கி.பி 19 ஆம் நூற்றாண்டு...!!!

ஆங்கிலேயர்கள் இலங்கையினுள் நுழைகின்றார்கள். அவர்களின் குறிக்கோள் ஒன்று தான். 'இலங்கை...அழகான சிறியதொருத் தீவு...அப்படிப்பட்ட தீவினில் பலரின் ஆட்சி இருப்பது சரியல்ல...போர்கள், பிரச்சனைகள் என்று எப்பொழுது வேண்டும் என்றாலும் அமைதி கெடும் சூழல் உருவாகலாம்...அமைதியினைக் கெடுக்க நாம் அனுமதிக்கலாமா...கூடாது தானே...ஏன் வம்பு...அமைதியினை நிலைநாட்ட நாமே இந்தத் தீவினை ஆண்டு விடலாமே...என்ன கெட்டு விடும்'.

அருமையானக் குறிக்கோள் அல்லவா. ஆனால் ஏனோ தெரியவில்லை இலங்கையில் ஏற்கனவே அரசாண்டுக் கொண்டிருந்த கண்டி அரசுக்கும், வன்னியைத் தலைநகராகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த வன்னி அரசுக்கும் ஆங்கிலேயர்களின் இந்தக் குறிக்கோள் சற்றும் பிடிக்கவில்லை (ஒலாந்தியர்களின் ஆட்சியிலும் கண்டி அரசு தனித்து தான் இயங்கிக் கொண்டு இருந்தது...ஒலாந்தியர்கள் அதற்கு அனுமதி அளித்து இருந்தனர். மற்றுமொரு தமிழ் அரசான வன்னி அரசும் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணியாமல் சுதந்திரமாகத் தான் இயங்கிக் கொண்டு இருந்தது...ஆங்கிலேயர் வரும் வரை).

"சுதந்திரத்தை இழப்பதா...ஒரு காலும் முடியாது...அமைதியினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்...உங்களின் உதவி எங்களுக்குத் தேவை இல்லை...நன்றிகள் பல... தாங்கள் சென்று வரலாம்" என்றே கண்டி அரசும் வன்னி அரசும் கூறி விட சிந்திக்கலாயிற்று ஆங்கிலேய அரசு.

"என்னடா இது... ஏற்கனவே ஒலாந்தியர்களின் கையில் இருந்த கோட்டை அரசையும், யாழ்ப்பாண அரசையும் கைப்பற்றியாயிற்று... மீதம் இருக்கும் மற்ற அரசுகள் அவைகளாய் சரணடையும் என்றுப் பார்த்தால் பிடிவாதம் செய்கின்றார்களே...இவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்றுப் புரியவில்லை...புரியவைப்போம்..." என்று எண்ணியே அந்த அரசுகளின் மீது படை எடுத்தது ஆங்கிலேய அரசு.

போர்கள் எளிதான ஒன்றாக இல்லை...கண்டி பலம் வாய்ந்த ஒரு அரசாக இருந்தது... மேலும் ஒலாந்தியர்களுக்கு தண்ணிக் காட்டிய வன்னி அரசனான பண்டார வன்னியனும் கொரில்லா போர்முறையில் கணக்கற்ற சேதங்களை உருவாக்கிக் கொண்டு இருந்தான். கொரில்லா போர் முறைக்கே உரித்தான பிரதேசமாக விளங்கிய இலங்கையில் ஆங்கிலேயப் படையினர் சற்றேத் திணறித் தான் போனார்கள் (பிற்காலத்தில் புலிகளும் கொரில்லாப் போர் முறையினை சிறப்பாக கையாண்டனர் என்பதனை நினைவிற் கொள்க).

ஆனால் ஆனானப்பட்ட இந்தியாவினையே பிடித்த ஆங்கிலேயர்களுக்கு முன்னர் எத்தனைக் காலம் தான் சிற்றரசுகள் போரிட்டுக் கொண்டு இருக்க முடியும். வன்னி அரசும் தோற்கின்றது...கண்டியும் வீழ்கின்றது. இறுதியாக முழு இலங்கையும் அதன் வரலாற்றில் முதல் முறையாக அந்நியர்களுக்கு அடிமைப்படுகின்றது. அக்காலம் கி.பி 1817.

"முழு இந்தியாவினையும் பிடித்தாயிற்று...இப்பொழுது இதோ இலங்கையும் நமது காலின் கீழே கிடக்கின்றது. வெற்றிகள் குவிந்த வண்ணம் கிடக்கின்றன...ஆனால் இந்த வெற்றிகளை எல்லாம் தகுந்த முறையில் தக்க வைக்க வேண்டும் என்றால் முறையான முறையில் நாம் நிர்வாகம் பண்ண வேண்டும்...அதற்கு என்ன செய்வது" என்றே அடுத்து ஆங்கிலேயர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்.

கண்டியினையும் வன்னியினையும் அவர்கள் பிடிக்கும் முன்னர் வரை, மதராச மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழேயே மற்ற இலங்கைப்பகுதிகளான கோட்டையையும், யாழ்ப்பாணத்தினையும் ஆங்கிலேயர்கள் வைத்து இருந்தனர். ஆனால் இப்பொழுது முழு இலங்கையும் ஆங்கிலேயர்களின் வசம் வந்து விட்டது. இந்நிலையில் மதராச மாகாணத்தின் நிர்வாகத்திற்கே அனைத்தையும் கொண்டு வருவது என்பது கடினமான ஒரு பணியாக இருக்கும்...அப்படி இருக்க இலங்கையினை என்ன செய்வது? எவ்வாறு நிர்வாகிப்பது?

இந்தக் கேள்விக்குத் தான் ஆங்கிலேயர்கள் விடைத் தேடிக் கொண்டு இருந்தனர். அது வரை இலங்கையினை ஆண்டுக் கொண்டுச் சென்றிருந்த ஐரோப்பியர்கள் வெவ்வேறு வகையான நிர்வாக முறைகளையே பயன் படுத்தி இருந்தனர். தமிழர்கள் இருந்த பகுதியில் தமிழர்களுக்கேற்ற நிர்வாக முறை, கோட்டை அரசின் இடங்களில் அதற்குரிய நிர்வாக முறை பின்னர் கண்டி அரசின் இடங்களில் அதற்குரிய நிர்வாக முறை...இவ்வாறு மூன்று நிர்வாக முறைகள் இலங்கையில் நடைமுறையில் இருந்துக் கொண்டு வந்தன.

ஐரோப்பியர்களுக்கு முன்னரும் அம்முறைகள் அப்படியேத் தான் இருந்துக் கொண்டு வந்தன...அதாவது ஆட்சிகள் மாறினாலும் நிர்வாக முறைகள் மாறியதில்லை...காரணம் இலங்கையில் இருந்த மக்கள் அறிந்து இருந்தனர்... அவர்கள் வேறு இன மக்கள்...அவர்களது வேறு கலாச்சாரங்கள்...எனவே ஒருவரின் நிர்வாக முறை அடுத்தவரது முறையில் இருந்து மாறுபடும்...எப்பொழுது நாம் ஒருவரது நிர்வாக முறையில் மற்றொருவரது முறையினை புகுத்தத் தொடங்குகின்றோமோ...அப்பொழுது பெரிய பிரச்சனைகள் வெடிக்கும்...அது இம்மண்ணிற்கு வேண்டியதில்லை. அதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களும் அவ்வாறே நிர்வாக முறைகளை வைத்துக் கொண்டு இருந்தனர்... 1831 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் அவ்வாறு தான் நிர்வாகம் செய்தனர். அவர்களின் லட்சியம் இவை தான்,

1) ஆங்கிலேய அதிகாரிகளின் கீழ் ஒட்டு மொத்த இலங்கையின் நிர்வாகம். அதில் கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய இடங்களுக்கு ஏற்றவாறு தனித்தனி நிர்வாக முறைகள்.
2) அலுவல் பணிகளுக்கு ஆங்கில மொழியினை பயன்படுத்தல்.
3) ஆங்கில மொழிப் பள்ளிகளை ஆரம்பித்தல்.
4) சாலைகளை இடல்
5) தேயிலைத் தோட்டங்களை உருவாக்குதல். (இதனைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது...பின்னர் காணலாம்).

இவைகள் தாம் 1831 ஆம் ஆண்டு வரை இருந்துக் கொண்டிருந்த நடைமுறைகள்...ஆனால் 1833 இல் தான் ஒரு பிரச்சனை ஆரம்பிக்கின்றது. அன்றைய ஆங்கிலேய அரசர் நான்காம் ஜார்ஜுக்கு (King George IV) திடீரென்று ஒரு யோசனை வருகின்றது... 'இலங்கைத் தீவினை மேலும் நன்றாக நிர்வாகம் செய்ய வழிமுறைகள் இருக்கின்றனவா இல்லையா... இதனை அறிய ஒரு குழுவை நியமித்தால் என்ன?'

அரசரின் எண்ணத்திற்கு மறுப்புகள் தெரிவிக்க முடியுமா...உடனே ஒரு குழு அமைக்கப்படுகின்றது. காலே ப்ரோக்கே (Major W.M.G. ColeBrooke) மற்றும் கமேரூன் (Charles Hay Cameron) ஆகிய இருவர் அந்தக் குழுவிற்குத் தலைமைத் தாங்கி அவர்களின் திட்டங்களைக் கூறுகின்றனர்.

"ஒரு தீவுக்குள்ளே எதற்காக மூன்று நிர்வாக முறைகள்...அந்த மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் பொன்னான ஆட்சியில் பங்கு வகிப்பவர்கள்...அவ்வாறு இருக்க ஒரே நிர்வாக முறையினைக் கொண்டு வந்து விட்டால் நமக்கும் எளிதாக இருக்கும்...தேவை இல்லாத பளுவும் குறையும்...ஒன்றுப்பட்ட இலங்கையின் தலைநகராக கொழும்புவினை வைத்துக் கொள்ளலாம்... தாங்கள் என்ன சொல்கின்றீர்கள் அரசே!!!"

அரசர் சிந்தித்தார்..."ஆமாம் எதற்காக ஒரு ஆங்கிலேய காலனி நாட்டினில் மூன்று நிர்வாக முறைகள்...போதும் மடத்தனம்...அமல் படுத்துங்கள் ஒரே ஆட்சி முறையினை" என்றார்.

"வேண்டாம் மன்னா...அவர்கள் வெவ்வேறு மக்கள்...அவர்களின் இயல்புகள், மொழி, கலாச்சாரம், மதம் என அனைத்தும் மாறுப்பட்டவை...விவரம் அறியாமல் நாம் இதனை கருதாது முடிவெடுத்தால் எங்கே வெடிக்கும் என்றே கூற முடியாது...எங்கேயும் வெடிக்கலாம்...எப்பொழுதும் வெடிக்கலாம்...சற்றே சிந்தியுங்கள் மன்னா" என்று பலர் வேண்டியும் மன்னனின் முடிவில் யாதொரு மாற்றமும் இல்லை.

"இலங்கை ஒரே நாடு...ஒரே மக்கள்...ஒரே ஆட்சி...ஒரே ஆட்சிமுறை...இதில் மாற்றுவதற்கு ஏதும் இல்லை... வேண்டும் என்றால் உலகில் வேறு நாடுகள் இருக்கின்றனவா என்றுப் பாருங்கள்...அங்கே ஆங்கிலேயர்களின் ஆட்சி இல்லையென்றால் அங்கும் சென்று மாற்றுவோம்...அதனைத் தவிர்த்து இங்கே செய்வதற்கு ஒன்றும் இல்லை" என்றுக் கூறியே அரசாணையை வெளியிட்டார் அரசர்.

இரு வேறு தேசங்கள் ஒரே தேசமாயின...இரு வேறு மக்கள் ஒரே மக்களாயினர்...அவர்கள் விருப்பம் இல்லாமலேயே...!!!

அதன் விளைவு தான் இன்று வரை வெடித்துக் கொண்டிருக்கின்றது...!!!

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு