அடிமையாய் இருக்கும் ஒருவனுக்கு சுதந்திரத்தினைப் போல் கனவுகளைத் தரக் கூடிய விடயங்கள் வேறெதுவும் கிடையாது. சுதந்திரம் என்றச் சொல் அவனுள் நம்பிக்கையினை விதைக்கின்றது...அந்த நம்பிக்கையினைக் கொண்டே அவனும் ஆவலாய் சுதந்திரத்தினை எதிர்பார்த்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கின்றான். அவனைப் பொறுத்தவரை சுதந்திரம் அவனுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வினைக் கொண்டு வந்து விடும்.

ஆனால் உண்மையோ பல நேரங்களில் வேறாக இருக்கின்றது...தீர்வினைத் தரும் என்று நம்பியச் சுதந்திரங்கள் பல நேரங்களில் வேறு பல பிரச்சனைகளுக்கே அடித்தளம் அமைத்து விட்டுச் சென்று இருக்கின்றன. இலங்கையிலும் அதே வரலாறு தான் நிகழ்ந்து இருக்கின்றது.

தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி சுதந்திரத்தினை மிகவும் ஆர்வமாகத் தான் எதிர்பார்த்தனர்...அதற்காக ஒன்றாகத் தான் போராடவும் செய்தனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அவ்வளவே...மற்ற பிரச்சனைகளை எல்லாம் பின்னர் அவர்களாகப் பார்த்துக் கொள்ள முடியாதா என்ன என்ற எண்ணமே அவர்களுள் மேலோங்கி இருந்தது.

அந்த எண்ணம் எவ்வளவு தவறான ஒன்றாக அமையும் என்பதனை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. சரி இப்பொழுது வரலாற்றுக்குள் வருவோம்.

இலங்கை சுதந்திரம் அடைந்து விட்டது. அதன் முதல் பிரதம மந்திரியானார் சேனநாயகே. பிரச்சனைகள் அன்றில் இருந்தே தொடங்க ஆரம்பிக்கின்றன.

1) மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிக்கப்படுகின்றது.
2) தமிழர்களின் இடங்களில் நிலச் சீரமைப்புத் திட்டங்கள் என்றுக் கூறி சிங்களவர்கள் குடி ஏற்றப்படுகின்றனர்.

தமிழர்களின் சார்பாக தந்தை செல்வா மேலே உள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றார். "சேனநாயகேவிற்கு எங்களது வணக்கங்கள்...உங்களுடைய நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் சில கசப்பு உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் எங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக எண்ணுகின்றோம்...அதுவும் குறிப்பாக தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது என்பது நம் இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து வாழும் சூழலை நிச்சயமாக கெடுக்கும் ஒரு செயலாகவே அமையும்...இதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் நடவடிக்கைகள் எடுப்பீர் என்றே நம்புகின்றோம்...நன்றிகள்!!!"

"ஆ...செல்வா...!!! தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத செயல்களை என்னுடைய அரசாங்கம் ஒரு பொழுதும் செய்யாது...கவலையினை விடுங்கள்...தக்க நேரத்தில் அனைத்தும் சரியாக்கப் படும்...!!!"...சேனநாயகேவிடம் இருந்து பதில் விரைவாக வந்தது. பதில் மட்டுமே வந்தது. ஆனால் வருடங்கள் ஓடியும் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும் சரி மலையகத் தமிழர்களின் பறிக்கப்பட்ட குடியுரிமைகளும் சரி நிகழ்ந்தவை நிகழ்ந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில் ஒரு விபத்தில் சேனநாயகே காலமாக...அரசியல் என்றால் என்ன என்று இலங்கை அறிய ஆரம்பிக்கின்றது. சில கட்சிகள் உடைகின்றன...பல கட்சிகள் புதிதாய் உருப்பெறுகின்றன...அனைத்திற்கும் காரணம் ஒன்று தான்...பதவி...!!!

'சனநாயக நாட்டினில் யார் வேண்டும் என்றாலும் தலைவர் ஆகலாம் தானே...தப்பில்லையே...அப்படி இருக்க ஒரு முயற்சி செய்துத் தான் பார்ப்போமே...!!!' இந்த எண்ணத்திலேயே தான் பல கட்சிகள் புதிதாய் தோற்றம் பெற ஆரம்பிக்கின்றன.

'சரி கட்சியினை ஆரம்பித்தாயிற்று...நல்லது. இனி வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்...அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்றால் பெருவாரியான மக்களை நாம் கவர வேண்டும்...நம் நாட்டினில் பெருவாரியான மக்கள் சிங்களவர்களே...அப்படி என்றால் அவர்களை நாம் கவர்ந்தாலே போதுமே...ஆட்சி நம் கைக்கு வந்து விடுமே...அடடே...இவ்வளவு எளிதான ஒன்றா ஆட்சியினைப் பிடிக்கும் தந்திரம்...' என்ற சிந்தனையுடனே அக்கட்சிகள் சிங்கள மக்களை குறி வைத்து தங்களது பிரச்சாரத்தினை தொடங்குகின்றனர். அதனைத் தொடங்கி வைப்பவர் பண்டாரநாயகா என்றொருவர்.

"இது சிங்களர்கள் அதிகமாக இருக்கும் நாடு...நம் நாடு...இங்கே எதற்காக இரண்டு மொழிகள்...அதிகார மொழியாக சிங்களம் மட்டுமே இருந்தால் தானே சிங்களவர்கள் வளர முடியும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த ஒரே நாளிலேயே சிங்களம் மட்டுமே அதிகார மொழி என்ற சட்டத்தினைக் கொண்டு வருவோம்...அதற்காக தமிழையும் மறந்து விட மாட்டோம்...வடக்கு மட்டும் கிழக்கு மாகாணங்களில் தமிழுக்கென்று சில சலுகைகள் வழங்கப்படும்...ஆனால் சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும்..." இது தான் பண்டாரநாயகாவின் தேர்தல் வாக்குறுதி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியினைத் தூண்டி விட்ட முதல் தீக்குச்சி!!!

பண்டாரநாயகாவின் பேச்சினைக் கேட்ட சிங்களவர்கள் அகமகிழ்ந்தனர். "வாழ்க பண்டாரநாயகா...வாழ்க சிங்களம்..." என்ற முழக்கங்கள் சிங்களர்கள் இருந்தப் பகுதி எங்கும் கேட்க ஆரம்பிக்க 'தமிழுக்கும் சிங்களத்திற்கும் சரிசமமான உரிமை வழங்கப்படும்' என்றுக் கூறி வந்த மற்ற சிங்களத் தலைவர்களுள் சிலரும் வாக்குக்காக 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களமே அரசு மொழியாக அறிவிக்கப்படும்...பௌத்தமே அரச சமயமாக அறிவிக்கப்படும்' என்றுக் கூற ஆரம்பித்தனர்.

ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான சிந்தனை அங்கே விதைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. தமிழர்கள் அதனைக் கண்டு கொதித்துக் கொண்டு இருந்தனர்.

"சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றால் பின்னர் நாம் யார்...இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்களா?...அனைத்தும் சிங்களத்தில் என்றால் பின்னர் அங்கே நமக்கும் நம் இனத்திற்கும் என்ன மரியாதை இருக்கின்றது...இது நம்மைத் தாழ்த்தும் திட்டமிட்ட செயல்...இதனை இவ்வாறே விடக் கூடாது..." என்று தமிழர்கள் கொந்தளித்துக் கொண்டு இருந்த வேளையில் தான் தந்தை செல்வா அரசாங்கத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்.

"சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என்பது ஏற்புடையதில்லை...இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் மற்றொரு செயலாகும்...எங்களுக்குரிய உரிமைகளை நீங்கள் வழங்குவீர் என்றே நம்புகின்றோம்...இல்லையேல் போராடுவதனைத் தவிர்த்து எங்களுக்கு வேறு வழிகள் இல்லை என்றே எண்ணுகின்றேன்....முடிவு உங்கள் கையில்."

செல்வாவின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலும் வந்தது..."அட...தமிழர்களை நாங்கள் எவ்வாறு கை விடுவோம்...கவலைப்படாதீர்...அவர்களுடைய உரிமைகள் என்றும் எங்களால் மறுக்கப்படப்போவதில்லை...இது நமது நாடு".

ஆனால் வெறும் பதில் மட்டுமே வந்தது. 1956 தேர்தல்களில் பண்டாரநாயகா வெற்றிப் பெற்ற உடன் அறிவித்த முக்கியத் தீர்மானம் 'இனி சிங்களமே அரச மொழி...'

சிங்களவர்கள் சிரித்தார்கள். தமிழர்கள் தங்களது பகுதிகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி விட்டு தந்தை செல்வாவின் குரலுக்காக காத்திருந்தார்கள்.

"அவர்கள் அவர்களது முடிவினைக் கூறி விட்டனர்...நாம் நம்முடைய முடிவினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்...ஆட்களைத் திரட்டுங்கள்...நமக்கு உரிமைக் கிடைக்கும் வரை போராட வேண்டும்... ஆரம்பிக்கட்டும் சத்தியாகிரகப் போராட்டங்கள்...!!!" தந்தை செல்வாவின் குரல் ஒலித்தது. தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்...அமைதியாக.

"எங்களின் உரிமையினை எங்களுக்குத் தா...தமிழர் வாழும் பகுதிகளுள் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்" என்ற முழக்கங்களுடன் ஆரம்பமாகின சத்தியாக்கிரகப் போராட்டங்கள்...கூடவே ஒத்துழையாமை இயக்கங்களும் தான்.

போராட்டங்களை சில சிங்கள இன வெறியர்கள் கண்டனர்...'என்னடா இது நம்முடைய நாட்டினில் இவர்கள் போராடுகின்றனர்...சிங்களம் ஆட்சி மொழியாக இருந்தால் இவர்களுக்கு என்ன வந்ததாம்...விட்டால் நம்மை இவர்கள் வளர விட மாட்டார்கள்...ம்ம்ம்...அடித்து துரத்துங்களடா அவர்களை..." என்று எண்ணி அமைதியாய் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர்.

பண்டாரநாயகா பார்த்தார். பாராளுமன்றத்தின் வாசலின் முன்னேயே சிங்களர்கள் தமிழர்களை அடித்துக் கொண்டு இருந்தனர். 'அரசாங்கத்துக்கு எதிராக தமிழர்கள் போராடுகின்றார்களா...சரி....அவர்களை சிங்களர்கள் அடிக்கின்றார்களா...சரி,,,தமிழர்களுக்குத் தேவை தான்...சில அடி வாங்கியவுடன் போராட்டம் முடிந்து விடும்...முடியட்டும் முடியட்டும்' என்று எண்ணி அமைதியாக இருந்தார்.

ஆனால் பண்டாரநாயகா எண்ணியது நடக்கவில்லை. சிங்களவர்களின் இன வெறி அடக்க முடியாத ஒன்றாக மாறிற்று. தமிழர்கள் தேடிப் பிடித்து அடிக்கப் பட்டனர்...எரிக்கப் பட்டனர்...அவர்களது உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன...காவல் துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது...வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றது. வண்டி வண்டியாக மத்திய இலங்கையில் இருந்து வடக்கே தமிழர்கள் இடம் பெயரத் தொடங்கினர். இது நடந்தது 1958 ஆம் ஆண்டு. சிங்களர்கள், தமிழர்கள் ஆகியோருக்கு இடையே இனக் கலவரத்தினைத் தோற்றுவித்து வைத்த ஒரு ஆண்டு.

சிங்களவர்கள் அடித்துக் கொண்டு இருந்தனர்...தமிழர்கள் அமைதியாக போராடிக் கொண்டே இருந்தனர்.

"நாம் காந்திய வழியில் போராடுகின்றோம்...அது தோற்காது...நாம் தொடர்ந்து போராட வேண்டும்..." என்றே தந்தை செல்வா சொன்னார்...அவ்வண்ணமே தமிழர்கள் செய்தனர்.

"சாதாரணக் கலவரமாக ஓய்ந்து விடும் என்று என்னியக் கலவரம் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டதே...ஐயகோ எவ்வளவு சேதங்கள்...போதும் இவ்வாறே விட்டால் தேசம் இரண்டாகி விடும் வாய்ப்பும் உள்ளது...சரி தமிழர்கள் கேட்பதும் சரியாகத் தானே உள்ளது...அவர்கள் பகுதியில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருந்து விட்டுத் தான் போகட்டுமே...என்ன குறைந்து விடும் இப்பொழுது..." என்று தாமதமாக மனம் திருந்திய பண்டாரநாயகா தந்தை செல்வாவினை அழைத்து புது ஒப்பந்தத்தையும் போட்டுக் கொள்கின்றார். அதன் படி,

1) தமிழர் பகுதிகளில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும்.
2) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அவர்களாக ஆட்சி செய்துக் கொள்ளலாம்...இலங்கை கூட்டாட்சியினை கொண்ட நாடாக இருக்கும்.
3) தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றங்கள் நிகழ பெறாது.
4) குடியுரிமை பறிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

தமிழர்கள் மகிழ்ந்தனர். அவர்களின் உரிமையை தந்தை செல்வா பெற்றுத் தந்து விட்டார். அறவழியிலான போராட்டம் வென்று விட்டது. காந்திய வழிக்கு கிட்டிய மற்றுமொரு வெற்றி இது.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தான் போட்ட ஒப்பந்தத்திற்கு சிங்களவர்களின் மத்தியில் எழும்பிய எதிர்ப்பினைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தினை கிழித்துப் போட்டார் பண்டாரநாயகா. அவரை தமிழர்களின் ஆதரவாளர் என்றுக் கூறி பின்னர் பௌத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றான். எந்த இனவெறியினைத் தூண்டி ஆட்சியினைப் பிடித்தாரோ அந்த இனவெறியே அவரின் உயிரைப் பறித்த ஒன்றாக மாறியது.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நிலை இலங்கையில் சாத்தியமே இல்லாத நிலையினை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தது.

தொடரும்....!!!

1 கருத்துகள்:

ஒரு நல்ல பதிவு... இதை அதரங்களுடன் கூறினால் மிகவும் நல்ல இருக்கும்....அதரங்கள் என்றால் அன்று உள்ள செய்திதாள்கள்...etc

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு