வேண்டும் சுதந்திரம்...!!!

20 ஆம் நூற்றாண்டில் அதிகமாக கேட்கப்பட்ட ஒரு முழக்கம் இதுவாகத்தான் இருந்து இருக்கக் கூடும். காரணம் எளிது தான்... அன்றைய காலக்கட்டத்தில் சுதந்திரமாக இருந்த தேசங்களை விட அடிமையாக இருந்த தேசங்களின் எண்ணிக்கையே அதிகம் ஆகும். வலிமைப் பொருந்திய நாடுகள் சில அவைகளின் சுய இலாபத்திற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளையும் அதன் மக்கள்களையும் அடிமைப்படுத்தி வைத்து இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்த வரை அவைகள் ஆளப் பிறந்த நாடுகள்...மற்ற நாடுகளோ அடிமைகளாக இருக்கவே படைக்கப்பட்ட நாடுகள்...அவ்வளவே!!!

ஆனால் புதிதாய் எழுந்திருந்த 20 ஆம் நூற்றாண்டு அவர்களின் அந்த எண்ணத்தைச் சற்று சோதிக்கத் தான் செய்தது. காரணம் அடிமையாய் இருந்த நாடுகள் அனைத்திலும் சுதந்திரத்திற்கான குரல்கள் பலமாய் ஒலிக்கத் தொடங்கி இருந்தன...கூடவே போராட்டங்களும் தான். ஆயுதங்களைக் கொண்டு போராடினால் சரி இராணுவத்தினை அனுப்பி ஒரு கை பார்த்து விடலாம்...ஆனால் சிலர் அமைதியாகவும் போராடுகின்றார்களே... இவர்களை என்ன செய்வது...என்று ஏகாதிபத்திய அரசுகள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் வேளையிலேயே உலகப் போர்களும் வெடிக்கின்றன.

உலகை முழுவதும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தினை வைத்துக் கொண்டு தனது வாசல் வரை வந்து நிற்கும் போரினை எவ்வாறு கவனிக்காமல் விட முடியும்...முடியாது தானே. உலகையே ஆளும் கனவினைக் கொண்ட தேசங்கள் உலகப் போர்களிலும் கலந்துக் கொள்கின்றன.

அந்நிலையில் தான் அந்த அரசுகள் சிந்திக்க ஆரம்பிக்கின்றன 'ஏற்கனவே நாம் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் தேசங்களில் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்...அது போதாதென்று இப்பொழுது இந்தப் போர்கள் வேறு...எத்தனையைத் தான் நாம் சமாளிப்பது. முதலில் நாம் நம்முடைய தேசத்தினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...அது தான் முக்கியம். நம்முடைய அடிமை நாடுகளில் இருந்து நமக்கு வேண்டியது அவற்றின் வளங்கள் தானே...அவற்றை எவ்வாறு எடுப்பது என்று சிந்தித்தால் வேறு நல்ல வழிமுறை கிட்டாமலா போய்விடும்...நிச்சயமாய் கிட்டும். எனவே முதலில் நாம் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் நாடுகளின் பிரச்சனைகளைக் காண்போம்..முடிந்தால் விடுதலையும் கொடுத்து விடுவோம்...என்ன கெட்டு விடும்.'

உலகையே பங்குப்போட்டுக் கொண்டு இருந்த அரசுகளின் சிந்தனை இவ்வாறு மாறியது, அடிமையாய் இருந்த நாடுகளின் சுதந்திர போராட்டத்தினை மேலும் தீவிரமாக்கியது. இந்தியாவிலும் அப்போராட்டம் தீவிரமாகியது...அதனைப் பார்த்து இலங்கையிலும் அப்போராட்டம் தீவிரமாகியது. ஆங்கிலேயர்கள் அத்தேசங்களை என்ன செய்வது என்று யோசித்து பல திட்டங்களை முன் வைக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் முன்வைத்த திட்டத்தில் முக்கியமானதொரு திட்டம் சனநாயக முறையில் தேர்தல் திட்டம். நீங்கள் மக்களை ஆள வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா...நல்லது. மக்கள் உங்களை வாக்களித்து தேர்வு செய்தால் அவ்வண்ணமே செய்யுங்கள். இந்தத் திட்ட முறையை முன்வைத்து இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையையும் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். அதனுடனேயே 100 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையிலேயே தங்கி அங்கேயே தோட்டங்களில் பணியாற்றி வந்த மலையகத் தமிழர்களுக்கும் இலங்கையின் குடியுரிமையை வழங்கி அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையினை வழங்கினர். இது நடக்கும் ஆண்டு 1931.

நல்ல விடயங்கள் தானே. அனைவரும் வாக்களிக்கலாம். அவர்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம்...கூடுதலாக தாங்கள் அடைந்த இன்னல்களுக்கு பதிலாய் அந்நாட்டின் குடியுரிமையை மலையகத் தமிழர்களும் பெற்று இருக்கின்றனர். எல்லாம் நல்ல விதமாகத் தானே அமைந்து இருக்கின்றன. ஆனால் இந்நிலையில் தான் பல பிரச்சனைகள் எழத் தொடங்குகின்றன.

'என்ன தான் இருந்தாலும் இந்தியாவில் இருந்து இங்கே வேலைப் புரிய வந்தத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இருக்கக் கூடாது...' இது சிங்களத் தரப்பு வாதம். தமிழர்களுக்கோ பிரச்சனை வேறு வடிவில் இருந்தது. ஆங்கிலேயர்கள் பிரதேசவாரியான பிரதிநிதித்துவத்தினை முன் மொழிந்திருந்தனர். இது இலங்கையில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்களின் உரிமைக்கு மிகப் பெரிய கேள்வியாக அமைந்தது. அது எவ்வாறு என்பதற்கு முன் பிரதேசவாரியான பிரதிநிதித்துவம், இனவாரியான பிரதிநிதித்துவம் என்றால் என்ன என்று நாம் சற்றுக் கண்டு விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

உதாரணமாக நாம் இந்தியாவினையே எடுத்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதும் ஒரே இன மக்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர் என்றும் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்தியாவினை பல்வேறுப் பிரதேசமாக நிர்வாகத்திற்காக பிரித்து, இந்த இந்த பிரதேசங்களுக்கு இத்தனை நிர்வாகிகள் என்று அளவிட்டு அதற்கேற்றார்ப் போல் சட்டமன்றத்தில் இடங்களை ஒதுக்குவது என்பது பிரதேசவாரியான பிரதிநிதித்துவம். அந்தந்த நிர்வாகிகளும் அவர்களுடைய பிரதேசங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பர்.

இப்பொழுது அதே இந்தியாவினை வைத்துக் கொள்ளலாம்...ஆனால் அங்கே இரு வேறான இன மக்கள் வாழ்ந்துக் கொண்டு வருகின்றனர். அவர்களுள் ஒரு இன மக்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகம்...அதாவது பெருன்பான்மையினர். மற்றொரு இன மக்களோ சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் பிரதேசவாரியாக மக்களுக்கான சட்டசபைப் பிரதிநிதிகளைத் தேர்வுச் செய்தால், சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு உரிய அளவு பிரதிநிதிகள் கிடைக்கப்பட மாட்டார்கள். அந்நிலையில் பிரதேசங்களின் வாரியாக பிரதிநிதிகளைத் தேர்வு செய்யாது இனங்களின் அடிப்படையில் தேர்வு செய்வது என்பது ஒரு தீர்வாக அமையும். அதாவது, இரு இனங்களுக்கும் சரி சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இது தான் இனவாரியான பிரதிநிதித்துவம். சரி இப்பொழுது நாம் இலங்கைக்கே திரும்பிச் செல்வோம்.

இலங்கையில் ஆங்கிலேயர்கள் பிரதேசவாரியான பிரதிநிதித்துவத்தினை முன் மொழிந்து இருந்தனர். அதைத் தான் தமிழர்கள் எதிர்த்துக் கொண்டு இருந்தனர்.

"ஐயா...நீங்கள் பிரதேசவாரியாக பிரதிநிதித்துவத்தினை கொண்டு வரப் பார்க்கின்றீர்...ஆனால் அது தமிழர்களுக்கு நியாயம் செய்வதாக அமையாது. உங்களுடைய தேசத்தில் உங்கள் இன மக்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆகையால் நீங்கள் உங்கள் தேசத்தினை பிரதேசங்களாகப் பிரித்துக் கொண்டு நிர்வாகிகளைத் தேர்வு செய்யலாம். ஆனால் இங்கே நிலைமை அவ்வாறு இல்லை...இங்கே பல இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துக் கொண்டு வருகின்றோம்...சிங்களவர்கள் இருக்கின்றனர்...தமிழர்கள் இருக்கின்றோம்...இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும் இருக்கின்றனர்...இசுலாமியர்கள் இருக்கின்றனர்...எனவே உங்களின் இந்த முறை இங்கே சரியானதொன்றாக அமையாது..."

"ஏன் அவ்வாறு சொல்லுகின்றீர்கள்...ஏன் சரியானதொன்றாக அமையாது போகும்?"

"இங்கே சிங்களவர்கள் தாம் பெரும்பான்மையினர்...75% மக்கள் தொகை அவர்களுடையது தான்...மீதம் உள்ள 25 சதவீதத்தினில் தான் மற்ற இன மக்கள் அனைவரும் அடங்கி இருக்கின்றோம். இந்நிலையில் பிரதேசவாரியான நிர்வாகிகள் என்றால் நிச்சயம் அது சிங்களர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு ஆட்சியிலேயே சென்று முடியும். மற்ற இன மக்கள் என்றுமே பெரும்பான்மையினைப் பிடிக்க முடியாது. இது எவ்வாறு சனநாயகம் ஆகும். எனவே தாங்கள் வேறு யோசனை செய்வது நன்றாக இருக்கும்."

"சரி...நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றுக் கூறுகின்றீர்?"

"இனங்களின் அடிப்படையில் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் முறையினை அறிமுகப்படுத்துங்கள்... 100 இடங்கள் இருக்கின்றன என்றால் சிங்களவர்கள் 50 இடங்களை வைத்துக் கொள்ளட்டும்...மீதம் உள்ள இனங்கள் மீதம் உள்ள 50 இடங்களை பங்கிட்டுக் கொள்கின்றோம்..இவ்வண்ணம் நடுநிலைப் பொருந்திய சட்டசபை இங்கே உருவாகும்...அனைத்து இன மக்களுக்கும் உரிய குரல்களும் கேட்கும். என்ன சொல்லுகின்றீர்?"

தமிழர்களின் இக்கேள்விக்கு மறுப்பினையே பதிலாக தந்தது ஆங்கில அரசாங்கம். அவர்களுக்கு இந்த 50-50 என்ற அமைப்பு சரியானதொன்றாகப் படவில்லை...மேலும் வேறு சில தமிழ் அமைப்புகளும் சரி சிறுபான்மையான இனங்களும் சரி இந்த 50-50 என்ற ஏற்பாட்டினை எதிர்கவே செய்தன. நிலைமை அப்படி இருக்க இனவாரியான பிரதிநிதித்துவம் என்ற ஒன்று வெறும் பேச்சாகவே இலங்கையில் மறைந்து விட்டது.

மேலும் கண்டியினைச் சார்ந்த சிங்களவர்கள் சிலர் வேறொரு முறையினைக் கூறினார்கள்... "நாம் இலங்கையை மூன்று நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கலாம்... கண்டிப் பகுதியை சிங்களவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். வடக்கையும் கிழக்கையும் தமிழர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...தெற்குப் பகுதியை தென் சிங்களவர்கள் என்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...என்ன சொல்லுகின்றீர்" என்றார்கள்.

ஆனால் இதற்கும் பல அமைப்புகளும் (தமிழ் அமைப்புகள் உட்பட) எதிர்ப்புத் தெரிவித்தன. 'நாம் தான் ஒன்றாகி விட்டோமே, இனியும் எதற்காக வெவ்வேறு நிர்வாக முறைகள்...நமக்குத் தேவை புரிதலும் நிர்வாகத்தில் சரிசமமான உரிமையும் தான்..வேறு எதுவும் தேவை இல்லை'...இவ்வாறே கண்டியில் இருந்தவர்களின் யோசனையும் குப்பைத் தொட்டிக்கு சென்றது.இந்த ஒரு விடயம் நம்மில் பலருக்கும் நிச்சயம் ஒரு குழப்பத்தினை உண்டு பண்ணி இருக்கக் கூடும்..."தனியான நிர்வாகம் தருகின்றேன் என்றுக் கூறியப் பொழுதும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை...மேலும் தனி நாட்டினையும் அவர்கள் கோரவில்லை...ஏன் அப்படி"...இதற்கு விடையைக் காண வேண்டும் என்றால் நாம் அக்காலத்தில் நிலவிய சூழலைச் சற்றுப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது.


இன்றைக்கு இருப்பதனைப் போன்று அன்று சிங்களவர்கள்/தமிழர்களின் இடையில் பெரிய பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை...பிரச்சனைகளை அவர்கள் எதிர் பார்த்து இருந்தாலும் அனைத்தையும் பேசி முடித்துக் கொள்ள முடியும் என்றே அவர்கள் கருதி இருக்கலாம்...மேலும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களும் சரி சிங்களவர்களும் இணைந்தே பணியாற்றி இருந்தனர். மேலும் கொழும்புத் தொகுதியினை தமிழர்களே வைத்துக் கொள்ளட்டும் என்ற ஒப்பந்தத்திலும் சிங்களவர்கள் கையெழுத்து இட்டு இருந்தனர்...கூடவே சிங்களத்திற்கு இருக்கும் அதே அங்கீகாரம் தமிழுக்கும் இருக்கும் என்ற உறுதிமொழி வேறு...இவை அனைத்தும் சேர்த்து 'எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...ஆரம்பத்தில் சிறிதுக் கடினமாகத் தான் இருக்கும்...போகப் போகச் சரியாகி விடும் என்ற எண்ணத்தினையே தமிழர்களுள் வளர்த்து இருந்தது.

சில தமிழர்கள் எச்சரிக்கை குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தாலும்...சுதந்திரம் தந்த உத்வேகம் அவர்களின் குரல்களை சட்டை செய்ய விடவில்லை.

அனைத்தும் ஆங்கிலேயர்களின் பார்வைக்கு சரியாகப் பட 1948 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் நான்காம் நாள் இலங்கைக்கு சுதந்திரம் அளித்து விட்டு கிளம்புகின்றனர் ஆங்கிலேயர்கள்.

இலங்கையின் முதல் பிரதம மந்திரியானார் சேனநாயகே. அவருக்கு தமிழ் காங்கிரஸ் ஆதரவு தருகின்றது. பிரதமரான உடன் சேனநாயகே எடுக்கும் முடிவுகளில் முக்கியமான முடிவு...."1931 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களுக்கு இலங்கையின் குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தது. இன்று முதல் அக்குடியுரிமை இரத்து செய்யப்படுகின்றது. நன்றிகள்."

ஒரேத் தீர்மானம் தான். 10 இலட்சம் தமிழர்கள் அங்கே அகதிகளாயினர். குடியுரிமை இல்லாவிட்டால் வாக்குரிமை ஏது? தமிழர்களின் வழு ஒரேத் தீர்மானத்தால் குறைக்கப்பட்டது.

"அநியாயம்...இது தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக ஆக்கும் ஒரு முயற்சியே...இன்று இந்தியத் தமிழர்களுக்கு நிகழும் இச்செயல் நாளை நமக்கும் நடக்காது என்று என்ன நிச்சயம்...தமிழர்களே ஒன்றுப்படுங்கள்..." என்று தன்னால் இயன்ற அளவு குரல் எழுப்பினார் தந்தை செல்வா (இவர் காந்திய வழியில் போராடிய ஒரு முக்கியமான ஈழத் தமிழர்)

ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழ் காங்கிரசில் இருந்த பலர் அத்தீர்மானத்தை ஆதரித்தார்கள். தந்தை செல்வாவின் எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர். தந்தை செல்வா பார்த்தார். அதிகார மோகம் பலருக்குள்ளும் படர்ந்து இருக்கின்றது. இது சரியல்ல. நமக்குத் தேவை போராட ஒரு இயக்கம்...வெறும் பதவி அல்ல. நீங்கள் குரல் எழுப்ப மாட்டீர்களா...நல்லது. நான் வருகின்றேன்.

தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறினார் தந்தை செல்வா. தமிழ் காங்கிரசு இரண்டாக உடைந்தது.

மலையகத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்காது விட்டது வரலாற்றில் ஈழத் தமிழர்கள் செய்த முதல் மிகப் பெரிய தவறாக நிலைத்து விட்டது.


தொடரும்...!!!

சில குறிப்புகள்:

1) தமிழர்களிடையே ஒற்றுமைகள் இல்லாதிருந்தது என்று நாம் கண்டோம்...அதில் கொள்கைகள் ஒரு காரணமாக இருந்தாலும் சாதி வேறுபாடுகள் முக்கியமானதொரு காரணமாக இருந்தன (அன்று சாதி வெறி உச்சத்தில் இருந்தது என்று நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை).

2) மேலே உள்ள விடயங்களில் உங்களுக்குச் சந்தேகங்களோ/மாற்றுக் கருத்துக்களோ இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது மிக்க பயனாக இருக்கும்.

2 கருத்துகள்:

ஒரு நல்ல பதிவு... இதை அதரங்களுடன் கூறினால் மிகவும் நல்ல இருக்கும்....

Soulbury commission - which rejected the 50% representation for minorities in sri lanka

http://en.wikipedia.org/wiki/Soulbury_Commission

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு