைச்சரையும் புறக்கணிக்கத் தான் செய்தனர்...காரணம் அவர்களின் பார்வையில் வரதராஜ பெருமாள் இந்தியாவின் ஒரு கை பொம்மை... அவ்வளவே. கிட்டத்தட்ட அதே கண்ணோட்டத்தினை பிரேமதாசாவும் கொண்டிருந்தார். அவர்கள் அப்பார்வையினைக் கொண்டமைக்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

வரதராஜ பெருமாளினை மற்றொரு ஆயுதப் போராளி இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப் (E.P.R.L.F) அமைப்பு ஆதரித்துக் கொண்டிருந்தது...ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இந்திய அமைதிக் காக்கும் படை தனது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்தது. கூடுதலாக அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களையும் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக சேர்த்து ஒரு படையினை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டு இருந்தனர்...தமிழ் தேசிய இராணுவம் (Tamil National Army T.N.A) என்று அவர்களுக்கென்று ஒரு படையினையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தும் தான் விடுதலைப் புலிகளையும் சரி பிரேமதாசாவினையும் சரி இந்தியா அதன் நலன்களுக்காக வடக்கிழக்கில் ஒரு பொம்மை ஆட்சியினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது...அது நமக்கு நல்லதல்ல என்ற முடிவிற்கு வர வைத்தது. இந்த அடிப்படையிலும் தான் விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருகின்றனர்...பிரேமதாசா இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற ஒரு கெடுவும் விதிக்கின்றார்.

சரி..தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பிரச்சனை, அதை நாம் தீர்த்து வைப்போம் என்றே களம் இறங்கிய இந்தியா நியாயப்படிஇப்பொழுது இலங்கை விதித்துள்ள கெடுவினை மதித்து இலங்கையில் இருந்து கிளம்பி இருக்க வேண்டுமா கூடாதா... கிளம்பி இருக்க வேண்டும் தானே...ஆனால் அது தான் நடக்கவில்லை.

"உங்களுக்கு விவரம் போதவில்லை பிரேமதாசா அவர்களே...புலிகள் ஆபத்தானவர்கள்...எனவே நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி உங்களைக் காக்க வேண்டியது எங்களது கடமை..." என்றுக் கூறியே இலங்கையில் தொடர்ந்து இருக்க ஆரம்பிக்கின்றது இந்தியா. அவர்களின் கூற்றினை மெய்ப்பிப்பதினைப் போலவே சில கொலைகள் மற்றும் சம்பவங்கள் இலங்கையில் நடக்கின்றன.

தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன், புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவினால் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்திகளும் வெளி வருகின்றன. அந்த அனைத்துக் கொலைகளுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கமே காரணமாக கூறப்படுகின்றது. விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்...'நாங்கள் இந்தக் கொலைகளை செய்யவில்லை. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர்.

அதையே தான் சிங்கள அரசாங்கமும் கூறியது....“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்தி. அவர்கள் அவ்வாறு வெளியிட்டதற்கு காரணமும் இருக்கின்றது.

அந்த கொலைகள் நிகழ்ந்த காலம், இலங்கையும் விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்தக் காலம்...மேலும் முக்கியமாக இந்திய அமைதிப் படை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விதிக்கப்பட்டு இருந்த கெடுக் காலம். யூலை 29 1989 குள் இந்தியா இலங்கையினை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரேமதாசா கூறி இருந்தார்...அதே நேரத்தில் ஆச்சர்யவசமாக அந்த அனைத்துக் கொலைகளும் யூலை மாதம் 1989 ஆம் ஆண்டிலேயே நிகழப் பெற்று இருந்தன.

இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே முக்கியமான இலக்காக விடுதலைப் புலிகளுக்கும் சரி இலங்கைக்கும் சரி இருந்து வந்த காலத்தில் அதனை கெடுக்கும் வண்ணம் இந்தக் கொலைகளை அப்பொழுது விடுதலைப்புலிகள் செய்வார்களா...மேலும் அதனைச் செய்வதனால் அவர்களுக்கு எந்தொரு நலனும் இல்லையே என்பதனை பிரேமதாசா அறிந்து இருந்தார். அதனால் தான் புலிகள் மீது பிறர் வீண் பழியினைப் சுமத்துகின்றனர் என்று இலங்கை அறிவித்தது.

பிரேமதாசா அறிவித்த கெடுக் காலம் முடிவடைந்த போதும், இந்தியப் படைகள் திரும்பிச் செல்லவில்லை...வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வன்முறைகளை ஏவிக் கொண்டிருந்தது. கூடுதலாக புதிதாக ஒரு படை வேறு அங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

பிரேமதாசா பார்த்தார்...நிலைமை சரியில்லை. விடுதலைப்புலிகளை அழைத்தார்..."வடக்கே நிலைமை சரியில்லை...நமக்கு எதிராக அங்கே ஏதோ நடந்துக் கொண்டு இருக்கின்றது...அதை நாம் கட்டுக்குள் வைத்தே ஆக வேண்டும்...அதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்" என்றார்.

"ஆயுதங்கள்..." என்றனர் புலிகள்.

"சரி...!!!" என்றுக் கூறி புலிகளுக்கு ஆயுதங்களை அளித்தார் பிரேமதாசா. வடக்கே மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. இந்தியப் படைகளுடன் சேர்த்து மற்ற போராளி அமைப்புக்களையும் எதிர்க்க ஆரம்பித்ததனர் புலிகள். சிங்களர்களை நாங்கள் பின்னர் கண்டுக் கொள்கின்றோம்...ஆனால் அதற்கு முன்னர் துரோகிகளை களைய வேண்டி இருக்கின்றது என்றே மற்ற போராளிக் குழுவினரை தாக்க ஆரம்பிக்கின்றனர்.

யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. அதே நேரத்தில் தான் இந்தியாவிலும் தேர்தல் களம் சூடாகின்றது. இராசீவ் காந்திக்கு பின்னர் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கின்றார் திரு.வி.பி.சிங்.(என்னைப் பொருத்தவரை இந்தியா இது வரை கண்ட பிரதம மந்திரிகளிலேயே மிகவும் சிறந்த பிரதம மந்திரி இவர் தான் - ஆனால் நல்லவர்கள் ஆண்டார்கள் என்றாலே நம் நாட்டிற்கு ஆகாதே...எண்ணி ஒரே வருடம் இவரின் பிரதமர் பதவிக்கு ஒரு முடிவு விழாவினை கொண்டாடி விட்டார்கள் நம் நாட்டிலே...சரி அது வேறு கதை இப்பொழுது இலங்கைக்கு வருவோம்.)

இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்கின்றார் திரு வி.பி.சிங் அவர்கள். இலங்கையைக் காணுகின்றார்...அமைதியினை நிலை நிறுத்தச் சென்று இருந்த படை அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தது...மேலும் படையினை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி இலங்கை அரசாங்கமும் கூறி இருந்தது...இந்தியாவிலும் அக்குரல்கள் கேட்கத் தொடங்கி இருந்தன. சிறிதும் யோசிக்கவில்லை சிங்...அவரின் முடிவில் அவர் தெளிவாக இருந்தார்.

"இந்தியப் படைகளை நாம் திரும்பிப் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும்..." என்றார். சிலர் மறுத்தனர்..."அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அது நமக்கு பெரிய அவமானமாக போய் விடும்" என்றனர். முற்றிலுமாக அதனை மறுத்தார் சிங்.

"அடுத்த நாட்டிலே புகுந்து இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருப்பது தான் அவமானம்...எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன...வேறு பேச்சே இல்லை...இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து திரும்ப வேண்டும்...இது எனது உத்தரவு" என்றார்.

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து கிளம்ப ஆரம்பித்தன. முதன் முதலில் அப்படைகள் இலங்கையில் கால் வைத்தப் பொழுது ஆரவாரத்தோடு அவர்களை தமிழ் மக்கள் வரவேற்று இருந்தனர். ஆனால் வழி அனுப்புவதற்கு ஒருவர் கூட இல்லாத நிலையில் இந்திய வீரர்கள் இந்தியா திரும்பினர்.

ஆதரிக்க இந்தியப்படைகள் இல்லாத நிலையில் மற்ற போராளி அமைப்புக்களால் விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியவில்லை. வரதராஜ பெருமாள் சிறிது தாக்குப் பிடிக்கப் பார்த்தார்...ஆனால் அவர்கள் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் புலிகளின் முன்னால் நிற்க முடியாது வீழ, வரதராஜ பெருமாள் இந்தியாவினுள் அடைக்கலம் புகுந்தார்.

ஒரு வழியாக இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டு இருந்தன...ஆனால் அரசியல் வெளி ஏறவில்லை...!!!

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15623:-5&catid=1342:2011&Itemid=589
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15505:-4&catid=1342:2011&Itemid=589
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72476
http://expressindia.indianexpress.com/news/ie/daily/19980418/10850534.html
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72857

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு