கடிதம் 3

வெஸ்ட்மின்ஸ்டர் பிளேஸ் ஹோட்டல்
4 ,விக்டோரியா ஸ்ட்ரீட்,
இலண்டன்,W.C.
அக்டோபர் 11,1909

டால்ஸ்டாய் பிரபு அவர்களுக்கு:

'இந்துவுக்கு ஒரு கடிதத்'தினைக் குறித்தும், உங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தினில் நான் குறிப்பிட்டிருந்த விடயங்களைக் குறித்தும் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கூறியிருந்த உங்களது கடிதத்திற்காக நான் என்னுடைய நன்றியினை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்களது உடல்நிலையானது மோசமாகிக் கொண்டிருக்கின்றது என்பதனை கேள்விப்பட நேர்ந்ததால், உங்களை சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று எண்ணியே 'உங்களது கடிதத்தினைப் பெற்றுக் கொண்டேன்' என்று உங்களிடம் எழுத்தின் மூலமாக தெரிவிப்பதை, அவ்வாறு எழுத்தின் மூலமாக தெரிவிக்கும் செயலானது வெறும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும் என்பதனை அறிந்து, நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால் நீங்கள் இப்பொழுது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றீர்கள் என்பதனையும், ஒவ்வொரு காலையும் நீங்கள் உங்களுக்கு வந்த கடிதங்களைப் தவறாது படித்து அவற்றைக் கவனிக்கின்றீர்கள் என்பதனையும் குறித்து திரு.அய்ல்மர் மௌடெ (Aylmer Maude) அவர்கள் எனக்கு உத்தரவாதத்தினை அளித்து இருக்கின்றார். அவரைக் காணக் கூடிய வாய்ப்பு இப்பொழுது தான் எனக்கு கிட்டி இருக்கின்றது. அந்தச் செய்தியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. உங்களுடைய போதனைகளின்படி எந்த விடயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்க்கப்பட்டு இருக்கின்றனவோ அவற்றைக் குறித்து மென்மேலும் உங்களுக்கு எழுத வேண்டும் என்றே அந்தச் செய்தியானது என்னை ஊக்குவிக்கின்றது.

தென்னாப்பிரிக்காவில் இருக்கின்ற என்னுடைய ஆங்கிலேய நண்பர் ஒருவர், என்னுடைய வாழ்விற்குத் தொடர்புடைய விடயங்களைக் குறித்து நூலொன்றினை எழுதி இருக்கின்றார். அந்நூலின் பிரதி ஒன்றினை இந்தக் கடிதத்துடன் நான் அனுப்பி வைப்பதனை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். எவ்விதமான போராட்டத்திற்காக என்னுடைய வாழ்வினை நான் அர்ப்பணித்து இருக்கின்றேனோ அதனைப் பற்றியும், தற்பொழுது நான் பங்கு கொண்டு இருக்கும் போராட்டத்தினைப் பற்றியும் அந்த நூலினில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. உங்களது பரிவினையும் துடிப்பான ஆர்வத்தினையும் எங்களது போராட்டம் சார்ந்த விடயத்தினில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆவலுடன் இருப்பதனால், நான் உங்களுக்கு அந்த புத்தகத்தினை அனுப்பி வைத்திருப்பதனை முறையற்ற ஒரு செயலாக நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்றே நான் கருதினேன்.

என்னுடைய கருத்தின்படி, போராட்டத்தின் இலக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கினாலும் சரி, அந்த இலக்கினை அடைவதற்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வழிமுறைகளினாலும் சரி, டிரான்ஸ்வாலில் நடந்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் இந்தப் போராட்டமானது, நவீன காலத்துப் போராட்டங்களில் நிச்சயமாக மிக பெரியதான ஒரு போராட்டம் தான்.

ஒரு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அந்தப் போராட்டத்தின் இறுதியில் தங்களுக்கென்று எவ்விதமான தனிப்பட்ட ஆதாயங்களை அடைந்து கொள்ளாமல் இருக்கும் வண்ணமும், பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத மக்கள், தாங்கள் கொண்டிருக்கின்ற கொள்கைக்காக மாபெரும் துயரங்களையும் தண்டனைகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற வண்ணமும் அமைந்து இருக்கின்ற ஒரு போராட்டத்தினை வேறு எங்கும் நான் அறிந்து இருக்கவில்லை. இந்தப் போராட்டத்தினை நான் எந்தளவு விளம்பரப்படுத்த விரும்பினேனோ அந்தளவு என்னால் அதனை விளம்பரப்படுத்த முடியவில்லை. இன்றைய தினத்தில், மாபெரும் வாசகர் வட்டத்தினை நீங்கள் தான் பெற்று இருக்கின்றீர்கள் என்றே நான் நம்புகின்றேன். திரு. டோகே (Doke) அவர்களது புத்தகத்தில் இடம் பெற்று இருக்கும் தகவல்களைக் குறித்து நீங்கள் திருப்தி அடைந்தீர்கள் என்றாலும், என்னுடைய தீர்மானங்கள்  அந்தத் தகவல்களால் நியாயப்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் கருதினீர்கள் என்றாலும், உங்களுடைய செல்வாக்கினை வைத்து, நீங்கள் எந்த விதம் சரியானது என்று எண்ணுகின்றீர்களோ அந்த விதத்தில், எங்களுடைய இந்த இயக்கத்தினை பிரபலமடையச் செய்வதற்கு தக்க உதவியினைச் செய்வீர்களா என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளலாமா?

இந்தப் போராட்டமானது வெற்றி அடைந்தது என்றால் அது சமயமறுப்பு, வெறுப்பு, பொய் ஆகியவற்றின் மீது சமயம், அன்பு மற்றும் உண்மை ஆகியவை பெற்ற வெற்றி என்ற அளவில் மட்டும் நில்லாது, இலட்சக்கணக்கான இந்திய மக்களுக்கும் சரி உலகில் மற்ற பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரி ஒரு மாபெரும் எடுத்துக்காட்டாக அமையும். மேலும் வன்முறை தான் சரியான வழி என்று கூறுவோரின் கூற்றினை உடைப்பதற்கும் அது நமக்கு பெருமளவு உதவியாக இருக்கும். குறைந்தபட்சமாக இந்தியாவிலாவது நமக்கு அது பயன் உள்ளதாக இருக்கும். இறுதி வரை நாங்கள் நிலைத்து நின்று விட்டோம் என்றால், அவ்வாறு நிலைத்து நிற்போம் என்றே தான் நான் நம்புகின்றேன், நிறைவான வெற்றியினை நாங்கள் அடைந்தே தான் தீருவோம் என்பதில் துளியளவு கூட எனக்கு சந்தேகம் இல்லை. மேலும் நாங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் வழியினைக் குறித்த தங்களது ஊக்கமும் எங்களது முடிவினில் நாங்கள் மேலும் உறுதியாக இருப்பதற்காக எங்களைப் பலப்படுத்தத் தான் செய்கின்றது.

மேற்கண்ட பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் காண்பதற்காக நாங்கள் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட தோல்வி அடைந்துவிட்டன என்றே கூறலாம். நான் என்னுடைய தோழருடன் மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு இந்த வாரம் திரும்புகின்றேன். அங்கே எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சிறைத் தண்டனையினை நான் வரவேற்கவே செய்கின்றேன். என்னுடைய மைந்தனும் இந்த போராட்டத்தினில் என்னுடன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு விட்டான் என்பதனையும் நான் இங்கே கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அவன் தற்பொழுது கடின உழைப்புடன் கூடிய ஆறு மாத கால சிறைத் தண்டனையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் போராட்ட காலத்தில் இது அவன் பெற்று இருக்கும் நான்காவது சிறைத் தண்டனை ஆகும்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கும் பொழுது இந்தக் கடிதமானது உங்களை அடைய வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.
என்றென்றும்
உங்களுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் சேவகனாய்
                                                                                                                                     மோ.க.காந்தி

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு