தேயிலைத் தோட்டங்கள்...!!!

இலங்கையின் வரலாறையும் அதில் தமிழர்களின் வரலாற்றினையும் நாம் காண வேண்டும் என்றால் நிச்சயமாய் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டும். காண்போம்...!!!

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முழு இலங்கையையுமே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த ஆங்கிலேயர்கள் சற்று நிதானமாக அவர்கள் பிடித்த தீவினைக் காணுகின்றனர்.

மிகவும் அழகியத் தீவது...எங்குத் திரும்பினாலும் இயற்கை வளங்கள்...இயற்கை காட்சிகள்...அங்கிலேயர் நிம்மதியாய் பெருமூச்சினை விடுகின்றனர்.

'நல்ல வேளை இப்படிப்பட்ட ஒரு தீவு நமது கைகளுக்கு கிடைத்தது...சரி இருக்கட்டும்...இனி நமது வேலையை ஆரம்பிப்போம்...நாம் எதற்காக இங்கே முதலில் வந்தோமோ அந்த வேலையைக் கவனிக்கும் நேரம் வந்து விட்டது...வணிகத்திற்காக தானே இம்மண்ணுக்கு வந்தோம்...வணிகத்தைக் கவனிப்போம்..நம்மைக் கேட்க யாரும் இல்லை...எதையும் செய்யலாம்...எப்படியும் செய்யலாம்...நம்மைத் தடுக்க இங்கே சட்டமும் இல்லை ஒப்பந்தங்களும் இல்லை...அள்ள அள்ள குறையாத செல்வத்தினைக் கொடுக்கும் நிலம் இங்கே இருக்கின்றது...இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம் செல்வத்தினை அள்ள வேண்டியது தான்...அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!!!'

அவ்வண்ணமே அவர்களின் செயல்களும் இருக்க ஆரம்பித்தன. இலங்கையின் இயற்கை வளங்கள் ஆங்கிலேயரின் செல்வத்தினைப் பெருக்க வழி வகுக்க ஆரம்பித்தன. அப்பொழுது தான் ஆங்கிலேயரின் பார்வை இலங்கையின் மலைகளின் மீதும் தட்ப வெப்ப நிலையின் மீதும் படுகின்றது.

"தேயிலைத் தோட்டங்கள் அமைக்க ஏதுவான சூழல் இங்கே நிலவுகின்றதே...ஏன் நாம் இங்கே தோட்டங்களை அமைக்கக் கூடாது?...நமக்கு விருப்பமான தேயிலையும் கிட்டும்...கூடவே காசும் கொட்டும்... அது போதாதா நமக்கு...மலைகளில் இயற்கையான சோலைகளும் புல்வெளிகளும் இல்லை என்று இங்கே யார் அழப் போகின்றனர்...ம்ம்ம்...யாரங்கே...இந்த மலைகளை தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்கு ஏதுவான ஒன்றாக மாற்ற வேண்டும்...அதற்கான பணிகளை உடனேத் தொடங்குங்கள்..."

கட்டளைகள் பாய்ந்தன. மின்னல் வேகத்தில் மலைகள் மொட்டை அடிக்கப்பட்டு அங்கே தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. தேயிலை உற்பத்தியினைத் தொடங்க அனைத்தும் தயாராக இருந்தது. பணியாளர்களைத் தவிர. ஆம்... தேயிலைத் தோட்டங்களில் பணி புரிய இலங்கையில் எவருமே தயாராக இல்லை. தமிழர்களும் சரி...சிங்களவர்களும் சரி...தேயிலைத் தோட்டத்து வேலையா...அது எனக்கு வேண்டாம் என்று உறுதியாய் இருந்தனர்.

காரணம் தேயிலைத் தோட்டத்தில் வேலை அப்படிப்பட்ட ஒரு வேலையாக இருக்கும். மலைகளின் மேலே தான் பணி இருக்கும்... வன விலங்குகளுக்குப் பஞ்சம் இருக்காது...ஆனால் அடிப்படை வசதிகளோ அல்லது உயிருக்கு உத்திரவாதமோ கிட்டும் என்று நிச்சயமாய் கூற முடியாது...கூடுதலாக வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்ட ஒன்று இருக்காது...சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளின் நிலையையே அங்கே எதிர் பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட வேலைக்குத் தான் ஆங்கிலேயர்கள் ஆட்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இலங்கையில் மலைத் தோட்டங்களில் வேலைக்கு வர யாரும் தயாராகவில்லை. எனவே ஆங்கிலேயர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்...!!!

அவர்களுக்குத் தேவை கடினமான வேலைகளைச் செய்ய ஆட்கள்...அந்த ஆட்கள் வசதியையும் எதிர்ப்பார்க்க கூடாது...சம்பளத்தையும் அதிகமாக எதிர்ப்பார்க்க கூடாது...கம்மியான சம்பளத்தில் அதிகமான வேலையை முடித்து அதிகமான இலாபத்தினை தரும் வேலையாட்களையே (அடிமைகளையே) அவர்கள் தேடினர் (இன்றும் கூட குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய ஆட்களை அவர்கள் உலகம் முழுவதும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றனர்...பணிகள் வேறு...ஆனால் அர்த்தம் ஒன்று தான்).

பொதுவாக அம்மாதிரியான பணிகளுக்கு ஆப்பிரிக்க தேசத்தில் இருந்தே ஆட்களைப் பிடிப்பது வழக்கம்...ஆனால் ஆப்பிரிக்க தேசத்து மக்கள் பலரையும் அமெரிக்க மண்ணில் அடிமையாக வேலைப் பார்க்க ஏற்கனவே கொண்டு சென்று விட்டாயிற்று... மேலும் ஆபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு ஆட்களைக் கொண்டு வருவது வீண் அலைச்சலைக் கொண்ட ஒரு விடயம்...எனவே வேறு மாற்று வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றே அவர்கள் நோக்கும் பொழுது தான் இந்தியாவில் உள்ள தமிழகத்து மக்கள் அவர்களின் கண்களில் படுகின்றனர்.

கி.பி 19 ஆம் நூற்றாண்டு சாதி வெறி உச்சத்தில் இருந்த ஒரு காலக்கட்டம்...பல மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களாய்...தீண்டத்தகாதவர்களாய்...இருந்துக் கொண்டிருந்த ஒரு காலக் கட்டம். பிழைப்பிற்காக எந்த வேலையை வேண்டும் என்றாலும் செய்வதற்கு பல மக்கள் தயாராக இருந்தனர். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் ஒரு வேலை...அவர்களின் குடும்பத்தினை அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ள உதவும் வண்ணம் ஒரு வாய்ப்பு. அவ்வளவே.

வேலையை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் பலர் இருக்கின்றனர்...அதுவும் இலங்கைக்கு மிக அருகிலேயே...போதாதா ஆங்கிலேயர்களுக்கு..."உனக்கு வேலை தானே வேண்டும்...இதோ வேலை...உடனே கிளம்பு...குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு கிளம்புகின்றாயா...மிக்க நல்லது...அங்கே அனைவருக்கும் வேலை உண்டு...கிளம்பு...விரைவாகக் கிளம்பு" என்றவாறே இந்தியாவில் இருந்து பல தமிழர்களை இலங்கைக்கு அழைத்துக் கொண்டு செல்கின்றனர். தமிழர்களும் வேலைக்காக அடிமைகள் போல மிகவும் மோசமான சூழ்நிலையில் இலங்கைக்குள் நுழைகின்றனர்.

இவ்வாறு தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து அழைத்துக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் தான் இன்று மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தான் பிழைப்பிற்காக இலங்கைக்கு சென்றவர்கள். அவ்வாறு பிழைப்பிற்காக சென்ற தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே 1940 களில் சுமார் 10 இலட்சம் வரை உயர்ந்து இருந்தது(இவர்களின் கதையும் ஒரு கண்ணீர் கதை தான்...அதனைப் பற்றி இன்னும் கற்க வேண்டி இருக்கின்றது...நேரம் கிட்டினால் நிச்சயமாக இவர்களைப் பற்றிப் பின்னர் காணலாம்).

இவர்கள் வேறு...இலங்கையின் தொடக்கத்தில் இருந்தே அங்கே இருந்துக் கொண்டு இருக்கும் தமிழர்கள் வேறு. இந்த வேறுபாட்டினை அறியாது தான் அனைத்துத் தமிழர்களுமே இந்தியாவில் இருந்து அங்கே பிழைக்கப் போனவர்கள் என்ற எண்ணம் இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது. சரி இருக்கட்டும்...!!!

இப்பொழுது இலங்கையில் மூன்று வித மக்கள் இருக்கின்றனர்... சிங்களவர், இலங்கையில் இருந்த ஆதித் தமிழர் (ஈழத் தமிழர் என்றே இவர்களை நாம் இனி அழைப்போம்) மற்றும் தமிழகத்தில் இருந்துச் சென்ற தமிழர்கள் (இவர்களை மலையகத் தமிழர்கள் என்றே நாம் இனி அழைப்போம்). ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இருக்கின்றனர். காலங்கள் மெதுவாக கடக்க பக்கத்து தேசமான இந்தியாவில் 'வேண்டும் சுதந்திரம்' என்ற முழக்கங்கள் கேட்கத் தொடங்குகின்றன...அது போதாது...இலங்கையிலும் சுதந்திரத்திற்கான குரல்கள் எழும்புகின்றன...!!!

விடிந்து இருக்கின்றது 20 ஆம் நூற்றாண்டு...!!!

தொடரும்...!!!

1 கருத்துகள்:

அருமையான பதிவு தொடருங்கள் ...வாழ்த்துக்கள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு