எவ்வாறு அமெரிக்க அரசும் பெரு நிறுவனங்களும் நம்முடைய நாட்டினைக் கொள்ளை அடிக்கின்றனர் என்பதனைக் குறித்து திரு.ஜான் பெர்கின்ஸ் அவர்கள் எழுதியிருந்த 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற நூலினைப் பற்றி  முன்னர் நாம் கண்டு இருக்கின்றோம். அமெரிக்க அரசின் நடவடிக்கைகளைப் பற்றி அவர் எழுதிய மற்றுமொரு நூலான 'அமெரிக்க பேரரசின் இரகசிய வரலாறு' என்ற நூலில், உலகையே ஆக்கிரமிக்கத் துடிக்கின்ற அந்த பெரு நிறுவனங்களிடம் இருந்து நாம் நம்மை, நம்முடைய சமூகத்தை எவ்வாறு காத்துக் கொள்வது என்று  வருகின்ற சிறு பகுதியையே நாம் இங்கே காணப் போகின்றோம்.

  • சிறு சிறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரங்களில் அதற்குப் பதிலாக நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். தியானம் செய்யுங்கள், நூல்களை வாசியுங்கள் அல்லது வேறு ஏதாவது தீர்வுகளைக் கண்டுப்பிடியுங்கள்.

  • உங்களுக்கு அவசியம் தேவையான பொருட்களை மட்டும் தன்னுணர்வுடன் வாங்குங்கள். எந்தப் பொருட்கள் சட்டப்பூர்வமான உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கின்றதோ, அதன் மூலப் பொருட்களும், அவன் பாக்கிங் செய்யப்பட்டு இருக்கும் விதமும் உயிர்களை ஆதரிக்கக் கூடியதாகவும் நீடிக்கும் தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றதோ அவற்றை வாங்குங்கள்.

  • உங்களிடம் இருக்கும் அனைத்தையும் எவ்வளவு அதிகமான காலம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு அதிக காலம் பயன்படுத்துங்கள்.

  • மொத்தமாகவும் விலை குறைவாகவும் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குங்கள்; அவை அனைத்துமே மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும்.

  • சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கும், தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியும் தொழிற்சாலைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவியுங்கள்.

  • தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டும், சுற்றுச் சூழலை நாசம் செய்யும் மான்சாட்டோ, எக்சான்மொபில், அடிடாஸ், போர்ட், ஜெனரல் எலெக்ட்ரிக், கோகோ கோலா, வால் மார்ட் மற்றும் அவை போன்ற இதர நிறுவனங்களிடமிருந்து ஏன் பொருட்களை வாங்க மறுக்கிறோம் என்று அவர்களுக்கே கடிதங்கள் எழுதுங்கள்.

  • பெட்ரோல் மற்றும் எரி வாயு நுகர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

  • உங்கள் கார், வீடு, அலமாரி, மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் சிறியதாக சுருக்கிக் கொள்ளுங்கள்.

  • நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் இலாப நோக்கமற்ற அமைப்புகள், வானொலி நிலையங்கள், மற்றும் இதர அமைப்புகளுக்கு நன்கொடை அனுப்புங்கள். உங்களது நேரம் மற்றும் ஆற்றலை அந்நிறுவனங்களின் செயல்பாடுகளுக்காகத் தன்னார்வத்துடன் பயன்படுத்துங்கள்.

  • உள்ளூர் வர்த்தகர்களை ஆதரியுங்கள்.

  • உள்ளூர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து பொருட்களை வாங்குமாறு கடைகளுக்கு உற்சாகமளியுங்கள்.

  • உள்ளூர் விவசாய சந்தைகளில் பொருட்களை வாங்குங்கள்.

  • குழாய் நீரைப் பருகுங்கள் (தேவையென்றால் அதன் மூலம் நீர் நிறுவனங்களை இன்னும் உத்தமமாகச் செயல்படச் செய்யுங்கள்; ஆனால் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள்)

  • பள்ளி அமைப்புகளுக்கும், ஆணையங்களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் அறிவாற்றல் மிக்கவர்களைத் தேர்ந்தெடுங்கள்; நல்ல சட்டங்களை ஆதரியுங்கள்.

  • பொறுப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுங்கள்.

  • உங்களது பணத்தைப் பயன்படுத்தும் வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள், பரஸ்பர நிதிகள், நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடனும், சுற்றுச்சூழல் பொறுப்புடனும் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

  • வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமைப்புகளின் கூட்டங்களில் வெளிப்படையாகப் பேசுங்கள்.

  • தேனீ வளர்ப்பது, நெசவு நெய்வது, டென்னிஸ் ஆடுவது அல்லது வேறு எதுவானாலும் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் பற்றி உங்களது உள்ளூர் பள்ளிகளில் தன்னார்வத்துடன் பேசுங்கள்; மாணவர்களை அறைகூவி அழைக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்பின் மதிப்பு, மோசமான பணி நிலைமைகள், பொது மானியங்கள், பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் விதிவிலக்குகள், மற்றும் இதர சுற்றுச்சூழல், சமூகம், மற்றும் அரசியல் சார்ந்த அம்சங்கள் போன்ற நாம் வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகளின் கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஆனால் சேர்க்கப்படாத புற அம்சங்கள் பற்றி விவாதியுங்கள். இந்த உண்மையான செலவுகளுக்கு நாம் விலை கொடுக்க மறுத்தோமானால் நாம் எதிர்காலத் தலைமுறைகளைக் கொள்ளையடிப்பதாக அர்த்தம் என்பதை மக்களுக்கு உணர்த்துங்கள்.

  • இத்தகைய புற அம்சங்கள் மீது வரி விதிப்பதை ஊக்குவியுங்கள். பெட்ரோல், ஆடை, மின்சாரம் இன்ன பிறவற்றிற்கு அதிக விலை ஆகும். அந்த விலை வித்தியாசம் சமூகரீதியான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான தவறுகளைச் செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்.

  • உள்ளூர் நூலகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள், தேவாலயங்கள், மன்றங்களில் வாசகர் வட்டங்களை உருவாக்குங்கள்.
நூல்: அமெரிக்க பேரரசின் இரகசிய வரலாறு
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ்
தமிழாக்கம்: அசோகன் முத்துசாமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு