மாமனிதரான டால்ஸ்டாய் அவர்கள் தனது 82 ஆம் அகவையினில் தன்னுடைய மானுட உடலினைத் துறந்து விட்டார். அவர் இறந்து விட்டார் என்று கூறுவதனை விடத் தன்னுடைய மானுட உடலினைத் துறந்து விட்டார் என்று கூறுவது தான் உண்மையானதாக இருக்க முடியும். டால்ஸ்டாய் அவர்களின் ஆன்மாவிற்கு மரணம் என்பது என்றுமே இருக்க முடியாது. அவருடைய பெயர் என்றுமே அழிவில்லாது இருந்து கொண்டே தான் இருக்கும். மண்ணினால் ஆன அவரது உடல் மட்டுமே தான் மீண்டும் மண்ணிற்கே திரும்பி இருக்கின்றது.

முழு உலகமும் டால்ஸ்டாய் அவர்களை அறிந்து இருக்கின்றது!!!ஒரு காலத்தில் மிகச் சிறந்த போர்வீரராக அவர் இருந்திருக்கின்றார்...ஆனால் ஒரு போர்வீரராக உலகம் அவரை அறிந்து இருக்கவில்லை.!!! ஒரு எழுத்தாளராக அவர் மிகப்பெரிய புகழினைக் கொண்டிருந்தார்...ஆனால் ஒரு எழுத்தாளராக உலகம் அவரை அறிந்திருக்கவில்லை!!! மாபெரும் செல்வச் செழிப்பினை அவர் பெற்றிருந்தார்...ஆனால் ஒரு பிரபுவாக உலகம் அவரை அறிந்து இருக்கவில்லை.!!! ஒரு நல்ல மனிதனாகவே உலகம் அவரை அறிந்து இருக்கின்றது. இந்தியாவில் நாம் அவரை மகரிஷி என்றோ புனித துறவியார் என்றோ தான் அழைத்து இருப்போம்.

அவர் தன்னுடைய அனைத்து செல்வங்களையும் வசதியான வாழ்வினையும் துறந்து விட்டு ஒரு எளிமையான குடியானவனின் வாழ்வினை அரவணைத்து ஏற்றுக் கொண்டார். அவர் எதனை போதித்தாரோ அதனையே தான் அவர் அவருடைய வாழ்விலும் கடைப்பிடித்தார். அந்த மாபெரும் பண்பினாலேயே தான் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய வார்த்தைகளையையும் போதனைகளையையும் மிகவும் தீவிரமாக பற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

வருகின்ற காலங்களில், டால்ஸ்டாயினுடைய போதனைகள் இன்னும் அதிகளவு கூடுதலாக மதிக்கப்படும் என்றே நான் நம்புகின்றேன். சமயங்களே அவருடைய போதனைகளின் அடிப்படையாக இருக்கின்றன. ஒரு கிருத்துவனாக அவர் இருந்த காரணத்தினால் கிருத்துவமே மிகச் சிறந்த சமயம் என்று அவர் நம்பினார். ஆனால் மற்ற எந்த சமயத்தினையும் அவர் மறுக்கவில்லை. மாறாக அனைத்து சமயங்களிலும் உண்மையானது இருக்கின்றது என்றே அவர் கூறினார். அதே நேரத்தில் சுயநலமுள்ள பாதிரியார்கள், பிராமணர்கள், முல்லாக்கள் போன்றவர்கள் கிருத்துவ சமயத்தின் போதனைகளையும் அவ்வாறே மற்ற சமயங்களின் போதனைகளையையும் திரித்து வைத்து விட்டு மக்களை தவறாக வழி நடத்தி இருக்கின்றார்கள் என்றுமே அவர் கூறுகின்றார்.

அனைத்து சமயங்களும் ஆன்ம பலமே முரட்டுத்தனமான வன்முறை பலத்தினை விட உயர்ந்தது என்பதனையும் தீமையினை நன்மையினால் எதிர்க்க வேண்டுமே அன்றி தீமையினால் அல்ல என்பதனையுமே தங்களது அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன என்பதனையே அவர் மிகவும் தீர்க்கமாக நம்பினார். தீமை என்பது சமயங்களில் இல்லாத ஒன்றாகும். அன்பினையும் இரக்கத்தினையும் தவிர சமயங்களில் வேறொன்றும் இருக்க முடியாது. சமயங்களுக்குத் தொடர்பில்லாத ஒன்றினை சமயங்களுக்குத் தொடர்பில்லாத வேறொன்றினைக் கொண்டு எதிர்க்க முடியாது...சமயத்தினாலேயே தான் சமயங்களுக்குத் தொடர்பில்லாத ஒன்றினை எதிர்க்க முடியும். சமயத்தினைச் சார்ந்த ஒருவனால் தன்னுடைய எதிரிக்குக் கூடத் தீங்கு எண்ண முடியாது. எனவே மக்கள் சமயங்கள் காட்டுகின்ற வழியினில் எப்பொழுதும் பயணிக்க வேண்டும் என்று எண்ணினார்களே என்றால் அவர்கள் நல்ல செயல்களைத் தவிர வேறு எந்த செயலினையும் செய்யக் கூடாது.

இதே கருத்துக்களைக் கொண்டிருந்த நமது 'இந்தியன் ஒபீனியன்' இதழ்களைக் குறித்த அவரது எண்ணங்களை அவருடைய இறுதி நாட்களில், அந்த மாபெரும் மனிதர் ஒரு கடிதத்தின் வாயிலாக எனக்கு தெரிவித்து இருந்தார். அந்தக் கடிதமானது இரசிய மொழியினில் இருக்கின்றது. அக்கடிதத்தின் ஆங்கில மொழியாக்கத்தினை, குஜராத்தி மொழியினில் மொழிபெயர்த்து அதனை இந்த இதழுடன் வெளியிட்டு இருக்கின்றோம். அந்த மொழிபெயர்ப்பானது நிச்சயமாக படிக்கப்பட வேண்டிய ஒன்று. சத்தியாகிரகத்தினைக் குறித்து அந்தக் கடிதத்தினில் அவர் கூறி இருக்கின்ற விடயங்களைப் பற்றி அனைவரும் சிந்தித்தாகத்தான் வேண்டி இருக்கின்றது. அவரைப் பொறுத்த வரை நமது இந்த டிரான்ஸ்வால் போராட்டமானது நிச்சயமாக இந்த உலகினில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும். நமது போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள அனைவருக்கும் அநேக விஷயங்கள் இருக்கின்றன என்றே அவர் கூறுகின்றார். சத்தியாக்கிரகிகளுக்கு அவர் தன்னுடைய ஆதரவினை வழங்கி இருக்கின்றார். மேலும் ஆட்சி புரிபவர்களிடமிருந்து கிட்டாவிடிலும் கூட இறைவனிடமிருந்து நீதியானது சத்தியாக்கிரகிகளுக்கு நிச்சயமாகக் கிட்டும் என்றே அவர் கூறவும் செய்கின்றார். ஏனென்றால் ஆட்சி செய்பவர்கள், அவர்களுடைய வலிமையின் மீதுள்ள கர்வத்தின் காரணத்தினால் நிச்சயமாக சத்தியாக்கிரகத்தினைக் குறித்து மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். இருந்தும், சத்தியாக்கிரகிகள் பொறுமையுடன் தொடர்ந்து போரிட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டி இருக்கின்றது. மேலும் ரஷ்யாவிலும் கூட ஒவ்வொரு நாளும் போர் வீரர்கள் தங்களது இராணுவத் தொழிலில் இருந்து விலகிக் கொண்டு தான் இருக்கின்றனர் என்றே டால்ஸ்டாய் அவர்கள் கூறுகின்றார். அதற்கு அவர் உதாரணங்களையும் இரசியாவில் இருந்து தந்திருக்கின்றார். தற்காலத்தில் அந்த இயக்கத்திற்குத் தகுந்த பலன் கிட்டி இருக்காவிட்டாலும், நிச்சயமாக இறுதியில் அந்த மாற்றம் மலர்ச்சியடைந்து இரசியா விடுதலையடையும் என்றே அவர் உறுதியாக நம்புகின்றார்.

டால்ஸ்டாய் போன்றதொரு மாபெரும் மனிதரின் ஆசிகள் நம்முடைய போராட்டத்திற்குக் கிட்டி இருக்கின்றது என்பது ஒரு சாதாரண விடயமல்ல. அது நமக்கு மாபெரும் ஊக்கத்தினை அளிக்க கூடியதாகும். அவரது புகைப்படத்தினை இன்றைய இதழுடன் நாம் வெளியிடுகின்றோம்.

மோ.க.காந்தி.
இந்தியன் ஒபீனியன். நவம்பர் 26, 1910

2 கருத்துகள்:

yes I too read all Gandhian volumes and Tolstoy. Thanks to give chance to recollect it.vanakkam.

http://marubadiyumpookkum.blogspot.in/2017/01/blog-post_20.html

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு