பண்டாரநாயகா இறந்து விட்டார்...அவருடன் இட்டுக் கொண்ட ஒப்பந்தமும் செயல்படுத்தப்படவில்லை... இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் என்னவாகும் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அடுத்த தேர்தலில் வென்று இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகின்றார் பண்டாரநாயகாவின் மனைவியார் திருமதி. சீறிமாவோ பண்டாரநாயகா.

ஆனால் இவருடையக் கொள்கையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை... "சிங்களமே ஆட்சி மொழி...உத்தியோக மொழி...நீதி மன்ற மொழி...இதில் மாற்றமே இல்லை... சிங்களம் தெரியாத பணியாளர்கள் சிங்களம் கற்றுக் கொள்ள வேண்டும்...இல்லையேல் வேலை இழக்க நேரிடும்...அனைத்துப் பள்ளிகளிலும் சிங்களமே போதனை மொழியாக இருக்கும்...சிங்கள மொழியில் தேர்ச்சி பெறத் தவறினால் ஆசிரியர்களுக்கும் சரி மற்ற பணியாளர்களுக்கும் சரி வேலை இல்லாத நிலை உருவாகிவிடும்...நன்றி". இதுவே தான் அவரது கொள்கையாக இருந்தது.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இலங்கையில் தமிழுக்கு இடம் இல்லை... நீ இங்கே இருக்க வேண்டுமானால் சிங்களவனாக மாறி விடு...வேறு வழிகள் உனக்குக் கிடையாது. அவ்வளவே...!!!

"பார்த்தீர்களா ஐயா...நம்மை இரண்டாம் தர குடிமக்களாகவே அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது...ஏற்கனவே 1958 இல் அவர்கள் அடித்தப் பொழுது பொறுத்துக் கொண்டோம்...ஆனால் அவர்கள் மாறியபடி தெரியவில்லை...இப்படியே போனால் நாம் என்ன ஆவது தந்தையே...நாம் இருவரும் தனி நாடுகளாக இருந்தவர்கள் தானே...தனியாகப் பிரிந்து விடலாமே...என்ன சொல்லுகின்றீர்?" என்று இளைஞர்களின் மத்தியில் புதிதாக எழுந்த சிந்தனையை தந்தை செல்வா பொறுமையாகப் பார்த்தார்.

"இல்லை இளைஞர்களே..உங்களின் உணர்ச்சிகள் எனக்குப் புரிகின்றன...ஆனால் நாம் தனி நாடு கோர வேண்டிய அளவிற்கு பிரச்சனைகள் மோசமாகவில்லை என்றே நான் எண்ணுகின்றேன்... பேசிப் பார்ப்போம்...நிச்சயம் உண்மை வெல்லும்..." என்றார்.

சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் 'தந்தை செல்வாவே கூறி விட்டார்... இன்னும் சில நாட்களுக்கு பொறுமையாகத் தான் இருப்போமே...நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்க இருக்கவே இருக்கின்றது சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போராட்டங்கள்' என்றே அகிம்சை வழியில் போராடத் தொடங்கினர்.

ஆனால் முடிவு தான் அவர்களுக்குக் கிட்டியப்பாடில்லை. அரசு வன்முறையால் அவர்களை அடைக்க முயலும்...வன்முறை கை கொடுக்கவில்லையென்றால் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்...வாக்குறுதிகளையும் அள்ளி வீசும். ஆனால் அந்த வாக்குறுதிகளோ வெறும் வார்த்தையாகவே நின்றுப் போகும்.

இந்த நிலை தான் யார் ஆட்சிக்கு வந்தாலும். சிங்களவர்கள் பெருவாரியாக இருக்கும் நாட்டினில் அவர்கள் தானே ஆட்சிக்கு வர முடியும்...அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சில நேரங்களில் தமிழர்களின் உதவி தேவைப்படும்...அப்பொழுது தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று வாக்கினைக் கொடுத்து விட்டு ஆட்சியினைப் பிடித்தப் பின்பு அவ்வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது என்பது அனைத்து சிங்கள கட்சிகளும் செய்யும் ஒரு பொதுவான செயலாக மாறிற்று.

சில நபர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு சிங்கள மக்கள், பத்திரிக்கைகள், எதிர் கட்சியினர் ஆகியோரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தமையின் காரணமாக அவர்களின் எண்ணம் வெறும் எண்ணமாகவே போயிற்று.

இவ்வாறே ஆண்டுகள் பல கடந்தன...தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள அரசு நிச்சயம் வழங்காது என்ற எண்ணங்கள் தமிழர்களின் மத்தியில் நன்றாக பதியத் தொடங்கி இருந்தன.

தோல்வி அடைந்த பேச்சுவார்த்தைகள்...கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தங்கள்...ஏமாற்றங்கள் இவைகளை மட்டும் தான் தமிழர்களின் போராட்டங்கள் பெற்றுத் தந்துக் கொண்டு இருந்தன... புதிதாக தமிழர்களின் மரணங்களும் அங்கங்கே ஏற்படலாயின. 1948 இல் ஆரம்பித்த போராட்டங்கள் 1971 வரை இவைகளை மட்டுமே தமிழர்களுக்குத் தந்து இருந்தன.

23 வருடங்கள் தமிழர்களின் பொறுமையினை சற்று சோதித்துத் தான் பார்த்து இருந்தன. அது போதாதென்று கல்வியினை சீர்திருத்தும் திட்டம் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் தமிழ் மாணவர்களை கொந்தளிக்கச் செய்து இருந்தது.

'தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் நேர்மையாக மதிப்பெண்கள் வழங்குவது இல்லை...அவர்களுக்கு குறுக்கு வழியில் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றனர்...அதனால் இனிமேல் தமிழ் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மறுபரிசீலனைப் பண்ணப்படும்...கூடுதலாக நேர்மையாக தேர்வினை எழுதும் சிங்கள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.' இது தான் சுருக்கமாக அந்தக் கல்விச் சீர்திருத்தத் திட்டம். இதன் மூலம் சிங்கள மாணவனை விட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ் மாணவன் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை உருவானது.

மாணவர்கள் கொதித்தார்கள்...போராட்டத்தில் இறங்கினார்கள்...அவர்களின் போராட்டங்கள் காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டன...பலர் கைது செய்யப்பட்டனர்...சிலர் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர்...சிலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாது மறைந்தனர். சிங்கள அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் இளைஞர்களை வேறு விதமான போராட்டத்திற்கு தயார் செய்துக் கொண்டு இருந்தன.

அந்தக் காலக்கட்டத்தில் தந்தை செல்வாவும் இனியும் பேச்சு வார்த்தைகள் பலன் தருமா? என்ற எண்ணத்தினில் இருந்துக் கொண்டு இருந்தார். அவரின் கட்சிக்குள்ளே 'தனி நாடு தான் தீர்வு தந்தையே...' என்ற குரல்கள் பலமாகக் கேட்கத் தொடங்கி இருந்தன. 'தனி நாடு கேட்பதற்கு காலம் கனியவில்லை என்று முன்னர் கூறியவர்களும் இப்பொழுது வேறு வழி இல்லாதவர்களாக தனி நாடு கோரலாமா என்ற எண்ணத்தில் இருந்தனர்.

தந்தை செல்வா அரசுக்கு கடிதம் எழுதினார்...'அரசே...தமிழர்களின் உரிமைகளும் அவர்களது மண்ணும் இங்கே பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகின்றோம்...நாம் சுதந்திரம் பெற்ற பொழுது எந்த கொள்கையுடன் இருந்தோமோ அதற்கு நீங்கள் மதிப்பளிப்பீர் என்றே கருதி உங்களின் பதிலினை ஆர்வத்துடன் எதிர் பார்கின்றேன்...நன்றிகள்'

பதில் வரவில்லை...ஏன் கடிதம் கிட்டியது என்ற செய்தியே வரவில்லை.

"தந்தை செல்வாவின் வழிமுறைகள் அருமையானவை தான்... ஆனால் சிங்களவர்களின் முன்னே அவை அர்த்தமற்று நிற்கின்றன...நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்...கடிதத்திற்கு பதில் இல்லையா...சரி...துப்பாக்கிச் சத்தத்திற்கு பதில் வருகின்றதா என்று பார்ப்போம்" என்று சில இளைஞர்கள் கூட்டம் களம் இறங்கத் தொடங்கியதும் அப்பொழுது தான்.

அவ்வாறு களம் இறங்கியவர்களுள் ஒருவன் தான் மாவீரன் பிரபாகரன்.

நிற்க...!!!

ஈழத்தின் வரலாற்றினைப் பற்றி இவ்வளவு தூரம் கண்டாயிற்று...25 வருட அமைதியானப் போராட்டங்கள் எவ்வித தீர்வினையும் தமிழர்களுக்கு வழங்க வில்லை. இந்நிலையில் நீங்கள் அக்காலத்தில் இருந்தீர்கள் என்றால் உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...?

ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக எந்நேரமும் பயத்துடன் வாழ்வீர்களா...அல்லது 'எங்கள் நாடு எங்களுக்கே' என்றுக் கோருவீர்களா?

உங்களின் நடவடிக்கை சிந்தனை எவ்வாறு இருக்கும்?

'எங்களின் நாடு எங்களுக்கே...உரிமைகளை இழந்து வாழ நாங்கள் அடிமைகள் அல்ல...எங்களின் உரிமைகளை நீ மறுக்கின்றாயா? நல்லது அதை நாங்களே எடுத்துக் கொள்கின்றோம்...!!!' என்பதே உங்களின் சிந்தனையாக இருக்கும் என்றால் உங்களின் சிந்தனை தான் அன்றைய ஈழத் தமிழ் இளைஞர்களின் சிந்தனை.

அதுவே தான் பிரபாகரனின் சிந்தனை!!!

தேவை தனி ஈழம்... இனியும் சிங்களவனிடம் இருந்து எந்தப் பிச்சையும் தேவை இல்லை.

மோதிப் பார்பதற்கு நாங்கள் தயார் என்றே தமிழ் இளைஞர்கள் களம் இறங்க ஆரம்பித்தனர்.

தொடரும்...!!!

சில குறிப்புகள்:

1) தனி ஈழம் என்றக் கோரிக்கைகள் எழும் என்று 'சிங்களம் மட்டுமே' என்றச்  சட்டத்தினை பண்டாரநாயகா என்று கூறினாரோ அன்றே பல சிங்களத் தலைவர்கள் கூறி இருந்தனர். சம சமாச கட்சித் தலைவரான டாக்டர். கொலவின் ஆர்.டி. சில்வா 'இரு மொழிகளென்றால் ஒரு தேசம் உருவாகும்...ஒரு மொழி என்றால் இரு தேசங்கள் உருவாகும்' என்றே முன்னர் கூறி இருந்தார்.

2) தந்தை செல்வா முதல் முறையாக தனி நாடுக் கோரிக்கையினை 1973 ஆம் ஆண்டில் தான் முன் வைக்கத் தொடங்குகின்றார்...25 ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முயற்சிகள் செய்த அவர் இறுதியில் சிங்களர்களிடம் தமக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்தப் பின்னரே தனி நாடுக் கோரிக்கையினை முன் வைக்கின்றார்.

3) சுதந்திர இலங்கையின் முதல் தேசியக் கொடி முழுக்க முழுக்க சிங்களர்களைக் குறிப்பதாக இருந்தது...பின்னர் 1951இல் தான் அதில் தமிழர்களைக் குறிக்க சிகப்புக் கோடும் இசுலாமியர்களைக் குறிக்க பச்சைக் கோடும் சேர்க்கப்பட்டன.

4) 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

ஒரு வேண்டுகோள்:

நண்பர்களே இப்பொழுது நீங்கள் ஈழத்தின் வரலாற்றையும் 'தனி ஈழம்' என்ற கோரிக்கை எழுந்த வரலாற்றினையும் அறிந்து இருப்பீர்.

தனி ஈழம் என்ற கோரிக்கை நியாயமானதான ஒன்றாக நீங்கள் உணருகின்றீர்களா?

அவ்வாறு உணர்ந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய தகவல்களையும் உண்மையினையும் நம்மால் இயன்ற அளவுப் பரப்புங்கள்... போராடுபவர்களுக்கு இயன்ற வண்ணம் உதவியையும் ஆதரவினையும் வழங்குங்கள்...போராடுங்கள்....மடிந்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு ஒரு வாழ்வளிக்க நம்மால் இயன்றதெல்லாம் செய்யலாம்...அல்லது அதனைப் பற்றிய விழிப்புணர்வினையாவது பரப்பலாம்.

யாராவது..."அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்"   என்றுக் கூறினால் அவரின் கூற்றில் உள்ளப் பிழை நமக்கு இன்று தெரியும் தானே...அவரின் அறியாமையை விலக்குவோம்.

இல்லை தனி ஈழக் கோரிக்கை சரியானதொன்று இல்லை என்று நீங்கள் கூறினால் ஏன் அவ்வாறுக் கூறுகின்றீர்கள் என்றும் கூறுங்கள்...உங்களின் கருத்துக்களை நாங்கள் அறிந்துக் கொள்ள அது மிக்க உதவியாக இருக்கும்.

நன்றி...!!!

1 கருத்துகள்:

அமைதி போராடட்டமும் வெற்றி பெறவில்லை ஆயுதபோராட்டமும் வெற்றியை தரவில்லை ஈழத்தமிழனுக்கு என்று தான் விடிவுகாலம் வருமோ என்று உலகத்தமிழர்கள் கவலைப்படத்தான் முடிகிறது

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு